Published:Updated:

பிக் பாஸ் 91: வாய்ச்சொல் வீரர் ராஜூ; விசாரணை நாளில் நடந்த முட்டை சண்டை! இந்த வாரம் எத்தனை எவிக்ஷன்?

பிக் பாஸ் 91

“உங்க சண்டைல நான் கொடுத்த ஐநூறை மறந்துடாதீங்க” என்கிற காமெடி மாதிரி “ரெண்டு பேர் என்னை டார்கெட் பண்ணா எப்படி விளையாடுவேன்” என்று பாவனியும் இப்போது களத்தில் குதித்தார். நிலவரம், கலவரம்!

பிக் பாஸ் 91: வாய்ச்சொல் வீரர் ராஜூ; விசாரணை நாளில் நடந்த முட்டை சண்டை! இந்த வாரம் எத்தனை எவிக்ஷன்?

“உங்க சண்டைல நான் கொடுத்த ஐநூறை மறந்துடாதீங்க” என்கிற காமெடி மாதிரி “ரெண்டு பேர் என்னை டார்கெட் பண்ணா எப்படி விளையாடுவேன்” என்று பாவனியும் இப்போது களத்தில் குதித்தார். நிலவரம், கலவரம்!

Published:Updated:
பிக் பாஸ் 91
மிலிட்டரி உடையில் கமல் இன்று வந்ததால், போர் படைத் தளபதி மாதிரி போட்டியாளர்களை நோக்கி கேள்விக் குண்டுகளை குறிபார்த்து ஆவேசமாக வீசி அதிரடியாகச் செயல்படப் போகிறார் என்று பார்த்தால், “அடிச்சுக்காம விளையாடுங்கப்பா” என்று வாக்கிங் செல்லும் பெரியவர் மாதிரி அறிவுரை சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். ஆகவே நேற்றைய எபிசோடின் விசாரணை நாள் சற்று டொங்கலாகத்தான் இருந்தது.

“இனிமேல் சண்டை போட்டுக்காம ஒத்துமையா இருப்பேன்” என்று புத்தாண்டு சபதம் எடுத்துக் கொண்ட போட்டியாளர்கள், கமலின் தலை மறைந்த அடுத்த கணமே, ஸ்கூல் பிள்ளைகளைப் போல ஒருவர் மீது ஒருவர் ஆவேசமாக முட்டை வீசிக் கொண்ட காட்சி அருமை. “இடைவேளைல ஒரு சின்ன சண்டை நடந்த மாதிரி தெரிஞ்சதே?!” என்று கமலே சற்று பம்மிக் கொண்டுதான் விசாரித்தார்.

தெளிவாக விளக்கம் அளிக்க வேண்டிய நேரத்தில் கூட தட்டுத் தடுமாறி, உதட்டிற்குள் பேசும் கெட்ட வழக்கத்தை ராஜூ எப்போது நிறுத்துவார் என்று தெரியவில்லை. "எதையாவது தவறாக சொல்லி நாமாக வண்டியில் ஏறி விடப் போகிறோம்” என்கிற ஜாக்கிரதையுணர்ச்சி அவருக்குள் நிறைய இருக்கிறது. அதற்காக பேச வேண்டிய நேரத்தில் கூட தெளிவாகப் பேசாமல் இருப்பது ‘சொல் வீரருக்கு’ அழகல்ல.

பிக் பாஸ் 91
பிக் பாஸ் 91

எபிசோட் 91-ல் என்ன நடந்தது?

‘இளமை... இதோ...’ பாடல் என்பது ஆங்கிலப் புத்தாண்டு தொடர்பான பாடலாக இருந்தாலும் தமிழ் கலாசாரத்துடன் மிக ஆழமாக வேரூன்றி விட்டது. ‘Happy New year’ என்றாலே அடுத்த கணம் இந்தப் பாடல்தான் நினைவிற்கு வந்து விடுகிறது. “இந்நேரம் ஆயிலிங் பண்ணி கமல் பைக்கை ரெடியா வெச்சிருப்பார்ல?” என்கிற மீம் கூட வந்துவிட்டது. தமிழ் உள்ளளவும் இளையராஜாவை மக்கள் நினைவுகூரப் போகும் இந்த ரகளையான பாடல் பின்னணியில் ஒலிக்க, அரங்கத்திற்குள் நுழைந்தார் கமல்.

“எய்த வேண்டிய இலக்கை எட்ட முடியுமா என்பதுதான் பலரது கனவாக இருக்கும். ஒத்திகையும் திறமையும் இருந்தால் நிச்சயம் அது முடியும். ‘சரித்திரத்தைத் தெரிந்து கொண்டு, நிகழ்காலத்தைப் புரிந்து கொண்டால் எதிர்காலத்தை அறிந்து கொள்ள முடியும்’ என்று ரைமிங்கான வசனத்தில் அசத்தினார் கமல். இந்தப் பீடிகை எல்லாம் எதற்காக? தன் மீது வைக்கப்பட்ட விமர்சனத்தை ஏற்றுக் கொண்டு தன்னை மாற்றிக் கொண்டு முதல் Finalist ஆன அமீரைப் பாராட்டுவதற்காக!

'சாம்பார் வடையா' அல்லது சாம்பார் + வடையா?

பிறகு வெள்ளிக்கிழமை நிகழ்வுகளைக் காட்டினார் கமல். ‘செல்ஃபி புள்ள... உம்மா… உம்மா...’ என்கிற கருத்துள்ள பாடலுடன் பொழுது விடிந்தது. தாமரையின் தலைமையில் கிராமத்து அணியும் பிரியங்காவின் தலைமையில் நகரத்து அணியும் சமையல் போட்டியில் மோதினார்கள். சாம்பாரில் வடையை ஊற வைத்ததைத்தான் ‘சாம்பார் வடை’ என்பதாக இதுவரை நான் அறிந்திருக்கிறேன். ஆனால் இந்தப் போட்டியில் சாம்பாரையும் வடையையும் தனித்தனியாக தந்து விநோதம் செய்தார்கள்.

பிக் பாஸ் 91
பிக் பாஸ் 91
ஒருவேளை மைசூர் போண்டா செய்யச் சொல்லியிருந்தால், போண்டாவை செய்து விட்டு கூடவே மைசூர் செல்வதற்கான ரயில் டிக்கெட்டை தனியாக வைத்திருப்பார்கள் போலிருக்கிறது.

கிராமத்து வடையையும் நகரத்து வடையையும் பக்கத்தில் வைத்து ஒப்பிட்டுக் கிண்டலடித்தார் ராஜூ. வடை சுடுவதற்கு முன்னாலேயே அந்த வடைகளைச் சுட்டு மொக்குவதற்கு நிறைய ஆர்வம் காட்டினார் சஞ்சீவ். இறுதியில் கிராமத்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அது நியாயமான முடிவும் கூட. அவர்களுக்கு மட்டுமல்லாது எல்லோருக்கும் உணவு பரிசாக வந்திருந்தது. பிரியங்காவிற்கு தனியாக வெஜ் புலவ்.

பிக் பாஸ் 91
பிக் பாஸ் 91

அகம் தொலைக்காட்சி வழியாக உள்ளே வந்த கமல், புத்தாண்டு வாழ்த்து சொல்லி, அமீரின் காலைப் பற்றி விசாரித்து, அவர் வென்றதற்கு வாழ்த்து சொன்னார். “அடிபட்ட கால்ல நீங்க நின்னது பார்க்க எங்களுக்கு பதற்றமாவே இருந்தது” என்று கமல் சொன்னது உண்மை. “அந்தக் கால்தான் எனக்கு வாட்டமா இருக்கும்” என்று காரணம் சொன்னார் அமீர். “ஆக்சுவலி... இந்த பினாலே டிக்கெட்டை நானே உள்ளே வந்து தருவதுதான் வழக்கம்... வந்துடுவேன்... ஆனா இந்த கோவிட் பய இருக்கானே... எங்க போக விடறான்” என்று சால்ஜால்ப்பு சொல்லி விட்டு, “சிபியும் உங்களுக்கு சரிசமமா நின்னு விளையாடினாரு. அவர் கையால் பெறுவது உங்களுக்குப் பெருமை” என்று அல்வா தந்துவிட்டார் கமல். “இந்த டிக்கெட் எனக்கு பஸ் டிக்கெட் மாதிரிதான். பைனல் ஜெயிச்சாதான் அது பிளைன் டிக்கெட்” என்று நம்பிக்கையோடு சொன்னார் அமீர்.

புத்தாண்டு உறுதிமொழி என்ன?

“சரி. வழக்கமா புத்தாண்டு அன்னிக்கு ஒரு சபதம் எடுப்பதுதானே நம் பண்பாடு... ஆனா மறுநாளே அதை மறந்துடுவோம் இல்லையா... அதைப் பத்தி சொல்லுங்க. பிக் பாஸ் நிகழ்வு உங்களுக்குள்ள ஏதாச்சும் மாற்றம் ஏற்படுத்திடுச்சா? என்ன புத்தாண்டு சபதம் ஏற்கப் போறீங்க? வரிசையா சொல்லுங்க” என்று அடுத்த டாஸ்க்கை ஆரம்பித்தார் கமல்.

பிக் பாஸ் 91
பிக் பாஸ் 91

“Depedence மற்றும் Acceptance... இந்த ரெண்டு விஷயத்தைத்தான் இங்க கத்துக்கிட்டேன். இதைத்தான் ஃபாலோ பண்ணப் போறேன். யாரையும் சார்ந்து இருக்கக்கூடாது. மத்தவங்க சொல்றதையும் ஏத்துக்க முயற்சி பண்ணனும்” என்று ரத்தினச்சுருக்கமாக சொல்லி அமர்ந்தார் சஞ்சீவ். "சென்சிட்டிவ்வா இருக்கறதை குறைச்சுக்கப் போறேன்” என்று சொல்லி உர்ரென்று அமர்ந்தார் சிபி. “மத்தவங்ககிட்ட அதிகமா பேசிடுவேன். இனிமே மனதைக் காயப்படுத்தாம பேச முயற்சி செய்வேன்" என்று வாக்குறுதி தந்தார் தாமரை. “என் கூட சண்டை போடறதுக்கு இந்த உலகத்திலேயே ஒரேயொரு ஆளுக்குத்தான் தகுதி இருக்கு. அது வேற யாருமில்ல. நான்தான். இனிமே என் கூடயே நான் சண்டை போடப்போறேன்” என்று வித்தியாசமாக உறுதிமொழி எடுத்தார் நிரூப்.

“ஜிம் போலாம்-ன்றதுதான் என்னோட பல வருஷ பிளான்” என்கிற மிகப்பழைய ஜோக்கை சொன்னார் ராஜூ. “உடற்பயிற்சியில் ஆர்வமிருக்கிற நண்பரை கூட வைத்துக் கொள்ளுங்கள்” என்று கமல் சொன்னது உண்மையிலேயே நல்ல யோசனை. “நான் வேணா வரட்டா?” என்று கேட்டு அதிர்ச்சி தந்தார் பிரியங்கா. “இனிமேலாவது சிரிச்சு பேசணும்னு முடிவு பண்ணியிருக்கேன்” என்றார் அமீர். (பாவனியிடமா?!)

பிக் பாஸ் 91
பிக் பாஸ் 91

“என்னையே எனக்கு ரொம்ப பிடிக்கும். Let go தத்துவத்தை இங்க கத்துக்கிட்டேன்” என்று ஆரம்பித்த பிரியங்கா, “எது இன்று உன்னுடையதோ.. நாளையும் அது உன்னுடையதே” என்கிற தத்துவத்தை மறுபடியும் ஆரம்பிக்க, “நம்முடையது எது?” என்கிற ஆதாரமான சந்தேகத்தை கமல் கேட்க, “அதானே?” என்று வாயடைத்துப் போனார் பிரியங்கா. "விட்டொழித்தலை பழகணும்” என்று கமல் சொன்ன உபதேசம் நன்று. (இனியாவது பிக் பாஸ் பார்ப்பதை விட்டொழிக்கணும்!).

தமிழ் சினிமாவில் பிரியங்கா

“சினிமா மேல இன்ட்ரஸ்ட் வந்திருக்கு சார்...” என்று அடுத்து சொல்லி கூடுதல் அதிர்ச்சி தந்தார் பிரியங்கா. “பேராசிரியர் பணியில் இருக்கும் சம்பந்தமில்லாதவர்கள் கூட சினிமா பற்றிய நுட்பமான அறிவை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். சினிமா அறிய சினிமாவின் உள்ளே இருக்க வேண்டிய அவசியமில்லை. என்றாலும் வாங்க... ஆல் தி பெஸ்ட்’ என்று கமல் வாழ்த்தியவுடன் “உங்க ஷோல ஆங்கர் பண்றதுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க சார்” என்று சந்தடி சாக்கில் ஒரு வேண்டுகோள் வைத்தார் பிரியங்கா. தங்கத்துல திருவோடு வாங்கின கதையால்ல இருக்கு? நிகழ்ச்சித் தொகுப்பாளர் வேலைதான் பிரியங்கா எப்போதும் செய்வதாயிற்றே? நடிப்பதற்கு வாய்ப்பு கேட்டிருக்கலாம்.

பிக் பாஸ் 91
பிக் பாஸ் 91

“டான்ஸ் ஆட கத்துக்கணும்” என்கிற ஆசையை வெளிப்படுத்தினார் பாவனி. (டான்ஸ் மாஸ்டர் வந்த பிறகு வந்த ஐடியாவா இது?!). “வழக்கமா யாராவது என்னிடம் கடுமையா பேசினா... நான் அவங்க கூட பேசறதை நிறுத்திட்டு ஒதுங்கிடுவேன். ஆனா இங்க அப்படி இருக்க முடியலை. ரெண்டாவது நாள்லயே பேசும்படி ஆகிடுது. நடந்த சண்டையை நாங்க மறந்துடுவோம். வெளிலயும் இனிமே அப்படி இருக்க முயற்சி செய்வேன்” என்பதை புத்தாண்டு சபதம் போல் சொல்லியிருக்கிறார் பாவனி.

“இவங்க என்னத்த ஆடினாங்க?” – நிரூப் விரக்தி

ஓர் இடைவேளைக்குப் பின்பு திரும்பிய கமல், டின்னர் டாஸ்க்கை பற்றி விசாரிக்க ஆரம்பித்தார். “நிரூப் இப்படி ஈஸியா வெளியே வந்துடுவாருன்னு நான் நெனக்கலை” என்பதே அவர் சொன்னதின் சாரம். “நிரூப்பை பார்த்து பயந்தவங்க எல்லாம் ‘பயந்தாங்கொள்ளி’ன்னு அவரைச் சொல்ற அளவிற்கு நிலைமை ஆயிடுச்சே?” என்று நிரூப்பை உசுப்பிவிட்டார் கமல்.

பிக் பாஸ் 91
பிக் பாஸ் 91

“யாருக்குத் தகுதியில்லைன்றதுதான் பிக் பாஸோட கேள்வி. ஆனா இவிய்ங்க 'உன் கூட விளையாட பயமா இருக்கு’ன்னு காரணத்தைச் சொல்லி என்னை வெளியே அனுப்பிட்டாங்க சார்” என்று அதில் இருந்த அவல நகைச்சுவையை விவரித்தார் நிரூப். “இவங்க ஆடின லட்சணத்தையும் பார்த்தேன். கண்றாவி... ‘புள்ளகுட்டிங்களை படிக்க வைங்கடா’ன்னு நீங்க சொன்ன மாதிரி ‘விட்டுக் கொடுக்காம ஆடுங்கடா’ன்னு நானும் கரடியா கத்திப் பார்த்தேன். எவன் கேட்டான்?” என்கிற மாதிரி நிரூப் அலுத்துக் கொண்டது சுவாரஸ்யமான பாயிண்ட். தன்னை இவர்கள் ஆட விடவில்லையே என்கிற ஏக்கமும் எரிச்சலும் அவரது தரப்பில் இருந்து அழுத்தமாக வெளிப்பட்டது.

வாய்ச்சொல் வீரர் ராஜூ!

‘விட்டுத்தருவது’ என்கிற பேச்சு வந்தவுடனேயே ராஜூவின் பெயரும் கூடவே அடிபட்டது. ‘விட்டுத் தருவதை ஒரு ஸ்ட்ராட்டஜியாவே அவர் வெச்சிருக்கார்” என்று நிரூப் போட்டுக் கொடுக்க “அப்படியா ராஜூ?” என்று சிரித்தபடியே கேட்டார் கமல். “சொல்ல முடியாது. அவர் வாய்ச் சொல் வீரர். விட்டுத் தருவதும் ஒரு உத்தியா இருக்கலாம்” என்றார் கமல். நன்றாகக் கவனித்துப் பார்த்தால், ராஜூவிடம் பேசும் போதெல்லாம் கமலின் முகத்தில் ஒரு வலுக்கட்டாயமான புன்சிரிப்பும் பிரியமும் பின்வாங்கலும் தெரிகிறது. மக்கள் செல்வாக்கு இருக்கிறவனை அநாவசியமாக எதற்கு நோண்ட வேண்டும் என்று கமல் பதுங்குகிறாரா அல்லது ராஜூவின் மீதுள்ள தனிப்பிரியமா என்று தெரியவில்லை. “என்னைப் பத்தி என்னென்னமோ இந்த ஊரு சொல்லுது... அதுல உண்மை இருந்தா சந்தோஷம்தான்” என்று சலனமில்லாத முகத்துடன் சொன்னார் ராஜூ.

பிக் பாஸ் 91
பிக் பாஸ் 91

“உங்களை யாராவது டார்கெட் பண்ணி அனுப்பினாங்களா?” என்று நிரூப்பின் வாயை மேலும் கமல் கிளற ‘பிரியங்கா’ என்று ஆணி அடித்தது போல் சொன்னார் நிரூப். சபையில் தன்னைப் பற்றிய புகாரோ, பேச்சோ வந்தால் பிரியங்காவின் முகத்தில் பிரத்யேகமான முகபாவங்கள் வந்துவிடும். இந்தச் சமயத்திலும் அதைச் செய்து காட்டினார் பிரியங்கா. “எனக்கு நெஜம்மாவே அவன் கூட விளையாட பயம் சார். அவன் இருந்திருந்தா எல்லாத்தையும் அடிச்சு காலி பண்ணியிருப்பான்” என்று வெளிப்படையாக ஒப்புக் கொண்டார் பிரியங்கா. “அது சரி. அப்ப முட்டை அடிக்கற டாஸ்க்ல ஏன் கடைசில விட்டுட்டுப் போனீங்க?” என்று கமல் மடக்க முயல, “எப்படியும் போகப் போறோம்னு ஆயிடுச்சு. எதுக்கு இன்னமும் மத்தவங்க வெறுப்பைக் கிளறணும்னு கிளம்பிட்டேன்” என்றார் பிரியங்கா. (சம்பந்தப்பட்ட நாளின் கட்டுரையிலும் இதே விஷயம் யூகமாக எழுதப்பட்டிருந்தது). “இப்படித்தான் சார். எல்லோருமே டிப்ளமேட்டிக்காவே விளையாடறாங்க” என்று தன் புகாரை மறுபடியும் பதிவு செய்தார் நிரூப்.

பிக் பாஸ் 91
பிக் பாஸ் 91

இதனால் வெறுத்துப் போன கமல், “இன்னாடா... அவார்டா கொடுக்கறாங்க?” என்கிற டோனில் “இங்க யார் அதிகமா அன்பு செலுத்தறாங்க–ன்ற போட்டியா நடக்குது?” என்று கிண்டலடிக்க “சார். விசாரணை நாள்ல உங்க கிட்ட அதிகமா திட்டு வாங்கியிருக்கறது நான்தான்...” என்றார் பிரியங்கா. அவரை டேமேஜ் செய்து முடித்த கமல், அடுத்து நகர்ந்த இடம் ராஜூ. “நீங்களும் விட்டுத் தந்த ஆசாமிகளுள் ஒருவர். மூணு முட்டைகளை உடைக்காம இருந்திருந்தா முடிவு மாறியிருக்கும்” என்று கமல் சொல்ல வழக்கம் போல் உதட்டிற்குள் எதையோ பேசினார் ராஜூ. “எப்படியும் பைனல் போயிடுவோம்ன்ற மதப்புல இருக்கீங்களா?” என்கிற தொனியில் கமல் கேட்க “அந்த நம்பிக்கை இருக்கு சார்” என்று ராஜூ சொன்னதும் அதைப் பாராட்டினார் கமல்.

கூட்டுச்சதி நடந்ததா?

“விளையாட விருப்பம் இருக்கறவங்களை வெளியே அனுப்பிடறீங்க. நீங்களும் விளையாட மாட்டேன்றீங்க” என்று நிரூப் துவக்கி வைத்த அதே பாடலை கமலும் அலுப்புடன் பாடினார். “ஆட்களை சம்பாதிச்சு வெச்சிருக்கறதை ராஜூ உத்தியா பயன்படுத்தறான். அவன் முட்டையை யாரும் உடைக்க மாட்டாங்கன்ற தைரியம். மத்தவங்களும் அப்படித்தான் நடந்துக்கறாங்க” என்று நிரூப் குற்றம் சாட்ட “பிஸிக்கல் கேம்ல நான் வீக் சார்” என்று ஒப்புக் கொண்டார் ராஜூ. “முட்டை டாஸ்க்ல கூட்டுச் சதி நடந்ததா? ஆமாவா... இல்லையா…” என்று கமல் ஆணித்தரமான கேள்வியை முன்வைக்க “அடிச்சு ஆடுங்கன்னு சொன்னதே நிரூப்தான் சார். நான் சத்தியாகிரக முறையைத்தான் ரொம்ப நேரமா ஃபாலோ பண்ணிட்டு இருந்தேன்” என்று நிரூப்பை ராஜூ சபையில் போட்டுக் கொடுக்க பிரியங்காவிற்கு ஒரே குஷியாக இருந்தது.

பிக் பாஸ் 91
பிக் பாஸ் 91

“சிபி எனக்கு உதவி செஞ்சான்” என்று ராஜூ ஆரம்பிக்க “ரொம்ப சிம்பிள் சார். கடைசில ரெண்டு பேர் வெளியே போகணும். யாராவது உடைக்க ஆரம்பிச்சாதான் அது நடக்கும். எது நடந்ததோ... அது நன்றாகவே நடந்தது” என்று சொல்லி சுருக்கமாகத் தீர்ப்பு எழுதினார் சிபி. “பிளான் பண்றதுக்குல்லாம் நேரம் இருக்காது சார். டாஸ்க் லெட்டரோட கடைசி எழுத்தை படிக்கறதுக்குள்ளளே பிக் பாஸ் பஸ்ஸர் அடிச்சுடுவாரு” என்கிற நடைமுறையைச் சொன்னார் பிரியங்கா.

“பிளான் பண்றதுக்கு நேரமில்லைன்னாலும் கூட ஒருமாதிரி unorganized favour இங்க நடக்குது” என்று பிக் பாஸில் ஒரு புதுவார்த்தையை அறிமுகம் செய்தார் நிரூப். “நானும் தாமரையும்தான் தனியா போராடினோம். மத்தவங்கள்லாம் பிரெண்ட்ஸ் ஆயிட்டாங்க” என்று கடைசியில் வாக்குமூலம் தந்தார் பாவனி. “அதுக்குத்தான் மறுபடியும் மறுபடியும் சொல்றேன். தனித்தனியா விளையாடுங்கப்பா” என்று அலுத்துக் கொண்டார் கமல். (அப்படின்னா... அவங்க அவங்க வீட்லதான் போய் தனியா விளையாடணும் – இது ராஜூவின் மைண்ட் வாய்ஸாகத்தான் இருக்கக்கூடும்).

பிக் பாஸ் 91
பிக் பாஸ் 91

“நாங்க நின்ன இடம் தப்பாயிடுச்சு சார்” என்று அந்த டாஸ்க்கில் இருந்த வாஸ்து பிரச்னையை அமீர் கண்டுபிடித்து சொல்ல, அதை ஆவேசமாக ஆமோதித்தார் பிரியங்கா. இந்தச் சமயத்தில் ஆளாளுக்கு ஒன்று பேச “இப்படி சந்தைக்கடை மாதிரி பேசறதை நிறுத்துங்க. உப்புச் சப்பில்லாத காரணமெல்லாம் சொல்லாதீங்க... மாற வேண்டியது இடமில்லை. உங்க மனசுதான்... இனிமேலாவது தனித்து விளையாடுங்கள்” என்று மறுபடியும் தலையில் அடித்துக் கொண்டார் கமல்.

கமல் சென்றதும் நடந்த முட்டை சண்டை

கமல் இடைவேளை விட்டுச் சென்றதும், "அன்பைப் பரப்புவோம். ஆனந்தமாக இருப்போம்” என்று சற்று முன்னர் புத்தாண்டு சபதம் எடுத்துக் கொண்ட அனைவருமே ஆவேசமாக முட்டை டாஸ்க்கைப் பற்றி விவாதிக்க ஆரம்பித்தார்கள். தாமரையும் சிபியும் வாக்குவாதம் செய்ய, தன் பெயர் அடிபட்டதால் அதில் வந்து குதித்தார் அமீர். “யாருமே சரியா விளையாடலை” என்கிற பாட்டை மறுபடியும் நிரூப் ஆரம்பிக்க “நீதானே அமீரோட முட்டையை உடைக்காதேன்னு என்கிட்ட சொன்னே?” என்று புதிய குற்றச்சாட்டை சிபி தெரிவித்தார். (நிரூப் சொன்னால் கேட்டாக வேண்டுமா என்ன?!”).

“உங்க சண்டைல நான் கொடுத்த ஐநூறை மறந்துடாதீங்க” என்கிற காமெடி மாதிரி “ரெண்டு பேர் என்னை டார்கெட் பண்ணா எப்படி விளையாடுவேன்” என்று பாவனியும் இப்போது களத்தில் குதிக்க, எப்போதுமே இது போன்ற சண்டைகளில் ஜகா வாங்கி நிற்கும் ராஜூவும் “எப்படி விளையாண்டிருந்தாலும் நீ ஏதாவது ஒரு கம்ப்ளெயின்ட் சொல்லியிருப்பே” என்று பாவனியை மடக்க முயன்றார். “ஒவ்வொருத்தருக்கும் ஒரு பிளான் இருக்கும். நீ நெனச்ச மாதிரியேவா எல்லோரும் விளையாட முடியும். விருந்து டாஸ்க் கூட ரூல் புக்ல போட்டிருந்த மாதிரியா நடந்தது?” என்று அமீர் கேட்க, நிரூப் மறுபடியும் பழைய பாட்டைப் பாட “உன் கூடல்லாம் பேசறதே வேஸ்ட்” என்று ஒதுங்கினார் அமீர். “அடிச்சு விளையாடியிருந்தா ஒரு முட்டை கூட மிஞ்சியிருக்காது. நீ வந்திருந்தா அதுதான் நடந்திருக்கும்” என்று பிரியங்காவும் நிரூப்பின் மீது பாய்ந்தார்.

பிக் பாஸ் 91
பிக் பாஸ் 91

பிரியங்கா – தாமரை – துப்பார்க்குத் துப்பாய சண்டை

“இன்டர்வெல் விட்டுட்டு வர்றதுக்குள்ளே... கிளைமாக்ஸ் ஃபைட்டையே முடிச்சுட்டீங்க” என்று கிண்டலடித்த கமல், அடுத்ததாக பிரியங்கா – தாமரைக்கும் இடையே நடந்த சண்டையை தூசு தட்டி விசாரிக்க ஆரம்பித்தார். “சுருக்கமா சொல்லிடறேன் சார்” என்று ஆரம்பித்த பிரியங்கா, அடுத்த பிரேக் வரைக்கும் இழுக்க முயன்று சொன்னதன் சாரம் இதுதான். “என் மேல தப்பு இல்லை சார்”. “விதிமீறல் நடந்தது உண்மை. நீங்க தாமரையோட கோபத்தைத் தூண்டற மாதிரி நடந்திருக்கீங்க” என்று கமல் பிரியங்காவை நேரடியாக குற்றம் சாட்ட “அப்படிக் கேளுங்கய்யா” என்கிற மாதிரி தலையாட்டினார் தாமரை.

“இருங்க... உங்க பக்கமும் வரேன்” என்ற கமல், ஆட்டத்தில் உணர்ச்சிவசப்படுவதால் ஒரு நல்ல ஆட்டக்காரருக்கு ஏற்படும் அவப்பெயரின் உதாரணமாக பிரெஞ்சு கால்பந்து வீரரான ஜிடேன் சம்பவத்தை நினைவு கூர்ந்தது சிறப்பான விஷயம். அடுத்ததாக, ‘துப்பார்க்குத் துப்பாய’ என்கிற பிரியங்கா சம்பவத்திற்கு வந்த கமல் “கோவிட் காலம்-ன்றதால துப்பறது தப்பு–ன்ற அர்த்தத்துல சொல்லல” என்று இடையில் செய்த நையாண்டி சிறப்பு. “நிகழ்ச்சியை ஆங்கர் பண்ற உங்களுக்கு உங்க உணர்ச்சியை ஆங்கர் பண்ண தெரியலையே” என்று பிரியங்காவின் கோபத்தை கமல் சுட்டிக் காட்டியது சிறப்பு.

பிக் பாஸ் 91
பிக் பாஸ் 91

“ஆனா... கடைசில ரெண்டு பேரும் சிரிச்சு சமாதானம் ஆயிட்டிங்க... உங்களின் புன்னகையில் வீடு முழுக்க வெளிச்சம்” என்று கமல் சர்காஸ்டிக் கிண்டலாக சொன்னது பிரியங்காவிற்குப் புரியவில்லை. “அப்புறம் நெனச்சுப் பார்த்தா எல்லாம் சிரிப்பா வந்தது சார்” என்று சமாளித்தார் பிரியங்கா. “ராஜூகிட்ட உங்களுக்கு ஏதாவது வாய்க்கா தகராறு உண்டா?” என்று பாவனியை கமல் கடைசியாக விசாரிக்க “அப்படியெல்லாம் கிடையாதுதான். ஆனா என்னை டார்கெட் பண்ணாங்க. ஏற்கெனவே முடிவு பண்ணிட்டாங்க” என்று பாவனி சொல்ல, “எல்லாத்தையும் மறந்துட்டேன்னு சொல்லிட்டு இப்ப மறுபடி ஆரம்பிச்சா எப்படி?” என்று ராஜூ கேட்டது அபத்தம். ஒரு புத்திசாலி, மற்றவர்கள் செய்த தவற்றை மன்னித்து விடுவார்; ஆனால் மறக்க மாட்டார். அப்படி மறந்தால் அவர்தான் இளிச்சவாயாகி விடுவார். மறக்காமல் இருந்தால்தான் அடுத்த முறை ஜாக்கிரைதையாக இருக்க முடியும்.

இந்த வாரம் டபுள் எலிமினேஷன்?

“ராஜூ பேசறதும் ஸ்ட்ராட்டஜியா இருக்கலாம். பாவனி செய்யறதும் ஸ்ட்ராட்டஜியா இருக்கலாம்” என்று எல்லோரையும் குழப்பி, ஒருவரோடு ஒருவரை கோத்து விட்ட கமல், ‘ராஜூ காப்பாற்றப்பட்டார்’ என்கிற நல்ல செய்தியோடு நிகழ்ச்சியை முடித்தார். ஆக... மக்களின் செல்வாக்கில் ராஜூ இன்னமும் முதல் வரிசையில் இருக்கிறார் என்பதை உணர முடிகிறது.

இந்த வார எலிமினேஷன் யார் என்கிற தகவல் வழக்கம் போல் கசிந்திருக்கிறது. அது ‘சஞ்சீவ்’ என்கிறார்கள். "மணி டாஸ்க்கில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு தான தர்மங்கள் செய்வேன்” என்று ஆசைப்பட்ட சஞ்சீவை அதற்குள் மக்கள் வீட்டிற்கு அனுப்பியிருக்கிறார்கள்.

பிக் பாஸ் 91
பிக் பாஸ் 91
ஆனால் இந்த வாரம் ‘இன்னொரு எலிமினேஷனும் இருக்கலாம்’ என்கிற தகவலும் இன்னொரு பக்கம் உலவுகிறது. சஞ்சீவோடு சேர்ந்து சிபியும் வெளியேறுகிறார் என்கிறார்கள். என்ன நடக்கிறதென்று பார்ப்போம்!