Published:Updated:

பிக் பாஸ் - 6 | ஒரு அர்த்தமற்ற சிரிப்பு… ஒரு கோபம்… ஒரு மன்னிப்பு… இரண்டு கிளாஸ் டீயோடு க்ளைமாக்ஸ்!

பிக் பாஸ் - 6 |

அந்தப் பக்கம் கடந்து போன நமீதாவைப் பார்த்து “யம்மாடி கொஞ்சம் உக்காரு...” என்று நாட்டாமையாகும் முஸ்தீபுடன் பெட்ஷீட், சொம்பு எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு உட்கார “மன்னிச்சுடுங்க... இப்ப பேசப் பிடிக்கல’ என்றபடி கடந்து போனார் நமீதா. (நாட்டாமை ரோலும் போச்சா?!).

பிக் பாஸ் - 6 | ஒரு அர்த்தமற்ற சிரிப்பு… ஒரு கோபம்… ஒரு மன்னிப்பு… இரண்டு கிளாஸ் டீயோடு க்ளைமாக்ஸ்!

அந்தப் பக்கம் கடந்து போன நமீதாவைப் பார்த்து “யம்மாடி கொஞ்சம் உக்காரு...” என்று நாட்டாமையாகும் முஸ்தீபுடன் பெட்ஷீட், சொம்பு எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு உட்கார “மன்னிச்சுடுங்க... இப்ப பேசப் பிடிக்கல’ என்றபடி கடந்து போனார் நமீதா. (நாட்டாமை ரோலும் போச்சா?!).

Published:Updated:
பிக் பாஸ் - 6 |

பிக்பாஸ் சீசன் 5-ன் முதல் சர்ச்சை வெற்றிகரமாகத் தொடங்கியது. ஆனால், இது அன்றைய இரவிலேயே முடிந்த விதம் இருக்கிறதே... அற்புதம். ‘மன்னிப்பு’ என்கிற தலைப்பில் ஒரு குறும்படமாகவே இதைப் போட்டு விடலாம். நமீதாவுக்கும் தாமரை செல்விக்கும் இடையில் நிகழ்ந்த மனஸ்தாபம் தொடர்பாக முதலில் கோபப்பட்டாலும் இறுதியில் தன் அன்பால் அதை கழுவிக் கரைத்து விட்டார் நமீதா.

என்ன சர்ச்சை அது?

நான்காம் நாளின் நிகழ்வுகள் தொடர்ந்தன. ஒரு வெள்ளந்தியான கிராமத்து மனுஷியை பிக்பாஸ் வெகுவாக மாற்றி விட்டுத்தான் வெளியே அனுப்பும் போலிருக்கிறது. அங்குள்ளவர்களின் நடை, உடை, பாவனைகளை தாமரை செல்வி ஒருவித ஏக்கத்துடன் கவனிப்பதை உணர முடிகிறது. ‘RAMP WALK எப்படி நடப்பது?’ என்பதை தாமரை செல்விக்கு கற்றுத் தந்து அழகு பார்த்தார்கள்.

பிறகு பிரியங்கா தலைமையிலான குழு, மாஃபியா விளையாட்டை ஆடியது. அப்போது தாமரைசெல்வி அடித்த கமென்ட்டும் உடல் அசைவும் நமீதாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது போல. தனது ஆட்சேபத்தை சற்று கடுமையான தொனியில் வெளிப்படுத்தினார் நமீதா. அப்போதே தாமரை இதைப் புரிந்து கொண்டு அமைதியாகி இருக்க வேண்டும். அதிலும் பிக்பாஸ் எனும் ரத்தபூமியில் ஒவ்வொரு அசைவையும் சூதானமாக நிகழ்த்த வேண்டும் என்பது அம்மணிக்குப் புரியவில்லை. தொடர்ந்து சிரித்துக் கொண்டிருந்தார்.

பிக் பாஸ் - 6 |
பிக் பாஸ் - 6 |

“ஆட்டம் நடந்து முடிஞ்சிருச்சு... அப்ப சிரிச்சோம். ஓகே... இப்பவும் நீ விடாம சிரிச்சிட்டே இருக்கே... மத்தவங்களை வெறுப்பேத்துற மாதிரி சிரிக்கிறே... போதும்” என்று பிரியங்கா எச்சரித்ததும் தாமரைக்குப் புரியவில்லை. சிரிக்க ஆரம்பித்தால் அவரால் நிறுத்த முடியாது போலிருக்கிறது. நள்ளிரவிலும் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தார். “என்னா... நீ அந்நியன் மாதிரி பிஹேவ் பண்றே... இதான் உன் ஸ்ட்ராட்டஜின்னா நல்லாப் பண்றே’ என்று மீண்டும் எச்சரித்தார் பிரியங்கா. (‘அந்நியயன்' என்கிற வார்ததையைக் கேட்டதும் தனது கூந்தலை உதறிக் கொண்டு அந்த இரவில் எழுந்து உலாவிய நீரூப்பைக் காண சட்டென்று பயமாகவே இருந்தது! வடிவேலு மொழியில் சொன்னால் “ஏன்டா பயமுறுத்தறே?”).

தாமரை முழுக்க முழுக்க அப்பாவியா... அல்லது அவருக்குள் ஒரு ‘அடப்பாவி’ ஒளிந்திருக்கிறாரா என்று தெரியவில்லை. அவரது தொடர்ந்த சிரிப்பு நமீதாவை இன்னமும் கோபப்படுத்த “பேசத் தெரிஞ்சா பேசுங்க... இல்லாட்டி நான் அசிங்க அசிங்கமா பேசுவேன்” என்று கடுப்பாக தொடங்கிவிட்டார். அப்போதுதான் தாமரைக்கு சூழ்நிலையின் தீவிரம் புரிந்து அழுகையுடன் ‘மன்னிச்சுடுங்க” என்று கெஞ்ச ஆரம்பித்து விட்டார். ஆனால் நமீதாவின் அப்போதைய மனநிலையில் மன்னிக்கத் தயாராக இல்லை.

நமீதா கோபப்படும் அளவுக்கு என்னதான் நடந்தது? RAMP WALK-ன் போது “நீ எல்லோரையும் மயக்குற... எப்படி மயக்குறதுன்னு எனக்கும் சொல்லிக் கொடு” என்று நமீதாவிடம் தாமரை சொல்லி விட்டார் போலிருக்கிறது. இதைப் போலவே இன்னொரு தருணத்தில் ‘நீ நாற்பது என்ன.. நானூறு குழந்தைகளைக் கூட வளர்ப்பே” என்று தாமரை சொல்ல அதுவும் நமீதாவின் கோபத்துக்கு காரணமாகி விட்டது. இந்த விவகாரத்தைப் பற்றி பின்னர் பிரியங்கா மற்றும் நிரூப்பிடம் விளக்கிக் கொண்டிருந்தார் நமீதா. அப்போதுதான் இந்தச் சண்டையின் கதை, வசனம் சற்றாவது நமக்குப் புரிந்தது.

பிக் பாஸ் - 6 |
பிக் பாஸ் - 6 |

கிராமத்து மனிதர்கள் கிளுகிளுப்பான பாலியல் விஷயங்களைக் கூட வெளிப்படையாக பேசி சிரிப்பார்கள். இது கிராமத்து கலாசாரங்களில் ஒன்று. அதில் பெரும்பாலும் வெளிப்படையான கிண்டல் இருக்குமே ஒழிய வன்மம் இருக்காது. அதிலும் தாமரை ஒரு கூத்துக் கலைஞர். “நான் மேடையில் ஆபாசமாக உடுத்த மாட்டேன், பேச மாட்டேன்’ என்று அவர் சொல்லியிருந்தாலும் அப்படியான கிண்டல் தொனி அவரது பேச்சில் தன்னிச்சையாக வந்திருக்கலாம். ஆனால், அடக்க முடியாமல் அவர் தொடர்ந்து சிரித்ததுதான் நமீதாவை கொலைவெறியாக்கி விட்டது.

ஐந்தாம் நாள் விடிந்தது. ‘’எட்டணா இருந்தா எட்டூரும் எம்பாட்டை கேட்கும்’’ என்கிற பாடல் ஒலித்தது. என்னடா. இது இத்தனை பழைய பாட்டைப் போடுகிறார்களே என்று பார்த்தால்... ‘‘ஊரே ரெண்டு பட்டு போகும்’’ போன்று அதில் வந்த வரிகள் சூழலுக்குப் பொருத்தமாக இருக்கும் என்று பிக்பாஸ் நினைத்தாரோ என்று தோன்றியது. இதே பாடலில் ‘‘எலியப் புடிச்சி… நீயும் வேஷம் போட்டுக் காட்டு… அதையும் பார்க்க… பத்து பேரு கூடுவான்’ போன்ற வரிகளும் வருகின்றன. (சேம் சைட் கோல் பிக்பாஸ்!).

“நான் விளையாட்டாதான் சிரிச்சேன்” என்று காலையில் இமானிடம் விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தார் தாமரை. ‘’சரி விடு... உன் கிராமத்து மொழி அவங்களுக்குப் புரிஞ்சிருக்காது…” என்று சொன்ன இமான், அந்தப் பக்கம் கடந்து போன நமீதாவைப் பார்த்து “யம்மாடி கொஞ்சம் உக்காரு...” என்று நாட்டாமையாகும் முஸ்தீபுடன் பெட்ஷீட், சொம்பு எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு உட்கார “மன்னிச்சுடுங்க... இப்ப பேசப் பிடிக்கல’ என்றபடி கடந்து போனார் நமீதா. (நாட்டாமை ரோலும் போச்சா?!).

‘’பாவனி என் அக்கா... பிக்பாஸ் என் பெரியப்பா... பிரியங்கா என் அத்தை’’ என்று எல்லோரிடமும் உறவுமுறை கொண்டாடிக் கொண்டிருந்தார் உலக விமர்சகர் அபிஷேக். ஆனால் சுருதி மட்டும் ‘கிளாஸ்மேட்டாம்’. (பயபுள்ள ஏதோ பிளானோட இருக்கார் போல!). பிரியங்கா, அக்ஷரா, ராஜூ ஆகியோரின் உடல்மொழி எப்படியிருக்கும் என்பதை வேடிக்கையாக செய்து காட்டிக் கொண்டிருந்தார் இமான். நன்றாகவே இருந்தது. குறிப்பாக ராஜூவின் திருதிருமுழியை உருட்டிக் காட்டியது சி(ற)ரிப்பு.

பிக் பாஸ் - 6 |
பிக் பாஸ் - 6 |

‘நின் பாதை முட்கனல்... நின் பாதம் தீக்கனல்’ என்கிற வரிகளோடு தன்னுடைய வாழ்க்கைப் பின்னணியை சொல்ல ஆரம்பித்தார் ஐக்கி. “எல்லோருக்குமே ஒவ்வொரு பிரச்னை இருக்கு. என் கதையும் அப்படித்தான். ஆனா ராணி மாதிரி வாழ்ந்துட்டு மேலே இருந்து கீழே விழுற அந்த வலியிருக்கே.. என்னைப் பெத்த அம்மாவே என்னை சுத்தமா விட்டுட்டாங்க. நான் தனியாத்தான் வாழுறேன். நடுவுல சில பேரு இருக்காங்க.. அவங்களாலதான் பிரச்னை. எங்க அம்மாவைப் பார்த்து எட்டு வருஷம் ஆச்சு. கோவிட் சமயத்துல கூட நான் தினமும் ஆஸ்பத்திரிக்கு போனேன். (ஐக்கி அடிப்படையில் ஒரு மருத்துவர்). ஆனா யாரும் என்னை விசாரிக்கலை” என்று தன் சொந்தக் கதையை சொன்ன ஐக்கி அடுத்ததாக கலை சார்ந்த பிரச்னைக்கு வந்தார்.

“நான் ஒரு rapper. என் லுக்கை பார்த்துட்டு கூப்பிடுறவங்க கூட நான் தமிழில் பாடுவேன்னு தெரிஞ்சப்புறம் வேண்டாம்னு ஒதுக்கிடுவாங்க. உலகத்திலேயே மூத்தகுடி தமிழ்தான். இந்த மொழியின் பெருமைகளைப் பற்றி நான் எழுதிய பாடல் ஹிட் ஆச்சு. என்னை மாதிரி தனியா வாழுற 15 பெண்களுக்கு ஆதரவு தருகிறேன்” என்ற ஐக்கி “நாங்கள் பறக்க நினைக்கிறோம். எங்களுக்கு நீங்கள் சிறகுகள் தர வேண்டாம். அதை உடைக்காமல் இருந்தால் போதும். சிறகுகளை நாங்கள் உருவாக்கிக் கொள்கிறோம்’’ என்று கவிதைத்தனமாக பேசி விட்டு ‘’எண்ணிய முடிதல் வேண்டும்’’ என்கிற பாரதியின் பாடல் வரிகளோடு தன் பேச்சை நிறைவு செய்தார்.

பிரியங்காவால் தனக்குள் இருக்கிற தொகுப்பாளரை கட்டுப்படுத்தவே முடியவில்லை போன்றிருக்கிறது. ஐக்கி பேசி முடித்ததும். ‘ஐக்கியோட.. பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோள்.. என்ன பிரச்னைனாலும் பேசி முடிங்க... ஐக்கியை அவங்க பெற்றோர்களோடு பிக்பாஸ் வீட்டில் நாங்க பார்க்கணும்” என்று ஹைடெஸிபலில் அறிவிப்பு தந்து கொண்டிருந்தார்.

“நான் உன்னை adopt பண்ணிக்கிறேன்” என்று ஐக்கியிடம் பாவனி ஜாலியாக பேசிக் கொண்டிருக்க “அடாப்ட்னா என்னது... அடாப்ட்னா என்னது சொல்லுத்தா…” என்று பாவனியை பேச விடாமல் உலுக்கிக் கொண்டிருந்தார் தாமரை செல்வி. இந்த வெகுளித்தனமும் நச்சரிப்பும் அவருக்கு நிறைய பிரச்னைகளை கொண்டு வந்து சேர்க்கும் என்பதை இப்போதே யூகிக்க முடிகிறது. (பார்த்து சூதானமா இருந்துக்க தாயி!).

பிக் பாஸ் - 6 |
பிக் பாஸ் - 6 |

“ஃபெமினிஸ்ட் என்றால் எப்போதும் இறுக்கமாக இருக்க வேண்டிய அவசியமில்லை” என்று பிறகு சுருதியிடம் ஐக்கி சொல்லிக் கொண்டிருந்தது நல்ல பாயின்ட். (இணையப் பெண்ணியர்கள் கவனிக்க!). “எங்க அப்பாதான் என்னை ஸ்டார் ஆக்கிப் பார்க்கணும்னு ஆசைப்பட்டாரு. பாட்டு, இசைன்னு எல்லா கிளாஸூக்கும் அனுப்பிச்சாரு... ஆனா அம்மாதான். அவங்களை abusive person-ஆக காட்ட பிடிக்கலை” என்று தொடர்ந்த ஐக்கி “நான் விக்டிம் இல்ல. சாதனையாளர். சர்வைவர்’ என்று சொன்னது கெத்தான விஷயம்.

தாமரையின் சிகையலங்கராத்தை மாற்றி அழகூட்டிக் கொண்டிருந்தார் பாவனி. உண்மையிலேயே தாமரையின் அந்த மேக்ஓவர் நன்றாக இருந்தது. “கூந்தலை எப்படி ஆத்தா விரிச்சுப் போட்டுட்டே திரியறது... முடிஞ்சுக்கவா?” என்றார் இந்த கிராமத்து நாயகி. இவருக்கு மேலும் ஒப்பனைகள் கூட “நான் வேணா ஆம்பளையா மாறிடவா?” என்ற ஜாலியாக கேட்டுக் கொண்டிருந்தார். (மறுபடியும் ஆரம்பிச்சிட்டியா ஆத்தா?!).

‘’கதை சொல்லட்டுமா?” டாஸ்க்கில் சோக முகத்துடன் வந்தார் பாவனி. ஒரு தனிநபரின் வாழ்க்கையில் இழப்புகள், துயரங்கள் வந்தாலே அவற்றை அவர் கடந்து வருவது சிரமம். ஆனால் பிரபலங்கள் என்றால் அவர்கள் கூடுதல் சுமைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. சமூகத்தின் அவதூறு, வம்பு, வழக்கு, கேலி போன்றவற்றையும் அவர்கள் சந்தித்தாக வேண்டும். (நடிகை சமந்தாவின் விவாகரத்து தொடர்பாக எழுந்திருக்கும் சமீபத்திய வம்புகள் ஒரு உதாரணம்).

பிக் பாஸ் - 6 |
பிக் பாஸ் - 6 |

பாவனிக்கும் நேர்ந்ததும் இதுவே. விளையாட்டாக தொலைபேசியில் அழைத்தவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு மிக எளிதாக கிடைக்கிறது. சினிமாவிலும் நடித்திருக்கிறார். சக நடிகர் மீது காதல் வர, வீட்டின் எதிர்ப்பையும் மீறி வெளியில் வந்து திருமணம் செய்திருக்கிறார். வாழ்க்கை நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால் பாவனியின் கணவருக்கு இருந்த குடிப்பழக்கத்தால் தம்பதிக்குள் நிறைய சச்சரவுகள் ஏற்பட்டன. ஒரு பிரைவேட் பார்ட்டியில் இது குறித்து பாவனி தன் கணவரை மெலிதாக கண்டிக்க, மனம் உடைந்து போன அவர் அறையில் சென்று தூக்கு மாட்டிக் கொண்டார்.

இந்தச் சம்பவம் கொலைத் திட்டமாகவும் திரித்து பேசப்பட்டதாம். இதனால் மன ரீதியாக பல இடர்களை பாவனி தாங்க வேண்டியிருந்தது. மாமியார் இவருக்கு ஆதரவாக இருந்தது பெரிய பலம். நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்தவரை சீரியல் வாய்ப்பு அழைக்க இன்னமும் பிரபலமாகிறார். மீண்டும் ஒரு காதல் வெளிச்சம் ஏற்பட்டு உடனே அணைந்து விட்டது. “எனக்குத் தனியாக இருக்கப் பிடிக்காது” என்று உளைச்சலுடன் வாழ்ந்து கொண்டிருந்தவரை ‘பிக்பாஸ்’ அழைத்திருக்கிறது.

“என் கணவரை எனக்கு பிடிக்கும். அவருக்கும் என்னை பிடிக்கும். ரொம்ப பிரியமா வாழ்ந்திட்டு இருந்தோம். திடீர்னு விட்டுட்டு போயிட்டாரு. எனக்கு அழுகை வரலை. கோபம்தான் வந்தது. என் வாழ்க்கையில் துணை என்கிற விஷயம் அமையவே அமையாதோ! காலம் பூராவும் தனியாத்தான் இருக்க வேண்டுமோ?” என்றெல்லாம் கலங்கிக் கொண்டிருந்தார் பாவனி.

ஒரு பெண் காதலுக்காக தன் வீட்டையே துறந்து வருவாராயின் எத்தனை இடர்கள், சச்சரவுகள் ஏற்பட்டாலும் அவரை விட்டு விட்டு அகலாமல் இருப்பதுதான் ஆண்மையின் அடையாளம். காதலிக்கும் போது இருக்கின்ற குஷி, திருமணத்திற்குப் பிறகு நிறைய பேரிடம் இருப்பதில்லை. தான் மன்னிப்பு கேட்கத் தயாராக இருந்தும் நமீதா தன்னிடம் பேசவில்லையே என்கிற மனக்குறையில் இருந்தார் தாமரை. “விடுங்க... தன்னாலே சரியாயிடும்” என்று மற்றவர்கள் ஆறுதல் கூறினார்கள்.

நள்ளிரவு. கார்டன் ஏரியாவிலேயே படுத்து உறங்கி விட்டார் தாமரை. ஆனால் நமீதாவால் உறங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார். பிறகு தாமரையை எழுப்பி ‘’உள்ளே போய் படுங்க” என்றார். பிறகு “நான் உங்களை மன்னிச்சிட்டேன். வாங்க டீ சாப்பிடலாம். நான் இப்படித்தான்... கோபம் வந்தா அன்பும் கொடுப்பேன். என்னை தங்கச்சியா ஏத்துக்கங்க. உங்களுக்கு கஷ்டம் கொடுக்க மாட்டேன்” என்று பிரியம் காட்டிய அந்தக் காட்சி நெகிழ்வை ஏற்படுத்தியது.

தாமரைக்கும் நமீதாவுக்கும் இடையில் நிகழ்ந்த சம்பவத்தை மட்டும் வெட்டி ஒட்டினால் ஒரு அருமையான குறும்படம் கிடைக்கும். அதிலும் இந்த டீ குடிக்கும் காட்சி அற்புதமான க்ளைமேக்ஸ்.

இவர்களின் இடையில் நிகழ்ந்த சர்ச்சை, சமாதானம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கமென்ட் பாக்ஸில் சொல்லுங்களேன்.