Published:Updated:

பிக் பாஸ் - 90: சீசன் 5-ன் முதல் பைனலிஸ்ட்டான அமீர்; பிரியங்கா - தாமரை ஓட்டிய சென்டிமென்ட் நாடகம்!

பிக் பாஸ் - 90

கால் வலியிலும் 1 மணி நேரம் 44 நிமிடங்கள் நின்று இந்த வெற்றியை அடைந்திருந்தார் அமீர். பிக் பாஸ் வாழ்த்து தெரிவிக்க “இது உனக்காகத்தான்” என்று தன்னுடைய பாசமிகு மாணவியான அலைனாவிற்கு சமர்ப்பணம் செய்தார் அமீர்.

பிக் பாஸ் - 90: சீசன் 5-ன் முதல் பைனலிஸ்ட்டான அமீர்; பிரியங்கா - தாமரை ஓட்டிய சென்டிமென்ட் நாடகம்!

கால் வலியிலும் 1 மணி நேரம் 44 நிமிடங்கள் நின்று இந்த வெற்றியை அடைந்திருந்தார் அமீர். பிக் பாஸ் வாழ்த்து தெரிவிக்க “இது உனக்காகத்தான்” என்று தன்னுடைய பாசமிகு மாணவியான அலைனாவிற்கு சமர்ப்பணம் செய்தார் அமீர்.

Published:Updated:
பிக் பாஸ் - 90
நிரூப் வெளிப்படையாக விரும்பியதைப் போலவே அமீர் முதல் Finalist ஆக தேர்வாகி விட்டார். முதலில் இருந்தே விளையாடுபவர்கள் பின்தங்கியிருக்க, வைல்ட் கார்டில் வந்த ஒருவர், இந்த அந்தஸ்தைப் பெற்றிருப்பது ஆச்சர்யம். நிரூப்பைப் போலவே அந்த வீட்டில் வேறு சிலரும் ‘சிபி வெல்லக்கூடாது’ என்று நினைப்பதைப் போலத்தான் தெரிகிறது. டாஸ்க் தவிர இதர நேரங்களில் அவர் சும்மா இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

‘ஆட்டத்தில் ஃபோகஸ் இல்லை’ என்று தொடர்ச்சியாக புகார் சொல்லப்பட்ட அமீர், "இன்று நன்றாக ஃபோகஸ் செய்து ஆடுகிறார்" என்று ராஜூவால் பாராட்டப்படும் அளவிற்குச் சென்றது நல்ல முன்னேற்றம். முந்தைய சீசனில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்த விஜயலஷ்மி, டாப் 3 வரை முன்னேறினார். அமீர் இதையும் தாண்டிச் செல்வாரா? காலில் அடிபட்டிருந்த நிலையிலும் அவர் சிபியை வென்றது, ஓர் அசாதாரண சாதனைதான். (பாவனி ஆதரவு தந்தது, அமீரின் உத்வேகத்திற்கான ஒரு காரணமாக இருந்திருக்குமோ?!).

‘பிக் பாஸில் இருந்து கற்ற பாடம்’ என்கிற டாஸ்க்கில் ராஜூ சொன்ன விளக்கம் அருமை. சுவாமிஜி பிரியங்கானந்தா சொன்ன செய்தியானது, நூல்கண்டு தத்துவச் சிக்கல் போல் இருந்தது. “எது உன்னிடம் இருந்ததோ... அது உன்னிடமேதான் இருக்கும்.”

பிக் பாஸ் - 90
பிக் பாஸ் - 90

எபிசோட் 90-ல் என்ன நடந்தது?

‘வாடா... வாடா... பையா’ என்கிற அருமையான பாடலோடு பொழுது விடிந்தது. ஒரு நடன மாஸ்டரால் இப்படிப்பட்ட குத்துப் பாடலுக்கு ஆட முடியாமல் இருப்பது சோகமான விஷயம். பாவம் அமீர். எப்படியோ சமாளித்து அசைந்து கொண்டிருந்தார்.

பிரியங்காவும் பாவனியும் ஆரஞ்சுப்பழத்தோடு வம்பையும் சேர்த்து காலையிலேயே மென்று கொண்டிருந்தார்கள். “இந்த சீசன்ல பேச்சுதான் முக்கியமா இருக்கு” என்றார் பிரியங்கா. (கரெக்ட்டுதான் மேடம்! அப்படி இல்லைன்னா... நீங்க இவ்வளவு நாள் இருந்திருக்க முடியுமா?!). பிரியங்காவின் ஆதரவு அமீருக்குத்தான் போல. ‘டாஸ்க் தவிர சிபி வேறு எதையும் செய்வதில்லை’ என்பது அவரின் புகார். பாவனியின் ஆதரவு அமீருக்குத்தான் என்பது ஊருக்கே தெரியும்.

பிரியங்கா – தாமரை – தொடரும் சென்டி காட்சிகள்!

“இன்னமும் கொஞ்ச நாள்தான் இருக்கப் போகிறோம்ல” என்கிற பாசத்துடன் வீட்டில் உள்ள அனைவரையும் கட்டிக் கொண்டார் பிரியங்கா. இந்தப் பாசம் உண்மையா அல்லது எலிமினேஷன் பயமா என்று தெரியவில்லை. ஆனால் தாமரையையும் நிரூப்பையும் மட்டும் கட்டிக் கொள்ளாமல் முரண்டு செய்தார். அமீரின் லாஜிக் படி ‘அப்ப அந்த ரெண்டு பேர் மட்டும்தான் ஸ்பெஷல்… இல்லையா?’

தாமரைக்கும் பிரியங்காவிற்கும் இடையில் நடக்கும் ‘விக்ரமன்’ படத்தின் பாசக் காட்சிகள் இன்றும் தொடர்ந்தன. தாமரை ஏதாவது ஒரு தின்பண்டத்தைக் கொண்டு வந்து பிரியங்காவின் அருகில் வைத்து விட்டு அமைதியாகச் செல்வதும், “நான் சாப்பிட மாட்டேன்... சூடு, சொரணை இருக்கறவன் இதைச் சாப்பிடுவானா? நான் கொடுத்த சாக்லேட்டை அவ சாப்பிடலை... நானும் சாப்பிட மாட்டேன்...” என்று பாவனையாக அனத்தி விட்டு, அடுத்த நொடியே அந்தத் தின்பண்டத்தை வாயில் போட்டு பிரியங்கா லபக்குவதும் தொடர்காட்சிகளாக விரிகின்றன. ஆனால் ஒருவகையில் இந்தச் செல்லச் சண்டையும் பார்க்க க்யூட் ஆகத்தான் இருக்கிறது.

பிக் பாஸ் - 90
பிக் பாஸ் - 90

“சர்க்கரை போட்டா எனக்குப் பிடிக்காது" என்று உரத்த குரலில் பிரியங்கா செய்தி சொல்ல, அமைதியாக வந்த தாமரை அதை மாற்றி வைத்து விட்டுச் செல்ல... அடடா! என்னவொரு அருமையான காட்சி! தாமரை இப்படிப் பெட்டிப் பாம்பாக அடங்கி நடப்பதையும் பார்க்க நன்றாகத்தான் இருக்கிறது. "நேத்து பூண்டு குழம்பு வேற லெவல்” என்று பிரியங்கா பாராட்ட “அதை வெச்சது நிரூப்” என்று அருகிலிருந்த ராஜூ காலை வாரினார்.

Ticket to finale – இறுதி டாஸ்க் – வென்றார் அமீர்!

“அந்த கோல்டன் டிக்கெட் என் கண்ணை உறுத்திக்கிட்டே இருக்கு” என்று நிரூப் தன் ஆசையை வெளிப்படையாகச் சொல்ல “எனக்குல்லாம் அது மேல ஆசையே கிடையாது” என்ற தாமரை “இதெல்லாம் என்ன ஜூஜூபி… இதை விடவும் பெரிய வாய்ப்பெல்லாம் உனக்கு கிடைக்கும் தம்பி... கவலைப்படாத” என்று நிரூப்பை உசுப்பி விட, கமல் இந்தக் காட்சியைப் பார்க்கும் சமயத்தில் "அடடே! விபூதி அடிக்கறதுல என்னையே மிஞ்சிடுவாங்க போல இருக்கே?!” என்று தாமரையை வியக்கலாம். “அதெல்லாம் சரிக்கா... இப்ப கிடைச்ச வாய்ப்பை சிறப்பா பயன்படுத்தணும் இல்லையா?” என்று சரியான கோணத்தில் சிந்தித்தார் நிரூப். தாமரைக்கு இன்னமும் இரண்டு வாரம் அந்த வீட்டில் தங்கினால் மட்டும் போதும் போலிருக்கிறது.

Ticket to finale-வின் கடைசி டாஸ்க்கை அறிவித்தார் பிக் பாஸ். ஒரு காலை மட்டுமே வைக்கக்கூடிய மரப்பலகையில் நின்று, எதிரேயிருக்கும் பிரேமில் தொங்கும் மணல் மூட்டையை இழுத்தபடி நிற்க வேண்டும். காலை மாற்றி வைக்கக்கூடாது. யார் அதிக நேரம் நிற்கிறாரோ அவரே வெற்றியாளர்.
பிக் பாஸ் - 90
பிக் பாஸ் - 90

அமீர் ஏனோ அடிபட்டிருந்த இடது காலையே வைப்பதற்குத் தேர்ந்தெடுத்தார். அதுதான் அவருக்கு வாகாக இருந்ததோ, என்னவோ! சிபி தனது வலது காலைத் தேர்ந்தெடுத்து வைத்தார். சென்னையையே கதிகலங்க வைத்த மழை பெய்த நாள் அது. (மறக்க முடியுமா?!) பலத்த மழை பெய்தாலும் இருவரும் உறுதியாக நின்று கொண்டிருந்தார்கள். கால் வலித்தாலும் எப்படியோ சமாளித்தார் அமீர். ‘என்னம்மா கண்ணு... செளக்கியமா” பாடலை ராஜூவும் சஞ்சீவும் பாட, பிரியங்காவோ ‘சூப்பர் சிங்கர்’ ஆங்கர் மோடிற்கு மாறி “இந்தப் போட்டியில் வெல்லப் போவது யார்?” என்று கத்திக் கொண்டிருந்தார்... மன்னிக்கவும். ஹைடெஸிபலில் பேசிக் கொண்டிருந்தார்.

சிபிக்கு கை வலி எடுக்க ஆரம்பித்து விட்டது. எனவே கைகளை மாற்றிப் பிடித்து அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்தார். பிறகு கால்வலியும் ஆரம்பிக்க, ஒரு கட்டத்தில் அமீரைப் பார்த்து "நான் விடப் போகிறேன்” என்பதை கவுன்ட்டவுனுடன் அறிவித்து விட்டு கயிற்றை விட்டு விட ‘அமீர் வெற்றி’. கால் வலியில் அவதிப்பட்ட இருவருக்கும் மற்றவர்கள் உதவி செய்த காட்சி சிறப்பு. சஞ்சீவும் ராஜூவும் அவர்கள் கால்களில் சூடு பறக்க தேய்த்துவிட்ட காட்சி அருமையாக இருந்தது. வென்ற அமீருக்கு சிபி வாழ்த்து சொன்னதும் நன்று.

பிக் பாஸ் - 90
பிக் பாஸ் - 90
கால் வலியிலும் 1 மணி நேரம் 44 நிமிடங்கள் நின்று இந்த வெற்றியை அடைந்திருந்தார் அமீர். பிக் பாஸ் வாழ்த்து தெரிவிக்க “இது உனக்காகத்தான்” என்று தன்னுடைய பாசமிகு மாணவியான அலைனாவிற்கு சமர்ப்பணம் செய்தார் அமீர். “வருங்கால பிரபுதேவா–ன்னு இப்பவாவது சொல்லக்கூடாதா?” என்று பிக் பாஸை அவர் வேண்டியதும் சிறப்பான காட்சி.

மண்ணெண்ண... வேப்பெண்ண... விளக்கெண்ண... யார் ஜெயிச்சா, நமக்கென்ன?

இந்தப் போட்டி நடந்து கொண்டிருக்கும்போது உள்ளே இருந்த தாமரை, “யார் ஜெயிச்சா... நமக்கென்ன? உன் வேலையைப் பாரு” என்பது போல் நிரூப்பிடம் சொன்னது அநியாயம். தாமரை வெற்றியை அடைவதற்கு அமீர் விட்டுத் தந்த நன்றியை அவர் இத்தனை சீக்கிரத்தில் மறந்திருக்க வேண்டாம். “அமீர்தான் ஜெயிக்கணும்னு எனக்குத் தோணுது" என்று சிபியின் மீதுள்ள கடுப்பைக் காட்டினார் நிரூப். அமீரின் வெற்றி அறிவிக்கப்பட்ட பிறகு “இதுல ஜெயிச்சா கூட இறுதில மக்கள் ஓட்டு போடணும்... இல்லையா?” என்று நிரூப்பிடம் விளக்கம் கேட்டுக் கொண்ட தாமரை, பிறகு தனக்காக பொய்யாக அழுததைப் பார்க்க வேடிக்கையும் எரிச்சலுமாக இருந்தது. ‘எனக்கு வெற்றி வேண்டாம்’ என்று நம்புகிறவர், இன்னமும் இரண்டு வாரத்திற்கு இருந்து என்ன சாதிக்கப் போகிறார்?! “நீ செம்மையா வாழ்வடா தம்பி... நல்லா வருவே! அடுத்த வாரம் நிறைய விளையாடுவே...” என்று நிரூப் மீது திடீர் பாசத்தைக் கொட்டிக் கொண்டிருந்தார் தாமரை. இத்தனை நாள்களாக இதை எங்கே ஒளித்து வைத்திருந்தாரோ?!

பிக் பாஸ் - 90
பிக் பாஸ் - 90

“நான் விளையாடக்கூடாதுன்னு நெனச்சவங்க இந்த பைனல் டிக்கெட்டை எடுக்கலை” என்று குஷியாக சொல்லிக் கொண்டிருந்தார் நிரூப். “அப்ப எனக்காக நீ வருத்தப்பட்டிருக்கணும் இல்லையா?” என்று அவரை மடக்கினார் சஞ்சீவ். “நான் வரக்கூடாதுன்னுதானே நீங்களும் நெனச்சீங்க?” என்று தாமரை இப்போது குறுக்குச்சால் ஓட்ட, “கடவுள் சத்தியமா நான் அப்படில்லாம் நெனக்கலை” என்று நொந்து போய் பதில் சொன்னார் சஞ்சீவ். காலில் அடிபட்டிருக்கும் அமீர், அடுத்தடுத்த டாஸ்க்குகளில் வந்தால் தனக்கு எளிதாக இருக்கும் என்று நிரூப் திட்டமிடுகிறாரோ, என்னவோ! தான் தோற்றிருந்தாலும் “பைனல் சமயத்துல சரியான டாஸ்க்கா ‘நச்’சுன்னு வெச்சிருந்தாங்க” என்று பிக் பாஸிற்கே சான்றிதழ் தந்து கொண்டிருந்தார் சிபி.

பிக் பாஸ் - 90
பிக் பாஸ் - 90

ராஜூவின் ரகளையான குறும்பு!

“உன்னை நாமினேட் பண்ணிட்டு நான் ஃபைனல் வரைக்கும் வந்துட்டேன்” என்று பாவனியிடம் அமீர் குற்றவுணர்வுடன் சொல்ல “நீ ஜெயிச்சதுல எனக்கு சந்தோஷம்தான். அது உனக்குத் தெரியாதா?” என்று தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் பாவனி. ‘கொல்லையிலே தென்னை வெச்சு...’ என்கிற காதலன் படத்தின் பாடல் மெட்டை வைத்து ரகளையாக அதன் வரிகளை மாற்றிக் கொண்டிருந்தார் ராஜூ. அந்த வீட்டில் கண்டதையும் கிரைண்டர் போல் அரைத்துத் தின்னும் பிரியங்காவை, சிறப்பான வரிகளுடன் மாற்றிப்பாடி ராஜூ கிண்டல் செய்ய, அதற்கு விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தார் பிரியங்கா. தன் மீதே செய்யப்படும் கிண்டலை தானே ரசிக்கவும் ஒருவருக்கு நல்ல நகைச்சுவையுணர்வு இருக்க வேண்டும். அது பிரியங்காவிடம் நிறையவே இருக்கிறது.

அடுத்ததாக அனைவருக்கும் ஒரு டாஸ்க் நடந்தது. வீட்டுப் பொருள்களை விற்பனை செய்யும் நிறுவனத்தின் வணிக பிரமோஷன். அவர்கள் அறிவித்திருக்கும் Combo offer-களை நினைவில் கொண்டு அதன்படி பொருள்களை சரியான வரிசையில் அடுக்கி வைக்க வேண்டும். சிபி மற்றும் நிரூப் இதற்கு நடுவர்களாக இருந்தார்கள்.

சஞ்சீவ், ராஜூ, அமீர் என்று ஆண்கள் ஒரு அணியாகவும் பிரியங்கா, பாவனி, தாமரை என்று பெண்கள் ஒரு அணியாகவும் பிரிந்தார்கள். இறுதியில் இருவருமே சம மதிப்பெண்கள் பெற்றாலும் குறைந்த நேரத்தில் முடித்த பெண்கள் அணி இதில் வெற்றி பெற்றது. ராஜூ செய்த தாமதத்தை சஞ்சீவ் சுட்டிக் காட்ட “டோன்ட் வொர்ரி... பி ஹாப்பி...” என்றார் அவர். அதிர்ஷ்ட சக்கரத்தை சுற்றுவதன் மூலம் தனக்கு மிக்ஸி கிடைத்த சந்தோஷத்தை வழக்கம்போல் துள்ளிக் குதித்து உற்சாகமாகக் கொண்டாடினார் தாமரை. பாவனிக்கு கேஸ் ஸ்டவ்வும் பிரியங்காவிற்கு கிரைண்டரும் (என்ன பொருத்தம்?!) பரிசாகக் கிடைத்தன. சோர்ந்து போய் நின்றிருந்த இன்னொரு அணிக்கும் பரிசை அறிவித்து குதூகலமடையச் செய்தார் பிக் பாஸ்.

பிக் பாஸ் - 90
பிக் பாஸ் - 90

பிக் பாஸ் வீட்டில் கற்றதும் பெற்றதும்!

“எல்லோரும் புத்தாண்டு பார்ட்டிக்கு ரெடியா… சீக்கிரம் தயார் ஆகுங்க” என்று பிக் பாஸ் அறிவிக்க, மக்கள் உற்சாகமானார்கள். “அய்யா... சோறு… சோறு...” என்று அவர்களுக்கு மகிழ்ச்சி பீறிட்டது. ஆனால் பிக் பாஸ் முதலில் வைத்தது சோறு அல்ல, டாஸ்க். "இந்த பிக் பாஸ் வீட்டில் நீங்கள் கற்றுக் கொண்ட பாடம் என்ன?” என்ற கேள்வியை அனைவரிடமும் முன்வைத்தார்.

“இதுவும் கடந்து போகும்... என்கிற செய்தியைத்தான் இங்கு கற்றுக் கொண்டேன்” என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார் சஞ்சீவ். (இந்தச் செய்தி தினசரி காலண்டரில் கூட கிடைக்குமே? அதற்கு எதற்கு பிக் பாஸ் வர வேண்டும்?!). “நான் எந்த உறவையும் அத்தனை சீக்கிரம் விட்டுட மாட்டேன். ஆனா எது உண்மையா இருக்கோ. அது மட்டும்தான் உன்கிட்ட இருக்கும். மத்ததெல்லாம் போயிடும். இப்ப சிலதை விட்டுவிட கத்துக்கிட்டேன்” என்று குழப்பமாகச் சொல்லி முடித்தார் பிரியங்கா. நிரூப்பின் மீது ஏற்பட்டிருக்கும் கசப்பைத்தான் இப்படிச் சொல்லியிருக்கிறாரோ, என்னமோ!

ஒவ்வொரு நபரையும் குறிப்பிட்டு அவர்களிடமிருந்து கற்றுக் கொண்ட விஷயத்தை ராஜூ சொன்னது சிறப்பு. “நான் பொதுவா வீட்டில் அதிகம் பேச மாட்டேன். அம்மாவிடம் கூட தினசரி சம்பிரதாயமாகத்தான் விசாரிப்பேன். ஆனால் பிக் பாஸ் வீட்டில் அறிமுகமில்லாத நபர்களிடம் வேறு வழியில்லாமல் பழக நேர்ந்து, இன்றைக்கு சொல்லாமலேயே ஒவ்வொருவரின் உணர்வுகளையும் புரிந்து கொள்ளும் அளவிற்கு வளர்ந்திருக்கிறேன். இவர்களிடமே இப்படி என்றால் வீட்டில் உள்ளவர்களிடம் அதிகம் பேச வேண்டும் என்கிற ஞானம் இப்போது வந்து விட்டது” என்று தொடர்ந்த ராஜூ, ஒரு விஷயத்தை எப்படி லாஜிக்கலா அனலைஸ் பண்றதுன்ற விஷயத்தை நிரூப்பிடமும், ‘வைராக்கியம்’ என்பதை தாமரையிடமும், குடும்பத்திடமிருந்து தள்ளியிருந்தாலும் மறக்காமல் அன்பு செய்யக்கூடிய விஷயத்தை சஞ்சீவிடமும் ஆட்டத்தில் Focus செய்வதை அமீரிடமும், தினசரிப் பணிகளின் ஒழுக்கத்தை சிபியிடமும், மனசுல படறதை துணிச்சலாகச் சொல்லி விடும் பழக்கத்தை பிரியங்காவிடமும், ‘தைரியம்’ என்கிற விஷயத்தை பாவனியிடமும் கற்றுக் கொண்டதாக பெரிய பட்டியலை முன்வைக்க, அனைவரின் முகங்களிலும் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் தென்பட்டது.

பிக் பாஸ் - 90
பிக் பாஸ் - 90

“இங்க வந்துதான் டீயும் ஆம்லேட்டும் போட கத்துக்கிட்டேன்” என்று சாதாரணமாக ஆரம்பித்த சிபி “தனிமையிலிருந்து விடுபட பிக் பாஸ் வீடு உதவியது” என்று தொடர்ந்து ‘பொறுமை’ என்கிற விஷயத்தை ராஜூவிடம் கற்றுக் கொள்ள விரும்புவதாக சொல்லி முடித்தார்.

‘நெருங்கிப் பழக கத்துக்கிட்டேன்’ - அமீர்

அதே ‘நிதானம்’ என்கிற விஷயத்தை வழிமொழிந்த நிருப், “அற்ப காரணத்திற்காக தம்பியிடம் பல வருடங்கள் பேசாமலிருக்கும்’ கெட்ட வழக்கத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவிருப்பதாகச் சொல்லியது நல்ல விஷயம். அறிமுகம் இல்லாத பிக் பாஸ் வீட்டு மனிதர்களிடமே பழகக் கற்றுக் கொள்ளும் போது, சொந்தத் தம்பியிடம் இத்தனை வருடங்கள் பேசாமல் இருப்பது நிரூப்பிற்கு உறுத்துகிறதாம். இதைப் போலவே ‘சுயநலமாக’ இருப்பதின் முக்கியத்துவத்தையும் பிக் பாஸ் வீடு கற்றுத் தந்ததாம்.

“என் தொழில் பின்னணி காரணமாக நான் சிரிக்கவே மாட்டேன். என்னை கடுமையாகவும் இறுக்கமாகவும் வைத்துக் கொள்வேன். போலவே எல்லாக் கூட்டத்திலும் பின்னாடி நின்று விடுவேன். பொறுமை என்பதே இல்லாமல் துறுதுறுவென்று அலைந்து கொண்டிருப்பேன். இந்த விஷயங்களை மாற்றிக் கொள்ளும் பயிற்சியை பிக் பாஸ் வீடு தந்தது” என்றார். "எந்தவொரு புதிய மனிதரிடமும் நெருங்கிச் சென்று பழகி விடும் தன்மையை கற்றுக் கொண்டேன்” என்றார் அமீர். (அதைத்தான் காட்சியாகவே நாங்க பார்த்துட்டமே அமீர்!).

“இங்க அனுபவிச்ச மாதிரி சந்தோஷத்தை நான் வெளியில் அனுபவிக்கவே இல்லை” என்று தாமரை சொன்னதை புரிந்து கொள்ள முடிந்தது. பொருளாதார ரீதியாக பின்தங்கி, தினசரி பணிக்குச் செல்லும் பெண்களுக்கு போதுமான ஓய்வும் நல்ல சூழலும் என்பது கனவில்தான் அடைய முடியும். தாமரையின் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அதைத்தான் சுட்டிக் காட்டுகிறது. "ராஜூ, நிரூப் போன்ற அருமையான தம்பிகள் கிடைத்திருக்கிறார்கள். சாகற வரைக்கும் பேச மாட்டேன்னு சொன்னாலும் பிரியங்கா எனக்கு குழந்தை மாதிரிதான்" என்று சென்டியைக் கூட்டினார் தாமரை. “நான் அப்படியா சொன்னேன்?” என்கிற முகபாவத்தை அந்தச் சமயத்தில் தந்தார் பிரியங்கா. (பேசும் போது ஐயாவை நடுவுல ஏதாச்சும் ‘போடா... வாடா’ன்னு சொன்னியா?” என்கிற வடிவேலு காமெடிதான் நினைவிற்கு வருகிறது.)

பிக் பாஸ் - 90
பிக் பாஸ் - 90

பாவனி பேச ஆரம்பிக்கும் போது "தமிழ் கத்துக்கிட்டது பெரிய விஷயம்” என்று சிபி எடுத்துத் தர அதையே வழிமொழிந்தார் பாவனி. “குறைவான நண்பர்கள் இருக்கும் பாவனிக்கு பிக் பாஸ்ஸின் மூலமாக ஏராளமான நண்பர்கள் கிடைத்திருக்கிறார்களாம். இதைப் போலவே உடனே சுருங்கிப் போகும் தனது சென்சிட்டிவ் குணத்தையும் மாற்றிக் கொண்டு ஒரு பிரச்னையை ஆற அமர கையாளும் பழக்கமும் வந்திருக்கிறதாம்.

“சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கங்க பெரிசு!”

“நீங்க என்ன கத்துக்கிட்டீங்க பிக் பாஸ்?” என்று அவரையே கேள்வி கேட்டார் நிரூப். “சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கங்க பெரிசு” என்று பிக் பாஸை ஆசிர்வதித்தார் பிரியங்கா. “பார்ட்டி-ன்னாங்க... சோறு இல்லையா?” என்று அமீர் சந்தேகமாக கேள்வி எழுப்ப, விரைவில் அனைவருக்கும் உணவு வந்தது. "சாகற வரைக்கும் பேச மாட்டேன்னு நான் சொல்லலை” என்று தாமரையிடம் சொன்ன பிரியங்கா, பிறகு அவரை கட்டியணைத்து ‘முத்தா’ மழை பொழிய வழக்கம்போல் இருவரும் சமாதானம் ஆனார்கள். போதாக்குறைக்கு இரவில் தாமரையின் படுக்கையில் சென்று ‘இரண்டு கிறுக்கிகளும்’ (இது தாமரையே சொன்னது!) ‘கெக்கே பிக்கே’வென்று சிரித்து அடித்த லூட்டியும் சுவாரஸ்யம்.

பிக் பாஸ் - 90
பிக் பாஸ் - 90
நள்ளிரவிற்கு மேல் ராஜூவிடம் சஞ்சீவ் ரகசியம் பேசிக் கொண்டிருந்த காட்சியை unseen-ல் மட்டுமே கண்டிருக்க முடியும். “Money task வரும் போது அதைப் பயன்படுத்திக் கொள்ள சஞ்சீவ் முடிவு செய்திருக்கிறாராம். வெளியே ‘நாலு பேருக்கு’ உதவி செய்ய வேண்டியிருக்கிறதாம்’. இவர் ராஜூவிடம் கிசுகிசு குரலில் சொன்னது, தூக்கத்தில் உளறியது போலவே இருந்தது. ‘நாலு பேருக்கு நல்லதுன்னா... எதுவும் தப்பில்ல!’