Published:Updated:

பிக் பாஸ் - 43: `விஷபாட்டில், க்ரூப்புல டூப்பு' - கமலின் ஜாலி கேலி; இங்குத் `தாமரை' ஜெயிக்குமா?

பிக் பாஸ் - 43

“ஒவ்வொரு வாரமும் விளிம்புவரை தப்பிடச்சிடறீங்க” என்று ஆரம்பிப்பதின் மூலம் அபின்ய்க்கு மெல்லிய அதிர்ச்சியை தந்து விட்டுச் சென்ற கமல், இப்போது ‘எலிமினேஷன்’ பற்றிய பீடிகையை ஆரம்பித்தார்.

பிக் பாஸ் - 43: `விஷபாட்டில், க்ரூப்புல டூப்பு' - கமலின் ஜாலி கேலி; இங்குத் `தாமரை' ஜெயிக்குமா?

“ஒவ்வொரு வாரமும் விளிம்புவரை தப்பிடச்சிடறீங்க” என்று ஆரம்பிப்பதின் மூலம் அபின்ய்க்கு மெல்லிய அதிர்ச்சியை தந்து விட்டுச் சென்ற கமல், இப்போது ‘எலிமினேஷன்’ பற்றிய பீடிகையை ஆரம்பித்தார்.

Published:Updated:
பிக் பாஸ் - 43
எம்.ஜி.ஆர்களும் நம்பியார்களும் கலவையாக உலவிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் வீட்டில் அஞ்சலி பாப்பா போல தத்தி தத்தி நடந்து கொண்டிருந்த மதுமிதா வெளியேற்றப்பட்டதுதான் நேற்றைய எபிசோடின் ஹைலைட். இதை அனைவருமே உள்ளூற எதிர்பார்த்திருந்தார்கள் என்பதால் சம்பிரதாயத்திற்குத் துயரப்பட்டார்கள். பிரியங்காவின் சோகம் உண்மைக்கு சற்று நெருக்கமாகக் காட்சியளித்தது.

இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவெனில் பிக் பாஸின் பல சீசன்களை ரிப்பீட் மோடில் பார்க்கும் ஆர்வம் கொண்டிருக்கும் மதுமிதா, அவற்றிலிருந்து எதையும் கற்றுக் கொள்ளவில்லையா? ஆனால் இதுவொரு அற்புதமான விஷயம். தன்னைச் சுற்றி எத்தனை கீழ்மைகள் நிகழ்ந்தாலும் அதனால் பாதிக்கப்படாமல், தன் அடிப்படை நேர்மையை மதுமிதா இழக்காமல் இருப்பதை உன்னதமான குணாதிசயம் எனலாம். இவர்களால்தான் பூமி இன்னமும் சுற்றிக் கொண்டிருக்கிறது. ‘பொம்மை டாஸ்க்கில்’ சரியாக செயல்படாதவர்களை அறிவிக்கும் சமயத்தில், ஒருவர் தன்னையே நாமினேட் செய்து கொள்ளலாம் என்று புதிய விதியை அறிவித்தார் பிக் பாஸ். இந்தச் சமயத்தில் தன்னையே நாமினேட் செய்து கொள்ளும் நேர்மை மதுமிதாவிடம் இருந்தது.

பிக் பாஸ் - 43
பிக் பாஸ் - 43

மதுமிதாவிடம் குறைகளே இல்லையா? இருந்தன. தலைவராக இருந்தபோது நண்பர்களுக்காக அவர் மனச்சாய்வு கொண்டிருந்ததை உணர முடிந்தது. ஆனால் இதர போட்டியாளர்களோடு ஒப்பிடும் போது மதுமிதா இன்னமும் கள்ளங்களும் கபடங்களும் நிரம்பாத தூய தேவதை எனலாம். மொழிப் பிரச்சினையும் மதுமிதாவிற்கு ஒரு தடையாக இருந்தது. ஆனால் அந்த மழலைத்தமிழை இனி பிக் பாஸ் வீட்டில் கேட்க முடியாது.

எபிசோடு 43-ல் என்ன நடந்தது?

பிரியங்காவும் நிரூப்பும் டைம்பாஸிற்காக சண்டை போட்டுக் கொள்கிறார்களோ என்று சந்தேகமாக இருக்கிறது. இவர்களின் சண்டையில் எத்தனை சதவீதம் உண்மை, பொய் என்பது புரியாமல் நாம்தான் மண்டையைப் பிய்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. “நீ வாய்க்கு வந்தபடி எதை வேணா சொல்லிடற. ஆனா அதைப் பத்தி உனக்கே ஞாபகம் இல்லை” என்று நிரூப்பிடம் குற்றம் சாட்டிக் கொண்டிருந்தார் பிரியங்கா. ‘ஜால்ரா’ என்று ஐக்கி வழங்கிய பட்டம் பிரியங்காவைத் தொந்தரவு செய்து கொண்டிருக்கிறது.

இசையின் குழப்பம், பாவனியின் அராஜகம் ஆகிய இரண்டு தலைமைகளை விடவும் நிரூப்பின் ஜாலியான ஆட்சியே தங்களுக்குப் பிடித்திருப்பதாக ஐக்கியும் தாமரையும் பேசிக் கொண்டிருந்தார்கள். பெண்களுக்குள் பகைமை ஒரு மெல்லிய கோடாக நீடித்துக் கொண்டே இருப்பது இதனால் புலப்படுகிறது.

கமல் என்ட்ரி. காவல்துறையின் அத்துமீறல்கள் ஒருபுறம் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது சாலையோரத்தில் உயிருக்கு போராடிய ஒரு மனிதரைக் காப்பாற்றிய இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியின் சேவைகளை மனமார பாராட்டிய கமல், அகம் டிவி வழியாக உள்ளே சென்றார். “எத்தனையோ முறை வார்னிங் நோட்டிஸ் தந்துட்டேன். இன்னமும் குழப்பமாவே இருக்கீங்க. இந்த சீசன்ல அதிகம் குற்றம் சாட்டப்பட்ட கேப்டன் நீங்கதான்” என்று ஆரம்பத்திலேயே இசையை வறுத்தெடுக்க ஆரம்பித்தார் கமல். பிக் பாஸ் வீட்டில் தன்னை நிரூபித்துக் கொள்ள வேண்டும் என்கிற உந்துதலும் ஆர்வமும் இசைக்கு நிறையவே இருக்கிறது. ஆனால் அதை எப்படிச் செயல்படுத்துவது என்பதில் நிறையவே தடுமாறுகிறார்.

பிக் பாஸ் - 43
பிக் பாஸ் - 43

அபினய்யின் தலைவர் பதவியை தான் பறித்துக் கொண்டோமே என்கிற குற்றவுணர்ச்சியில் இசை தத்தளிப்பது, அவரிடம் உள்ள நற்பண்பைக் காட்டுகிறது. அதே சமயத்தில் தனக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து எரிச்சலும் இருக்கிறது. அவர் அதைக் கட்டுப்படுத்திக் கொள்ள முயன்றாலும் எப்படியாவது வெளியே கசிந்து விடுகிறது. இதனால் மற்றவர்களின் அதிருப்திக்கு ஆளாகிறார். இசையின் கேப்டன்சி குறித்து பலரும் சங்கடத்துடன் நெகட்டிவ் கமெண்ட்களை அடுக்கும்போது ராஜூ மட்டுமே பெரிய ஆதரவை இசைக்கு அளித்தார்.

“அவர் செய்யறது முழுக்க தப்புன்னு சொல்லிட முடியாது. எதுவா இருந்தாலும் எங்கிட்ட கேளுன்னு சொல்லிட்டே இருப்பா. எங்க மேலயும் பாதி தப்பு இருக்கு. சில சமயங்கள்ல நாங்களே மறந்து போய் சாப்பிட்டுருவோம். அதுக்காகத்தான் அவ கோபப்பட்டிருப்பா” என்று ராஜூ சொன்னதும் அதைப் பாராட்டிய கமல் “இதை இசைல்ல சொல்லியிருக்கணும்” என்று சொல்லி ‘இனிமே நேரடியாக பேசிப் பழகுங்க” என்று இசைக்கு அறிவுறுத்தியது சிறப்பு. தக்க சமயத்தில் அளிக்கப்படும் நேர்மையான சாட்சியம் ஒருவரின் உயிரையே கூட காப்பாற்றக்கூடும். ராஜூவின் சாட்சியத்தால் இசை எத்தனை ஆசுவாசமடைந்தார் என்பது அவரது முகத்தில் தெரிந்தது.

“எதுவா இருந்தாலும் சாப்பாட்டு விஷயத்துல இடையூறு பண்ணாதீங்க” என்று கமல் அறிவுறுத்தியது சிறப்பு. டாஸ்க் நடக்கும் சமயத்தில் ஐக்கிக்கு பசியெடுத்ததால் அவருக்கு அபினய் ஆம்லேட் கொண்டு போய் கொடுக்கும் போது “நான்தான் சர்வ் பண்ணனும். அதைக் கொண்டு போய் வைங்க” என்று தடுத்துவிட்டார் இசை. டாஸ்க் நிகழும் போது அவர் பணி செய்யத் தேவையில்லை. ஆனால் பிக் பாஸின் கண்டிப்பு அவரைக் குழப்பி விட்டுவிட்டது போல.

விசாரணை இடைவேளையின் போது, “நான் எப்ப மூஞ்சைக் காண்பிச்சு உங்களுக்கு சோறு போட்டிருக்கேன். சாப்பாட்டிலயா அப்படி பண்ணுவேன். அத்தனை அறிவில்லாத முட்டாளா நான்?” என்றெல்லாம் தாமரையிடம் இசை கோப்பட, “தெரியாம சொல்லிட்டேன் சாமி” என்று ரிவர்ஸ் கியர் போட்டார் தாமரை. தண்டனை தந்த எரிச்சல் காரணமாக இசையிடம் தன்னிச்சையாகக் கோபம் வெளிப்பட்டிருக்கலாம். இந்தச் சர்ச்சையை அவர் நிதானமாகத்தான் கையாள வேண்டும். “இனிமே உங்க கிட்ட தள்ளித்தான் பழகணும் போல” என்று தாமரையிடம் அவர் சென்சிட்டிவ்வாக நடந்துகொள்வது தவறு. “நடந்த விஷயத்தைதானே சொன்னேன்?!” என்று மற்றவர்களிடம் பிறகு அங்கலாய்த்தார் தாமரை. ஒருவர் முகச்சுளிப்புடன் உணவு வழங்கினால் கோபமும் ஆட்சேபமும் வருவது இயல்பான விஷயமே.

பிக் பாஸ் - 43
பிக் பாஸ் - 43

இடைவேளைக்குப் பின்னர் திரும்பி வந்த கமல் “ஆதரவு தந்தவர்கள், முதுகில் குத்தியவர்கள்-ன்னு ஒரு வாக்கெடுப்பு நடந்தது. அதை இன்னமும் கொஞ்சம் நீட்டி ஆடலாம்” என்று அந்த டாஸ்க்கை மீண்டும் தூசு தட்டி எடுத்தார். இதற்குப் பதிலாக புது விதமான ஆட்டத்தின் மூலம் போட்டியாளர்களின் மனங்களை வெளிப்படுத்தச் செய்திருக்கலாம். இதனால் பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யமாவது ஏற்படும்.

இதுபோன்ற வாக்கெடுப்புகளின் போதுதான் ‘குரங்கிலிருந்து வந்தவன் மனிதன’ என்கிற கோட்பாட்டிற்கான சாட்சியங்கள் கிடைக்கும். ஒருவர் பாதுகாப்பான சாய்ஸை முதலில் சொல்லிவிட்டால் பின்னால் வருபவர்களும் அதே பாதுகாப்பான பாதையில் பயணம் செய்வார்கள். “முதுகில் குத்தியவர்–ன்னு யாருமில்ல சார்” என்று சிபி ஆரம்பித்து வைத்தவுடன் அதையே பின்னால் வந்த பலரும் சொன்னார்கள். இந்தக் குணாதியத்தை கமலும் கடைசியில் கிண்டலடித்தார். எனில் இந்த சாய்ஸை கமல் அனுமதித்திருக்கக்கூடாது. ‘யாராவது ஒருவரை நிச்சயம் குறிப்பிட்டாக வேண்டும்’ என்று கறாராக சொல்லியிருக்க வேண்டும்.

இரு நபர்களுக்குள் சில சச்சரவுகள் நிகழ்ந்து அவர்கள் என்னதான் பிறகு சமாதானம் ஆனது போல் பாவனை செய்தாலும் பகைமையின் வெப்பம் சூடு குறையாமல் அப்படியே உள்ளே இருக்கும் என்பதற்கான உதாரணமாக சிபி – அக்ஷராவின் மோதலை சொல்லலாம். இருவரும் எத்தனையோ சமாதானப் பேச்சுகளை நடத்திவிட்டாலும் சபை விசாரணையில் அவர்களின் உள்ளே இருந்த பூதங்கள் ஆக்ரோஷமாக வெளியே வந்தன. ஆரம்பக் கட்டத்தில் இருந்து ஒவ்வொரு சண்டையையும் தோண்டி எடுத்து வெளியே போட்டார்கள். “நம்முடைய வெறுப்பு, விருப்பைக் கூட சரியான வார்த்தைகளில் சொன்னால் எதிரிகூட மதிப்பார். இதை வாழ்க்கையிலும் பழகிப் பாருங்களேன். இது என் வீடு, என் உறவினர்கள் என்பதால் சொல்கிறேன். வார்த்தைகளைக் கையாள்வது முக்கியம்” என்று கமல் இருவருக்கும் அறிவுறுத்தியது நன்று. ஆங்கில வசைகைள உதிர்த்தால் அதன் கூர்மை மழுங்கிவிடுகிறது என்பதுதான் இங்குள்ள நடைமுறை சமாச்சாரம். ஆனால் வசை என்பது எல்லா மொழியிலும் ஒரே ஆபத்தைக் கொண்டதுதான்.

“Best Performer, Worst performer- தேர்வுல ரொம்ப சுத்தி வளைச்சு பேசறீங்க... இதனால சுவாரஸ்யக் குறைவு மட்டுமில்ல, நேர்மைக் குறைவும் தெரியுது. இதன் மூலம் கிடைக்கும் வெகுமதியும் தண்டனையும் சரியான நபர்களுக்கு போய்ச் சேரணும். தப்பா ஆயிடக்கூடாது” என்று கமல் குறிப்பிட்டுச் சொன்னது, ராஜூ மற்றும் இமான் தொடர்பானதாக இருக்கும். இந்த இருவரைவிடவும் சுமாராக ஆடுகிறவர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கிறார்கள்.
பிக் பாஸ் - 43
பிக் பாஸ் - 43

கமல் அந்தப் பக்கம் சென்றதும் “சிபி எப்படில்லாம் வார்த்தைகளை மாத்திப் போட்டு பேசறாரு பாத்தியா?” என்று இசையிடம் அனத்தினார் அக்ஷரா. “வீக் டீம் என்று அக்ஷரா சொன்னதில் இசைக்கே ஆட்சேபம் உண்டு. எனவே அவர் அது பற்றி சொன்னதும் “வீக்கான டீம்ன்னு நான் சொல்லவேயில்ல. பலமானவர்கள் ஒரே அணியில் இருந்தால் சமநிலையா இருக்காதுன்னுதான் சொன்னேன். எதுவா இருந்தாலும் சிபி என்கிட்ட நேரடியா பேசியிருக்கலாம்” என்று அக்ஷரா விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார். (செண்பகமே டாஸ்க்கில் நிரூப், வருண் ஆகிய பலமானவர்கள் இருவரும் ஒரே அணியில் இருந்தபோது ‘இது சமமற்ற தன்மையில்’ இருக்கிறது’ என்று அக்ஷரா சொன்னது உண்மை. சம்பந்தப்பட்ட நாளின் கட்டுரையில் இது பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது). தான் லீடராக அணியை பலவீனம் என்று அக்ஷரா சொன்னது சிபியின் ஈகோவை காயப்படுத்தியிருக்கலாம். ‘வீக் டீம்’ சர்ச்சை பற்றி ராஜூவிடம் பேசிய சிபி, அக்ஷராவிடம் பேசினாரா என்பதில் தெளிவில்லை.

இடைவேளைக்குப் பிறகு திரும்பி வந்த கமல் ‘மகுடம் சூட்டப்பட்ட’ விவகாரத்தை தூசு தட்டி எடுத்தார். “என்னை போலின்னு சொல்றாங்க. நீங்க அறிவுரை சொன்ன பிறகு அதைக் கேட்டு மாத்திக்கிட்டதை எப்படி போலின்னு சொல்ல முடியும்?” என்று வருண் கேட்டது மறுக்க முடியாத லாஜிக். “நான் யாருக்கும் ஜால்ரா அடிச்சதில்ல. அடிக்கவும் பிடிக்காது” என்று விளக்கம் அளித்த பிரியங்காவிடம் “அபிஷேக் இருந்த சமயத்துல அப்படி இருந்தீங்க இல்லையா?” என்று ஐக்கி சரியாகக் குறிப்பிட்டார். தனக்கான அழுமூஞ்சி பட்டத்தை மதுமிதா வெள்ளந்தியாக ஏற்றுக் கொண்டதைப் பார்த்து கமலே சிரித்துவிட்டார். (“குழந்தைகளை எல்லாம் யாருடா வேலைக்கு எடுத்தது?” என்று அபிஷேக் முன்னர் கூறியது இப்போது கமலின் மைண்ட் வாய்ஸிலும் வந்திருக்கலாம்!).

எந்த விருதும் கிடைக்காத அபினய் எழுந்து பேசினார். “டம்மி பீஸூன்ற விருதை ராஜூவிற்குக் கொடுத்தேன். ஏன்னா டாஸ்க் சமயத்துல எல்லாம் அவர் காணாமப் போயிடறாரோன்னு தோணுது. அவருக்கு நிறைய மூளை இருக்கு. ஆனா வெறும் என்டர்டெயின்மென்ட்டுக்கு மட்டும் பயன்படுத்தறார். அதனாலதான் தந்தேன். மத்தபடி பர்சனலா வேற ஒண்ணுமில்ல” என்று அபினய் சொன்னதை ஏறத்தாழ அப்படியே என் மைண்ட் வாய்ஸாக எடுத்துக் கொள்ளலாம். ராஜூ இன்னமும் சிறப்பாகவும் அசலாகவும் வெளிப்பட வேண்டும்.

பிக் பாஸ் - 43
பிக் பாஸ் - 43

“பொம்மை டாஸ்க்கை நிரூப் சிறப்பா கையாண்டார். எனக்குப் பிடிச்சிருந்தது. நான் பாட்டுக்கு இமான் பொம்மையை மட்டும் தூக்கிட்டு அலைஞ்சேன்” என்பது ராஜூவே முன்னர் தந்த வாக்குமூலம். எனில் நிரூப்பைப் போலவே ராஜூவும் அந்த டாஸ்க்கை ராஜதந்திரத்துடன் விளையாடியிருக்கலாமே?! அதற்கான திறமை அவரிடம் இருக்கிறது. அதைத்தான் அபினய்யும் சுட்டிக் காட்டினார். நானும் வழிமொழிகிறேன்.

“இந்த டாஸ்க்கை எப்படி விளையாடணும்னு எனக்கு முதல்ல தெரியல. எனக்குத் தெரிஞ்ச விதத்தில் விளையாடினேன். இப்ப அபினய் இன்னொரு கோணத்தில் சொல்றதால அதை நான் ஏத்துக்கறேன். இனிமே டாஸ்க்கையெல்லாம் சிறப்பா செய்ய முயல்வேன்” என்று வாக்குமூலம் தந்த ராஜூவிற்குப் பாராட்டு. “நீ என்ன சொல்றது... நான் என்ன கேக்கறது...” என்றில்லாமல் இது போன்ற சுயபரிசீலனைகள்தான் ஒருவரின் வளர்ச்சிக்கு பயன்படும்.

பிக் பாஸில் விளையாடும் ஒவ்வொரு முன்னணி போட்டியாளர்களுக்கும் ஒரு ரசிகர் கூட்டம் உருவாவதில் தவறில்லை. ஆனால் தனக்குப் பிடித்தமானவர் செய்யும் அனைத்து விஷயங்களையும் கண்மூடித்தனமாக ஆதரிப்பது முறையற்ற ரசிக மனோபாவம். ரசிக்கும் விஷயங்களோடு முரண்படும் அம்சங்களையும் கூடவே வைக்க வேண்டும். தனக்குப் பிடித்தவராகவே இருந்தாலும் அவர் மீதும் விமர்சனம் வைப்பதே நடுநிலையான பார்வையாள அணுகுமுறை. பிடித்த நடிகர், பிடித்த அரசியல்தலைவர் என்பது போன்ற கண்மூடித்தனமான அபிமானத்தால் நாம் சமூகத்தில் இழப்பது அதிகம்.
பிக் பாஸ் - 43
பிக் பாஸ் - 43

“நான் அவனைத் திட்டுவேன்… அவன் என்னைத் திட்டுவான்... இதுதான் எங்க பழக்கம்” என்கிற காமெடி போலவே பாவனி குறித்து பேசிவிட்டு அமர்ந்தார் அக்ஷரா. “தொட்டாற்சிணுங்கி–ன்ற பட்டம் எனக்குப் பிடிக்கலை சார். தூக்கிப் போட்டுட்டேன்” என்று தயங்கித் தயங்கி இசை விளக்கும் போது “அப்படித் தூக்கிப் போட்டதே தொட்டாற்சிணுங்கியின் அடையாளம்தானே?” என்று கமல் மடக்கியவுடன் இசை ஒப்புக் கொண்டார். (இந்த விஷயமும் சம்பந்தப்பட்ட நாளின் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது).

“ஓகே... இந்த மகுடம் டாஸ்க்ல யாரும் பெரிசா பாதிக்கப்படலைன்னு தோணுது. உங்க மேல உங்களுக்கே நம்பிக்கை இருக்கு. இசை மாதிரி சில பேர் மட்டும் ‘என்னைத் திருத்திக்கறேன்’ன்னு ஒப்புக்கிட்டாங்க.. நாமினேஷன்ல ஆறு பேர் இருக்கீங்க. அதுல மூணு பேர் காப்பாற்றப்படவிருக்காங்க” என்று சொல்ல ஆரம்பித்த கமல், ‘விஷபாட்டில், க்ரூப்புல டூப்பு, பட்டம் வாங்காத சிபி' ஆகிய மூவரும் Saved என்று பட்டங்களை வைத்து ஜாலியாகச் சொன்னார். தான் காப்பாற்றப்பட்டதை பாவனியால் நம்பவே முடியவில்லை. மகிழ்ச்சி அவரின் முகத்தில் தெரிந்தது. பாவனி தந்த தண்டனையில் குறைவான எண்ணிக்கையைச் செய்து ஏமாற்றியதை பிறகு வருணிடம் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தார் அக்ஷரா.

இடக்கை
இடக்கை
இடைவேளைக்குப் பிறகு திரும்பி வந்த கமல் பரிந்துரைத்த புத்தகம் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ‘இடக்கை’ என்னும் நாவல். முகலாய பேரரசர்களில் ஒருவரான ஒளரங்கசீப்பின் உயிலில் இருக்கும் சில வரிகளைக் கொண்டு ஓர் அற்புதமான புனைவுலகத்தை அமைத்திருப்பதுதான் இந்த நாவல். ‘நீதி என்றால் என்ன?’ என்பதை இந்த நூல் விவரிக்கிறது. "நீதியை மறுக்கலாம்; மறைக்கலாம்; ஆனால் தோற்கடிக்க முடியாது” என்று அந்த நூலின் மையத்தை சுருக்கமாகச் சொன்னார் கமல்.

“ஒவ்வொரு வாரமும் விளிம்புவரை தப்பிடச்சிடறீங்க” என்று ஆரம்பிப்பதின் மூலம் அபின்ய்க்கு மெல்லிய அதிர்ச்சியை தந்து விட்டுச் சென்ற கமல், இப்போது ‘எலிமினேஷன்’ பற்றிய பீடிகையை ஆரம்பித்தார். தான் காப்பாற்றப்பட்டதை அபினய்யால் நம்ப முடியவில்லை. “இந்த வாரம்தான் கொஞ்சம் ஆட ஆரம்பிச்சேன். ரொம்ப நன்றி” என்று பரவசப்பட்டார்.

பிறகு எலிமினேஷன் கார்டில் ‘மதுமிதா’ பெயர் வந்தவுடன் அவருடைய முகத்தில் எந்தவொரு அதிர்ச்சியும் இல்லை. தன் வழக்கமான புன்னகையுடன் ‘ஓகே’ என்று இயல்பாக ஏற்றுக் கொண்டார். மதுமிதா என்னும் பேபி வெளியேறுவது அனைத்துப் போட்டியாளர்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும்தான் என்றாலும் “இந்த ரத்த பூமியில் இருந்து இந்தக் குழந்தை வெளியேறட்டும்" என்றே ஆறுதல் அடைந்திருப்பார்கள். பிக்பாஸ் சூழலின் அழுத்தம் தாங்காமல் மதுமிதாவும் டிப்ரஷனில் இருந்தார்.

பிக் பாஸ் - 43
பிக் பாஸ் - 43

“அந்தப் பிள்ள பாட்டுக்கு இங்கயும் அங்கயும் துறுதுறுன்னு சுத்திக்கிட்டே இருந்துச்சு. அது பேசறது பெரும்பாலும் எனக்குப் புரியலை” என்று சொல்லிக் கொண்டிருந்த தாமரை, சோகமாக அமர்ந்திருந்த ஐக்கியிடம் “என்ன புள்ள... சரி விடு. அடுத்த வாரம் நாமினேஷன்ல உன்னைக் குத்திடறேன்” என்று சொல்லி விட்டு, “அக்ஷராவிற்கு ரசிகர் கூட்டம் அதிகம் போல இருக்கு. எப்படியாவது காப்பாத்திடறாங்க. அப்படின்னா உன்னையும் நாமினேஷன்ல குத்தறேன்” என்று நகைச்சுவையாகப் பேசிக் கொண்டிருந்தது அழகு. இப்படிப்பட்ட தாமரையை அதிகம் காண முடிந்தால் நன்றாக இருக்கும்.

மதுமிதாவிற்கு முந்தைய நிலையில் அண்ணாச்சி இருக்கிறார் என்றால் அவர் விளம்பில் இருந்து தப்பித்திருக்கிறார் என்றே பொருள். “மதுமிதாவைச் சுத்தி இருக்கறவங்களாலதான் அந்தப் புள்ள குழம்பியிருக்குன்னு நெனக்கறேன்” என்று ராஜூவிடம் ரகசியம் பேசிய இமான் 'அவர்கள் யார்' என்பதைச் சொல்லவில்லை.

மேடைக்கு வந்த மதுமிதாவிடம், “உங்களைப் பிடிக்காதவங்க உள்ள யாருமே இல்ல. அதுவொரு நல்ல விஷயம்” என்றார் கமல். 'இந்த இழப்பை நினைத்து நீங்கள் வருந்தக்கூடாது’ என்பதை வெவ்வேறு வார்த்தைகளில் கமல் சொல்லிக் கொண்டிருந்தது வீண். ஏனெனில் மதுமிதாவிற்கு வெளியேற்றப்பட்டதின் வருத்தம் இருந்ததைப் போலவே தெரியவில்லை. மகிழ்ச்சியாகவே இருந்தார். அவரின் பயணவீடியோ ஒளிபரப்பானது. சக போட்டியாளர்களிடம் பேசிவிட்டு வெளியேறினார் மதுமிதா. “எண்ணிக்கை 12 ஆக குறைந்திருக்கிறது” என்பதை சொல்லி கமலும் விடைபெற்றார்.
பிக் பாஸ் - 43
பிக் பாஸ் - 43

“உனக்கென்னப்பா வேற லெவல்ல இருக்கே... மக்கள் உன்னைத்தான் முதலில் காப்பாத்தினாங்க” என்று ராஜூவை நிரூப்பும் வருணும கிண்டல் செய்து கொண்டிருக்க “இப்படி உசுப்பேத்தியே உடம்பை ரணகளமா ஆக்கிடாதீங்கடா. இனிமே டாஸ்க்கையெல்லாம் எப்படிச் செய்யறேன் பாரு” என்று முதலில் வீறாப்பு காட்டிய ராஜூ “அதை எப்படிச் செய்யணும்னு சொல்லிக்கொடுடா” என்று நிரூப்பிடம் சட்டென்று இறங்கி வந்தது நல்ல நகைச்சுவை. “என்னை மட்டும் எப்படியாவது காப்பாத்திடு” என்கிற வடிவேலு காமெடிதான் நினைவிற்கு வந்தது.

பிக் பாஸ் - 43
பிக் பாஸ் - 43

எலிமினேஷன் கார்டை கமல் எப்படி சஸ்பென்ஸாக எடுத்துக் காட்டினார் என்பதை வருண் விவரித்துக் கொண்டிருக்கும்போது, அங்கு வந்த பாவனி சட்டென்று இவர்களுக்குள் புகுந்து எதையோ எடுக்க “ச்சே. காயினை எடுக்கறியா?" என்று ஜெர்க் ஆனார் வருண். ஆக... ஆளுமை முடிந்ததும் தன் நாணயத்தை யாராவது எடுத்துவிடலாம் என்பதில் பாவனி உஷாராகவே இருக்கிறார். எனில் இதை அபேஸ் செய்ய தாமரை போட்டிருக்கும் திட்டம் என்னவாகும்?

இங்குத் தாமரை ஜெயிக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.