Published:Updated:

பிக் பாஸ் - 71: குறும்படமும், விவாதமும்! அனல் பறந்த பாவனி - அபிநய் விவகாரம்... எலிமினேஷன் அதிர்ச்சி!

பிக் பாஸ் - 71

அபிநய் – பாவனி விவகாரம் குறித்து பிக் பாஸ் வீட்டில் வம்பும், கிண்டலும், அவதூறும் பேசிய அனைவருமே இதில் ஆட்சேபிக்கத் தகுந்தவர்கள்.

பிக் பாஸ் - 71: குறும்படமும், விவாதமும்! அனல் பறந்த பாவனி - அபிநய் விவகாரம்... எலிமினேஷன் அதிர்ச்சி!

அபிநய் – பாவனி விவகாரம் குறித்து பிக் பாஸ் வீட்டில் வம்பும், கிண்டலும், அவதூறும் பேசிய அனைவருமே இதில் ஆட்சேபிக்கத் தகுந்தவர்கள்.

Published:Updated:
பிக் பாஸ் - 71

கமலின் இந்த வார விசாரணையின் முதல் நாள் நிறைந்தபோது பாவனி – அபிநய் விவகாரத்தில் சூழல் அவர்களுக்குச் சாதகமாக முடிந்தது. தனிநபர் சுதந்திரம் பற்றி மிக நீளமான வகுப்பை எடுத்தார் கமல். ஆனால் நேற்று மூன்றாவது Promo வந்தவுடன், இந்தச் சாதக அலை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. “உங்களை நம்பி நான் இப்படி பேசிட்டனே” என்று கமலே சற்று குழம்பும் நிலை. “அவசரப்பட்டுட்டியே குமாரு” என்று பலரும் இணையத்தில் புலம்பினார்கள்.

ஆனால் நிலைமையில் எதுவுமே மாற்றமில்லை என்பதுதான் யதார்த்தம். அது பற்றி விரிவாக இந்தக் கட்டுரையில் எழுதியிருக்கிறேன். ஆண் – பெண் உறவுச்சிக்கல்கள், ஆழ்மனதின் குழப்பங்கள் போன்றவை பல்வேறு பரிமாணங்களைக் கொண்டவை. இவற்றை ‘நல்லது, ‘கெட்டது’ என்று இரண்டே கோணத்தில் கறாராகச் சுருக்கிவிட முடியாது. நிதானமாக யோசிப்பவர்களும் நுண்ணுணர்வு உள்ளவர்களும் இப்படி அவசரம், அவசரமாக தீர்ப்பெழுதிவிட மாட்டார்கள்.

பிக் பாஸ் - 71
பிக் பாஸ் - 71

அதனால்தான் எழுத்தாளர்களும், படைப்பாளிகளும், நீதிபதிகளும், உளவியலாளர்களும், கலைஞர்களும், வாழ்க்கையை வாழ்ந்த அனுபவசாலிகளும் நம் சமூகத்தில் உயர்வாக மதிக்கப்படுகிறார்கள். ஒரு மனதின் சிக்கல்களில் எழும் நுட்பமான முடிச்சுகளை அவர்களால் ஏறத்தாழ கணிக்க முடியும். “இவர்கிட்ட பேசலாம்பா. கரெக்ட்டா சொல்லுவாரு” என்று பொதுமனம் நம்புகிறது.

நல்லவேளையாக கமல் போன்ற நுண்ணுணர்வு உள்ளவர் பிக் பாஸ் போன்ற சிக்கலான விளையாட்டின் தமிழ் சீசனை தொகுத்து வழங்குகிறார். ‘தனிநபர் சுதந்திரம்’ பற்றி அற்புதமாகப் பேசுகிறார். வேறு எவராவதாக இருந்தால், “ஒரு பொண்ணா இருந்துக்கிட்டு நீ ஒதுங்கிப்போக வேண்டியதுதானே?” என்று தாமரை, அக்ஷரா போல சராசரி நபராக நின்று பாவனி – அபிநய்க்கு உபதேசம் செய்ய ஆரம்பித்திருப்பார்கள். ஆனானப்பட்ட கமலே கூட பாவனி சொன்ன ஒரு கருத்துக்கு ‘அடக்கடவுளே’ என்பது மாதிரி சலித்துக் கொள்கிறார். “அண்ணாச்சி மாதிரி... எனக்கும் புரியலை" என்று அவரே சற்று தடுமாறும் அளவிற்கான சிக்கல் இதில் இருக்கிறது. என்னவென்று நிதானமாகப் பார்ப்போம்.

மறுபடியும் அதேதான். இதை பிக் பாஸ் வீட்டுப் பிரச்னையாக மட்டும் சுருக்கிப் பார்க்காமல் நம் சமூகத்தின் நெடுங்கால பிரச்னைகளுள் ஒன்றாகப் பார்க்கலாம். ‘தனிநபர் சுதந்திரம்’ என்பது மிக மிக முக்கியமானது. ஆனால் அடுத்தவரை கண்காணிப்பதில், அரையும் குறையுமாக புரிந்துகொண்டு அவர்களின் நடவடிக்கைகளைப் பற்றி வம்பு பேசுவதில்தான் நாம் நிறைய ஆர்வம் காட்டுகிறோம். இம்மாதிரியான வம்புகளும், அவதூறுகளும் சம்பந்தப்பட்டவர்களின் மனநிலையை, வாழ்க்கையை எவ்வாறெல்லாம் பாதிக்கும் என்பதை நாம் உணர்வதில்லை. இரு தனிநபர்களின் இடையே நிகழும் ஒரு பிரச்னையின் முழு பரிமாணமும் அவர்களுக்கு மட்டும்தான் தெரியும். இதில் மூன்றாம் நபர் தலையிடுவதற்கு எவ்வித உரிமையும் இல்லை. அந்த இருதனிநபர்களுக்கு கூட சரியாகப் புரியுமா என்று தெரியாது. இங்குதான் உளவியல் நிபுணர்களின் உதவி தேவைப்படுகிறது.

பிக் பாஸ் - 71
பிக் பாஸ் - 71

சமூகம் நம்மைக் கண்காணிக்கிறது என்பதற்காகவே, அந்த அழுத்தம் தாங்காமல் நம்முடைய சுயத்தின் கணிசமான பகுதியை பலி கொடுத்து நிறைய விஷயங்களை மறைத்து இங்கு பாசாங்கு செய்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஏற்கெனவே CCTV கேமராக்கள் நிறைந்திருக்கும் சூழலிலாவது கண்காணிக்கும் பணியை மனிதர்கள் குறைத்துக் கொள்வது நல்லது.

எபிசோட் 71-ல் என்ன நடந்தது?

“கோயில்ல சுண்டல் வாங்க வந்தவங்க மாதிரி வீட்டுக்குள்ள கூட்டம் அதிகமா இருக்கு. பிக் பாஸ் கடவுள் இதை எப்படி குறைக்கப் போகிறார் என்று தெரியவில்லை. பிரச்னை கொஞ்சம் சிக்கல்தான். பார்க்கலாம்” என்றபடி அரங்கத்திற்குள் வந்தார் கமல். “இவரு பிக் பாஸை வெச்சு மறைமுகமாக நம்மகிட்ட அரசியல் பேசறார்-ன்னு நீங்க நினைப்பீங்க. அதுல உண்மையில்ல. நான் நேரடியாகவே பேசுவேன்” என்று அதிரடி நகைச்சுவையுடன் ஆரம்பித்து கமல் சொன்ன கருத்து அற்புதம்.

“சிரமப்பட்டு ஜனநாயகம் என்னும் விஷயத்தை நாம் வாங்கினது நகை போல அதை லாக்கர்ல வெச்சு பூட்டறதுக்கு இல்ல. அது உயிரோடு இருக்குதான்னு தொடர்ந்து கண்காணிக்கணும். தாயுள்ளத்தோடு இதைச் செய்பவர்களுக்குத்தான் தாய்நாட்டின் மீது உண்மையான அக்கறை இருக்கிறது என்று பொருள்” என்று அற்புதமாகப் பேசிய கமல், “கார்ப்பரேட் கம்பெனி மாதிரி சில அரசியல் கட்சிகள் நடக்கின்றன என்பதை புகாராக சொல்கிறார்கள். அப்படி நடந்தாலும் நல்லதுதான். வெளிப்படைத்தன்மை இருக்கும்” என்று மையமாக தன் அமைப்பையும் இணைத்துவிட்டார்.

பிக் பாஸ் - 71
பிக் பாஸ் - 71

கறுப்பு ஆடு தானே முன்வந்து பிரியாணி ஆன கதை

பிறகு அகம் டிவி வழியாக உள்ளே நுழைந்த கமல் “பாத்திரத்தோட அப்படியே ஒன்றிட்டீங்க போல. வாழ்த்துகள்” என்று சரவெடி சஞ்சீவை பாராட்டினார். “இந்த அரசியல் டாஸ்க்கில் நீங்கள் செய்த நையாண்டிகள் நன்றாக இருந்தன” என்று அனைவரையும் பாராட்டினார். இந்த சீசனில் நடந்த லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்களில் ‘அரசியல் டாஸ்க்தான்’ மிகச் சிறப்பானது என்பதை நானும் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தேன்.

“ஆனா பாருங்க... அந்த கறுப்பு ஆடு யாருன்னு கடைசி வரை தெரியாமப் போயிடுச்சே?” என்று கமல் பாவனையாக வருந்திய போது அனைவரும் உதட்டைப் பிதுக்கினார்கள். நிரூப்பும் இதில் இணைந்து கொண்டார். பிறகு சட்டென்று மனம் மாறி “நான்தான் சார் அது” என்று கையைத் தூக்கி விட்டார். (குறும்படம் போட்டா என்ன செய்வது?!). இதை வருண் முதலிலேயே யூகித்துவிட்டார். பிரியங்காவும் நிரூப்பும் ஒருவர் அறியாமல் மற்றவருக்கு அன்பு செய்வதில் நிகழ்த்தும் போட்டி இருக்கிறதே… முடியல. “மூணு கட்சியையும் ஒண்ணாக்கிடலாம்னு பார்த்தேன். முடியல” என்று இதற்கொரு டொங்கலான விளக்கம் கொடுத்தார் நிரூப். (அதுக்கும் கள்ள ஓட்டுக்கும் என்ன சம்பந்தம்?!).

பிக் பாஸ் - 71
பிக் பாஸ் - 71

ஓர் அரசியல் கட்சியின் கொடியேற்ற விழாவில் இன்னொரு கட்சி கலந்து கொண்ட அரசியல் நாகரிகம் வெளியிலும் பரவ வேண்டும் என்று விரும்பிய கமல், ராஜூவின் நையாண்டிகளையும் குறும்புத்தனங்களையும் பிரத்யேகமாக பாராட்டினார்.

ராஜூவின் வாக்குமூலம் ஆரம்பம்

அடுத்ததாக பாவனி – அபிநய் விவகாரமே இன்றைய எபிசோட் பெரும்பான்மையான நேரத்தை ஆக்கிரமித்தது. “ராஜூ... நேத்து ஏதோ சொல்ல வந்தீங்க. ‘யோசியுங்க... நாளைக்குப் பேசலாம்’னு நான்தான் தடுத்துட்டேன். இப்ப சொல்லுங்க. நானும் எதிர்க்கட்சிக்காரங்க கிட்ட வாக்குவாதம் செய்ய இதை ஒத்திகையா பயன்படுத்திக்கறேன்” என்று ராஜூவின் தரப்பை கேட்க ஆயுத்தமானார் கமல்.

“நான் என்னை மாத்திக்க டிரை பண்றேன் சார்” என்று தடுப்பாட்டத்துடனும் தயக்கத்துடனும் துவங்கிய ராஜூ, “பாவனியும் என் கிட்ட சொன்னாங்க சார்... 'இந்த லவ் மேட்டர் பத்தி உங்களுக்கு சந்தேகம் இருக்குல்லியா. ஆக்சுவலி. அதே சந்தேகம் எனக்கும் இருக்கு. அபிநய் அந்த நோக்கத்துலதான் என்கிட்ட பழகறாரோன்னுதான் எனக்கும் தோணுது. ஆனா இப்படி நெருங்கி வராதீங்கன்னு என்னால டக்குன்னு சொல்ல முடியல'ன்னு பாவனி சொன்னாங்க” என்று ராஜூ தன் சாட்சியத்தை சொன்னதும் கமலுக்கு தலை சுற்றியது. “அண்ணாச்சி சொன்ன மாதிரி. எனக்கும் புரியல” என்று தலையைச் சொறிந்தார். பின்னர் இது பற்றிய பாவனி மற்றும் அபிநய்யின் தரப்பை அவர் கேட்கத் துவங்கினார்.

பிக் பாஸ் - 71
பிக் பாஸ் - 71

இவர்களின் வாக்குமூலங்களில் இருந்தும் என்னுடைய புரிதலில் இருந்தும் இந்த விவகாரத்தை சற்று விளக்கமாகப் பார்ப்போம். சகித்துக் கொண்டு நிதானமாக வாசித்துவிடுங்கள்.

பாவனியின் கோணம்

அபிநய் தன்னிடம் பழகும் விதம் குறித்து பாவனிக்கு ஆரம்ப நாளிலேயே ஒரு நெருடல் தோன்றுகிறது. இதை அவரிடமே நேரிடையாக கேட்டு தெளிவுப்படுத்திக் கொள்கிறார். “நான் பிரெண்டாதான் பழகுகிறேன். எனக்கு அப்படியெல்லாம் நினைப்பில்லை. இப்படி அன்பு காட்டுவதுதான் என் இயல்பு” என்று அபிநய் விளக்கம் தந்தவுடன் பாவனிக்கு சமாதானம் ஏற்பட்டு இருவரும் ‘நண்பர்களாக’ பழகத் துவங்குகிறார்கள்.

ஆனால் சுற்றியுள்ளவர்கள், ‘இது வெறும் நட்பு மட்டும்தானா... அதற்கும் மேலாகவா?’ என்று கிளுகிளுப்பான சிரிப்புடன் கிசுகிசுக்கத் துவங்குகிறார்கள். உரையாடல்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் இதைப் பற்றி விசாரிக்கிறார்கள். டாஸ்க்குகளில் கூட இந்த விஷயம் பிரதிபலிக்கிறது. இந்த கிசுகிசு தொடர்ந்து விவாதமாகவும் சர்ச்சையாகவும் மாறுகிறது. இந்த அழுத்தம் பாவனிக்குள் மனஉளைச்சலை ஏற்படுத்துகிறது. ஒரு கட்டத்தில் இந்த அழுத்தம் தாங்காமல் “எனக்கும் அவனுக்கும் இருக்கிறது பர்சனல். நீங்க யாரு இதில் தலையிடறதுக்கு?” என்று வெடிக்கிறார். ஆக சுற்றியுள்ள சமூகத்தின் அழுத்தம்தான் பாவனிக்கு நெருக்கடியை ஏற்படுத்துகிறது.

அது சரி... அபிநய்யுடன் பழகுவதில் பாவனிக்குத்தான் இத்தனை சிக்கல் ஏற்படுகிறதே? எனில் விலகியிருக்கலாமே? முகத்தில் அடித்தது போல் கடுமையாகச் சொல்லி துரத்தியிருக்கலாமே? இப்படியெல்லாம் கேள்விகள் எழலாம். சமூகத்தின் கோணத்தில் இது நியாயமான கேள்விதான். ஆனால் சமூகத்திற்காக பாவனி ஏன் அதைச் செய்ய வேண்டும்? தன் விருப்பத்திற்கு ஏற்ப ஒரு நட்பைத் தொடர்வதற்கு அவருக்கு உரிமையில்லையா?

பிக் பாஸ் - 71
பிக் பாஸ் - 71

தன்னுடைய திருமணத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் பற்றி பாவனியே இந்த நிகழ்ச்சியில் சொல்லியிருக்கிறார். திருமணம் என்னும் நிறுவனத்தின் மீதே அவருக்கு அவநம்பிக்கையும் சலிப்பும் ஏற்படுகிறது. இப்போது அவருக்குத் தேவை ஆறுதலும் அரவணைப்பும். தனக்கு இணக்கமானவர்கள் இந்த ஆறுதலை தரும்போது அந்த அரவணைப்பை அவரால் சட்டென்று கறாராக உதறித் தள்ள முடியவில்லை. அதனால்தான் அபிநய்யின் எக்ஸ்ட்ரா அன்பு தனக்கு தொந்தரவை ஏற்படுத்தினாலும் கூட ஒரே கணத்தில் சட்டென்று அவரால் துண்டிக்க முடிவதில்லை. சுருதி, மதுமிதா, இசை, ஐக்கி என்று தன்னுடைய நண்பர்கள் ஒவ்வொருவராக வெளியேறும் போது அந்த வெற்றிடத்தை அவரால் தாங்க முடிவதில்லை. பிரியங்கா, அபிநய்யுடன் உள்ள கூட்டணியைத் தொடர்கிறார்.

மஞ்சு என்கிற விநோதமான இளம்பெண்

நீங்கள் பாவனியின் சிக்கலான மனதைப் புரிந்துகொள்ள வேண்டுமெனில் ‘அவள் அப்படித்தான்’ என்கிற திரைப்படத்தைப் பார்க்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன். தன்னிடம் தூய அன்பைச் செலுத்தும் ஓர் இளைஞனை, மிக மூர்க்கமாக நிராகரிப்பாள் இவள். பல்வேறு விதமாக அவனை அவமானப்படுத்துவாள். அதற்கு அவளுடைய கடந்த கால கசப்பான அனுபவங்கள் காரணமாக இருக்கும். தன்னிடம் அன்பு செலத்துபவனை நிராகரிப்பது போல் பாவனை செய்து விட்டு ஓர் ஆணாதிக்கவாதியை விரும்புவதுபோல நடிப்பாள். இதன் மூலம் அந்த நல்ல இளைஞனை பழிவாங்கிவிட்டதாக நினைத்துக் கொள்வாள். அவளின் சிக்கலான நிலைமையைப் புரிந்து கொண்டு அந்த இளைஞனும் அமைதி காப்பான். ஒரு கட்டத்தில் அந்த இளைஞனின் அன்பை நாட அவள் முடிவு செய்து விரைந்து வரும்போது காலம் கடந்திருக்கும். அந்த நல்ல இளைஞன் பாத்திரத்தில் நடித்திருந்தவர் கமல்ஹாசன். ‘மஞ்சு’ என்கிற அந்த சிக்கலான மனஅமைப்பு கொண்ட பாத்திரத்தில் அருமையாக நடித்திருந்தவர் ஸ்ரீபிரியா.

பிக் பாஸ் - 71
பிக் பாஸ் - 71

பாவனி மீதான விமர்சனங்கள்

சரி, பாவனி மீது தவறே இல்லையா என்று கேள்வி எழலாம். சுற்றியுள்ளவர்களின் கிண்டல்கள் தன்னிடம் மட்டுமல்லாது அபிநய்யின் வாழ்க்கையிலும் சேர்த்து பிரச்னை செய்யலாம் என்கிற காரணத்தினால் அவர் அபிநய்யை கறாராகப் பேசி துண்டித்திருக்க வேண்டும். ஆம், சமூகம் மற்றும் பிக் பாஸ் வீட்டிற்காக இந்த நடிப்பை அவர் நிச்சயம் செய்திருக்க வேண்டும். இரு நபர்களுக்கு இடையேயுள்ள பிரச்னையை ராஜூவிடம் கொண்டு சென்று பாதுகாப்பு தேடியிருக்கக்கூடாது. ‘அபிநய் என் பின்னாடியே வரார்’ என்று குற்றம் சொல்லும் பாவனி, புத்திசாலியாக இருந்தால் இதை கடுமையாகச் சொல்லி அபிநய்யை மட்டும் குற்றவாளியாக சபையில் நிறுத்தி தான் சாமர்த்தியமாக தப்பித்திருக்க முடியும். ஆனால் “ஒரு பிரெண்டா அவனை எனக்குப் பிடிக்கும்” என்பதையும் கூடவே சேர்த்து சொல்லி மற்றவர்களின் கேலிக்கு ஆளாகிறார். இது அவரின் குழப்பமான மனநிலையோடு அவரின் அடிப்படையான நேர்மையையும் காட்டுகிறது. இந்த அடிப்படைதான் நுண்ணுணர்வுடன் புரிந்து கொள்ளப்பட வேண்டியது என்கிறேன்.

அபிநய்யின் கோணம்

“எனக்கு மற்றவர்களின் மீது அன்பு செலுத்துவது பிடிக்கும். அதுதான் என் இயல்பு. எனக்கு இணக்கமானவர்களிடம் காட்டும் அதே அன்பைத்தான் பாவனியிடமும் காட்டினேன். அது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டால் என்ன செய்வது? என் மனது சுத்தமாகத்தான் இருக்கிறது. அதில் ஒரு கறையும் இல்லை. என் அடிப்படை இயல்பிலிருந்து என்னால் மாற முடியாது. ஓகே... அவரிடமிருந்து இனி ஒதுங்கியிருக்கிறேன்” என்று தன் தரப்பை நேர்மையாகவே விளக்கினார் அபிநய். இத்தனை பிரச்னைக்குப் பின்னரும் “என் அசலான குணத்தை இதற்காக மாற்றிக் கொள்ள முடியாது” என்று சொன்ன அந்த நேர்மையான குணம் நல்ல விஷயம். உள்ளே குறுகுறுப்பிருந்தால் இத்தனை தெளிவாகப் பேச முடியாது.

“பாவனியோட பிரெண்ட்ஸ் எல்லாம் போயிட்ட பிறகு அவ தனியா உட்கார்ந்திருப்பா. பார்க்கவே எனக்கு கஷ்டமா இருக்கும். அதனாலதான் நானா போய் பேசினேன்” என்று தன் அன்பிற்குக் காரணம் சொல்கிறார் அபிநய். அவரின் இந்த அன்பு உண்மையிலேயே பரிசுத்தமானதுதானா அல்லது சிறிது உள்நோக்கம் கொண்டதா என்கிற ஆராய்ச்சியெல்லாம் வேண்டாம். சந்தேகத்தின் பலனையே அவருக்குத் தருவோம்.

பிக் பாஸ் - 71
பிக் பாஸ் - 71

அபிநய்யின் மீதான விமர்சனங்கள்

இதெல்லாம் சரி... அபிநய் மீது பிரச்னையே இல்லையா என்கிற கேள்வி எழலாம். “உங்களுடைய அன்பு எனக்குப் புரிகிறது. எனக்கு ஆசுவாசத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் அதே சமயத்தில் அது எனக்கு வம்புகளையும் தேடித் தருகிறது. சற்று ஒதுங்கியிருங்களேன்” என்று ஒரு பெண் மீண்டும் மீண்டும் வலியுறுத்தும்போது அதை அவர் சரியான தொனியில் புரிந்து கொண்டு முன்பே ஒதுங்கியிருக்க வேண்டும். இந்த இடத்தில்தான் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தை குறிப்பிட வேண்டியிருக்கிறது. ஒரு பெண் NO என்று சொன்னால் அது NO தான்.

‘ஒரு பெண் வேண்டாம் என்று மறுத்தால் அதற்கு வேண்டும் என்றுதான் அர்த்தம்’ என்கிற குழப்பமான சினிமாத்தனமான வியாக்கியானங்களை எல்லாம் ஆண் சொல்லக் கூடாது. ஒரு பெண்ணின் விருப்பம் இல்லாவிட்டாலும் அவள் பின்னாலேயே சுற்றினால் ஒரு கட்டத்தில் அவள் தன்னை எப்படியாவது காதலித்து விடுவாள்’ என்கிற முட்டாள்தனமான பாடத்தைத்தான் திரைப்படங்களும் இளைஞர்களுக்கு போதிக்கின்றன. ‘காதல் என்பது பரஸ்பர மதிப்புடன் இயல்பாக மலர்வது, அது கட்டாயப்படுத்தி பறிக்கும் மலர் அல்ல’ என்கிற புரிதல் இளைய தலைமுறையினருக்கு வர வேண்டும். இந்தக் கோணத்தில் அபிநய்யின் செயல்பாடு விமர்சிக்கப்பட வேண்டியதுதான்.

ராஜூ மற்றும் இதர போட்டியாளர்களின் கோணம்

அபிநய் – பாவனி விவகாரம் குறித்து பிக் பாஸ் வீட்டில் வம்பும், கிண்டலும், அவதூறும் பேசிய அனைவருமே இதில் ஆட்சேபிக்கத் தகுந்தவர்கள். தாமரை, இமான் போன்ற கடந்த தலைமுறையினரை இதில் அதிகம் குற்றம் சொல்ல முடியாது. அவர்கள் அப்படிப்பட்ட பழைமைவாத பின்னணியில் வளர்ந்திருப்பதால் பொதுப்புத்தியுடன்தான் இதை அணுகுவார்கள். ஆனால் அக்ஷரா, பிரியங்கா போன்ற நவீன தலைமுறையினர் கூட இந்த நுட்பமான பிரச்னையில் சராசரி நபராக இயங்குவது பார்க்கவே வருத்தமாக இருக்கிறது. இதில் கூடுதல் வருத்தம் ராஜூவின் மீது இருக்கிறது. அவர் மீது எக்ஸ்ட்ரா குறையைச் சொல்வதல்ல என் நோக்கம். ஒரு கதாசிரியர், சினிமா இயக்குநராக ஆசைப்படுகிறவர் என்கிற முறையில் மனித உணர்வுகளின் சிக்கல்களை அவர் புரிந்து கொண்டிருக்க முயன்றிருக்க வேண்டும். கூட்டத்தோடு சேர்த்து கும்மியடித்திருக்கக் கூடாது.

மற்றவர்களாவது வம்பு பேசியதோடு நிறுத்திக் கொண்டார்கள். ஆனால் ராஜூ இதை டாஸ்க்குகளிலும் இணைத்து இந்த வம்பிற்கு ஒரு ‘அதிகாரபூர்வ’ அந்தஸ்தை வழங்குகிறார். வாய்மொழியாக உலவும் ஒரு வதந்தி, பத்திரிகை செய்தியாக வந்தால் அதன் மதிப்பு உடனே கூடிவிடும்தானே? ராஜூ எப்போதுமே சற்று துடுக்குத்தனமாக பேசிவிடும் இயல்புடையவர். இந்தக் குறும்பு பல சமயங்களில் ரசிக்கத்தக்கது என்றாலும் சில சமயங்களில் எல்லையை மீறி விடவும் செய்கிறது. அது ‘Truth or dare’ விளையாட்டாக இருந்தாலும் கூட “நீங்க அவரை காதலிக்கிறீர்களா?’ என்று பொதுச்சபையில் கேள்வி கேட்பதின் மூலம் தனிமனிதர்களின் அந்தரங்கத்தை சிதறு தேங்காய் போல போட்டு உடைத்திருக்கக்கூடாது.

பிக் பாஸ் - 71
பிக் பாஸ் - 71

இதுவே வருண் – அக்ஷரா குறித்து ராஜூ இப்படி ஒருவேளை கேட்டிருந்தால் (இதுவும் தவறுதான்) இதன் வீரியம் சற்று குறைவு. காரணம் இருவருமே திருமணம் ஆகாதவர்கள். எனவே இது இளைஞர்களின் பரஸ்பர விளையாட்டாக ஜாலியாகப் போய் விட்டிருக்கலாம் அல்லது அக்ஷராவால் பலத்த கண்டனத்திற்கு கூட ஆளாகியிருக்கலாம். ஆனால் அபிநய் – பாவனி விவகாரம் வேறு. இருவருமே திருமணம் ஆனவர்கள். இது வேறு மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

இப்படியான ஒரு கேள்வியை தனது துடுக்குத்தனமான விளையாட்டால் ராஜூ கேட்டிருந்தாலும், தன் தவற்றை உணர்ந்து உடனே மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். ஆனால் சுற்றியுள்ளவர்கள் சுட்டிக்காட்டிய பிறகு நீண்ட நேரத்திற்குப் பிறகுதான் கேட்டார். அத்தோடு விட்டு விடாமல் மீண்டும் இந்த விஷயத்தை பல்வேறு விதங்களில் அவர் தொட்டுக் கொண்டேயிருந்தது பிழை. இந்தக் காரணத்தினால்தான் அவரும் ஒரு சராசரி நபராக இணைந்து விட்டாரே என்று வருத்தமாக இருக்கிறது.

சமூகம் தரும் அழுத்தம்

அரைகுறை புரிதலுடன் சமூகம் தரும் அழுத்தத்தால் ஓர் உறவின் பயணம் எவ்வாறெல்லாம் திசை மாறும் என்பதற்காக இத்தனை பெரிய வியாக்கியானத்தை எழுதியிருக்கிறேன். இனியாவது அடுத்தவர் விவகாரத்தில் சட்டென்று தீர்ப்பு சொல்வதற்கு ‘இதில் பல கோணங்கள் இருக்கலாம்’ என்கிற நிதானமான மனநிலையுடன் அமைதி காப்பது நல்லது. ‘அன்பு வெல்லும்; அநாவசியமான வம்பு அந்த அன்பைக் கொல்லும்’ என்கிற பன்ச்சுடன் இந்த விளக்கத்தை முடிக்கிறேன்.

இந்தச் சிக்கலான விவகாரத்தை கமல் கையாண்ட விதம் அற்புதம். “இதைப் பற்றி பேசும் நமக்கு அருகதை கிடையாது. இது அவர்களின் பிரச்னை. சரி. இனிமே டபுள் சமூகஇடைவெளி விட்டுடுங்க...” என்கிற முத்தாய்ப்புடன் இந்த விவகாரத்தை சீரியஸாகவும் நகைச்சுவை கலந்தும் அவர் முடித்து வைத்த விதம் பாராட்டத்தக்கது. இதற்காக நாலடியாரை கமல் மேற்கோள் காட்டியதும் சிறப்பு.

தனிநபர் சுதந்திரத்தின் அருமையை பெரும்பாலான மேலைநாடுகள் புரிந்து கொண்டு முன்னேறி பின்பற்றுகின்றன. ஆனால் நாம்தான் இன்னமும் கூட ‘அடுத்த வீட்டுக்காரன் என்ன நினைப்பானோ?’ என்று அவனுக்காக பயந்து கொண்டே வாழ்ந்து தொலைக்கிறோம்.

பிக் பாஸ் - 71
பிக் பாஸ் - 71

பிரியங்காவிடம் தெரிந்த நற்பண்பு

பிரியங்காவை வழக்கமாக ‘கொளுத்திப் போடும்’ குணாதிசயம் உள்ளவராகத்தான் இதுவரை பெரும்பாலும் பார்த்திருக்கிறேன். இதை அவரே பெருமையாகவும் சொல்லிக் கொள்வார். ஆனால் இன்று பிரியங்காவின் இடையீடு மிகையாகத் தெரியாமல் அவசியமாகத் தெரிந்ததை பாராட்டியாக வேண்டும். “பாவனிக்கு என் மேல ஃபீல் இருந்தா என்ன பண்றது?” என்கிற தொனியில் அபிநய் வேறு திசையில் வாக்குமூலம் அளித்துக் கொண்டிருக்கும் போது அவரை இடைமறித்து “ஹலோவ்... உங்களாலதான் அவளுக்குப் பிரச்னையாம்...” என்று பிரியங்கா திருத்திய தருணம் நன்று. இதைப் போலவே “உங்களுக்கு தவறான உள்நோக்கம் ஏதும் இல்லையே?” என்று அபிநய்யிடம் கேட்டு தெளிவுப்படுத்திக் கொண்டதும் நன்று. பின்னர் பாவனியுடமும் இதைப் பற்றி பேசினார்.

இவையும் ஒருவகையில் அநாவசியமான இடையீடு என்றாலும் குழம்பியிருக்கும் இருவரின் இடையில் சில தெளிவுகளை ஏற்படுத்த ஒரு நல்ல நண்பர் வேண்டும் என்கிற அவசியத்தை பிரியங்காவின் இன்றைய செய்கைகள் வெளிப்படுத்தியதாக எனக்குத் தோன்றியது. ஒரு பெண்ணுக்கு ஆதரவாக நிற்க வேண்டும் என்கிற கோணத்தில் பிரியங்காவின் நற்பண்பு கவர்ந்தது.

குறும்படம் போட்டுக் காட்டிய வெளிச்சம்

ஒருவகையில் நேற்று வெளியான குறும்படம் பாவனி மற்றும் அபிநய்யின் நிலைப்பாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டின. அபிநய்யிடம் மட்டுமல்லாது மற்றவர்களிடமும் தனது பிரச்னையை ஒரே மாதிரியாகத்தான் பாவனி சொல்லிக் கொண்டு வந்திருக்கிறார். அபிநய்யும் இதைப் புரிந்து கொண்டு ‘இனிமே No Thanks’தான் என்கிற நிலைக்கு வந்துவிட்டார். இதை முன்பே அவர் செய்திருக்கலாம்.
பிக் பாஸ் - 71
பிக் பாஸ் - 71

இந்தக் குறும்படம் வெளியான சமயத்தில் அக்ஷரா, தாமரை போன்றவர்கள் வெடித்து சிரித்ததை நுண்ணுணர்வற்றதனம் என்பேன். அவர்கள் ராஜூவின் ரோபோ எக்ஸ்பிரஷன்களைப் பார்த்துதான் சிரித்தார்கள். அது புரிகிறது. ஆனால் இப்படியொரு அசந்தர்ப்பமான நேரத்தில் கூட தன் நகைச்சுவை ரசனையை வெளிப்படுத்துவது அநாகரிகமான செயல். இந்தச் சந்தர்ப்பத்தை உபயோகித்துக் கொண்டு பாவனியைப் பழிவாங்க அக்ஷரா முயல்கிறாரோ என்று கூட தோன்றுகிறது. “நான் உங்க கூட நிற்பேன்” என்று அபிநய்யை வம்படியாக சென்று கட்டிப்பிடித்துக் கொண்டு பின்குறிப்பாக “அண்ணா” என்று சொன்னது அவரது புத்திசாலித்தனம். “நீ ஒதுங்கியிருக்க வேண்டியதுதானே?” என்று பாவனியை நோக்கி தாமரை சபையில் கேட்டதும் அவரது பிற்போக்கு மனநிலையைத்தான் காட்டுகிறது. “சுற்றியுள்ளவர்களுக்கு இதனால் என்னதான் பிரச்னை?” என்று கமல் சுட்டிக் காட்டிய பின்பும் கூட தாமரையால் அப்படி யோசிக்க முடியவில்லை. அவரது பின்னணியை வைத்து பார்க்கும் போது அனுதாபம் மட்டுமே படமுடியும்.

எலிமினேஷன் தந்த அதிர்ச்சியும் அண்ணாச்சியும்

சிபி காப்பாற்றப்பட்ட நிலையில் மீதமுள்ளவர்களின் எவிக்ஷன் விவகாரத்திற்கு வந்தார் கமல். இதில் தாமரை, அக்ஷரா, அபிநய் ஆகியோர் காப்பாற்றப்பட்டதை இப்போது அறிய முடிந்தது. மீதமுள்ளவர்கள் நிரூப், அமீர் மற்றும் இமான். “யார் சேவ் ஆவாங்கன்னு நெனக்கறீங்க?” என்று கமல் கேட்ட போது “நான் காப்பாற்றப்படுவேன்” என்று தன்னம்பிக்கையுடன் சொன்னார் அண்ணாச்சி. அவர் அப்படிச் சொன்னது மட்டுமல்ல, பெரும்பாலான பார்வையாளர்களுமே கூட அப்படித்தான் நம்பியிருப்பார்கள். ஆனால் ‘இமான்’ என்கிற எவிக்ஷன் கார்டு காட்டப்பட்டதுமே இமானைப் போலவே பார்வையாளர்களும் அதிர்ச்சியடைந்திருப்பார்கள்.

பிக் பாஸ் - 71
பிக் பாஸ் - 71

இமானை விடவும் சுமாரான ஆட்டக்காரர்கள் உள்ளே இருக்கும்போது அவர் வெளியே செல்வது சங்கடமாகத்தான் இருக்கிறது. எங்கே தவறு நடந்திருக்கும் என்று புரியவில்லை. தனது எவிக்ஷனை அவர் கூலாக எடுத்துக் கொண்டாலும் உள்ளே ஏமாற்றம் அடைந்திருப்பதை உணர முடிந்தது. “சந்தோஷமா இருங்கடே” என்று ஒவ்வொருவரையும் அரவணைத்துக் கொண்டார் இமான். “உங்களை கடைசி வரை கூட்டிட்டு போவேன்” என்று சொன்ன ராஜூ, இதற்கு உடைந்து போய்விடுவார் என்று தெரியும். ஆனால் இப்படிக் குழந்தை மாதிரி தேம்பித் தேம்பி அழுதது நெகிழ்வை ஏற்படுத்தியது. அதுவரை இயல்பாக இருந்த இமானின் கண்களும் கலங்கிவிட்டன. மிக அரிதாக வெளிப்படும் ஆண்களின் கண்ணீரே நம்மை அதிகம் உலுக்கியெடுத்து விடுகிறது. நேற்று நிகழ்ந்ததும் இதுதான். அமீர், வருண் உள்ளிட்டவர்களும் அழுதுவிட்டார்கள். அப்படியொரு அன்பை இமான் தன் நகைச்சுவையால் சம்பாதித்து வைத்திருந்தார். “உங்ககிட்ட சண்டை போட்டிருக்கேன். மன்னிச்சிருங்க” என்று பிரியங்கா காலில் விழுந்தது ஒரு நல்ல தருணம்.

“அழுவாதீங்கடே. ஆளுக்குக் கொஞ்சம் தண்ணியை மடக்கு மடக்குன்னு குடிங்க” என்று தீர்த்தம் போல் தந்து அண்ணாச்சி வெளியேற முயன்ற போது ஓர் அதிசயம் நிகழ்ந்தது. இந்த சீசனில் இதுவரை எந்தவொரு எவிக்ஷனிலும் பிக் பாஸ் வாயைத் திறந்ததில்லை. அவரின் எல்லை தாண்டிய தொனி வெளிப்பட்டதில்லை. ஆனால் இந்தச் சமயத்தில் "என்ன இமான்... சொல்லிக்காம போறீங்க?” என்று உரிமையுடன் பிக் பாஸ் கேட்ட போது பெரும்பாலான பார்வையாளர்கள் நிச்சயம் பரவசப்பட்டிருப்பார்கள். அப்படியொரு மொமெண்ட் அது. “அடப்பாவி... தம்பி. உன்னை மறந்துட்டேன் பாத்தியா. மன்னிச்சுடுடே. நல்லா இருடே” என்றபடி ஜாலியாகக் கிளம்பினார் அண்ணாச்சி.

பிக் பாஸ் - 71
பிக் பாஸ் - 71

தனியாக அமர்ந்திருந்த பாவனியைப் பார்த்து “எப்படி உக்காந்திருக்கா பார்த்தியா... இதனாலதான் போய் போய் பேசினேன்” என்ற அபிநய் “இனிமே அவ சந்தோஷமா இருக்கறதுதான் முக்கியம்” என்ற போது ‘எங்கிருந்தாலும் வாழ்க..’ என்கிற பாடல் பின்னணியில் ஒலித்தது போல் ஒரு பிரமை. என்ன இருந்தாலும் ஜெமினியின் பேரனல்லவா? எனவே காதல் சோகப்பாடல்கள் பின்னணியில் தன்னிச்சையாக ஒலித்தன. நகைச்சுவையைத் தாண்டி அபிநய்யின் இந்த நற்பண்பு கவர்ந்தது.

விக்ரமாதித்யன் என்கிற கலகக்கார கவிஞர்

மேடைக்கு வந்த கமல் ‘புத்தகப் பரிந்துரை’ ஏரியாவிற்கு வந்தார். ‘விக்ரமாதித்யன் கவிதைகள்’ என்பதுதான் கமல் பரிந்துரை செய்த நூல். விக்ரமாதித்யனும் இமானைப் போலவே தமிழ் இலக்கிய உலகின் ‘அண்ணாச்சி’தான். திருநெல்வேலிக்காரர். தேசாந்திரி வாழ்க்கையை பின்பற்றுபவர். சராசரித்தனங்களுக்குப் பொருந்தாமல் மீறல்தன்மையுடன் வாழ்பவர். புதுக்கவிதையுலகில் ஒரு முக்கியமான படைப்பாளி.

"மரபுக்கவிதைக்கும் நவீன கவிதைக்கும் பாலமாக இருந்தவர்" என்று இவரைக் குறிப்பிட்ட கமல்,

‘போன வருஷம் சாரலுக்கு குற்றாலம் போய்

கை பேனா தொலைத்து

கால் செருப்பு மறந்து

வரும் வழியில் கண்டெடுத்த

கல்வெள்ளி கொலுசு ஒன்று

கற்பனையில் வரைந்த பொற்பாத சித்திரத்தை

கலைக்க முடியலையே இன்னும்’

என்னும் கவிதையை வியந்து அதற்கு சிறப்பான பொழிப்புரையும் தந்தார்.

விக்ரமாதித்யன்
விக்ரமாதித்யன்

“உங்கக்கூட நடிக்கணும் சார்!”

மேடையில் இமான். “106 நாள் எதிர்பார்த்தீங்களா?” என்று சிரித்தபடி கமல் கேட்க, தலைவாரி பவுடர் பூசி ஃப்ரெஷ்ஷாக வந்திருந்த இமான், “மக்கள் எதிர்பார்த்தாங்க. களுத... போயித்தான் பார்ப்போமேன்னு நானும் நெனச்சேன்” என்பது போல் கூலாக பதில் அளித்தார். “எழுபது நாள் இருந்ததே பெரிய விஷயம் அண்ணாச்சி. வெற்றியை நெருங்கிட்டீங்க” என்று கமல் பாராட்டியதை ஏற்றுக் கொண்ட இமான் “இது பரவாயில்லை. உங்கக்கூட ஒரு படம் நடிச்சா சந்தோஷப்படுவேன். இதை சான்ஸ் கேட்கறதா கூட நீங்க எடுத்துக்கலாம்” என்று சந்தடி சாக்கில் ஒரு பிட்டைப் போட “நிச்சயமா பண்ணுவோம்” என்று கமல் ஒப்புக் கொண்டது இமானுக்கு மட்டுமல்ல நமக்குமே அப்படியொரு மகிழ்ச்சி. அரசியல் டாஸ்க்கில் இமான் தந்த நடிப்பெல்லாம் அட்டகாசம்.

பிக் பாஸ் - 71
பிக் பாஸ் - 71

“அவன் மெல்லமாத்தான் வருவான்!"

அகம் டிவி வழியாக போட்டியாளர்களைச் சந்தித்த அண்ணாச்சி, ஒவ்வொருவருக்கும் தன் பிரத்யேக பாணியில் தன் அன்பைச் சொன்னது சிறப்பு. இமான் வெளியேறிய சோகத்தில் பவானி – அபிநய் பிரச்னையை மக்கள் சற்று மறந்து விடுவார்கள் என்று பார்த்தால் வீட்டின் உள்ளே அந்த தலைப்புதான் இன்னமும் ஓடிக் கொண்டிருந்தன. அபிநய்யிக்கு உபதேசம் சொல்லிக் கொண்டிருந்தார் பிரியங்கா. “இவ ஒதுங்கியிருக்கறதுக்கு என்ன கேடு?” என்பது மாதிரி தாமரையும் வருணும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

“அவன் அப்படித்தான். மெல்லமாத்தான் மேலே வருவான்” என்கிற சினிமா வசனத்தின் குரல்தான் பின்னணியில் கேட்கிறது.