Published:Updated:

"சுச்சி வெளியே போகணும்னு நானும் ஆசைப்பட்டேன்!" - பிக்பாஸ் சம்யுக்தா

சம்யுக்தா
சம்யுக்தா

''‘கலீஜ்’ங்கிறது கெட்ட வார்த்தைன்னா அதை தமிழ் சினிமாவில் எல்லாம் பயன்படுத்தியிருக்காங்களே எப்படி?''

பிக்பாஸ் சீசன் 4-ல் கடந்த வாரம் எவிக்‌ஷனில் வெளியே வந்தவர் சம்யுக்தா. ஷோ தொடங்கிய இரண்டாவது வாரத்தில் எவிக்‌ஷன் ப்ராசஸ் தொடங்கியது. ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் வெளியில் வந்தபோதெல்லாம் இந்த எவிக்‌ஷன் பற்றி அவ்வளவாக விமர்சனங்கள் இல்லை.

ஆனால், சம்யுக்தா வெளியேறும் முன்னரே சமூக வலைதளங்களில் அந்த எவிக்‌ஷன் குறித்த நிறையத் தகவல்கள் கசிந்தன. "நாமினேஷன் லிஸ்ட்டில் இருந்தவர்களில் ரமேஷ்தான் குறைவான ஓட்டுகள் வாங்கியிருப்பதால் அவர்தான் வெளியேறுவார்" எனப் பேசப்பட்டன.

பிக்பாஸ் - 'ஜித்தன்' ரமேஷ்
பிக்பாஸ் - 'ஜித்தன்' ரமேஷ்

ஆனால் வார இறுதி எபிசோடின் ஷூட்டிங்கில் கடைசி நிமிடத்தில் சம்யுக்தா எவிக்ட் ஆனார். சம்யுக்தாவின் எவிக்‌ஷனுக்கு கமலின் அழுத்தம் காரணம் என்றும் சொல்லப்பட்டது. வெளியில் வந்த சம்யுக்தாவிடம் பேசினோம்.

‘’ஷோவை நல்லா என்ஜாய் பண்ணேன். வித்தியாசமான அனுபவம். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி இருந்தாங்க. அந்த வீட்டுக்குள்ள வேல்முருகன் அண்ணா, சுரேஷ் சக்ரவர்த்தி ரெண்டு பேர் கூடயும் நல்லா பேசிட்டிருந்தேன். அதேநேரம் சுச்சிகிட்ட பழகக் கொஞ்சம் தயக்கம் இருந்தது.

நல்லா அன்பா இருப்பாங்க. அந்த டைம்ல ரொம்பவே நேர்மையா இருப்பாங்க. ஆனா திடீர்னு கோச்சுக்குவாங்க. அவங்க எதுக்காகக் கோபப்படுறாங்கனு என்னால புரிஞ்சுக்கவே முடியாமதான் இருந்தது. அவங்ககிட்ட கேம் பிளான் எதுவுமே இருந்த மாதிரி தெரியலை. அதனால அவங்க ஷோவுல இருக்கிறதைக் காட்டிலும் எவிக்‌ட் ஆகிப் போயிடலாமேனு நினைச்சிருக்கேன்.

பாலாஜி - ஷிவானி ஜோடியை அந்த வீட்டுக்குள் எல்லாருமே கலாய்க்கிறப்ப லவ் ஜோடிங்கிற மாதிரிதான் தெரியுது. ஆனா தனிப்பட்ட முறையில அவங்களுக்கிடையில என்ன மாதிரியான உறவுனு கருத்துச் சொல்ல நான் விரும்பலை.

மத்தபடி பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தவரைக்கும் நான் மகிழ்ச்சியாத்தான் இருந்தேன்’’ என்றவரிடம்,

சம்யுக்தா
சம்யுக்தா

’கலீஜ்’, ’வளர்ப்பு சரியில்லை’ ஆகிய வார்த்தைகள் குறித்துக் கேட்டதற்கு,

'‘அந்த வார்த்தைகளை வன்மத்துடன் நான் பேசலை. ‘கலீஜ்’ங்கிறது கெட்ட வார்த்தைன்னா அதை தமிழ் சினிமாவில் எல்லாம் பயன்படுத்தியிருக்காங்களே எப்படி?

’வளர்ப்பு சரியில்லை’ங்கிற வார்த்தையும் நொடியில் முணுமுணுத்துட்டே போயிட்ட வார்த்தை. அதுல எனக்கு உள்நோக்கம் கிடையாது’’ என்றார்.

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியில் வந்ததும் வேல்முருகனிடம் பேசிய சம்யுக்தா, "நீங்க சொல்லுங்கண்ணே, இந்த வார்த்தைகள் மோசமானவையா?" எனக் கேட்டாராம். "ஆணோ, பெண்ணோ பொதுவா பிள்ளைகளை வளர்க்கிறதுங்கிறது ஒரு பெண்ணின் கடமை. நீங்க ஒரு பெண்ணா இருந்து அந்த வார்த்தைகளைப் பயன்படுத்தியதாலதான் பெரிசாப் பேசப்பட்டது" என வேல்முருகன் சொன்னதும், அமைதியாகக் கேட்டுக் கொண்டாராம்.

ஆரி வெளியில் வந்ததும் சாம் மன்னிப்பு கேட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

அடுத்த கட்டுரைக்கு