Published:Updated:

பிக் பாஸ் - 87: `ரங்கன் வாத்தியார்' நிரூப்! எல்லை மீறிய பிரியங்கா - தாமரை மோதல்; விசாரணை நடக்குமா?

பிக் பாஸ் - 87

தாமரைக்கும் பிரியங்காவிற்கும் இரண்டாவது ரவுண்ட் சண்டை ஆரம்பித்தது. இப்போது அது உக்கிரமாக இருந்தது. பிரியங்கா தடுப்பாட்டம் ஆட, ஒரு கட்டத்தில் தாமரை தள்ளியது மிகப் பலமாக இருந்ததால், பிரியங்கா அதிர்ச்சியடைந்ததை வெளிப்படையாகவே காண முடிந்தது.

பிக் பாஸ் - 87: `ரங்கன் வாத்தியார்' நிரூப்! எல்லை மீறிய பிரியங்கா - தாமரை மோதல்; விசாரணை நடக்குமா?

தாமரைக்கும் பிரியங்காவிற்கும் இரண்டாவது ரவுண்ட் சண்டை ஆரம்பித்தது. இப்போது அது உக்கிரமாக இருந்தது. பிரியங்கா தடுப்பாட்டம் ஆட, ஒரு கட்டத்தில் தாமரை தள்ளியது மிகப் பலமாக இருந்ததால், பிரியங்கா அதிர்ச்சியடைந்ததை வெளிப்படையாகவே காண முடிந்தது.

Published:Updated:
பிக் பாஸ் - 87

ரசாபாசம் என்றொரு சொல் இருக்கிறது. நேற்று பிக் பாஸ் வீட்டில் நடந்தது அதுதான். “பேசிட்டே இருந்தா எப்படி... அடிச்சுக் காட்டு” என்று போட்டியாளர்களிடம் மோதலை ஏற்படுத்த பிக் பாஸ் முடிவு செய்தார். அது செவ்வனே சிறப்பாக நடந்தது. இறுதிப் போட்டியை நெருங்கும் ஆவேசத்தில் இப்படியெல்லாம் நிகழத்தான் செய்யும். ஆனால், போட்டியாளர்கள் ஒற்றுமையுடன், தங்களின் சமயோசிதத்தால் இதை அதிக சேதாரமின்றி கையாண்டிருக்கலாமா என்றால் ‘ஆம்’. ஆனால், பிரமோவில் போடுவதற்குப் பரபரப்பான ஃபுட்டேஜை அதில் தேற்றுவது கடினம். அப்படிப் பரபரப்பாக ஏதாவது இருந்தால்தான் நாமும் ஆவலாக பார்ப்போம்.

நேற்றைய எபிசோடில் நிகழ்ந்த ரசக்குறைவான சம்பவங்களையொட்டி ஒவ்வொருவரின் மீதும் தனித்தனியாக விமர்சனங்கள் வைக்க முடியும்; அதே சமயத்தில் ஒவ்வொருவரின் தரப்பில் உள்ள நியாயங்களையும் சொல்ல முடியும். இதையெல்லாம் ஒரு பக்கம் ஒதுக்கி வைத்து விடுவோம். இந்த அபத்த நாடகத்தின் பின்னுள்ள சூத்ரதாரி யார் என்பதைக் கவனியுங்கள். அது பிக் பாஸ்!
பிக் பாஸ் - 87
பிக் பாஸ் - 87

உங்களுக்கு இந்த விஷயம் ஒருவேளை சலித்தாலும் நான் தொடர்ந்து இதையேதான் சொல்வேன். பிக் பாஸின் போட்டியாளர்களைப் பற்றியே தொடர்ந்து வம்பு பேசிக் கொண்டிருக்காமல், இதில் நிகழும் பல விஷயங்களை நம்முடைய நடைமுறை வாழ்க்கையுடனும் ஒப்பிட்டுப் பார்ப்போம். ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் சில ஊழியர்கள், பணி தொடர்பாக தங்களுக்குள் முட்டலும் மோதலும் வன்மமும் கொண்டிருப்பார்கள். ஆண்டுக்கணக்கில் கூட இது தொடரும். சற்று தள்ளி நின்று யோசித்துப் பார்த்தால் இவர்கள் வாங்குவது சொற்ப சம்பளமாக இருக்கும். ஆனால் இவர்களின் மூலம் வரும் பெரும் லாபம் சேருவது என்னமோ முதலாளிக்குத்தான். இதைச் சற்று யோசித்தாலே தாங்கள் போடும் அற்பமான சண்டை எத்தனை அநாவசியமானது என்று புரிந்துவிடும்.

இப்படித்தான் பல தருணங்களில் எங்கோ, யாரோ கயிற்றை நுட்பமாக அசைக்க நாம் வெறும் பொம்மைகளாக ஆடிக் கொண்டிருக்கிறோம்.

எபிசோட் 87-ல் என்ன நடந்தது?

தாமரையிடம் சஞ்சீவ் கோபித்துக் கொண்டதையடுத்து “நின்னு பேசிட்டுப் போங்க” என்று அவரிடம் மல்லுக்கட்டினார் தாமரை. இதற்கான விளக்கத்தை பிறகு சஞ்சீவ் அளித்துக் கொண்டிருந்தார். “இந்த கேம்ல ஒருத்தர் ஜெயிக்கணும்னு உங்களுக்குத் தெரியாதா? மத்த விஷயங்கள்லாம் புரியது. இது புரியாதா?” என்றெல்லாம் அவர் கேட்க, “நான் ஏதாவது உளறியிருக்கலாம்” என்று இறங்கி வந்து ஒப்புக் கொண்ட தாமரை “அதுக்காக என் மாமியாரையெல்லாம் இங்க இழுக்க வேண்டிய அவசியமில்லை” என்று சம்பந்தம் இல்லாமல் பாய்ந்தார். எதிராளியிடம் பேசுவதற்கு பாயிண்ட் எதுவும் இல்லையென்றால், சம்பந்தமில்லாத எதையாவது அதில் கோத்து விடுவது தாமரையின் வழக்கமான ஸ்டைல்.

தாமரை வெள்ளந்தியா அல்லது விஷபாட்டிலா?

“தாமரை முன்னாடியே சொல்லியிருந்தா நிரூப்பையாவது வெளியே அனுப்பாம இருந்திருக்கலாம்” என்று சிபி ஆதங்கப்பட, “முன்னாடில்லாம் தாமரை விட்டுத் தர மாட்டாங்க. இப்ப என்ன புதுசா?” என்று பிரியங்கா பின்பாட்டு பாடினார். “டாஸ்க் அப்ப பேசாம இருந்துட்டு, முடிஞ்சப்புறம் சொல்றது ஒரு தந்திரம் மாதிரி தெரியுது. நாமதான் புரிஞ்சுக்கணும்” என்றார் சிபி. மறுபடியும் அதே கேள்விதான். தாமரை வெள்ளந்தியா அல்லது விஷபாட்டிலா?

பிக் பாஸ் - 87
பிக் பாஸ் - 87

“மக்களோட ஆதரவு யாருக்கு இருக்கோ அவங்களை எதிர்த்து பேசறதுக்கு இங்க நிறைய பேர் பயப்படறாங்க. ஆனா நான் பயப்படமாட்டேன்” என்று சஞ்சீவ் சொன்னது தாமரை குறித்ததாகத்தான் இருக்கும். ஆனால், இது தன்னைக் குறிக்கிறதோ என்று பிரியங்கா நினைத்தாரோ, என்னமோ “கம் அகெய்ன்” என்றார். சஞ்சீவ் சொல்வது ஒருவகையில் உண்மைதான். மக்களால் தொடர்ந்து காப்பாற்றப்படுபவரை பகைத்துக் கொள்ளக்கூடாது என்கிற ஜாக்கிரதையுணர்ச்சி அங்கு பலருக்கும் இருப்பது போல்தான் தெரிகிறது. “கரெக்ட்டான பாயிண்ட்” என்று சஞ்சீவிற்கு அழுத்தமாக ஆதரவு தந்தார் அமீர்.

“நிரூப்பிற்கு விட்டுத்தரணும்னுதான் பேசிட்டு இருந்தேன்” என்று தாமரை மறுபடியும் ஆரம்பிக்க, சிபி அவருக்கு நிதானமாக விளக்கம் சொல்ல ஆரம்பித்தார். “அதை டாஸ்க் முடிஞ்சப்புறம் சொல்றதுல என்ன அர்த்தம்? உங்க ஓட்டை நிரூப்பிற்குத்தானே போட்டீங்க... கடைசில நிரூப்பிற்கு 5, உங்களுக்கு 3-ன்னுதானே வந்தது? உங்க ஓட்டை மாத்தியிருந்தா மறுபடியும் சமன் ஆகியிருக்குமே? இப்படி மாத்தி மாத்தி பேசறதாலதான் உங்க மேல மத்தவங்களுக்கு கோபம் வருது” என்று சிபி சொன்னதை அரைமனதாக ஒப்புக் கொண்டார் தாமரை.

தாமரைக்கு உண்மையிலேயே புரியவில்லை என்றால் தனக்கு நம்பகமான ராஜூ போன்றவரிடம் தனிமையில் விசாரித்து விஷயங்களை அறிந்து கொண்டிருக்கலாம். ஆனால் ராஜூ வந்து விசாரித்த போதும் ‘சும்மா பேசிட்டிருக்கம்’ என்று சொல்லிவிட்டு டாஸ்க் முடியும் வரை மெளனமாகவும் இருந்துவிட்டு பிறகு ‘விட்டுத் தருவதாகத்தான் இருந்தேன்’ என்று சொல்வதில் யாருக்கும் உபயோகமில்லை.

பிக் பாஸ் - 87
பிக் பாஸ் - 87

ஒருவர் எளிய பின்னணியில் இருந்து வருகிறார் என்பதற்காக அவர் செய்யும் அனைத்திற்கும் முட்டுக் கொடுக்க வேண்டியதில்லை. “ஏழைப் பங்காளன்’ என்கிற பெருமித முகமூடியை அணிவதற்கே இது உதவும். எளிய சமூகத்தைச் சார்ந்தவர்கள் அனைவரும் நல்லவர்கள், கிராமத்து மனிதர்கள் அனைவரும் வெள்ளந்திகள் என்று நம்ப விரும்புவது பொதுப்புத்தி சார்ந்த பாசாங்கு மட்டுமல்ல, அப்படிச் சொல்வதின் மூலம் ஒருவர் தன்னை நல்லவனாக காட்டிக்கொள்ளும் அபத்தமான உத்தியும் கூட. இது பொதுவான கருத்து மட்டுமே!

பிக் பாஸ் வீட்டில் மாறும் கூட்டணிகள்

வருண், அக்ஷரா சென்றுவிட்ட பிறகு தாமரையின் கூட்டணியில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அவர் இப்போது ராஜூவிடமிருந்து கணிசமான அளவில் விலகி நிரூப்பிடம் இணைந்திருக்கிறார். “கயிறு பிடிக்கற டாஸ்க்ல அப்படி அடிச்சிக்கிட்டாங்க. இப்ப கூடிட்டாங்க” என்று இந்தக் கூட்டணியை ராஜூ கிண்டலடிக்க, மற்றவர்களும் வழிமொழிகிறார்கள். “பெட்ரூம்ல இருந்து நம்மளையே பார்க்கறாங்க” என்று தாமரையும் பதிலுக்கு நிரூப்பிடம் சிரித்துக் கொண்டார். “தாமரையை இன்னிக்கு நான் எதிர்த்துட்டேன்... இப்ப என்னை அவங்க மைண்ட்ல பிக்ஸ் பண்ணிப்பாங்க” என்றார் சஞ்சீவ். (மறுநாள் அப்படித்தான் நடந்தது).

“இந்த ஒரு வாரம் சந்தோஷமா இருந்தேன். இப்ப நீ என்னை டாஸ்க்குல தள்ளிட்ட” என்று தாமரை நிரூப்பிடம் ஆதங்கப்பட “நீ விளையாடுக்கா...” என்று நிரூப் ஊக்கமளித்துக் கொண்டிருந்தார். “அந்தம்மா இறுதிச்சுற்று ரித்திகா சிங்கு. இவரு பெரிய மாதவன்... டிரையினிங் தர்றாராராம்” என்கிற அளவில் இந்தக் கூட்டணியை உள்ளிருந்து கிண்டலடித்துக் கொண்டிருந்தார் ராஜூ.

பிக் பாஸ் - 87
பிக் பாஸ் - 87
விடிந்தது. ‘Ticket to Finale’ கோல்டன் பிளேட்டை வெறித்துப் பார்த்தபடி நிரூப் அமர்ந்திருந்த காட்சியைப் பார்க்க நமக்கே சற்று கலவரமாகத்தான் இருந்தது. அப்படியொரு வெறித்தனமான பார்வை. “இன்னிக்கு டாஸ்க்ல தாமரை என்னைத்தான் டார்கெட் பண்ணுவா” என்று ஆருடம் சொல்லிக் கொண்டிருந்தார் பிரியங்கா. அப்படியேதான் ஆயிற்று.

“தாமரைக்கு கேம்லாம் புரியாம இல்ல. நல்லாப் புரியுது. இருந்தாலும் தெரியாத மாதிரியே காட்டிக்கறாங்க. நம்மளுக்குக் கூடத்தான் புரியல. இரண்டு மூணு தடவை கேட்டுத் தெரிஞ்சுக்கறோம். அவங்க எந்த நேரத்துல எது பண்ணுவாங்கன்னு தெரிய மாட்டேங்குது. ஓப்பன் நாமினேஷன் இல்லாம ரகசியமா உள்ளே நடந்திருந்தா அவங்க வேற மாதிரிதான் வாக்களிச்சிருப்பாங்க” என்று தாமரையைப் பற்றி ஆய்வு செய்து கொண்டிருந்தார் அமீர். இதற்கு உடன்படும் பார்வையுடன் பார்த்துக் கொண்டிருந்தார் ராஜூ. கமல் முன்பு குறிப்பிட்ட மாதிரி பிக் பாஸ் வீட்டின் ‘பேசு பொருளாக’ தாமரை தொடர்ந்து நீடிக்கிறார். துவக்க நாளில் இவரைப் பார்த்தபோது இப்படியொரு பரிணாமம் நிகழும் என்பது யாருக்கும் தோன்றியிருக்காது.

ரணகளமாக நிகழ்ந்த முட்டை டாஸ்க்!

இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டின் முதல் டாஸ்க்கை பிக் பாஸ் அறிவித்தார். ஒவ்வொருவருக்கும் தலா பத்து முட்டைகள் தரப்படும். அவற்றை அவர்கள் பத்திரமாக பார்த்துக் கொள்ளும் அதே சமயத்தில், எதிராளியின் முட்டைகளைக் கைப்பற்றுவதுதான் டாஸ்க். உடைப்பது போன்ற விஷயங்களிலும் ஈடுபடலாம். இறுதியில் யார் கையில் முட்டைகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறதோ, அவர் போட்டியிலிருந்து வெளியேறுவார். நிரூப் இந்தப் போட்டியில் கலந்து கொள்ள முடியாது என்பதால் அவருக்கு வேண்டிய போட்டியாளரை அவர் உற்சாகப்படுத்தலாம். (ஆனால், நிரூப் கலந்து கொண்டிருந்தால் இந்தப் போட்டி இன்னமும் ரணகள சுவாரஸ்யமாகியிருக்கும்).

போட்டி ஆரம்பித்தது. “கோயிந்தா... டீ சூடா இருக்குல்ல கோயிந்தா…’ என்றபடி அனைவரும் இறங்கி ஆடாமல் சும்மாவே அமர்ந்திருந்தார்கள். முதல் கல்லை யாராவது துணிந்து எறிந்தால்தான் கலவரம் பிறக்கும். ஆனால் அதை எறியப் போவது யார் என்கிற தயக்கத்துடன் அமர்ந்திருந்தார்கள். ராஜூ மட்டும் களத்தில் இறங்கி சற்று நேரம் கதகளி ஆடிவிட்டு திரும்பினார். மறுபடியும் அமைதியே நிலவியது. இத்தனை நேரம் செலவழித்ததற்கு அவர்கள் கூடையின் மேல் அமர்ந்திருந்தால் முட்டையிலிருந்து குஞ்சு கூட பொறித்திருக்கலாம்.

பிக் பாஸ் - 87
பிக் பாஸ் - 87

“ஒருத்தரோட ஒருத்தர் மூஞ்சையே பார்த்திட்டு இருந்தா என்ன அர்த்தம்? யாராவது பேசுங்கப்பா” என்று தமிழ் சினிமாவின் பஞ்சாயத்துக் காட்சிகளில் தவறாமல் வரும் வசனத்தை நிரூப் பேசினார். “பேசணும். இல்லைன்னா அடிதடிதான்” என்றார் சஞ்சீவ். ‘சிவாஜி’ படத்தின் ரஜினிகாந்த் மாதிரி, 'பூ பாதையா, சிங்கப் பாதையா’ என்று வெகுநேரத்திற்கு நாணயத்தை சுண்டிக் கொண்டே இருந்தார்கள்.

ராஜூ – பாவனி: கட்டிப்பிடி வைத்திய சண்டை

நிரூப்பின் ஆலோசனைகள் பிரியங்காவை எரிச்சல் ஊட்ட “உங்கிட்டலாம் எனக்கு பேசவே பிடிக்கலை. கிளம்பு… காத்து வரட்டும்” என்று சொல்லிவிட்டு அவர் கொண்டு வந்த சோற்றை மட்டும் ஆசையாக சாப்பிட்டுக் கொண்டிருந்தது நல்ல நகைச்சுவை. “சும்மா பேசிட்டே இருந்தா எப்படி.. அடிச்சுக் காட்டுங்க” என்று பொறுமையை இழந்த தாமரை சொல்ல, “அப்படியா... ஆரம்பிச்சுடலாமா?” என்று மற்றவர்களும் சுறுசுறுப்பானார்கள்.

பாவனியின் முட்டையை நோக்கி நகர்ந்தார் ராஜூ. இவரும் சிபியும் டீல் பேசிக் கொண்டார்கள் போலிருக்கிறது. “நீ போயிட்டு வா... நான் பார்த்துக்கறேன்” என்று ஊக்கமளித்தார் சிபி. பாவனி தன் முட்டைகளை உடலை கவிழ்த்துக் கொண்டு மூடிக் கொள்ள, கிடைத்த கேப்பில் ஊசி குத்தி “முட்டையை உடைச்சுட்டேன்” என்றார் ராஜூ. பதிலுக்கு பாவனியும் எதிர்தாக்குதலுக்குச் செல்ல, அவரின் கைகளை வலுவாகப் பற்றிக் கொண்டார் ராஜூ. “எனக்கு கை வலிக்குது” என்று பாவனி சிணுங்க “பின்ன எப்படி விளையாடறது?” என்று ராஜூ பதிலுக்கு மல்லுக் கட்டினார். இவர்களின் போராட்டம் வெகு நேரத்திற்கு நீண்டது.

பாவனி – ராஜூ விவகாரத்தைச் சற்று விளக்கமாக பார்த்து விடுவோம். “நீங்க டாஸ்க்ல சரியா விளையாடலை” என்கிற காரணத்தைச் சொல்லித்தான் பாவனி, ராஜூவை நாமினேட் செய்தார். பாவனி என்றல்ல, ராஜூவின் மீதுள்ள பொதுவான புகாரும் இதுவே. எனவே இந்த டாஸ்க்கில் இறங்கி விளையாட ராஜூ முடிவு செய்தது நல்ல விஷயம்தான். தவறே கிடையாது. அதிலும் இந்தக் காரணத்தைச் சொன்ன பாவனியை அவர் டார்கெட் செய்ததும் ஒருவகையில் சரியே!
பிக் பாஸ் - 87
பிக் பாஸ் - 87

ராஜூவின் கண்ணியமான விளையாட்டு

இதைப் போலவே பாவனியை தடுக்கும் போதும் மிக மிக பொறுமையுடன் கண்ணியமான எல்லையை ராஜூ பின்பற்றியது சிறப்பான விஷயம். தன்னால் பாவனிக்கு பாதிப்பு ஏதும் வந்து விடக்கூடாது, இது பின்னால் பெரிய பிரச்சினையாகி விடக்கூடாது என்கிற கவனமும் கட்டுப்பாடும் ராஜூவிடம் கணிசமாக இருந்தது. “இப்படியெல்லாம் விளையாடணுமா?” என்கிற தத்தளிப்பும் குழப்பமும் கூட அவரின் உடல்மொழியில் இருந்தது.

ஆனால் – இரண்டு ஆண்கள் கூட்டணி அமைத்து ஒரு பெண்ணை டார்கெட் செய்வது சரியா? இது ஒரு சிக்கலான கேள்வி. பிக் பாஸ் வீட்டில் ஆண் – பெண் என்கிற பாகுபாடெல்லாம் போட்டியில் கிடையாது. அப்படிப் பார்க்கப்படவும் கூடாது. அமீருடன் தில்லாக மல்லுக்கட்டிய அக்ஷராவை கமல் உட்பட பலரும் பாராட்டவே செய்தார்கள்.

ஆனால் தார்மீக ரீதியாக இது சரியா? தாமரையிடம் கொடியைப் பிடுங்கும் போது பலவந்தமான முறையை அண்ணாச்சி பின்பற்றிய காட்சி பலருக்கும் முகச்சுளிப்பை ஏற்படுத்தியது. உடல் வலிமை சார்ந்த ஒரு போட்டி என்பது சமபலத்தோடு உள்ளவர்களிடம் நிகழ்வதுதான் சரியானது. மட்டுமல்லாமல் ஆணோடு போட்டியிடும் போது பெண்ணுக்கு சில பிரத்யேகமான சங்கடங்களும் உண்டு.

சிபியும் ராஜூவும் ஏன் இதர ஆண்களிடம் சென்று மோதவில்லை என்பதும் ஒரு முக்கியமான கேள்வி. “சரிப்பா... போட்டி–ன்னு வந்துட்டா இதையெல்லாம் பார்க்க முடியுமா?” என்று ஒரேயொரு கறாரான கேள்வியை மட்டும் முன்வைத்தால் ராஜூ செய்ததில் எந்தப் பிழையும் இல்லை. ஒரு பெண்ணிடம் மோதுகிறோம் என்கிற கவனத்தை அவர் கைவிடாமல் இருந்ததற்காக நிச்சயம் அவர் பாராட்டப்பட வேண்டியவர். அதே சமயத்தில் இரண்டு ஆண்களிடம் மல்லுக்கட்டிய பாவனியின் துணிச்சலும் பாராட்டப்பட வேண்டியது.

பிக் பாஸ் - 87
பிக் பாஸ் - 87

பாவனியின் அநாவசிய அழுகை

ஆனால், எதற்கு பாவனி போட்டியிலிருந்து வெளியேறி பின்பு அழுதார் என்பது புரியாத விஷயம். உடல் வலிமை சார்ந்த விளையாட்டுக்களில் இது நிகழும் என்பது அவருக்குத் தெரியாதா? இதை ஸ்போர்டிவ்வாக எடுத்துக் கொள்ள வேண்டியதுதானே? இரண்டு ஆண்கள் சேர்ந்து, ‘தன்னை மட்டும் டார்கெட் செய்தார்களே’ என்கிற கழிவிரக்கம்தான் அவரை அழச் செய்திருக்க வேண்டும். இது அநாவசியமான அழுகை. ராஜூவை சமாளிக்க முடியாமல் அடுத்ததாக சிபியிடம் பாவனி சென்றபோது “உன் முட்டையை நான் உடைக்கவேயில்ல... என் பக்கம் வராத” என்று தடுப்பாட்டம் ஆடினார் சிபி. ராஜூவுடன் கூட்டணி வைத்ததும் கூட பாவனியுடனான மறைமுகப் போராட்டம்தானே?

இந்தப் போராட்டத்தில் பாவனியின் சில முட்டைகளை ராஜூ உடைக்க, வந்த வெறுப்பில் மீதமிருந்த முட்டைகளை பிரியங்காவிடம் தூக்கிப் போட்டு விட்டு போட்டியலிருந்து விலகினார் பாவனி. இவரின் இந்தச் செயலை பிரியங்காவும் நிரூப்பும் தனித்தனியாக கண்டித்தது நல்ல விஷயம்.

பிக் பாஸ் - 87
பிக் பாஸ் - 87

பிரியங்கா, தாமரை – உக்கிரமான மோதல்!

ராஜூவிற்கும் பாவனிக்கும் இடையில் போராட்டம் நடந்து கொண்டிருந்த போது அமீர் தாமரையின் பக்கம் செல்ல, அவரின் கூடையிலிருந்து சில முட்டைகளை பிரியங்கா எடுத்துக் கொண்டு சஞ்சீவிற்கும் அளித்தார். ஆனால், பிறகு இவற்றைத் திரும்ப வைத்துவிட்டார்கள். ஆனால் இதையொட்டி சஞ்சீவிற்கும் தாமரைக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. “நான்தான் திருப்பி வெச்சிட்டனே” என்று தாமரையிடம் மல்லுக்கட்டினார் சஞ்சீவ். “தாமரை என்னை மைண்ட்ல பிக்ஸ் பண்ணியிருப்பாங்க” என்று நேற்று இரவு சஞ்சீவ் யூகித்தது சரியாக இப்போது நடந்தது.

அமீரின் டார்கெட் தாமரை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. ஆனால், இதற்கு எதிர்ப்பே தெரிவிக்காமல் சில முட்டைகளை உடைக்க தாமரை அவரை அனுமதித்தது ஆச்சரியம். தாமரைக்கு பிரியங்காதான் மெயின் டார்கெட் என்பதும் வெளிப்படையாகத் தெரிந்தது. இருவருக்கும் வாக்குவாதம் ஆரம்பிக்க “தொட்டுத்தான் பாரேன்” என்று பிரியங்கா உசுப்பேற்ற, தாமரையும் பதிலுக்கு காண்டாகி பிரியங்காவை நோக்கி பாய்ந்தார். இருவருக்குள்ளும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பிரியங்காவின் முட்டைகளை தாமரை உடைக்க, “அமீர்... அமீர்” என்று பதறினார் பிரியங்கா. “அவனை ஏன் கூப்பிடறே” என்று தாமரை கத்த ‘ச்சீ... வெளியே போ... த்தூ... போ...” என்று இருவருக்குள்ளும் ஏக வசனங்களும் வசைகளும் பரஸ்பரம் பரிமாறக் கொள்ளப்பட்டன. பதிலுக்கு தாமரையின் முட்டைகளை ஆவேசத்துடன் உடைத்தார் பிரியங்கா.

“மொதல்ல ஆரம்பிச்சது யாரு?” என்று ஹைடெஸிபலில் பிரியங்கா கத்த, “உன் கத்தலுக்கும் என் கத்தலுக்கும் சோடி போட்டுக்குவமா. சோடி" என்று தாமரையும் குரலை உயர்த்தினார். மூச்சு வாங்கினாலும் இருவரும் வாக்குவாதத்தை நிறுத்தவில்லை. தன்னுடைய முட்டைகள் கணிசமாகக் குறைந்து விட்டதால் சிபியிடமிருந்து ஒரு முட்டையை பிரியங்கா வாங்க, பாவனியும் தன்னிடமிருந்ததை தூக்கி தந்து விட்டு கிளம்பினார். உள்ளே வந்து அழுது கொண்டிருந்த பாவனியை சமாதானப்படுத்திய நிரூப் “இப்படித்தான் இருக்கும். போயி விளையாடு. பிரியங்கா மாதிரி முட்டையை கடன் வாங்கிக்கோ” என்று ஆலோசனை சொல்லி ஆட்டத்திற்கு மறுபடியும் அனுப்பியது நல்ல விஷயம்.

பிக் பாஸ் - 87
பிக் பாஸ் - 87

“யார் சப்போர்ட்டும் எனக்கு வேணாம்!”

“ரெண்டு பேர் அட்டாக் பண்ணா எப்படி ஆடறது?” என்று பாவனி கேட்பதில் நியாயம் உள்ளதுதான். ஆனால் ஆட்டத்தில் கூட்டணி உருவாவதும், உடைவதும், மாறுவதும் இயல்பான விஷயம்தான். இந்தச் சமயத்தில் அமீர், பாவனிக்கு ஆதரவாக வந்து நிற்க, “எனக்கு யார் சப்போர்ட்டும் வேணாம்” என்று பாவனி அவரை உதறித் தள்ளியது நல்ல விஷயம். ஆனால், அடிபட்ட முகத்துடன் பாவனியையே பார்த்துக் கொண்டிருந்தார் அமீர்.

“தனித்தனியா விளையாடுங்களேன்” என்று இந்தச் சமயத்தில் நிரூப் தந்ததும் நல்ல ஆலோசனைதான். கூட்டணி ஏற்படுவதால்தான் பாரபட்சங்களும் கள்ள மெளனங்களும் நிகழ்கின்றன. மாறாக, அனைவரும் அனைவரது முட்டையையும் உடைக்க முற்பட்டால் ஆட்டம் நியாயமாக நடைபெறுவதற்கு வாய்ப்புண்டு. ஆனால், சேதாரம் அதிகமாக இருக்கும். நிரூப்பின் ஆலோசனையை கடுமையைாக மறுத்த அமீர் “நேத்து தனித்தனி ஆட்டமாவா நடந்தது... அப்படியா நீ வெளியே போனே?” என்று பலமாகக் கோபித்துக் கொண்டார்.

பிரியங்காவிற்கும் தாமரைக்கும் சண்டை தொடர்ந்து கொண்டே இருந்தது. “அவங்க சொல்லித்தான் உடைச்சேன்... போதுமா?” என்று தாமரையிடம் வெறுப்பில் சொன்னார் அமீர். “இதுக்குத்தான் மொதல்லயே பேசலாம்னு சொன்னேன்...” என்றார் சஞ்சீவ். அடித்துப் பிடித்து விளையாடுவதில் எனக்கு நம்பிக்கையில்லை என்று சஞ்சீவ் சொல்வது நல்ல விஷயம்தான். ஆனால் பிக் பாஸ் விளையாட்டுக்களில் இப்படி நிகழும் என்று அவருக்குத் தெரியாதா? அவர் தன்னை ஜென்டில்மேனாக காட்டிக் கொள்ளும் உத்தி எப்போதுமே பலிக்குமா? அப்படி தன்னை காட்டிக் கொள்ள முயன்ற ராஜூவே இப்போது களத்தில் இறங்க வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது.
பிக் பாஸ் - 87
பிக் பாஸ் - 87

எல்லை மீறிய மோதல்!

“இவளுக்காக நின்னு நான் எவ்வளவோ அசிங்கப்பட்டிருக்கேன்” என்று தாமரை குறித்து ஆத்திரத்தில் பிரியங்கா புலம்பினார். “எனக்கு இவ்வளவு தூரம் வந்ததே போதும்” என்று தாமரை உண்மையாகவே கருதுவார் என்றால் பல சமயங்களில் தனக்கு ஆதரவாக நின்ற பிரியங்காவிற்காக நல்லெண்ண அடிப்படையில் இப்போது விட்டுத் தந்திருக்கலாம். எதற்காக இத்தனை மூர்க்கம்? தாமரையின் முட்டையும் காலியாகி விட்டதால் அவரும் கோபித்துக் கொண்டு உள்ளே செல்ல, ரங்கன் வாத்தியார் கேரக்டர் செய்த நிரூப், அவரையும் களத்திற்கு மறுபடியும் அழைத்து வந்தார். பகடையாட்டம் டாஸ்க்கில் நடந்த விஷயத்தை அமீர் ஆரம்பிக்க, நிரூப்பிற்கும் இவருக்கும் மறபடியும் வாக்குவாதம் ஏற்பட்டது. ‘தாமரை புரியாமல் விளையாடவில்லை’ என்பதை நிரூபிப்பதுதான் அமீரின் நோக்கம். “நான் ஒண்ணுமே அப்ப பண்ணலை” என்று அமீரின் கருத்தை மறுத்தார் தாமரை.

தாமரைக்கும் பிரியங்காவிற்கும் இரண்டாவது ரவுண்ட் சண்டை ஆரம்பித்தது. இப்போது அது உக்கிரமாக இருந்தது. பிரியங்கா தடுப்பாட்டம் ஆட, ஒரு கட்டத்தில் தாமரை தள்ளியது மிகப் பலமாக இருந்ததால், பிரியங்கா அதிர்ச்சியடைந்ததை வெளிப்படையாகவே காண முடிந்தது. “பிக் பாஸ்... என்னை அடிச்சிட்டாங்க” என்று உரத்த குரலில் புகார் சொன்னார் பிரியங்கா. பக்கத்திலிருந்த அமீரும் சஞ்சீவும் வந்து தடுத்திருக்கலாம். ‘எதற்கு வம்பு?' என்கிற மாதிரி சங்கடத்துடன் அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இவர்களின் சண்டையை பாவனி வந்து முதலில் தடுக்க, பின்னர் மற்றவர்களும் வந்து தடுத்துவிட்டார்கள்.

முட்டையை வைத்து ஆம்லேட் போடலாம், சண்டை போடலாமா?

ஒரு கட்டத்தில் திடீரென்று சஞ்சீவின் முட்டைகளை பாவனி ஆவேசமாக உடைக்க “நான் பாட்டுக்கு சிவனேன்னுதானே இருந்தேன்” என்று சஞ்சீவ் அதிர்ச்சியைடைந்து பதிலுக்குப் பதிலாக பாவனியின் முட்டைகளை உடைத்தார். ராஜூவும் இதில் இணைந்து கொண்டார். ராஜூ – பாவனியின் கட்டிப்பிடி வைத்திய சண்டை மறுபடியும் தொடர்ந்தது. பாவனியை நகர விடாமல் என்னென்னமோ செய்து பார்த்தார் ராஜூ. “ரொம்ப நேரம் என்னால் உன்னை இப்படிப் பிடிச்சிட்டிருக்க முடியாது” என்று ராஜூ சொன்னது நல்ல விஷயம்.

பிக் பாஸ் - 87
பிக் பாஸ் - 87
இந்த ரணகளமான சண்டையை இவ்வளவு நேரம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த பிக் பாஸ், பஸ்ஸரை அடித்து டாஸ்க்கை நிறுத்தினார். இறுதியில் ராஜூ, சிபியின் கூடைகளில் தலா பத்து முட்டைகள் சேதாரம் ஆகாமல் இருந்தன. அமீர், சஞ்சீவ் கூடைகளில் தலா 9 முட்டைகளும், பிரியங்கா கூடையில் 7 முட்டைகளும் இருந்தன. தாமரை மற்றும் பாவனி கூடைகளில் எந்த முட்டையும் இல்லாததால் அவர்கள் இருவரும் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட, மற்றவர்கள் அடுத்தக் கட்டத்திற்கு முன்னேறியதாக பிக் பாஸ் அறிவித்தார்.

சுயபச்சாதாபத்தில் கலங்கியழுத பிரியங்காவை பாவனி வந்து அணைத்துக் கொண்டார். தாமரையை அமீர் அணைத்து ஆறுதல் சொன்னது சிறப்பு. பிறகு பிரியங்காவை அணைத்து ராஜூவும் ஆறுதல் சொன்னார். ஏற்கெனவே சொன்னது போல நிரூப் இந்த ஆட்டத்தில் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்குமோ என்பதை யூகிக்கவே திகிலாக இருக்கிறது.

ஒரு பழத்தை வைத்து சிவனின் குடும்பத்தில் நாரதர் கலகத்தை ஏற்படுத்தியதைப் போல முட்டையை வைத்து குடும்பத்தில் கலவரத்தை ஏற்படுத்தி விட்டார் பிக் பாஸ். ‘கோழியில் இருந்து முட்டை வந்ததா, முட்டையில் இருந்து கோழி வந்ததா’ என்கிற பல நூற்றாண்டு தத்துவச் சிக்கலைப் போல இந்தச் சண்டையில் யார் சரி, யார் தவறு என்பது நூல்கண்டு சிக்கலைப் போலவே இருக்கிறது.

பிக் பாஸ் - 87
பிக் பாஸ் - 87
பிக் பாஸ் நாளைக்கு என்ன அயிட்டத்தை கையில் எடுப்பார் என்பதை நினைக்கும்போது, இப்போதே பீதியாகத்தான் இருக்கிறது.