Published:Updated:

பிக் பாஸ் 19: அபிஷேக்கின் ராஜதந்திரங்கள்… சுருதி கொடுத்த பதிலடியும், இமான் அண்ணாச்சியின் திறமையும்!

பிக் பாஸ் - 19

‘இந்த அபிஷேக் பயபுள்ள... ஓவரா பண்றானே’ என்று நினைத்தாரோ என்னமோ... அபிஷேக்கை உசுப்பேற்றுவதற்காக இமான் ஆடிய நாடகம் ஒன்று வெற்றிகரமாக அமைந்தது.

பிக் பாஸ் 19: அபிஷேக்கின் ராஜதந்திரங்கள்… சுருதி கொடுத்த பதிலடியும், இமான் அண்ணாச்சியின் திறமையும்!

‘இந்த அபிஷேக் பயபுள்ள... ஓவரா பண்றானே’ என்று நினைத்தாரோ என்னமோ... அபிஷேக்கை உசுப்பேற்றுவதற்காக இமான் ஆடிய நாடகம் ஒன்று வெற்றிகரமாக அமைந்தது.

Published:Updated:
பிக் பாஸ் - 19
யார் நாணயம் திருடினார்கள், யார் நாணயம் தவறி அதை சுட்டார்கள் என்கிற குழப்பம் நீடிக்கும்வரை சலிப்பாகச் சென்று கொண்டிருந்த லக்ஷுரி டாஸ்க், அந்த சதிகள் வெளிப்பட்டு யார் எந்த நாணயத்தை வைத்திருக்கிறாரோ, அது தொடர்பான இடத்தை ஆட்சி செய்யலாம் என்கிற நிலைமையாக மாறிய பிறகு ஆட்டம் சற்று சூடு பிடித்துவிட்டது.

இது பிக் பாஸில் மட்டும் நடக்கும் விளையாட்டல்ல. இதுவரையான மனித வரலாற்றில் பெரும்பான்மையாக நிகழ்ந்த கொலைவெறி விளையாட்டுதான் இது. இனியும் நிகழப் போகும் ரத்த வரலாறும் இதுவே. ஆம். “அது வெறும் சுவருன்னு நெனச்சியா... அதிகாரம்” என்று ‘மெட்ராஸ்’ படத்தில் வரும் வசனம் போல, ‘நிலம் என்பது அதிகாரம்’. அதையொட்டிதான் ஏராளமான உலகப் போர்கள் நடந்துள்ளன. அதையொட்டி உலக வரைபடங்களில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

நீரும் ஓர் அதிகாரம்தான். நாம் ஏன் பல ஆண்டுகளாக அண்டை மாநிலங்களுடன் தண்ணீருக்காக மல்லுக் கட்டிக் கொண்டிருக்கிறோம் என்பதை யோசித்துப் பார்க்கலாம். பெரும்பான்மையான இயற்கை வளங்களும் மனிதனின் பேராசையால் வணிகமாகிவிட்டன. ‘காத்தை காசாக்குற ஊரு சார் இது’.

பிக் பாஸ் - 19
பிக் பாஸ் - 19

அபிஷேக் முட்டி மோதி பல ராஜதந்திரகணக்குகளை போடுவது இந்த அதிகாரத்திற்காகத்தான். ஸ்ட்ராங்கான வில்லன் இருந்தால்தான் ஒரு கதையில் பயங்கர சுவாரஸ்யம் ஏற்படும். அந்த வகையில் அபிஷேக்கின் தந்திர விளையாட்டுகளினால்தான் நிகழ்ச்சியில் சுவாரஸ்யம் ஏற்படுகிறது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால் ‘அபிஷேக்கின் கொடி இறங்கும் காலமும் வரும்’ என்று முன்பு எழுதியிருந்தேன். அதற்கான முதல் கலகக் குரல் சுருதியின் மூலமாக இன்று வெளிப்பட்டது. “நீங்க பேசாம உங்க விளையாட்டை விளையாடுங்க” என்று அபிஷேக்கிடம் அவர் சொன்னதே இதற்குச் சாட்சி.

பிக் பாஸ் எபிசோட் 19-ல் என்ன நடந்தது?

மூசுமூசுவென்று அழுது கொண்டிருந்த அக்ஷராவை வாக்குமூல அறைக்கு அழைத்த பிக்பாஸ், “என்னம்மா ஆச்சு.. கண்ணைத் துடை... சிரி... இப்ப எப்படி இருக்குது மூஞ்சி?” என்று ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார். “எனக்கு கத்தி பேசினா பிடிக்காது. பயம் வரும். பிரியங்காவும் அபிஷேக்கும் மாத்தி மாத்தி பேசறாங்க. எனக்கு அப்படிப் பேச வராது. இவங்க என்னை மாத்திருவாங்களோன்னு பயமா இருக்கு. நல்லவளா இருக்கிறது பிரச்னையா? கஷ்டப்பட்டு வந்தாதான் அது வாழ்க்கையா?” என்றெல்லாம் தன் பிரச்னையை விம்மல்களுக்கிடையில் அடுக்கினார் அக்ஷரா.

சமூகத்தில் சற்றேனும் மனச்சாட்சியோடு இயங்குகிறவர்கள் எதிர்கொள்ள மனஉளைச்சல்தான் இது. ‘‘கெட்டவனுக்குப் போய் எல்லாத்தையும் தட்டில் வைத்து தருகிறார்களே?” என்று ‘மகாநதி’ கமல் மனம் புழுங்கி அழுவதற்கு நிகரான காட்சி. “எனக்கு யாரும் இங்க உதவி செய்யல” என்றார் அக்ஷரா. ஒரு நிமிடம் ராஜூ இவருக்குச் செய்தவைகளை சற்று அவர் நினைவுகூர்ந்திருக்கலாம். “இது ஒரு ஆட்டம். இப்படித்தான் இருக்கும். நீங்க நல்லாத்தான் ஆடுறீங்க. உங்க தனித்தன்மையோடு உங்க ஆட்டத்தை ஆடுங்க” என்றெல்லாம் கண்ணைத் துடைத்துவிட்டு அக்ஷராவை அனுப்பி வைத்தார் பிக் பாஸ். (பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி விடுவதில் பிக் பாஸிற்கு நிகர் வேறு யாருமில்லை).

பிக் பாஸ் - 19
பிக் பாஸ் - 19

“ராஜூவும் வருணும் அவங்களுக்காக கேம் ஆடினா கூட பரவாயில்ல. ஆனா அக்ஷராவிற்காக ஆடுவதுதான் எனக்கு காண்டாவுது” என்ற பிரியங்காவிடம் “டாப் 5ல நிரூப்பை எப்படியாவது கொண்டாரணும்” என்று தொலைநோக்கு பார்வையோடு திட்டம் தீட்டிக் கொண்டிருந்தார் அபிஷேக். அக்ஷராவை பிக் பாஸ் அழைத்துப் பேசியது பிரியாங்காவுக்கு உறுத்தியிருக்குமோ, என்னமோ. தன்னை எப்படி வெளியே காண்பிக்கிறார்கள் என்கிற ஞானோதயம் இப்போதுதான் அம்மணிக்கு நினைவிற்கு வந்திருக்குமோ... “அதுக்காக சாத்தானா மாறி தந்திரமா ஆடக்கூடாது. என்னை எல்லோரும் லவ் பண்ற மாதிரிதான் நான் ஆடுவேன்” என்கிற வசனத்தை ஜாக்கிரதையாகச் சொல்லி பதிவு செய்து கொண்டார் பிரியங்கா.

நாள் 18 விடிந்தது. அதற்கு முன்தினம் ரத்த ஆறே ஓடியிருந்தாலும் எதுவுமே நடக்காதது போல் மறுநாள் காலையில் ஆடுவதுதான் பிக்பாஸ் வீட்டின் ஒரு தனித்த ஸ்பெஷல். அதன்படி ‘ஆலுமா டோலுமா’ பாட்டிற்கு மக்கள் வெறிகொண்டு ஆடினார்கள்.

“ராஜூ கும்பலை மொத்தமா தூக்கிரணும்னு காவாளித்தனம் பண்ணிட்டு சுத்தறானுங்க...” என்று சலித்துக் கொண்ட இமான் “இசை... உன்கிட்ட காயின் பத்திரமா இருக்குல்ல. யாராவது ஆசை வார்த்தை சொல்லி பிடுங்கப் போறாங்க... ஜாக்கிரதை” என்று அவர் எச்சரித்தார். இது போன்ற தருணங்களின் மூலம் இமானுக்கான மக்கள் ஆதரவு பெருகும் என்று தோன்றுகிறது.

பிக் பாஸ் - 19
பிக் பாஸ் - 19

“தாமரை பாதுகாப்பு இயக்கம்... இதன் ஹெல்ப்லைன்” என்று மூவ்மென்ட் தொடங்காத குறையாக ஆளாளுக்கு தாமரையை காப்பாற்ற நடத்திய நாடகங்கள் இப்போது மெல்ல அவிழத் துவங்கியிருக்கின்றன. “நானும் நாமிஷேன்ல இருக்கேன்ல... என்னைக் காப்பாத்திக்க வேணாமா... அதுக்கு யாரும் உதவ மாட்டீங்களா?” என்று சிபியிடம் டப்பிங் வாய்ஸில் கோபித்து சிணுங்கிக் கொண்டிருந்தார் பாவனி. “சின்னப்பொண்ணுவை காப்பாத்தப் போறேன்னு சொல்லிட்டு இருந்தே… அப்ப உனக்கும் ஆசை வந்துருச்சா?” என்று கேட்டு பாவனியின் நாடகத்தை அம்பலமாக்கினார் சிபி.

அண்ணாச்சிக்கும் பிரியங்காவுக்கும் இடையே ஒரு சிறிய பனிப்போர் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. உள்குத்து வார்த்தைகளின் மூலம் பரஸ்பரம் கிண்டலடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனுள் விரோத முள் ஒளிந்திருக்கிறது. “பிரியங்காவோட ஈகோ அதிகமாச்சுன்னா வெடிச்சிடுவா... கன்ட்ரோல் பண்ணியாகணும். அண்ணாச்சி அவரை டிரிக்கர் பண்றாரு” என்று அபிஷேக் கதறிக் கொண்டிருக்க “நீதான்டா அவளை ரொம்ப ஏத்தி விடறே. நீ கொஞ்சம் அடக்கி வாசி” என்று நிரூப் அபிஷேக்கை எச்சரித்தது நல்ல விஷயம்.

பிக் பாஸ் - 19
பிக் பாஸ் - 19
‘’நாணயங்களை கைப்பற்றியவர்கள் பொதுவில் வந்து அறிவிக்க வேண்டும்’’ என்கிற பிக்பாஸ் அறிவிப்பு வந்தது. ‘ஹப்பாடா! இப்போ தெரிஞ்சு போகும்... எவன் எவன் நாணயம் வெச்சிருக்கான்னு’ என்று நமக்கும் ஒரு நிம்மதி வந்தது. சிபியை அழைத்து ரகசியம் பேசிய வருண், தோட்டத்தில் ஒளித்து வைத்திருந்த நாணயத்தைக் காட்டினார். “டேய்... என் காயினை கொடுடா” என்று நிரூப்பை கேட்டுக் கொண்டிருந்தார் தாமரை.
ஒருவழியாக இந்தச் சதிகள் அம்பலமாகின. அதன்படி நாணயங்களை வைத்திருந்த கனவான்களின் பட்டியல்: தாமரை (காற்று), வருண் (நீர்), நிரூப் (நிலம்), இசை (நெருப்பு), பாவனி (ஆகாயம்). சின்னப்பொண்ணுவை டீலில் விட்டுவிட்டார்கள் போலிருக்கிறது. ‘என்கிட்ட காயினே இல்லை’ என்று பாவனி சொல்லிக் கொண்டிருந்தது ‘பொய்’ என்பதும் இப்போது தெரிய வந்தது. இதைப் போல பிரியங்கா கொலைவெறியுடன் அக்ஷராவிடம் தேடிக் கொண்டிருந்த காயின், வருணிடம்தான் இருந்தது.

யார் எந்த நாணயத்தின் உரிமையாளரோ, அவர் சம்பந்தப்பட்ட ஏரியாக்களை ஆட்சி செய்யலாமாம். உதாரணத்திற்கு ‘நீர்’ நாணயம் வைத்திருக்கும் வருணிற்கு, பாத்ரூம் ஏரியா சொந்தம். (இத்தனை கஷ்டப்பட்டது பாத்ரூம் டோக்கன் போடறதுக்கா?!). ‘நெருப்பு’ நாணயத்தின் உரிமையாளரான இசைக்கு, கிச்சன் ஏரியா சொந்தம். நிலம் (பெட்ரூம்), காற்று (கார்டன்) என்பதாக இந்தப் பட்டியல் நீண்டது, ‘அப்ப... ஆகாயம் மொட்டை மாடியா? என்று நாம் கோக்குமாக்காக யோசிப்பதற்குள் விடை வந்தது. அது டைனிங் ஏரியாவாம்.

பிக் பாஸ் - 19
பிக் பாஸ் - 19

‘‘உரிமையாளரின் அனுமதி பெற்றே ஒவ்வொருவரும் அந்தந்த பகுதிக்குள் நுழைய முடியும். அவர் சொல்லும் டாஸ்க்குகளை செய்ய வேண்டும். தலைகீழாகக் குளிக்க வேண்டும் என்றால் கூட அதை செய்துதான் ஆக வேண்டும்” என்பது பிக்பாஸின் அறிவிப்பு. “பாத்ரூம்தான் மெயின் கன்ட்ரோல்...” என்று சிபியுடன் இணைந்து பெருமையடித்துக் கொண்டிருந்தார் வருண். (கடந்த சீசன் ஒன்றில் கார்டன் ஏரியாவில் சிறுநீர் கழிக்க சென்றாயன் முயன்ற சம்பவம்தான் நினைவுக்கு வருகிறது).

ஆட்டம் ஆரம்பித்தது. எனவே கொலைவெறியுடன் ராஜதந்திர நடவடிக்கைகளில் ஈடுபடத் தொங்கினார் அபிஷேக். ‘நிரூப்’ பெட்ரூம் ஏரியா உரிமையாளர் என்பதால் அது ஏறத்தாழ அபிஷேக்கின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. அவசரம் அவசரமாக ‘மதுமிதா’வுடன் ஒப்பந்தம் போட்ட அபிஷேக் அவருக்கு மட்டும் பெட்ரூமில் வர சலுகை கொடுத்தார். மற்றவர்கள் வரக்கூடாதாம். “அண்ணாச்சி மற்றும் சின்னப்பொண்ணு மட்டும் பெட்ரூமிற்கு வரலாம்” என்று அவர் சலுகை தந்ததிலும் ஒரு வெளிப்படையான காரணம் இருக்கிறது. வயதானவர்களிடம் விளையாடினால் பொதுமக்களின் வெறுப்பிற்கு ஆளாகி விடலாம் என்கிற எச்சரிக்கையுணர்வு.

ஆனால் பிரியங்கா இதையும் மீறி “சின்னப்பொண்ணு அக்காவை புகழ்ந்து பாடச் சொல்லலாம்” என்று தன் வழக்கமான பாணியில் அலட்டத் துவங்க, “ஆதிவாசி... அடக்கி வாசி...” என்று அவரையும் எச்சரித்தார் நிரூப். பாத்ரூம் பக்கம் சென்ற பிரியங்காவை ‘நாய் மாதிரி வரணும்' என்று பழிவாங்கத் துவங்கினார்கள் வருண் க்ரூப். ஆனால் சும்மா சொல்லக்கூடாது. இது போன்ற விஷயங்களைத் துணிச்சலாக செய்வதில் பிரியங்காவிற்கு நிகரில்லை. பங்களா வீட்டு நாயாகவே மாறி காலைத் தூக்குவது முதல் செய்து அசத்திவிட்டார். “துணி மாத்தறது முதற்கொண்டு இங்கதான் அடிக்கடி வரணும். வெச்சு செய்வீங்கள்ல” என்று அவரே வரூணிற்கு எடுத்துக் கொடுத்தார்.

பிக் பாஸ் - 19
பிக் பாஸ் - 19

பாவனி மற்றும் மதுவை ஓரங்கட்டி, தனது சர்வதேச தொலைநோக்கு திட்டத்தைப் பரபரப்பாக விவரிக்கத் துவங்கினார் அபிஷேக். “டாப் 3ல நீ, நான், மது இருக்கணும்... இரண்டு இடங்கள் ஒரே டீமிற்கு போகக்கூடாது. அவங்க ஸட்ராங்க் ஆயிடுவாங்க... குறிப்பா கார்டன் ஏரியாவை வருண் பிடிக்கக்கூடாது" என்று அவர் பேசியதை அமெரிக்க அதிபரே பார்த்தால் திகைத்துப் போயிருப்பார். என்னவொரு ராஜதந்திர அரசியல்?! ஆனால் தனது வசனத்தின் இடையே ‘இந்த சீசனோட லாஸ்லியா. மதுதான்’ என்று அவர் சொன்னதைத்தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. (சிநேகா... அந்த பேர்லதாண்டா ஏமாந்தேன்?!). ‘பிக்பாஸ் பார்த்ததில்லை’ என்று புளுகிய அபிஷேக் கொஞ்சம் கொஞ்சமாக இப்போதுதானே அம்பலப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

கார்டன் ஏரியாவின் உரிமையாளரான ‘தாமரை', “நான் டாஸ்க் சொன்னா செய்ய மாட்டேங்கறாங்க... இப்படியா ஒரு ஆட்டம் இருக்கும்? அடிதடி குழப்பம்லாம் வந்துரும் போலிருக்கே” என்று சிணுங்கிக் கொண்டிருந்தார். “இது லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் மட்டும்தான். நாமினேஷன்ல இருந்து காப்பாத்திக்கலாம்னு முதல்ல சொன்னாங்க. ஆனா எப்படி வேணா மாறலாம்” என்று அபினய் சொன்னது நல்ல அப்சர்வேஷன். பிக்பாஸ் வீட்டின் ரூல் எப்படி வேண்டுமானாலும் மாறும்.

பிக் பாஸ் - 19
பிக் பாஸ் - 19
“இங்க இருக்கிற காயினை யாரும் எடுக்க மாட்டீங்கள்ல?” என்று தாமரை வெள்ளந்தியாகக் கேட்க “சொல்ல முடியாது. நான் எடுத்தாலும் எடுப்பேன்” என்றார் சுருதி. எல்லோருமே மந்தைகளாக மேயும்போது அதிலிருந்து விலக விரும்புகிறவராகத் தெரிகிறவர் சுருதி மட்டுமே.

“நான் இங்க படுத்து தூங்கட்டுமா?” என்று கேட்ட பிரியங்காவிடம், “தூங்கு... ஆனா பெட்ல படுக்காத. கீழே படுத்து தூங்கு” என்று அபிஷேக் சொன்னது அவர் எத்தனை புத்திசாலி என்பதை நிரூபித்தது. அங்கிருந்து நேராக பாத்ரூம் ஏரியாவிற்குச் சென்ற அபிஷேக் “பாவனியை மட்டும் பாத்ரூம்ல விடு” என்று புதிய ஒப்பந்தத்தை வருணிடம் போட முயல, “இதுல இடைத்தரகரா நீ ஏன் வர்றே. நான் நேரா டீல் பேசிக்கறேன்” என்று அபிஷேக்கை சிறந்த முறையில் நோஸ்கட் செய்தார் வருண். அங்கிருந்து நேராக பாவனியிடம் சென்ற அபிஷேக், “வருண், என்கிட்ட சேலன்ஞ் பண்ணியிருக்கான்... எப்படி என் ஏரியாவைத் தொடறீங்கன்னு பார்க்கறேன்னு சொல்றான்” என்று தோசையை திருப்பிப் போட்டு பேச, “அப்படியா?” என்றார் பாவனி. நான்கு மாடுகளை பிரித்து முட்டிக் கொள்ளச் செய்யும் சிங்கத்தின் தந்திரக்கதை இது.

‘இந்த அபிஷேக் பயபுள்ள... ஓவரா பண்றானே’ என்று நினைத்தாரோ என்னமோ... அபிஷேக்கை உசுப்பேற்றுவதற்காக இமான் ஆடிய நாடகம் ஒன்று வெற்றிகரமாக அமைந்தது. “உன் காயினை ஒரு மணி நேரத்திற்கு என்கிட்ட கொடு” என்று தாமரையிடம் இமான் கேட்க, இந்த நாடகத்தில் கூடுதலாக ஒரு டிவிஸ்ட்டைச் சேர்த்தார் அபினய். அதன்படி அனைவரும் அசந்திருக்கும் நேரம் பார்த்து இமான் நாணயத்தைக் கைப்பற்றி தோட்டத்தின் உரிமையாளராக மாறிவிட்டதைப் போல் இந்த அணி நடிக்க, அந்தப்பக்கம் கொலைவெறியின் உச்சத்திற்கு சென்றார் அபிஷேக். (அப்ப. இமான் நாடகம் சக்ஸஸ்!).

பிக் பாஸ் - 19
பிக் பாஸ் - 19

கிச்சன் ஏரியாவில் இருந்த நாணயத்தை டக்கென்று பையில் போட்டுக் கொண்ட அபிஷேக், அதற்கு உரிமை கொண்டாட ஆரம்பித்தார். இசையும் சுருதியும் இதற்கு பலத்த ஆட்சேபம் தெரிவிக்க “லூஸூங்களா... நான் ஒரு பெரிய கேமை ஆடிட்டு இருக்கேன். இந்த கிச்சன்லாம் எனக்கு வேண்டாம். வருணை கன்ட்ரோல் பண்ணியே ஆகணும். அவன் கார்டன் ஏரியாவை பிடிச்சிட்டான்னா அவ்ளோதான். இந்த காயினை நான் அப்புறம் உங்ககிட்ட திருப்பிக் கொடுத்துடுவேன்” என்று பரபரப்பாக அவர் சொல்ல, ‘அப்ப பருத்திமூட்டை குடோன்லயே இருக்கட்டுமே. எதுக்கு இதை நீ எடுக்கணும்?’ என்பது போல் சுருதி கேட்டது சுவாரஸ்யமான கேள்வி.

“யப்பா சாமி... உன் ராஜதந்திரம்லாம் என்கிட்ட வேணாம். நான் தனியாவே ஆடிக்கறேன்” என்ற இசை, அதை அபிஷேக்கிடமிருந்து வாங்கி மறுபடியும் தன் உரிமையை திரும்பப் பெற்றுக் கொண்டார். உண்மையில் அபிஷேக் திட்டமிடுவது ஒரு நல்ல உத்திதான். ஆனால் அவரது மிகையான அலட்டல் காரணமாக, அவரை யாரும் நம்பத் தயாராக இல்லை.

அசந்து தூங்கிக் கொண்டிருந்த பிரியங்காவை, பிக் பாஸ் நாய் குரைத்து எழுப்பியது. இப்போதெல்லாம் பிக் பாஸை அநாவசியமான வார்த்தைகளில் பேசாமல் பிரியங்கா அடக்கி வாசிப்பதை கவனிக்கிறீர்களா? ஆம். பிக் பாஸிற்கும் சொரணை வந்துவிட்டது. “இங்கு பல விதிமீறல்கள் நிகழ்கின்றன. பகலில் தூங்குவது. ஆங்கிலத்தில் பேசுவது. மைக்கை ஒழுங்காக மாட்டாதது போன்ற விஷயங்கள் தொடர்ந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பிக் பாஸ் எச்சரித்தார்.

பிக் பாஸ் - 19
பிக் பாஸ் - 19
லக்ஷுரி பட்ஜெட் டாஸ்க்கின் இரண்டாவது கட்டத்தை முடிவிற்கு கொண்டு வந்தார் பிக் பாஸ். அதன்படி நாணயத்திற்கு இப்போது யார் உரிமையாளர்களோ, அந்த நிலையே நீடிக்குமாம். இதற்கு சந்தோஷப்பட்ட போட்டியாளர்களிடம், "மூன்றாவது கட்டம். விரைவில் அறிவிக்கப்படும்” என்று சொல்லி அந்த சந்தோஷத்தில் நீரை ஊற்றினார்.

அபிஷேக்கின் மிகையான ஆட்டம் குறித்து மறுபடியும் எச்சரித்துக் கொண்டிருந்தார் நிரூப். இதுபோல் தக்க சமயத்தில் எச்சரிக்கை செய்யும் நண்பர்கள் இருப்பது அவசியம். “நீ மத்தவங்களை இன்ஃப்ளூயன்ஸ் பண்றது ‘பப்பரப்பே’ன்னு வெளியே தெரியுது. அதனால்தான் நீ நாமினேட் ஆவற” என்று நிரூப் எச்சரிக்க, "இல்ல... நான் சுருதியோட நம்பிக்கையைப் பெற்றுட்டேன்” என்று உற்சாகம் தணியாமல் அபிஷேக் பேச ஆரம்பிக்க, 'கிழிச்ச... அவதான் உன்னை கழுவி கழுவி ஊத்தறாளே' என்று சொல்லாத குறையாக நிரூப் அபிஷேக்கை அடக்கினார். “ஓகே... என் கலரை இனி மாத்திக்கறேன்” என்று சற்று இறங்கி வந்தார் அபிஷேக்.

பிக் பாஸ் - 19
பிக் பாஸ் - 19
லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கின் அடுத்த கட்டம். 'ஒவ்வொரு போட்டியாளரும் பஞ்சபூதங்களில் தன்னை எதுவாக நினைக்கிறார், இன்னொரு போட்டியாளரை எதுவாக நினைக்கிறார்’ என்று சொல்ல வேண்டுமாம். இந்த டாஸ்க்கில் சிலரது புத்திசாலித்தனங்களும் சிலரது மெல்லிய வன்மங்களும் விரோதங்களும் வெளிப்பட்டதைக் கவனிக்க சுவாரஸ்யமாக இருந்தது.

இமான் அண்ணாச்சி பேசியது சிறப்பு. "நான் நெருப்பு மாதிரி. சமைக்கறதுக்கு பயன்படுவேன். ஆனா கேர்லெஸ்ஸா ஹாண்டில் பண்ணா கேஸ் சிலிண்டர் விபத்து ஏற்படுவதற்கும் வாய்ப்பிருக்கு” என்பது போல் இமான் சொல்வதின் மூலம் அவருக்குப் பயங்கரமாக கோபம் வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்பதை மறைமுகமாக சொன்னார். இப்படி ஆளாளுக்கு "நெருப்புடா... கபாலிடா...” என்று பஞ்ச் டயலாக் பேசிக் கொண்டிருந்தார்கள். "நான் நிலம் மாதிரி... என் மேல் போடப்படுகிற எந்தவொரு விஷயத்தையும் உரமா மாத்திப்பேன்” என்று சொன்ன ஐக்கியின் நுண்ணுணர்வு வியக்க வைத்தது.

பிக் பாஸ் - 19
பிக் பாஸ் - 19
இந்த டாஸ்க்கில் ராஜூவும் பிரியங்காவும் ஒரு சுவாரஸ்யமான ஈகோ விளையாட்டில் ஈடுபட்டார்கள். ராஜூ என்ன பேசப் போகிறார் என்பதை சபையே ஆவலுடன் எதிர்பார்ப்பதில் இருந்து அவருக்கான முக்கியத்துவம் உயர்ந்திருப்பதை உணர முடிகிறது.

“இங்க சாதாரணமா ஒண்ணு சொன்னா கூட ஏன் வினயமா எடுத்துக்கறாங்க?” என்று வெள்ளந்தியாகக் கேட்டார் தாமரை. (வினயம் = சூழ்ச்சி). “அப்படித்தான் தந்திரமா இங்க விளையாட முடியும்” என்று அவருக்கு மினி விளக்கம் அளித்தார் பிரியங்கா. தன்னுடைய ஸ்ட்ராட்டஜியை மறுபடியும் சுருதியிடம் விளக்க வந்த அபிஷேக்கிடம் “நீ சொன்னா நான் ஏன் கேட்கணும். வாயை மூடிட்டு உன் வேலையைப் பாரு” என்று சுருதி பதிலடி தந்த காட்சி சுவாரஸ்யம்.

பிக் பாஸ் - 19
பிக் பாஸ் - 19

அபிஷேக் ஆடிக் கொண்டிருக்கும் ஆட்டத்தின் ஒரு மேலோட்டமான வரைபடத்தை இமான் அண்ணாச்சி திறமையாக பிடித்துவிட்டார். இதை அவர் அபிஷேக்கிடம் நேரடியாக சொல்லிக் கொண்டிருந்தது சுவாரஸ்யம். “நீ என்ன பண்றன்னா. ஒவ்வொருத்தவர் கிட்டயும் போய் ‘நான் எனக்காக விளையாடலை. அவங்களுக்காக விளையாடறேன்னு சொல்லி நம்பிக்கையை வாங்கிக்கறே... இதையே இன்னொரு ஆளு கிட்ட வேற மாதிரி சொல்ற. "ஓ... அபிஷேக் அண்ணன் நல்லவரு... வல்லவரு–ன்ற மாதிரி ஒரு பிம்பத்தை உருவாக்கற” என்று இமான் சொல்லிக் கொண்டிருந்ததோடு எபிசோட் நிறைவடைந்தது.

அபிஷேக்கின் ராஜதந்திரங்களைக் கண்டு “என் இனமடா நீ” என்று பிக் பாஸே உள்ளுக்குள் மெச்சியிருப்பார் போலிருக்கிறது.