Published:Updated:

பிக் பாஸ் 92: "தம்பி, அந்த கேட்டைத் திறடா!"- கமலின் பன்ச்; அவுட்டானாலும் கெத்துக் காட்டிய சஞ்சீவ்!

பிக் பாஸ் 92

“யாருக்காவது விருப்பம் இருந்தா சொல்லுங்க. கேட்டைத் திறந்து வைக்கறேன். போறதா இருந்தா போகலாம்” என்று, “தம்பி... அந்த கேட்டை மூட்றா” என்கிற தன் அதிரடியான ‘வேட்டையாடு விளையாடு’ வசனத்தை சாஃப்ட் டோனில் சொன்னார் கமல்.

பிக் பாஸ் 92: "தம்பி, அந்த கேட்டைத் திறடா!"- கமலின் பன்ச்; அவுட்டானாலும் கெத்துக் காட்டிய சஞ்சீவ்!

“யாருக்காவது விருப்பம் இருந்தா சொல்லுங்க. கேட்டைத் திறந்து வைக்கறேன். போறதா இருந்தா போகலாம்” என்று, “தம்பி... அந்த கேட்டை மூட்றா” என்கிற தன் அதிரடியான ‘வேட்டையாடு விளையாடு’ வசனத்தை சாஃப்ட் டோனில் சொன்னார் கமல்.

Published:Updated:
பிக் பாஸ் 92

சஞ்சீவ் வெளியேற்றப்பட்டு விட்டார். வைல்ட் கார்ட் என்ட்ரியாக இருந்தாலும் குறுகிய காலக்கட்டத்தில் பெரும்பான்மையான பார்வையாளர்களை சஞ்சீவ் கவர்ந்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ‘நீதிடா.. நியாயம்டா... நேர்மைடா... என்று வாலண்டியர் நாட்டாமை போல எந்தவொரு பிரச்னையிலும் சரியான தலையீட்டை உடனே செய்துவிடுவது இவரது முக்கியமான ப்ளஸ் பாயிண்ட். இதைப் போலவே டாஸ்க்குகளிலும் சிறப்பாகப் பங்கேற்றார். குறிப்பாக அரசியல் டாஸ்க்கில் இவரது நடிப்பும் உடல்மொழியும் அசத்தல். ஒரு நல்ல இயக்குநரின் கையில் சென்று சேர்ந்தால் சஞ்சீவ் பிரகாசிப்பார் என்றுதான் தோன்றுகிறது.

ஆனால், முட்டை உடைக்கும் டாஸ்க்கில் இவர் ஜென்டில்மேனாக பாவனை செய்ய விரும்பியது ரசிக்கப்படவில்லை என்று தெரிகிறது. ஆட்டம் என்று வந்துவிட்டால் ஆடுவதுதான் முக்கியம். அது முரட்டு ஆட்டமாகவே இருந்தாலும் கூட அதில் கூட ஒருவர் ஜென்டில்மேனாக இருக்க முடியும். ஆட்ட விதிகளைப் பின்பற்றி நேர்மையாக ஆடினாலே போதும். சஞ்சீவ் அந்த முயற்சியை செய்யவில்லை. பாவனி வந்து ஆடியபிறகுதான் இவருக்கு ரோஷமே வந்தது.

ஏறத்தாழ இவரோடு வந்த அமீர், இறுதிப் போட்டிக்கே தகுதியாகியிருப்பது நல்ல முன்உதாரணம். சஞ்சீவை விடவும் பின்தங்கியிருக்கும் போட்டியாளர் யாராவது அந்த வீட்டில் இருக்கிறார்களா என்று யோசித்தால் சிபியின் நினைவுதான் வருகிறது. சிபியை விடவும் சஞ்சீவ் ஒரு நல்ல போட்டியாளர். ஆரம்பத்திலிருந்து விளையாடுகிறார் என்கிற ஒரே காரணம்தான், சிபியின் ப்ளஸ் பாயிண்ட்.
பிக் பாஸ் 92
பிக் பாஸ் 92

எபிசோட் 92-ல் என்ன நடந்தது?

பொதுவாக கமல் அரங்கில் நுழையும் காட்சியோடுதான் வார இறுதி நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும். ஆனால் இம்முறை பாவனியும் தாமரையும் அமர்ந்து பேசிய காட்சியோடு துவங்கியதால், எடிட்டிங் டீம் தூங்கி விட்டார்களோ என்று தோன்றியது. இல்லை. காரணமாகத்தான் வைத்திருக்கிறார்கள்.

பாவனையாக பேசிய பாவனி

“இந்த ராஜூ ஏன் இப்படில்லாம் சொல்றான். நான் என்ன போட்டுக் கொடுத்தேன். நான் என்ன பிரச்னைல அவனைத் தள்றேன்?” என்று நொந்து போய் தாமரையிடம் புகார் சொல்லிக் கொண்டிருந்தார் பாவனி. ஆனால், தாமரையோ உஷாராக அதற்கு எதிர்வினையேதும் செய்யவில்லை. மாறாக தன் சுயபுராணத்தை ஆரம்பித்து விட்டார். “என்னைப் பார்த்தா எனக்கே பாவமா இருக்கு. தூண்டிவிட்டாதான் எனக்கு கோபம் வரும். இல்லைன்னா... நான் பாட்டுக்கு இந்த வீட்ல சந்தோஷமா இருப்பேன்” என்று சொல்ல “பிக் பாஸ் கதவைத் திறந்து விட்டா... நான் இப்பவே போயிடுவேன்” என்று அனத்தினார் பாவனி. அவர் சொன்ன இந்த ஒரு வாக்கியம்தான் கமலுக்குப் பின்னால் வசனம் பேசுவதற்குத் தூண்டுதலாக இருந்தது.

“யாராவது போறதா இருந்தா சொல்லுங்க... கதவு இரண்டு நிமிடம் திறந்திருக்கும்” என்று கமல் பிறகு சொல்ல, “ஹிஹி... நான் போகலை சார்... சீசன் ஆறு வரைக்கும் கூட இருப்பேன்” என்று பாவனி சிரித்து சமாளிக்க வேண்டியிருந்தது. ஆக முன்னர் செய்தது பாவனை போலிருக்கிறது.

ஆரவாரத்துடன் அரங்கில் நுழைந்தார் கமல். (கோட்... செம வாத்தியாரே!). “புத்தாண்டு அன்னிக்குத்தான் ரெசல்யூஷன் எடுக்கணும்னு இல்ல. எப்படியும் அதை கை விட்டுடுவீங்க... எந்த நிமிஷம் வேணுமின்னாலும் எடுக்கலாம். ஒவ்வொரு நிமிடமும் புதிய வாய்ப்புதான். அந்த உறுதி நமக்கு இருக்க வேண்டும்” என்று அவர் சொன்னது முக்கியமான ஆலோசனை. “வர்ற ஒண்ணாந் தேதில இருந்து பாருங்க... என்ன செய்யறேன்னு” என்று நாம் எடுக்கும் பல சபதங்கள் நிச்சயம் நிறைவேறாது. எந்தவொரு நல்ல விஷயத்தையும் முடிவெடுத்த அடுத்த நிமிடத்திலேயே ஆரம்பித்து விட வேண்டும். (இருங்க பிரதர்... அதுக்காக இந்தக் கட்டுரையை படிக்கறதை உடனே நிறுத்திடாதீங்க!).

பிக் பாஸ் 92
பிக் பாஸ் 92

“தம்பி... அந்த கேட்டைத் திறடா!”

“தாமரை & பாவனி... கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி என்னமோ பேசிட்டு இருந்தீங்களே... சுடச்சுட செய்தி... என்ன விஷயம்?” என்று கமல் விசாரணையை ஆரம்பிக்க, அப்போது ஆவேசமாக அனத்திய பாவனி, இப்போது பம்மி “ஹிஹி... ஒண்ணுமில்லை சார்... இங்க எப்படி குப்பை கொட்டறதுன்னு புரியல” என்பது மாதிரி நெளிந்தார். “இது பிக் பாஸ் வீடு இல்ல சார். என்னோட வீடு. அப்படித்தான் இங்க உண்மையா இருக்கேன்” என்று வழக்கம் போல் வீட்டிற்குச் சொந்தம் கொண்டாட ஆரம்பித்தார் தாமரை.

“யாருக்காவது விருப்பம் இருந்தா சொல்லுங்க. கேட்டைத் திறந்து வைக்கறேன். போறதா இருந்தா போகலாம்” என்று, “தம்பி... அந்த கேட்டை மூட்றா” என்கிற தன் அதிரடியான ‘வேட்டையாடு விளையாடு’ வசனத்தை சாஃப்ட் டோனில் கமல் சொல்ல “நாங்க போக மாட்டோமே!” என்கிற முகபாவத்துடன் அனைவரும் அமர்ந்திருந்தார்கள். “ராஜூ நல்லா தலையாட்டுங்க…” என்று ராஜூவின் ரோபோத்தனத்தை கமல் கிண்டலடித்தார். “இதை நான் கட்சிலயும் பண்ணியிருக்கேன்” என்று கமல் ஆவேசமாகச் சொன்னபோது சட்டென்று சிரிப்பு வந்துவிட்டது. (அதான் தலைவரே... நிறைய பேர் எஸ்கேப் ஆயிட்டாங்க!).

“நான் இந்த வீட்டை விட்டு போகவே மாட்டேன் சார்... எத்தனை சீசன் வந்தாலும் இங்கயே ஒரு மூலையா கிடக்கேன். தனியா விட்டாகூட வாழ்ந்துடுவேன்” என்று தாமரை அடம்பிடிக்க “அப்ப பார்த்தசாரதியோட கதி?” என்று கமல் தாமரையின் கணவரைப் பற்றி ஜாலியாக கேட்டார். “இத்தனை நாள் தனியா இருக்கலையா... அப்படியே இருக்கட்டும்” என்றார் தாமரை. அவர் இதை சீரியஸாகவே சொல்வது சற்று காமெடி.

“வாங்க பிரியங்கா... செத்து செத்து விளையாடலாம்!”

பிரியங்காவை நேற்று வறுத்தெடுத்தது போதாது என்று, இன்றைக்கும் அழைத்தார் கமல். “அடிக்க மாட்டேன்... வா” என்பது போல் அழைத்துவிட்டு “நீங்க பிரச்னையை பெரிசா ஊதி வளர்க்கறீங்களாமே?” என்று முதல் கம்ப்ளெயின்ட்டை ஆரம்பித்தார் கமல். “நான் எதையும் மனசுல வெச்சுக்க மாட்டேன் சார்... கேட்டுடுவேன். ஆனா எதையும் பெரிசாக்கறதில்லை” என்று பிரியங்கா இதை மறுக்க, அதற்கு கமல் சொன்ன உதாரணம் அற்புதம். “காற்று எங்கேயும் அடிக்கும். ஆனால் அது பலூனிற்குள் தானாக செல்வதில்லை. யாராவது எடுத்து ஊதினால்தான் நிரம்பும்” என்று தத்துவரீதியாக மடக்க “தப்பா இருந்ததுதன்னா சாரி கேட்டுடுவேன்” என்று சமாளித்தார் பிரியங்கா. அமீர், ராஜூ, சஞ்சீவ், மற்றும் சிபி ஆகிய நால்வருமே பிரியங்காவிற்கு எதிராக சாட்சியம் அளிக்க, குழந்தை போல் முகத்தை வைத்துக் கொண்டிருந்தார் பிரியங்கா.

பிக் பாஸ் 92
பிக் பாஸ் 92

“ஓகே... பிரியங்கா, அடுத்த புகாரை பார்த்துடலாமா? அன்பை ஆயுதமா பயன்படுத்தறீங்களா?” என்று கமல் கேட்க “எனக்கு லவ் தர பிடிக்கும்” என்றார் பிரியங்கா. “இந்த அல்வாலாம் எனக்கு தராதீங்க... அதை வெற்றிக்காக பயன்படுத்தறீங்களான்னு மத்தவங்க கேக்கறாங்க” என்று கமல் மடக்கினார். “இந்த மேட்டர்ல என்னை கோத்துவிடாதீங்க சார்... பாவனி பக்கம் வண்டியைத் திருப்புவாங்க” என்று அமீர் சாட்சி சொல்ல வராமல் நெளிய, “சரி போ...” என்று விட்டுவிட்டார் கமல். “அவங்க அன்பை கேடயமா பயன்படுத்தறாங்க” என்று பதில் சொன்னார் சஞ்சீவ். (வித்தியாசமா யோசிக்கறாராம்!). “அந்த ஆயுதம் அவங்களையே கூட அடிச்சுடும்” என்று இன்னமும் கூடுதலாக யோசித்தார் சிபி.

“நான் ஜெயிக்கப் பிறந்தவ” – தாமரை அதிரடி அறிவிப்பு

“ஓகே... அடுத்த கேள்வி... உங்களுக்கு ஜெயிக்கணுமா, வேண்டாமா?” என்று கேட்க, “அய்யோ... ஆமாம் சார்” என்று பிரியங்கா பதறினார். “ரெண்டு வாரம் பிக் பாஸ் கையால சோறு சாப்பிட்டா போதும்... என் ஜென்மம் நெறஞ்சுடும்” என்று இதுவரை சொல்லிக் கொண்டிருந்த தாமரை, “ஓகே சார்... மக்களுக்காகவும் என் பிள்ளைகளுக்காகவும் விளையாடிப் பார்க்கறேன்” என்று இறுகிய முகத்துடன் சபதம் எடுத்தார். (ஓ... இதுதான் உங்க ஸ்ட்ராட்டஜியா?!). “இதுவரைக்கும் ஜெயிக்கணும்னு ஆசை வரலை” என்று பாவனி சிரித்துக் கொண்டே சொல்ல, “அப்ப இங்க ஏன் வந்தீங்க?” என்பது மாதிரியே பார்த்தார் கமல்.

பிக் பாஸ் 92
பிக் பாஸ் 92

“கூட்டத்துல கோவிந்தா போடறீங்களா?” என்று அடுத்த கேள்வி சிபியை நோக்கி வீசப்பட அதை மறுத்தார் சிபி. “அரசியல் டாஸ்க்ல ஐடியாவெல்லாம் கேட்டார் சார்” என்று சாதாரண காரணத்தை ராஜூ சொல்ல “அது கூடி ஆலோசித்து செயல்படற டாஸ்க்தானே? ஆலோசனை கேட்கறது தப்பில்லை. உங்க பாயின்ட் சரியில்லை ராஜூ” என்று நேரடியாகவே கமல் சொன்னது சிறப்பு. “சொல்ல வேண்டிய பாயின்ட்டை லேட்டா சொல்றார்” என்று அடுத்ததாக சாட்சியப் பட்டிலில் சஞ்சீவ் இணைய “முழுப் புரிதலோட யோசிச்சு சொல்றதுல என்ன தப்பு?” என்று ‘செல்லாது... செல்லாது” என்று சஞ்சீவையும் அமர வைத்தார் கமல். அதிர்ஷ்டக் காற்று சிபியின் பக்கம் அடித்ததால் அவரின் முகத்தில் பயங்கர புன்னகை.

“பிரியங்கா… அடுத்து ஒரு சீரியஸான கேள்வி கேட்கப் போறேன்… நீங்க பதில் பேசக்கூடாது. சரியா? சொன்னதைக் கேட்டுக்கணும்” என்றெல்லாம் கோபமாக முகத்தை வைத்துக் கொண்டு பில்டப் தந்த கமல், “நீங்க SAVED” என்று இறுதியில் சஸ்பென்ஸை உடைத்தார். பிரியங்கா கண்கலங்கலுடன் நன்றி சொல்ல தயாராக, “அடுத்த முறையும் சீரியஸா கேட்க ஆரம்பிக்கும் போது இதே மாதிரி நடக்கும்னு நம்பிடாதீங்க” என்று சொல்லி, பிரியங்காவை முழுதாக சந்தோஷப்பட அனுமதிக்காமல் ஜாலியாக இம்சை செய்தார் கமல்.

பிக் பாஸ் 92
பிக் பாஸ் 92

ரெட் கார்ட், க்ரீன் கார்ட் விளையாட்டு

ஓர் இடைவேளைக்குப் பிறகு திரும்பிய கமல், “அடுத்தது ஒரு விளையாட்டு. ஆனா இதை நீங்க சீரியஸா, நேர்மையா விளையாடணும்” என்று ஆரம்பத்திலேயே எச்சரிக்கை தந்துவிட்டார். யாராவது மழுப்பலாக டிஸ்கிளைமர் வாக்கியங்களை ஆரம்பித்தால் “அந்த வியாக்கியானமெல்லாம் வேண்டாம். வெட்டு ஒண்ணு... துண்டு ரெண்டுன்ற மாதிரி பேசுங்க” என்று கறாராக இடைமறித்தார். பெரும்பாலான டாஸ்குகளை கமல் இப்படியே கையாண்டால் சுவாரஸ்யமாக அமையும். குறிப்பாக அடிஷனல் ஷீட் வாங்கி பேசும் பிரியங்காவின் நீளமான 50 மார்க் மதிப்பெண் விடைகளை கேட்க யாருக்கும் பொறுமையே இருப்பதில்லை.

“ஓகே... அது என்ன விளையாட்டுன்னா... ‘யார் இந்த விளையாட்டில் இருக்க தகுதியில்லை... அவங்களுக்கு நீங்க ரெட் கார்ட் தரணும். அதற்குப் பதிலாக வெளியே போனவங்கள்ல யார் திரும்பி வந்தா நல்லா இருக்கும்?. சட்டு புட்டுன்னு சொல்லுங்க... பார்க்கலாம்” என்று வில்லங்கமான விளையாட்டை ஆரம்பித்தார் கமல். “நீதான் தைரியசாலியாச்சே... சொல்லு பார்க்கலாம்...” என்று நிரூப்பை அவர் உசுப்பி விட, அதற்கு நிரூப்பின் பதில் நேர்மையாகவும் துணிச்சலாகவும் இருந்தது. ‘தகுதியில்லை’ என்கிற கேட்டகிரியில் அவர் சிபியைத் தேர்ந்தெடுப்பார் என்று எதிர்பார்த்தால் டக்கென்று திசை மாறி ராஜுவைத் தேர்ந்தெடுத்தார்.

நிரூப் சொன்ன காரணங்கள் ராஜூவின் ரசிகர்களுக்கு உவப்பில்லாததாக இருக்கலாம். ஆனால், மிகத் துல்லியமானது. ராஜூவின் ப்ளஸ் பாயிண்ட் என்பது நகைச்சுவை + Anger Management. இதைத் தவிர அவர் பிக் பாஸில் பெரும்பாலான சமயங்களில் தப்பித்துச் செல்பவராகவே இருக்கிறார். "மக்கள் காப்பாத்திடுவாங்க” என்கிற மிதப்பில் டாஸ்குகளையும் இடதுகையால் கையாள்கிறார். தனக்கு வேண்டியவர்களுக்கு பிரச்னை என்றால் மட்டும் அதில் தலையிடுகிறார். மற்றபடி ராஜூ என்பவர் ஒரு ரோபோ மட்டுமே.

பிக் பாஸ் 92
பிக் பாஸ் 92

ராஜூ சரியான ஆட்டக்காரரா?

“டாஸ்க்ல விளையாடறது மட்டும் பிக் பாஸ் கேம் இல்ல” என்று ராஜூ வைத்த கவுன்ட்டர் ஓகேதான். ஆனால் சிரிக்க வைப்பது மட்டுமே பிக் பாஸ் கேம் கிடையாது. ‘திரும்பி வர வேண்டும்' என்கிற கேட்டகிரியில் ‘அபிஷேக்’கை நிரூப் சொன்னது சற்று ஆச்சர்யம். ஆனால் அதுவும் துணிச்சலான முடிவு. அபிஷேக் மீது விமர்சனங்கள் இருந்தாலும் ஆட்டத்தை சுவாரஸ்யமாக்குவதில் அவர் முக்கிய பங்கேற்பார். அபிஷேக் இருந்தபோது அவர் பிரியங்காவுடன் நெருங்குகிறாரே என்று நிரூப் எரிச்சல் அடைந்திருக்கலாம். ஆனால் இவர்கள் அத்தனை பேரும் ‘போங்காட்டம்’ ஆடுவதைப் பார்த்து அபிஷேக்கே தேவலை என்று தோன்றியிருக்கக்கூடும்.

சஞ்சீவிற்கு ரெட் கார்ட் கொடுத்த பாவனி, அண்ணாச்சிக்கு க்ரீன் கார்ட் கொடுத்தார். இந்தப் பச்சை அட்டை வரிசையில் இமானிற்கு அமோகமான வரவேற்பு இருந்தது ஆச்சரியம்தான். (மிஸ் பண்ணிடாதிய! அப்புறம் வருத்தப்படுவிய!). பாவனியைப் போலவே சஞ்சீவிற்கு ரெட் கார்ட் தந்த பிரியங்கா, அபிஷேக்கிற்கு க்ரீன் கார்ட் தருவார் என்பது எதிர்பார்த்ததுதான். இவர் விளக்கம் சொல்ல முற்பட்ட போது ‘அந்தக் கதையெல்லாம் வேணாம்’ என்று கமல் தடுத்தது சுவாரஸ்யம். அமீரின் மீது தாமரை கடுப்பில் இருக்கிறார் என்பது வெளிப்படை. எனவே அவருக்கு ரெட் கார்ட் தந்து விட்டு அண்ணாச்சிக்கு பச்சை அட்டை தந்தார். அமீரோடு என்னால் மோத முடியாது என்பது தாமரை சொன்ன காரணம்.

நிரூப்பைத்தான் சிபி தேர்ந்தெடுப்பார் என்பது ஊருக்கே தெரியும். எனவே நிரூப் தயாராக தன் கைகளை ஏந்தி அமர்ந்திருந்தார். சிபி பச்சை அட்டைக்காகத் தேர்ந்தெடுத்தது அண்ணாச்சியை. அடுத்து வந்த சஞ்சீவ், ரெட் கார்டை பிரியங்காவிற்கு தந்து பழிவாங்கினார். ஒரு மாறுதலுக்கு வருணை இவர் பச்சை அட்டைக்காக தேர்ந்தெடுத்தது சிறப்பு. ‘ஆல்ரவுண்டர்’ என்கிற காரணத்தைச் சொன்னார் சஞ்சீவ்.

பிக் பாஸ் 92
பிக் பாஸ் 92

திரும்பத் திரும்ப பேசற நீ – சிபியின் அழிச்சாட்டியம்!

ராஜூ ரெட் கார்ட் தர எழுந்த போது, பாவனி அதை வாங்குவதற்கு தயாராக இருந்தார். ஆனால், இடது பக்கம் வண்டியைத் திருப்பிய ராஜூ, நிரூப்பிற்கு அதை தந்தார். “எல்லாத்துலயும் ஸ்ட்ராட்டஜி... ஸ்ட்ராட்டஜி...ன்னு உயிரை வாங்கறான் சார்” என்பதே ராஜூ சொன்ன காரணம். பச்சை அட்டைக்கு அண்ணாச்சியைத்தான் ராஜூ தேர்ந்தெடுப்பார் என்பதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. அமீர் சஞ்சீவிற்கு ரெட் கார்ட் தந்துவிட்டு இமானுக்கு வரவேற்பு அளித்தார்.

“எனக்கு ஏன் ரெட் கார்ட் கொடுத்தே?’ என்கிற விளக்கத்தை நிரூப் கோர, கமலும் அதை சபையில் சொல்லச் சொல்லி வற்புறுத்தினார். (இயர்போனில் உத்தரவு வந்திருக்குமோ?!) “டாஸ்க் சமயத்துல ஸ்ட்ராட்டஜின்னா ஓகே... ஆம்லேட் போடும் கூட ஸ்ட்ராட்டஜின்னா. எப்படி சார்?” என்று அலுத்துக் கொண்ட ராஜூ அதற்காக சொன்ன உதாரணம் சாதாரணம். அதை எளிதாக உடைத்துப் போட்டார் நிரூப். இன்று ராஜூ தன் வாதத்திறமையை இழந்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். “மத்தவங்க ஆட்டத்துல உன் செல்வாக்கை செலுத்த டிரை பண்றே” என்று சிபி உதவிக்கு முன் வந்தார். “என்னமோ... எங்களுக்கு ஆடத் தெரியாதுன்ற மாதிரியும், உனக்குத்தான் எல்லாம் தெரியும்ன்ற மாதிரியும்” என்று அமீரும் இந்தச் சமயத்தில் நிரூப்பிற்கு எதிரான சாட்சியமாக மாறினார்.

பிக் பாஸ் 92
பிக் பாஸ் 92

“ஓகே... நீங்க அடிச்சுக்கங்க. நான் கொஞ்ச நேரத்துல வரேன்” என்று கமல் கிளம்பிச் செல்ல வீட்டிற்குள் ரணகள விவாதம் ஆரம்பித்தது. "சந்தைக்குப் போகணும். ஆத்தா வையும்... காசு கொடு” என்கிற பதினாறு வயதினிலே சப்பாணி மாதிரி "அமீர் முட்டையை உடைக்க வேணாம்னு நீ சொன்னே” என்கிற வாக்கியத்தை வைத்து நிரூப்பிடம் தொடர்ந்து மல்லுக் கட்டிக் கொண்டிருந்தார் சிபி. “எனக்கு ஞாபகமில்லை” என்று நிரூப்பும் சமாளித்தார். சிபி சொல்வது உண்மை என்றே வைத்துக் கொள்வோம். அவர் ஏன் நிரூப் சொல்வதைக் கேட்க வேண்டும்? அந்த டாஸ்க்கில் நிரூப் ஒன்றும் நடுவர் இல்லையே? வெறும் பார்வையாளர்தானே?

“நீங்களும் நல்லா ஆட மாட்டீங்க... என்னையும் ஆட விட மாட்டீங்க” என்கிற பல்லவியை நிரூப் துவங்க “அதுக்கு எதுக்குடா எனக்கு ரெட்கார்ட் கொடுத்தே? ரோப் டாஸ்க்ல நல்லா பண்ணே’ன்னு எனக்கு கையெல்லாம் கொடுத்தியே. எல்லாத்திலயும் ஸ்ட்ராட்டஜி கணக்கு போட்டா எப்படிடா?" என்று ராஜூ கேள்வி எழுப்ப, “நீ டாஸ்க் பண்ணாததுதான் எனக்கு பிரச்னை. மத்தபடி ஐ லவ்யூடா” என்று கவுன்ட்டர் தந்தார் நிரூப்.

புத்தகப் பரிந்துரை – தமிழ் அறிவோம்

ஓர் இடைவேளைக்குப் பிறகு திரும்பிய கமல் ‘புத்தகப்பரிந்துரை’ ஏரியாவிற்கு வந்தார். “நான் பரிந்துரைக்கும் நூல்களை நிறைய பேர் தேடி வாங்குவது மகிழ்ச்சி. தமிழர்களிடம் வாசிப்பு பழக்கம் குறைவு என்று இனியும் சொல்ல முடியாது. தான் வாசிப்பதை மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும். அதைத்தான் நான் செய்கிறேன்” என்று ஆரம்பித்து “ஆங்கிலம்தான் சோறு போடும் என்கிற காலத்தில் நான் ஆங்கில மீடியம் படித்தேன். என் தந்தையார் மூலமும் கலைஞர், கண்ணதாசன், சிவாஜி போன்றவர்களின் மூலம் தமிழ் அறிந்தேன். சினிமாதான் எனக்கு தமிழ் கற்றுத் தந்தது. இலக்கியம் தெரிந்த அளவிற்கு எனக்கு இலக்கணம் தெரியாது என்று சொல்வதில் வெட்கமில்லை. ஆனால் நல்ல இலக்கியங்களைத் தொடர்ந்து படித்தால் இலக்கணம் நம்மிடம் தானாகவே படிந்துவிடும்” என்று தொடர்ந்தார் கமல்.

தமிழ் அறிவோம்
தமிழ் அறிவோம்

அவர் பரிந்துரை செய்த நூல், கவிஞர் மகுடேசுவரன் எழுதிய ‘தமிழ் அறிவோம்’ என்கிற தமிழ் இலக்கணம் தொடர்பான தொகுதி நூல்கள். தமிழைப் பிழையின்றி எழுதுவது முதற்கொண்டு இலக்கணம் தொடர்பான பல சந்தேகங்களை இந்தத் தொகுதி நூல்களில் மிக எளிமையாக விளக்கியுள்ளார் மகுடேசுவரன். “இப்போதைய தலைமுறைக்கு தமிழை டைப் செய்யும் வசதியுள்ளது. ஆனால் பல்கூசும் அளவிற்கு அதில் பிழைகள் மலிந்துள்ளன. அவர்கள் அவசியம் இந்த நூலை வாங்கிப் படிக்க வேண்டும்” என்று கமல் செய்த அறிவுரை அவசியமானது.

பார்வையாளர்கள் தந்த ரிசல்ட்

அகம் டிவி வழியாக உள்ளே நுழைந்த கமல் “யார் காப்பாற்றப்படுவார் என்கிற தகவலை இந்த முறை பார்வையாளர்கள் சொல்லுவார்கள். இது ஒருவரால் எடுக்கப்பட்ட முடிவல்ல” என்று அறிவித்து “அவங்களை நீங்க பார்க்க முடியாது” என்று சொல்லி அதற்காக சொன்ன உதாரணம் அருமை. “கண்தானம் செஞ்சவங்களை நாம பார்க்க முடியாதுன்ற மாதிரி” என்று அசத்தினார் கமல்.

“எனக்குப் பிடிச்ச போட்டியாளர் பிரியங்கா. நல்லா ஆடறாங்க” என்று ஆரம்பித்தார் ஒரு பெண். ஆனால் அவர் அடுத்து சொன்னதுதான் அதிர்ச்சியான ஸ்டேட்மெண்ட். “ஆனா ரொம்ப innocent” என்று சொன்னதைக் கேட்டு பிரியங்காவிற்கே உள்ளூற சற்று ஜெர்க் ஆகியிருக்க வேண்டும். என்றாலும் மிக மகிழ்ச்சியோடு அந்தப் பாராட்டை ஏற்றுக் கொண்டார். பிரியங்காவைப் பாராட்டிய பெண் “இவர் இன்னமும் ஆடறதைப் பார்க்க ஆசையா இருக்கு” என்று சொல்லி நிரூப்பைத் தேர்ந்தெடுத்தது சரியான சாய்ஸ்.

அடுத்து எழுந்த இளைஞர், "பிடித்த போட்டியாளர் ராஜூ... அவரின் நகைச்சுவை பிடிக்கும்” என்று சொல்லி விட்டு ‘பாவனி காப்பாற்றப்பட்டார்’ என்று அறிவிக்க அம்மணிக்கு முகமெங்கும் மகிழ்ச்சி. அவர் இதை எதிர்பார்க்கவில்லை போல. அடுத்ததாக எழுந்த நங்கநல்லூர் லீலா, “ராஜூ பிடிக்கும்” என்று சொல்லிவிட்டு தாமரை காப்பாற்றப்பட்டதாக தெரிவித்தார். “எப்படி ரைட் இன்டிகேட்டர் போட்டாங்க பார்த்தீங்களா? இதுதான் லீலா விநோதம்” என்று டைமிங்காக சொல்லி மகிழ்ந்தார் கமல். “நானும் உங்க ஏரியாலதான் இருந்தேன்” என்று இங்கேயும் ஒட்டிக் கொள்ள முயன்றார் பிரியங்கா.

பிக் பாஸ் 92
பிக் பாஸ் 92

ஆக... மீதமிருந்தவர்கள் சஞ்சீவ் மற்றும் சிபி. அதிக சஸ்பென்ஸ் வைக்காமல் சஞ்சீவின் பெயரை அறிவித்தார் கமல். சஞ்சீவ் இதை எதிர்பார்த்திருந்தாலும் அவரது ஏமாற்றம் வெளிப்படையாகத் தெரிந்தது. “ஓகே ஓகே... நான் கிளம்பறேன்” என்று கோபித்துக் கொண்ட பெரியப்பா மாதிரி மடமடவென நடையைக் கட்டினார். “கடைசி வாரம் ஜாலியா இருக்கும். ஆனா அடுத்த வாரம் இருக்குடா உங்களுக்கெல்லாம்! டஃப்பா இருக்கும்” என்பதை கரிசனத்தோடு சொன்னாரா, அல்லது எரிச்சலோடு சொன்னாரா என்று தெரியவில்லை. இதையே மறுபடி மறுபடி சொன்னார்.

பாவனிக்கு அமீர் தந்த அட்வைஸ்

“இந்த இரண்டு வாரம் கடுமையா இருக்கும். எமோஷனுக்கு இடம் தராம ஆடு” என்று அமீர், பாவனிக்கு ஆலோசனை தர “நான் அப்படித்தானே ஆடறேன்.,. அது ஏண்டா. எல்லோரும் என்னைப் பார்த்தே இதைச் சொல்றீங்க?” என்று ஆச்சர்யம் அடைந்தார் பாவனி. “Money Task வரும்போது உனக்கு இஷ்டம் இருந்தா அதைப் பயன்படுத்திக்கோ... இருபது லட்சம் தந்தா கூட நான் எடுக்க மாட்டேன். எனக்கு ஃபைனல் போகணும்... அதான் முக்கியம்... கொலைவெறில இருக்கேன்” என்பதை நிரூப் பிரகடனப்படுத்திவிட்டார்.

மேடையில் கமலுக்கும் சஞ்சீவிற்கும் நிகழ்ந்த ஜாலியான முட்டலை எத்தனை பேர் கவனித்தீர்கள்? “உங்க கோட் நல்லாயிருக்கு. ஆனா நான் போட்டிருக்கிறது கதர்” என்று கமல் ஆரம்பிக்க “டிவி வழியா பார்க்கும் போது உங்க கோட் நல்லாயிருந்தது” என்று சஞ்சீவும் பதிலுக்கு பொடி வைத்தார். “நண்பர்கள் வட்டத்தில் மட்டுமே அறிந்த உங்களை இனிமே ரோட்டில் ‘பிக் பாஸ் சஞ்சீவ்’ன்னு கூப்பிடுவாங்க” என்று கமல் சாக்லேட் கொடுக்க “நான் ஏற்கெனவே சீரியல்ல நடிச்சு பிரபலம். ரெண்டு படம் கூட புக் ஆயிடுச்சு” என்று பதிலுக்கு கெத்தாக பந்தா காட்டினார் சஞ்சீவ். “ஆனி முடிஞ்சு ஆவடி வந்தாச்சு... இனிமே டாப்பா வருவீங்க” என்கிற அதே பல்லவியை கமல் பாட, “இதுக்கு மேல என்னால முடியாது சார்... அழுதுருவேன்” என்று விடைபெற்றார் சஞ்சீவ். அதற்கு முன்னால் போட்டியாளர்களைச் சந்தித்து தனித்தனியாக ஆலோசனை சொன்னது நன்று. பிறகு கமலும் விடைபெற்றுச் சென்றார்.

பிக் பாஸ் 92
பிக் பாஸ் 92

சிபியின் வில்லங்கமான கமென்ட்

இரவு. அப்போதைக்கு தீவிரமாகத் தெரியும் ஒரு பிரச்னை, சில நாள்களுக்குப் பிறகு அபத்த நகைச்சுவையாகி விடும். பாவனிக்கும் அப்படித்தான் ஆனது போல! அமீர் விவகாரத்தையொட்டி தாமரையிடம் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தார். “இவனா வந்து ஏதோ பேசினான். ஃபோகஸ் போவுதுன்னு சொன்னான். இப்ப இவனா ஃபைனலுக்குப் போக வெறிச்சுப் பார்த்து உக்காந்திட்டிருக்கான்” என்று சிரித்தார்.

பிக் பாஸ் 92
பிக் பாஸ் 92

ஆட்களின் எண்ணிக்கைக் குறைந்து விட்டதால் படுக்கைகளை இழுத்துப் போட்டு அனைவரும் நெருக்கியடித்து படுத்துக் கொண்டிருந்தார்கள். “ஒரு ஊர்ல ஒரு சாமியார் இருந்தாராம்” என்று ராஜூ கதை சொல்ல ஆரம்பிக்க, “ஏய்க்க். இவன் நல்லா காமெடி பண்ணுவாம்ப்பா” என்று அனைவரும் ஆர்வமாகக் கேட்க ஆரம்பித்தார். இந்தச் சமயத்தில் பாவனிக்கு வாந்தி வரும் உணர்வு ஏற்பட்டது. சிபி இதைச் சாதாரணமாகச் சொன்னாரோ அல்லது குசும்புடன் சொன்னாரோ என்று தெரியவில்லை. அவர் சொன்ன கமென்ட் வில்லங்கமாகப் புரிந்து கொள்ளப்பட, நிரூப் விழுந்து விழுந்து சிரித்தார். சிபியின் கமெண்ட் காரணமாக ராஜூவின் கதை அம்போவென போயிற்று.