Published:Updated:

பிக் பாஸ் 84: `குளிச்சிட்டு வாங்க ராஜூ' கமலின் குறும்பும், ஆபீஸ் ரூமில் `அட்வைஸ்' வாங்கிய போட்டியாளர்களும்!

பிக் பாஸ் 84

“கேம்லாம் நல்லாத்தான் விளையாடறீங்க. இந்த விளையாட்டைப் பற்றிய உங்கள் புரிதல் ஓகே. ஆனா உங்க ஃபோகஸ் வேற எங்கயோ இருக்கு” என்று அமீரிடம் கமல் சொன்னது சிறப்பு. “ஆனா... it is not my business” என்று சொன்ன இடத்தில்தான் கமல் தனித்து நிற்கிறார்.

பிக் பாஸ் 84: `குளிச்சிட்டு வாங்க ராஜூ' கமலின் குறும்பும், ஆபீஸ் ரூமில் `அட்வைஸ்' வாங்கிய போட்டியாளர்களும்!

“கேம்லாம் நல்லாத்தான் விளையாடறீங்க. இந்த விளையாட்டைப் பற்றிய உங்கள் புரிதல் ஓகே. ஆனா உங்க ஃபோகஸ் வேற எங்கயோ இருக்கு” என்று அமீரிடம் கமல் சொன்னது சிறப்பு. “ஆனா... it is not my business” என்று சொன்ன இடத்தில்தான் கமல் தனித்து நிற்கிறார்.

Published:Updated:
பிக் பாஸ் 84
இந்த வாரம் ‘டபுள் எலிமினேஷன்’ என்கிற தகவல் கசிந்திருக்கிறது. அது வருண் மற்றும் அக்ஷரா. ‘ஒன்றாகவே இருந்தீர்கள், ஒன்றாகவே வெளியேறுங்கள்’ என்கிற நல்லெண்ண அடிப்படையில் பிக் பாஸ் செயல்பட்டிருக்கிறார் போல. போட்டியின் இறுதிக்கு இன்னமும் ஏறத்தாழ 23 நாள்களே இருக்கும் நிலையில் ஆட்களின் எண்ணிக்கையை ஆவேசமாகக் குறைக்கும் முயற்சியில் பிக் பாஸ் ஈடுபட்டிருக்கிறார் போல.

வைல்ட் கார்ட் என்ட்ரியில் நுழைந்தாலும் சஞ்சீவும் அமீரும் ஒரு வலுவான இடத்தைப் பிடித்திருப்பது மகிழ்ச்சி. சீசன் 5 அதன் கிளைமாக்ஸை நெருங்கவிருக்கிறது. என்றாலும் கூட இறுதியில் வெல்பவர் யார் என்பதை இன்னமும் தோராயமாகக் கூட நம்மால் யூகிக்க முடியவில்லை. ராஜூவிற்கு அவரது மிதமிஞ்சிய தன்னம்பிக்கையே ஒரு தடையாக அமைந்துவிடலாம். தன்னைச் சரியாக ஒருமுகப்படுத்திக் கொண்டால் நிரூப்பிற்கு வாய்ப்பு அதிகமிருக்கிறது. பார்ப்போம்!

பிக் பாஸ் 84
பிக் பாஸ் 84

எபிசோட் 84-ல் என்ன நடந்தது?

‘அன்பேதான் எல்லாம்’ என்கிற கிறிஸ்துமஸ் வாழ்த்துகளோடு வந்த கமல் (சட்டை செமயா இருந்தது!) “உள்ளே எல்லோருக்கும் அன்பு மழை பொழிந்தது. ஒருத்தருக்கு மட்டும் கோடை. அவருக்கும் இன்னிக்கு மழை பெய்யலாம்” என்று வானிலை அறிவிப்பு செய்ய, வெள்ளிக்கிழமை நிகழ்வுகள் காட்டப்பட்டன. ‘தன் சுற்றத்தார் இன்னமும் வரவில்லையே’ என்கிற சோகத்தில் இருந்த அமீரின் கைகளைப் பற்றி ஆறுதல் சொன்னார் பாவனி.

“அது மட்டுமே பெரிய மைனஸ் பாயிண்ட் அமீர்!”

மறுநாள் கார்டன் ஏரியாவில் அமீர் நின்று கொண்டிருக்கும் போது பேண்ட் வாத்திய இசை கேட்டது. ரகளையாக ஆடியபடியே மூன்று பெண்கள் உள்ளே நுழைந்தார்கள். காலில் அடிபட்டிருந்தாலும் பாய்ந்து சென்று அவர்கள் மூவரையும் அணைத்துக் கொண்டார் அமீர். அதிலும் சிறிய பெண்ணை விடாமல் நெடுநேரம் அணைத்ததில் இருந்து அந்தப் பெண்ணிடம் அமீருக்கு இருக்கும் பாசம் வெளிப்பட்டது. பாசமழைக்கு நடுவிலும் அமீரிடம் உள்ள மாஸ்டர் வெளிப்பட்டதால் “காம்படிஷன் என்னாச்சு?” என்று விசாரித்துக் கொண்டார். “உங்க கால்ல எப்படி அடிபட்டது?” என்று வந்தவர்கள் விசாரிக்க “ராஜூவோடு WWF ஆடும் போது ஏற்பட்ட விபத்து” என்றார் அமீர். டாஸ்க்கில் கூட காட்டாத சாகசத்தை ராஜூ சாதாரண சமயங்களில் காட்டுகிறார் போல.

“நீங்க வரலைன்னு நெனச்சு அழுதுட்டேன்” என்ற அமீருக்கு வந்தவர்கள் ஆறுதல் சொல்ல, இதர போட்டியாளர்களும் வந்து இணைந்து கொண்டார்கள். பிறகு வந்தவர்கள் அமீரை தனிமையில் சந்தித்த போது “நீ சூப்பரா விளையாடறே... கேம்லாம் நல்லாத்தான் பண்றே... தாமரைக்கு விட்டுக் கொடுத்தது கூட நல்ல விஷயம்தான். ஆனா ஒரு சின்ன மைனஸ்…” என்று ஒருவர் இழுக்க “இல்ல… அதுதான் பெரிய மைனஸ்” என்றார் மற்றொருவர். அது பாவனி விவகாரம் என்பது அமீருக்கு எளிதாகப் புரிந்தது. “ஸ்ட்ராட்டஜின்னு வெளில சொல்றாங்களா?” என்று அடிபட்ட முகத்துடன் கேட்டார். அப்படியும் பேசிக் கொள்வார்கள் என்பது அவருக்குத் தெரியாமலா இருக்கும்? “சரி... அதையெல்லாம் விடு. இனிமே கேம்ல கவனம் செலுத்து” என்று தரப்பட்ட ஆலோசனை சரியானது.

பிக் பாஸ் 84
பிக் பாஸ் 84

ஒரு ரகளையான டான்ஸ்

“சார் வரலையா?” என்று அமீர் கேட்க “அவர் உன்னை பைனல்லதான் மீட் பண்ணுவேன்னு சொல்லிட்டாரு” என்று பதில் வந்த போது அமீர் வெல்வதற்காக அந்தக் குடும்பம் எத்தனை ஆசைப்படுகிறது என்பது தெரிந்தது. ஸ்டோர் ரூமில் மணியடிக்க அமீர் காலை தாங்கித் தாங்கி விரைந்தார். ‘ஒருவேளை ‘சார்’ வந்திருப்பார்’ என்று ஆவலாக எதிர்பார்த்தாரோ என்னமோ? ஆனால் அமீரின் அம்மா பிறந்த நாளுக்காக கேக் வந்திருந்தது. அம்மாவின் ஆசியைக் கோரி அனைவரும் கேக் வெட்டி கொண்டாடினார்கள். “பாத்தியா... இதனால்தான் இன்னிக்கு பிளான் பண்ணி அவங்க வந்திருக்காங்க... அதுக்குள்ள நீ பாட்டுக்கு சோகமா இருந்தே” என்று யாரோ அமீரிடம் சொன்னது சரியான கமெண்ட். ‘காரண காரியங்கள் இல்லாமல் இங்கு எதுவுமே நடக்காது காஷ்மோரா!’.

பிக் பாஸ் 84
பிக் பாஸ் 84

அமீரின் சுற்றத்தார் கிளம்ப வேண்டிய நேரம் வந்துவிட்டதை பிக் பாஸ் அறிவித்து விட்டு “அதுக்கு முன்னாடி...” என்று ஆச்சரியமாக இழுக்க, 'மாஸ்டர்' திரைப்படத்திலிருந்து ரகளையான பாடலான ‘வாத்தி கம்மிங்’ ஒலித்தது. ‘நல்லா ஆடுங்க” என்பது போல் அமீர் மாஸ்டர் சைகை செய்தார். இதில் சிறிய பெண் ஆடுவதற்கு தயங்கியது போலவும் தடுமாறியது போலவும் முதலில் தெரிந்தது. ஆனால் அவர் ஒரு கட்டத்தில் இறங்கி, குத்தி, பட்டையைக் கிளப்புவது போல் ஆடிய தருணமானது, 'பிரேமம்' திரைப்படத்தில் மலர் டீச்சர் தந்த ஆச்சரியத் தருணத்தை நினைவுப்படுத்தியது. பிறகு மூன்று பெண்களுமே இறங்கி ஆட, அவர்களுடன் போட்டியாளர்களும் இணைந்து கொண்டது சூப்பரான தருணம்.

ராஜூவை நிராகரித்து சஞ்சீவை ஆதரித்த தாமரை!

‘புத்தகத்தைப் பிரித்தால் பரிசு’ என்கிற கேட்டகிரியில் யாரையாவது தேர்ந்தெடுக்கலாம் என்கிற வாய்ப்பு தலைவர் தாமரைக்கு அளிக்கப்பட்டது. “என்னைத் தேர்ந்தெடுத்து தொலையேன்” என்று பார்வையினாலேயே ராஜூ கெஞ்சிக் கொண்டிருக்க, தாமரையோ சஞ்சீவைத் தேர்ந்தெடுத்தார். அவர்தான் சமர்த்தாக நடந்து கொண்டாராம். ‘வெஜ் புலவ்’ பரிசாக வந்தததால் உற்சாகமாகக் கத்தித் தீர்த்தார் பிரியங்கா. பிறகு பிரியாணி செய்யும் போட்டி அறிவிக்கப்பட்டது. நிரூப்பின் தலைமையில் மக்கள் ஆவேசமாகச் செயல்பட்டார்கள்.

பிக் பாஸ் 84
பிக் பாஸ் 84

"இந்தப் பிரியாணியை யாருடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்கள்?” என்று ஒவ்வொரு போட்டியாளரும் பகிர்ந்து கொள்ள வேண்டும். “என் அப்பாவுடன் சாப்பிட விரும்புகிறேன்” என்று ராஜூ உருக்கமாகச் சொல்ல, “என்னுடைய நடனக்குழு நண்பர்களுடன் இணைந்து உண்ண விரும்புகிறேன்” என்று அமீர் சொன்னது சிறப்பு. “விஜய்க்கு மட்டன் பிரியாணின்னா ரொம்ப பிடிக்கும். அவர் உள்ளிட்ட ஆறு பேர் நண்பர்கள் கேங்குடன் எஞ்சாய் செய்ய விரும்புகிறேன்” என்று சஞ்சீவ் தெரிவித்தார். “மாகாப உள்ளிட்ட நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வேன்” என்று பிரியங்கா சொன்னது சிறப்பு. இவர்களுக்குக் கூடுதல் பரிசாக சாக்லேட் வந்தது. இது போன்ற சமயங்களில், பிரியங்கா அல்லது அக்ஷரா ஆகிய இருவரில் எவராவது ஒருவர் ஹைடெஸிபலில் கத்துவார் என்பதை யூகித்து சட்டென்று ஸ்பீக்கரை ஆஃப் செய்தது நல்லதாகப் போயிற்று. பிரியங்கா இந்த திருக்காரியத்தை செவ்வனே செய்து முடித்தார். (ஸ்பீக்கரை அணைத்து வைத்திருந்தாலும் கூட காது ‘கொய்ங்’ என்றது).

பிக் பாஸ் 84
பிக் பாஸ் 84

‘பெற்றால்தான் பிள்ளையா?’

மேடையில் தோன்றிய கமல், ‘பெற்றால்தான் பிள்ளையா?” என்கிற வாக்கியத்தின் சிறப்பை அமீரை முன்னிட்டு நினைவுப்படுத்தி அந்தப் பெயரில் அவர் நடத்திவரும் அமைப்பு ஒன்றின் செயல்பாட்டையும் தகவலாக பொதுவில் பகிர்ந்தது சிறப்பான விஷயம். எயிட்ஸால் பாதிக்கப்பட்ட சிறார்களை வளர்த்தெடுக்கும் பொறுப்பை அந்த அமைப்பு ஏற்றுக் கொண்டிருக்கிறதாம். குறுகிய காலமே வாழ்வார்கள் என்று யூகிக்கப்பட்டதை பொய்யாக்கி, கல்லூரி மற்றும் திருமண வாழ்க்கையை நோக்கி அவர்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள் என்கிற மகிழ்ச்சியான தகவலை பகிர்ந்த கமல், மருத்துவ வளர்ச்சிக்கு நன்றி என்று சொன்னது சென்டிமென்டை தாண்டிய பகுத்தறிவு.

அகம் டிவி வழியே உள்ளே வந்த கமல் “உங்கள் உறவுகளின் மூலம் அன்பு மழையில் நனைந்தீர்கள். பார்க்க நன்றாக இருந்தது. ஆனால் பாசத்தோடு அவர்கள் கூடவே சில குறிப்புகளையும் சொல்லி விட்டுச் சென்றார்கள்” என்று நமட்டுச் சிரிப்போடு கூறியதை போட்டியாளர்கள் புரிந்து கொண்டார்கள். “ராஜூ நீங்க வாய்ப்பு கிடைக்குமான்னு சந்தேகமா உங்க மனைவிகிட்ட கேட்டீங்க. சந்தேகமே வேணாம். நான் உறுதியாகச் சொல்கிறேன். திறக்காத கதவு கூட இனிமே உங்களுக்குத் திறக்கும்” என்று கமல் வழக்கமான பாணியில் சொன்னார். (இப்படி உசுப்பேத்தி… உசுப்பேத்தியே..!)

பிக் பாஸ் 84
பிக் பாஸ் 84

‘பாசமலர் படத்தோட டிவிடி இன்னமும் கிடைக்குது!’

அடுத்ததாக பிரியங்காவின் பாச மழையைப் பற்றி கமல் விசாரிக்க “ஆமா சார்... நான் அம்மா மேல dependent-ஆ இருக்கேன். இருபத்தைந்து வயசுக்கு மேல இது கூடுதலா ஆயிடுச்சு” என்று பிரியங்கா கூறினார். “பாசமலர் படத்தோட அழுவாச்சி காலம் எல்லாம் முடிஞ்சிருச்சு-ன்னு நினைச்சேன். ஆனால் அது இன்னும் முடியல” என்று அக்ஷராவின் பக்கம் வண்டியைத் திருப்பினார் கமல். “ஆமாம் சார்… செருப்பு கம்மல்-ன்னு எது வாங்கினாலும் என் அண்ணன்தான் முடிவெடுப்பார். இந்த வீட்டுக்கு வந்தப்புறம்தான் நான் முடிவெடுக்க கத்துக்கிட்டேன்” என்றார் அக்ஷரா. இதனூடாக தன் சுய புராணத்தையும் கலந்த கமல், “நானும் அப்படித்தான்” என்று இணைந்து கொண்டார். ‘ஒருவர் இப்படி வயதுக்கு வந்த பிறகும் மற்றவர்களை சார்ந்து வாழும் பழக்கம் என்பது முறையானதல்ல’ என்று கமல் அறிவுறுத்துவார் என்று எதிர்பார்த்தேன் ஆனால் அவர் அதைச் செய்யாமல் பிரியங்கா மற்றும் அக்ஷராவுடன் கூடி கும்மி அடித்தது ரசிக்கத்தக்கதாக இல்லை.

பிக் பாஸ் 84
பிக் பாஸ் 84

அடுத்ததாக கமல் நிரூப்பை விசாரிக்க “எங்க அப்பாவ மூன்று மாதத்துக்கு ஒருமுறை சந்திப்பேன். ஆனால் யாஷ் வரலையேன்னு சோகமா இருந்தது. அப்புறமா வந்தார். செம ஹாப்பி” என்றார் நிரூப். ‘அப்பாவை விடவும் யாஷ்தான் முக்கியமா?’ "ஆண்கள் பொதுவாக தங்களின் உணர்ச்சிகளை வெளியே காட்டிக் கொள்ள மாட்டார்கள். ஆனால் அவர்களின் மனதினுள் ஏராளமான உணர்ச்சி அலைகள் அடித்தபடியேதான் இருக்கும்" என்பதை சிபி மற்றும் நிரூப்பின் தந்தைகளை முன்னிட்டு கமல் சொன்னது சிறப்பு. ஆனால், ‘உணர்ச்சிகளை எளிதில் வெளிக்காட்டாமல் இருப்பதுதான் ஆண்களின் கம்பீரம்’ என்பது மாதிரி இங்கு செயற்கையாக கற்றுத் தரப்பட்டிருக்கிறது. இதுவும் ஓர் ஆட்சேபகரமான கலாசாரம்தான்.

"கால்கட்டுக்கு ஆசை வந்துச்சா அமீர்?”

“கால் எப்படி இருக்கு?” என்று அமீரின் பக்கம் வந்தார் கமல். “சீக்கிரம் கால் கட்டுப் போட ஆசைப்படறீங்க போல” என்று அவர் ஜோக் அடிப்பார் என்று எதிர்பார்த்தேன். ‘அலாதி அன்பு இருந்தால் அனாதை யாரும் இல்லை’ என்றுதான் எழுதிய பாடல் வரியை மேற்கோள்காட்டி, அமீருக்கு ஆறுதல் சொன்னது சிறப்பு. “உங்களுக்கு இங்க கூடுதலா பத்து குடும்பங்கள் கிடைச்சிருக்கு. காலேஜ் நட்பெல்லாம் கிடைக்கலைன்னு நான் ரொம்ப மிஸ் பண்ணியிருக்கேன். உங்களுக்கு இந்தப் போட்டி மூலமா அதெல்லாம் கிடைக்கிறது. எனக்கு பொறாமையா இருக்கு” என்று வலது பக்கம் வண்டியை திருப்பிய கமல், “உங்களையெல்லாம் எனக்குத் தெரியும் என்பதன் மூலம் அந்த பொறாமை மாறிவிட்டது” என்று இடப் பக்கமாகவும் வண்டியை திருப்பினார். “உங்களை அரவணைத்துக் கொண்டவர்களின் அன்பு போல உலகில் பலருக்குக் கிடைக்கிறது. அன்பு என்பதற்கு சாதி மதம் ஒரு தடையல்ல. அதையும் தாண்டி அன்பு என்பது புனிதமானது என்று கமல் சொன்ன மெசேஜ் முக்கியமானது. இந்த நோக்கில் அமீரை அரவணைத்துக் கொண்ட குடும்பம் மிகவும் பாராட்டுக்குரியது என்பதில் சந்தேகமில்லை.

பிக் பாஸ் 84
பிக் பாஸ் 84
“பலாப்பழம் மாதிரி இருக்கீங்க… வெளிய கரடுமுரடா இருந்தாலும் உள்ள தேன் நிறைஞ்சிருக்கு” என்று அடுத்ததாக சஞ்சீவைப் பாராட்டினார் கமல். ‘பாடி பில்டிங்கை பாதியில் நிறுத்திய மாதிரி' என்று கமல் அடித்த கிண்டல் சிறப்பு. ‘அவர்தான் டாஸ்க்கை சரியா பண்ணினார்’ என்று வருண் சொன்னதை கமல் சரியாகக் கவனிக்காமல் அடுத்ததாக தாமரையின் பக்கம் சென்றார்.

தாமரையின் உலக சாதனை!

உற்சாகப் புயல் மாதிரி தாமரையின் மகன் வீட்டை அமளிதுமளி ஆக்கியதை சந்தோஷத்துடன் நினைவுகூர்ந்தார் கமல். “என்னைக் கூட ரெண்டு அடி அடிச்சிட்டான் சார்” என்று பிரியங்கா ஜாலியாக புகார் சொன்னார். "தாமரை… உங்களைத் தாங்கிப் பிடிக்கும் தடாகமாக உங்கள் கணவர் இருக்கிறார் என்று கமல் சொன்ன உதாரணம் சிறப்பு. "16 மணி நேரத்திற்கும் மேலாகக் கயிற்றைப் பிடித்திருந்தது சாதாரண விஷயம் இல்லை” என்று தாமரையைப் பாராட்டிய கமல், “விட்டீர்களா…. அல்லது விட்டுக் கொடுத்து விட்டீர்களா?” என்று அமீரிடம் விசாரித்தபோது அவர் உண்மையைச் சொல்வதற்கு மிகவும் தயங்கினார். ‘விட்டுக் கொடுத்து விட்டார் சார்’ என்று மற்றவர்கள்தான் சொல்ல வேண்டியிருந்தது. “இனிமேல் விட்டுக் கொடுக்காதீர்கள். இறுதிப் போட்டி நெருங்கிவிட்டது” என்று அமீருக்கு கமல் சொன்ன அறிவுரை நன்று. “நடுவுல வந்தவங்க கடைசி வரைக்கும் வந்ததா சரித்திரம் இல்லை. நீங்க அதை மாத்தி எழுத முடியும்” என்று கமல் சூசகமாக சொன்னதை புரிந்து கொண்ட அமீர் “உங்களுக்காக இனி விட்டுத் தராமல் விளையாடுகிறேன்” என்று உறுதிமொழி எடுத்தது நல்ல விஷயம்.

பாவனியின் அக்காவை தங்கை என்று தவறாகக் கூறிய கமல், பிறகு “இதற்காக அவங்க சந்தோஷப்படுவாங்கள்ல” என்று டைமிங்கில் சொன்னது நல்ல நகைச்சுவை. ஆனால், பாவனி இதற்கு வருத்தப்பட வேண்டியிருக்குமே?! “பல்வேறு கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் என் அடிப்படையான இயல்பிலிருந்து நான் மாறவிரும்பவில்லை” என்று பாவனி அழுத்தம் திருத்தமாகச் சொன்னது சிறந்த விஷயம். சிலர் சமூகத்தின் அவதூறுகளுக்காகவும் விமர்சனங்களுக்காகவும் பயந்து தன்னை மாற்றிக் கொண்டு பாசாங்கு செய்வார்கள். ஆனால் இதைச் செய்யாமல் தன் மனது சொல்கிற படி வாழவும், அதை நெருக்கடியான சூழலுக்கு இடையே வெளியில் அறிவிக்கவும் ஒரு துணிச்சல் வேண்டும். அது பாவனியிடம் இருக்கிறது.

பிக் பாஸ் 84
பிக் பாஸ் 84

“தாமரையோட கேப்டன்சி எப்படியிருந்தது?” என்று அடுத்த தலைப்பை எடுத்தார் கமல். ‘நொய்யா... நொய்யா..’ என்கிற தன் டிரேட் மார்க் வசனத்தை மாற்றிய அக்ஷரா, “காச்... காச்...ன்னு அக்கா கத்திட்டே இருந்தாங்க... மத்தபடி அவங்க கேப்டன்சி சூப்பர். சாப்பாடுல்லாம் டைமுக்கு வந்தது. சமையல் தெரியாதவங்களை சமையல் டீம்ல போட்டது நல்ல விஷயம். தரமான கேப்டன் தாமரையக்கா” என்கிற சான்றிதழை அக்ஷரா தந்தது சிறப்பு. மற்றவர்களும் இதையே வழிமொழிந்தார்கள். “ராஜூ மட்டும் முரண்டு செய்தான்” என்பதைத் தயங்கியபடி போட்டுக் கொடுத்தார் தாமரை. “அதைத்தானே நீங்க முதல்ல சொல்லியிருக்கணும்” என்று தாமரையின் பக்கம் சாய்ந்த கமல் “வற்புறுத்தி செய்ய வெச்சா காமெடி எப்படி சார் வரும்?” என்று ராஜூ சொன்னபோது “அதானே... தண்ணியில்லாம எப்படி நீச்சல் அடிக்க முடியும்?” என்று அந்தப் பக்கமும் சாய்ந்துவிட்டார்.

பிக் பாஸ் 84
பிக் பாஸ் 84
தாமரையின் வளர்ச்சிக்கு ராஜூ உதவுகிறார் என்பது சரி. ஆனால் அதையே சாதகமாக எடுத்துக் கொண்டு தாமரையை இடது கையால் அவர் கையாள்வது சரியில்லை. என்னதான் இருந்தாலும் ஒரு வீட்டின் தலைவர் சொல்வதை பின்பற்றுவதுதான் சரி. ராஜூவின் நகைச்சுவையுணர்ச்சிதான் அவரைப் பல சமயங்களில் காப்பாற்றிவிடுகிறது.

நிரூப் & பிரியங்கா = டாம் & ஜெர்ரி

கயிறு டாஸ்க்கில் ஏற்பட்ட பிரியங்கா – நிரூப் மோதல் விவகாரத்தை அடுத்து ஆரம்பித்தார் கமல். இரு தரப்பினரும் அதற்கான பின்னணியை நீளமாகச் சொன்னது சலிப்பு. இந்தப் பின்னணிகளையெல்லாம் நாம் ஏற்கெனவே பார்த்து விட்டோம். “நிரூப்பை கோபப்படுத்தி கயிற்றை விட வைத்தது ஒரு ஸ்ட்ராட்டஜியா?” என்று கமல் குறுக்கிட்டு கேட்டது ஒரு நல்ல கேள்வி. நிரூப் சொன்ன கடுமையான வார்த்தைகளை நயமான முறையில் கமல் கண்டித்ததும் சிறப்பு. கையை உயர்த்தி பிரியங்கா காத்திருந்த போது “என்னது... ஆசிர்வாதம் பண்றீங்க?” என்று கமல் மெலிதாக கிண்டலடித்தது நல்ல குறும்பு. “பொண்ணுங்க கிட்டதான் மோத விரும்பலைன்னு நிரூப் புகார் செஞ்சார்… சரி... ஆனா அமீர் கிட்ட ஏன் மோதலை?” என்பது போல் பிரியங்கா இதற்கு விளக்கம் அளிக்க ஆரம்பித்தார். ஆனால் இதே விஷயத்தை கமல் அழுத்திக் கேட்டபோது குழப்பித் தள்ளினார் பிரியங்கா. கேட்கும் நமக்கே உள்ளே ‘ஞமஞம’ என்று குறுகுறுக்கும் அளவிற்கு பிரியங்காவின் விளக்கம் குழப்பமாக இருந்தது. சொல்ல வந்ததை சுருக்கமாகவும் தெளிவாகவும் பேசுவதற்கு ஏன் இவர்களுக்குத் தெரிவதில்லை?

பிக் பாஸ் 84
பிக் பாஸ் 84
கோபத்தில் நிரூப் இறைத்த கடுமையான சொற்களைக் கண்டித்த கமல் “இதனால் ஒரு நல்ல நட்பை இழக்க வேண்டியிருக்கும்” என்று அறிவுறுத்தியது சிறப்பு. “சிபி உங்களைச் சொன்ன போது உங்களுக்கு வலித்ததல்லவா? அதே போல்தான் பிறருக்கும் வலிக்கும்” என்று கமல் உணர்த்தியதும் போகிற போக்கில் சாரி சொன்னார் நிரூப்.

பிரியங்காவிற்கு கிடைத்த பெஸ்ட் அட்வைஸ்!

“உங்க ஒவ்வொருத்தர் கிட்டயும் தனித்தனியா பேசப் போறேன். ப்ளஸ் பாயிண்ட், மைனஸ் பாயிண்ட் என்னன்னு சொல்லப் போறேன். இது மத்தவங்களுக்கு தெரிய வேண்டாம். எனவே கன்ஃபெஷன் ரூம்ல என்கிட்ட பேசப் போறீங்க” என்று கமல் அறிவித்தவுடன் போட்டியாளர்கள் உற்சாகமடைந்தார்கள். அவர்களின் இதுவரையான செயல்பாட்டிற்கு ரிப்போர்ட் கார்டை அறிந்து கொள்வதற்கான ஒரு நல்ல வாய்ப்பு இது. இதை வைத்து போட்டியில் இனி எப்படிச் செயல்படலாம் என்கிற தெளிவு அவர்களுக்கு கிடைக்கும். அதே சமயத்தில் "கமல் என்ன சொல்லப் போகிறாரோ?” என்கிற பதைபதைப்பும் உள்ளே இருந்திருக்கும். பெருமூச்சு விட்டபடியே அக்ஷரா சென்றபோது இதைத் தெளிவாக உணர முடிந்தது.

போட்டியாளர்கள் அனைவரையும் தனித்தனியாக ‘ஆபிஸ் ரூமில்’ சந்தித்த கமல், அவர்களை மதிப்பிட்டுத் தந்த ரிப்போர்ட் கார்டு ஏறத்தாழ துல்லியமாக இருந்தது. “கேம்லாம் நல்லாத்தான் விளையாடறீங்க. இந்த விளையாட்டைப் பற்றிய உங்கள் புரிதல் ஓகே. ஆனா உங்க ஃபோகஸ் வேற எங்கயோ இருக்கு” என்று அமீரிடம் கமல் சொன்னது சிறப்பு. “ஆனா... it is not my business” என்று சொன்ன இடத்தில்தான் கமல் தனித்து நிற்கிறார்.
பிக் பாஸ் 84
பிக் பாஸ் 84

“ஒருத்தர் பேசி முடிக்கறதுக்குள்ள நீங்களா ஒண்ணு புரிஞ்சுக்கிட்டு பாய ஆரம்பிடச்சிடறீங்க. எமோஷனைக் குறைங்க” என்று கமல் அறிவுறுத்தியதை எவ்வித இடையூறும் செய்யாமல் தாமரை கேட்டுக் கொண்டது சிறப்பு. “இல்லீங் சார்…” என்று ஆரம்பித்து எந்த அநாவசிய விளக்கமும் தாமரை அளிக்கவில்லை. “இதுவரைக்கும் வந்திருக்கீங்கன்னா... உங்க கிட்ட ஏதோவொரு ஸ்பெஷல் இருக்கில்லையா?” என்று கமல் சுட்டிக் காட்டியதும் சிறப்பான விஷயம்.

‘தனித்திரு. பசித்திரு. விழித்திரு’ என்கிற வாக்கியத்தை தெலுங்கில் பாவனியிடம் கமல் சொன்னது சிறப்பான தருணம். “விமர்சனங்கள் வந்தாலும் உங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக நிற்பது பாராட்டுக்குரிய விஷயம்” என்று பாராட்டிய கமல் “நீங்க சொல்ல நினைக்கறது ஒண்ணு... வெளில பதிவாகற விஷயம் ஒண்ணு” என்று பாவனியின் மொழிப்பிரச்சினையை கமல் சுட்டிக் காட்டியது சிறப்பான அவதானிப்பு. “ஃபீலிங்க்ஸ்' என்பது முதல் பாவனி உபயோகிக்கும் சில பிரத்யேக வார்த்தைகள், அவர் சொல்ல நினைப்பதற்கு எதிர்மறையான செய்தியைத்தான் வெளியில் தெரிவிக்கின்றன. “வேற வேற முகம் காட்டாதீங்க” என்பதையும் பாவனிக்கு அறிவுறுத்தினார் கமல்.

பிக் பாஸ் 84
பிக் பாஸ் 84

“எல்லாம் சரியாத்தான் போயிட்டு இருக்கு. ஆனா இன்னமும் நாட்டாமையா நின்னு பஞ்சாயத்து பண்ணிட்டு இருக்காதீங்க. நீங்களும் களத்தில் இறங்கி விளையாடுங்க” என்று சஞ்சீவிற்கு அளித்த உபதேசத்தை அவர் சீரியஸாக கேட்டுக் கொண்டார். அடுத்து வந்த ராஜூவிடம் “ஓவர் நம்பிக்கை உடம்பிற்கு ஆகாது. டாஸ்க்கில் இறங்குங்க. முயல் ஆமை கதை மாதிரி ஆகிடப் போகுது. ரேஸ்ல முன்னாடி வர்ற மூணு பேரைத்தான் அதிகம் கவனிப்பாங்க. ஒரு நொடில கூட முடிவு மாறிடலாம்” கமல் எச்சரித்தது சிறப்பான விஷயம். “ஓகே... குளிச்சுட்டு வாங்க” என்று ராஜூவை வழியனுப்பியதில் கமலின் குறும்பு தெரிந்தது.

அடுத்ததாக நிரூப்பை அழைத்த கமல் “நல்ல போட்டியாளர் நீங்க... ஆனா ஒரேயோரு நபர் கூட மட்டுமே போட்டிப் போடற மாதிரி தெரியுது. பரவலா போட்டியிடுங்க” என்று சொன்னது மிகச்சிறந்த அறிவுரை. நிரூப் என்றாலே பிரியங்காவின் நினைவு மட்டுமே கூட வந்து விடுகிறது. அந்த அளவிற்கு டாம் & ஜெர்ரியாகவே இவர்கள் அந்த வீட்டில் வாழ்கிறார்கள். இது நிரூப்பின் சிறந்த உத்தியாக இருக்கலாம். ஆனால் இதுவே அவருக்கு எதிராகவும் மாறக்கூடும். “ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு என்பதை நீங்களே சொல்லிடுங்க” என்று கமல் நிரூப்பிடம் சொல்ல, அதை அவர் நாடகத்தனத்துடன் சபையில் சொல்ல “இப்படியா நான் சொல்றது தெரியுது?!’ என்று கமல் கேட்டது சுவாரஸ்யமான காட்சி. இப்படியான சின்னச் சின்ன சுவாரஸ்யங்கள்தான் நிகழ்ச்சியின் தரத்தை மேம்படுத்துகின்றன.

பிக் பாஸ் 84
பிக் பாஸ் 84

‘ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு’ திரும்பிய கமல், சிபியை அழைத்து “கொஞ்சம் சிரிங்க பாஸூ” என்று அட்வைஸ் செய்ய அதையும் இறுக்கமான முகத்துடன் கேட்டுக் கொண்டு விடைபெற்றார் சிபி. இந்த வரிசையில் பிரியங்காவிற்கு கமல் சொன்னதுதான் இருப்பதிலேயே ஆகச்சிறந்த அறிவுரை எனலாம். “ஊடக அனுபவம் நிறைய இருக்கிற உங்களுக்கு இந்த நிகழ்ச்சியின் ஃபார்மட் எப்படி என்று தெரியாதா? நீங்களே இதன் உணர்ச்சிகளுக்குப் பலியாகலாமா?’ என்பது போல் கமல் சொன்ன நீளமான அட்வைஸ் சிறப்பு. “ஒருத்தர் கூடத்தான் நீங்க போட்டிப் போடறீங்க” என்று கமல் சொன்னதை புரியாதது போல் பிரியங்கா நடித்தது ஆச்சரியம். "அது யாரு?” என்று அவர் வெள்ளந்தியாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்க “அதைச் சொல்ல மாட்டேன்” என்று கமல் சொன்னது நன்று. அது நிரூப் என்று பிரியங்காவிற்கு உண்மையிலேயே புரியவில்லையா அல்லது அப்படி நடிக்கிறாரா?

பிக் பாஸ் 84
பிக் பாஸ் 84

டபுள் எலிமினேஷன் பற்றி தெரியாத மாதிரியே நடித்த கமல்!

ஏறத்தாழ சஞ்சீவிற்கு சொன்ன அதே அட்வைஸ்தான் வருணிற்கும். “மத்தவங்களைச் சமாதானப்படுத்தறது எல்லாம் ஓகே. ஆனா நீங்க எப்ப களத்துல இறங்கப் போறீங்க?” என்று கேட்டு வருணை வழியனுப்பினார். பிறகு அகம் டிவி வழியாக உள்ளே வந்த கமல், கிறிஸ்துமஸ் தாத்தாவின் மூலம் பரிசுகள் அனுப்ப அதன் மூலம் பிரியங்கா காப்பாற்றப்பட்ட செய்தியும் தெரிந்தது. தனது பிரத்யேக சிரிப்பின் மூலம் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி மக்களைக் கலவரமூட்டினார் பிரியங்கா. காப்பாற்றப்பட்டவர்களின் முதல் வரிசையில் பிரியங்கா இருப்பது குறித்து மகிழ்ச்சி.

ஆபிஸ் ரூம் அட்வைஸில் வருணிற்கும் அக்ஷராவிற்கும் கமல் செலவழித்த நேரம் வீண்தான். அவர்கள்தான் இந்த வாரம் வெளியேறப் போகிறார்களே?! என்றாலும் பிடிவாதமாக அறிவுரை சொன்ன கமலின் அர்ப்பணிப்பை பாராட்டத்தான் வேண்டும். ‘உலகநாயகன்’ என்று கமலின் நடிப்பை பாராட்டுவது என்றால் சும்மாவா?