Published:Updated:

பிக் பாஸ் - 73: பீட்ஸாவுக்காக ஓடிய பிரியங்கா; நீருப்பின் கம்பேக்! பஸ்ஸுல இப்படியெல்லாமா பண்ணுவீங்க?

பிக் பாஸ் - 73

நீர் விழ ஆரம்பித்ததும் 'மேகம் கருக்குது... மின்னல் அடிக்குது’ என்று ஒருவர் பாட ஆரம்பிக்க 'தாமரை நனையுது’ என்று டைமிங்கில் அடித்தார் ராஜூ.

பிக் பாஸ் - 73: பீட்ஸாவுக்காக ஓடிய பிரியங்கா; நீருப்பின் கம்பேக்! பஸ்ஸுல இப்படியெல்லாமா பண்ணுவீங்க?

நீர் விழ ஆரம்பித்ததும் 'மேகம் கருக்குது... மின்னல் அடிக்குது’ என்று ஒருவர் பாட ஆரம்பிக்க 'தாமரை நனையுது’ என்று டைமிங்கில் அடித்தார் ராஜூ.

Published:Updated:
பிக் பாஸ் - 73
‘ஆம்னி பஸ்ஸில் துண்டு போட்டு இடம் பிடிப்பதைப் போல் தரவரிசைப் பட்டியலில் போட்டியாளர்கள் இடம்பிடித்துக் கொண்டிருந்தார்கள்’ என்று நேற்று எந்த நேரத்தில் எழுதினேனோ என்று தெரியவில்லை. பிக் பாஸ் உண்மையாகவே ஒரு பஸ்ஸை கொண்டு வந்து நிறுத்திவிட்டார்.

‘ஒரு மனிதருக்கு சக மனிதர்களை எத்தனை தூரத்திற்கு சகித்துக் கொள்ள முடியும்?’ என்ற போட்டிதான் பிக் பாஸின் ஆதார விஷயம். ஆனால், அந்த வீட்டையே இன்னமும் சுருக்கி ஒரு பேருந்திற்குள் வைத்து கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தினார்கள். போதாக்குறைக்கு ஓர் அநாமதேயர் அவ்வப்போது வந்து அந்த இடத்தை இன்னமும் சுருக்கினார். “என்னதிது... கட்டிண்டிருக்கம்" என்று மைக்கேல் மதன காமராஜனில் கமலும் ஊர்வசியும் நிற்கும் போஸில் மக்கள் நிற்க வேண்டிய நெருக்கடியான நிலைமை.

இந்த ஆட்டத்தை நிரூப் கையாண்ட விதத்தைப் பார்த்தபோது அவர்தான் வெற்றி பெறுவார் என்பது ஆரம்பத்திலேயே தோன்றிவிட்டது. ஆம், NIROOP IS BACK. நிகழ்ச்சியின் ஆரம்ப நாள்களில் பிரியங்காவின் நிழலாக மட்டுமே இவர் இருந்த போது அதிக நாள்கள் நீடிக்க மாட்டார் என்று தோன்றியது. ஆனால் ஒரு கட்டத்தில் நிரூப் சுதாரித்துக் கொண்டு இறங்கி ஆடினார். ஆனால் இடையே நடந்த சில நிகழ்வுகளால் மனம் சோர்ந்து பலவீனமடைந்தார். இப்போது அவர் மீண்டும் காலை ஊன்றி எழுந்து கொண்டதை பேருந்து டாஸ்க்கில் பார்க்க முடிந்தது.

பிக் பாஸ் - 73
பிக் பாஸ் - 73

தனது வெற்றிக்காக அவர் சாம, தான, பேத, தண்டம் என்று பல்வகை உத்திகளையும் பயன்படுத்தினார். ‘உனக்குப் பயம்’ என்று யாராவது கிண்டலடித்தால், ‘ஆமாம். எனக்குப் பயம்தான்’ என்று சொன்னதோடு நிறுத்திக் கொள்ளாமல் தொடைகளை ஆட்டி ‘தொடைநடுங்கி’ என்று சுயபகடியும் செய்து கொண்டார். ‘நான் எப்படி வேணா மாறுவேன்’ என்று தர்க்கத்திலும் ஈடுபட்டார். தன்னை கணிக்கவே முடியாத ஒரு நிலையில் நிறுத்திக் கொண்டு அதே சமயத்தில் ‘நான் இறங்க மாட்டேன்’ என்பதை சக போட்டியாளர்களிடம் மனதில் அழுத்தமாக விதைத்து அவர்களை சோர்வடையச் செய்து, அமீரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி இறுதியில் வெற்றி.

இதில் நமக்கான பாடமும் உள்ளது. ஒரு விஷயம் உங்களுக்கு வேண்டும் என்றால் அது சும்மா உங்கள் கையில் வந்து அமர்ந்துவிடாது. அதற்காக நீங்கள் அனைத்து விதமான சாமர்த்தியங்களையும் காட்டியாக வேண்டும். இறுதியில் அந்தப் பொருள் உங்கள் கையில் கிடைக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு ஈடில்லை. 'இன்னமும் ஒரு வாரத்திற்கு ஐயாவை யாரும் அசைச்சுக்க முடியாது’ என்று நிரூப் இறுதியில் கையை உயர்த்தி கத்தியதை கவனித்தீர்களா?

Mark my words... இதே மாதிரி தொடர்ந்து சாமர்த்தியமாக ஆடினால், இறுதிக்கட்டத்தை நோக்கிச் செல்லும் ஒரு முக்கியமான போட்டியாளராக நிரூப் நிச்சயம் இருப்பார்.

எபிசோடு 73-ல் என்ன நடந்தது?

“பாயசம் சாப்பிடறீங்களா ஃப்ரெண்ட்ஸ்?!” என்றபடி அனைவருக்கும் எடுத்து வந்து தந்த தாமரை, பாவனிக்கு மட்டும் தராமல் விட்டுவிட்டார். ஒரு சபையில் அனைவருக்கும் விருந்தோம்பல் செய்யும்போது ஒருவரை மட்டும் விட்டுவிடுவது நிச்சயம் பண்பற்ற செயல். தன்னிடம் சண்டை போட்டவராக இருந்தாலும் கூட வீடு தேடி வருபவரை “தண்ணி குடிக்கறீங்களா?” என்ற கேட்பதுதான் நம் கலாசாரம். இதை ராஜூ உட்பட பலரும் தாமரையிடம் சுட்டிக் காட்டிய போது “இதெல்லாம் ஒரு பிரச்னைன்னு பேச வந்துட்டீங்கள்லே?” என்று கோபித்துக் கொண்டார். இந்தச் சமயத்தில் ராஜூ செய்த உபதேசம் சிறப்பு.

பிக் பாஸ் - 73
பிக் பாஸ் - 73

ஆனால் தாமரையின் கோபம் வேறு. தான் தந்தால் பாவனி நிச்சயம் சாப்பிட மறுத்து வடுவார் என்பதுதான் காரணம். அவர் மறுக்கிறார், மறுக்கவில்லை என்பது இரண்டாவது விஷயம். தன்னளவில் உபசரிப்பை செய்துவிடுவதுதான் முறையானது. இதனால் தாமரையின் மைலேஜ்தான் கூடும். சாப்பாடு விஷயத்தில் ஒருவரை இப்படிப் புறந்தள்ளுவது மனம் வலிக்கச் செய்யும் விஷயம். தன்னிடமிருந்த பாயசத்தை பாவனிக்குத் தந்து சாப்பிட வற்புறுத்திய சஞ்சீவ், பிறகு தாமரையிடம் ‘தப்பு’ என்பது போல் சொன்னது பாராட்டத்தக்கது. ‘அறச்சீற்ற நாயகனாக’ நடிக்க முயல்கிறாரோ, அல்லது அவர் உண்மையிலேயே அப்படிப்பட்ட குணாதிசயம் கொண்டவரோ என்று தெரியவில்லை. சஞ்சீவ் சைலண்ட்டாக பல இடங்களில் இப்படி ஸ்கோர் செய்து கொண்டு போகிறார்.

“இவ்வளவு சொல்றீங்கள்லே... நான் காலைல சமைச்சு வெக்கறேன் அவ சாப்பிடறாளான்னு பாருங்க?” என்றார் தாமரை. அப்படியேதான் நடந்தது. நிரூப் சமைத்ததை மட்டும் எடுத்துச் சாப்பிட்ட பாவனி, தாமரை சமைத்த காரணத்தினால் அந்த உணவைத் தொடவில்லை. இதுவும் இன்னொருவகை அநாகரிகமே. ஒருவர் மீதுள்ள மனஸ்தாபத்தினால் உணவை வீணடிப்பது, நிராகரிப்பது போன்ற அபத்தங்களைச் செய்யாமலிருப்பதுதான் நல்லது.

பிக் பாஸ் - 73
பிக் பாஸ் - 73

'நோ... என்றால் அது ‘நோ’தான்' – ஸ்ட்ராங்கா சொல்லுங்க!’

விடிந்தது. 'இறுதிச்சுற்று' படத்திலிருந்து ‘மாயவிசை’ என்னும் ரகளையான பாடலை ஒலிக்கவிட்டார் பிக் பாஸ். பாயாச வாசனை இன்னமும் விடாமல் வீட்டைச் சுற்றிக் கொண்டு வந்தது. “ஆமால்ல... நான் கடைசியா அழுது ஒரு வாரமாச்சுல... மறந்தே போச்சு...” என்று அக்ஷராவிற்கு திடீரென்று நினைவு வர மூலையில் நின்று ‘மூசுமூசு’வென்று அழுதார். ஒரு நல்ல நண்பராக வருண் வந்து ஆறுதல் சொன்னார்.

“கதை அப்படியே திரும்பிடுச்சு. என் மேலதான் தப்பு. லேசா சொல்லியிருக்காம முதல்லயே அழுத்தமா சொல்லியிருக்கணும்” என்று அபிநய் விவகாரம் குறித்து கண்கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம் செய்து கொண்டிருந்தார் பாவனி. பிக் பாஸ் வீட்டில் என்ன நிகழ்ந்ததோ, என்று தெரியாது. ஆனால் இதில் பெண்களுக்கான ஒரு படிப்பினை இருந்தது. ஒரு ஆண் உள்நோக்கத்துடன் வழிய ஆரம்பித்தால் ஆரம்பக்கட்டத்திலேயே கறாராக பேசி துண்டித்து விடுவதுதான் சரியான வழி. சம்பிரதாயத்திற்கு புன்னகை ஆரம்பித்தால் அவ்வளவுதான். ‘அடடே... வொர்க் அவுட் ஆயிடுச்சுபோல’ என்று இன்னமும் பின்தொடர்தலை ஆவேசமாக செய்ய ஆரம்பிப்பான். ‘ஆசை வந்தா சுத்தி சுத்தி, அலையா அலையும் ஆம்பள புத்தி’ என்கிறது, சமீபத்தில் ஹிட் அடித்திருக்கும் ஒரு பாடலின் வரி.

பிக் பாஸ் - 73
பிக் பாஸ் - 73

'போலாம்… ரைட்...’ பிக் பாஸ்ஸின் ஸ்பெஷல் பேருந்து!

இந்த வாரம் அனைவருமே நாமினேட் ஆகி, முதல் சவாலில் சிபி வெற்றி பெற்றுவிட்டார். இப்போது அடுத்த சவால் அறிவிக்கப்பட்டது. கார்டன் ஏரியாவில் நிறுத்தப்பட்டிருக்கும் ஒரு பேருந்தில் – சிபியைத் தவிர – மற்ற போட்டியாளர்கள் அனைவரும் ஏற வேண்டும். தண்ணீர் மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதி. உள்ளே போட்டியாளர்களுக்கு பல இடையூறுகள் செய்யப்படும். யாராவது இறங்கினால் அவுட். ‘ஹார்ன் சத்தம்’ வந்ததும் ஒருவர் இறங்க வேண்டும். ‘யார் இறங்குவது என்பதை போட்டியாளர்கள் கலந்து பேசலாம்’ எஞ்சுபவர் வெற்றியாளர். இதுதான் போட்டி.

மக்கள் பாத்ரூம் பக்கம் விரைந்து சென்றுவிட்டு தயாராக நின்றிருந்தார்கள். பஸ்ஸர் அடித்ததும் பாவனி முதலில் ஏறி இடம்பிடித்தார். அனைவரும் ஏறிய பிறகு “ஒரு வேளை பஸ்ல நெருப்பு வெக்கப் போறாங்களோ?” என்று பீதியைக் கிளப்பினார் ராஜூ. இவர் இந்தப் பயணத்தில் அதிக நேரம் இருந்திருந்தால் நமக்கு நிறைய நகைச்சுவைக் காட்சிகள் கிடைத்திருக்கும்.
பிக் பாஸ் - 73
பிக் பாஸ் - 73

பேருந்திற்குள் திடீரென்று நீர் வந்து விழ ஆரம்பித்தது. இது பிக் பாஸ் மக்களுக்கு வேண்டுமானால் அதிசயமான, அதிர்ச்சியான விஷயமாக இருக்கலாம். ஆனால் மாநகரப் பேருந்துகளில் மழைக்காலத்தில் பயணம் செய்பவர்களுக்கு இதெல்லாம் எப்போதோ பழகிப்போன விஷயம். குடை பிடித்துக் கொண்டு பயணம் செய்யும் புத்திசாலிகள் கூட இதில் உண்டு.

‘இது மாட்டுச்சாணியா, கோமியமா?’ – மக்கள் ஆராய்ச்சி

நீர் விழ ஆரம்பித்ததும் 'மேகம் கருக்குது... மின்னல் அடிக்குது’ என்று ஒருவர் பாட ஆரம்பிக்க 'தாமரை நனையுது’ என்று டைமிங்கில் அடித்தார் ராஜூ. “மாட்டு ஐட்டத்தையும் மனுச ஐட்டத்தையும் கலந்து அடிச்சிட்டாங்களே குருநாதா...” என்று வடிவேலு கதறுவது போல, அந்த நீரில் என்ன இழவை கலந்தார்கள் என்று தெரியவில்லை. நாற்றம் குடலைப் பிடுங்கவே தாமரையும் பாவனியும் வாந்தியெடுக்கும் முகபாவத்திற்குச் சென்றார்கள்.

முதல் ஹார்ன் சத்தம் வந்தது. யாராவது ஒருவர் இறங்க வேண்டும். “நீதான் தைரியமான ஆளாச்சே... இறங்கேன்” என்று ராஜூவைப் பார்த்து அனைவரும் கோரஸாக சொல்ல ‘அதுக்கு காரணம் சொல்லுங்க’ என்று அடம்பிடித்தார் ராஜூ. “மக்கள் உன்னைக் காப்பாத்திடுவாங்க” என்று காரணம் சொல்லப்பட்டது. “நீ இறங்குனா இறங்கு... இறங்காட்டி போ” என்று தாமரை கோபித்தார்.

பிக் பாஸ் - 73
பிக் பாஸ் - 73

“என் ஸ்டாப் வந்தா நான் இறங்குவேன்” என்று பிரியங்கா சொல்ல, “பஸ்ஸே ஸ்டாப் ஆகித்தாம்மா கிடக்கு” என்றார் ராஜூ. பிறகு “மெஜாரிட்டியா சொல்றதால இறங்கிடறேன்” என்று ராஜூ இறங்கிவிட்டார். மக்களின் மீதுள்ள நம்பிக்கை. ஆனால் இதுவரை எந்தவொரு டாஸ்க்கையும் ராஜூ சிரமப்பட்டு செய்ததுபோல் தெரியவில்லை. ‘எப்படியும் காப்பாத்திடுவாங்க’ என்கிற நம்பிக்கையில் அசால்ட்டாகவே கையாள்கிறார்.

பேருந்தினுள் இப்போது தண்ணீரோடு புகையும் கலந்து வந்தது. சஞ்சீவின் சட்டையில் படிந்துள்ள வெள்ளைப்படிமமானது தயிரா, பினாயிலா, கெமிக்கலா என்கிற ஆராய்ச்சி நடந்தது. “கீழ ஏதோ கிடந்ததுன்னு எடுத்து நக்கிப் பார்த்தேன். மாட்டுச்சாணி... புளிப்பா இருந்தது. நல்லவேளை நான் கால்ல மிதிக்கலை” என்கிற ரேஞ்சிற்கு இந்த ஆராய்ச்சி தொடர்ந்தது. இரண்டாவது ஹார்ன் ஒலித்தது. “சுச்சா வருது” என்றபடி சஞ்சீவ் இறங்கி ஓடினார். எப்படியும் இதில்தான் நீடிக்கப் போவதில்லை, எதற்கு நேர விரயம் என்று அவர் நினைத்திருக்கலாம். ஆக... அடுத்த டிக்கெட் அவுட்.

பிக் பாஸ் - 73
பிக் பாஸ் - 73

“உனக்கு என்னப்பா... மக்கள் காப்பாத்திடுவாங்க” என்று ராஜூவை உசுப்பியது போல அடுத்ததாக அக்ஷராவை கிளப்ப முயன்றார்கள். “அவ மட்டும் பெட்டியை வெளியே அனுப்ப மாட்டா. வெளியே போக மாட்டோம்னு அவளுக்கு அவ்ளோ நம்பிக்கை” என்று பிரியங்கா உசுப்பேற்றினார். தண்ணீரில் இருந்த ஏதோவொரு வஸ்துவை சாப்பிட்டது போல் பாவனை செய்த பிரியங்கா ‘ஸ்வீட்டா இருக்குடா’ என்று சொல்ல அருவருப்பால் மற்றவர்கள் முகம் சுருங்கினார்கள். டிஷ்யூ பேப்பரின் கசக்கலை தண்ணீரில் தோய்த்து மற்றவர்களின் மீது தெளித்து அருவருப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தார் நிரூப். தண்ணீரில் நனைந்த கையை முகர்ந்து வேறு பார்த்தார் அபிநய்.

பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த புதிய ஆசாமி!

உடம்பு, முகம் ஆகிய அனைத்தையும் மறைத்தபடி ஒரு விண்வெளி வீரர் உள்ளே வந்தார். புது நபரைப் பார்த்ததும் மக்களுக்கு உற்சாகம் ஏற்பட்டது. பேருந்தில் வேர்க்கடலை விற்க வந்ததாக நினைத்து விட்டார்கள். “அண்ணே... சீசன் 5 எப்படியிருக்கு?” என்று கடமை மன்னியாக கேட்டார் பிரியங்கா. அந்த அநாமதேயர் உள்ளே வந்ததற்கு காரணம் இருந்தது. பேருந்தில் மக்கள் நிற்கும் இடத்தை இன்னமும் சுருக்கி விட்டுச் சென்றார். (சாதாரண பேருந்தை சொகுசு பேருந்து ஆக்க அரசாங்கம் செய்யும் திட்டம் போலவே இந்த ஆசாமி செய்த விஷயம் இருந்தது). பேருந்தில் மீண்டும் புகை வந்தது.

பிக் பாஸ் - 73
பிக் பாஸ் - 73

அழுக்குத் தண்ணீரை அக்ஷரா மீது விசிறியடித்து விளையாடினார் நிரூப். பிறகு சஞ்சீவின் பாணியில் அக்ஷராவும் இறங்கி பாத்ரூமை நோக்கி ஓடினார். மூன்றாவது டிக்கெட் காலி. உடனே ஹார்ன் சத்தம் வந்தது. "அக்ஷரா போனதை இதில சேர்த்துக்க முடியாதா?” என்று கணக்கை டாலி செய்ய முயன்றார் பிரியங்கா. “யாராவது இறங்கணும். பேசுங்கப்பா” என்று ஒருவர் குரல் கொடுக்க, “உனக்கு பயம். என்னைப் பார்த்தா பயம்” என்று 'மெளனராகம்' கார்த்திக் மாதிரி நிரூப்பிடம் பேச ஆரம்பித்தார் பிரியங்கா. “ஆமாம். பயம்தான். இப்ப என்ன?!” என்றார் நிரூப். அதற்குப் பிறகு என்ன பேச முடியும்?

"நேத்து டாப் 11 டாஸ்க்ல எனக்கு பயம்லாம் கிடையாதுன்னு சொன்னியே?” என்று அபிநய் மடக்க முயல ‘அது போன வாரம்... இது இந்த வாரம்’ என்று சமாளித்தார் நிரூப். “நீதானே ரெண்டாம் இடத்துல நேத்து நின்னே.. அப்ப நீ சிறந்த போட்டியாளர்தானே? தைரியமா இறங்கேன்” என்று பிரியங்காவை நல்ல லாஜிக்கோடு உசுப்பிவிட்டார் நிரூப். தண்ணீரில் இன்னமும் வேறு ஏதோவொரு கெட்ட வஸ்துவை கலந்து அனுப்பி இம்சையைக் கூட்டினார் பிக் பாஸ்.
பிக் பாஸ் - 73
பிக் பாஸ் - 73

‘உனக்கும் பயம். எனக்கும் பயம்!'

மீண்டும் ஹார்ன் சத்தம் வந்தது. யாரும் இறங்குகிற வழியாகத் தெரியவில்லை. “யாராவது பேசிட்டு இறங்குங்க” என்றார் நடுவர் சிபி. “எப்படியும் மக்கள் ஓட்டு போடறவங்கதான் பைனல்ல வரப்போறாங்க. ஏன் சிரமப்படறீங்க?” என்பதுபோல் பேசி மற்றவர்களின் மனதைக் கரைக்க முயன்றார் பிரியங்கா. “தொடைநடுங்குது பார்” என்று நிரூப்பை வருண் கிண்டல் செய்ய தொடையை ஆட்டிக் காட்டினார் நிரூப்.

“அவன் என் தம்பி... நான்தான் அடிப்பேன். யாரும் கேட்கக்கூடாது. ஆனா அவனை யாரும் அடிக்கக்கூடாது. நான் கேட்பேன்” என்கிற பாச பாலிசியை நிரூப் மீது கொண்ட பிரியங்கா, வருணின் கிண்டலைக் கண்டதும் “உனக்குத்தான் பயமில்லையே? நீ இறங்கேன்” என்று அவரை மடக்க முயல “எனக்குப் பயம் இல்ல. ஆனா இந்த கேம் சுவாரஸ்யமா இருக்கு. எவ்வளவு நல்ல ஸ்மெல்?!” என்று தன் தொடை நடுக்கத்தை மறைத்துக் கொண்டார் வருண்.

பிக் பாஸ் - 73
பிக் பாஸ் - 73

இதுவரை மழையில் நனைந்த கோழி மாதிரி மூலையில் பதுங்கியிருந்த பாவனி இப்போதுதான் வாயைத் திறந்தார். “நிரூப்... நீதான் தைரியமான ஆளாச்சே... போயேன்” என்று எல்லோரும் பேசி முடித்த லாஜிக்கை அவர் மீண்டும் ஆரம்பிக்க “உனக்கும் பயம்தானே... உக்காரு” என்றார் நிரூப். அபிநய்க்கும் நிரூப்பிற்கும் இடையே முட்டல் வாக்குவாதம் நடந்தது.

இந்த டாஸ்க் ஆரம்பித்த போது நேரம் மதியம் 2:50 மணி. இப்போது நேரம் இரவு 8:15 மணியைக் கடந்து கொண்டிருந்தது. “ஹார்ன் சத்தம் கொடுத்தும் இறங்காம இருக்கீங்க. பேசிட்டு இறங்குங்க” என்று கொட்டாவியையும் எரிச்சலையும் அடக்கியபடி அறிவிப்பு தந்தார் பிக் பாஸ். அவருக்கே புரியாத வகையில் ஒரு காரணத்தைச் சொல்லிவிட்டு பேருந்தை விட்டு இறங்கினார் பாவனி. அடுத்த டிக்கெட்டும் அவுட்.
பிக் பாஸ் - 73
பிக் பாஸ் - 73

பீட்ஸா ஆசை காட்டிய பிக் பாஸ்

‘மொச பிடிக்கற நாயை மூஞ்சைப் பார்த்தா தெரியாதா?’ என்று அடுத்த வியூகத்தில் இறங்கினார் பிக்பாஸ். அதில் கைமேல் பீட்ஸா கிடைத்தது. ஆம், முதலில் இறங்கியவர்களுக்காக பீட்ஸா வரவழைத்த பிக்பாஸ், பேருந்தில் அமர்ந்திருப்பவர்களின் முன் அதைச் சாப்பிட வேண்டும் என்று சொல்ல ராஜூவும் அக்ஷராவும் உற்சாகமானார்கள். உள்ளே இருப்பவர்களுக்கு நிச்சயம் பசி இருக்கும் என்பதால் இந்த ஐடியா உடனே பலித்தது. “வெஜ் பீட்ஸா இருக்கா?” என்று உறுதிப்படுத்திக் கொண்ட பிறகு ஆவேசமாக வெளியில் பாய்ந்து ஒரு துண்டை மூர்க்கமாகக் கடித்தார் பிரியங்கா. சாப்பாட்டை கண்ணில் காட்டினால் இந்த டிக்கெட் நிச்சயம் அவுட் ஆகும் என்று பிக் பாஸ் யோசித்தது வெற்றிகரமாக பலித்தது. “இந்த பீட்ஸால உங்க பேர் எழுதியிருக்கு. வெளில வந்துடுங்க சார்” என்று ராஜூ ஆசை காட்டியும் அபிநய் மசியவில்லை.

அடுத்து வேறுவிதமாக ஒலித்த ஹார்ன் சத்தத்தில் மீண்டும் அந்த அநாமதேயர் உள்ளே வந்து இடத்தை இன்னமும் குறைத்து விட்டுச் சென்றார். “யப்பா... ஆளை விடுங்கடா” என்றபடி வருண் கீழே இறங்கிச் சென்றார். அக்ஷரா இல்லாத இடத்தில் தமக்கென்ன வேலை?” என்பது அவரின் பாலிசி போல. ஆக, பேருந்திற்குள் இன்னமும் இருந்தவர்கள் அமீர், நிரூப், தாமரை மற்றும் அபிநய்.
பிக் பாஸ் - 73
பிக் பாஸ் - 73

அபிநய்யின் தியாகமும் அறிவுரையும்!

“அடுத்தது யாரும் இறங்கலைன்னா டாஸ்க்கை கேன்சல் பண்ணிடப் போறாங்க. நீங்க சேர்த்து வெச்ச கஷ்டமெல்லாம் வீணாகப் போயிடும். பேசிட்டு இறங்குங்க” என்று அக்ஷரா எச்சரித்தார். பிக் பாஸ் இதை ஏற்கெனவே ஒரு அறிவிப்பாக செய்திருந்தார். “இன்னமும் ஒரு ஆள் இறங்கினா நான் இறங்கிடுவேன்” என்று லாஜிக் பேசினார் தாமரை. நிரூப்பை காப்பாற்ற தாமரை விரும்புகிறார் என்பதாகத் தெரிந்தது. இதை ஜாலியாகக் கலாய்த்தார் பிரியங்கா. “விட்டுக்கொடுக்கறதா இருந்தா இப்பவே வெளியே போய்டு. என்னை அடிச்சா ரெட் கார்ட் கொடுத்து அனுப்பிடுவாங்க” என்று யோசனை சொன்னார்.

நேரம் நள்ளிரவு 12:20 மணி. “சரிப்பா... உனக்குப் பயமா... அதிகாரமா இல்லாம ஒழுங்கா கெஞ்சிக் கேளு.” என்று நிரூப்பிடம் கேட்டபடி தாமரை கீழே இறங்கி அவசரமாக பாத்ரூம் பக்கம் ஓடினார். பிக் பாஸ் அடுத்த ஹார்னை அடித்து போட்டியாளர்களுக்கு கடைசி எச்சரிக்கை தந்தார். இன்னமும் ஒரு ஹார்ன்தான் பாக்கி. போட்டி கேன்சல் ஆகிவிடும். “அமீர் என் கூட பேச்சுவார்த்தைக்கு வரேன்னு சொல்லியிருக்கான்...” என்று அபிநய்யிடம் நிரூப் சொல்ல, அந்த நேரத்தின் நெருக்கடி தாங்காமல் ‘யாராவது ஒருவர் பயன்பெறட்டும்’ என்ற நோக்கத்தில் அபிநய் இறங்கிவிட்டார். இல்லையென்றால் அத்தனை பேரின் கஷ்டமும் வீணாகியிருக்கும். “ஒழுங்கா கேமை முடிக்கப்பாருங்க” என்று இருவருக்கும் அறிவுரை கூறி இறங்கிச் சென்றார் அபிநய்.

பிக் பாஸ் - 73
பிக் பாஸ் - 73

அமீருக்கு நிரூப் தந்த அல்வா!

12:50 AM “வைல்ட் கார்ட்ல வந்தாலும் நீ வேகமா ஆடிட்டு இருக்கே. மக்களுக்கு உன்னைப் பிடிச்சிருக்கு. ஆனா, அடுத்த வாரமும் நான் இருந்தா வேற மாதிரி என்னைக் காட்டி தப்பிக்க முயல்வேன். யோசிச்சுப் பாரு” என்று அமீரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் நிரூப். “ஓகே... ஆல் தி பெஸ்ட்” என்றபடி அமீரும் இறங்கி விட கடைசியாக நின்ற நிரூப் வெற்றி பெற்றார். “ஏம்ப்பா இறங்கிட்ட?” என்று மக்கள் அமீரிடம் காரணம் கேட்க “அவன் வீக் பிளேயர் இல்ல. அது எனக்குத் தெரியும். அடுத்த வாரம் ப்ரூவ் பண்றேன்னு சொல்லியிருக்கான்” என்று விளக்கம் சொன்னார் அமீர்.

ஆக... எவிக்ஷன் வரிசையில் இருந்து தப்பித்த இரண்டாவது நபராக நிரூப் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது பற்றிய அறிவிப்பும் வந்தது. “இன்னமும் ஒரு வாரம் இருப்பேன்” என்று உற்சாகமாக நிரூப் கூவிய காட்சியோடு எபிசோடு நிறைவுற்றது.
‘இதெல்லாம் என்ன பிரமாதம்?!... அடுத்தது இன்னொரு ஸ்பெஷல் அயிட்டம் இருக்கு’ என்கிற காமெடியாக அடுத்த டாஸ்க்கில் பிக் பாஸ் எதையெல்லாம் செய்து இம்சையைக் கூட்டப் போகிறார் என்று தெரியவில்லை.