Published:Updated:

பிக் பாஸ் 94: `தாமரை'யைக் கலாய்த்த `அன்பே சிவம்' சரத்குமார்; கவுன்சிலிங் கொடுத்து அழவைத்த பிக் பாஸ்!

பிக் பாஸ் 94

“விருந்தினர் ஒருவர் வருவார்” என்று மொட்டையாக ஒரு கடுதாசி வந்திருந்தது. "யாராக இருக்கும்... பழைய போட்டியாளர் யாராவது வருவாங்களா?” என்று மக்கள் தலையைப் பிய்த்துக் கொண்டார்கள்.

பிக் பாஸ் 94: `தாமரை'யைக் கலாய்த்த `அன்பே சிவம்' சரத்குமார்; கவுன்சிலிங் கொடுத்து அழவைத்த பிக் பாஸ்!

“விருந்தினர் ஒருவர் வருவார்” என்று மொட்டையாக ஒரு கடுதாசி வந்திருந்தது. "யாராக இருக்கும்... பழைய போட்டியாளர் யாராவது வருவாங்களா?” என்று மக்கள் தலையைப் பிய்த்துக் கொண்டார்கள்.

Published:Updated:
பிக் பாஸ் 94

வெளியே சென்ற போட்டியாளர்கள் சிறப்பு விருந்தினர்களாக உள்ளே வருவார்கள் என்று பார்த்தால், ‘அன்பே சிவம்’ கமல் ஜாடையில் சரத்குமார்தான் உள்ளே வந்தார். கூடவே ஒரு சூட்கேஸ். “என்ன தாமரை... குளத்துல இருந்து வர்றீங்களா?” என்பதையெல்லாம் அவர் சீரியஸாகவே ஜோக்காக கருதுகிறாரா என்று தெரியவில்லை. ஆனால் உடலைப் பேணுவதைப் பற்றி அவர் தொடர்ந்து வலியுறுத்தியது சிறப்பு. உடலும் மனமும் நெருக்கமானது. ஒன்றின் ஆரோக்கியம், இன்னொன்றிற்கு மிக அவசியம்.

சரத் அறிவித்துச் சென்ற 3 லட்சம் பணத்தை மற்றவர்கள் எடுக்க மாட்டார்கள். ஒருவேளை தாமரை மனம் மாறலாம் என்று தோன்றுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம். பிக் பாஸ் இன்னமும் ரேட்டை ஏற்றி ஆசையைக் கூட்டுவார்.

பாவனி – சிபி நடத்திய ‘லவ் டிராமா’ கன்டென்ட்டுக்காக செய்யப்பட்டதுதான் என்றாலும் சுவாரஸ்யமாக இருந்தது. இது போன்ற தருணங்கள் மிகுந்தால் சீசனின் சிறப்பும் கூடவே மிகும். மறுபடியும் சீசன் 3-ல் சாண்டி & கோ அடித்த லூட்டிகள்தான் இன்னமும் பசுமையாக நினைவிற்கு வருகின்றன. What a season!

பிக் பாஸ் 94
பிக் பாஸ் 94

எபிசோட் 94-ல் என்ன நடந்தது?

‘பை... பை... பை…’ என்கிற பாட்டை பிக் பாஸ் காலையில் போட்டவுடன் இன்று ‘மணி டாஸ்க்கில்’ ஐந்து லட்சம் தரப்போவதைத்தான் மறைமுகமாக முன்பே சொல்கிறாரோ என்று நினைத்தேன். “என்னாடி இவங்க... வேலையே செய்ய மாட்டேன்றாங்க?” என்று ஆண்களைப் பற்றி பெண்கள் அணி கூடி புகார் செய்து கொண்டிருந்தது. “முதல்ல இருந்தே இவங்களை கண்டிச்சு வளர்த்திருக்கணும். சீசனே முடியப் போவுது. இப்ப என்ன பண்றது? இப்ப தலைவர்ன்னு வேற யாரும் இல்லை” என்று அலுத்துக் கொண்டார் பிரியங்கா. “வீட்ல புருஷன் ஒரு வேலை செஞ்சா நமக்கு எத்தனை சந்தோஷமா இருக்கும்?” என்று தாமரை சொன்னது பெரும்பாலான பெண்களின் பெருமூச்சு புகார். வீட்டுப் பணிகளில் பாதி சதவிகிதமாவது ஆண்கள் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் அவசரமான நேரங்களிலாவது உதவ வேண்டும். “ஆபிஸ்ல எங்களுக்கு எப்படி உயிர் போவுது தெரியுமா?” என்று எப்போதும் சீன் போடக்கூடாது. (“நீங்க செய்யறீங்களா பாஸ்?” என்றெல்லாம் கேட்டு சங்கடப்படுத்தக்கூடாது).

சிபி உடைத்த பிக் பாஸ் பர்னிச்சர்

“நான் உன்னை ரொம்ப வருஷமா லவ் பண்றேன்” – இப்படி பாவனியிடம் அமீர் வந்து சொல்லியிருந்தால் கூட அத்தனை அதிர்ச்சி இருந்திருக்காது. ஆனால் திடீரென்று சிபி வந்து சொன்னதும் தூக்கி வாரிப் போட்டது. பிறகுதான் தெரிந்தது, அது பொழுதுபோக்கிற்காக செய்யப்படும் டிராமா என்று. ‘ஆட்டையும் மேய்ச்சது மாதிரி ஆச்சு. அண்ணனுக்கு பொண்ணு பார்த்த மாதிரியும் ஆச்சு’ என்று ஒரு சொலவடை உண்டு. அதுபோல இவர்களுக்கு நேரமும் போகும். பிக் பாஸிற்கு ஒரு கன்டென்ட்டும் கிடைக்கும்.

பிக் பாஸ் 94
பிக் பாஸ் 94

“பொண்ணோட அப்பா நீதானே... போய் என்னன்னு கேளு” என்று ராஜூவை பிரியங்கா உசுப்பிவிட “அய்யோ… இவளுக்கு நான் தகப்பனா... வெளங்கிடும்’ என்று நொந்தபடியே எழுந்து சென்றார் ராஜூ. மாமனார் ராஜுவை, “இத பாருப்பா தம்பி...” என்று சிபி அழைத்தது நல்ல காமெடி. “பொண்ணு எனக்குத்தான் வந்தாகணும்” என்று மிரட்டினார் சிபி. இடையில் மாப்பிள்ளை நிரூப் வந்து பேசி, “அவனே கூட்டிட்டுப் போகட்டும்" என்று எஸ்கேப் ஆனார். இந்த நாடகத்தின் ஆன்ட்டி கிளைமாக்ஸாக அமீர் வந்து பாவனியை இழுத்துச் சென்று ட்விஸ்ட் தந்தார். விளையாட்டு ஆர்வத்தில் சிபி தலையணையை எடுத்து வீச, அது சாண்டிலியர் விளக்கின் மீது பட்டு அதன் ஒரு பகுதி உடைந்து விழுந்தது.

“அய்யா மன்னிச்சுடுங்கய்யா... எதையாவது மனசுல வெச்சிக்கிட்டு சம்பளத்துல கை வெச்சிடாதீங்க” என்று சிபி பதற “உனக்கு ஆயுள் பூரா சம்பளமே கிடையாது. உங்க போதைக்கு எங்க பிராப்பர்ட்டி ஊறுகாயா?” என்று பிக் பாஸின் மைண்ட் வாய்ஸ் அலறியிருக்கக்கூடும்.

டைமண்ட் பெட்டியுடன் வந்த சரத்குமார்

“விருந்தினர் ஒருவர் வருவார்” என்று மொட்டையாக ஒரு கடுதாசி வந்திருந்தது. "யாராக இருக்கும்... பழைய போட்டியாளர் யாராவது வருவாங்களா?” என்று மக்கள் தலையைப் பிய்த்துக் கொண்டார்கள். "வந்துட்டு போயிடுவாங்கள்ல?” என்று பதறினார் சிபி. கடைசி நேரத்தில் வைல்ட் கார்டா என்று அவர் திகிலடைந்திருக்கலாம். ஏற்கெனவே அமீர் வேறு கடுமையான போட்டியாக இருக்கிறார்.

பிக் பாஸ் 94
பிக் பாஸ் 94

‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்கிற மாதிரி முறுக்கு மீசையுடன் சரத்குமார் உள்ளே வந்தார். “உங்களைப் பார்த்ததுல ரொம்ப மகிழ்ச்சிங்க. என்ன பேசறதுன்னே தெரியலங்க” என்று வாய் நிறைய சிரிப்பாக தாமரையும் பிரியங்காவும் பாவனையாக மகிழ்ந்தார்கள். (எதுக்கு இந்த டிராமால்லாம்?!). “கொஞ்சம் கொஞ்சம் பிக் பாஸ் பார்ப்பேன். உங்களையெல்லாம் கொஞ்சம் ஸ்டடி பண்ணி வெச்சிருக்கேன்” என்று சொன்ன சரத்குமார், “ராக்கெட் சயின்ஸ் கத்துக்கற அளவிற்கு தாமரையின் அறிவு வளர்ச்சி வேகமா வளர்ந்துட்டு இருக்கு” என்று சொல்லி விஞ்ஞானிகளுக்கு அதிர்ச்சி கொடுத்தார். “உங்களை யாராவது வெளியே துரத்த முயற்சி பண்ணியிருப்பாங்களே?” என்று அமீரிடம் சொல்லி “சிபியை’ குறும்பாக பார்த்தார்.

பிக் பாஸ் கேமில் பிஹெச்டி அளவிற்கு நிரூப் தேறியிருக்கிறாராம். மனதில் பட்டதை அப்படியே பேசி விடும் சிபியின் நேர்மையைப் பாராட்டி விட்டு "'குளிச்சுட்டு வந்துடறேன்'ன்னு ராஜூ சாதாரணமா சொல்றது கூட வெளியே மீமா ஆகிடுது” என்று சரத்குமார் பாராட்ட, சலனமில்லாத முகத்துடன் மகிழ்ச்சியடைந்தார் ராஜூ.

தனது உடலை தொடர்ந்து கச்சிதமாகப் பேணுகிறவர்கள், அதன் முக்கியத்துவத்தை தொடர்ந்து மற்றவர்களுக்கு பரிந்துரைத்துக் கொண்டே இருப்பார்கள். சரத்குமார் அப்படிப்பட்ட ‘ஜிம்பாடி’களில் ஒருவர். எனவே உடல் ஆரோக்கியம் குறித்து அவர் இங்கும் வலியுறுத்திக் கொண்டிருந்தது பாராட்டத்தக்கதது. உடலும் மனமும் ஒன்றொன்றையொன்று சார்ந்திருக்கும் சமாச்சாரம். ஒன்று சோர்ந்தால், கூடவே இன்னொன்றின் பாதிப்பு தெரியும்.

பிக் பாஸ் 94
பிக் பாஸ் 94

“உடற்பயிற்சி செய்கிறீர்களா?” என்று பி.டி. மாஸ்டர் போல் சரத் கேட்க “முட்டை இல்லாததால செய்யலை” என்று அற்பமான காரணத்தைக் கூறினார் நிரூப். “அப்ப பொருளாதார ரீதியா பின்தங்கி இருக்கறவங்க. எக்சர்சைஸ் பண்றதில்லையா?” என்று ஜாலியாகக் கேட்டு அவரை மடக்கினார் சரத். “இல்ல சார். அந்த மாதிரி ஒரு டயட்ல இருக்கேன்” என்று சமாளித்தார் நிரூப். “நீங்கள்லாம் எவ்வளவு தண்டால் எடுப்பீங்க?” என்று அடுத்த கேள்விக்கு சரத் தாவ “Push வரும். Up வராது சார்” என்று ஜாலி கமெண்ட் அடித்தார் ராஜூ. அமீரும் சிபியும் களத்தில் இறங்க மளமளவென்று தண்டால் எடுத்து அசத்தினார் அமீர். தாமரைக்கும் பிரியங்காவிற்கும் இடையில் நடந்த Arm Wrestling-ல் தாமரை ஜெயித்தது ஆச்சர்யமில்லை. (கிராமத்து வலிமை!).

பிக் பாஸூம் வெப்சீரிஸூம் ஒண்ணு!

“எனக்கு 27 வயசாவுது” என்று அடுத்த சப்ஜெக்டை ஆரம்பித்து சரத்குமார் பேச, "அந்தக் குழந்தையே நீங்கதான் சார்” என்று ராஜூ சொன்னதைக் கூட சரத் கவனிக்கவில்லை. ஆனால், “25-தான் இருக்கும்” என்று தாமரை சொன்னதிற்கு அநியாயத்திற்கு வெட்கப்பட்டார். (பாவனிக்கே 17 வயசு–ன்னு சொல்லி ஆரம்பத்துல அல்வா கொடுத்தவங்க தாமரை என்பது சரத்திற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை). “நான் வந்த விஷயம் என்னன்னா…” என்று சரத் சொன்ன பிறகுதான் அவர் நடித்த ‘வெப்சீரிஸை’ அறிமுகம் செய்ய வந்திருக்கிறார் என்பது தெரிந்தது. ‘பரம்பரா’ என்று தலைப்பிடப்பட்டிருந்த அந்தத் தெலுங்குத் தொடர், தமிழ் டப்பிங்கில் ஒலித்தாலும் அப்பட்டமான தெலுங்கு வாடையை மறைக்க முடியவில்லை.

“இந்த வெப்சீரிஸோட கதையும் பிக் பாஸ் விளையாட்டும் ஒருவகையில் ஒண்ணுதான். குடும்பத்திற்குள் நிகழும் பகைதான் இதன் மையம்” என்றார் சரத். “தோல்வி என் வீட்டு வாசலை மிதிச்சதில்லை. வெற்றி என் வீட்டு வாசலை தாண்டியதில்லை” என்கிற வசனம் அதில் நன்றாக இருந்தது. சிபியின் நேர்மையை மறுபடியும் பாராட்டிய சரத், பாவனியை "‘பாவம் நீ’ என்று பெயர் மாற்றி விடலாம். அந்த அளவிற்கு கண்ணீர் விடுகிறார்” என்று கிண்டலடித்தார். (அக்ஷரா வந்த எபிசோட் எல்லாம் சரத் பார்க்கவில்லை போல).
பிக் பாஸ் 94
பிக் பாஸ் 94

மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய அமீர்

“மணி டாஸ்க் தருவதற்காகத்தான் சரத் வந்திருப்பார்” என்று மக்கள் யூகித்தது உண்மையாயிற்று. ஆனால் “கத்தையா தருவாருன்னு பார்த்தா... ஒத்தையா தராரே” என்கிற வசனம் போல மூன்று லட்சத்தை வைத்து ஆசை காட்டி விட்டு விடை பெற்றுக் கொண்டார் சரத். “அந்தப் பெட்டி சூப்பர்.. அது மட்டும் எனக்கு வேணும்” என்றார் நிரூப். “நான் எடுத்தாலும் எடுத்துடுவேன்” என்று சொல்வதின் மூலம் மற்றவர்களை உசுப்பேற்ற முயன்றார் நிரூப். “நான் இருக்கற வரைக்கும் நீயும் இருடா. பணத்தை எடுக்காதே” என்று உருகினார் தாமரை.

“அப்ப டாஸ்க்லாம் கிடையாதா?” என்று அமீர் சந்தேகம் கேட்க “இனிமே ஒண்ணு இருக்கும்” என்றார் பாவனி. “பணத்தை யாரும் எடுக்க மாட்டாங்க. நான் நிச்சயம் எடுக்க மாட்டேன்” என்ற அமீர் “நீயும் எடுக்க மாட்டேன்னு தெரியும்” என்று சொல்ல “அது எப்படி நீ சொல்லலாம்?” என்று ஜாலியாக இடக்கு செய்தார் பாவனி. “நீ போயிட்டா நான் என்ன செய்வேன்?” என்று ரொமான்ஸ் வசனம் பேசி மறுபடியும் முருங்கை மரத்தில் ஏறினார் அமீர்.

பிக் பாஸ் 94
பிக் பாஸ் 94

கன்ஃபெஷன் ரூமிற்குள் கவுன்சிலிங்

வாக்குமூல அறைக்கு போட்டியாளர்கள் ஒவ்வொருவரையும் அழைத்த பிக் பாஸ் அவர்களின் நினைவுகளைப் பற்றி விசாரிக்கத் துவங்கினார். முதலில் வந்தவர் நிரூப். “வந்த ரெண்டு மூணு நாள்லயே பைனல் வரைக்கும் போகணும்னு முடிவு பண்ணிட்டேன். வெளியே போனவுடனே என் தம்பியை கட்டியணைச்சு அவன்கிட்ட பேசணும். அற்பமான சண்டைக்காக அவன் கிட்ட 15 வருஷமா பேசாம இருந்துட்டேன். யாருன்னு தெரியாமயே பிக் பாஸ் வீட்டு மக்கள் கூட எமோஷனலா கனெக்ட் ஆக முடியும் போது தம்பி கூட ஆகாதது நெனச்சு குற்றவுணர்வா இருக்கு. வேற சில பிளான்லாம் இருக்கு” என்ற நிரூப்பிடம் ‘மறக்க முடியாத தருணம்’ பற்றி விசாரித்தார் பிக் பாஸ்.

“நான் பொதுவா அழற ஆசாமி கிடையாது. ஆனா அண்ணாச்சி கூட ரொம்ப க்ளோஸ் ஆயிட்டேன். இது அவருக்குத் தெரியுமான்னு தெரியல. (எங்களுக்கே இது தெரியாதுப்பா!). அவரு போன அன்னிக்கு பாத்ரூம்ல ரொம்ப நேரம் அழுதேன். அந்தத் தருணம் மறக்க முடியாது. நான் எமோஷனல் டைப் கிடையாது. ஆனா இந்த வீடு எனக்குள்ள இருந்த இன்னொரு நிரூப்பை அடையாளம் காண்பிச்சது. நான் உங்களை மச்சான்னு சொல்லி கலாய்ப்பேன். தப்பா நெனச்சுக்காதீங்க” என்று நிரூப் பிக் பாஸை செல்லம் கொஞ்ச “போய்ட்டு வா மச்சான்...” என்று பிக் பாஸூம் இறங்கி வந்தார்.

பிக் பாஸ் 94
பிக் பாஸ் 94

“கிடைச்சதுக்கு முதல்ல சந்தோஷப்படுங்க அமீர்!”

அடுத்ததாக அழைக்கப்பட்டவர் அமீர். “முதல் Finalist ஆனதற்கு வாழ்த்துகள்” என்று பாராட்டிய பிக் பாஸிடம் “இந்த வீட்டுக்கெல்லாம் என்னால வர முடியும்னு நான் யோசிச்சதில்லை. இதெல்லாம் ஒரு கனவா இருந்தது. ஆனா அப்புறம் சாத்தியமாச்சு. நான் பொதுவா சைலண்ட்டா இருக்கிற கேரக்ட்டர். ஆனா இங்க வந்த மூணாவது நாள்ல இருந்து பேச ஆரம்பிச்சிட்டேன். ஜெயிச்சுடணும்ன்ற நம்பிக்கை இருக்கு. முதல் Finalist ஆனதுல அத்தனை சந்தோஷம் இல்லை. ஃபைனல்ல ஜெயிச்சாதான் சந்தோஷம் வரும்” என்றார் அமீர். அவரின் நிலைமை புரிகிறது. இது பாதி கிணற்றைத் தாண்டிய வெற்றிதான். முழு கிணற்றைத் தாண்டினால்தான் உள்ளுக்குள் ஒரு நிறைவு வரும்.

பிக் பாஸ் 94
பிக் பாஸ் 94

ஆனால், இதற்கு பிக் பாஸ் தந்த ஆறுதல் மிகச்சிறப்பு. அதை ஆறுதல் என்பதை விடவும் ‘நல்ல கவுன்சிலிங்’ எனலாம். “இந்த வீட்டில் நூறு நாள்களாக இருக்கிறவர்களுக்குக் கூட இந்த வாய்ப்பு கிடைக்கலை. ஆனா அது உங்களுக்கு கிடைச்சிருக்கு. இந்தத் தருணத்தைக் கொண்டாடுங்க... இதுவே உங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போகும். சந்தோஷப்படுங்க” என்று பிக் பாஸ் சொன்னதை ஏற்றுக் கொண்டார் அமீர். பிக் பாஸ் அடுத்து சொன்ன விஷயமும் ‘டச்சிங்காக’ இருந்தது. “உங்களை வருங்கால பிரபுதேவா–ன்னு சொல்ல விரும்பலை. ‘வருங்கால அமீர்'-ன்னு சொல்ற அளவிற்கு நீங்க வரணும்” என்று பிக் பாஸ் சொன்னதன் பொருளைச் சரியாகப் புரிந்து கொண்டதால் தன்னிச்சையாகக் கண்கலங்கி நன்றி சொன்னார் அமீர்.

பிரியங்காவின் பக்கெட் லிஸ்ட்

“ஏண்டா செல்லம் அழவுற?” என்று வெளியே வந்த அமீரிற்கு பிரியங்கா ஆறுதல் சொல்ல “என்னடா இது.. அழவெச்சு அனுப்பறாங்க?” என்று ஜெர்க் ஆனார் ராஜூ. அடுத்ததாக அழைக்கப்பட்டவர் பிரியங்கா. ‘ஹாய் பெரிசு’ என்று பிரியங்கா அழைக்க 'ஹாய் சிறுசு’ என்று பிக் பாஸ் கொஞ்ச... “உங்க பக்கெட் லிஸ்ட்ல பிக்பாஸ்-ன்ற முக்கியமான டிக் மார்க் வந்துடுச்சு...” என்று பிக் பாஸ் வாழ்த்த அதற்கு பிரியங்கா சொன்ன பதில் மனப்பூர்வமாக இருந்தது. “இங்க வரணுமான்னு முதல்ல யோசனை இருந்தது. ஆனா ஆசைப்பட்டதையெல்லாம் செஞ்சு முடிக்கணும்னு மனசு சொல்லிச்சு. அதனால வந்துட்டேன். இங்க ஜாலியா இருக்கேன். எல்லாமே ஸ்பெஷலான தருணங்கள்தான். இந்த ஷோ என்னை மாத்தியிருக்கு. எமோஷனலா ஸ்ட்ராங்கா மாத்தியிருக்கு” என்று நெகிழ்ந்தார் பிரியங்கா.

பிக் பாஸ் 94
பிக் பாஸ் 94

“வெளியே போனப்புறம் எங்க அம்மாவை ரொம்ப சந்தோஷமா வெச்சுக்கணும். எனக்காக அவங்க நிறைய பண்ணியிருக்காங்க. நான் எதுவும் பண்ணதில்லை. குற்றவுணர்ச்சியா இருக்கு. இனி அதைப் போக்கற வேலையைச் செய்யணும்” என்று கலங்கிய பிரியங்காவிற்கு ‘ஆல் தி பெஸ்ட்’ சொல்லி அனுப்பினார் பிக் பாஸ்.

அடுத்ததாக உள்ளே வந்தவர் ராஜூ. “நம்பிக்கையா இருக்கேன்” என்று ஆரம்பித்தவர், மறக்க முடியாத தருணமாக தீபாவளி சமயத்தில் மனைவி எழுதிய குறிப்பைப் பகிர்ந்து கொண்டார். “அதை நிறைய முறை அவங்க சொல்லியிருக்காங்க. அப்பல்லாம் அது என் மனசுல வந்து உக்காரலை. ஆனா பிக் பாஸ் வீட்ல அந்த நோட்டைப் பார்த்ததும் அழுகை பொங்கிடுச்சு. நான் அழற டைப் கிடையாது. ஆனா என்னாலேயே நம்ப முடியாத அளவிற்கு அன்னிக்கு அழுதேன்” என்று சொன்ன ராஜூவை “தொடர்ந்து Fun பண்ணுங்க கோப்பால்” என்று வாழ்த்தினார் பிக் பாஸ். “அவ்வளவுதானா தம்பி... அண்ணன் கிளம்பட்டுமா?” என்று கேட்டு கிளம்பினார் ராஜூ.

பிக் பாஸ் 94
பிக் பாஸ் 94

பிக் பாஸ் தன்னிடம் சொன்னதையெல்லாம் பிரியங்காவிடம் பகிர்ந்த அமீர், “முதல் நாள்ல இருந்தே நான் வந்திருந்தா நல்லாயிருக்கும்” என்று பழைய பல்லவியைப் பாடினார். எலியும் பூனையுமாக இருந்த பாவனியும் தாமரையும் இப்போது டிவியும் ரிமோட்டுமாக ஒன்றாகக் காணப்படுகிறார்கள். “என் வீட்டுக்கு வா” என்று பாசத்துடன் தாமரை அழைக்க “நிச்சயமா வருவேன்” என்றார் பாவனி. பாவனி உறுதியளித்த பொருளாதார உதவிக்காக “காசு பெரிசில்ல. ஆனா அதைச் சொன்ன மனசுதான் கடவுள்” என்று தாமரை நெகிழ்வுடன் நன்றி சொல்லும் காட்சியுடன் எபிசோட் நிறைந்தது.

இப்பவாவது பாவனிக்கு பாயசம் செஞ்சு கொடுத்துடுங்க தாமரை!