Published:Updated:

பிக் பாஸ் - 46: `Feelings' பாவனி; அண்ணாச்சிதான் டைட்டில் வின்னரா? ஓயாத இசை - இமான் பஞ்சாயத்துகள்!

பிக் பாஸ் - 46

“அண்ணாச்சிதான் பிக் பாஸ் டைட்டில் வின்னர்" என்று இசை காமெடி செய்து கொண்டிருக்க, தன்னிடமிருந்து பேட்ஜையெல்லாம் சுண்டல் மாதிரி விநியோகம் செய்து கொண்டிருந்தார் இமான்.

பிக் பாஸ் - 46: `Feelings' பாவனி; அண்ணாச்சிதான் டைட்டில் வின்னரா? ஓயாத இசை - இமான் பஞ்சாயத்துகள்!

“அண்ணாச்சிதான் பிக் பாஸ் டைட்டில் வின்னர்" என்று இசை காமெடி செய்து கொண்டிருக்க, தன்னிடமிருந்து பேட்ஜையெல்லாம் சுண்டல் மாதிரி விநியோகம் செய்து கொண்டிருந்தார் இமான்.

Published:Updated:
பிக் பாஸ் - 46

“ஹாய் பிக் பாஸ்.. இதை நான் சொல்லியே ஆகணும். உங்களை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். உங்க குரல் அத்தனை க்யூட்டா இருக்கும். உங்களை அஞ்சு வருஷமா பார்த்துட்டு வரேன். ‘பார்க்க பார்க்க பிடிக்கும்-ன்ற லாஜிக் காரணமாக உங்களை பிடிக்க ஆரம்பிச்சதா... இல்ல. உண்மையிலேயே உங்களை பிடிச்சுதா...ன்னு இன்னிக்கு வரைக்கும் எனக்கு குழப்பமாவே இருக்கு. என்ன காரணம்னு தெரியாமயே தொடர்ந்து உங்களை பார்த்துட்டு வரேன். வழக்கமா நீங்க எப்படியோ சமாளிச்சுடுவீங்க. ஆனா இந்த முறை என்னாச்சுன்னு தெரியல. நெருப்பு சரியில்லையா... பட்டாசு சரியில்லையா... பத்த வைக்கறது சரியில்லையா... நீங்களும் டிசைன் டிசைனா பத்த வைக்க முயற்சி செஞ்சும் அது ‘புஸ்ஸா’ போயிடுது. பார்த்து கவனமா விளையாடுங்க... உங்க மேல நிறைய தடவை கோபம் வந்தாலும் இதுவரைக்கும் நான் உங்களை நாமினேட் பண்ணதில்லை. ஆனா இந்த முறை பண்ணிடுவனோன்னு எனக்கே பயமா இருக்கு. ஸோ... பார்த்துக்கங்க. உங்க மேல எனக்கு ஒரு நல்ல ஃபீலிங்க்ஸ் இருக்கு. அதைக் கெடுத்துக்காதீங்க. இந்த விஷயத்தை கமல் கிட்டயும் சொல்லுங்க. முடிஞ்சா அவரையே உள்ளே அனுப்புங்க... பை... டேக்கேர்!

பிக் பாஸ் கண்ணாடி பின்புறம் நிற்க, நாம் முன்புறம் நின்று இப்படியெல்லாம் அனத்தி ஒரு டாஸ்க் செய்ய வேண்டும் போலிருக்கிறது. இந்தக் கண்ணாடி டாஸ்க்கில் நடந்தவையெல்லாம் இப்படித்தான் யோசிக்க வைக்கின்றன.

பிக் பாஸ் - 46
பிக் பாஸ் - 46

எபிசோடு 46-ல் என்ன நடந்தது?

‘ஏத்தி... ஏத்தி... ஏத்தி... என் நெஞ்சில் தீய ஏத்தி…’ என்று நெருப்பின் ஆற்றலுக்கான பாடலை நீர் வாரத்தில் போட்டு குழப்பினார் பிக்பாஸ். ‘சுத்த பத்தம் கிடையாது. முகத்தை கழுவு லேசா...’ என்கிற வரிதான் காரணமாக இருக்க வேண்டும். “இனி பாத்ரூமில் நுழைய வேண்டுமென்றால் அங்கு ஒரு வாட்ச்மேன் அமர்ந்திருப்பதாகவும் அவரிடம் பர்மிஷன் கேட்டுத்தான் நுழைய வேண்டுமென்றும் மக்கள் கற்பனை செய்துதான் இனி உபயோகிக்க வேண்டும். பிக் பாஸ் வீட்டின் பாத்ரூமை, ‘பப்ளிக் டாய்லெட்’ ஆக்கி நாறடித்திருக்கிறார்கள். பிக் பாஸின் கற்பனையை விடவும் வருணின் கற்பனை கொடூரமாக இருக்கிறது. யாராவது குளிக்கப் போகும்போது, நீரை நிறுத்திவிட்டு பக்கத்திலேயே சைலண்ட்டாக ஒளிந்து கொள்ளும் ‘சின்னப்புள்ளத்தனமான’ விளையாட்டை அவர் நிறுத்தவில்லை. முகத்தைச் சுருக்கி சைனா ஸ்டைலில் சிரிக்கும் அக்ஷரா இதற்கு கூட்டுக்களவாணியாக இருக்கிறார்.

“நான் கேட்டா இல்லைன்றான். ராஜூவிற்கு எக்ஸ்ட்ரா முட்டையும் அக்ஷராவிற்கு எக்ஸ்ட்ரா வாழைப்பழமும் தர்றான். நல்லா விளையாடற போட்டியாளர்-ன்னா அவங்ககிட்ட மட்டும் ஸ்மூத்தா பழகறான்” – அண்ணாச்சியை ஒரங்கட்டி இப்படியெல்லாம் நிரூப் புகார் சொல்லிக் கொண்டிருந்தது நிச்சயம் அபினய் பற்றியதுதான் போல!

கிச்சன் ஏரியவாவில் ஒரு மினி மனஸ்தாபம். சாதம் நிறைய மிகுந்துவிட்டதைக் குறித்து பிரியங்கா பேசும் போது “இதை வெச்சு சமாளிக்கலாம். டிராமாலாம் பண்ண வேணாம்” என்று சொல்லியது தாமரையின் மனதைப் புண்படுத்திவிட “நான் அந்த அர்த்தத்துல சொல்லல. புரியுதா?” என்று விளக்கம் அளித்த பிரியங்கா, பிறகு கட்டியணைத்து முத்தாக்கள் கொடுத்து தாமரையை சமாதானம் செய்தார். (நாமினேஷன் பயம்?!). இந்தக் காட்சியை 'பிதாமகன்' விக்ரம் முகபாவத்தில் வந்து நிரூப் வேடிக்கை பார்த்தார்.

பிக் பாஸ் - 46
பிக் பாஸ் - 46

பாத்ரூம் ஏரியவாவில் ‘ஹாய் சுரேஷ்... ஹாய் ரமேஷ்...’ ரேஞ்சிற்கு நிரூப்பும் பிரியங்காவும் பரஸ்பரம் அறிமுகப்படுத்திக் கொண்டு பேசியது சுவாரஸ்யமாக இருந்தது. “நீங்கதான் விஜய் டிவி பிரியங்காவா... ஓவரா பேசுவீங்கள்ல... உங்க கூட ஒரு செல்ஃபி... வேணாம் மேடம். உங்களை டிவிலயே பார்த்துக்கறேன். அவ்ளோ சீன் வேணாம்” என்று நிரூப் ஜாலியாக நோஸ்கட் செய்தது நல்ல கிண்டல்.

பாவனியிடமிருந்து முட்டை வாங்கி சாப்பிடும் ஆர்வத்தைச் சற்று டாஸ்க்கிலும் இசை காட்டியிருக்கலாம். டாஸ்க் ஆரம்பித்து நீண்ட நேரமாகியும் அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்ததால், கடுப்பான பிக் பாஸ், “உங்க பேட்ஜை கழட்டி இமான்கிட்ட கொடுங்க” என்று கண்டிப்பு காட்டினார். இசையிடம் மட்டும் பிக் பாஸ் சற்று ஓவராக சீன் போடுகிறாரோ என்று தோன்றுகிறது. “நீங்க குளிக்கப் போயிருந்தீங்கன்னு நெனச்சேன் அண்ணாச்சி” என்று அவரைத் தேடிச் சென்றார் இசை. டாஸ்க் ஆரம்பித்தவுடனே அவரைத் தேடி இசை சென்றிருக்க வேண்டும். அண்ணாச்சியும் கமுக்கமாக இருந்து இசையை சைலண்ட்டாக பழிவாங்கிவிட்டார் போலிருக்கிறது. அவராவது ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்.

ராஜூ கண்ணாடியின் பின்புறம் நிற்க, அவரை நோக்கி பாவனி பேச வேண்டிய நேரம் இது. "தட்டி தட்டி கேட்பேன்...” என்கிற பல்ராம் நாயுடு வாய்ஸில், தெலுங்கு டப்பிங் வாசனை அடிக்க பாவனி மூச்சுவிடாமல் நீண்ட நேரம் பேச, 'பிதாமகன்' விக்ரம் முகபாவத்தோடு அவரை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த ராஜூ, ஒரு கட்டத்தில் தாங்காமல் சிரித்துவிட்டார். “Feelings’ என்கிற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்தும் வழக்கம் பாவனியிடம் இருக்கிறது போலிருக்கிறது. சம்பந்தமில்லாத இடத்திலும் அவர் அதை இட்டு நிரப்பும்போது அர்த்தம் மாறுகிறது. எனவே பாவனி, ராஜூவை கன்னாபின்னாவென்று விமர்சித்துக் கொண்டிருந்தாலும் கூட அது ஏதோ ‘love proposal’ மாதிரியே தெரிந்து கொண்டிருந்தது. எனில் நிகழ்ச்சி ஆரம்பித்த நாள்களில் அவர் அபினய்யிடம் பேசிய “Feelings’ கூட இதே அர்த்தம்தான் போலிருக்கிறது.

பிக் பாஸ் - 46
பிக் பாஸ் - 46

“நீங்க மத்தவங்க கூடத்தான் அதிகம் பழகறீங்க. என் கூட பழக மாட்றீங்க. இதனால நான் காயப்பட்டிருக்கேன். உங்களை எனக்குப் பிடிக்கும்.” என்பதைத்தான் ஹைதராபாத் ஜாங்கிரியாக சுற்றிக் கொண்டிருந்தார் பாவனி. என்ன செய்வது, பிக் பாஸ் பெல் அடிக்கும் வரை ஏதாவது பேசியாக வேண்டுமே?! “நீங்க என்னை நிறைய முறை நாமினேட் பண்ணயிருக்கீங்க. அதுக்காக நீங்க சொன்ன காரணம்லாம் கூட எனக்கு தெரியும்” என்றார் பாவனி. எப்படி?

“நெஜம்மாவே உனக்கு ராஜூவைப் பிடிக்குமா?” என்று பிறகு பாவனியிடம் இசை கேட்க, “ஆமாம்... ஆனா அவருக்கு வெறுப்பு வர்ற மாதிரி நான் என்ன செஞ்சேன்னு தெரியல” என்று குழம்பினார் பாவனி.

பிக் பாஸ் - 46
பிக் பாஸ் - 46

அடுத்த கண்ணாடி டாஸ்க்கில் தாமரையைப் பார்த்து பிரியங்கா பேச வேண்டும். “என்னை மாதிரியே நீயும் பாசத்துக்கு அடிமை. உனக்கு இந்த கேம் புரியலையோன்னு முதல்ல நெனச்சேன். ஆனா அன்னிக்கு என்னை நிக்க வெச்சு கேள்வி கேட்ட பார்... நமக்கு எதுவும் தெரியலையோன்ற சந்தேகம் உனக்குள்ள இருக்கு. அப்படில்லாம் குழம்பத் தேவையில்லை. உண்மையா இருந்தாலே அதுதான் அழகு. கோபப்படாம இரு... மத்தபடி நீ ஒரு செம லூசு... ஜாலியான லூசு... 70 வயசு ஆனாலும் இப்படியே லூசா இரு...” என்று தாமரையை முழு 'ஹா... ஹா... ஹாசினி'யாக மாறும் உபதேசத்தைக் கூறினார் பிரியங்கா.

“தாமரை தனக்கு தெரியும்னு காண்பிச்சுக்க மாட்டா. நேரம் வரும்போது போட்டு உடைச்சுடுவா” என்று பிறகு பிரியங்காவிடம் அபினய் கூறிக் கொண்டிருந்தார். “நாம கோபப்பட்டா ஒரு மாதிரி. அவ கோபப்பட்டா வேற மாதிரி எடுத்துக்குவா” என்று சரியான பாயின்டைக் கூறினார் பாவனி. "நான் பொல்லா கோபக்காரியாயிடுவேன். நியாயத்தை மட்டும்தான் பேசுவேன்” என்று தன் கோபத்தை மட்டும் நியாயப்படுத்தும் தாமரை, மற்றவர்கள் கோவப்படும் போது “என்கிட்டலாம் இப்படிப் பேசாத பாப்பா” என்று அதற்கும் கோபப்படுவார்.

அடுத்ததாக வருணைப் பார்த்து ஐக்கி பேச வேண்டும். இதுவும் ஏறத்தாழ ‘லவ் ப்ரோபசல்’ போலவே இருந்தது. “நான் உன் கூட க்ளோஸ் ஆகணும்னு டிரை பண்ணியிருக்கேன். ஆனா நீ அதிகம் பேச மாட்டே. அக்ஷரா கூட மட்டும்தான் அதிகம் பழகறே. சகுனியா நீ எதுவும் பண்ணலை. மத்தவங்க கூடயும் பழகுங்க” என்பது ஐக்கியின் உபதேசம்.

பிக் பாஸ் - 46
பிக் பாஸ் - 46
‘கண்ணாடி டாஸ்க்’கின் முதல் பாகம் முடிந்ததாம். (எப்போது ஆரம்பித்தது?!). முன்னர் இருந்த ஜோடிகள் அப்படியே வலம், இடமாக மாறும் என்று எதிர்பார்த்தால், ஆட்டத்தை மாற்றி அமைத்து ட்விஸ்ட் ஏற்படுத்தினார் பிக் பாஸ். அதன்படி ஜோடிகள் மாறின. அபினய் – சிபி, வருண் – நிரூப், தாமரை – இசை, இமான் – ஐக்கி, அக்ஷரா – பாவனி, ராஜூ – பிரியங்கா.

ஐக்கியைப் போலவே பழுப்பு நிற விக் ஒன்றை தலையில் மாட்டிக் கொண்டு இமான் அலைந்தது, பார்க்க வேடிக்கையாக இருந்தது. பிரியங்காவைப் போல மாற முயன்று, அறந்தாங்கி நிஷாவாக வந்து நின்றார் ராஜூ. “நீ தண்ணி இருக்கற பக்கெட்டை எடுத்து ஊத்து. நான் காலி பக்கெட்டை எடுத்து ஊத்தற மாதிரி பாவ்லா பண்றேன்” என்று ஆட்டத்தை சற்று சுவாரஸ்யமாக்க முயன்றார் நிரூப். ஆனால் சிரிக்க வைத்ததென்னமோ, அபினய் – சிபி ஜோடிதான். சிபி அருகில் இருக்கும் ஒரு டவலை எடுக்க, வேறு வழியில்லாமல் அங்கிருந்த உள்ளாடை ஒன்றை அபினய் எடுக்க வேண்டியிருந்தது. உடனே சிபி தன் டவலால் முகத்தைத் துடைத்தும், அதை முகர்ந்து பார்த்தும் காமெடி செய்ய, ‘அவ்வ்வ்வ்வ்’ என்கிற முகபாவத்துடன் அபினய்யும் தன் கையில் வைத்திருந்த உள்ளாடையின் மூலம் அதைச் செய்வது போல் பாவனை செய்தது ரகளையான காமெடி.

அடுத்ததாக, பிரியங்காவிடம் ராஜூ பேசிய அந்த நீண்ட உரையாடலுக்கு வீடே விழுந்து விழுந்து சிரித்தது. ஒன்றை சொல்ல ஆரம்பித்து, வாக்கியத்தின் இறுதியில் அதற்கு நேர்மாறாக ரிவர்ஸ் கியர் போடுவது ராஜூவின் ஸ்டைல். இந்த நோக்கில் வீட்டில் உள்ள அனைவரையும் பிரியங்கா எப்படி ஹேண்டில் செய்கிறார் என்பதை அவர் விவரிக்க, பிரியங்காவால் சிரிப்பை அடக்க முடியவில்லை. குறிப்பாக ராஜூவின் பேச்சை அக்ஷரா மிகவும் ரசித்தார் என்பது அவரது அடக்க முடியாத சிரிப்பின் வழியாக தெரிந்தது. “எப்பப் பார்த்தாலும் நிகழ்ச்சியை anchor பண்ற மாதிரியே பேசறீங்க” என்று ராஜூ சைடு கேப்பில் குத்தியது ஒரு நல்ல உதாரணம்.

பிக் பாஸ் - 46
பிக் பாஸ் - 46

ராஜூ தன்னுடைய பேச்சில் பாவனி பற்றியும் சில கமெண்ட்டுகளை ஜாலியாக இணைக்க, அதற்காக பிறகு பாவனி கோபித்துக் கொண்டார். “என்னைப் பத்தி ஃபுல்லா தெரிஞ்ச பிறகு பேசுங்க. அவார்டு பங்ஷன்ல கூட எல்லோரையும் பத்தியும் நல்ல விதமா சொல்லிட்டு என்னை மட்டும் வேற மாதிரி சொல்றீங்க” என்று அவர் கோபிக்க “ஓகே... அது என்ன பிரச்னைன்னு பேசிடலாமா... ஆரம்பிச்சா மூணு ஹவர் ஆகும்” என்ற ராஜூ தந்த முன்னுரையே இன்னொரு கண்ணாடி டாஸ்க் மாதிரி நீளமாக இருந்தது. “ஓகே... டைம் கிடைக்கறப்ப சொல்லுங்க. உங்ககிட்ட இருந்து விலகி இருக்கிற முடிவு சரிதான்னு தோணுது” என்றபடி நகர்ந்து சென்றார் ராஜூ.

பிக் பாஸ் - 46
பிக் பாஸ் - 46

“அண்ணாச்சிதான் பிக் பாஸ் டைட்டில் வின்னர்" என்று இசை காமெடி செய்து கொண்டிருக்க, தன்னிடமிருந்து பேட்ஜையெல்லாம் சுண்டல் மாதிரி விநியோகம் செய்து கொண்டிருந்தார் இமான். பிரியங்காவிற்கு ஒன்று, பாவனிக்கு ஒன்று... என்று அவர் கொடுக்க, அவர்கள் ஆசையாக வாங்கி வைத்துக் கொண்டனர். பின்னர் விளையாட்டுப் போக்கில் இசையின் முகத்திற்கு முன்னால் தன் கால்களை இமான் ஆட்ட “அண்ணாச்சி, மூஞ்சிக்கு முன்னாடி கால் வெச்சு ஆட்டாதீங்க. எனக்குப் பிடிக்காது” என்று சற்று வெறுப்புடன் சொன்னார் இசை.

“நைட்டுக்குள்ள உன்னை வெறுப்பேத்திக் காட்டறேன்னு சொன்னேன் இல்லையா... அதுக்காகத்தான்” என்றார் இமான். “அதுக்காக மூஞ்சி முன்னாடி காலை ஆட்டறது எனக்கு பிடிக்காது” என்று கோபம் குறையாமல் பேசினார் இசை. அவருக்கு என்றல்ல, அது விளையாட்டு நோக்கு என்றாலும் கூட முகத்திற்கு நேராகக் காலை கொண்டு வருவது பலருக்கும் பிடிக்காது. ஆனால் அண்ணாச்சி மன்னிப்பு கேட்ட பிறகும் இசை இறங்கி வராமல் இருந்தது, சற்று நெருடலாக இருந்தது. “அவரு விளையாட்டுக்குத்தானே பண்ணாரு” என்று ஐக்கி சொல்ல “உனக்கு அப்படி செஞ்சா ஒகேவா இருக்கலாம். எனக்கு இல்லை. நீ இதுல வராத” என்று ஐக்கியின் மீதும் பாய்ந்தார் இசை.

பிக் பாஸ் - 46
பிக் பாஸ் - 46

இந்தச் சம்பவத்தில் இமான் மீது பிழையில்லாதது போல் தெரியும். ஆனால் இமான் குசும்பாக பல விஷயங்களைச் செய்துவிட்டு பிறகு அது பிரச்னையாகும் போல் தெரிந்தால் “சாரி” என்றபடி விலகிவிடுவார். அல்லது அதை காமெடியாக சமாளிக்க முயல்வார். இசைக்கும் இமானுக்கும் நிகழும் நீண்ட கால முட்டலின் பின்னணியில்தான் இதைப் பார்க்க வேண்டும். தனக்குப் பிடிக்காத விஷயத்தை ஆட்சேபிப்பதற்கு இசைக்கு உரிமை இருக்கிறது. ஆனால் அது விளையாட்டிற்காக செய்யப்பட்டதா, உள்நோக்கம் கொண்டதா என்பதையும் இணைத்தே அவர் பார்க்க வேண்டும்.

இசைக்கும் இமானுக்கும் நடுவில் ஏதாவது ஒரு பிரச்னை வந்து கொண்டே இருக்கிறதே... ஏன்? (நான் இசையமைப்பாளர் இமானைச் சொல்வதாக தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள்). அய்யய்யோ... ஆனந்தமே!