Published:Updated:

பிக் பாஸ் - 45: நிரூப் vs அபினய் பஞ்சாயத்து... ராஜூவை அடித்த தாமரை, பாவனியை மொத்திய பிரியங்கா!

பிக் பாஸ் - பிரியங்கா

விதம்விதமான டான்ஸ் ஸ்டெப்புகளை ராஜூ போட அதற்கு பாவனி ஈடு கொடுக்க முயன்றது ரகளையான காமெடி. அக்ஷராவும் சிபியும் ‘ராஜா ராணி’ ஆர்யா – நயன்தாரா போலவே தாமரை இலை தண்ணீராக விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

பிக் பாஸ் - 45: நிரூப் vs அபினய் பஞ்சாயத்து... ராஜூவை அடித்த தாமரை, பாவனியை மொத்திய பிரியங்கா!

விதம்விதமான டான்ஸ் ஸ்டெப்புகளை ராஜூ போட அதற்கு பாவனி ஈடு கொடுக்க முயன்றது ரகளையான காமெடி. அக்ஷராவும் சிபியும் ‘ராஜா ராணி’ ஆர்யா – நயன்தாரா போலவே தாமரை இலை தண்ணீராக விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

Published:Updated:
பிக் பாஸ் - பிரியங்கா
‘நேரம் பாதகமெனில் உன் நிழலே எதிரியாகும்’ என்றொரு பழமொழி இருக்கிறது. (அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. நானே உருவாக்கியதுதான்). பிக் பாஸில் இரண்டு பேருக்குள் பகைமை இருந்தால் அவர்களை ஒன்றாகக் கோத்துவிட்டு டாஸ்க்கை உருவாக்குவதுதான் பிக் பாஸின் கொடூரமான ஸ்டைல்.

அதன்படி நேற்றைய எபிசோடில் அவர் உருவாக்கியதுதான் ‘நிழல் பிம்ப’ டாஸ்க். அக்ஷரா – சிபி, நிரூப் - அபினய், இசை – இமான் என்று பரம்பரைப் பங்காளிகளை ஒன்றாக அலைய வைத்து வேடிக்கை பார்த்ததுதான் அதன் ஹைலைட். இதை சிலர் ஜாலியாக கையாண்டார்கள். சிலர் இருக்கிற பகைமையின் நெருப்பு மேலும் வெடிக்குமாறு நடந்து கொண்டார்கள்.

எபிசோடு 45-ல் என்ன நடந்தது?

‘வடக்கே கேட்டுப் பாரு. என்னைப் பத்தி சொல்லுவான்’ என்கிற குஜாலான பாடலை காலையில் ஒலிக்கவிட்டார் பிக்பாஸ். இதற்கும் ‘நீர்’ என்கிற ஆற்றலுக்கும் என்ன தொடர்பு என்று மண்டையைப் பிய்த்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது. ஒரு வேளை இப்படியாக இருக்குமோ? ‘மல்லிகா நீ கடிச்சா. நெல்லிக்கா போல் இனிப்பா’ என்றொரு வரி வருகிறது. நெல்லிக்காய் சாப்பிட்ட பிறகு ‘நீர்’ அருந்தினால் அது இனிக்கும் என்கிற அரிய தத்துவத்தைத்தான் பிக் பாஸ் நினைவுப்படுத்துகிறாரா?

ராஜூ - பாவனி
ராஜூ - பாவனி

ராஜூ இதுவரை பாத்திரம் விளக்கும் வேலையைச் செய்ததில்லை போலிருக்கிறது. எனவே அவரை எப்படியாவது அதில் தள்ளிவிடும் திட்டத்தை பிரியங்கா போட்டார். “மாத்தேன்... போ!" என்று ராஜூ சிணுங்க... “நீ சமர்த்துப் பையனாச்சே. கரெக்டர் செஞ்சிட்டா மம்மி மம்மூ ஊட்டி விடுவேனாம்” என்கிற ரேஞ்சிற்கு இறங்கி கொஞ்சினார் பிரியங்கா. (ஒரு தலைவர் பதவிக்காக என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கு?!).

“நீ போய் குளிக்கலைன்னா... தண்ணிய ஆஃப் பண்ணிடுவேன்” என்று ராஜூவை வருண் ஜாலியாக மிரட்ட “போடா... நான் தோட்டத்து பைப்ல ஜாலியா குளிப்பேன்” என்று சவடால்விட்ட ராஜூ, காலை பதினொன்றரை மணிக்காட்சி போஸ்டர் போல ‘பப்பரப்பபே’ என்று கார்டன் ஏரியா பைப்பில் குளிக்க அமர, பிரியங்கா, நிரூப், வருண் உள்ளிட்டவர்கள் ‘மஞ்சள் நீராட்டு விழா சடங்கு’ போல ராஜூ மேல் நீரை ஊற்றி கலாட்டா செய்தனர். தலைவர் என்று கூட பாராமல், பதிலுக்கு பிரியங்காவின் தலையில் நீரைக்கவிழ்த்து ஜாலியாக பழிவாங்கினார் ராஜூ. (இப்படியாக நீர் சிக்கன வாரம் எக்ஸ்ட்ரா நீர் செலவழித்தலோடு நிறைவடைந்தது).

இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கை அறிவித்தார் பிக் பாஸ். வீடு இரண்டு அணிகளாகப் பிரிந்து ஒரு அணி இயல்பாகச் செய்வதை, இன்னொரு அணி கண்ணாடி பிம்பம் போல் செய்ய வேண்டுமாம். மறுநாள் இது அப்படியே மாறும். கண்ணாடி அணி இயல்பாக மாற, முந்தைய அணி கண்ணாடியாக மாறும். இரண்டு அணிகளையும் பிரித்து அதை ஜோடியாக்கிய விதத்தில்தான் பிக்பாஸின் அநியாயக் குறும்பு தெரிந்தது. சிபி – அக்ஷரா, நிரூப் – அபினய், இசை – இமான், ஐக்கி – வருண், பாவனி – ராஜூ, பிரியங்கா – தாமரை. இதில் முதல் மூன்று ஜோடிகள் ஏற்கெனவே வாய்க்கா தகராறில் இருப்பவை. இவர்களைக் கோத்துவிட்டு ஏதாவது சண்டை ஜகஜோதியாக எரிகிறதா என்று வேடிக்கை பார்ப்பதே பிக் பாஸின் நல்லெண்ண நோக்கம்.

இந்த டாஸ்க்கின் மெயின் ஐட்டம் என்னவென்றால், கண்ணாடி போன்ற சட்டத்தின் இருபுறமும் ஒரு அணி நிற்க வேண்டும். இதில் ஒருவர், மற்றொருவரைப் பற்றி தான் நினைப்பதையெல்லாம் சொல்லலாம். எதிராளியால் இதைச் சமாளிக்க முடியாமல், ஆட்டத்திலிருந்து விலக விரும்பினால், தன்னிடமுள்ள பேட்ஜை கழற்றி கொடுத்துவிட வேண்டும். இப்படியாக எந்த அணியிடம் அதிகம் பேட்ஜ் சேருகிறதோ, அந்த அணியே வெற்றி பெறும்.

சிபி – அக்ஷரா
சிபி – அக்ஷரா
‘சிபியிடம் எல்லாம் என்னால் "‘கபி... கபி’ பாட முடியாது" என்று முரண்டு பிடித்த அக்ஷரா, வழக்கம்போல் மூலையில் அமர்ந்து கண்ணைக் கசக்க, “அவன்கிட்ட பேசிடு. ஒரு பிரச்னையும் வராது” என்று அபினய் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார். (பெண்களுக்கு ஒரு பிரச்னைன்னா தலைவர் கரெக்ட் டைம்ல களத்துல இறங்கிடறார்!).

தாமரையைப் போலவே நெற்றியில் விபூதி வைத்து அவரைப் போல "என்னலே...” என்று பிரியங்கா பேசிக் கொண்டிருந்தது சுவாரஸ்யம். இந்த கண்ணாடி டாஸ்க்கை சுவாரஸ்யமாக கையாண்டவர்களில் தாமரையை முதல் இடத்தில் சொல்லலாம். இப்படியே போனால் இவர் ராஜூவையும் தாண்டிச் சென்றுவிடுவார் போலிருக்கிறது. தாமரை தரையில் பல்டி அடித்து பிரியங்காவை குறும்பாகப் பார்க்க அவரால் செய்ய முடியவில்லை. (பல்டி அடிக்கும் வேலையை எல்லாம் பிரியங்கா செய்யமாட்டார்!).

இன்னொரு சமயத்தில் மேஜையின் கீழே தாமரை ஒளிந்து கொள்ள, அவரின் நிழல் தாமரையைத் தேடி எங்கெங்கோ அலைந்து கொண்டிருந்தது. இன்னொரு சமயத்தில் தாமரை, ராஜூவைப் போட்டு அடிக்க, அதன் நிழலாக பிரியங்கா பாவனியைப் போட்டு மொத்தியது ஜாலியான காட்சி.

இருப்பதிலேயே செளகரியமான சாய்ஸ் இசைக்குத்தான் அமைந்தது. இமான் அங்கும் இங்கும் நகராமல் சோபாவில் சாய்ந்து உட்கார்ந்திருப்பதுதான் அவரின் நிரந்தர வழக்கம். இந்தச் சமயத்திலும் அவர் அப்படியே அமர்ந்திருக்க “அட... இது வசதியா இருக்கே?!” என்று இசையும் சாய்ந்து அமர்ந்துவிட்டார். ம்... அமைந்தால் இப்படி அமையணும். ஒரு சமயத்தில் இருவரும் இன்டர்நேனஷல் உளவாளிகள் போல் தூணுக்கு தூண் மறைந்து நின்று வேவு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

விதம்விதமான டான்ஸ் ஸ்டெப்புகளை ராஜூ போட அதற்கு பாவனி ஈடு கொடுக்க முயன்றது ரகளையான காமெடி. அக்ஷராவும் சிபியும் ‘ராஜா ராணி’ ஆர்யா – நயன்தாரா போலவே தாமரை இலை தண்ணீராக விளையாடிக் கொண்டிருந்தார்கள். சிபியைத் தவிர்த்து விட்டு ராஜூவுடன் ஜோடியாக அலைந்தது அக்ஷராவின் சாமர்த்தியம்.

இதர ஜோடிகள் இந்த டாஸ்க்கை இயன்ற வரையில் சுவாரஸ்யமாக செய்து கொண்டிருக்க நிரூப் – அபினய் ஜோடி மட்டும் அக்னி நட்சத்திரம், பிரபு – கார்த்திக் லெவலில் கையாண்டது. அபினய் செய்தது பலவற்றை நிரூப் செய்தாலும் சிலவற்றை சாய்ஸில் விட்டார். இது எல்லோருமே செய்ததுதான்.
நிரூப்
நிரூப்

ஒரு கட்டத்தில் தன் முடியை அபினய் வெட்ட முடிவு செய்தார். இதன் மூலம் நிரூப்பும் அதைச் செய்தாக வேண்டும் என்கிற நெருக்கடியை ஏற்படுத்தினார். இதை அவர் ஜாலியான நோக்கில்தான் ஆரம்பித்திருக்க வேண்டும். எனவே முடியின் ஓரத்தில் மட்டும் வெட்டி விட்டு “போதும்... நாளைக்கு இவன் என்னை வெச்சு செஞ்சுடுவான்” என்று விலகிவிட்டார். இந்த விஷயம் பின்னர் வினையாக முடிந்தது.

நிரூப் தனது தலைமுடியை கேன்சர் இன்ஸ்ட்டியூடிற்கு நன்கொடையாக தருவதற்காக வளர்த்து வருகிறார். இதை அங்கிருப்பவர்களிடம் ஏற்கெனவே சொல்லியிருக்கிறார். இந்த சென்டிமென்ட் காரணம் தெரிந்தும் அபினய் அப்படிச் செய்திருக்கலாமா என்று நிரூப் கோபம் கொண்டதில் நியாயம் இருக்கிறது. இதற்காக அபினய்யுடன் கடுமையான மோதலில் ஈடுபட ஆரம்பித்தார் நிரூப். ஆங்கில F வசைகள் இறைபட்டன. ‘டாஸ்க் நேரத்தில் இந்த விஷயம் என் ஞாபகத்திற்கு வரவில்லை. மேலும் கொஞ்ச முடியை எடுப்பது ஒரு பிரச்னையா?’ என்றெல்லாம் சமாளிக்க முயன்றார் அபினய்.

நிரூப் தன்மையாகக் கேட்டிருந்தால் “மச்சான்… சாரிடா. சுத்தமா மறந்துட்டேன்” என்று அபினய் நிச்சயம் மன்னிப்பு கேட்டிருப்பார். அவர் அப்படிப்பட்ட குணாதிசயம் கொண்டவர்தான். ஆனால் நிரூப் இந்தச் சந்தர்ப்பத்தை வலிமையாகப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தாரா அல்லது உண்மையிலேயே மனம் காயப்பட்டாரா என்பது அவரின் மனச்சாட்சிக்குத்தான் தெரியும்.

“நீ ஏன் முடியை வெட்டினே... செய்யாம விட்டிருக்கலாம் இல்லையா.. அப்படிப் பல விஷயங்களை நாம சாய்ஸ்ல விட்டிருக்கிறோம்தானே?” என்று பிரியங்கா உள்ளிட்டவர்கள் நிரூப்பிடம் கேட்டது சரியான கேள்வி. “அப்ப கேம் என்னாகும்?” என்று நிரூப் அக்கறை காட்டியது ஒரு பாவனையே.

எரியும் நெருப்பில் எண்ணைய்யை ஊற்றுவது போல, இவர்கள் முட்டிக் கொண்டிருக்கும் சமயத்தில், இருவரையும் அழைத்த பிக் பாஸ் ‘கண்ணாடியின் இருபுறமும் நின்று பேசும்’ டாஸ்க்கைத் தந்தார். இது நிரூப்பிற்கு மிக வசதியாகப் போய் விட்டது. ‘கேரக்டர் கொலை’ என்று சொல்வார்கள் அல்லவா? அதை தனது வரிசையான புகார்களால் திறமையாகச் செய்தார் நிரூப். இதனால் அபினய்க்கு தன்னிச்சையாக கண்ணீர் வழிய, பிரியங்காவும் அக்ஷராவும் வந்து துடைத்துவிட்டார்கள்.

அபினய்
அபினய்

“நீ இங்கு வந்ததுல இருந்து யாரையாவது சார்ந்தே இருக்கே. இதுவரைக்கும் நல்லதுன்னு எதையும் நீ செஞ்ச மாதிரி தெரியல. கேமரா முன்னாடி வேற மாதிரி இருக்கே. எனக்கும் பிரியங்காவிற்கும் இருக்கிற பிரெண்ட்ஷிப் உனக்கு பிடிக்கலை. அதைக் கெடுக்கற மாதிரி செஞ்சிருக்கே. அவகிட்ட க்ளோஸ் ஆவறதுக்கு டிரை பண்றே. அதுக்காக என்னெ்னனவோ செய்யறே. கேன்சர் இன்ஸ்ட்டியூட்டுக்காக நான் முடி வளர்க்கறேன்னு தெரிஞ்சும் அதை வெட்ட வெச்சிருக்கே. எதையும் மூஞ்சிக்கு நேரா பேசு. இந்த சகுனி வேலை, ஜால்ரா போடறதெல்லாம் வேண்டாம். உன்கிட்ட பழகின நேரம் முழுக்க வேஸ்ட்டுன்னு இப்பத்தான் தெரியுது. இதைத்தான் அக்ஷராவும் சொன்னா. (இதற்கு அக்ஷரா ஜெர்க் ஆகிறார்). உன்கிட்ட முழுக்க முழுக்க போலித்தனம்தான் தெரியுது” என்று ஒரு பெரிய புகார் பட்டியலை நிரூப் வாசிக்க, அபினய் மனம் உடைந்து போனது வெளிப்படையாகவே தெரிந்தது.

“அவன் தன்னைப் பத்தி நெனக்கறதையெல்லாம் வேற யார் மேலயாவது ஏத்தி சொல்லுவான். அவன் சொல்றதெல்லாம் அவனுக்கேதான்” என்று நிரூப்பின் குணாதிசயத்தைப் பற்றி பிறகு சொல்லிக் கொண்டிருந்தார் அபினய்.

இந்த நிகழ்ச்சியின் ஆரம்பக்கட்டத்தில் அபிஷேக், பிரியங்கா, நிரூப் ஆகிய மூவரும் ஒரு நெருக்கமான குழுவாக இருந்தார்கள். இதில் வந்து ஒட்டிக் கொள்ள அபினய் முயன்றாலும் இவர்கள் அவ்வப்போது அவரை வெட்டிவிடுவார்கள். அபிஷேக் வெளியேறியதும் பிரியங்கா – நிரூப் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. (அப்படியொரு பாவனை). ‘தான் பிரியங்காவின் வலது கரம் போலவே இருந்தால் சீக்கிரம் காணாமல் போய் விடுவோம்’ என்பதை உணர்ந்த நிரூப் இறங்கி அடித்து ஆடத் துவங்கி விட்டார். அதே சமயத்தில் பிரியங்காவின் நட்பையும் அவர் இழக்க விரும்பவில்லை. பிரியங்காவைப் போலவே நிரூப்பிடமும் பொசசிவ்னஸ் இருப்பதை உணர முடிகிறது. இந்தக் கோபமெல்லாம் அபினய் மீது பாய்ந்திருப்பதாகத் தோன்றுகிறது.

பிக் பாஸ்
பிக் பாஸ்

ஆனால் இன்று நடந்த மோதல் இப்போது அபினய்க்கு சாதகமாகத்தான் முடியும். ஏனெனில் அவர் எவிக்ஷன் வரிசையில் ஒவ்வொரு வாரமும் விளிம்பில் தப்பிக்கிறார். இந்த வாரமும் அவர் எவிக்ஷனில் இருப்பதால், இந்தச் சர்ச்சையின் மூலம் கிடைக்கும் அனுதாப அலையில் அவர் நிச்சயம் தப்பித்துவிடுவார் என்றுதான் தோன்றுகிறது. ஒவ்வொரு வார நிகழ்விலும் நிகழும் மாற்றங்கள், அந்த வாரத்தின் எவிக்ஷன் தேர்வின் இறுதியில் பிரதிபலிப்பதற்கு இது ஓர் உதாரணம்.

“என்கிட்ட இருந்து பேட்ஜ் வாங்கறதுக்காக அவன் இப்படிச் செஞ்சிருப்பான்” என்று நிரூப் குற்றம் சாட்ட “சத்தியமா அந்த எண்ணம் எனக்கு இல்லை” என்று மறுத்தார் அபினய். நிரூப்பின் மிகையான குற்றச்சாட்டால் வருத்தம் அடைந்த அபினய், நட்பை முறித்துக் கொள்ளும் அடையாளமாக நிரூப் தன்னிடம் தந்திருந்த நினைவுச்சின்னத்தை திருப்பிக் கொடுத்து "போதுண்டா சாமி உன் சகவாசம்” என்று கண் கலங்க விலகி விட்டார். இதன் பிறகு நடந்த நிழல் விளையாட்டில் இவர்களின் பங்களிப்பு உயிர்ப்பு இல்லாமல் இயந்திரத்தனமாக இருந்தது. நிரூப்பிடம் குற்றவுணர்ச்சி தெரிந்தது. இவர்கள் விரைவில் மீண்டும் சமாதானமாகும் வாய்ப்புகள் அதிகம்.

கண்ணாடிச் சட்டத்தின் முன் நின்று இமான் மாட்டிக் கொள்ள, அவர் மீதுள்ள தன் புகார்களையெல்லாம் மீண்டும் மனப்பாடமாக ஒப்பித்துக் கொண்டிருந்தார் இசை. “அண்ணாச்சி... மிஸ் பண்ணிடாதீங்க... அப்புறம் வருத்தப்படுவீங்க...” என்று சொல்ல வேண்டும் போல் இருந்தது. விவேக் ஒரு நகைச்சுவைக் காட்சியில் "வாட் டூ யூ மீன்?” என்று கண்கலங்குவார். அந்த போஸில் நின்று கொண்டிருந்தார் அண்ணாச்சி “என்னை ஏழரை கோடி மக்களுக்கும் தெரியும். உன்னை யாருக்குத் தெரியும்?” என்று அண்ணாச்சி ஒருமுறை இசையிடம் சொல்லிவிட்டாராம். இதை அவர் மிதப்பாகச் சொல்லியிருந்தால் நிச்சயம் தவறு. “அவரு காமெடிக்காகச் சொல்லியிருப்பார்” என்று பிறகு சொன்னார் அபினய். இருக்கலாம். “அண்ணாச்சி என்கிட்டயும் அந்த மாதிரி சொல்லியிருக்காரு. அவரு யாருன்னு எனக்குத் தெரியாது. இங்க வந்த பிறகுதான் தெரியும்” என்றார் பாவனி. (அப்படிங்களா?!).

இமான் அண்ணாச்சி
இமான் அண்ணாச்சி

அடுத்த கண்ணாடி ஜோடி அக்ஷரா – சிபி. (போங்கப்பா… போராடிக்குது). முதல் சீசனில் நடந்த சர்ச்சையில் இருந்து ஆரம்பித்து வரிசையாக புகார் சொல்லி வந்த சிபி, ஒரு கட்டத்தில் மேலும் என்ன சொல்வது என்று தெரியாமல், ‘பிக் பாஸ் என்னைக் காப்பாத்துங்க...' என்று கதற டாஸ்க் பெல்லை அடித்தார் பிக் பாஸ். தன்னை யாரோ பெண் பார்க்க வந்த முகபாவத்துடன் தலையைக் குனிந்து கொண்டு சிபியின் வாக்குமூலத்தையெல்லாம் கேட்டார் அக்ஷரா. “நான் ஸ்டிராங் டீம்முன்னு சொல்லவேயில்லை” என்கிற மறுப்பை மட்டும் சிபியிடம் தெரிவித்தார். சிபி தலைமை ஏற்ற அணியை “வீக்” என்று அக்ஷரா சொன்னதாக சிபி கருதுவது அவரின் ஈகோவை நன்றாகக் காயப்படுத்தியிருக்கிறது. எனவேதான் சிபி புகைந்து கொண்டேயிருக்கிறார் என்று தோன்றுகிறது.

இரவு. ஐக்கிக்கும் அக்ஷராவிற்கும் ஜாலியாக தண்டனை கொடுத்துக் கொண்டிருந்தார் வருண். இதில் நிரூப்பையும் இன்னொரு பேபியாக சேர்த்து அவர் கான்வென்ட் ஸ்கூல் நடத்திக் கொண்டிருக்கும் போது ஒரு சிறிய விபத்து நடந்தது. ‘நந்தவனத்தில் ஓர் ஆண்டி’ கதை மாதிரி, தன்னுடைய நாணயம் வைத்திருந்த பெடஸ்டலை தானே கவனக்குறைவாக உடைத்துவிட்டார் வருண். “போச்சா... சோனாமுத்தா...” என்று பிக் பாஸ் உள்ளே அலறியிருப்பார்.

அக்ஷரா
அக்ஷரா

இப்படியாக பிக் பாஸ் வீட்டில் ரணகளமான காமெடிகள் நடக்கும் சூழலில், அபிஷேக் ராஜா வைல்ட் கார்ட் என்ட்ரியாக மீண்டும் நுழையவிருக்கிறார் என்கிற திகில் செய்தி கிடைத்திருக்கிறது. இதனால் ஆட்டம் சூடுபிடிக்கும்தான். ஆனால் அதை நம்மால் தாங்க முடியுமா என்று கலவரமாக இருக்கிறது.

அபிஷேக்கின் ரீஎன்ட்ரி பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கமென்ட் பாக்ஸில் வந்து சொல்லுங்கள்.