Published:Updated:

பிக் பாஸ் - 47: வரிசையாக பன்ச் டைலாக் பேசிய வருண்; குறியிடுகளால் கமலுக்கே டஃப் பைட் கொடுத்த தாமரை!

பிக் பாஸ் - 47

யாருக்கோ தலைமசாஜ் செய்வது போல் காற்றில் பிரியங்கா கைகளைப் பிசைய பின்னால் இருந்த ராஜூ, பிரியங்காவிற்கு உண்மையிலேயே மசாஜ் செய்து கொண்டிருந்தார். ராஜூவிடம் இப்படியாக வேலை வாங்கிக் கொண்டது பிரியங்காவின் சாமர்த்தியம்.

பிக் பாஸ் - 47: வரிசையாக பன்ச் டைலாக் பேசிய வருண்; குறியிடுகளால் கமலுக்கே டஃப் பைட் கொடுத்த தாமரை!

யாருக்கோ தலைமசாஜ் செய்வது போல் காற்றில் பிரியங்கா கைகளைப் பிசைய பின்னால் இருந்த ராஜூ, பிரியங்காவிற்கு உண்மையிலேயே மசாஜ் செய்து கொண்டிருந்தார். ராஜூவிடம் இப்படியாக வேலை வாங்கிக் கொண்டது பிரியங்காவின் சாமர்த்தியம்.

Published:Updated:
பிக் பாஸ் - 47
வருணின் ‘நீர் வாரம்’ என்பதை ‘வெந்நீர் வாரம்’ என்று பெயர் மாற்றி விடலாம். அந்தளவிற்கு சூடான சண்டைகள் பிக் பாஸ் வீட்டில் நடந்து கொண்டிருக்கின்றன. நிரூப் – வருண், தாமரை – இசை, ராஜூ – பாவனி என்று மிதமானது முதல் உக்கிரமானது வரை விதம் விதமான சண்டைகள் நடக்கின்றன. பிக் பாஸ் வீட்டு கேமராக்கள் தன்னை மட்டுமே பார்க்க வேண்டும் என்று நிரூப் முடிவு செய்து விட்டாரோ, என்னமோ! பிரியங்காவையும் தாண்டி உக்கிரமாக களமாடிக் கொண்டிருக்கிறார்.

எபிசோட் 47-ல் என்ன நடந்தது?

வழக்கம்போல், நீர் ஆற்றலுக்கும் பிக் பாஸ் காலையில் போட்ட பாடலுக்கும் தொடர்பில்லை. ‘எங்க வீட்டு குத்துவிளக்கு... நீ கெடச்சா என் வாழ்க்கை கெத்து’ பாடலில் நீரை எங்கே தேடுவது?. “டெடிபேரா நீ இருந்தா. உன்னைக் கட்டிப்பிடிச்சுக்கினே தூங்கிடுவேன்’ என்கிற வரி வந்த போது, பக்கத்தில் இருந்த இமானை பார்த்து நடனம் ஆடிக் கொண்டிருந்த தாமரை, இந்த வரியின் அர்த்தம் உணர்ந்த பிறகு ‘ச்சே... ச்சே... இல்ல... இல்ல’ என்று மறுத்தபடி செய்த சைகை சுவாரஸ்யம்.

பிக் பாஸ் - 47
பிக் பாஸ் - 47

காலையிலேயே ஏழரையைக் கூட்ட நிரூப் முடிவு செய்துவிட்டார் போலிருக்கிறது. தன் ஆளுமையை நிரூபிக்கும் ஆவேசத்தில் இருந்த வருண், அனைவரையும் அமர வைத்து “என் கண் முன்னாடி ஃபுல் பாட்டில் தண்ணி குடிங்க” என்று மருத்துவ வகுப்பு எடுத்துக் கொண்டிருக்க, பேனா எடுத்து வர மறந்துவிட்ட மாணவன் மாதிரி, நிரூப் பாட்டில் எடுத்து வரவில்லை.

“நான் காலையிலேயே தண்ணி குடிச்சிட்டேன்” என்று நிரூப் அழும்பு செய்ய, “இப்ப நீ பாட்டில் எடுத்து வந்தாகணும்” என்று ஸ்டிரிக்ட் மாஸ்டராக மாறிய வருண் “நான் சொல்றதை செய்யலைன்னா கெளம்பு” என்று கோபமாகச் சொல்ல, அதை செளகரியமாக எடுத்துக் கொண்ட நிரூப் “ரைட்டு கிளம்பறேன்” என்று எழுந்து சென்றுவிட்டார். தான் சொன்னதைக் கேட்டு நடந்த நல்ல மாணவர்களுக்கு மட்டும் ஐந்து முறை இலவசமாக பாத்ரூம் செல்லும் சலுகையைத் தந்தார் வருண்.

பிக் பாஸ் - 47
பிக் பாஸ் - 47

‘கண்ணாடி டாஸ்க்’ பஸ்ஸர் ஒலித்தது. பிரியங்காவும் ராஜூவும் இதன் சுவாரஸ்யத்தைக் கூட்ட முயன்றார்கள். ஒருவருக்கொருவர் உணவு ஊட்டிக் கொண்டு பரஸ்பரம் ‘கலகலகல’வென சிரித்துக் கொண்டிருந்தார்கள். சிபியின் தலையில் தண்ணீர் ஊற்றுவது போல் இசை பாவனை செய்ய, இசையின் நிழலாக நடிக்க வேண்டிய தாமரை, அபினய்யின் தலையில் உண்மையாகவே தண்ணீர் ஊற்றினார். குடுகுடுவென்று ஓடிய இசை, எதையோ கொண்டு வந்து சிபியின் வாயில் போடுவது போல் நடிக்க, தாமரை உண்மையாகவே உப்பைக் கொண்டு வந்து அபினய்யின் வாயில் திணிக்க, அவர் முகத்தைச் சுளித்தபடி அமர்ந்திருந்தார். (உப்பிட்டவரை உள்ளளவும் நினை) சில நாள்கள் பழகி விட்டதால், இந்த டாஸ்க்கை இவர்களாக யோசித்து மெல்ல மெருகேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

ஐக்கி, பிரியங்காவை இறுக்க அணைத்துக் கொண்டு கன்னத்தில் முத்தம் கொடுக்க, ராஜூவிற்கும் அதே போல் இறுக்கியணைச்சு ஒரு உம்மா கொடுத்தார் இமான். ‘ஏன் இந்த பிக்பாஸில் கலந்து கொண்டோம்?' என்று ராஜூ தன் வாழ்க்கையையே நொந்து கொண்ட நேரமாக அது இருந்திருக்க வேண்டும். பாவனியுடன் ராஜூவை வேண்டுமென்றே கோத்து விடும் குறும்பில் இறங்கினார் பிரியங்கா. அவர் அக்ஷராவை சென்று கட்டியணைத்துக் கொள்ள, அதே போல் பாவனியிடம் – ஆனால் மேலே பட்டு விடாமல் – ஜாக்கிரதையாக விளையாடினார் ராஜூ.

பிக் பாஸ் - 47
பிக் பாஸ் - 47

ஆனால் பிறகு அவர் அக்ஷராவை மட்டும் கட்டியணைக்க, “என்னடா... இது...” என்கிற மாதிரி சைகை செய்த பிரியங்கா “பிரியங்கா இருக்கிற இடத்துல சந்தோஷம் மட்டும்தான் இருக்கணும், சண்டை இருக்கக்கூடாது” என்பதை சண்டை போடும் தொனியில் உரத்த குரலில் சொல்லிக் கொண்டிருந்தார். (‘சைலன்ஸ்’ என்பதை இங்க கத்தித்தானே சொல்ல வேண்டியிருக்கு?!).

கண்ணாடிச் சட்டத்தின் பின்னால் ஐக்கி நிற்க, அவரின் பிம்பமான இமான் பேச வேண்டிய தருணம்... “நீ பாசக்காரி… அதே சமயத்துல ரோஷக்காரி…” என்று மரத்தடி ஜோசியர் போல ஆரம்பித்த இமான் “நீ இந்த வீட்டில் சொந்தங்களை தேடறே. ஆனா உனக்கு ஏமாற்றம்தான் கிடைக்குது. நீ சொந்தமா நினைக்கற மாதிரி மத்தவங்க உன்னை நினைக்கலை. ஆனா அதே சமயத்துல நீ டெரரான ஆசாமி. உன் மேல பந்தை எறிஞ்சா. அதை வாங்கி திருப்பியடிக்கறதுல கெத்து” என்று ஐக்கியின் குணாதிசயத்தை இமான் துல்லியமாக விளக்க, அதிலிருந்த உண்மையை உணர்ந்து தன்னிச்சையாக கண் கலங்கினார் ஐக்கி. அபினய் டிஷ்யூ பேப்பர் எடுத்து வந்து தர, அதையும் தன்னிச்சையாக கை நீட்டி வாங்கினார். பஸ்ஸர் அடிப்பதற்கு முன்னால் ஐக்கி கையை விட்டுவிட்டதால், தன் பேட்ஜை இழக்க வேண்டியிருந்தது. அண்ணாச்சியின் காட்டில் பேட்ஜ் மழையாக பெய்தது.

பிக் பாஸ் - 47
பிக் பாஸ் - 47

யாருக்கோ தலைமசாஜ் செய்வது போல் காற்றில் பிரியங்கா கைகளைப் பிசைய பின்னால் இருந்த ராஜூ, பிரியங்காவிற்கு உண்மையிலேயே மசாஜ் செய்து கொண்டிருந்தார். ராஜூவிடம் இப்படியாக வேலை வாங்கிக் கொண்டது பிரியங்காவின் சாமர்த்தியம். துள்ளலான நடனத்தை ஐக்கி ஆட, அதை நகலெடுக்க முயன்று ‘தத்தக்கா... பித்தக்கா’ என்று இடுப்பை இமான் அசைத்துக் கொண்டிருந்ததை காலாட்டிக் கொண்டே வேடிக்கை பார்த்து சிரித்தார் இசை. அவரின் நகலான தாமரையும் அதையே செய்தார்.

கண்ணாடி பிம்பமாக வருண், நிரூப்பிடம் பேச வேண்டிய நேரம். வருணின் டயலாக்கில் பல சினிமா பன்ச் வசனங்கள் இருந்தன. “நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா... இல்ல தெரியாமத்தான் கேக்கறேன். நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா?” என்று சந்தானமாக ஆரம்பித்த வருண், மெளனராகம் கார்த்திக், ரேவதியிடம் சொல்வது மாதிரி “உனக்கு பயம். என்னைப் பார்த்தா பயம். என் கண்ணைப் பார்த்தா பயம்” என்று அடுத்த டயலாக்கை எடுத்து விட்டார். “சிங்கத்தை சுரண்டிப் பார்க்காதே... இது காட்டாறு... இதுக்கு கரையும் கிடையாது... தரையும் கிடையாது” என்று ‘அண்ணாத்தே’ ரஜினிக்கு நகர்ந்தார் வருண். இப்படியாக ‘நீர்’ ஆற்றல். ‘நிலம்’ ஆற்றலிடம் கெத்தாக பன்ச் பேசிக் கொண்டிருந்தது. “நான் பாட்டுக்கு என் வழில போறேன். என்னைச் சீண்டிப் பார்க்காதே” என்று முத்து படத்தின் டயலாக்கிற்கு அடுத்த வந்த வருண். “உன் கண்ல பயத்தைப் பார்த்துட்டேன். இனி அதை கொஞ்சமா கொஞ்சமா உனக்கே அறிமுகப்படுத்தறேன்” என்று 'குருதிப்புனல்' வசனத்திற்கு மாறினார். ஆக ஒட்டுமொத்தத்தில் சினிமா ஹீரோக்கள் சவால் விடும் வசனங்களை வருணின் மூலம் நினைவுப்படுத்திக் கொள்ள முடிந்தது. (இந்த எக்ஸ்பிரஷனை சினிமாவில் நடிக்கும் போதும் வருண் பயன்படுத்தினால் நல்லது).

பிக் பாஸ் - 47
பிக் பாஸ் - 47

“வருண் என்ன பேசினான்?” என்பதற்கான கோனார் நோட்ஸை பிரியங்காவிடம் கேட்டுக் கொண்டிருந்தார் நிரூப். “நீ என்னை சுரண்டினா பதிலுக்கு சுரண்டுவேன்னு சொல்றான்” என்று ஒருவரி விளக்கம் கொடுத்தார் பிரியங்கா. அந்தப் பக்கம் “நான் பேசினது என்ன?” என்று ராஜூவிடம் கேட்டுக் கொண்டிருந்தார் வருண். “நீ நோண்டினா... நானும் நோண்டுவேன்னு சொன்ன மாதிரிதான் இருந்தது.. அது ஒகேதான்” என்று விளக்கம் தந்து கொண்டிருந்தார் ராஜூ. ஆக... டயலாக் பேசிய வருணிற்கும் சரி, அதை காதில் ரத்தம் வர கேட்ட நிரூப்பிற்கும் சரி, என்ன நடந்தது என்று அவர்களுக்கே புரியவில்லை போல. இதில் இரண்டு ஹீரோக்கள் மோதல் போல எக்ஷ்பிரஷன்கள் வேறு. முடியல.

பிக் பாஸ் - 47
பிக் பாஸ் - 47

ஆளுமை வைத்திருந்தால் அவர்களை ‘ஆளுநர்’ என்று அழைக்கும் பாணியை பிரியங்கா பின்பற்றுகிறார். “வருண்தான் இந்த வார ஆளுநர். ‘நீர்’ ஆளுமையை வெச்சிருக்கான். அவன் சொல்றபடிதான் நீ கேக்கணும்” என்று நிரூப்பிற்கு புத்திமதி சொல்லிக் கொண்டிருந்தார் பிரியங்கா. “இல்லியே. பாத்ரூம் மட்டும்தானே அவன் கண்ட்ரோல்?” என்று நிரூப் இடக்கு பேச “அப்ப கக்கூஸ்ல நின்னு அவன் தண்ணி குடிக்கச் சொல்லணுமா..? தண்ணின்னாலே வருண்தானே?” என்று லாஜிக்கை சரியாகப் பிடித்தார் பிரியங்கா. என்றாலும் நிரூப் இன்னமும் சமாதானம் ஆகவில்லை.

அடுத்ததாக பாவனி – அக்ஷரா என்கிற இரண்டு ஹீரோயின்களின் பன்ச் டயலாக் டாஸ்க். பாவனியை நோக்கி அக்ஷரா சர்காஸ்டிக்காக பேசிக் கொண்டிருந்தார். “நீங்க ரொம்ப ஸ்மார்ட் மேடம்... ரொம்ப இன்டெலிஜன்ட்...” என்று ஆரம்பித்து சற்று இடைவெளி விட்டு “அப்படின்னு உங்களைப் பத்தி நெனச்சிட்டு இருக்கீங்க. ஆனா அப்படி இல்லன்னு இந்த வீட்ல எல்லோருக்குமே தெரியும். சண்டை போடறவங்க கிட்டயே போய் “உங்களை எனக்குப் பிடிக்கும்னு எப்படிச் சொல்ல முடியும்? இது பாசாங்கா இருக்கு. போலித்தனமா இருக்கு. மத்தவங்களை நல்லா உபயோகிக்கிறீங்க... அதனாலதான் நான் உங்ககிட்ட இருந்து தள்ளி நிக்கறேன். கோபத்தைக் கூட சிரிச்சிக்கிட்டே காண்பிக்கறீங்க. அந்தக் கோபத்தோட ஒருத்தரை ‘டார்லிங்’ன்னு எப்படித்தான் கூப்பிட முடியுதோ? எனக்கு ‘விஷபாட்டில்’-ன்னு பட்டம் கொடுப்பீங்கன்னு எனக்கு முன்னாடியே தெரியும். விஷப்பாம்பு... விஷத்தேள்... விஷ கரப்பான்பூச்சி’ன்னு எது இருந்தாலும் எனக்குத்தான் கொடுத்திருப்பீங்க...” என்று புன்னகையுடன் அக்ஷரா வீசிய பெளன்சர் பந்துகளையெல்லாம் “பீஸூ பீஸா கிழிக்கும் போதும் ஏசு போல முகத்தைப் பாரு” என்கிற 'பாட்ஷா'வாக புன்னகையுடன் ஏற்றுக் கொண்டார் பாவனி. ஆக, அக்ஷரா சொல்வது உண்மை என்பதையே பாவனி நிரூபித்துக் கொண்டிருந்தார்.

பிக் பாஸ் - 47
பிக் பாஸ் - 47

அடுத்ததாக தாமரை – இசை என்னும் காவிய உரையாடல் ஆரம்பித்தது. “இது திண்டுக்கல் கண்ணாடி. மேல தூசு இருந்திச்சின்னா துடைச்சுட்டுப் பார்த்தா தெளிவா தெரியும்” என்று கமலுக்கே டஃப் பைட் தருவது போல் குறியீடுகளை இணைத்து அசத்தினார் தாமரை. (ஆளு வர வர... ரொம்ப ஸ்மார்ட்டா ஆடறாங்கப்பா...) “இந்தக் கண்ணாடி சொல்றதையும் கேளுங்க. எனக்கும் அறிவு இருக்கு. சத்தம் போடறவங்க கெட்டவங்க கிடையாது. அவங்களுக்கு முத்தம் கொடுக்கவும் தெரியும். நீ கையெடுத்து கும்பிட்டது எனக்கு கெட்ட கோபம் வந்தது. கொஞ்சம் நேரம் கண்ணாடியைத்தான் பாரேன். உன்னை எத்தனை முறை அளகா காட்டியிருக்கேன். ஏன் மூஞ்சைத் திருப்பிக்கறே... உன் தலையெழுத்து. நான் சொல்றதையெல்லாம் நீ கேட்டுத்தான் ஆகணும். முடியலைன்னா... கையை விட்டுட்டுப்போ” என்றெல்லாம் அதிரடியாகப் பேசிய தாமரை, அதற்குப் பிறகும் என்ன சொல்வதென்று தெரியாமல் சினிமாப் பாடல்களை பாடிக் கொண்டிருந்தார்.

பிக் பாஸ் - 47
பிக் பாஸ் - 47

தாமரை பேசும்போது இசை கொடுத்த விதம் விதமான முகபாவங்கள் கவனிப்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தன. (பாவம். அவருக்குள் உள்ளுக்குள் காண்டாக இருந்திருக்கும்). தாமரை சினிமாப் பாடல்களின் வரிசையில் “சிரித்து மனசைக் கெடுத்த சிறுக்கி...’ என்கிற பாடலைப் பாட இசையின் முகத்தில் ‘சுர்’ ஏறியது.

டாஸ்க் முடிந்ததும், இந்தப் பாடல் குறித்து "என்னைப் பார்த்து நக்கலாத்தானே பாடினே?” என்று தன் கடுமையான ஆட்சேபத்தை இசை முன்வைக்க “நான் பாட்டுக்கு டைம்பாஸிற்குத்தான் பாடினேன். இங்க நடந்ததைத்தானே சொன்னனேன்... மாத்தி ஏதாவது சொன்னேனா?” என்று தாமரை பதிலுக்கு நீண்ட நேரம் மல்லுக்கட்டினார். தாமரையின் கேஸிற்கு மட்டும் சரியாக ஆஜர் ஆகும் வக்கீலான ராஜூ, இப்போது உள்ளே புகுந்து “பாட்டுத்தான் உனக்கு பிரச்னையா?” என்று இசையிடம் கேட்க, “அது என்ன தாமரைக்கு மட்டும் சப்போர்ட்டுக்கு வந்துடறீங்க. எனக்கு யார் சப்போர்ட்டும் தேவையில்ல. நான் தனியாத்தான் வந்திருக்கேன்” என்று ராஜூவிடமும் தன் கோபத்தைக் காட்டினார் இசை.

பிக் பாஸ் - 47
பிக் பாஸ் - 47

ஆனால் இசை தாமரையிடம் பேசுவதற்கான முயற்சிகளை எடுத்திருப்பதும் தாமரை அதை மறுத்திருப்பதும் பிரியங்காவின் வாக்குமூலம் மூலம் தெரிய வந்தது. “அப்படில்லாம் டக்குன்னு மாறிட முடியாது” என்று வெளிப்படையாகச் சொன்னார் தாமரை. “எனக்கு பேச விருப்பமில்லை” என்று இப்போது இசை முரண்டு பிடிக்க “எப்படின்னா அடிச்சிக்கிட்டு சாவுங்க” என்று கைகழுவினார் பிரியங்கா.

'இந்த கேம் இவங்களுக்கு புரியுதோ... இல்லையோ...’ என்று நாம் நினைத்துக் கொண்டிருந்த தாமரையே, இப்போது ஸ்மார்ட்டாக ஆடும்போது, நகரப் பின்னணியில் இருந்து வந்திருக்கும் இசைக்கு இந்த ஆட்டத்தின் சூட்சுமம் எப்போதோ புரிந்திருக்க வேண்டும். உணர்ச்சிகளின் பள்ளத்தாக்குகளில் எளிதில் விழவைக்கும் விளையாட்டு இது. இதை விளையாட்டாக அல்லாமல் வாழ்க்கையின் ஒருபகுதியாக எடுத்துக் கொண்டால் பிரச்னைதான். உண்மைக்கும் நகலுக்குமான வித்தியாசத்தை இசை அறிந்து கொள்வது நல்லது. அடிப்படையில் அவர் சென்சிட்டிவ்வான ஆசாமியாக இருப்பதால் ‘இது பிக் பாஸ் விளையாட்டு’ என்பதை பல சமயங்களில் மறந்து உண்மையான சச்சரவாக மாற்றிக் கொள்கிறார். ஆனால் இது இசைக்கு மட்டுமான பிரச்னையல்ல. அவரை விடவும் வயதானவர்கள் கூட எளிதில் விழுந்துவிடும் அபாயமான பள்ளம்தான் பிக் பாஸ் வீடு.

பிக் பாஸ் - 47
பிக் பாஸ் - 47

ஆனால் இந்த ரணகளத்தில் தென்பட்ட ஒரு கிளுகிளுப்பான விஷயத்தைச் சொல்லியாக வேண்டும். தாமரை இதுவரை சினிமாப்பாடல் பாடி கேட்ட நினைவு இல்லை. ஆனால் இந்தச் சமயத்தில் பாடியதைக் கேட்கும் போது, அவரது குரலும் பாடும் விதமும் “நன்றாக இருந்தததைப்’ போல்தான் தெரிந்தது. அதிலும் எழுபதுகளின் பாடல்களைக் கேட்பது கேட்க நன்றாக இருக்கிறது.

தாமரையுடன் ஏற்பட்ட சச்சரவால் இசை தனிமையில் சென்று அழ, அவரைப் பின்தொடர்ந்து சென்ற பாவனி ஆறுதல் கூறினார். “அந்தப் பிள்ளைக்கு விஷயங்களை சரியா உள்வாங்கிக்கறதுல ஏதோவொரு பிரச்சினை இருக்கு” என்று இமான் சொல்லிக் கொண்டிருக்க, “வந்து 45 நாள் ஆச்சு... இன்னமுமா?” என்றார் ராஜூ. “என்னாலயும் பதிலுக்கு டெரரா பேச முடியும். இது ஷோவாச்சேன்னு பார்க்கறேன். இல்லைன்னா செவுள்ளேயே ஒண்ணு வைப்பேன். என்னாலயும் அப்படி கத்தி பேச முடியும்... சின்னப் பொண்ணு கிட்ட நீ அட்ஜஸ்ட் பண்ண வேண்டியதுதானே... என்னை மட்டும் இங்க தக்காளி தொக்கா பார்க்கறாங்க” என்று இசை அபினய்யிடம் சொல்லிக் கொண்டிருந்தபோது அவரின் ஆக்ரோஷ முகத்தைப் பார்க்க முடிந்தது.

பிக் பாஸ் - 47
பிக் பாஸ் - 47

இமானைத்தவிர வேறு எவராலும் பேட்ஜ் பெற முடியவில்லை என்பதால் டாஸ்க்கை மாற்றியமைத்தார் பிக் பாஸ். இரண்டு பேர் நேரடியாக அடித்துக் கொள்ள வேண்டும். பாவனி – அக்ஷரா, நிரூப் – வருண் என்று ‘சார்பட்டா சண்டைக்கு’ நிகராக ஜதைகள் உருவாக்கப்பட்டன. ஒருவரையொருவர் தண்ணீர் பந்துகளை அடித்துக் கொள்ளும் டாஸ்க்கில் கபிலனுக்கும் வேம்புலிக்கும் ஆக்ரோஷமான சண்டை நடந்தது. இதில் வருண் அதிக பந்துகளை எறிந்து முதல் இடத்தில் வந்தார். இன்னொரு ஆக்ரோஷமான சண்டையில் பாவனி வெற்றி பெற்றார்.

இன்னமும் பல அட்டகாசமான சண்டைகளை நாளை எதிர்பார்க்கலாம்.