Published:Updated:

பிக் பாஸ் - 21 | வேட்டையாடி விளையாடிய கமல்ஹாசன்… அபிஷேக்கை ஏன் மக்கள் வெறுக்கிறார்கள்?!

பிக்பாஸ் - 21 | கமல்ஹாசன்

மெல்ல மெல்ல அபிஷேக்கின் புளுகு அம்பலமாகும் போது “நெறைய காபி குடிச்சிட்டீங்க போலிருக்கே” என்று கமல் திருப்பி அடித்த டைமிங் டயலாக் ‘விருமாண்டி’ ரகம்.

பிக் பாஸ் - 21 | வேட்டையாடி விளையாடிய கமல்ஹாசன்… அபிஷேக்கை ஏன் மக்கள் வெறுக்கிறார்கள்?!

மெல்ல மெல்ல அபிஷேக்கின் புளுகு அம்பலமாகும் போது “நெறைய காபி குடிச்சிட்டீங்க போலிருக்கே” என்று கமல் திருப்பி அடித்த டைமிங் டயலாக் ‘விருமாண்டி’ ரகம்.

Published:Updated:
பிக்பாஸ் - 21 | கமல்ஹாசன்

‘’இதையெல்லாம் தட்டிக் கேட்க யாரும் வரமாட்டார்களா?” என்று மக்கள் கதறுவதைப் போல ஓர் உணர்ச்சிகரமான காட்சி பெரும்பாலான திரைப்படங்களில் வரும். ஹீரோ அப்படியொரு அட்டகாசமான என்ட்ரி தரும் போது தியேட்டரில் விசில் பறக்கும். இந்த Catharsis உணர்வை நேற்றைய எபிசோட் அழுத்தமாக தந்தது. இதற்கான ட்ரெய்லர் போல ப்ரமோக்களில் கமல் பேசிய காட்சிகளைப் பார்த்தபோது ‘இருக்கு… இன்னிக்கு ஒரு தரமான சம்பவம் இருக்கு’ என்று தோன்றியது.

ஆனால், ப்ரமோவில் மட்டும் பாம்பு-கீரி சண்டையைக் காட்டி விட்டு மெயின் எபிசோடில் பூனை சோம்பலாக தூங்குவதைக் காட்டுவது பிக்பாஸிடம் எப்போதும் உள்ள ஒரு கெட்ட வழக்கம். அப்படியாகி விடுமோ என்று தோன்றியது. போலவே ப்ரமோக்களில் வீரம் காட்டி விட்டு மெயின் நிகழ்ச்சியில் விளக்கெண்ணையில் வெண்டைக்காய் வதக்குவதும் கமலின் பழக்கம். ஆனால் அந்தச் சந்தேகங்களையெல்லாம் துடைத்து எறிவது போல இந்த எபிசோட் கரம் மசாலாவாக அமைந்து விட்டது. ‘வேட்டையாடி விளையாடி’ விட்டார் கமல்.

நான் முன்பே சொன்னதுதான். தனது வலைக்கு அருகே பூச்சி வரும் வரை பொறுமையாக காத்திருக்கும் சிலந்தியைப் போன்ற ஸ்டைல்தான் கமலுடையது. எதிராளியை பேச விட்டு பிறகு அடுத்தடுத்த வாரங்களில் பொறுமையாக ‘வெச்சு’ செய்வார். ஒருவர் தவறு செய்யும் போது அடுத்த நிமிடமே “ஏண்டா உனக்கு அறிவில்லே?” என்று உடனே திட்டி விட்டால் அது அப்போதைக்கு பரபரப்பை ஏற்படுத்தலாம். ஆனால் சுவாரஸ்யமாக இருக்காது. மாறாக இரை அங்கும் இங்கும் நகர முடியாத சூழலை ஏற்படுத்தி விட்டு வேட்டையாடும் சுகமே தனி. ‘வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல’ கமல் கேட்கும் கேள்விகள்தான் கேட்கப்படுபவருக்கும் பார்ப்பவருக்கும் அதிக சுவாரசியத்தைத் தரும்.

அந்த வகையில் நேற்றைய எபிசோடை ‘One of the best’ எனலாம். கமலின் குறும்பு, வார்த்தை விளையாட்டு, நையாண்டி, மென்மையான கடுமை போன்றவை சரியான கலவையில் வெளிப்பட்டன. குறிப்பாக மெயின் வில்லர்களான பிரியங்காவும் அபிஷேக்கும் சரியான பதத்தில் கச்சிதமாக வறுக்கப்பட்டார்கள். அவர்களுக்கு எங்கேயெல்லாம் காயம் ஏற்பட்டது என்பதை அவர்களாலேயே சொல்ல முடியாது. அப்படியொரு வர்மஅடியை தந்தார் ‘இந்தியன்’ தாத்தா.

பிக்பாஸ் - 21 |
பிக்பாஸ் - 21 |

எபிசோட் 21-ல் என்ன நடந்தது?!

‘‘சீசன் 5 ஆரம்பிச்சு மூணு வாரம் கூட ஆகலை. இவனுங்க என்னமோ முப்பது வாரம் ஆன மாதிரியான ஸ்பீட்ல போயிட்டு இருக்காங்க. பிறவி வில்லன்கள் மாதிரி ‘டேய்... நீ போய் அவனை போட்டுத் தள்ளிடு’ன்ற மாதிரி சதித்திட்டங்கள் போட்டுக்கிட்டு இருக்காங்க. வாங்க… என்னன்னு போய் விசாரிப்போம்’’ என்பது மாதிரியான பொழிப்புரையுடன் அகம் டிவிக்குள் சென்றார் கமல்.

வெள்ளிக்கிழமை நிகழ்வுகள் காட்டப்பட்டன. பெண்கள் சமையல் அறையில் பல நூற்றாண்டுகளாக அடைபட்டிருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் இதற்கு இன்னொரு கோணமும் இருக்கிறது. சமையலறை என்பதும் ஓர் அதிகாரம்தான். ஏனெனில் அங்கு தயாரிக்கப்படும் உணவுகளின் தேர்வு, ருசி, பதம் போன்றவற்றை கிச்சன் கேபினெட் திட்டமிடுவதால் குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே அவரைச் சார்ந்திருக்கிறார்கள். இந்த வகையில் ஒவ்வொரு குடும்பத்திலும் சமையல்அறை என்பது ஓர் அதிகாரமையமாக இருப்பதை நடைமுறையில் பார்க்கலாம்.

தாமரையின் சமையலுக்கு கிடைத்த பாராட்டு இதைத்தான் காட்டுகிறது. “இதுக்காகவே உன்னை மக்கள் நூறுநாள் வெச்சு அழகு பார்க்கப் போறாங்க.. சமையல் மிகச் சிறப்பு” என்று தட்டை வழித்து நக்கிக் கொண்டே தாமரையைப் பாராட்டினார் பிரியங்கா. இந்த விவாதம் அப்படியே வளர்ந்து மெல்லிய சர்ச்சையாக மாறியது.

பிக்பாஸ் வீட்டில் தயாரிக்கப்படும் உணவுகளின் மீது தனது தனிப்பட்ட விமர்சனங்களை சமையல் செய்பவரிடம் தனியாகச் சென்று சொல்வது இமானின் வழக்கம் போலிருக்கிறது. ‘’அது ஒண்ணும் இல்லம்மா… அந்த ரசத்துல கொஞ்சம் உப்பு போட்டிருந்தியன்னா இன்னமும் நல்லா இருந்திருக்கும்” என்பது மாதிரியான விமர்சனம். “பதினெட்டு பேருக்கு சமைச்சுப் பாருங்க. அப்பத்தான் அந்த வலி தெரியும்” என்பது போல் பிரியங்காவும் பாவனியும் இதற்கு சபையில் பதில் அளித்தார்கள். உண்மைதான் வெவ்வேறு ரசனைகள், ருசிகள் கொண்ட மனிதர்கள் இருக்கும் கூட்டத்தில் அனைவருக்கும் பிடித்த மாதிரியாக சமைக்க முடியாது.

ஆனால், இமான் சொன்னது என்னவென்றால், “ஏன் இப்படி சமையல் மோசமா இருக்கு?” என்கிற புகார் அல்ல. “இப்படி இருந்தா நல்லா இருக்குமே” என்கிற விமர்சனம் மட்டுமே. “உப்பு இல்லைன்னு சொல்றதுக்கு சமைக்கத் தெரியணுமா?” என்று அண்ணாச்சி கேட்ட லாஜிக் சிரிக்க வைத்தது. சிலருக்கு சமைக்கத் தெரியாது என்றாலும் கேள்வி ஞானத்தில் பலவற்றை அறிந்திருப்பார்கள்.

பிக்பாஸ் - 21 |
பிக்பாஸ் - 21 |

பிரியங்கா சார்பாக அபிஷேக்கும் இமான் சார்பாக ராஜூவும் களத்தில் இறங்கி விவாதிக்க உரையாடலில் மெல்ல சூடு ஏறியது. “நீ அவரை ஏத்தி விடாதே” என்று ராஜூவிடமும் “நான் என்ன பேசணும்னு நீங்க முடிவு பண்ணுவீங்களா?’’ என்று இமானிடமும் அபிஷேக் கேட்டது கொடூரமான காமெடி. ஏனெனில் வந்த நாளில் இருந்து அபிஷேக் செய்து கொண்டிருப்பது இதைத்தான். தான் நாள் முழுவதும் செய்து கொண்டிருப்பதை ‘செய்யாதே’ என்று மற்றவருக்கு உபதேசிப்பது முறையல்ல. ‘’சரிப்பா... தெரியாம சொல்லிட்டேன். மன்னிச்சுக்கங்க” என்று இமான் கேட்டவுடன் விவாதம் முடிவுக்கு வந்தது. (‘’பஞ்சாயத்தாடா இது... பஞ்சாயத்தே இல்லைடா… அந்தப் பய வேணும்னுட்டே பண்றான்டா” என்று சிவாஜி சொல்லும் ‘தேவர் மகன்’ காட்சிதான் நினைவிற்கு வந்தது).

இதே சமையல் விஷயம் தொடர்பாக இன்னொரு மெல்லிய சர்ச்சையும் எழுந்தது. லக்‌ஷுரி பட்ஜெட்டிற்கான பொருட்களைத் தேர்ந்தெடுக்கும் போது அசைவம் சார்ந்த பொருட்களே அதிகம் தேர்ந்தெடுக்கப்பட்டதை பிரியங்கா பலமாக ஆட்சேபித்தார். இந்த நோக்கில் அவரது ஆட்சேபம் நியாயமானதே. அசைவம் x சைவம் என்கிற உணவுப்பழக்கம் இருப்பவர்களின் இடத்தில் சரிவிகிதமான உணவு கிடைக்கிறதா என்பதைப் பார்த்துக் கொள்வது அனைவரின் கடமை. இவர்கள் இதை முன்பே திட்டமிட்டுக் கொண்டிருந்திருக்கலாம். தனக்கு பரிசாக கிடைத்த நாலு துண்டு சிக்கனை அனைவரிடமும் பகிர்ந்துண்ண நினைத்தது சிபியின் நல்ல பண்பை காண்பித்தது.

“ஏம்மா… எல்லோரும் தாமரையைக் காப்பாத்தணும்னு போராடினீங்களே… நீங்க உங்க காயினை அவிய்ங்களுக்கு கொடுத்திருக்கலாமே” என்று பாவனியிடம் இமான் சர்காஸ்டிக்காக கேட்ட போது “எனக்கும் பவர் வேணுமில்ல. நான் இந்த விளையாட்டை ஆடணும்” என்று பாவனி சொன்னது, அவர் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் ‘பாவ’ முகத்தை விடவும் அதிகம் விவரமானவர் என்பதை அம்பலப்படுத்தியது.

அகம்டிவி வழியாக உள்ளே வந்த கமல் “காயினை மொதல்ல எடுத்தவங்க வேற. ஆனா இப்ப கைல வெச்சிருக்கவங்க வேற.. எப்படி இந்த டிராவல் நடந்தது? யார் யாருல்லாம் ‘காயின் எனக்கு வேணும்னு விளையாண்டது... யார் யாரெல்லாம் மத்தவங்களுக்காக விளையாண்டது’’ என்று தன் விசாரணையை ஆரம்பித்தார். தனது இந்த விசாரணையின் மூலம் போட்டியாளர்களின் பாசாங்குகளை அம்பலப்படுத்துவதுதான் கமலின் நோக்கம். பெரும்பாலான பொதுநலத்தை சுரண்டிப் பார்த்தால் அதன் அடிப்படையில் சுயநலம்தான் இருக்கும்.

“தாமரையைக் காப்பாத்தணும்-னு அவ்ள போராடினீங்களே. அவ்வளவு நல்லவங்களா நீங்க?” என்றுதான் கமல் கேட்க விரும்பினார் என்று தோன்றுகிறது. “எனக்காக விளையாடினேன்” என்று ஒரளவுக்கு நேர்மையாக ஒப்புக் கொண்டவர் ஐக்கி மட்டுமே. “எனக்கு காயின் முக்கியமில்ல. அந்த விளையாட்டு தர்ற சந்தோஷம்தான் முக்கியம். இதுக்காக மத்தவங்களை மூளைச்சலவை உள்ளிட்டு பல விஷயங்களைச் செய்வேன்” என்று வாக்குமூலம் தந்தார் அபிஷேக்.

பிக்பாஸ் - 21 |
பிக்பாஸ் - 21 |

‘தாமரையைக் காப்பாற்றும் திட்டம்’ என்பது அக்கறையால் உருவானதா, தியாகமா’ என்கிற கேள்விக்கு ராஜூ விளக்கம் தர முயலும் போது ‘இது உங்களுக்கானதில்லை. மத்தவங்களைக் கேக்கறேன்” என்று ஒரு குறிப்பு தந்தார் கமல். அவரின் இந்த சூட்சுமமான குறிப்புகளை போட்டியாளர்களும் கச்சிதமாகப் புரிந்து கொண்டால் ஆட்டம் இன்னமும் சுவாரசியமாகும். ஆனால் பலரும் ‘கமல் கேட்கிறாரே’ என்று பயந்தோ என்னமோ.. தேவையில்லாத பதட்டங்களையும் பதில்களையும் அடுக்குகிறார்கள். கமலின் அந்தக் கேள்விக்கு ராஜூ நிகழ்ச்சியிலேயே பதில் தந்து விட்டார். இது அவர் நினைவில் இருந்திருந்தால் கமலின் கேள்விக்கு ஒரு நமட்டுச்சிரிப்பை மட்டுமே பதிலாக அளித்திருப்பார்.

“இந்த ஆட்டத்தை நேர்மையாகவும் விதிகளை மீறாமலும் சரியாகவும் ஆடுகிறவராக நீங்கள் தென்படுகிறீர்கள்” என்று கமல் ராஜூவை பாராட்டியது நல்ல காட்சி. பெரும்பான்மையான மக்கள் என்ன நினைக்கிறார்களோ, அதைப் பிரதிபலிப்பதும் ஒரு நிகழ்ச்சியின் சுவாரசியத்திற்கு அடிப்படை. ஆனால் இது நேர்மையான பிரதிபலிப்பாக இருக்க வேண்டும். மெஜாரிட்டிக்கு மாற்றான கருத்துக்களையும் பிக்பாஸ் மேடையில் கமல் சில முறை துணிச்சலாக வலியுறுத்திப் பேசியிருக்கிறார்.

கமலின் அடுத்த கேள்வி. “தாமரை, இசை, சின்னப்பொண்ணு போன்றவர்கள் ஏன் தனக்காக தானே விளையாடவில்லை? அடுத்தவர்களின் அனுதாபத்தை ஏன் எதிர்பார்க்கிறார்கள்?” என்பது. இதுவொரு முக்கியமான கேள்வி. “இந்த வாரம் மட்டும் என்னைக் காப்பாத்தி விட்டுருங்கண்ணா’ என்று இமானிடமும் ராஜூவிடமும் கெஞ்சிக் கொண்டிருந்தார் இசை. இது அவசியமே இல்லை. பாவனியால் இந்த விளையாட்டை திறமையாக முடியும் என்றால் இசையாலும் முடியும். இதற்கான உத்திகளை அவர் வகுக்கலாமே ஒழிய, ஒரு விளையாட்டில் மற்றவர்களைச் சார்ந்து நிற்கக்கூடாது. இதை கமல் அழகாக சுட்டிக் காட்டினார்.

ஒருவர் பதிலளிக்கும் போது அதிலிருந்து ஒரு வார்த்தையை கச்சிதமாகப் பொறுக்கிக் கொண்டு அடுத்த கேள்வியை கேட்பதற்கான உத்தியாக அந்த வார்த்தையை கமல் பயன்படுத்தும் அழகை நிறைய கவனிக்கலாம். “இது குழந்தைகள் நிகழ்ச்சியாக இருந்தால் இமான் அண்ணாச்சி ஜெயிச்சுடுவார்” என்று அபிஷேக் சொல்லிக் கொண்டிருந்த போது “குழந்தைன்னவுடனேதான் ஞாபகம் வருது. குழந்தைகளையெல்லாம் வேலைக்கு வெச்சிருக்காங்கன்னு சொன்னீங்களா?” என்று அடுத்த கிடுக்கிப்பிடியைப் போட்டார் கமல். “ஆட்டம்னு வந்தா நான் அதில் மூழ்கிடுவேன்” என்று அபிஷேக் சொல்ல” பாத்திரத்தோடு பாத்திரமா ஒன்றிடுவேன்னு சொல்றீங்களா?” என்று நக்கலடித்தார் கமல். (நீ படிக்கற ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்டா!).

“உங்க திட்டப்படி மத்தவங்க ஆடணும்னு நெனக்கறீங்களா?” என்று கமல் கேட்ட போது ‘‘அது என்னோட ஸ்டைல் சார்” என்று அபிஷேக் சொன்னதை புரிந்து கொண்ட கமல் “அவங்கவங்க கேமை அவங்கங்க ஆடுங்க” என்று தந்த டிப்ஸ் அற்புதம். பெரும்பாலோனோர் மகுடி முன் ஆடும் பாம்பு மாதிரி அபிஷேக் சொல்வதைக் கேட்கும் போது “நீ மூடிட்டு உன் வேலையைப் பாரு” என்று சுருதி சொன்னதுதான் இந்த ஆட்டத்தின் போக்கை சுவாரசியமாக்குகிறது. இந்த வீட்டில் மூன்று வகையான அணிகள் இருப்பதை விசாரணை சபையில் துணிச்சலாக அம்பலப்படுத்தியவரும் சுருதிதான். அந்த வகையில் இவர் இந்த ஆட்டத்தில் தொடர வேண்டும் என்று நினைக்கிறேன்.

பிக்பாஸ் - 21 |
பிக்பாஸ் - 21 |

“தாமரையையும் இசையையும் காப்பாற்ற போட்டியாளர்கள் படும் சிரமங்கள் மக்களையும் தொத்திக்கிச்சுன்னு நெனக்கறேன். உங்களைக் காப்பாத்திட்டாங்க” என்கிற தகவலைக் கேட்டதும் ‘ஹே... ஹே...’ என்று குதித்தார் இசை. இப்படி ஒவ்வொரு வாரமும் அவர் மற்றவர்களால் காப்பாற்றப்பட வேண்டும் என்று எதிர்பார்க்காமல் சுயமாக ஆட்டத்தில் இறங்குவது அவசியம். தாமரையின் துணிச்சல் கூட இன்னமும் இசையிடம் வரவில்லை. (யக்கோவ்… இன்னும் நல்லா கொரல் குடுக்கா!). தான் காப்பாற்றப்பட்டதை அறிந்ததும் தனிமையில் நடனம் ஆடிச் சென்ற தாமரையின் உடல்மொழியைக் கவனிப்பது சுவாரசியமாக இருந்தது. அவரும் பிரியங்கா போன்றவர்களைச் சார்ந்திருக்காமல் சுயமான ஆட்டத்தை ஆட வேண்டியது அவசியம்.

பிரியங்கா சின்னப்பொண்ணுவை சோதித்த விவகாரம் அடுத்து விசாரணைக்கு வந்தது. சமூகவலைத்தளங்களில் வெளியாகும் விமர்சனங்கள் கமலின் பார்வைக்கு பரவலாக வருகிறது என்பதை ஒவ்வொரு சீசனிலும் உணர முடிகிறது. (குறிப்பாக விகடன் கட்டுரைகளை அவர் நேரடியாகவே படிக்கிறார் என்பதே என் யூகம்… ஹிஹி). ‘மதுமிதாதான் இந்த சீசனோட லாஸ்லியா’ என்று அபிஷேக் சொன்ன வசனம் சட்டென்று சில மைக்ரோ நொடிகளில் கடந்து போயிற்று. இந்த விஷயம் சம்பந்தப்பட்ட நாளின் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை கமலும் குறிப்பிட்டார். (Blowing the own trumpet என்பது சில சமயங்களில் அவசியம்).

சின்னப்பொண்ணுவை சோதனை செய்ததின் மூலம், பிரியங்கா செய்தது நுண்ணுணர்வற்ற, அநாகரிகமான சமாச்சாரம் என்பதை தன்னுடைய சொந்த அனுபவம் முதற்கொண்டு பல்வேறு விதங்களில் கமல் உணர்த்த வேண்டியிருந்தது. ஒரு சராசரி நபரை விடவும், ஊடக அனுபவம் அதிகமுள்ள பிரியங்காவுக்கு இது நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும். “மத்தவங்க சொன்னாங்க, கேமிற்காக செய்தேன், அக்காவோட அனுமதியோடதான் செஞ்சேன்” என்று பிரியங்கா சொல்வதெல்லாம் சால்ஜாப்பு மட்டுமே. தன்னுடைய மேட்டிமைத்தனத்தை ‘அறியாமை’ என்னும் முகமூடியால் பிரியங்கா மறைக்க விரும்புகிறார் என்பது அம்பலமாகியது. அக்ஷரா மீதுள்ள காண்டுதான் சின்னப்பொண்ணுவை சோதிக்கும் அளவிற்கு பிரியங்காவை கொண்டு சென்றது. விளையாட்டு ஆர்வம் அல்ல.

‘உங்களுக்கு கோபம் வரலையா?” என்று சின்னப்பொண்ணுவிடம் கமல் கேட்ட போது ‘ஹிஹி. கேம்தானே’ என்று அவர் சொன்னது சகிக்க முடியாத விஷயம். சில ஆதாரமான விஷயங்களைப் புரிந்து கொள்ள நகரத்து வாசியாகவோ, படித்தவராகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. தாமரை சொன்ன ஒரு சிறிய ஒப்பீட்டிற்காக கோபித்துக் கொண்டவர், ஒரு விழாவில் தான் பாடுவதற்கு முதலில் அழைக்கப்படவில்லை என்பதற்காக கோபித்துக் கொண்டவருக்கு இதுவும் நிச்சயம் கோபத்தையோ, ஆட்சேபத்தையோ எழுப்பியிருக்க வேண்டும்.

பிக்பாஸ் - 21 |
பிக்பாஸ் - 21 |

எழுத்தின் மூலம் அக்ஷரா செய்தி அனுப்பினார் என்கிற பிரியங்காவின் குற்றச்சாட்டை “நீங்களும் அந்த மாதிரி எதுவும் செய்யலையா... விமர்சகர்கள் முன்மாதிரியா இருக்க வேண்டாமா?” என்ற போது பார்வையாளர்களின் கைத்தட்டல் (பதிவு செய்யப்பட்ட சத்தம்) கேட்டதும் பிரியங்காவின் முகம் அலங்கோலமாக மாறியது. “ஓ.. நிரூப் கைல எழுதினத சொல்றீங்களா..?” என்று அசடு வழிந்தார் பிரியங்கா. “எல்லாத்தையும் சபையில் சொல்ல முடியாது” என்று அவர் லாஜிக் பேசுவது சரி. அது இருவரின் தனிப்பட்ட விஷயம். ஆனால் தானே பல விதிமீறல்களை செய்து கொண்டு மற்றவருக்கு பிரியங்கா உபதேசம் செய்வது அராஜகம். மறுபடியும் அதேதான். அக்ஷராவின் மீதுள்ள பொறாமைதான் இதற்கு காரணம்.

ஒருவழியாக பிரியங்கா மன்னிப்பு கேட்பதற்காக கமல் பல வார்த்தைகளை, நிமிடங்களை செலவழிக்க வேண்டியிருந்தது. பிறகு கூட பிரியங்கா கேட்டது ஒரு சம்பிரதாய மன்னிப்பு என்பது அடுத்த நிமிடத்திலேயே அம்பலமாகியது. “இனிமே அக்ஷரா எழுதட்டும். வரையட்டும்... எனக்கென்ன?” என்று விசாரணை இடைவேளையில் அனத்திக் கொண்டிருந்தார்.

பிரியங்கா மீதான வறுவல் முடிந்ததும் அடுத்த டார்கெட்டான அபிஷேக்கை குறிவைத்தார் கமல். இது தரமான சம்பவமாக இருந்தது. ‘’நெஜம்மாவே இதுக்கு முன்னால் நீங்க பிக்பாஸ் பார்க்கலையா?” என்பதை வெவ்வேறு விதங்களில், நையாண்டியான உடல்மொழியில் கமல் கேட்டது சுவாரசியமான காட்சி. இதற்கு அபிஷேக் சமாளிக்கும் போது செய்த கோணங்கித்தனங்களை, முகபாவங்களை பாருங்கள். ‘வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு’' என்கிற பழமொழியையே அபிஷேக்கின் தடுமாற்றம் நிரூபித்தது.

ஒரு பொய்யைச் சொல்லி விட்டு அபிஷேக் ஏன் இப்படித் தடுமாற வேண்டும். “ப்ரமோ மட்டும் பார்த்திருக்கேன். உங்க டிரஸ்ஸூக்காக பார்த்தேன்… நண்பர்களோடு காபி குடிக்கும் போது சும்மா பேசுவோம் இல்லையா… அதுக்கு பயன்படும்னு பார்த்தேன்” என்று மெல்ல மெல்ல அபிஷேக்கின் புளுகு அம்பலமாகும் போது “நெறைய காபி குடிச்சிட்டீங்க போலிருக்கே” என்று கமல் திருப்பி அடித்த டைமிங் டயலாக் ‘விருமாண்டி’ ரகம்.

அடுத்ததாக அக்ஷராவுக்கும், பாவனிக்கும் நிகழ்ந்த cat fight. “நீங்கள் இருவரும் காப்பாற்றப்பட்டீர்கள்” என்பதைத்தான் கமல் சொல்ல முயன்றார். அதற்கான லீடை எடுத்தார். ஆனால் அக்ஷராவும் பாவனியும் அதற்கு இடம் கொடுக்கவேயில்லை.

மன்னிப்பு கேட்டு பேசுவதற்காக பாவனி முன்வரும் போது அக்ஷரா அதை ஏற்றுக் கொள்வதுதான் பெருந்தன்மையும் அடிப்படை நாகரிகமும். ‘இதுதான் என் குணாதிசயம்’ என்று அழிச்சாட்டியம் பிடிப்பதற்கு இது அவர் வீடல்ல. பிக்பாஸ் வீடு. இதனால் அம்பலப்படப்போவது அவர்தான். இப்படியாக பல முகமூடிகள் வரும் வாரங்களில் கழன்று விழும் என்று எதிர்பார்ப்போம்.

இன்று ஒளிபரப்பாகவிருக்கும் நிகழ்ச்சியில் ‘யார் எலிமிஷேன்?’ என்பது தெரிந்து விடும். ‘சின்னப்பொண்ணு’ காப்பாற்றப்பட்டு ‘அபிஷேக்’ எலிமினேட் ஆகியிருக்கிறார் என்கிறதொரு தகவல் (வழக்கம் போல்) கசிந்திருக்கிறது. அபிஷேக்கின் செயல்பாடுகள் நமக்கு கோபத்தையும் எரிச்சலையும் வரவழைத்திருக்கலாம். ஆனால் இந்த ஆட்டம் சுவாரஸ்யமாக இருப்பதற்கு அபிஷேக்கின் இருப்பு அவசியம். மாறாக சின்னப்பொண்ணு வெளியேறினால் அதனால் எந்தப் பாதிப்பும் வந்து விடாது. அப்போதைக்கு கோபப்பட்டாலும் வாக்களிக்கும் போது மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டும். நம்பியார் இல்லையென்றால் எம்ஜிஆர் இல்லை என்பது எளிமையான தத்துவம்!

எதிர்பார்ப்போம்!