Published:Updated:

பிக் பாஸ் - 78: `எங்கிருந்தாலும் வாழ்க' மோடில் வெளியேறிய அபிநய்... இருந்தாலும் அந்த பல்பை ஏன் பாஸ் உடைச்சீங்க?

பிக் பாஸ் - 78

"இந்த டாஸ்க் உங்க வெற்றியை தீர்மானிக்காதுன்னு மக்கள் நெனக்கலாம். அவங்க போடற கணக்கே வேற. அஞ்சு சீசனாகியும் எனக்கும் இன்னமும் அது புரியலை” என்று கமல் சொன்னது திருவாசகம்.

பிக் பாஸ் - 78: `எங்கிருந்தாலும் வாழ்க' மோடில் வெளியேறிய அபிநய்... இருந்தாலும் அந்த பல்பை ஏன் பாஸ் உடைச்சீங்க?

"இந்த டாஸ்க் உங்க வெற்றியை தீர்மானிக்காதுன்னு மக்கள் நெனக்கலாம். அவங்க போடற கணக்கே வேற. அஞ்சு சீசனாகியும் எனக்கும் இன்னமும் அது புரியலை” என்று கமல் சொன்னது திருவாசகம்.

Published:Updated:
பிக் பாஸ் - 78
அபிநய் வெளியேற்றப்பட்டார் என்பதுதான் நேற்றைய எபிசோடின் அதிர்ச்சியில்லாத ஹைலைட். ‘வேணும்யா... இந்த ஆளுக்கு' என்று சிலர் மகிழ்ச்சியாகியிருக்கலாம். ‘அய்யோ... பாவம்’ என்று சிலர் சோகமாகியிருக்கலாம். ஒழுக்கரீதியான விசாரணைகளில் பெரும்பாலும் பெண்ணின் மீதே கேள்விகள் எழும்; தீர்ப்புகள் எழுதப்படும். இதுதான் வழக்கம். ஆனால் ‘அபூர்வ சகோதரர்கள்' திரைப்படத்தின் துப்பாக்கி மாதிரி, இது சமயங்களில் பின்பக்கமும் வெடிக்கலாம். அதன் விளைவுகளுள் ஒன்று அபிநய்யின் வெளியேற்றம் என்று தோன்றுகிறது.

‘இறங்கி ஆடுங்க’ என்று கமலே அறிவுறுத்தும் அளவிற்கு சுமாரான போட்டியாளர்களில் ஒருவராக இருந்தார் அபிநய். ஒரு கட்டத்தில் சுதாரித்துக் கொண்டார். இசைவாணிக்கு தலைவர் பதவியைத் தந்ததோடு மட்டுமல்லாமல் அவரிடம் கரிசனத்தோடும் நடந்துகொண்டது அபிநய்யின் கிராஃபை சட்டென்று மேலே உயர்த்தியது. ஆனால் பங்குச்சந்தை மாதிரி, பாவனியின் விவகாரம் அந்த கிராஃபை ‘டமால்’ என்று கீழே இறக்கிவிட்டது.

பிக் பாஸ் - 78
பிக் பாஸ் - 78

பலவீனமானதாக இருந்தாலும்கூட தனது மறுப்பை பாவனி தொடர்ந்து பதிவு செய்திருக்கிறார். எனில் அபிநய் அப்போதே சுதாரித்திருக்க வேண்டும். “அது பாவம்... வெளியில சொல்லத் தெரியல” என்று அபிநய்க்காக பரிந்து பேசுபவர்களில் அக்ஷரா மட்டுமே இருக்கிறார். எனில் ‘அபிநய்யின் தரப்பு நியாயங்கள் இன்னமும் வெளியாகமலே இருக்கின்றவா?’ என்கிற கேள்வி எழுகிறது. "எனது இயல்பு இது. இப்படித்தான் இருப்பேன்" என்று எல்லா இடத்திலும் பிடிவாதம் பிடிக்க முடியாது. ‘எனக்குத் தொந்தரவா இருக்கு’ என்று சொல்லப்படும் இடங்களில் நாகரிகமாக ஒதுங்கிக் கொள்ள வேண்டியது நற்பண்பு. அபிநய்யின் வெளியேற்றத்தில் ஆண்களுக்கான முக்கியமான படிப்பினை இருக்கிறது. ‘துப்பாக்கி பின்பக்கமும் வெடிக்கும்’. வாழ்க்கையே சர்க்கஸ்தானே?!

எபிசோடு 78-ல் என்ன நடந்தது?

கமல் அணிந்திருந்த ஆடை சிறப்பாக இருந்தது. வடிவமைப்பாளருக்கு பிரத்யேக பாராட்டு. தரவரிசை டாஸ்க் பத்தி பேசலாம் என்று முன்தினமே கமல் சொல்லி விட்டுச் சென்றிருந்தார். எனவே துவக்க விசாரணை அதைப் பற்றித்தான் இருக்கும் என்பதை கமல் வந்தவுடனேயே உணர்த்தி விட்டார். "தன்னையே மதிப்பிட்டுக் கொள்வது சிரமமான விஷயம். ஆனால், செய்ய வேண்டும் என்றால் செய்துதான் ஆகவேண்டும். ‘உங்க பேர் என்னன்னு கேட்டா’ நாமதான் சொல்லியாகணும்” என்றபடி அகம் டிவி வழியாக உள்ளே சென்றார்.

“சிபி... உங்கள் தர்க்கம் மற்றவர்களின் நியாயங்களைத் தகர்க்கும் விதமாக இருந்தாலும் நீங்கள் விளையாடிய விதம் சிறப்பு” என்று சிபியைப் பாராட்டுவதோடு இந்த விசாரணையை ஆரம்பித்தார் கமல். (தர்க்கம்… தகர்க்கும்... ரைமிங்கை கவனிச்சீங்களா?) “ஆனா... சிபிக்கு யாருமே அப்ப சரியா பதில் சொல்லாதது ஆச்சரியமா இருந்தது. இப்பவாவது சொல்லுங்க” என்று மற்றவர்களைத் தூண்டிவிட்டார்.

“இன்னாடா... அவார்டா கொடுக்கறாங்க..?!”

“நான் பயந்துட்டேன்னு சிபி சொன்னான்..." என்று நிரூப் பதிலளிக்கத் துவங்கிய போது, "நான் அப்படிச் சொல்லல" என்று இடைமறித்தார் சிபி. 'தொடைநடுங்கி...' என்று ஆரம்பித்து ‘உனக்கு சூடு சொரணை இல்ல’ என்று நிரூப்பை விதம் விதமாக காட்டமாக அன்று விமர்சித்த சிபி, இன்றைக்கு இப்படி மாற்றிச் சொன்னபோது ‘அடப்பாவி’ என்று நமக்குத் தோன்றியது. ‘கட்சி மாறி ஓட்டு போட்டதை அவர் துணிச்சலாக ஒப்புக்கொள்ளவில்லை’ என்கிற சப்பையான காரணத்தை சபையில் சொன்னார் சிபி. “அது என் ஜனநாயக உரிமை. வெளில சொல்லணும்னு அவசியமில்லை. நான் அப்ப கொஞ்சம் டவுனாத்தான் இருந்தேன். ரேங்கிங் டாஸ்க்ல யாரும் எனக்காக பரிந்து பேசலை” என்றார் நிரூப். (‘அடப்பாவி’ என்று இந்தச் சமயத்தில் சொல்வது சஞ்சீவாக இருக்கலாம்).

பிக் பாஸ் - 78
பிக் பாஸ் - 78

உண்மையில் தரவரிசை டாஸ்க்கில் சிபி மற்றும் நிரூப்பின் ஆதிக்கம் மட்டுமே அதிகம் இருந்தது. மற்றவர்கள் வெறுமனே நின்று கொண்டிருந்தார்கள். “இதுல ஜெயிச்சா நாமினேஷன்ல தப்பிக்கலாம்னு அப்புறம்தான் தெரிஞ்சது. முன்னமே தெரிஞ்சிருந்தா நாங்க ஃபைட் பண்ணியிருப்போம்’ன்னு சொன்னாங்க” என்று விளக்கம் அளித்தார் சிபி. ‘ஏம்ப்பா... நான் என்ன டைம்பாஸிற்கா இதையெல்லாம் நடத்தறேன்? ஒரு போட்டின்னு வரும்போது அதில் ஏதாவது பின்விளைவு ஆதாயம் இருக்கும்னு உங்களுக்கா தெரிய வேணாம்? இப்படித்தான்... நாணயத்திற்கு சக்தி இருக்கும்னு தெரியாமப் போச்சு –ன்னு முன்ன அனத்தினீங்க’ என்று பிக் பாஸ் உள்ளே நினைத்திருக்கலாம்.

இந்த விவகாரத்தில் ராஜூவையும் கமல் இப்போது கோத்து விட, “நம்பர் ஒண்ணுன்னு நம்மள நெனச்சிக்கிட்டா நாம வளர முடியாது” என்று புது லாஜிக்கை அளித்தார் ராஜூ. பிசிக்கல் டாஸ்க்கில் தான் பின்தங்கியிருப்பது அவருக்கே தெரிந்திருக்கிறது. “11வதா நின்னா கூட எப்படியாவது முன்னாடி வந்துடுவேன்னு சொன்னீங்களே?” என்று கமலே எடுத்துக் கொடுக்க, அப்போதும் சலனமில்லாத முகத்துடன் ஆமோதித்தார் ராஜூ. ("இன்னாடா... அவார்டா கொடுக்கறாங்க..?!” என்று கமல் உள்ளுக்குள் காண்டாகியிருக்கலாம்).

“துண்டு போட்டு பஸ்ல இடம்பிடிச்சாங்க சார்”

அடுத்ததாக அமீரை இழுத்த கமல், “பாவனி பத்தி சொல்லி சிபி உங்களைக் காண்டாக்கினார் இல்லையா? எங்க தொட்டா எங்க வலிக்கும்னு அவருக்குத் தெரிஞ்சிருக்கு” என்று நமட்டுச்சிரிப்புடன் சொல்லி விட்டு அடுத்தபடியாக பிரியங்காவிடம் நகர்ந்தார். “இரண்டாவது இடம் உங்களுக்குப் போதுமா?” என்று கமல் கேட்க “என் உயரம் எனக்குத் தெரியும்” என்று ஆரம்பித்து வழக்கம் போல் நீளமான விளக்கத்தை பிரியங்கா சொல்லி முடித்தவுடன், அரங்கத்தில் இருந்த பார்வையாளர்களில் ஒருவராவது அப்படியே கண் அசந்திருப்பார். அப்படியொரு நீண்ட விளக்கம். “யாரையும் hurt பண்ணக்கூடாதுன்னு நெனக்கறேன்" என்கிற பிரியங்காவின் கடைசி வரி வரும் போது கண் அசந்த ஆசாமி அதைக் கேட்டு அதிர்ச்சியில் மயக்கமாகி இருப்பார்.

பிக் பாஸ் - 78
பிக் பாஸ் - 78

“நிரூப், வருண்... நீங்கள்லாம் 4, 5-வது இடத்துல இருக்க வேண்டிய ஆளு. ஏன் கடைசில போயிட்டீங்க?” என்று விசாரிக்க “ராஜூ, பிரியங்காவிற்கு முதல் மற்றும் இரண்டாம் இடத்தை வாங்கித் தந்துட்டு மூன்றாம் இடத்திற்கு போறதுதான் என் பிளானு. சிபி பாத்ரூம் கூட போகாம அடம்பிடிச்சு உக்காந்துட்டு இருந்தான். அதனால முடியல. ஆனா விட்டதைப் பிடிச்சிருவேன்” என்று நிரூப் சபதம் ஏற்க, “அதுதான் சாராயம்!” என்று பாராட்டினார் கமல். (That is the spirit-ன்னா அதானே அர்த்தம்?!).

“துண்டு போட்டு பஸ்ல இடம் பிடிக்கற மாதிரி ஆயிடுச்சு. என் இடத்தை பாவனி பிடிச்சிட்டாங்க” என்று அங்கலாய்த்தார் வருண். “ஓகே... இந்த டாஸ்க் உங்க வெற்றியை தீர்மானிக்காதுன்னு மக்கள் நெனக்கலாம். அவங்க போடற கணக்கே வேற. அஞ்சு சீசனாகியும் எனக்கும் இன்னமும் அது புரியலை” என்று கமல் சொன்னது திருவாசகம். லெப்ட் இன்டிகேட்டர் போட்டு ரைட்ல வண்டியைத் திருப்புவதில் நம்மாட்கள் சாமர்த்தியக்காரர்கள்.
பிக் பாஸ் - 78
பிக் பாஸ் - 78

“தாமரை... சஞ்சீவ்... நீங்க கூட இந்த டாஸ்க்ல செயலிழந்து போயிட்டீங்களே?!” என்று அந்தப் பக்கம் திரும்பினார் கமல். “நாம படிக்கும் போது ஒண்ணாங் கிளாஸ்ல இருந்துதானே... பதினோராவது வகுப்பு போறோம்..? அந்த மாதிரி என் முன்னேற்றம் சார்” என்று தாமரை புது லாஜிக் விளக்கம் தந்த போது “பார்றா. வந்த போது இருந்த தாமரையா இது?” என்று கமல் வியக்க, “போங்க சார்... எனக்கு வெக்கம் வெக்கமா வருது” என்று சோபாவிற்குள் பதுங்கினார் தாமரை. “சஞ்சீவ் மத்தவங்களுக்காகப் பரிந்து பேசினதெல்லாம் சரி. உங்க கதையை நீங்கதானே பார்க்கணும்?” என்று விசாரிக்க, “சிபி மேலயே குதிச்சிடலாமான்னு முதல்ல யோசிச்சேன். அந்தச் சமயத்துல அவன் ரொம்ப உக்கிரமா இருந்தான். எதுக்கு வம்புன்னு விட்டுட்டேன்” என்பது போல் பதில் அளித்தார் சஞ்சீவ். “அவையடக்கம் காரணமா காணாமப் போனவங்க ரொம்ப பேரு. நாமதான் தம்பட்டம் அடிச்சுக்கணும்” என்று கமல் சொன்னது சமகாலத்திற்குப் பொருத்தமான லாஜிக்தான்.

‘நாமினேஷன் பயம் – வெளில தெரியாத மாதிரி காட்டிக்கணும்!’

“யாருக்கெல்லாம் நாமினேஷன் பத்தி பயம் இருக்கு?” என்று வெளிப்படையான கேள்வியை கமல் கேட்டதும் முதலில் கையைத் தூக்கிய அமீர், “நான் லேட்டா வந்தேன். இன்னமும் எதுவும் பெரிசா சாதிக்கலை. ஆனா டாஸ்க்ல கில்லியா இருக்கணும்னு முதல்லயே முடிவு பண்ணிட்டேன். ‘இந்தப் பையன் துறுதுறுன்னு ஏதோ பண்றான்னு மக்கள் நெனப்பாங்க'ன்னு தோணுது” என்று விளக்கமளித்தார் அமீர். (ஆமாம்… நீங்க துறுதுறுன்னு பண்ண காரியத்தைத்தான் நாங்க பார்த்தோமே!).

பிக் பாஸ் - 78
பிக் பாஸ் - 78

“இவனுங்களா போட்டுக்கறதெல்லாம் என்ன ரேங்க்?! மக்கள் என் திறமையைப் பார்த்து கொடுக்கறதுதான் ரேங்க்... இதுல ஜெயிக்கணும்னுதான் தோணுச்சு. ஆனா அப்பப்ப அழுவாச்சியா வந்துடும்” என்று அக்ஷரா ஆரம்பிக்க, “அதுக்குப் பதிலாதான் கராத்தே வித்தையையெல்லாம் அப்புறமா காண்பித்தீர்களே?!” என்று கமலே பாராட்டி அக்ஷராவை அமர வைத்தார்.

அடுத்ததாக பஸ் டாஸ்க்கை எடுத்து ஓட்ட ஆரம்பித்த கமல் “பீட்ஸாக்கு ஆசைப்பட்டு போட்டியை விட்டுக்கொடுத்த சாப்பாட்டு மன்னர்கள் எல்லாம் இருக்கும் வீடு இது” என்று பிரியங்காவை கிண்டலடிக்க “ஆமாம் சார். ரொம்ப பங்கமாப் போச்சு. வழக்கமா நான் வெஜ் உணவு அனுப்பற மனுஷன்... அன்னிக்கு பார்த்து வெஜ் பீட்ஸா அனுப்பிச்சு எனக்கு ஆசையை காண்பிச்சிட்டாரு. மூணாவது துண்டையும் உள்ளே தள்ளின அப்புறம்தான் எனக்கு டாஸ்க் நினைப்பே வந்துச்சு” என்று விளக்கம் அளித்தார் பிரியங்கா.

“என்ன பாவனி? விட்டுக் கொடுத்து இறங்கிட்டீங்களா?” என்று அந்தப் பக்கம் கமல் திரும்பியபோது, “ஆமாம் சார். யாருமே இறங்கலை. இல்லாட்டி டாஸ்க்கை மொத்தமா ஊத்தி மூடிடுவேன்னு பிக் பாஸ் சொல்லிட்டாரு. சரி. பசங்க பிழைச்சுப் போகட்டும்ன்னு இறங்கிட்டேன்” என்று அவர் சொல்ல, “இந்த வீட்ல எல்லோரும் என்னை அப்படி கொஞ்சி தாலாட்டறாங்க சார். யாருமே என்னை இதுவரைக்கும் நாமினேட் பண்ணலை. இவங்க கேட்டப்புறம் எப்படி மறுக்க முடியும்?” என்று உருகினார் ராஜூ. “இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தாதான் என்ன?-ன்னு நான் கூட பாட்டு பாடி கேட்டேன். கேட்கலை. பேட் ஃபெல்லோ” என்று செல்லமாக ராஜூவைத் திட்டினார் பிரியங்கா.

பிக் பாஸ் - 78
பிக் பாஸ் - 78

ஓர் இடைவேளைக்குப் பிறகு என்று கமல் கிளம்பியவுடன் “நான் போயிட்டா என்ன பண்ணுவே? ஜாலியா டான்ஸ் ஆடுவியா?” என்று அமீரிடம் பாவனி கேட்க, அப்போதே உற்சாக ஸ்டெப்புகளை போட்டுக் காண்பித்த அமீர் “கிஃப்ட் கொடுக்க மறந்துடாத. ஷூல்லாம் வேணாம். அதான் செருப்பு பறக்கும்-னு ஏற்கெனவே சொல்லிட்டியே. பரிசு இன்னமும் பெரிசா வேணும்” என்றார் அமீர்.

அன்பறிவு – ஆதி நடிக்கும் புதிய திரைப்படம்!

“சேட்டிலைட் தொழில்நுட்பத்தின் வருகை சினிமாவின் வளர்ச்சியைப் பாதிக்கும்னு ஒருகாலத்துல பயந்தாங்க. ஆனா அது இன்னிக்கு அண்ணன் – தம்பியா செயல்படுது. சினிமா–ன்கிற மேடைதான் என்னை இங்க கொண்டு வந்து சேர்த்திருக்கு” என்று சம்பந்தம், சம்பந்தமில்லாமல் கமல் பேசிய போதே அதுவொரு பிரமோஷனுக்கான சமிக்ஞை என்று தெரிந்து போயிற்று. ஹிப்ஹாப் ஆதி நடித்து வெளியாகவிருக்கும் ‘அன்பறிவு’ என்கிற திரைப்படத்திற்கான டிரெய்லர் வெளியீடு. (இந்தப் பெயரில் ஸ்டண்ட்மாஸ்டர்களாக இருக்கும் இரட்டைச் சகோதர்களின் நினைவுதான் சட்டென்று வருகிறது).

'மூன்றாம் பிறை' என்கிற ஒரு நல்ல வெகுசன சினிமாவை முதலில் தயாரித்த சத்யஜோதி தியாகராஜனை சிறப்பான முறையில் மேடையில் நினைவுகூர்ந்த கமல், “Independent Music என்பது மேற்குலகில் சினிமாவை விடவும் பெரிய தளமாக வளர்ச்சியடைந்திருக்கிறது. ஆனால், இங்கு அது இன்னமும் நிகழவில்லை. அதன் அடையாளங்களில் ஒன்றாக ஆதி இருப்பது மகிழ்ச்சி” என்று பாராட்டிவிட்டு போட்டியாளர்களுக்கு டிரெய்லரை அறிமுகப்படுத்தினார். டிரெய்லர் சுமாராகத்தான் இருந்தது. ஆனால் உள்ளே இருப்பவர்கள் கார்ட்டூன் சேனல் காட்டினால் கூட விசிலடிக்கும் சூழ்நிலையில் இருப்பதால் ‘வேற லெவல்’ என்று கோரஸாக பாராட்டினார்கள்.

பிக் பாஸ் - 78
பிக் பாஸ் - 78

இளைஞர்களை ஊக்குவிக்கும் கமலின் பெருந்தன்மையை குறிப்பிட்டு நெகிழ்ந்த ஆதி, ‘தன்னுடைய இசையில் கமல் பாடும் சான்ஸை’ சந்தடி சாக்கில் கேட்க “அது தனியிசையா இருந்தா ஓகே” என்று சம்மதம் தெரிவித்தார் கமல். வீடியோ அழைப்பில் நெப்போலியன் வந்தபோது “யாம் அறிவோம்’ என்று டைமிங்கில் கமல் செய்த குறும்பு சுவாரஸ்யம். கமல் மீதுள்ள அன்பையும் பிரமிப்பையும் சிறப்பான முறையில் வெளிப்படுத்தினார் நெப்போலியன். படத்தின் இயக்குநர் அஸ்வின், சஞ்சீவின் உறவினர் போல. "எங்க அக்கா இறந்தப்புறம் அவங்க பொண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையணும்னு வேண்டிக்கிட்டேன்” என்ற சஞ்சீவ் நெகிழ்ந்து கண்கலங்கினார். இறுதியில் ‘ஒருத்தர் காப்பாற்றப்பட்ட’ செய்தியை ஆதி தெரிவிக்க, குஷியானார் பிரியங்கா.

ரத்தம் vs தக்காளி சட்னி தத்துவம்

‘ஆரம்ப நாளில் இருந்தே பிரியங்காவிற்கு என்னைப் பிடிக்காது’ என்று அக்ஷரா சபையில் ஆவேசமாக அறிவித்துவிட்டதால் அது பற்றி அவரிடம் பேசலாமா என்கிற யோசனையில் இருக்கிறார் பிரியங்கா. அதே சமயம் ‘பேச வேண்டுமா?’ என்கிற கேள்வியும் கூடவே இருந்தது. இதைப் பற்றி பாவனியிடம் இடைவேளையில் அனத்திக் கொண்டிருந்தார். அக்ஷராவிடம் பிரியங்கா பகைமை பாராட்டுவது ஒருபக்கம் நிகழ்கிறதென்றால், பாவனி மீது அக்ஷரா காட்டும் வன்மம் இன்னொரு பக்கம் தொடர்கிறது. ஆக... யாரும், யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை. ரத்தம் vs தக்காளி சட்னி தத்துவத்தை ஏறத்தாழ அனைவருமேதான் பின்பற்றுகிறார்கள், அக்ஷரா உட்பட!

பாவனி பற்றி பிரியங்காவிடம் அமீர் மறுபடியும் வழிய ஆரம்பிக்க, “வாய்ப்பில்ல ராஜா. அவ நோன்னு சொல்லிட்டா” என்று கறாராகச் சொன்னார் பிரியங்கா. பாவனியும் அதைச் சிரித்துக் கொண்டே வழிமொழிந்தார். அமீர், பாவனி என்று இருவரில் ஒருவர் வெளியேறாமல் இந்த ரொமான்ஸ் விவகாரம் அடங்காது போலிருக்கிறது.

பிக் பாஸ் - 78
பிக் பாஸ் - 78

புத்தகப் பரிந்துரை - ‘கிருஷ்ணா கிருஷ்ணா’

அகம் டிவி வழியாக மீண்டும் உள்ளே வந்த கமல், வழக்கமான பாணியில் எவிக்ஷன் கார்டை விசிறிக் கொண்டே வந்து ‘ஒரு இடைவேளைக்குப் பின்னால சொல்லட்டுமா?” என்று மீண்டும் சட்டென்று காணாமல் போனார். ‘இப்பதானே பிரேக் போயிட்டு வந்தாரு’ என்று மக்கள் திகைத்துப் போனார்கள். “கொஞ்சம் புதுசா செய்து பார்ப்போமே” என்று நமட்டுச் சிரிப்புடன் சொன்ன கமல் ‘புத்தகப் பரிந்துரை’ ஏரியாவிற்கு வந்தார்.

கிருஷ்ணா கிருஷ்ணா
கிருஷ்ணா கிருஷ்ணா

இந்த வாரம் கமல் பரிந்துரைத்த நூல், இந்திரா பார்த்தசாரதி எழுதிய ‘கிருஷ்ணா கிருஷ்ணா’ என்கிற புதினம். ஜரா என்னும் வேடன் கிருஷ்ணனின் காலில் அம்பெய்ய, உயிரை இழக்கும் முன்னர் கிருஷ்ணன் ஜராவிடம் தன் வாழ்க்கைக் கதையை விவரிப்பதாக இந்த நாவலின் கற்பனை அமைந்திருக்கிறது. ஜரா இதை நாரதரிடம் சொல்ல, நாரதர் இதைப் புதினத்தில் சொல்வது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. மகாபாரதத்தின் ஒரு துண்டை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும் ஆங்கில மேற்கோள்கள் உள்ளிட்டு பல விஷயங்கள் விரவிக் கிடப்பதே இந்த நாவலின் சிறப்பு. கூர்மையான அங்கதம் என்பது இ.பா.வின் பிரத்யேக அடையாளம்.

‘யார் காப்பாற்றப்படுவார்கள்?’

“என்னாச்சு... பயந்துட்டீங்களா. சும்மா இந்த மாதிரி செய்து பார்த்தேன். நல்லாயிருந்ததுல?” என்று மீண்டும் அகம் டிவிக்குள் நுழைந்து போட்டியாளர்களை செல்லமாக வெறுப்பேற்றினார் கமல். “ஓகே. நான்கு பேர் எவிக்ஷனில் இருக்கிறார்கள். இப்போது காப்பாற்றப்படுபவர் ஒரு பெண்” என்கிற ‘க்ளூ’வை கமல் சொன்னதும் அக்ஷரா மற்றும் பாவனியின் முகத்தில் பரபரப்பு கூடியது. அக்ஷரா உதட்டைக் கடித்துக் கொண்டார். அது பாவனி என்று கமல் சொன்னதும் பாவனியின் முகத்தில் நிம்மதியும் ஆசுவாசமும் பொங்கி வழிந்தது. இந்த வாரம் தான் எலிமினேட் ஆகிவிடுவோம் என்று அதிகமாக பயந்தவர்களில் அவரும் ஒருவர்.

“அடுத்து காப்பாற்றப்பட்டவரும் ஒரு பெண்தான்” என்று கமல் சொன்னதும் அது சந்தேகத்திற்கு இடமின்றி ‘அக்ஷரா’ என்பது தெரிந்து போயிற்று. ஆக மீதமிருந்தவர்கள் வருண் மற்றும் அபிநய். “இதுல யார் சேவ் ஆவாங்கன்னு நெனக்கறீங்க?” என்று வழக்கமான விளையாட்டைத் துவங்கினார் கமல். இதில் மெஜாரிட்டியாக வருணின் பெயர் வந்தது. பிரியங்கா, ராஜூ, சஞ்சீவ் போன்றவர்கள் அபிநய்யின் பெயரைச் சொன்னார்கள். “அண்ணா... அண்ணா’ என்று உருகினாலும் அக்ஷரா வருணின் பெயரைத்தான் சொன்னார். பாவனி, அபிநய்யின் பெயரைச் சொல்லியிருந்தால்தான் ஆச்சர்யம்.

பிக் பாஸ் - 78
பிக் பாஸ் - 78

“ஓகே... வீட்டுக்குள்ள மெஜாரிட்டியா வருணின் பெயர் வந்திருக்கு. வெளியே என்ன மெஜாரிட்டின்னு பார்க்கலாம்” என்ற கமல் எவிக்ஷன் காட்டியவுடன் ‘அபிநய்’ என்று இருந்தது. ஆக, வருணின் உறுதியான ஆருடம் பலித்து விட்டது. ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு சலனமில்லாத முகத்துடன் எழுந்துவந்தார் அபிநய். ‘அழுது ரொம்ப நேரம் ஆச்சு போலயே’ என்று எண்ணிக் கொண்டிருந்த அக்ஷரா, இந்தச் சந்தர்ப்பத்தை வலுவாகப் பயன்படுத்திக் கொண்டு கண்ணீர் சிந்தித் தீர்த்தார்.

‘எங்கிருந்தாலும் வாழ்க’ – அபிநய் உருக்கம்

பெட்டியை எடுத்துக் கொண்டிருந்த அபிநய்யின் பக்கத்தில் அனைவரும் ஆறுதலாக நிற்க, அறையின் வெளியிலேயே நின்றிருந்தார் பாவனி. “நான் தவறு செய்துட்டேன்” என்று முனகியபடி அனைவரிடமும் விடைபெற்றார் அபிநய். அபிநய்யும் பாவனியும் பரஸ்பரம் பேசிக் கொள்வார்களா என்று அனைவருக்குள்ளும் ஓர் எதிர்பார்ப்பு எழுந்திருக்கும். பாவனியை கடந்துபோன அபிநய், சட்டென்று தீர்மானித்து, “ஒண்ணுமில்லாத விஷயம் பெரிசா ஆயிடுச்சு... ஓகே. நல்லா விளையாடுடா” என்று கைகுலுக்கியது அபிநய்யின் நற்பண்பைக் காட்டுகிறது. பாவனியும் அபிநய்யை வெறுக்கவில்லை. ‘என் நண்பர்’ என்றேதான் இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

கார்டன் ஏரியாவிற்கு வந்த அபிநய், என்ன காரணத்தினாலோ கீழேயிருந்த லைட்டை உதைக்க, அது உடைந்து சிதறியது. (“அத ஏண்டா உதைச்சே?” என்று பிக் பாஸ் உள்ளிருந்து அலறியிருக்கலாம்). பாவனி விவகாரத்தினால் தான் வெளியே போக நேர்ந்திருக்கலாம் என்பது அபிநய்யை உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கலாம்.
பிக் பாஸ் - 78
பிக் பாஸ் - 78

“இந்தச் சந்தர்ப்பத்தை நான் இன்னமும் சிறப்பாக உபயோகப்படுத்தியிருக்கலாம் என்று தோன்றுகிறது. ஓர் அழகான குடும்பம் எனக்குக் கிடைச்சிருக்கு. இங்க இருந்து ஒவ்வொருத்தர் கிட்டயும் ஒவ்வொரு உறவை எடுத்துட்டுப் போறேன். எல்லோரும் நல்லா விளையாடுங்க. ஆல் தி பெஸ்ட்" என்று உருக்கத்துடன் சொல்லி விடைபெற்றார் அபிநய். இவர் சென்று பல நிமிடங்கள் ஆகியும் கூட அக்ஷராவால் தனது ‘க்ரையோமேனியா’விலிருந்து விடுபட முடியவில்லை. மூசுமூசுவென்று அழுது கொண்டிருந்தார். “அவன் நல்ல பையன்க்கா... சில விஷயங்களைச் சொல்ல முடியலை” என்று தாமரையிடம் அனத்தினார். பிக் பாஸூம் விடை தந்தது சிறப்பான விஷயம்.

“உன் க்ளோஸ் பிரெண்டை நல்லா பார்த்துக்கோ”

மேடையில் அபிநய். “பிக் பாஸ் எனக்கு ரொம்ப பிடிச்ச கேம். முதல் சீசன்ல இருந்து பார்த்துட்டு இருக்கேன். இங்க வர்றதுக்காக ரொம்ப நாள் காத்துட்டு இருந்தேன். ஒருத்தரைக் கணிக்கறதுல நான் எப்பவுமே சொதப்பிடுவேன். இங்கயும் அதேதான் ஆச்சு. என் இயல்பு அதுதான்” என்ற அபிநய்யுடன், “இதுதான் நான்னு எல்லாத்திலயும் பிடிவாதமா இருக்காதீங்க. இந்த அனுபவத்தை பயன்படுத்திக்கங்க. 'இராமானுஜர்' படம் தந்த புகழை விடவும் பிக் பாஸ் புகழ் அதிகம். பாசிட்டிவ்வான விஷயங்களை எடுத்துக்கங்க” என்ற கமல், அபிநய் தொடர்பான பயண வீடியோவைக் காட்டினார்.

பயண வீடியோவில் நல்ல வேளையாக பாவனி விவகார காட்சிகள் எதுவும் வரவில்லை. தன் வீடியோவைப் பார்த்து தானே சிரித்தும் நெகிழ்ந்தும் கலவையான உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார் அபிநய். பிறகு அகம் டிவி வழியாக போட்டியாளர்களிடம் வந்து விடைபெற்றார். பாவனியின் முறை வந்த போது சிறிது நேரம் மெளனமாக உறைந்து நின்ற அபிநய்யைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. “எனக்கு அன்பு கொடுக்க பிடிக்கும். சிலரிடம்தான் அதை அதிகமா தர்ற தோணும். அப்படித்தான் தந்தேன். ஆனா அதுல ஏதோ ஒரு தவறான புரிதல் ஏற்பட்டுவிட்டது. ஓகே... என் பக்கமும் அந்த தவறு இருந்திருக்கலாம்” என்று சொல்ல “நான் இப்பவும் உன்னை என் பிரெண்டாதான் நெனக்கறேன்” என்று நல்ல வார்த்தைகளைச் சொன்னார் பாவனி.

பிக் பாஸ் - 78
பிக் பாஸ் - 78

“முதல்ல அண்ணா’ன்னு கூப்பிட்ட. அப்புறம் டேய் ஆச்சு... அப்புறம் மச்சான்’ன்னு சொன்னே. இப்ப என்ன சொல்லப் போறே?” என்று அமீரை அபிநய் விசாரிக்க “அண்ணன்-ன்னு சொல்றேன்” என்று வெட்கப்பட்டார் அமீர். “உன் க்ளோஸ் பிரெண்டை நல்லா பார்த்துக்கோ” என்று அபிநய் உருக்கமாகச் சொன்னபோது பின்னணயில் ‘எங்கிருந்தாலும் வாழ்க’ பாடல் ஒலித்தது போலவே ஒரு பிரமை.

ஒரு போட்டியாளர் விடைபெற்றுச் செல்லும் காட்சியை தொலைக்காட்சி வழியாக சக போட்டியாளர்கள் முதன்முறையாகப் பார்த்தார்கள். “நீங்க அனைவரும் டாப் 10-ல இருக்கீங்க. நினைவிருக்கட்டும். லேட்டா வந்தவங்க. ஆரம்பத்துல இருந்தவங்க–ன்ற கணக்குல்லாம் இதில் கிடையாது. எது வேணா நடக்கலாம். நல்லா விளையாடுங்க” என்றபடி கமலும் விடைபெற்றுச் சென்றார்.

ஆக... போட்டியாளர்களின் எண்ணிக்கை இன்னமும் குறைந்திருக்கிறது. போட்டியும் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருப்பதால் இனி உடல்வலிமை சார்ந்த சவால்கள் நிறைய வரும். ஆட்டம் சூடு பிடிக்கும் என்று தோன்றுகிறது. பார்ப்போம்!