Published:Updated:

பிக் பாஸ் - 72: மீண்டும் பாவனி vs அபிநய்; என்ன ட்ரை பண்றீங்க அமீர்? வரிசை டாஸ்க் அட்ராசிட்டீஸ்!

பிக் பாஸ் - 72

முந்தைய நாளில் என்ன நடந்தாலும் அதில் முழு லெக்பீஸை மறைப்பதுபோல் மறுநாள் காலையில் ஒரு ரகளையான பாடலைப் போட்டு விடுகிறார் பிக் பாஸ். மக்களும் ஒன்றுமே நடக்காதது போல் ஆடுகிறார்கள்.

பிக் பாஸ் - 72: மீண்டும் பாவனி vs அபிநய்; என்ன ட்ரை பண்றீங்க அமீர்? வரிசை டாஸ்க் அட்ராசிட்டீஸ்!

முந்தைய நாளில் என்ன நடந்தாலும் அதில் முழு லெக்பீஸை மறைப்பதுபோல் மறுநாள் காலையில் ஒரு ரகளையான பாடலைப் போட்டு விடுகிறார் பிக் பாஸ். மக்களும் ஒன்றுமே நடக்காதது போல் ஆடுகிறார்கள்.

Published:Updated:
பிக் பாஸ் - 72

ஓர் உறவு வேறுவழியின்றி பிரிய நேரும் போது அது எவ்வாறு நிகழ வேண்டும்? இரண்டு தேனீர் கோப்பைகளுடனும் ஓர் அழுத்தமான கைக்குலுக்கலுடனும் வாழ்நாள் பூராவும் நினைவில் வைக்கத்தக்க வசீகரமான கடைசிப் புன்னகையுடனும் பரஸ்பர மதிப்புடனும் நிகழ வேண்டும். இந்தப் பிரிவு உரையாடல் மிக முதிர்ச்சியாக அமைந்து ஓர் இனிமையான வடு போல அந்த இருவரின் நெஞ்சிலும் ஆழமாக பதிய வேண்டும்.

மாறாக பெரும்பாலான பிரிவுகள் அவ்வாறு நிகழ்வதில்லை. ஒருவரையொருவர் பயங்கரமாக பிறாண்டிக் கொண்டு ரத்தக் காயங்களுடன் மிக கோரமாகத் திரும்புவார்கள். ஒருவரின் மேல் மற்றவருக்கு வன்மமும் கோபமும் நிறைந்திருக்கும். இப்படிச் செய்வதின் மூலம் அவர்களின் உறவுக்காலத்தின் இனிமையை அவர்களே ஆபாசமாக்குகிறார்கள் என்றுதான் பொருள். அதில் மிஞ்சியிருந்த இனிப்பை இவர்களே கடைசியில் கசப்பாக்குகிறார்கள். ஓர் உறவு மலரும் போது அதில் எத்தகைய இனிமையும் பரவசமும் இருந்ததோ, அவ்வாறே பிரியும் போதும் அதை இனிமையான அனுபவமாக்கும் முதிர்ச்சியும் நமக்கு வேண்டும்.

பிக் பாஸ் - 72
பிக் பாஸ் - 72

அது நட்பா அல்லது காதலா? எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். உண்மையான அன்பா அல்லது இந்த விளையாட்டுக்காக ஒருவரையொருவர் பயன்டுத்திக் கொள்ள முயன்றார்களா? இதுவும் கூட எதுவாகவும் இருந்து விட்டுப் போகட்டும். இவற்றை நோண்டி ஆராய மூன்றாம் மனிதருக்கு அருகதையில்லை. இவர்களின் செயற்பாடுகள் மற்றவர்களைப் பாதிக்காதவரை இந்த விவகாரத்தில் எவரும் நுழைய வேண்டிய அவசியமில்லை.

ஆனால், இந்த உறவின் பிரிவு சுமூகமாக நிகழ்ந்திருக்கலாம். பாவனி – அபிநய் விவகாரம் பற்றியதுதான் இது என்பது நான் சொல்லாமலேயே உங்களுக்கு விளங்கியிருக்கும். இந்த பிரிவனுபவம் நிகழ்ந்தபோது பாவனியின் அணுகுமுறை பார்க்க ரசிக்கத்தகுந்ததாக இல்லை.

வேறென்ன? தரவரிசை என்பது ஒரு குழுவின் செயற்பாட்டைப் பார்த்து வெளியிலிருந்து ஒருவர் வந்து மதிப்பிட்டுச் சொல்ல வேண்டிய சமாச்சாரம். ஆனால், இந்தப் பொறுப்பை அந்தக் குழுவிடமே ஒப்படைத்து ‘நீங்களே யார் ஒன்று, இரண்டு என்று முடிவு செய்து கொள்ளுங்கள்’ என்றால் என்ன நடக்கும்? குடுமிப்பிடிச்சண்டைதான். அதுதானே பிக்பாஸின் நோக்கமும் கூட?! அது மிகச்சிறப்பாக நடந்தது.

எபிசோடு 72-ல் என்ன நடந்தது?

“இனிமே இதைப் பத்தி துளி கூட பேச வேண்டாம்” என்று அமீர் மற்றும் பிரியங்காவிடம் சொல்கிறார் அபிநய். நல்ல விஷயம். ஆனால் ‘ஸ்டார்ட்டிங்லாம் நல்லாத்தான் இருக்கு. உன்கிட்ட ஃபினிஷிங் சரியில்லையேப்பா’ என்பது போல மறுபடியும் அபிநய்யே இதை நோண்டத் துவங்குகிறார். “விஷயம் தெரியுமா? பாவனி மேட்டர் நியூஸ்ல வர்றதுக்கு காரணம் பாவனியேதான். அவதான் இதைச் சேர்க்கச் சொன்னாளாம்” என்கிற வெடிகுண்டு தகவலை பிரியங்காவிடம் சொன்னார். “யார் இதைச் சொன்னது?” என்று பிரியங்கா அதிர்ச்சியுடன் கேட்க ‘அக்ஷரா’ என்றார் அபிநய்.

பிக் பாஸ் - 72
பிக் பாஸ் - 72

இந்த விவகாரத்தை வைத்து அக்ஷரா குளிர்காய நினைப்பது அப்பட்டமாக வெளியே தெரிகிறது. அவர் பாவனியை பழிவாங்க வேறு ஏதாவது சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியிருக்கலாம். இந்த சென்சிட்டிவ் விஷயத்தைப் பயன்படுத்துவதின் மூலம் அவரிடமுள்ள வன்மம்தான் தெரிகிறது. ஒரு பெண்ணின் ஒழுக்கம் பற்றி இன்னொரு பெண்ணே வம்பும் அவதூறும் பேசுவதைப் போன்ற அவலம் இது. ஆனால், அமீர் இதை நம்பாமல் “ராஜூகிட்ட இதை விசாரிக்கலாம்” என்கிறார். பாவனியிடம் இதை கேட்க முடியாது. அவர் ஏற்கெனவே மனஉளைச்சலில் இருக்கிறார் என்று அமீர் நினைத்திருக்கலாம். தன்னைப் பற்றிய ஒரு வம்பை தானே ஒரு பெண் முன்வந்து தருவாரா என்கிற லாஜிக் இந்த விஷயத்தில் இடிக்கிறது. ஆனால் விளம்பர மோகியாக இருந்தால் அதை மனம் கூசாமல் செய்வார்கள்.

நண்பர் துரோகம் செய்தால் என்ன செய்யலாம்?

பாவனி – அபிநய் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட இருவருமே குறைந்தபட்சம் இரண்டு நாள்கள் எதையும் பேசாமல் ஆறப்போட்டிருக்கலாம். அதுவரை முற்றிலுமாக ஒருவரையொருவர் தவிர்த்திருக்கலாம். கடந்துபோகும் போது ஒரு புன்னகையோடு நிறுத்தியிருக்கலாம். ஆனால் அவர்களை அப்படிச் செய்யவிடாமல் சில விஷயங்கள் நடக்கின்றன. பிரியங்காவும் அமீரும் இந்த விஷயத்தில் பாலமாக இருப்பது நல்லதா, கெட்டதா? அவர்கள் உண்மையிலேயே நல்லெண்ணத்துடன் இந்தப் பிரச்னையைத் தீர்க்க நினைக்கிறார்களா அல்லது அவர்களுக்கும் ஏதாவது உள்நோக்கம் இருக்கிறதா?

பிக் பாஸ் - 72
பிக் பாஸ் - 72

உங்களுக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவர் ஏதோவொரு விஷயத்தில் உங்களுக்கு நல்லது செய்வதுபோல் துரோகம் செய்துவிட்டதாக உங்களுக்குத் தோன்றுகிறது என்று வைத்துக் கொள்வோம். ஆனால் அதை உறுதிப்படுத்த முடியாமல் குழப்பமாக இருக்கிறது. நீங்கள் அந்த நண்பரிடமே நேரடியாக இதை விசாரிக்கிறீர்கள். அவர் உங்களால் காண முடியாத வேறொரு கோணத்தைச் சொல்லி ‘அது ஏன் அப்படி நிகழ்ந்தது?’ என்று அதன் நியாயத்தை விளக்குகிறார். அந்தக் காரணம் 80 சதவிகிதம் பொருத்தமாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.

எனில் சந்தேகத்தின் பலனை அந்த நண்பருக்குத் தருவதுதான் முறை. ஏனெனில் அவசரப்பட்டு ஒரு நட்பை உடனே துண்டிப்பது எளிதான விஷயம். அதற்கு ஒரு நிமிஷம் கூட ஆகாது. ஆனால், ஓர் உண்மையான நட்பை அடைவதற்கு பல வருடங்கள் கூட ஆகலாம். உலகின் அனைத்து விஷயங்களிலும் ‘இதில் ஏதாவது இருக்குமோ?’ என்று சந்தேகப்பட்டுக் கொண்டேயிருந்தால் நம் மனஅமைதி போய்விடும். எல்லாவற்றையும் எதிர்மறைக் கண்ணோட்டத்துடன் பார்க்கும் வியாதி வந்துவிடும். அதற்காக அனைத்தையும் அப்படியே நம்பும் இளிச்சவாயனாக இருக்க வேண்டியதில்லை. மனதின் அடியில் அனைத்தையும் அசைபோட்டுக் கொண்டே இருக்கலாம். இன்னொன்று, நீங்கள் உட்பட எந்தவொரு மனிதரும் முழுமையான நல்லவரில்லை. ‘கடவுள் பாதி, மிருகம் பாதி’ கதைதான். ஆனால் உங்கள் நண்பர் மட்டும் பரிசுத்தமான ஆசாமியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் நியாயமில்லை.

பிக் பாஸ் - 72
பிக் பாஸ் - 72

பாவனி – அபிநய் விவகாரத்தில் பிரியங்கா மற்றும் அமீர் ஆகிய இருவரும் தலையிடுவது நல்ல நோக்கத்திலா அல்லது அவர்களுக்கும் உள்நோக்கம் ஏதாவது இருக்குமா என்பதில் தெளிவில்லை. அமீர் உண்மையான நட்புடன் இந்த விஷயத்தில் தலையிடுவதாகத் தோன்றுகிறது. ஆனால் அவரும் பாவனியிடம் வழிவதால் ‘திண்ணை காலியானா அதுல நாம உட்காரலாம்’ என்கிற நோக்கத்தில் செயல்படுகிறாரா? ‘எனக்கு கொளுத்திப் போடறதுன்னா பிடிக்கும்’ என்பதை சுயவாக்குமூலமாகவே தருகிறவர் பிரியங்கா. இந்த விவகாரத்தை அவர் இந்த நோக்கில்தான் அணுகுகிறாரா? இதில் கரிசனம் காட்டுவதின் மூலம் இந்த நிகழ்ச்சியில் தனக்கு மைலேஜ் கிடைக்கும் என்று நினைக்கிறாரா? அல்லது ஒரு பெண்ணின் ஒழுக்கம் தொடர்ந்து கேள்விக்கு உட்படுத்தப்படுவதால் சக பெண்ணாக உண்மையிலேயே அறச்சீற்றம் கொள்கிறாரா? சந்தேகத்தின் நல்ல பலனையே இவர்களுக்குத் தருவோம்.

பாவனி – அபிநய் உரையாடல் – மறுபடியும் மொதல்ல இருந்தா?

“கடைசியா ஒருமுறை பேசிடுங்க. கறாரா சொல்லிடுங்க” என்று பிரியங்கா தந்த ஆலோசனை சரியானதுதான். ஆனால் அதை உடனே செய்வது சரியில்லை. சற்றாவது ஆறப்போட வேண்டும். பிரச்னையின் சூடு ஆறாமல் இந்த உரையாடல் நடக்கும்போது அது மேலும் வெடிக்கவே சாத்தியம் அதிகம். அப்படியேதான் ஆயிற்று. பாவனிதான் இந்த உரையாடலுக்கு அபிநய்யை அழைக்கிறார். “உங்களின் அன்பு நடவடிக்கைகள் எனக்கு அசெளகரியத்தைத் தந்தன. என்னால் கறாராக சொல்ல முடியவில்லை. இப்போது சொல்கிறேன்” என்று பாவனி தன் தரப்பை சரியாகவே ஆரம்பிக்கிறார்.

ஆனால், பாவனி சில விஷயங்களை தன்னிடம் மறைத்துவிட்டதாக அல்லது தாமதமாக சொன்னதாக அபிநய் நினைக்கிறார். கமலின் விசாரணை நாளுக்கு முன்னதாக பாவனி, ராஜூவிடம் பேசியிருக்கிறார். ஆனால், கமல் வருவதற்கு சற்று நேரத்திற்கு முன்தான் அபிநய்யிடம் இதைப் பற்றி பாவனி சொல்லியிருக்கிறார். இது குறித்த அதிருப்தி அபிநய்க்கு இருக்கிறது. ஆனால், பாவனி தான் செய்யும் அனைத்து விஷயங்களையும் தன்னிடம் சொல்ல வேண்டும் என்று அபிநய் எப்படி எதிர்பார்க்கிறார்? குற்றவாளியிடமே சாட்சியங்களைப் பற்றி சொல்லிக் கொண்டிருக்க முடியுமா?

பிக் பாஸ் - 72
பிக் பாஸ் - 72

ஆனால், பாவனியின் பிரச்னை வேறு. “'பாவனிதான் என்கிட்ட பேச டிரை பண்றா’ன்னு அபிஷேக் கிட்ட நீங்க சொன்னீங்களா?” என்று அபிநய்யிடம் ஒரு கேள்வி கேட்கிறார் பாவனி. (இந்தச் சம்பவம் எப்ப நடந்தது?!) அபிநய் இதை மறுக்கிறார். எனவே உரையாடலில் சூடு ஏறுகிறது. “நான் ஏதாவது வரம்பு மீறியிருக்கிறேனா?” என்கிறார் அபிநய். “நீங்க டிரை பண்ணது பச்சையா தெரியுது” என்று காட்டமாகச் சொல்கிறார் பாவனி. உரையாடலில் இப்போது உஷ்ணம் கூடுகிறது. "உரையாடலுக்கு அழைத்தது நீதான். நான் பக்குவமான முறையில் இதைப் பேசித் தீர்க்க முயல்கிறேன்" என்று அபிநய் சொன்னாலும் பாவனியால் நிதானமான போக்கைக் கடைப்பிடிக்க முடியவில்லை. “கெட் லாஸ்ட்” என்றபடி ஆத்திரத்துடன் விலகுகிறார்.

பிக் பாஸில் மணிரத்னம் படம்

பிறகு மணிரத்னம் படத்தில் வருவது போல் ஆங்கில உரையாடல்களில் உக்கிரமான சண்டை இருவருக்குள்ளும் நடக்கிறது. "நான் குளிக்கப் போகணும்” என்று முன்பொரு சமயத்தில் சொன்ன ராஜூ இப்போதோ காதைப் பொத்திக் கொண்டு "நான் தூங்கணும்” என்கிறார். அபிநய்யை உரையாடலுக்கு அழைத்த பாவனி, சட்டென்று அதை துண்டித்துக் கொண்டு வெளியேறியது முறையானதல்ல. இதுவேதான் ராஜூ விவகாரத்திலும் முன்னர் நடந்தது. சபையின் நடுவில் நின்று “உங்களுக்கு என்ன தெரியணும்?” என்று நீதி கேட்பது போல பாவனி கேட்டபோது “உக்காருங்க... பேசலாம்” என்று ராஜூ அழைத்த போது பாவனியால் நிதானம் காட்ட முடியவில்லை. ஆனால், “முட்டாள்தனம் பண்ணிட்டேன்” என்று பிறகு தாமதமாக உணர்கிறார். அந்தச் சமயத்திலாவது மனஉளைச்சலின் அழுத்தத்திலும் பிரியங்காவின் தூண்டுதலிலும் பாவனி செயல்பட்டார் எனலாம்.

பிக் பாஸ் - 72
பிக் பாஸ் - 72

ஆனால், இப்போது சற்று நிதானமான மனநிலையில் உரையாடலை ஆரம்பிக்கும் போது அதை முழுமையாகச் செய்வதுதான் சரியானது. பழைய விஷயங்களை இன்னமும் பேசி கிளறாமல் “நடந்தது நடந்துபோச்சு. இனிமே நாம விலகியிருப்போம். அதுதான் நம் இருவருக்கும் நல்லது” என்று நட்புமுறையில் இந்த உரையாடலை முடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இப்போது இந்தக் கட்டுரையின் ஆரம்ப பத்திகளை வாசித்துப் பாருங்கள். அவற்றின் அர்த்தம் இன்னமும் ஆழமாகப் புரியும். ஆனால் இவற்றையெல்லாம் வெளியில் இருந்து ஒருவர் சொல்லிவிடுவது எளிது. பிரச்னையின் மையத்தில் அவரே நிற்கும்போதும் கடைப்பிடிக்கிறாரா என்பதுதான் மேட்டர்.

‘அண்ணன் எப்ப போவான், திண்ணை எப்ப காலியாவும்?’

இந்த உஷ்ணமான உரையாடல் முடிந்து பாவனி தனிமையில் வந்து அமர்ந்த போது அங்கு வரும் அமீர் “சாரி... இப்படியெல்லாம் ஆயிடுச்சு. நானும் இதுக்கு காரணமோன்னு குற்றவுணர்வா இருக்கு. உங்களுக்கு நடுவுல வந்துட்டேன்” என்கிறார். “அப்படியெல்லாம் இல்லை” என்று பாவனி வருந்த, “வேறு ஏதாவது பேசுவோம். நிலா வெளிச்சம். க்ளைமேட் நல்லா இருக்கு” என்று அமீர் டிராக் மாறிய போது நமக்கு கொஞ்சம் திக்கென்றுதான் ஆனது. (என்னது..?! மறுபடியும் மொதல்ல இருந்தா?!)

விடிந்தது. முந்தைய நாளில் என்ன நடந்தாலும் அதில் முழு லெக்பீஸை மறைப்பதுபோல் மறுநாள் காலையில் ஒரு ரகளையான பாடலைப் போட்டு விடுகிறார் பிக் பாஸ். மக்களும் ஒன்றுமே நடக்காதது போல் ஆடுகிறார்கள். ‘முக்கா முழம் பூவு’ என்கிற குத்துப் பாடலுக்கு மக்கள் குத்தி ஆடினார்கள். இன்னமும் தூங்கிக் கொண்டிருந்த அபிநய்யை குரல் தந்து எழுப்புகிறார் பாவனி. (முடியல!).

பிக் பாஸ் - 72
பிக் பாஸ் - 72

‘நீங்க படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்’ - பிக் பாஸ்

திங்கட்கிழமை என்பதால் நாமினேஷன் சடங்கைத் தூசு தட்டி எடுத்தார் பிக்பாஸ். “ஒரு கன்ஃப்யூஷன்ல கன்ஃபெஷன் ரூம் சாவியை தொலைச்சிட்டோம். அதனால நீங்க இங்கயே ஒரு பெயரை சீட்ல எழுதிப் போடுங்க” என்று பிக் பாஸ் சொன்ன போதே லைட்டாக சந்தேகம் வந்தது. மக்கள் கையை வைத்து மறைத்துக் கொண்டு எழுத முயன்றாலும் கேமரா விடாமல் க்ளோசப்பிற்குச் சென்றது. ‘அபிநய்’ பெயரை அமீர் எழுதியதைப் பார்க்க முடிந்தது. சீட்டில் ஒரு பெயரை எழுதிவிட்டு ‘சிபி’ என்று சொன்னார் சஞ்சீவ். பெயரை வெளியில் சொல்லக்கூடாது என்று முன்பே தெளிவாகவே சொல்லியிருந்தார் பிக்பாஸ். “இல்ல... அடுத்து நீங்க வாங்கன்னு கூப்பிட்டேன்” என்று சஞ்சீவ் சொன்ன நகைச்சுவை ரசிக்க வைத்தது. முன்னரே சொன்னது போல் சஞ்சீவிடம் ஓர் அமைதியான, ஆனால் அழுத்தமான சென்ஸ் ஆஃப் ஹியூமர் இருக்கிறது.

நாமினேஷன் முடிந்ததும் “இனிமே அவங்க அவங்க தனித்திறமைலதான் ஆடணும். இதற்காக சமவாய்ப்பு ஒன்றை உருவாக்குகிறேன்” என்று எல்லாக் கோட்டையும் அழித்த பிக் பாஸ் “உங்க எல்லோரையும் ஊரை விட்டு தள்ளி வைக்கறேன்” என்கிற நாட்டாமையாக மாறி அனைவரையும் நாமினேட் செய்தார். ‘பக்கத்து வீட்டிலும் கரண்ட் போன சந்தோஷம் போல’ மக்கள் இதற்கு உற்சாகமாக கைத்தட்டி மகிழ்ந்தார்கள்.

‘நீ முந்தியா இல்லை. நான் முந்தியா?’

அடுத்ததாக தரவரிசைப் பட்டியல். இதை போட்டியாளர்களே தங்களுக்குள் பேசி தீர்மானிக்க வேண்டும். ஒன்று முதல் 11 எண்ணிக்கை வரையுள்ள தரவரிசை மேடையை அமைத்த பிக் பாஸ் “உங்களுக்குள்ளளே அடிச்சுக்கங்க. ஆனா சம்பவம் தரமா இருக்கணும்” என்றார். இதில் ஆச்சர்யமாக சிபியின் ஆதிக்கமே அதிகம் இருந்தது. திருமண வீடுகளில் சிலரைக் கவனித்தால் மற்ற சமயங்களில் எல்லாம் அமைதியாக இருப்பார்கள். ஆனால் பந்தியில் அமர்ந்ததுமே இவர்கள் போடும் சத்தத்தில் பொறி பறக்கும். “யோவ்... சாம்பாரு. வாய்யா இங்க... இங்க பாரு அண்ணன் இலையில பாயசம் இல்ல... அப்படியே இங்கயும் ஊத்து" என்று அதிகாரத்தை தூள் பரத்துவார்கள். “அடப்பாவி. இவ்ளோ நேரம் கம்முனு இருந்தான்” என்று நமக்கே ஆச்சர்யமாக இருக்கும்.

பிக் பாஸ் - 72
பிக் பாஸ் - 72

சிபியின் செயல்பாடும் நேற்று அப்படித்தான் இருந்தது. இதுவரை அவர் துடிப்பாகச் செயல்பட்ட விஷயங்களை விரல்விட்டு எண்ணி விடலாம். ஆனால் ‘அஞ்சு பைசாக்கு பிரயோசனம் இல்லாதவன், ஐஸ்வர்யா ராய்க்கு ஆசைப்பட்ட கதையாக’ முதல் இடத்தில் ஏறி நின்று கொண்டார் சிபி. “நீதிடா... நேர்மைடா... நியாயம்டா... அதுக்கு இன்னொரு பெயர் சிபிடா..” என்று நெடுநேரத்திற்கு கபி கபி பாடிக் கொண்டிருந்தார் அவர். முதல் இடத்திற்காக சிபிக்கும் நிரூப்பிற்கும் இடையே உக்கிரமான மோதல் நடைபெற்றது.

நிரூப் எப்போதுமே அதிகாரத்தை விரும்புகிறவர். அதை வெளிப்படையாக சொல்கிறவர். ‘இந்த கேம்தான் முக்கியம்’ என்று பல சமயங்களில் சொல்லியிருக்கிறார். அதற்காக அதிரடியாகவும் ஆடியிருக்கிறார். ஆனால், அதெல்லாம் ஒரு காலத்தில். இப்போதோ அப்ரூவர் ஆன ரவுடி மாதிரி அடங்கிப் போயிருக்கிறார். எனவே முதல் இடத்திற்காக இவர் முட்டி மோதும் போது “தம்பி. நீ ஒரு காலத்துல ரவுடியா இருந்திருக்கலாம். இப்ப இங்க நான்தான்... கை நடுங்குது பாரு. போயி ஓரமா உக்காரு” என்று நிரூப்பை அடக்க முயன்றார் சிபி. ஆனால் ‘நிரூப்புடா... நெருப்புடா’ என்று பதிலுக்கு விடாமல் மல்லுக்கட்டினார் நிரூப்.

பிக் பாஸ் - 72
பிக் பாஸ் - 72

இவர்களின் சண்டையில் சஞ்சீவ் அவ்வப்போது தலையிட்டது பார்க்க சுவாரஸ்யமாக இருந்தது. ஆனால் அவர் லாஜிக்கோடுதான் தன் தலையீட்டை செய்தார். “என்கிட்ட கெஞ்சாதே” என்று சம்பந்தமில்லாமல் நிரூப்பிடம் சிபி சொன்ன போது “அவர் தன் உரிமையைத்தான் கேட்கிறார். கெஞ்சவில்லை” என்கிற சரியான பாயின்ட்டை சஞ்சீவ் எடுத்து வைத்தார். இன்னொரு சமயத்தில் அமீரும் சிபியும் மோதிய போது “சம்பந்தமேயில்லாம பாவனி பெயரைச் சொன்னது தப்பு. சாரி கேளு” என்று சஞ்சீவ் தலையிட்டதும் நன்று. சஞ்சீவிடம் நன்கு வாதாடும் திறமை இருக்கிறது. ஆனால், அவரால் முதல் இடத்திற்கு போட்டியிட முடியாது. ‘வைல்ட் கார்ட்’ என்கிற காரணத்தைச் சொல்லி தலையில் எளிதில் தட்டிவிடுவார்கள். இது அவருக்கும் தெரியும்.

பிக் பாஸா... இல்லைன்னா... ஆம்னி பஸ்ஸா?

ராஜூ வழக்கம்போல் அமைதியாக மூன்றாம் இடத்தில் அமர்ந்திருந்தார். ‘தனக்கு கிடைக்காதது, ராஜூவிற்காவது கிடைக்கட்டும்’ என்கிற நல்லெண்ணத்தில் (?!) நிரூப் ராஜூவை கோத்துவிட, இப்போது சிபியிடம் ஒரு தடுமாற்றம் தெரிந்ததை கவனித்திருக்கலாம். ராஜூ சற்று சூதானமாக ஆடியிருந்தால் முதல் இடத்தை அடைந்திருக்கலாம். ஆனால், அவரோ "எனக்கு சண்டை போடல்லாம் பிடிக்காது. நான் கடைசில போய் உக்காந்தா கூட மக்கள் என்னை முன்னால கொண்டு வந்து நிறுத்திடுவாங்க” என்று சொன்னது அவரது அபாரமான தன்னம்பிக்கையைக் காட்டுகிறது. அந்தப் பயம் சிபிக்கும் உள்ளூற இருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.

பிக் பாஸ் - 72
பிக் பாஸ் - 72

சிபியும் நிரூப்பும் மட்டுமே முதல் இடத்திற்காக உக்கிரமாக மோதிக் கொண்டிருந்தார்கள். மற்றவர்களோ “என்னமோப்பா... இன்னிக்காவது சர்க்கரை போட்டா நல்லாயிருக்கும்” என்று ரேஷன் க்யூவில் நிற்பதுபோல் பரிதாபமாக நின்றிருந்தார்கள். “அண்ணாச்சி... உங்க சண்டைல நான் கொடுத்த ஐநூறு ரூபாயை மறந்துடாதீங்க” என்கிற காமெடி போல, இந்த ரணகளத்திற்குள் நுழைந்து அக்ஷராவும் முதல் இடத்திற்கு போட்டியிட்ட கொடுமையெல்லாம் நடந்தது. “அஞ்சு திருக்குறள் சொல்லு. இடத்தைக் கொடுத்துடறேன்” என்று சிபி சொல்லியிருந்தால் நிலைமை என்னவாகியிருக்கும்? நான் அக்ஷராவின் நிலைமையைச் சொல்லவில்லை. திருவள்ளுவரின் கதியைச் சொல்கிறேன்.

நிரூப் கறுப்பு ஆடாக மாறி வாக்கை மாற்றியமைத்த விஷயத்தை சிபி வலுவாகப் பிடித்துக் கொண்டார். ஒரு காலத்தில் நாம் விளையாட்டாக செய்துவிடும் விஷயம், பிற்காலத்தில் பூமராங் போல் திரும்பி வரும் என்பதற்கான உதாரணம் இது. “நீ பயந்துட்டே... உனக்கு சூடு சொரணை கம்மி” என்றலெ்லாம் அடித்து விளையாடினார் சிபி. அவரின் மீது எல்லோருக்குமே கடுப்பு இருந்தாலும் கோதாவில் இறங்க பயந்தார்கள். இரண்டாம் இடத்தில் ஃபெவிகால் போட்டு உட்கார்ந்துவிட்டார் பிரியங்கா. இந்த உக்கிரமான சண்டையில் அவரின் குரலும் இணையாததை ஒரு பேரிழப்பு என்றே சொல்ல வேண்டும். ரணகளத்திலும் கிளுகிளுப்பாக ஒரு விஷயம் நடந்ததை எத்தனை பேர் கவனித்தீர்கள்? அபிநய்யும் பாவனியும் அடுத்தடுத்து நின்றிருந்தார்கள்.

பிக் பாஸ் - 72
பிக் பாஸ் - 72

ஏதோ சினிமா டிக்கெட் மாதிரி வரிசையில் இருந்து எழுந்தால் யாராவது அந்த இடத்தில் அமர்ந்து கொள்வார்கள் என்பது போல் இந்த விஷயத்தை மக்கள் கையாண்டது காமெடி. வருண் எதற்கோ சென்றபோது பாவனி அந்த இடத்தை எடுத்துக் கொண்டார் போலிருக்கிறது. “காலை ஆறு மணி இருக்கும். கோழி கொக்கரக்கோன்னு கூவுச்சு” என்கிற கதையாக மாலை வரை இந்த டாஸ்க் நீடித்ததால் இயற்கை உபாதை, பசி, ஓய்வு போன்ற காரணங்களால் மக்கள் தவித்தார்கள். "ஒன்றாவது இடம்தான் கிடைக்கவில்லை. இரண்டு அல்லது மூன்றாவது இடமாவது கிடைக்க வேண்டும்” என்று அழிச்சாட்டியம் செய்த நிரூப், பழனியாண்டவர் போல் கோபித்துக் கொண்டு ஓரமாக அமர்ந்துவிட, அங்கும் சென்று குளிர் காய்ந்தார் அக்ஷரா.

சிபி, நிரூப், சஞ்சீவ், அமீர், அக்ஷரா போன்று சிலரின் குரல்கள் மட்டுமே அதிகமாக கேட்டன. மற்றவர்கள் "ஏதோவொண்ணு... இது என்ன பெரிய ஒலிம்பிக் போட்டியா?” என்கிற மாதிரி கிடைத்த இடத்தில் நின்றிருந்தார்கள். “நான் கடைசியா நிக்கற இடம்தான் ஒண்ணு” என்று சுயமுன்னேற்ற லாஜிக் பேசினார் தாமரை. (பார்றா!). இப்போது பிக் பாஸிற்கே சுச்சா போகும் பிரச்னை வந்துவிட்டது போல. ‘கடைசி பஸ்ஸர் அடிக்கப் போறேன். அதுக்குள்ள முடிவு பண்ணிக்குங்க’ என்றார். “ஆட்டத்தை முடிக்கலாம்” என்று அக்ஷரா கெஞ்ச, வேண்டாவெறுப்பாக சென்று கடைசி இடத்தில் வம்படியாக நின்றுகொண்டார் நிரூப். (போனா பென்ஸ் கார்ல போகணும். இல்லைன்னா நடந்து போயிடணும். அதுதான் என் பாலிசி!).

பிக் பாஸ் - 72
பிக் பாஸ் - 72

ஸ்கூல் ரிப்போர்ட் கார்ட்

இறுதியில் தரவரிசைப் பட்டியல் இவ்வாறு அமைந்தது. 1) சிபி 2) பிரியங்கா 3) ராஜூ 4) அபிநய் 5) பாவனி 6) தாமரை 7) அமீர் 8) சஞ்சீவ் 9) அக்ஷரா 10) வருண் 11) நிரூப். ‘முதல் இடத்தில் நிற்கும் சிபி, இந்த வார நாமினேஷனில் இருந்து காப்பாற்றப்படுகிறார்’ என்று அறிவிக்கப்பட்டவுடன் அந்த இடத்தை விட்டு துளிகூட நகராமல் அங்கேயே சாப்பாடு உள்ளிட்டவைகளை முடித்துக் கொண்டிருந்த சிபி, இப்போது “யப்பா சாமி... ஆளை விடுங்கடா!” என்று பாத்ரூமை நோக்கி அவசரமாக ஓடினார்.

அனைத்து போட்டியாளர்களும் தங்களின் தகுதிகளைப் பற்றி பொதுவில் பேசி, தங்களின் திறமையை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்து, தங்களுக்கான நியாயமான இடத்தைக் கோரும் இந்த விளையாட்டு, ஏதோ ஆம்னி பஸ்ஸில் ஜன்னல் வழியாக துண்டு போட்டு இடம்பிடிப்பதைப் போலவே நடந்து முடிந்தது பெரிய சோகம்தான்.