Published:Updated:

பிக் பாஸ் - 75: `மக்கள் காப்பாற்றுவார்கள்’ என அலட்சியம் காட்டுகிறாரா ராஜூ? வெற்றிக் களிப்பில் தாமரை!

பிக் பாஸ் - 75

‘மணமாலை’ நிகழ்ச்சியை மறுபடியும் ஆரம்பித்துவிட்ட பிரியங்கா “உங்களுக்கு எந்த மாதிரி பொண்ணு வேணும்?” என்று அமீரிடம் விசாரிக்க அவர் சொன்ன அடையாளங்களை வைத்து அக்ஷராவையும் இதில் கோத்துவிட்டது போல் தெரிந்தது.

பிக் பாஸ் - 75: `மக்கள் காப்பாற்றுவார்கள்’ என அலட்சியம் காட்டுகிறாரா ராஜூ? வெற்றிக் களிப்பில் தாமரை!

‘மணமாலை’ நிகழ்ச்சியை மறுபடியும் ஆரம்பித்துவிட்ட பிரியங்கா “உங்களுக்கு எந்த மாதிரி பொண்ணு வேணும்?” என்று அமீரிடம் விசாரிக்க அவர் சொன்ன அடையாளங்களை வைத்து அக்ஷராவையும் இதில் கோத்துவிட்டது போல் தெரிந்தது.

Published:Updated:
பிக் பாஸ் - 75

இந்தக் கட்டுரைத் தொடரை பிக் பாஸ் தினமும் படிக்கிறாரோ என்று சந்தேகமாக இருக்கிறது. தரவரிசை டாஸ்க்கின் போது ‘ஆம்னி பஸ்ஸில் துண்டு போட்டு இடம் பிடிப்பது போன்று விளையாடுகிறார்கள்’ என்று எழுதியிருந்தேன். அடுத்த நாளே பிக் பாஸ் வீட்டில் ஆம்னி பஸ் வந்து நின்றுவிட்டது. அந்தப் பேருந்தில் கொட்டிய நீர் தொடர்பாக ‘மாட்டு சாணத்தை’ கலந்திருப்பார்களோ என்று எழுதியிருந்தேன். அதற்கு அடுத்த எபிசோடில் ‘மாட்டுச்சாணத்தில் நாணயம் தேடும்’ டாஸ்க் வந்துவிட்டது. இப்போது என்ன உதாரணத்தை எழுதுவது என்று எனக்கே சற்று கலவரமாகத்தான் இருக்கிறது.

முயல் – ஆமை கதையாக தாமரை மெல்ல மெல்ல முன்னேறி வருகிறார். யாருக்குத் தெரியும்? கடைசியில் அவர் டைட்டில் அடித்தால் கூட ஆச்சர்யப்படுவதற்கில்லை. ‘எனக்கு இந்த கேம் புரியலை’ என்று ஒருபக்கம் சொல்லிக் கொண்டே இன்னொரு பக்கம் இறங்கி அடித்து விளையாடுகிறார். பஸ்ஸர் அடித்தவுடன் தன்னிச்சையாக உடல் பதறும் தாமரை வேறு; சபையில் ஒருவருக்கு மட்டும் உணவு தராமல் பகைமை பாராட்டும் தாமரை வேறு. ரெண்டும் வேறு வேறு டிபார்ட்மெண்ட். நமக்குள்ளும் இப்படிப் பல தாமரைகள் இருக்கிறார்கள்.
பிக் பாஸ் - 75
பிக் பாஸ் - 75

எபிசோடு 75-ல் என்ன நடந்தது?

அக்ஷரா - பிரியங்கா மோதல் முந்தைய எபிசோடில் நடந்த சமாச்சாரம். அதற்குள்ளாகவா மக்கள் மறந்து விடுவார்கள்? இந்தச் சண்டைக்கெல்லாம் அநாவசிய Recap போட்டு காண்பித்தார் பிக்பாஸ். “தமிழ்ல பேசுன்னுதானே அக்ஷராகிட்ட சொன்னேன்... அதுக்குப் போய் என்னை மரியாதை இல்லாம ‘ச்சே.. போம்மா’ன்னு சொல்றா...” என்று பிரியங்கா ஒருபக்கம் கொதிக்க “எங்க அப்பா மேல சத்தியம் பண்ணிட்டு கோபமா இருக்கேன். அப்ப போய் குறுக்க பேசினா என்ன அர்த்தம்?” என்று அக்ஷரா இன்னொரு பக்கம் பொங்கிக் கொண்டிருக்க, “இதெல்லாம் ஒரு காரணமா? அய்யோ… ஸ்கூல் பசங்களையெல்லாம் கொண்டு வந்திருக்காங்களே?” என்று தலையில் அடித்துக் கொண்டார் பிரியங்கா. அக்ஷரா ஆட மறுத்துவிட்டதால் மூன்றாவது பஸ்ஸர் அடிக்கப்பட்டு அவரின் தோல்வி அறிவிக்கப்பட்டது.

‘ஒவ்வொருத்தர் கிட்டயும் அண்ணாச்சியை தேடறேன்!’

“நான் ராஜூ பக்கம் எத்தனையோ முறை நின்னிருக்கேன். ஆனா அவன் என்கிட்ட மட்டும் கோபத்தைக் காண்பிக்கிறான்” என்று அக்ஷரா வருணிடம் அனத்திக் கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில் சரியாக வந்து சேர்ந்தார் ராஜூ. “தூக்கமே வரலை… அண்ணாச்சியைத்தான் ஒவ்வொருவரிடமும் தேடிக்கிட்டு இருக்கேன். அவர் இருந்திருந்தா அவர்கிட்ட எல்லாத்தையும் பேசுவேன். மனசு ஃப்ரீயா இருக்கும்” என்று கலங்கினார் ராஜூ. பார்க்கப் பரிதாபமாகத்தான் இருந்தது. ஆனால் இங்கு ஓர் அரசியல்சரித்தன்மை கேள்வியை கேட்டேயாக வேண்டும். இரண்டு ஆண்கள் பொழுதுபூராவும் ஒன்றாகச் சுற்றினால் அதை ‘நட்பு’ என்று உயர்வாக கொண்டாடும் சமூகம், ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் மட்டும் ‘நட்பாக’ இல்லாமல் வேறு ஏதாவதாகத்தான் இருக்கும் என்று ஏன் கற்பனை செய்கிறது?

பிக் பாஸ் - 75
பிக் பாஸ் - 75

ராஜூ தன்னுடைய முயற்சியின் மூலமும் நகைச்சுவையான பேச்சின் மூலமும் அக்ஷராவுடன் சமாதானத்தை ஏற்படுத்திக் கொண்டார். நேற்றைய கட்டுரையில் சொன்ன அதே விஷயம்தான். தனக்குப் பிடித்த ஆணை ஒரு பெண் எளிதில் மன்னித்து விடுவாள். ஆனால், அதே நிலையில் ஒரு பெண் இருந்தால் அத்தனை எளிதில் மன்னிக்க மாட்டாள். இந்த எதிர்பாலினக்கவர்ச்சி என்பது நேரடியாகவும் மறைமுகமாகவும் பல விதங்களில் நம்மிடம் செயலாற்றுகிறது. ராஜூவை உடனே மன்னித்த அக்ஷரா, பிரியங்காவிடம் இணக்கமாவதற்கு அதிக காலம் பிடிக்கும்.

பிக் பாஸ் - 75
பிக் பாஸ் - 75
விடிந்தது. ‘எதிர் நீச்சலடி’ என்கிற ரகளையான பாடலைப் போட்டார் பிக் பாஸ். பழைய அமீரை இப்போது பார்க்க முடிந்தது. துள்ளலான நடன அசைவுகளை மற்றவர்களுக்கு கற்றுத் தந்தார். வெறும் டான்ஸ் மாஸ்டராகவே போய் விடுவாரோ என்று ஆரம்பத்தில் சந்தேகத்தை ஏற்படுத்திய அமீர், இப்போது படுவேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார். அவர் பற்றியிருக்கும் ஏணிகளுள் ஒன்று பாவனி.

அடுத்த சவாலில் முட்டை பெற்ற ராஜூ!

நடந்து கொண்டிருக்கும் போட்டித் தொடரில் அடுத்த சவாலை அறிவித்தார் பிக் பாஸ். ஒரு பாட்டில் தண்ணீரைக் குடித்துவிட்டு, தரையில் ஊர்ந்து வரும் தடையைத் தாண்டி விட்டு, கலைந்திருக்கும் ஒரு புதிரை சரியாக அமைத்து விட்டு, சாக்குப்பையில் நடந்து வந்து, இரண்டு பச்சை முட்டையைக் குடித்துவிட்டு மணியை அடிக்க வேண்டும். கடைசியில் வருபவர் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார். அமீர் இதை மின்னல் வேகத்தில் செய்து முடித்துவிட்டார். இரண்டாவதாக அமீரும் மூன்றாவதாக தாமரையும் வந்தார்கள். கடைசியில் வந்த ராஜூ தோற்றுவிட்டார்.

பிக் பாஸ் - 75
பிக் பாஸ் - 75

இந்த டாஸ்க்கிலும் ராஜூ வேண்டுமென்றே சுணக்கம் காட்டியது போல் தெரிந்தது. "எனக்கு முட்டை சாப்பிடப் பிடிக்காது” என்று அவர் சொன்ன காரணம் நம்பும்படியாக இல்லை. ஆம்லேட் போடுவதில் எக்ஸ்பர்ட் ஆன ராஜூ, முட்டையை சிரமப்பட்டாவது குடித்திருக்கலாம். ‘மக்கள் காப்பாற்றுவார்கள்’ என்கிற மிதமிஞ்சிய நம்பிக்கை என்றாவது காலை வாரி விட்டுவிடலாம். “விட்டுக்கொடுத்திட்டியா என்ன?” என்று பிறகு தாமரை கேட்ட போது “நான் ஒண்ணும் ஜீசஸ் இல்ல” என்றார் ராஜூ. புதிர் அமைப்பதில் சிரமப்பட்ட தாமரைக்கு மற்றவர்கள் உதவினார்கள். இதெல்லாம் விதியில் அனுமதிக்கப்படுகிறதா என்று தெரியவில்லை.

பிக் பாஸ் - 75
பிக் பாஸ் - 75

‘பாவனி சார்... புடவை சார்... வர்றாங்க சார்...’

பாவனி, இன்று புடவையில் அழகாகக் காட்சியளித்தார். இவருக்காகவே வழிமேல் விழி வைத்து அமீர் காத்திருக்க, “ஒரு பொண்ணுக்காக சாப்பிடக் காத்திருக்கிறதெல்லாம் என் வாழ்க்கைலயே நடக்காத விஷயம். என் கிரகம்டா” என்று ஜாலியாக அலுத்துக் கொண்டார் பிரியங்கா. “புடவை சார்... பாவனி சார்... வர்றாங்க சார்” என்று அப்பட்டமாக வழிந்து கொண்டிருந்த அமீர், பாவனி ஆடைமாற்றும் அறையில் இருந்து வந்தபோது “யாரையும் இவ்ளோ அழகா பாக்கல” என்று பாட்டாகவே பாட ஆரம்பித்து விட்டார். (இதையெல்லாம் அபிநய் எங்கிருந்தாவது நோட் செய்து கொண்டுதான் இருப்பார்!).

அமீர் பாவனியிடம் இப்படி அப்பட்டமாக வழிவதை, பிக் பாஸ் கேமிற்காக ஒரு வேடிக்கையாகத்தான் செய்கிறாரா அல்லது இதில் ஏதாவது கள்ளத்தனமும் உள்நோக்கமும் இருக்கிறதா என்று தெரியவில்லை. வேடிக்கையாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது. ஏனெனில் அவர் இதைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவதற்கும் அவர்களின் கிண்டல்களை ஏற்றுக் கொள்வதற்கும் தயங்குவதில்லை. கள்ளத்தனம் இருந்தால் இத்தனை அப்பட்டமாக பொதுவில் வழிய மாட்டார்கள். ஒருவேளை அபிநய்யை வெறுப்பேற்றுவதற்காகவும் அமீர் செய்கிறாரோ, என்னமோ? வெளியில் மறுத்தாலும் இதையெல்லாம் பாவனி உள்ளூற ரசிப்பது போல்தான் தெரிகிறது. (ஒரு அடிமை சிக்கிட்டான்!).

பிக் பாஸ் - 75
பிக் பாஸ் - 75

இந்த Flirt நாடகம் யாருக்கும் பிரச்னையில்லாமல் முடிந்தால் சந்தோஷமே. சில பார்வையாளர்களுக்கும் சரி, சக போட்டியாளர்களுக்கும் சரி, இந்த நாடகம் எரிச்சலைத் தரலாம். ஆனால், ஒரு பக்கம் பார்த்தால் அமீர் செய்யும் குறும்புகள் ரசிக்கத்தக்க வகையில்தான் இருக்கின்றன. ஒரு நவீன இளைஞனின் குறும்புகளை அமீர் சிறப்பாகப் பிரதிபலிக்கிறார். இந்தக் குறும்புகள் கூட இல்லாமல் அப்படியென்ன ஒரு வாழ்க்கை?!

‘மணமாலை’ நிகழ்ச்சியை மறுபடியும் ஆரம்பித்துவிட்ட பிரியங்கா “உங்களுக்கு எந்த மாதிரி பொண்ணு வேணும்?” என்று அமீரிடம் விசாரிக்க அவர் சொன்ன அடையாளங்களை வைத்து அக்ஷராவையும் இதில் கோத்துவிட்டது போல் தெரிந்தது. “புரிஞ்சிடுச்சு” என்று வெடித்து சிரித்தார் பாவனி. வருணும் அக்ஷராவும் குறும்புத்தனமாக ஸ்டோர் ரூமில் ஒரு விஷயத்தை ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். பிக் பாஸ் ஒரு ‘லுலுவாயி’ நாமினேஷன் நாடகத்தை நடத்தினார் அல்லவா? அந்தச் சீட்டுக்கள் அங்கு அப்படியேதான் வைக்கப்பட்டிருந்தன. இவர்கள் இப்படி நோண்டிப் பார்ப்பார்கள் என்பது அவருக்குத் தெரியும். “அபிநய், பாவனி பேருதான் அதில் நிறைய இருக்கு” என்ற வருண் “சரி... சரி... வா... நமக்கெதுக்கு வம்பு’ என்றபடி அக்ஷராவை அழைத்துச் சென்றார்.

பிக் பாஸ் - 75
பிக் பாஸ் - 75

குப்பையில் கிடைக்கும் ரத்தினம்

அடுத்த டாஸ்க்கில் ‘கலீஜை’ இன்னமும் கூட்டி இம்சையை அதிகப்படுத்தினார் பிக் பாஸ். ஆம், மாட்டுச்சாணத்தில் நாணயத்தை தேடி எடுக்க வேண்டும். அபிநய், அமீர், தாமரை ஆகிய மூவரும் இதில் பங்கேற்க வேண்டும். அமீர் இதில் மிகவும் சிரமப்பட்டார். “போதும் பிக் பாஸ்” என்று முகத்தைச் சுளித்து அலறினார். அபிநய் ஒரு மாதிரியாக சமாளித்துக் கொண்டிருந்தார். கடந்த டாஸ்க்கில் தோற்ற ராஜூ, ‘நல்ல வேளை... நான் பிழைத்துக் கொண்டேன்’ என்று ஜாலியாக பாட்டு பாடினார்.

இறுதியில் 28 நாணயங்களை கண்டெடுத்து முதல் இடம் பெற்று வெற்றி பெற்றார் தாமரை. இதில் தோற்றுப் போனதால் அமீர் மிகவும் சோர்ந்து போனார். வெற்றி பெற்ற சந்தோஷத்தைக் கொண்டாட, தன் மீதிருந்த சாணியை மற்றவர்களின் மீது தடவி விளையாட தாமரை முயல, எல்லோரும் பயந்து ஒதுங்கினார்கள். “யக்கா... கால்ல கூட விழறேன்” என்று சிபி கெஞ்சியும் அவரின் சட்டையில் சிறிது சாணியபிஷேகம் நடந்தது. இதில் அதிக டாமேஜ் நிரூப்பிற்குத்தான். அவர் மீது பாசம் பொங்க தாமரை அதிகமாகத் தடவிவிட, அதை அவர் அக்ஷராவின் மீது கடத்த முயல, வீடெங்கும் “வீல்” என்று கத்திக் கொண்டு ஓடினார் அக்ஷரா. தாமரையின் வெற்றி வீட்டில் உள்ளவர்களுக்கு ஆச்சர்யத்தையும் மகிழ்ச்சியையும் அளித்தது.

பிக் பாஸ் - 75
பிக் பாஸ் - 75

அமீர் - பாவனி... என்னங்கய்யா நடக்குது?

அமீரின் வழிசல் நாடகம் உக்கிரமாகத் தொடர்ந்தது. “இந்த வாரம் நான்தான் போவேன்” என்று பாவனி ஆரம்பிக்க “நான் இருக்கும்போது நீ எப்படிப் போவே?” என்று உருக ஆரம்பித்தார் அமீர். இந்தச் சமயத்தில் ஒருவேளை அபிநய் பக்கத்தில் இருந்தால், ‘பயபுள்ளகிட்ட இருந்து நாம கத்துக்க வேண்டிய விஷயம் நெறய இருக்கு போலயே’ என்று பிரமித்துப் போயிருப்பார். அந்தளவிற்கு திறமையாக ஃப்ளெர்ட் செய்து கொண்டிருந்தார்.

பிக் பாஸ் - 75
பிக் பாஸ் - 75

“இதையெல்லாம் நீ ஜோக்குன்னு நெனச்சி பண்றியா என்ன?” என்று பாவனி சிரித்துக் கொண்டே கேட்க, “இல்ல... சீரியஸாத்தான் பண்றேன்” என்று அமீர் பதிலுக்கு வழிய, இன்னமும் திருமணம் ஆகாத 90’s கிட்ஸ் இதைப் பார்த்தால் பொறாமையில் பொங்கியிருப்பார்கள். “இவனை வெளியே அனுப்புங்க பிக் பாஸ்” என்று பாவனி ஜாலியாக சிணுங்க “இந்த வாரம் நாம ரெண்டு பேரும்தான் ஜோடியா வெளியே போகப் போறோம். கன்ஃபர்ம்” என்று அப்போதும் ரொமான்ஸ் ஏரியாவை விட்டு நகராமல் இருந்தார் அமீர். “நான் இந்த வீட்ல யாரை வேணா மிஸ் பண்ணுவேன்... உன்னை மட்டும் மிஸ் பண்ண மாட்டேன்” என்று பாவனி சொல்ல “அப்ப... நான் மட்டும்தான் ஸ்பெஷல் இல்லையா?” என்று அமீர் மடக்க “எப்படிப் போனாலும் கேட் போடறானே?!” என்று சந்தோஷமாக அலுத்துக் கொண்டார் பாவனி. அமீர் நிறைய தமிழ் சினிமா பார்ப்பார் போலிருக்கிறது. ஹீரோ செய்யும் கோணங்கித்தனங்களை அப்படியே நன்றாகப் பிரதிபலிக்கிறார்.

இந்த வழிசல் நாடகத்தில் பிரியங்காவும் கூட இருந்தால் தனக்குப் பாதுகாப்பாக இருக்குமே என்று எண்ணிய அமீர், அவரைத் தேடிச் செல்ல, பிரியங்காவோ கிச்சன் மேடையில் பின்னால் அமர்ந்து வாழைப்பழத்தை ரகசியமாக மொக்கிக் கொண்டிருந்தார். இருவரும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்த காட்சி ரசிக்கத்தக்கதாக இருந்தது. அதுதான் பிரியங்காவின் ‘Calm Spot’-ஆம்.
பிக் பாஸ் - 75
பிக் பாஸ் - 75

நாணயம் தேடும் போட்டியில் ஜெயித்த மகிழ்ச்சியில் தாமரையும் பிரியங்காவும் ஒருவரையொருவர் கட்டிக் கொண்டார்கள். நிரூப்பிடமும் தாமரையிடமும் பிரியங்கா எப்போது நட்பு பாராட்டுகிறார், எப்போது சண்டை போடுகிறார் என்பதை சிபிஐ விசாரணையால் கூட கண்டுபிடிக்க முடியாது போலிருக்கிறது.

சீட்டுக்கட்டில் ஜெயித்த தாமரை

அடுத்த போட்டியை சீட்டுக்கட்டில் வைத்தார் பிக் பாஸ். கடந்த சவாலில் அமீர் தோற்றுவிட்டதால் எஞ்சியிருப்பவர்கள் தாமரை மற்றும் அபிநய் மட்டுமே. சீட்டுக்கட்டை கலைத்து இருவருக்கும் போட வேண்டும். யாருக்கு முதலில் X குறியிட்ட அட்டை இரண்டு வருகிறதோ, அவர் தோல்வி அடைவார். இந்தப் போட்டி சுவாரஸ்யமும் விறுவிறுப்புமாக அமைந்தது. தாமரைக்கு முதல் X வந்தது. எனவே அடுத்தடுத்த கார்டில் அதே அடையாளம் வந்தால் தாமரை அவுட் ஆவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அபிநய்க்கும் X வந்தது. போட்டி சமன் ஆகியது. எனவே ஆட்டத்தில் பரபரப்பு கூடியது.

சிரிப்பும் திகைப்புமாக அபிநய் கார்டுகளை இட்டுக் கொண்டே வந்தார். அதுதான் கடைசி கார்டு. அது அபிநய் பக்கம் வந்தது. பார்த்தால் அது X கார்டு. ஆக, பெரும் அதிர்ஷ்டத்தில் தாமரை இந்த டாஸ்க் தொடரில் வெற்றி பெற்றார். இதர டாஸ்குகளில் அவர் செலுத்திய உழைப்பும் பாராட்டத்தக்கது. தாமரை வெற்றியடைந்த போது பாவனியின் முகத்தில் அதிருப்தி வழிந்ததை எத்தனை பேர் கவனித்தீர்கள்?

பிக் பாஸ் - 75
பிக் பாஸ் - 75

“‘Freeze task’-ல் பாவனியின் அம்மா வந்து உன்னை தெலுங்கில் கழுவி ஊற்றப் போகிறார்” என்று அமீரை பிரியங்கா ஜாலியாக எச்சரித்து அதே போல் செய்து காட்ட “ஆன்ட்டி… நீங்க பாவனியை விடவும் அழகா இருக்கீங்களே?!” என்று ரொமான்ஸில் பின்னியெடுத்தார் அமீர். ‘அடப்பாவி’ என்று சிரித்தபடி அமீரை தலையில் தட்டினார் பாவனி. (பயபுள்ளகிட்ட இருந்து நாம கத்துக்க வேண்டிய விஷயம் நெறய இருக்கு போலயே – அபிநய்யின் மைண்ட்வாய்ஸ்). உண்மையிலேயே பாவனியின் அம்மா வரும் போது அமீர் எப்படி பம்முகிறார் என்பதைப் பார்க்க வேண்டும். (கடந்த சீஸன்களில் கவினும் பாலாஜியும் பம்மியதைப் போல).

அபிநய், அக்ஷரா, தாமரை, வருண் என்கிற நால்வர் கூட்டணி அமர்ந்து பேசிக் கொண்டிருந்தது. “புகைப்பட டாஸ்க்கில் ஜீரோ மதிப்பெண்ணில் பாவனி தோற்றது தாமரைக்கு மகிழ்ச்சி. நாணயம் தேடும் டாஸ்க்கில் அமீர் தோற்றது எனக்கு மகிழ்ச்சி” என்பது போல் குஷியாகச் சொல்லிக் கொண்டிருந்தார் அபிநய். (என்னவொரு தத்துவம்!).

பிக் பாஸ் - 75
பிக் பாஸ் - 75

'நான் ஏண்டா நடுராத்திரில சுடுகாட்டுக்கு போகப் போறேன்?'

நள்ளிரவில் குறளி வித்தை காட்டிக் கொண்டிருந்தார் வருண். “இந்த பேப்பர் பறக்கும் பாரேன்” என்றவர், “யாரெல்லாம் பாசிட்டிவ் எனர்ஜியோட இதை ஒத்துக்கறீங்களோ அவங்களோட வைப்ரேஷனால இது பறக்கும்” என்று அவர் அள்ளிவிட்ட காட்சியானது “யார் பொண்டாட்டியெல்லாம் பத்தினியோ, அவங்களுக்கு மட்டும் கடவுள் தெரிவார்” என்கிற வடிவேலுவின் காமெடியை நினைவுப்படுத்தியது. ராஜூ பரபரப்பாக மக்களை அழைத்துச் சென்ற காட்சி ‘என்னவோ... ஏதோ' என்கிற ஆவலை முதலில் கிளப்பி ‘அடச்சை' என்று முடிந்துபோக வைத்தது.

“என்னை மட்டும் தமிழ்ல பேச சொன்னாங்க. இந்தம்மா நிரூப்கிட்ட சண்டை போடும்போது மட்டும் நிறைய ஆங்கிலம் பொளந்துக்கிட்டு வருதே?! எப்பப்பாரு... நொய்யா... நொய்யான்னு கத்திக்கிட்டு. கேமரா முழுக்க தன்னை மட்டும்தான் பார்க்கணும்னு சீன் போடறாங்க” என்று பிரியங்காவைப் பற்றி அக்ஷரா கடுமையாக புறணி பேசும் காட்சியோடு எபிசோடு நிறைவடைந்தது.

பாவனிக்கு மட்டும் தாமரை பாயசம் தராதது உள்ளிட்டு கமல் விசாரிக்க வேண்டிய பல அதிமுக்கியமான சம்பவங்கள் இந்த வாரத்தில் இருக்கின்றன. பாவம், அவர் என்ன செய்வாரோ?!