Published:Updated:

பிக் பாஸ் - 58: `முடிஞ்சா அடிங்கடே' சவால்விட்ட அண்ணாச்சி; தலைவர் நிரூப்பின் கோக்குமாக்கு திட்டங்கள்!

பிக் பாஸ் - 58

“ஒருத்தன் சேவ் ஆயிட்டு ஒட்டுமொத்த வீட்டையே மாட்டிவிட்டுட்டான்” என்று ராஜூ சாதாரணமாகச் சொன்னது செமயான கமெண்ட். “இப்பத்தான் அவன் கூட்டுக்குள்ள இருந்து வந்திருக்கான்” என்று நிரூப்பைப் பற்றி சொன்னார் சிபி.

பிக் பாஸ் - 58: `முடிஞ்சா அடிங்கடே' சவால்விட்ட அண்ணாச்சி; தலைவர் நிரூப்பின் கோக்குமாக்கு திட்டங்கள்!

“ஒருத்தன் சேவ் ஆயிட்டு ஒட்டுமொத்த வீட்டையே மாட்டிவிட்டுட்டான்” என்று ராஜூ சாதாரணமாகச் சொன்னது செமயான கமெண்ட். “இப்பத்தான் அவன் கூட்டுக்குள்ள இருந்து வந்திருக்கான்” என்று நிரூப்பைப் பற்றி சொன்னார் சிபி.

Published:Updated:
பிக் பாஸ் - 58

வலுக்கட்டாய தலைவரான நிரூப், இம்சை அரசன் புலிகேசி போல ‘கோக்குமாக்கான’ திட்டங்களைப் போட்டு விட்டு மக்களின் எதிர்ப்பால் முழி பிதுங்கிக் கொண்டிக்க, “உன் கண்ல பயத்தைப் பார்த்துட்டேன். அதைக் கொஞ்சமா கொஞ்சமா உனக்கே அறிமுகப்படுத்தறேன்” என்று நிரூப்பை நோக்கி இமான் கதகளி ஆடிக் கொண்டிருந்தார்.

‘ஒரே பாம்... ஒட்டுமொத்த ஊரும் க்ளோஸ்’ என்கிற காமெடி மாதிரி "ஒரேயொரு திட்டம் அறிவிச்சான். ஒட்டுமொத்த வீடும் நாமினேஷன்ல வந்துடுச்சு” என்று ராஜூ சொன்னது போல நேற்று பிக் பாஸ் வீட்டு நாய்க்குட்டி முதல் அனைவரும் எலிமினேஷன் லிஸ்ட்டில் வந்தார்கள்.

எபிசோடு 58-ல் என்ன நடந்தது?

நிரூப் அன்று செய்யப் போகிற கலாட்டாக்களை பிக் பாஸ் முன்பே உணர்ந்திருந்தாரோ, என்னமோ ‘தப்பாத்தான் தெரியும் என்னோட ரூட்டு’ என்ற பாடலை காலையிலேயே ஒலிக்க விட்டார். “யாராவது தலைவரா வரட்டும் எனக்கென்ன?” என்று அண்ணாச்சி முனகிக் கொண்டிருந்தார். எனில் அப்போதே தெரிந்து விட்டது, அவருக்கு தலைவர் பதவி ஆசை வந்துவிட்டது என்று.

பிக் பாஸ் - 58 இமான் அண்ணாச்சி
பிக் பாஸ் - 58 இமான் அண்ணாச்சி

ஆனால், ‘நான் நாணயத்தைப் பயன்படுத்தப் போகிறேன்’ என்பதை நிரூப் தெளிவாகவே அறிவித்துவிட்டார். ‘இப்போ... இல்லாட்டி எப்போ’ என்பது அவரின் பார்வை. கடந்த இரண்டு வாரங்களாக விளிம்பில் இருந்து அவர் தப்பித்துக் கொண்டிருக்கிறார். அது சார்ந்த மனஉளைச்சலும் இருக்கிறது. எனவே இந்த வாரம் தலைவர் ஆகி தன்னைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நிரூப் நினைப்பதில் தவறில்லை.

“நீ ஏதாவது பண்ணு... நான் போட்டில என்னோட வேகத்தைக் குறைக்க மாட்டேன். சிங்கம் மாதிரி கிளம்பி வருவேன்” என்று பன்ச் டயலாக் பேசினார் அண்ணாச்சி. கடந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கில் சிறந்த பங்கேற்பாளர்களாக தேர்வு செய்யப்பட்ட இமான், சிபி, அபிஷேக் ஆகிய மூவரும் தலைவர் போட்டிக்கு ஏற்கெனவே தகுதியாகியிருந்தார்கள். (இதில் அபிஷேக் எப்படி வந்தார் என்பது இன்னமும் கூட புரியவில்லை).

தலைவருக்கான போட்டி அறிவிக்கப்பட்டது. கார்டன் ஏரியாவில் சின்னச் சின்ன பெட்டிகள் இருக்கும். போட்டியாளர்கள் அவற்றை சேகரித்து அடுக்க வேண்டும். பஸ்ஸர் அடித்ததும் இதர போட்டியாளர்கள் இவர்கள் அடுக்கிய பெட்டிகளின் மீது பந்துகளையும் நீர்பலூன்களையும் எறியலாம். இந்தத் தாக்குதலை போட்டியாளர்கள் தங்களின் பேச்சுத்திறமையாலும் தடுக்கலாம். இறுதியில் எவருடைய சேகரிப்பின் உயரம் அதிகமாக இருக்கிறதோ, அவரே வெற்றியாளர்.

இமான் அந்த வீட்டின் தலைவராக வர வேண்டும் என்பதை விடவும் சிபி, அபிஷேக் ஆகிய இருவரும் வரக்கூடாது என்று மற்றவர்கள் ஆசைப்பட்டது வெளிப்படையாகத் தெரிந்தது. அபிஷேக் வைல்ட்கார்டு என்ட்ரி என்பது வெளிப்படையான காரணம். சிபி ஏற்கெனவே தலைவராகி இருக்கிறார். அது கூட விஷயமில்லை. வார்டனாக அவர் நிறைய வெறுப்பை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். எனவே அபிஷேக், சிபி ஆகியோரின் பெட்டிகளின் மீதுதான் அதிக பந்துகள் வந்து விழுந்தன. சிபியை நோக்கி உற்சாக ஆவேசத்துடன் பந்துகளை எறிந்தார் அக்ஷரா. (குறளா சொல்லச் சொல்றே?!).

அண்ணாச்சி இந்த ஆட்டத்தை இடது கையால் ஆடிக் கொண்டிருந்தார். “அடிக்காதீங்க. நான் தலைவரானா...” என்றெல்லாம் கேட்காமல் “முடிஞ்சா அடிங்கடே” என்று சவால் விட்டார். “உங்களின் பேச்சுத்திறமையை பயன்படுத்த வேண்டும்" என்று பிக் பாஸ் சொன்னதை யாரும் கேட்டது மாதிரி தெரியவில்லை. அண்ணாச்சிக்குள் ஒரு மிதமான கலகவாதி எப்போதும் சம்மணம் போட்டு அமர்ந்திருக்கிறார். இந்தத் தலைவர் பதவியை நிரூப் எப்படியும் பறித்துக் கொள்ளப் போகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தது. எனவே அண்ணாச்சி அலட்சியமாக ஆடியதோடு மட்டுமல்லாமல், பந்தை எறிந்தவர்களை நோக்கி பதில் தாக்குதல் நடத்தியது சுவாரஸ்யமான காமெடி.

பிக் பாஸ் - 58
பிக் பாஸ் - 58

என்றாலும் அண்ணாச்சி ஜெயிக்கவே அனைவரும் உதவினார்கள். ‘அண்ணாச்சி வெற்றி’ என்று நடுவர் அபினய் உற்சாகமாக அறிவிக்க “இருங்கடே. அதிகம் சந்தோஷப்படாதீங்க… இப்பத்தான் இன்டர்வெல் விட்டிருக்கு” என்று அவர் நகைச்சுவையாகச் சொன்னது உண்மை. இமானைத் தலைவராக அறிவித்த பிக் பாஸ், "நாணயத்தைப் பயன்படுத்தி யாராவது தலைவர் பதவியை பறிக்க விரும்புகிறீர்களா?” என்று கேட்க “நான் விரும்புகிறேன்” என்று நிரூப் அறிவித்தார். இது வீடு முழுக்க தெரிந்த ரகசியம் என்பதால் யாரும் அதிர்ச்சியடையவில்லை. ஆனால் வெறுப்புற்றார்கள். “அண்ணாச்சி நீங்கதான் ரியல் வின்னர்” என்று சிபியும் அபினய்யும் இமானை வாழ்த்தினார்கள்.

“நாணயம் பயன்படுத்தாம சொந்த முயற்சிலதானே தலைவரா ஆகப் போறேன்னு சொல்லிட்டு இருந்தே?” என்று கேட்டு நிரூப்பை காண்டாக்கிக் கொண்டிருந்தார் சிபி. “என்னைப் பார்த்து உனக்கு பயம்தானே?” என்று இமான் கேட்க, வீடு முழுக்க அந்தக் கேள்வியே எதிரொலிக்க “ஆமாம்” என்று வேறு வழியில்லாமல் புன்னகையுடன் ஒப்புக் கொண்டார் நிரூப்.

நாணயத்தை உபயோகித்து தலைவர் பதவியைப் பறித்துக் கொள்பவருக்கு தண்டனை தருவது பிக் பாஸ் வீட்டின் மரபு. அதன்படி இந்த வாரம் முழுவதும் தான் பேசும் ஒவ்வொருவரிடமும் அவரின் உயரத்திற்கு ஏற்ப, Eye Level Contact அளவிற்கு குனிந்துதான் நிரூப் பேச வேண்டும். உயரமாக இருப்பவர்களுக்கு சாதாரணமாகவே குனிந்து பேசுவது கடினம். இது நிரூப்பிற்கு கூடுதல் சிரமம். என்றாலும் கடுமையான தண்டனையில்லை என்பதால் ஜாலியாக ஏற்றுக் கொண்டார் நிரூப்.

அணி பிரிக்கும் பணியில் ஈடுபட்டார், புதிய தலைவர். இதில் ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டு வர அவர் விரும்பினார். அதன்படி வீட்டில் உள்ளோர்களை நான்கு அணிகளாகப் பிரித்து சுழற்சி முறையில் அவர்கள் வீட்டுப் பணிகளை செய்ய வேண்டும் என்று புதிய திட்டத்தை கொண்டு வந்தார். இதன்படி வாரம் முழுவதும் ஒரே வேலையை செய்யாமல் தினம் ஒரு பணி என்று செய்ய முடியும். ஆங்காங்கே எதிர்ப்பு முனகல் வந்தாலும் அரைமனதாக மக்கள் ஒப்புக் கொண்டனர். தான் செல்ல விரும்பிய அணிக்குச் செல்ல விடாமல் நிரூப் தடுத்ததால் இமான் கோபம் கொண்டு வாக்குவாதம் செய்தார். மற்றவர்களுக்கும் இதில் பிரச்னைகள் தெரிந்தன.

பிக் பாஸ் - 58
பிக் பாஸ் - 58

எனவே மக்கள் காண்டாகி “எங்க கண்ணு லெவலுக்கு இறங்கி வந்து பேசு” என்று நிரூப்பிடம் புகார் சொல்ல “நீங்கதானே என்கிட்ட பேசிட்டு இருக்கீங்க. நான் யார் கிட்டயாவது போய் பேசும் போதுதான் அப்படி...” என்று சட்டவிதியின் ஓட்டையில் புகுந்த தப்பிக்க முயன்றார் நிரூப். இதற்கு பிரியங்காவின் ஆதரவும் இருந்தது. ஆனால் மக்கள் வற்புறுத்தவே Squad பொஷிஷனில் நின்று நிரூப் சிரமத்துடன் பேச, அவருக்கு காலில் அடிபட்டிருந்ததால் மக்கள் அனைவரும் எழுந்து நின்று கொண்டது, நற்பண்புடன் கூடிய ஒரு சிறந்த காட்சி.

நிரூப் முன்வைத்த முதல் திட்டம் கூட ஓகே. ஒரு புதிய மாற்றத்தை தலைவர் முயன்று பார்க்கிறார் என்று கூட எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அவர் அடுத்து கொண்டு வந்த திட்டம்தான் குழப்பமானது. “யார் யார் காயின் வெச்சிருக்கீங்களோ அதை அவங்க விரும்பறவங்க கிட்ட தற்காலிகமா கொடுத்துடுங்க… அவங்க அந்தந்த ஏரியாவை கண்ட்ரோல் பண்ணலாம். இதை சீரியஸா பண்ண வேணாம். ஜாலியான டாஸ்க்கா பண்ணலாம்” என்று நிரூப் சொன்ன ஐடியாவைக் கேட்டு பிக் பாஸிற்கே தலை சுற்றியிருக்கும்.

இந்த கோக்குமாக்கு திட்டத்திற்குக் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக இமானும் வருணும் எழுந்து நின்று ஒரு போராட்டத்தையே நிகழ்த்திவிட்டார்கள். “தலைவர் சொல்றதையும் கேட்கணும். காயின் வெச்சிருக்கவங்க சொல்றதையும் கேட்கணும்ன்னா என்ன ரூல் இது?” என்று அவர்கள் ஆட்சேபித்ததில் நியாயமிருந்தது. நிரூப்பின் ஏற்பாட்டின்படி இரண்டு நாணயங்கள் பிரியங்காவிற்கும் அபிஷேக்கிற்கும் செல்லும். என்றால் இந்த மூவர் கூட்டணி இன்னமும் பலமாகி விடும் என்கிற சந்தேகம் யாருக்கும் எழுவதில் ஆச்சரியமில்லை. எனவே இமானுக்கும் இது எழவே “இந்த அதிகாரத்தை அவர்கள் இருவரும் துஷ்பிரயோகம் செய்யலாம்ன்ற சந்தேகம் எனக்கு இருக்கு. நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்” என்று ஆட்சேபம் தெரிவிக்க “அதெப்படி நீங்க சந்தேகப்படலாம். அப்படி என்ன நாங்க பண்ணிட்டோம். நீங்கதான் வீட்ல எந்த வேலையும் செய்யாம இருக்கீங்க” என்று பதிலுக்குக் காட்டமாக புகார் வைத்தார் பிரியங்கா.

பிக் பாஸ் - 58
பிக் பாஸ் - 58

'வெச்சு செய்யறது' என்ற ஆட்சேபகரமான சொல்லாடல் போல, எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருப்பவர்களைக் குறிக்கும் இரண்டு ஆங்கில எழுத்தை பிரியங்கா உபயோகித்தார். இதன் அர்த்தம் மக்களுக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. சில வார்த்தைப் பிரயோகங்கள் நடைமுறை உபயோகத்திற்கு வந்துவிட்டதாலேயே அதன் பின்னணி என்னவென்று தெரியாமல் பல வார்த்தைகளை இப்படிப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

“நான் எந்த இடத்துல வேலை செய்யாம இருந்தேன். ஒரு இடம் சொல்லுங்க பார்க்கலாம்” என்று பதிலுக்கு காட்டமாக சவால் விட்டார் அண்ணாச்சி. இவருக்கு ஆதரவாக ராஜூவும் பரிந்து பேசினார். அண்ணாச்சியின் கடுமையான எதிர்ப்பைக் கண்ட பிரியங்கா, தன் புகாரை ஒரு மாதிரியாக திரும்பப் பெற்றுக் கொண்டு “எங்களை எப்படி நீங்க சந்தேகப்படலாம்?” என்பதையே கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் இமான் அந்த வீட்டில் பணிகளை பெரும்பாலும் செய்யாமல் டபாய்த்துக் கொண்டிருக்கிறார் என்கிற புகார் நெடுங்காலமாகவே இருக்கிறது. இசைவாணி இருக்கும் சமயத்தில் இது பற்றி நிறைய புலம்பியிருக்கிறார். “இந்தத் திட்டம் தேவையில்லைன்னு நாங்களே சொல்லிட்டு இருக்கோம். அப்புறமும் எப்படி நீங்க சந்தேகப்படலாம்?” என்பது பிரியங்காவின் லாஜிக்.

தன்னிடமிருந்து தலைவர் பதவியைப் பயன்படுத்திக் கொண்டது, ஏடாகூடமான திட்டங்களைப் போடுவது, “நான் சொல்றதை செஞ்சாகணும்” என்று அதிகாரம் செய்வது போன்ற காரணங்களால் நிரூப்பின் மீது இமானுக்கு கோபம் ஏற்பட்டது. தன்னுடைய ஆளுமையின் போது நிரூப் தான் சொன்ன பணியைச் செய்யாமல் அழிச்சாட்டியம் செய்ததால் வருணிற்கும் கோபம். “இப்போ புரியுதா” என்று வருண் சரியான தருணத்தைப் பயன்படுத்திக் கொண்டது நியாயமே. “தண்ணி பாட்டிலை எடுத்துட்டு வாங்க” என்கிற வருணின் சாதாரண ஆணையை செய்யாமல் நிரூப் மல்லுக்கட்டினார். இதற்காக அவர் வேண்டுமென்றே மேஜை மீது ஏறி பேசியது நல்ல காமெடி. எனில் நிரூப் தலையை மேலே உயர்த்திதான் பேச வேண்டும்.

“மக்கள் எதிர்ப்பு அதிகமா இருக்கு. இந்தத் திட்டம் கலைக்கப்படும்-னு அறிவிச்சுடு” என்று ராஜகுரு அபிஷேக் உபதேசிக்கவே “ஓகே... இந்தத் திட்டம் பயன்பாட்டிற்கு வராது. ஆனால் புதிய விதிகள் வேறு ஏதாவது கொண்டு வந்தால் அதைப் பின்பற்றியாக வேண்டும்” என்று நிரூப் அறிவித்தாலும் கூட பிரச்னையின் சூடு தணியாமல் புகைந்து கொண்டே இருந்தது. “கொஞ்சம் தன்மையா பேசுடா” என்பதும் அபிஷேக்கின் பணிவான உபதேசம்.

பிக் பாஸ் - 58
பிக் பாஸ் - 58

“நான் உங்க தலைவர் பதவியை எடுத்துட்டேன்னு இப்படிப் பழிவாங்காதீங்க அண்ணாச்சி” என்று நிரூப் ஆதங்கப்பட “டேய். இப்படி நீ அதிகாரமா பேசி நான் பார்த்ததில்லை. இப்ப என்ன திடீர்னு…” என்பதுதான் இமானின் ஆதங்கம். “ஏம்ப்பா. நீதான் அந்தத் திட்டத்தை வாபஸ் வாங்கிட்டில்ல. அப்புறம் ஏன் நின்னு போன கல்யாணத்துக்கு நைட்டு வரைக்கும் மேளம் வாசிச்சிக்கிட்டு இருக்கீங்க?” என்று ராஜூ கேட்டது செமயான லாஜிக். “தண்ணி பாட்டில் பிரச்னைல நீ வருண்கிட்ட செஞ்சது தப்புன்னு உணர்ந்தியானா, நீ ஜெயிச்சிட்டே” என்று நிரூப்பிடம் சரியான ஆலோசனையை சொன்னார் அமீர். ஆனால் ஒன்று, எத்தனை எதிர்ப்பு வந்தாலும் நிரூப் முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டு வாக்குவாதம் செய்யும் அந்தக் கட்டுப்பாடு வியக்க வைக்கிறது.

இந்தச் சண்டையில் தேவையான ஃபுட்டேஜ் சேர்ந்ததும் நாமினேஷன் திருவிழாவை ஆரம்பித்தார் பிக் பாஸ். பழைய பகையோடு, நிரூப் ஆரம்பித்து வைத்த புதிய பிரச்னை காரணமாக வாக்குமூல அறையில் வெறுப்பின் சூடு தகிக்க ஆரம்பித்தது. நிரூப், அமீர், சஞ்சீவ் ஆகியோரை நாமினேட் செய்ய முடியாது. ஆனால் ‘மூன்று நபர்களை நாமினேட் செய்ய வேண்டும்’ என்கிற பழைய ட்விஸ்ட்டைத் திரும்ப எடுத்தார் பிக் பாஸ்.

வார்டனாக சிபி சம்பாதித்துக் கொண்ட வெறுப்பு, அதே டாஸ்க்கில் அக்ஷரா கோபத்தில் பொருள்களை விசிறியடித்து செய்த கலாட்டா, பிரியங்காவின் அன்புக்கூட்டணி, அபிஷேக்கின் ராஜதந்திரம், ராஜூவின் வில்லங்கமான கேள்வி போன்ற காரணங்கள் நாமினேஷன் சமயத்தில் இறைக்கப்பட்டன. அக்ஷராவை நாமினேட் செய்த அபிஷேக் “அவங்க உடம்புக்கு எக்சர்சைஸ் பண்றாங்க. இது போன்ற டாஸ்க்குகள் 'mind exercise’ன்றதை அவங்க புரிஞ்சுக்கலை” என்று சொன்னது ஒரு நல்ல உபதேசம். “பிரியங்கா அன்பு செலுத்துவாங்க. ஆனா அவங்களுக்குப் பிடிச்சவங்களுக்கு மட்டும்தான்” என்று பின்குறிப்பில் ஊசியைக் குத்தினார் சிபி. இமான் போட்ட சண்டையால் நிரூப்பிற்கு வெறுப்பு. நிரூப்பின் புதிய அதிகாரத்தால் வருணிற்கு கடுப்பு.

பிக் பாஸ் - 58
பிக் பாஸ் - 58

போட்டியாளர்கள் சொன்ன காரணங்களை மறைமுகமாக பிக் பாஸ் சபையில் போட்டுக் கொடுத்தாலும், அவை எதைக் குறிக்கின்றன என்பது போட்டியாளர்களுக்கு புரிந்து விட்டது. இந்த வாரம் எவிக்ஷன் பட்டியலில் இடம்பிடித்த பாக்கியசாலிகள்: அக்ஷரா, பாவனி, சிபி, இமான், பிரியங்கா, வருண், அபிஷேக், ராஜூ, தாமரை மற்றும் அபினய். பள்ளியின் வருகைப்பதிவேடு மாதிரி அனைவரின் பெயரும் இதில் இடம் பெற்றிருந்ததைக் கண்டு மக்கள் பயத்துடன் சிரித்துக் கொண்டார்கள். ‘நாமினேஷனில் இருந்து தப்பிக்கும் சக்தியை பயன்படுத்த முடியாது’ என்று நாணயம் வைத்திருந்தவர்களுக்கு செக்மேட் வைத்தார் பிக் பாஸ்.

“ஒருத்தன் சேவ் ஆயிட்டு ஒட்டுமொத்த வீட்டையே மாட்டிவிட்டுட்டான்” என்று ராஜூ சாதாரணமாகச் சொன்னது செமயான கமெண்ட். “இப்பத்தான் அவன் கூட்டுக்குள்ள இருந்து வந்திருக்கான்” என்று நிரூப்பைப் பற்றி சொன்னார் சிபி. “பாவனி தலைவர் ஆகியிருந்தா கூட எனக்குப் பிரச்னையில்ல. தம்பி மாதிரி கூடவே இருந்துக்கிட்டு இப்படி செஞ்சிட்டானே?!” என்று இமான் ஆதங்கப்பட “அதான் எனக்கும் டவுட்டு” என்று பின்பாட்டு பாடினார் வருண்.

ஆக... நிரூப்பின் வாரம் ‘நெருப்பின்’ வாரமாக இருக்கும் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. இனி ரணகளம்தான்.