Published:Updated:

பிக் பாஸ் - 57: பிரியங்காவுக்கு `ஞானகுரு' அபிஷேக்கின் உபதேசம்; தொகுப்பாளராக ரம்யா கிருஷ்ணன் எப்படி?

பிக் பாஸ் - 57

"சினிமா வசனம் எனக்கு அவ்வளவு தெரியாது” என்று அக்ஷரா சொன்னதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், தெலுங்கு பழமொழி, மேற்கோள் என்று எதுவுமேவா தெரியாது? ஆக, தாய்மொழியை சரியாக அறியாத தலைமுறையில் தமிழிற்கும் தெலுங்கிற்கும் பெரிய வித்தியாசமில்லை.

பிக் பாஸ் - 57: பிரியங்காவுக்கு `ஞானகுரு' அபிஷேக்கின் உபதேசம்; தொகுப்பாளராக ரம்யா கிருஷ்ணன் எப்படி?

"சினிமா வசனம் எனக்கு அவ்வளவு தெரியாது” என்று அக்ஷரா சொன்னதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், தெலுங்கு பழமொழி, மேற்கோள் என்று எதுவுமேவா தெரியாது? ஆக, தாய்மொழியை சரியாக அறியாத தலைமுறையில் தமிழிற்கும் தெலுங்கிற்கும் பெரிய வித்தியாசமில்லை.

Published:Updated:
பிக் பாஸ் - 57
ஐக்கி பெர்ரி வெளியேற்றப்பட்டார். அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தபோது புறத்தோற்றத்தின் காரணமாக நமக்கு சற்று அந்நியமாகத் தெரிந்தாலும் சிறிது நாள்களிலேயே அவரின் குழந்தை உள்ளம் புலப்பட்டது. ஆங்காங்கே ஓவியாவை நினைவுப்படுத்தும் உடல்மொழி அவரிடம் இருந்தது.

காலையில் முதல் ஆளாக எழுந்து நடனம் ஆடுவது, தன்னைப் பற்றிய விமர்சனங்களுக்கு சட்டென்று கலங்குவது, அடுத்த நிமிடத்திலேயே அதை மறந்து கடந்து போவது, துள்ளலான நடனம், பாரபட்சமற்ற அன்பு, சுருதி, இசை, பாவனி, மதுமிதா போன்றோர்களிடம் எதிர்பார்த்து நின்றிருந்த அன்பு, நிரூப்பிடம் நிகழ்ந்த தாமதமான நட்பு என்று பல்வேறு கோணங்களில் அவரின் பயணம் இருந்தது.

பிக் பாஸ் - 57
பிக் பாஸ் - 57

ஆனால் அவரால் பெரிய சர்ச்சைகளை உருவாக்க முடியவில்லை. அவரது அடிப்படையான குணாதிசயம் அதற்கு உகந்ததல்ல. “என்னால ஒரு இடத்தை ஆக்கிரமித்து, முட்டி மோதி, கத்தி, சண்டை போட முடியாது. ஸ்பேஸ் கிடைக்கலைன்னா அங்க இருந்து போயிடுவேன்” என்று வெளியேறும் மேடையில் ரம்யாவிடம் சொன்னார் ஐக்கி. பிக் பாஸ் போன்ற ரத்தபூமியில் இப்படிப்பட்ட வெள்ளை ரோஜாக்கள் நீடிப்பது சிரமம்தான். எனவே ஐக்கி பெர்ரி வெளியேறியதில் ஆச்சர்யமில்லை. விளையாட்டில் இது ஓகே. ஆனால் நடைமுறை வாழ்க்கையில், நம் சமூகத்தில் ஐக்கி போன்ற அமைதிப் புறாக்களின் இருப்பு மிக அவசியம். அவற்றை பலியிட அனுமதிக்கக்கூடாது.

எபிசோடு 57-ல் என்ன நடந்தது?

ரம்யா கிருஷ்ணனின் இரண்டாவது நாள். சமயோசிதமாக செயல்பட்டு கேள்விகளை வீசுவது, அநாவசிய ஜோடனைகள் இல்லாமல் நேராகப் பேசுவது. இயல்பாக இருப்பது, சிரிப்பது போன்றவை ரம்யாவின் பலம். ஆனால் ஒரு தொகுப்பாளரின் எல்லையை மீறி போட்டியாளர்களை நெருங்குவது, முன்தீர்மானமாகவும் பாரபட்சமாகவும் செயல்படுவது போன்றவற்றை ரம்யாவின் மைனஸ் பாயிண்ட் எனலாம். ‘நான் பிக் பாஸின் பரம ரசிகை’ என்பதை வெளிப்படையாகவே சொன்னார் ரம்யா. எனவே ஒரு ரசிகையின் மனோபாவத்தில் இருந்தே அவர் தொகுப்பாளர் பணியையும் செய்கிறாரோ என்கிற சந்தேகம் வருகிறது. தனக்கு வரும் எதிர்வினைகளைப் பார்த்து மேம்படுத்திக் கொள்வார் என நம்பலாம்.

பிக் பாஸ் - 57
பிக் பாஸ் - 57

“ஞாயிற்றுக்கிழமை என்பதால் எலிமினேஷனுக்கு லீவு கிடையாது. நிச்சயம் அது உண்டு" என்கிற சுருக்கமான முன்னுரையுடன் வீட்டிற்குள் நுழைந்த ரம்யா, “பிரியங்கா… நிரூப்புடன் உங்க நட்பு அசலா, போலியா, செய்கூலி சேதாரமெல்லாம் எவ்வளவு?” என்று நேரடியான கேள்வியை முன்வைத்தார். “டாஸ்க் அப்ப அடிச்சுக்குவோம். மத்த நேரத்துல மாஸ்க் போடாத நண்பர்களா இருப்போம்” என்று பிரியங்காவும் நிரூப்பும் கூட்டுசத்தியம் செய்தாலும் ‘இதில் என்னமோ கேம் பிளான் இருக்கு’ என்கிற சந்தேகம் நமக்கு எழாமல் இல்லை. ‘வெச்சு செய்வது’ என்பது போன்ற வார்த்தைப் பிரயோகங்களை போட்டியாளர்களுடன் சேர்ந்து தொகுப்பாளரும் சொல்லக்கூடாது. அதன் உண்மையான நடைமுறை அர்த்தம் வேறு.

“என்னா தாமரை நீங்க என்ன சொல்றீங்க?” என்று தனது ஃபேவரைட் போட்டியாளரான தாமரையை உசுப்பிவிட்டார் ரம்யா. “எனக்கும் அதே சந்தேகம்தான் மேடம். குத்துனது நண்பனா இருந்தா அதை வெளியில சொல்லக்கூடாது. இந்த சசிகுமார் தத்துவம்தான் என்னோட பாலிசி. நட்பிற்காக எதையும் விட்டுத் தரணும்” என்று தாமரை அடித்துப் பேச “உங்க தனிப்பட்ட ஆட்டத்தை ஆடுங்க” என்று பிரியங்காவிற்கு ரம்யா ஆலோசனை சொல்ல அவர் குழப்பத்துடன் தலையாட்டினார்.

“தாமரை உங்க சிரிப்பு பிடிச்சிருக்கு” என்று ரம்யா சொல்ல, “உங்க படங்களையெல்லாம் அணுஅணுவா ரசிச்சு பார்த்திருக்கேன்” என்று பதில் மொய் வைத்தார் தாமரை. ‘படையப்பா தவிர இன்னொரு படத்தோட பேர் சொல்லுங்க... பார்க்கலாம்” என்று கேட்டிருந்தால் ‘கொஞ்சம் டைம் கொடுங்க மேடம். யோசிச்சு சொல்றேன்’ என்று தாமரை சொல்லியிருக்கக்கூடும். “கேப்டன் டாஸ்க்கில் என்ன தகராறு? பட்ட பின் ஞானம் வந்தது–ன்னு சொல்லிட்டு இருந்தீங்க?” என்று விவகாரத்தை ஆரம்பித்து வைத்தார் ரம்யா.

பிக் பாஸ் - 57
பிக் பாஸ் - 57

தாமரைக்கும் பிரியங்காவிற்கும் இடையில் நடந்த இந்த வாக்குவாதத்தின் மூலம் தாமரையின் தர்க்கத்திறன் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே சென்றதைப் பார்த்திருக்கலாம். “எப்படிம்மா இப்படியெல்லாம்?” என்று சிவாஜி வாய்ஸில் சஞ்சீவ் வியந்தது சிறப்பான உதாரணம். சமூகத்தில் பின்தங்கியிருக்கும் ஒருவனுக்கு சரியான மேடையும் வாய்ப்பும் தந்தால் எப்படி அவன் அதைப் பற்றிக் கொண்டு முன் நகர்வான் என்பதற்கு தாமரை சரியான உதாரணம். "இடஒதுக்கீடு எதற்கு?” என்று சிலர் எதிர்ப்பாகக் கேட்பதற்கு பதில் உதாரணமாக தாமரையின் இந்த வளர்ச்சியை சுட்டிக் காட்டலாம். “மூணுவேளை சோறு, இருக்க வீடு. எனக்கு இது போதும் சாமி... நான் வெளியே போக மாட்டேன்” என்று ஆரம்ப நாளில் சொன்ன தாமரை “தலைவர் பதவிக்கு எனக்கு என்ன தகுதியில்லை. சொல்லுங்க” என்று இன்று மல்லுக்கட்டுவது நிச்சயம் ஓர் அபாரமான வளர்ச்சி. லாஜிக் நாயகியான பிரியங்காவே "நல்லா பேசறாங்க” என்று ஒரு கட்டத்தில் இறங்கி வந்துவிட்டார்.

ஆனால் பிரியங்காவின் விளக்கத்தில் ஒரு முக்கியமான பாயிண்ட் இருக்கிறது. ஒருவர் தனிப்பட்ட போட்டியாளராக இருக்கும்போது சக போட்டியாளர்களுடன் ஏற்படும் ஆசாபாசங்கள் என்பது வேறு. ஆனால் தலைவராக மாறிய பிறகு அனைவரையும் பாரபட்சமின்றி அணுகுவதற்கான சகிப்புத்தன்மையையும் பெருந்தன்மையையும் அவர் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

தாமரையிடம் உள்ள பலவீனங்களுள் ஒன்று முன்கோபம். சட்டென்று கோபப்பட்டு வார்த்தைகளை விட்டு விடுவார். “மனசுல பட்டதை உடனே பேசிடுவேன்” என்று சொல்லி இந்தப் பலவீனத்தை அவர் நியாயப்படுத்த முடியாது. மற்றபடி “எனக்கு வாய்ப்பு கொடுத்தாதானே நிரூபிக்க முடியும். மத்தவங்களை விட எந்தவிதத்தில் நான் குறைஞ்சுட்டேன்?” என்றெல்லாம் தாமரை கேட்பது நியாயமே. “உன் மனசுல இருக்கற குழப்பங்கள் போகட்டும்” என்று பிரியங்கா சொல்வதை ஏற்க முடியாத லாஜிக். அலை எப்ப ஓயறது, நாம எப்ப போகறது? தாமரை மட்டுமல்ல, அந்த வீட்டில் பலருக்குமே இப்படிப்பட்ட விதம் விதமான மைனஸ் பாயிண்ட்டுகள் உள்ளன. பிரியங்காவின் லாஜிக்கை பொருத்திப் பார்த்தால் யாருமே தலைவராக முடியாது, அவர் உட்பட!

பிக் பாஸ் - 57
பிக் பாஸ் - 57

தங்களின் நட்பு குறித்து நிரூப் விளக்கம் அளிக்கும்போது “எனக்கு அன்பை திருப்பிக் கொடுக்கத் தெரியாது" என்றார். இது போன்ற கேரக்டர்கள் உண்மையில் இருக்கிறார்கள். நிறைய அன்பை வாங்கி வைத்துக் கொள்வார்கள். அது ஒருவழிப் பாதையாக இருக்கும். இதில் பலருக்கு அன்பை எப்படிப் புறவயமாக பிரதிபலிப்பது என்று தெரியாது. அதை ஒரு கிளிஷேவாகக் கருதுவார்கள். ஆனால் உள்ளுக்குள் அன்பு இருக்கும். சரியான சந்தர்ப்பங்களில் எதிர்தரப்பு ஆசாமி இதை உணர முடியும். நிரூப்பின் அன்பும் இப்படித்தான். பிரியங்காவுடன் சண்டையிட்டாலும் அந்தக் குடுமிக்குப் பின்னால் அன்பை ஒளித்திருப்பது தெரியும்.

‘நல்லா பேசறாங்க’ என்று மேடையில் சொல்லிவிட்டாலும் தாமரையின் மீதான கடுப்பு பிரியங்காவிற்குள் ஏறுவதை உணர முடிந்தது. கூட இருக்கும் ஞானகுருவான அபிஷேக்கும் இதை ஏற்றிவிட்டார். “பெரிய ஆளுங்களை அடிச்சு பெயர் வாங்கறது ஒரு ஸ்டைல்தானே?” என்று அவர் உசுப்பிவிட்டதை "அதானே... எனக்கொன்னும் பிரச்னையில்லை. தாமரை கேப்டன் ஆனா ஆகட்டும்.. என்ன இப்ப?’ என்று அசால்ட்டாக இருப்பது மாதிரி நடிக்கத் துவங்கினார் பிரியங்கா. சும்மா இருந்த வடிவேலுவை சேரில் சாய்ந்து ஆங்கில பேப்பர் வாசிக்க உசுப்பேற்றும் காமெடியை அபிஷேக்கின் உபதேசங்கள் நினைவுப்படுத்துகின்றன.

பிக் பாஸ் - 57
பிக் பாஸ் - 57

‘மாணவர் டாஸ்க்’ என்பதாலோ என்னமோ, வெளியில் நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு வந்திருக்கும் சஞ்சீவிடம் “A B C F" என்கிற கிரேட்களை வழங்கச் சொன்னார் ரம்யா. F என்றால் Fail என்று அர்த்தம். பூட்டகேஸ் என்று நல்ல தமிழில் மொழி பெயர்த்தும் சொல்லலாம். “அய்யோ... நானா?” என்று விதம் விதமாக சஞ்சீவ் பயந்ததைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தார் ரம்யா. பெண் தொகுப்பாளர் வந்ததுமே ஆண்களின் உடல்மொழியும் பெண்களின் உடல்மொழியும் மாறியிருப்பதைக் கவனித்திருப்பீர்கள். தன் ஜோக்கிற்கு ஒரு பெண் சிரிக்கிறார் என்றால் ஓர் ஆணுக்கு அதைவிடவும் உற்சாகமான விஷயம் இருக்க முடியாது.

அபிஷேக், நிரூப், அக்ஷரா ஆகியோருக்கு F தந்தார் சஞ்சீவ். தாமரை, பாவனி, அமீர், ஐக்கி ஆகியோருக்கு C கிடைத்தது. அபிநய், பிரியங்கா, சிபி, வருண் ஆகியோருக்கு B கிடைத்தது. அண்ணாச்சிக்கும் ராஜூவிற்கும் A கிடைத்தது. இதற்கான காரணங்களையும் ஏறத்தாழ சரியாகவே சொன்னார் சஞ்சீவ்.

இதைப் பாராட்டிய ரம்யா “உங்க கதை எப்படி?” என்று விசாரிக்க “ஊருக்கெல்லாம் உபதேசம் சொன்னாலும் இனிதான் என்ன ஆகுதுன்னு பார்க்கணும்” என்று சுயபகடியுடன் சஞ்சீவ் சொல்லிக் கொண்டது சிறப்பு. (இதே வரியைக் குறிப்பிட்டு நான் எழுதிய வாக்கியம் எத்தனை பேருக்கு நினைவு வந்தது?!).

தங்களுக்கு அளிக்கப்பட்ட மதிப்பெண்கள் குறித்து ஒவ்வொருவரும் பேச வேண்டும். F வாங்கிய அபிஷேக் “நான் இன்னமும் பிக் பாஸ் பார்க்கவில்லை" என்பதை விதம் விதமாக விளக்கி சத்தியம் செய்தார். நண்பர்கள் இவரைப் பற்றி செய்த ஆய்வுத் தொகுப்புகளை (?!) மட்டும் பார்த்தாராம். “நான் நிகழ்ச்சியைப் பார்த்துட்டு வந்தா அந்தப் பலம் மத்தவங்களுக்கு அசெளகரியத்தைத் தரலாம். அதை நான் தர விரும்பலை. இந்த உண்மை என்னைக் கூட்டிட்டு போகும்” என்று அபிஷேக் சொன்னார். தனக்குப் போட்டியாக சஞ்சீவ் ஜோசியம் சொல்லிக் கொண்டிருக்கும்போது அபிஷேக்கின் முகபாவத்தைக் கவனிக்க சுவாரஸ்யமாக இருந்தது. எனவே "பிக் பாஸ் பார்த்துட்டு வந்து நான் அனலைஸ் பண்ணலை” என்பதை சஞ்சவீற்கு நிரூபிப்பதற்காக ‘பிக் பாஸ் பார்க்கலை’ என்பதை அவர் இன்னமும் சாதித்துக் கொண்டிருக்கிறாரோ என்று தோன்றுகிறது.

பிக் பாஸ் - 57
பிக் பாஸ் - 57

“ஓகே... அடுத்த டாஸ்க் பண்ணலாமா?” என்று ரம்யா கேட்க “அய்யோ” என்று அலறிய சஞ்சீவ் “நான் ஏற்கெனவே நாமினேட் ஆகிட்டேன்” என்று சோபாவில் பதுங்கியதைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தார் ரம்யா. (இதுக்கு நானே தொகுப்பாளரா இருந்திருக்கலாம் – பிரியங்காவின் மைண்ட் வாய்ஸ்). ஐந்து திருக்குறள்கள் எழுதிய தாளை இமானை கொண்டு வரச் சொன்ன ரம்யா “ஸ்டூடன்ஸ்… இதை நல்லா கவனிங்க” என்று வாசிக்கச் சொன்னார். அப்போதே அக்ஷராவின் முகத்தில் பீதி தெரிந்தது. அத்தனையுமே சற்று கடினமான குறள்கள். “மாணவர்கள் ரிலாக்ஸ் ஆகுங்க. இதை வார்டனும் ஆசிரியர்களும் சொல்லணும்” என்று ரம்யா டிவிஸ்ட் தந்த போது “எனக்கு திருவள்ளுவர்ன்னா யாருன்னே தெரியாது மேடம்” என்று காமெடியாக சொல்லி எஸ்கேப் ஆக முயன்றார் ராஜூ. “இந்த பேப்பரை கசக்கி முழுங்கினா கூட எனக்கு சொல்ல வராது" என்று அபிஷேக் சொன்னது க்யூட்டான கமெண்ட்.

"இந்த ஐந்து குறள்களையும் படிச்சு 2 நிமிஷத்துல சொல்லணும். மாணவர்கள் இதைக் கண்காணியுங்க. நான் ஒரு பிரேக் போயிட்டு வரேன்” என்று கிளம்பினார் ரம்யா. இது ஜாலியான டாஸ்க்தான் என்றாலும் அக்ஷராவை காப்பாற்றுவதற்கு என்றே ஒரு தனியான எபிசோடை ரம்யா நிகழ்த்துவாரோ என்று தோன்ற வைத்துவிட்டது. இப்போது அக்ஷராவிற்கு பயங்கர குஷி. மிகுந்த உற்சாகத்துடன் விநாடிகளை எண்ணத் துவங்கிவிட்டார். பரீட்சைக்கு படிப்பதுபோல் ஆசிரியர்கள் மனப்பாடம் செய்ய, கருணையில்லாத ஆசிரியர் போல கடைசி நொடியில் தாளை பிடுங்கினார் நிரூப்.

ரம்யா திரும்பி வந்ததும் ஆளாளுக்கு ஒன்று சொல்லி காமெடி செய்தார்கள். ‘தமிழ் வாழ்க’ என்று முழக்கமிட்டார் ராஜூ. ‘இன்னொரு பிரிண்ட் அவுட் இருந்தா நல்லாயிருக்கும்’ என்றார் அபிஷேக். சிபி சற்று தைரியமாக முன்வந்தாலும் ஏறத்தாழ சொல்லிவிட்டு "இன்னொரு வாட்டி பார்த்துக்கட்டுமா” என்று சொதப்பினார். ஆனால் ஆச்சர்யகரமாக அமீர் இரண்டு குறள்களைச் சரியாகச் சொல்லி ரம்யாவின் பாராட்டைப் பெற்றார்.

பிக் பாஸ் - 57
பிக் பாஸ் - 57
இந்த டாஸ்க் ஜாலியாக நடந்து முடிந்தாலும் நம் மொழியின் வளர்ச்சி எப்படியெல்லாம் சீரழிந்து கொண்டிருக்கிறது என்கிற அவலமான நிலையை உணர்த்தியது. அக்ஷராவிற்கு தரப்பட்ட நேரம் என்ன? சிபி & கோவிற்கு தரப்பட்ட நேரம் என்ன என்பதையெல்லாம் கூட விட்டுவிடுவோம். சற்று மெனக்கெட்டிருந்தால் ராஜூவால் இரண்டு குறள்களையாவது நிச்சயம் சொல்லியிருக்க முடியும். ஆனால் காமெடியின் மூலம் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதில்தான் அவர் அக்கறை காட்டினார். சிபி சற்று சீரியஸாக முயன்றது பாராட்டுக்குரியது. ஆச்சர்யத்தை தந்த அமீருக்கு ஸ்பெஷல் பாராட்டு.

‘கர்மா ஒரு பூமராங்’ என்பது மாதிரி இந்த டாஸ்க் அக்ஷராவின் பக்கம் திரும்பியது. அதுவரை துள்ளிக்குதித்து சிரித்த அக்ஷரா தன் தாய்மொழியில் தடுமாறியது நிகழ்ந்தது. உண்மையில் அக்ஷராவின் சார்பாகவே இந்த டாஸ்க்கை ரம்யா எடுத்தார். “தெலுங்கில் சில வாக்கியங்களை அக்ஷரா சொல்வார். அதை ராஜூ சொல்ல வேண்டும்” என்று ரம்யா சொல்ல, அக்ஷராவால் சினிமா வசனங்களைக் கூட சரியாக சொல்ல முடியவில்லை. அபிநய் முன்வந்து உதவ வேண்டியிருந்தது. "சினிமா வசனம் எனக்கு அவ்வளவு தெரியாது” என்று அக்ஷரா சொன்னதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், தெலுங்கு பழமொழி, மேற்கோள் என்று எதுவுமேவா தெரியாது?

ஆக, தாய்மொழியை சரியாக அறியாத தலைமுறையில் தமிழிற்கும் தெலுங்கிற்கும் பெரிய வித்தியாசமில்லை.

சற்று மெனக்கெட்டால் அறியாத மொழியை சரியாக உச்சரிக்க முடியும் என்பதற்கு பாடகர்களே நல்ல உதாரணம். எஸ்.பி.பி, ஜானகி, ஸ்ரேயா கோஷல் போன்றவர்கள் ஏராளமான அறியாத மொழிகளில் பாடினாலும் தங்களின் மெனக்கெடல் மூலம் சரியான உச்சரிப்பை கொண்டு வந்து விடுகிறார்கள். அதிலும் ஒரு சொல்லின் அர்த்தம் அறிந்து கொண்டுதான் எஸ்.பி.பி பாடத் துவங்குவார்.

பிக் பாஸ் - 57
பிக் பாஸ் - 57

அபிநய் சொல்லித் தந்த தெலுங்கு சினிமா பன்ச் வசனங்களை வைத்து ராஜூ காமெடி செய்ய இதற்கும் விழுந்து விழுந்து சிரித்தார் ரம்யா. பிறகு நாமினேஷனில் இருந்தவர்களில் யார் காப்பாற்றப்பட்டார்கள் என்பதை ரிப்போர்ட் கார்ட் மூலம் தெரிவித்தார். (மாணவர் டாஸ்க் ஸ்டைலை அனைத்திலும் ஃபாலோ செய்கிறார்களாம்). இதில் பாவனி, இமான், தாமரை ஆகியோர் காப்பாற்றப்பட்டதை அறிய முடிந்தது. நிரூப் மற்றும் ஐக்கி மட்டுமே பாக்கி. இப்போதே பிரியங்காவின் கண்ணில் சோகமும் நீரும் சுரக்க ஆரம்பித்தது.

“நான்தான் போவேன்” என்று நிரூப் ஒருபக்கமும் ‘இல்ல... நான்தான்’ என்று ஐக்கி ஒருபக்கமும் அடம்பிடித்துக் கொண்டிருந்தார்கள். "நிரூப் போகட்டும்... நீ இரு” என்று ஐக்கியின் மீது பாசம் காட்டினார் தாமரை. “உனக்கு ஜெயிக்க ஆசையில்லையா?” என்று வருண் கேட்ட போது “பிக் பாஸில் கற்றுக் கொண்ட பாடம்தான் என்னோட வெற்றி” என்று தாமரை உணர்வுபூர்வமாகச் சொன்னது சிறப்பு.

பிக் பாஸ் - 57
பிக் பாஸ் - 57
எவிக்ஷன் கார்டுடன் மேடைக்கு வந்த ரம்யா, “ரெண்டு பேர்ல யாரு காப்பாற்றப்படுவாங்கன்னு நெனக்கறீங்க?” என்று பிக் பாஸின் டெம்ப்ளேட் உருட்டை மறுபடியும் உருட்டினார். மற்றவர்கள் அனைவரும் நிரூப்பின் பெயரைச் சொல்ல இமான், தாமரை, சஞ்சீவ் ஆகிய மூவர் மட்டும் ‘ஐக்கி’ என்றார்கள். (சஞ்சீவ் ஜோசியம் இப்பவே தோற்க ஆரம்பிச்சிடுச்சே?!).

"சாரி நிரூப்” என்று ஆரம்பித்த ரம்யா “ஐக்கி பெர்ரி’ என்கிற கார்டை காட்டினார். எவ்வித கவலையும் இல்லாமல் கேக் வெட்டி, ராப் பாடல் பாடல் பாடி உற்சாகமாகக் கிளம்பினார் ஐக்கி. மேடைக்கு வந்த ஐக்கியிடம் “தமிழில் ராப் சிங்கர் குறைவு. அதிலும் பெண் பாடகர் மிக அரிது. Independent music செய்யற நீங்க இன்னமும் சாதிக்கணும். ஆனா பிக் பாஸ் வீட்ல உங்க குரல் ஒலிக்கலையே?” என்று ரம்யா கேட்டதை ஐக்கி ஏற்றுக் கொண்டார். அகம் டிவி வழியாக போட்டியாளர்களுடன் ‘க்யூட்டாக’ உரையாடிவிட்டு விடைபெற்றுக் கொண்டார் ஐக்கி.

பிக் பாஸ் - 57
பிக் பாஸ் - 57

தாமரைக்கும் பிரியங்காவிற்கும் இனி வெளிப்படையான போர் நிகழுமா அல்லது திங்கட்கிழமை காலையில் தாமரைக்கு பிரியங்கா ‘முத்தா’ கொடுத்து ராசியானது போல் பாவனை செய்வாரா என்று தெரியவில்லை. இருவரும் ஒருவரைப் பற்றி ஒருவர் வெவ்வேறு இடங்களில் பேசிக் கொண்டிருந்ததை இன்டர்கட்டில் காட்டி அசத்தினார்கள். “என்னை பேச விடு லூஸூ” என்று அக்ஷராவை தாமரை அதட்டியது நகைச்சுவையான காட்சி.

“இங்க இருக்கறதுலயே தாமரைதான் பிரில்லியண்ட். மத்தவங்க எல்லாம் அதுக்கு அடுத்ததுதான்” என்று பிரியங்காவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் அமீர். இருக்கலாம். ஒருவேளை பிக் பாஸ் டைட்டிலை தாமரை ஜெயித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.