Published:Updated:

பிக் பாஸ் - 93: சோறு போட்டு அடித்த பிக் பாஸ்; ஆன் தி ஸ்பாட் ஓப்பன் நாமினேஷனில் நடந்த கலவரங்கள்!

பிக் பாஸ் - 93

"பிரியங்கா–ன்னா புளியங்கா மாதிரி ஈஸியா நெனக்கறீங்க... நான் என்ன அவ்வளவு ஈஸியான டார்கெட்டா?” என்று சிரிப்பும் சீரியஸூமுமாக பேசி தாமரையை நாமினேட் செய்தார் பிரியங்கா.

பிக் பாஸ் - 93: சோறு போட்டு அடித்த பிக் பாஸ்; ஆன் தி ஸ்பாட் ஓப்பன் நாமினேஷனில் நடந்த கலவரங்கள்!

"பிரியங்கா–ன்னா புளியங்கா மாதிரி ஈஸியா நெனக்கறீங்க... நான் என்ன அவ்வளவு ஈஸியான டார்கெட்டா?” என்று சிரிப்பும் சீரியஸூமுமாக பேசி தாமரையை நாமினேட் செய்தார் பிரியங்கா.

Published:Updated:
பிக் பாஸ் - 93

The Wild Pear Tree என்கிற துருக்கி தேசத்து திரைப்படம் ஒன்றிருக்கிறது. மிக அற்புதமான படம். ஆனால் பழக்கமில்லாதவர்களுக்கு பொறுமையை சோதித்து விடும். ஏறத்தாழ மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீளும் இந்தப் படத்தில் பெரும்பாலும் உரையாடல்கள்தான் நிகழும். ஒவ்வொரு வசனத்திலும் தத்துவமும் வாழ்க்கைச் சிக்கலும் கலந்து இழையோடும். இந்தத் திரைப்படத்தின் வசனங்களை ரத்தினக்கற்கள் எனலாம்.

பிக் பாஸின் நேற்றைய எபிசோடும் இப்படித்தான் இருந்தது. அவ்வளவு பேச்சு. அத்தனை உரையாடல். ஆனால், அவை ரத்தினக்கற்கள் அல்ல; பெரும்பாலும் பாறாங்கல்தான். ஒருவரோடு ஒருவர் பாறாங்கல்லில் முட்டிக் கொள்வதுபோல பேசி பேசியே ரத்தம் வரவழைத்துக் கொண்டார்கள்; அது மட்டுமல்லாமல் நம் காதுகளிலும் ரத்தம் வரவழைத்தார்கள்.

இந்த 90 நாள்களில், நல்லதும் கெட்டதுமாக இவர்கள் பேசித் தீர்த்துக் கொள்ள ஏராளமான விஷயங்கள் இருக்கும்போது ‘முட்டை உடைத்த பிரச்னை’ மட்டுமே இவர்களுக்குப் பெரும் பிரச்னையாக மாறிவிட்டது. அதையொட்டிய வாக்குவாதம்தான் நேற்றைய சூறாவளியின் மையமாக இருந்தது.
பிக் பாஸ் - 93
பிக் பாஸ் - 93

‘சரியான, தெளிவான காரணங்களை யோசிச்சு சொல்லுங்க’ என்று பிக் பாஸ் அறிவுறுத்தியும், சிலர் தெளிவில்லாமல் பொத்தாம் பொதுவாகத்தான் குத்தினார்கள். 'உன்னை எனக்குப் பிடிக்காதுப்பா. அவ்வளவுதான் போ’ என்கிற மாதிரி சில நாமினேஷன்கள் இருந்தன. “என்னப்பா பண்றது. இது ஒரு கேம்... வேற வழியில்ல” என்கிற கரிசனம் சில நாமினேஷன்களில் இருந்தன. குறிப்பாக பிரியங்காவை தாமரை நாமினேட் செய்த விஷயம் அத்தனை காமெடி.

எபிசோட் 93-ல் என்ன நடந்தது?

பிக் பாஸ் கருணை மனம் படைத்தவர். போட்டியாளர்களுக்கு சோறு போட்ட கையோடுதான் அவர்களை அடிக்கத் துவங்குகிறார். நேற்றும் அதேதான் நடந்தது. மக்கள் ஆர்வமாக உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அசரிரீ போல் திடீரென்று அறிவிப்பைச் செய்தார். “இந்த சீசனின் கடைசி வெளியேற்றப்பட்டியலுக்கான நாமினேஷன் இது. On the Spot Open Nomination. இரண்டு நபர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் இருக்கும் இடத்திற்கே தேடிச் சென்று, சரியான, தெளிவான காரணங்களைச் சொல்லி நாமினேட் செய்ய வேண்டும். நாமினேட் செய்யப்படுபவர்கள் தங்கள் தரப்பு விளக்கத்தைச் சொல்லலாம். ‘காரணம் ஒண்ணும் இல்லையே’-ன்ற மாதிரி புலம்பாம நல்லா யோசிச்சு விளையாடுங்க. இறுதி வாரத்திற்கான முன்னேற்றத்தை இந்த ஓப்பன் நாமினேஷன்தான் தீர்மானிக்கும்” என்று கறாராக அறிவித்தார் பிக் பாஸ்.

அமீர் செய்த நாமினேஷன்

முதலில் அழைக்கப்பட்டவர் அமீர். இவருக்கு நாமினேஷன் பிரச்னையில்லை என்பதால் ஜாலியாக எழுந்து வந்தார். யாரை நாமினேட் செய்கிறோரோமோ, அவரை கட்டியணைத்து மலர் அணிவிக்க வேண்டுமாம். திருவிழாவில் ஆட்டை பிரியாணிக்காக வெட்டுவதற்கு முன்பு, மஞ்சள் பூசி அலங்கரிப்பது போன்றதைப் போலவே இந்தச் சடங்கும் போலிருக்கிறது. ஆண்கள் என்றால் மாலை; பெண்கள் என்றால் மலர் கிரிடம்.

மாலையை எடுத்து நடனமாடிய படியே வந்த அமீர், பிரியங்காவின் அருகில் வந்து ‘லுலுவாயக்கு’ அவரை கட்டிப்பிடித்து அனைவரையும் ஒரு கணம் உறையச் செய்தார். ஆனால், பிரியங்காவை நாமினேட் செய்யாமல் ராஜூ பக்கம் அவர் நகரவே, இந்த விளையாட்டிற்கு மக்கள் அனைவரும் திகிலுடன் சிரித்தார்கள். அவர் ராஜூவிற்கும் அணிவிக்க மாட்டார் என்று எண்ணப்பட்ட நிலையில் மாலையை ராஜூவிற்கே அணிவித்து அதிர்ச்சி தந்தார் அமீர். ராஜூவை நாமினேட் செய்ததற்கு அமீர் சொன்ன காரணம்: “மக்கள் காப்பாத்திடுவாங்கன்னு நம்பிக்கையா இருக்கே... பாக்ஸ் டாஸ்க்ல நான் ஜெயிச்சிருக்க வேண்டியது. ஆனா உனக்காக விட்டுத் தந்தேன். உன்னை நம்பினேன். நீ அதை முறையா விளையாடலை. யாருக்கோ விட்டுத் தந்துதான் கேம் ஆடறேன்னு சொன்னியே. யார் அது? இப்பவாவது சொல்லு” என்றார் அமீர்.

பிக் பாஸ் - 93
பிக் பாஸ் - 93

“அதைச் சொல்ல வேண்டிய நேரம் வந்துடுச்சு” என்கிற முகபாவத்திற்கு மாறினார் ராஜூ. இதன் பின்னணியை சற்று சுருக்கமாக பார்த்து விடுவோம். சிவப்பு விளக்கு, பச்சை விளக்கு டாஸ்க் முடிந்ததுமே வெளியில் வந்த ராஜூவிடம் “யாரை ஃபைனலுக்கு கூட்டிட்டுப் போறீங்க?” என்று நேரடியாகக் கேட்டார் அமீர். ஆனால், அப்போது ராஜூ பதில் சொல்லாமல் சமாளித்து விட்டார். கமலின் விசாரணை நாளிலும் வழக்கம்போல் மழுப்பி விட்டார். ஆனால், இப்போது இறுதிக்கட்டத்தில் அதைச் சொல்லியாக வேண்டிய நிலைமை. “நீதாண்டா அது” என்று ராஜூ சொன்னதும்… “வழக்கம் போல் விளையாடாதே” என்று அமீர் சிரிக்க “உண்மையைத்தான் சொல்றேன்” என்றார் ராஜூ. ஒருவேளை இறுதிக்கட்டத்தில் அமீரும் ராஜூவும் நின்றால், மக்கள் ராஜூவைத்தான் நிச்சயம் தேர்ந்தெடுப்பார்கள், போட்டி கடுமையாக இருக்காது என்பதுதான் ராஜூவின் பிளானோ என்னவோ!

அமீர் – தாமரை ஒப்பந்த முயற்சியின் தோல்வி

பிக் பாஸ் அறிவிக்கும் போதுதான் அமீர் இன்னொரு நபரை நாமினேட் செய்ய வேண்டும். அதுவரை மக்களைத் திகிலுடன் அமர வைத்திருப்பதுதான் ஏற்பாடு. இந்த இடைவெளியில் அவர்களுக்குள் உக்கிரமான மோதல் ஏதாவது நிகழலாம் என்பது பிக் பாஸின் கணக்காக இருக்கும். அது பலித்தது. “அக்கா... நான் ஒரு கேள்வி கேக்கறேன். உண்மையை கரெக்ட்டா சொன்னா, உங்களை நாமினேட் பண்ணாம இருக்கேன்” என்கிற ஒப்பந்தத்தை தாமரையிடம் இட்டார் அமீர். தாமரையும் அதற்கு சம்மதித்தார்.

அமீரின் கேள்வி தர்க்க ஒழுங்குடன் கச்சிதமாக இருந்தது. ஆனால், தாமரைக்கு அது புரியவில்லையோ, அல்லது புரியாதது போல் பாசாங்கு செய்தாரோ என்று தெரியவில்லை. தெளிவான பதில்களைச் சொல்லாமல் போட்டுக் குழப்பினார். தன் தடுமாற்றத்தை உரத்த குரலில் பேசி மறைத்துக் கொள்வது தாமரையின் ஸ்டைல். எனவே அதையே இந்தச் சமயத்திலும் பயன்படுத்தினார்.
பிக் பாஸ் - 93
பிக் பாஸ் - 93

“அக்கா ஓகே... முட்டை டாஸ்க்ல நாங்கதான் டீமா ஆடினோம்-ன்னு சொல்றீங்கள்ல... அப்படியே வைச்சுப்போம். நாங்க டீமாத்தான் ஆடினோம். ஆனா… நீங்க ஏன் ராஜூவோட முட்டையை உடைக்கலை?” என்பதுதான் அமீர் வைத்த ஆணித்தரமான கேள்வி. ஆனால், இதற்கு தாமரை சுற்றிச் சுற்றி வந்து செய்த அழிச்சாட்டியம் இருக்கிறதே?! மறுபடியும் அதேதான். அவர் உண்மையாகவே வெள்ளந்தியா? அல்லது அப்படியொரு பாவனையை திறமையாக செய்கிறாரா? இதைத் தெரிந்து கொள்ளாமலேயே இந்த சீசன் முடிந்துவிடும் போலிருக்கிறது. ஆனால் பாவனைதான் செய்கிறார் என்பதை பல இடங்களில் அறிய முடிகிறது.

“'என் முட்டையை வந்து எடுத்துக்கோ’ன்னு ராஜூ சொன்னான்… அதையும் செய்யலை… ‘உடை’ன்னு சொன்னான்... அதையும் நீங்க பண்ணலை. ஆனா ‘நீங்க மட்டும் டீமா விளையாடினீங்க... நான் தனியா அநாதையா நின்னேன்’னு புலம்பறீங்களே? ஏன்? இதுக்கு சரியா பதில் சொன்னா நாமினேட் செய்ய மாட்டேன்” என்று அமீர் மீண்டும் தெளிவாக கேட்க, ‘சுத்தி சுத்தி வந்தீக’ பாணி அழிச்சாட்டியத்தை தாமரை மீண்டும் பின்பற்ற, “நீங்க சொல்றது ஏத்துக்கற மாதிரி இல்ல. அதனால உங்களை நாமினேட் செய்யறேன்” என்றார் அமீர். ஆக இவர் நாமினேட் செய்தது ராஜூ மற்றும் தாமரை.

நிரூப் செய்த நாமினேஷன்

அடுத்ததாக அழைக்கப்பட்டவர் நிரூப். இவரும் ராஜூவை நாமினேட் செய்வது போல் விளையாடிவிட்டு நேராக சிபியிடம் சென்றார். “வா அருணாச்சலம்... நீ வருவேன்னு எனக்குத் தெரியும்” என்று சிபியும் அதற்கு தயாராகவே இருந்தார். “ராஜூவிற்கு மக்கள் சப்போர்ட் இருக்கு. அதனால அவனை நாமினேட் பண்றது வேஸ்ட். இங்க தனியா ஆடறவங்களுக்கு சப்போர்ட் இல்லை.” என்று ஆரம்பித்து இரண்டு விளம்பர இடைவேளை வரைக்கும் நீளமாக லாஜிக் பேசினார் நிரூப். “யப்பா டேய்... நீ நாமினேட் பண்ணனும்னு முடிவு பண்ணிட்டே. அதைச் செஞ்சுட்டு போ. பேசி பேசி உயிரை வாங்காதே" என்று நொந்து போய் மாலையை வாங்கி தானே கழுத்தில் மாட்டிக் கொண்டார் சிபி.

பிக் பாஸ் - 93
பிக் பாஸ் - 93

“நான் கேம் ஆடினது சரியில்லைன்னு சொல்றே. நீ பிரியங்கா கிட்ட காயின் எடுத்தது மட்டும் என்ன? ராஜூவைத்தானே மக்கள் சப்போர்ட் பண்ணப் போறாங்க... அப்ப நீ ஏன் ஃபைனல் போகணும்?’’ என்று சிபியும் நிரூப்பிடம் பல்வேறு விதமாக பதிலுக்கு மல்லுக்கட்டிப் பார்த்தார். ஆனால் முடியவில்லை. இன்னொரு பிரியங்காவாக மாறி விதம் விதமான லாஜிக்கைப் பேசி காதில் ரத்தம் வரவழைத்தார் நிரூப்.

அடுத்ததாக தாமரையிடம் சென்ற நிரூப், “எப்படியும் உன்னை மக்கள் காப்பாத்திடுவாங்க. அதுவும் இல்லாம, ‘ஜெயிக்கணும்-ன்றது என் விருப்பம் இல்லை’ன்ற மாதிரி நீ சொல்ற..” என்று சொல்ல, நிரூப்பின் நாமினேஷனை புன்னகையுடன் ஏற்றுக் கொண்டார் தாமரை. அப்போதைக்கு தனக்கு வேண்டியவர்கள் என்றால் சிரித்த முகமும் வேண்டாதவர்கள் என்றால் சீரியஸ் முகமும் காட்டுவதும் தாமரையின் பழக்கம். எனவே நிரூப்பின் நாமினேஷனுக்கு அவர் பெரிதாக விளக்கம் சொல்லவில்லை. ஆக... நிரூப் நாமினேட் செய்தது சிபி மற்றும் தாமரை. ஆச்சா..?!

பாவனியின் ரணகளமான நாமினேஷன்

அடுத்ததாக அழைக்கப்பட்டவர் பாவனி. இவர் ராஜூ மற்றும் சிபியைத்தான் நாமினேட் செய்வார் என்பதை முன்னரே யூகிக்க முடிந்தது. ராஜூவிற்கும் இவருக்கும் ஏற்கெனவே வாய்க்கா தகராறு உள்ளது. மட்டுமல்லாமல் முட்டை டாஸ்க்கில் ராஜூவும் சிபியும் கூட்டணி வைத்து பாவனியை டார்கெட் செய்ததால் அது தொடர்பான கடுப்பில் இருக்கிறார்.
பிக் பாஸ் - 93
பிக் பாஸ் - 93

“Happy Nomination” என்று வாழ்த்திவிட்டு ராஜூவின் கழுத்தில் மாலையணிவித்த பாவனி “நான் உங்க கூட பழக எவ்வளவோ முயற்சி பண்ணேன். முடியல. ஆனா நீங்க எப்பவுமே என்னை அடிக்கறதுக்கு ஒரு டார்கெட்டாவே வெச்சு அழகு பார்க்கறீங்க... முட்டை டாஸ்க்ல (அய்யோ... இந்த முட்டை... முடியலடா சாமி..!) என்னைத்தான் நீங்க டார்கெட் பண்ணீங்க. நான்தான் உங்களுக்கு சிம்பிள் டார்கெட்” என்று தன் புகாரை ஆரம்பிக்க, “எதுக்கு நான் உங்களுக்கு விளக்கம் தரலை? நீ யாரு. அண்ணனா... தம்பியான்னு கேட்டீங்க. அப்புறம் எப்படிப் பேச முடியும்? நீங்க செய்யற தப்பையெல்லாம் ஒத்துக்க மாட்டீங்க. பழகின ஆளையே அப்புறம் போட்டுக் கொடுப்பீங்க. நீங்க நம்பத்தகுந்த ஆள் கிடையாது. அதனாலதான் உங்ககிட்ட நெருங்கவே எனக்குப் பயம். மாத்தி மாத்தி பேசுவீங்க... உங்களையெல்லாம் நான் டார்கெட் பண்ணவே தேவையில்லை” என்று மூச்சு வாங்கப் பேசினார் ராஜூ.

“பேச வேணாம்னு சொன்ன விஷயத்தை மறுபடியும் நீதான் ஆரம்பிக்கறே. அன்னிக்கு டாஸ்க்லயும் சொன்னேன். நீ கேட்கலை” என்கிற குற்றச்சாட்டை ராஜூ வைக்க “சபாஷ்... நல்லாப் பண்றீங்கப்பா” என்கிற முகபாவத்தைத் தந்த பாவனி “இது வேணாம். விட்டுடுங்கன்னு நான் ஆட்சேபிக்கும் போதெல்லாம் பேசிட்டு, நான் விளக்கம் தரும்போது மட்டும் தேவையில்லாம போயிடுமா?” என்று லாஜிக்காக பாவனி மடக்க “அப்ப அறிவில்லாம பேசிட்டம்மா.. கமல் சார் சொன்னப்புறம் அறிவு வந்துடுச்சு. ஆள விடு” என்று எஸ்கேப் ஆனார் ராஜூ.

அது சாதா முட்டையா, இல்லைன்னா வான்கோழி முட்டையா?

அடுத்ததாக சிபியிடம் பாவனி செல்ல, அதை எதிர்பார்த்த எக்ஸ்பிரஷனை மறுபடியும் தந்தார் சிபி. “முட்டை டாஸ்க்ல நீங்க டீமா நின்னு என்னை டார்கெட் பண்ணீங்க. நான் தனியா விளையாடினேன்” என்று பாவனி சொன்ன காரணத்தை, அதிக விளக்கம் கேட்காமல் ஏற்றுக் கொண்ட சிபி “இந்த முட்டை டாஸ்க் ரொம்ப பெரிய அளவிற்குப் போய் இம்சையைக் கூட்டுதே? வான்கோழி முட்டையா இருக்குமோ?” என்று அலுத்துக் கொண்டார்.

பிக் பாஸ் - 93
பிக் பாஸ் - 93

இந்தச் சமயத்தில் ராஜூ ஏதோ சொல்ல முற்பட, “நான் இங்க பேசிட்டிருக்கன் தம்பி…” என்று வடிவேலுவாக மாறினார் பாவனி. “பிரியங்கா கூட நீங்க டீம் சேரலையா?” என்று சிபி கேட்க, “இல்லை. நான்தான் என் முட்டையை அவங்களுக்குத் தந்துட்டுப் போனேன்” என்றார் பாவனி. “பிரியங்காதான் முட்டை தர்றேன்னு சொன்னாங்கள்ல. அப்புறம் அதையும் வாங்காம நீயும் தாமரையும் ‘அநாதை... அநாதை’ன்னு சொல்லிட்டு திரியறீங்களே..?” என்று ராஜூ தன் எரிச்சலைக் காட்ட, “எனக்கு அப்படி விளையாடனும்னு அவசியமில்லை” என்று மல்லுக்கட்டினார் பாவனி.

சிபி செய்த நாமினேஷன்

அடுத்ததாக சிபியின் நாமினேஷன். இரண்டு மாலைகளை கைகளில் சுழற்றிக் கொண்டு அவர் வந்த போதே நிரூப்பிற்கு தெரிந்து போயிற்று. “எந்தக் கலர் மாலை வேணும்?” என்று நக்கலாகக் கேட்டார் சிபி. “உனக்குப் பயம். ராஜூவைக் கண்டா பயம்... மக்கள் அவனைக் காப்பாத்திடுவாங்கன்னு நீயேதான் சொன்னே. நீ கேமிற்கு நேர்மையா ஆடலை. தோத்துடுவோம்ன்ற பயம் உச்சக்கட்டத்துல இருக்கு.” என்று காரணம் சொன்னார் சிபி. “ஆமாம்டா... என் இப்போதைய யூகத்தின்படி ராஜூ, பிரியங்காதான் ஃபைனல் வருவாங்கன்னு தோணுது. அது பயம்தான். ஆனா நான் அதை மாத்துவேன்” என்று விளக்கம் சொன்னார் நிரூப்.

பிக் பாஸ் - 93
பிக் பாஸ் - 93

அடுத்த மாலையைக் கொண்டு போய் ராஜூவின் கழுத்தில் அணிவித்தார் சிபி. “நீ அமீரை சப்போர்ட் பண்றே. அப்படின்னா, நான் வரக்கூடாதுன்னு நெனக்கறே இல்லையா?” என்றார் சிபி. இவரின் ஈகோ எளிதில் காயப்படக்கூடியது என்பது நன்றாகவே தெரிகிறது. “அதை ஏண்டா அப்படிப் பார்க்கறே. நீ கண்டிப்பா வந்துடுவே... அதனால்தான் நான் அமீரை ஆதரிக்கிறேன்னு வெச்சுக்கோயேன்” என்று ராஜூ சமாதானம் சொன்னாலும் சிபி அதை ஏற்கவில்லை. ஆக சிபி நாமினேட் செய்த நபர்கள் நிரூப் மற்றும் ராஜூ.

நிரூப் பற்ற வைத்த நெருப்பு

அடுத்த ஆளைக் கூப்பிடும் வரை டைம்பாஸ் ஆக வேண்டுமே என்று நிரூப் நினைத்தாரோ, என்னமோ... தாமரையின் அருகில் சென்று, “நீ ஏன் ராஜூ முட்டையை உடைக்கலை? அமீர் கேக்கறது சரிதானே?” என்று மெதுவாக ஆரம்பிக்க, தாமரை என்னும் அடுப்பு கப்பென்று மிக வேகமாக பற்றிக் கொண்டது. “ஏண்டா இதையே எல்லோரும் என் கிட்ட கேட்கறீங்க?” என்று அவர் ஹைடெஸிபலில் ஆரம்பிக்க, தீபாவளி சரவெடி போல் தாமரையும் அமீரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். “அக்கா உங்களுக்கு மேல எனக்கு கத்தத் தெரியும்” என்று தாமரையிடம் மல்லுக்கட்டினார் அமீர். “ராஜூ உன்னை டீம்லயே சேர்க்கலை. அப்புறம் எப்படி நீயா டீம், டீம்னு சொல்லுவே?” என்று அமீரையே குழப்பினார் தாமரை.

நாமினேஷன் செய்ய அழைக்கப்பட்டார் ராஜூ. 'ஓகே. நம்ம கடமையை நாம செய்யறோம்... என்ன பண்றது?’ என்கிற மோடில் எழுந்த ராஜூ, எதிர்பார்த்தபடியே முதலில் பாவனியை நோக்கிச் சென்று நாமினேட் செய்தார். “சப்போர்ட் கிடைக்கும்போது உபயோகிக்கலை. ஆனா டாஸ்க் முடிஞ்சப்புறம் ‘நான் தனியா விளையாடினேன்’ன்னு சொல்றதை ஏத்துக்க முடியலை” என்று சுருக்கமாகக் காரணம் சொல்லிவிட்டு அடுத்தாக சிபியின் பக்கம் வந்தார். அது பெண்கள் அணியும் மலர் கிரிடம் என்பதாலோ, என்னமோ, சிபி அதை தலையில் அணிய மறுத்து கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்டார். ஆக ராஜூ நாமினேட் செய்தது பாவனி மற்றும் சிபி. மிக எளிமையான சடங்காக இது நடந்து முடிந்தது.

பிக் பாஸ் - 93
பிக் பாஸ் - 93

பிரியங்காவின் நாமினேஷன்

அடுத்து அழைக்கப்பட்டவர் பிரியங்கா. இவர் நேராக சென்ற இடம் தாமரை. “நான் உன்னை அதிகம் நாமினேட் பண்ணதில்லை. இதுவரை ஒருமுறைதான் செய்திருப்பேன். பிரியங்கா –ன்னா புளியங்கா மாதிரி ஈஸியா நெனக்கறீங்க... நான் என்ன அவ்வளவு ஈஸியான டார்கெட்டா?” என்று சிரிப்பும் சீரியஸூமுமாக பேசி தாமரையை நாமினேட் செய்ய “என் டர்ன் வரட்டும்... அப்ப வெச்சுக்கறேன் கச்சேரியை” என்று சிரிப்புடன் பொருமினார் தாமரை.

எதிர்பார்த்தபடியே பிரியங்கா அடுத்து சென்ற இடம் நிரூப். “இதை ரொம்ப சங்கடமாத்தான் பண்றேன். நீ தனியா விளையாடறவன், லாஜிக்கா யோசிப்பே. ஆனா அப்படி யோசிக்கறவங்க, இப்படி எல்லாத்தையும் வெளில சொல்ல மாட்டாங்க! நீ எனக்கு ஒரு பிரெண்டா எதுவுமே சொல்லலை. என்னை Evil-ன்னு சொன்னே. இன்னொரு பக்கம் மக்கள் ஆதரவு இருக்குன்னு சொல்றே. ஒண்ணும் புரிய மாட்டேங்குது. சென்ஸே இல்லாம பேசற” என்று பேசிய பிரியங்காவிற்கும் நிரூப்பிற்கும் இடையே சூடான வாக்குவாதம் நடைபெற்றது. இதன் நடுவில் பிரியங்காவை ராஜூவிடம் கோத்துவிட நிரூப் முயன்றார். ஆனால் அமைதியாக இருந்து, தூங்குவது போல் நடித்து தப்பித்துக் கொண்டார் ராஜூ. “இந்த ஷோக்கு அப்புறமும் ஒரு லைஃப் இருக்கு. கேம் மட்டுமே முக்கியம் இல்ல” என்கிற அறிவுரையை நிரூப்பிற்கு எரிச்சலோடு வழங்கினார் பிரியங்கா. ஆக பிரியங்கா நாமினேட் செய்தது, தாமரை மற்றும் நிரூப்.

தாமரையின் ஜாலி நாமினேஷன்

கடைசி நாமினேஷன் தாமரையுடையது. இவர் பிரியங்காவை நாமினேட் செய்தது ஜாலியான காமெடியாக இருந்தது. இருவரும் சீரியஸாக பேச முயன்று தன்னிச்சையாக பரஸ்பரம் சிரித்துக் கொண்டார்கள். “கட்டிப்பிடிச்சுட்டு அப்புறம் எப்படி நாமினேட் பண்றது?” என்று சிணுங்கிய தாமரை, பிரியங்காவை “வாங்க... போங்க...” என்று பேச ஆரம்பித்து காரணம் சொல்ல ஆரம்பிக்க, ‘இந்த மரியாதை எப்போதுல இருந்து?' என்று குறும்பாக பார்த்தார் பிரியங்கா. “நீங்கதான் கோபத்தைத் தூண்டினீங்க. தப்பு செஞ்சவனை விட தப்பு செய்யத் தூண்டியவனுக்குத்தான் தண்டனை. உங்களால்தான் கமல் சார் கிட்ட நான் கெட்ட பெயர் வாங்கினேன்” என்றெல்லாம் பன்ச் டயலாக்குகளாக பேசிய தாமரை, “உங்க மேல இருக்க அன்பு என்னிக்கும் மாறாது. அது வேற... நாமினேஷன் வேற” என்று பலமாக அடித்துவிட்டு சந்தனமும் பூசிவிட்டார்.

பிக் பாஸ் - 93
பிக் பாஸ் - 93

அடுத்ததாக நிரூப்பிடம் சென்ற தாமரை, “நீ ரொம்ப திறமைசாலி. ஏன் மத்தவங்க ஜெயிப்பாங்கன்னு சொல்றே? நம்பிக்கையை இழக்காதே,.. நீதான் ஜெயிப்பே..” என்று சொல்லி நாமினேட் செய்தார். ஒருவரை ஊக்கப்படுத்தி விட்டு இன்னொரு பக்கம் நாமினேட் செய்வதற்கும் ஒரு அசாத்திய திறமை வேண்டும். “நான் சொன்னதை சரியா புரிஞ்சுக்கோங்க அக்கா... அது இப்பத்திய நிலைமை. நாளை எப்படி வேணா மாறலாம். மாத்த வைப்பேன்” என்று நிரூப் நம்பிக்கையுடன் பேசினார்.

ஒருவழியாக அனைவரும் நாமினேஷன் சடங்கை முடித்ததும், “அமீரைத் தவிர நீங்கள் எல்லோருமே எலிமினேஷன் பட்டியலில் இருக்கிறீர்கள்” என்று சொல்லி அன்றைய நாளின் ஆட்டத்தை முடித்தார் பிக் பாஸ். இதை ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தால் போட்டியாளர்களின் நேரம் மிச்சமாகி இருக்குமோ, இல்லையோ, பார்வையாளர்களின் நேரமாவது மிச்சமாகி இருக்கும்.