Published:Updated:

பிக் பாஸ் - 1 | கமல்ஹாசனின் கதாகாலட்சேபமும், 18 போட்டியாளர்களின் பரபர என்ட்ரியும்!

பிக் பாஸ் சீசன் 5 - கமல்ஹாசன்

கமல்ஹாசன் தொகுத்து வழங்க விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் முதல் நாள் எப்படியிருந்தது... எழுதுகிறார் சுரேஷ் கண்ணன்!

பிக் பாஸ் - 1 | கமல்ஹாசனின் கதாகாலட்சேபமும், 18 போட்டியாளர்களின் பரபர என்ட்ரியும்!

கமல்ஹாசன் தொகுத்து வழங்க விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் முதல் நாள் எப்படியிருந்தது... எழுதுகிறார் சுரேஷ் கண்ணன்!

Published:Updated:
பிக் பாஸ் சீசன் 5 - கமல்ஹாசன்
அன்பு நண்பர்களே.. நலம்தானே? இந்த முறையும் விகடன் வழியாக பிக்பாஸ் பற்றி தினமும் உங்களுடன் உரையாடப் போகிறேன். கடந்த சீசன்களில் நீங்கள் அளித்ததை விடவும் அதிகமான அன்பையும் ஆதரவையும் அளிக்குமாறு வேண்டுகிறேன். Ofcourse... இந்த முறையும் கமல்ஹாசன் என்பவர் இந்த சீஸனை தொகுத்தளிக்கவிருப்பதாக கேள்விப்பட்டேன். (தம்பி... இதெல்லாம் அநியாயம்ப்பா! – ‘நான் இருந்த ஊர்ல ஒரு ராஜா இருந்தார்’ன்ற ஹேராம் வசனம் மாதிரி இருக்கு!).

Jokes apart, பிக்பாஸ் போன்ற நுட்பமான, சிக்கலானதொரு ரியாலிட்டி ஷோவை தொகுத்தளிக்கவும் போட்டியாளர்களின் நடவடிக்கைகளை ஆராய்ந்து அபிப்ராயம் மற்றும் தீர்ப்பு சொல்லவும் தமிழில் வேறு பொருத்தமான பிரபலம் எவரேனும் இருக்கிறாரா என்று யோசித்தால் ம்ஹூம்..

நுண்ணுணர்வு, சமயோசிதம், நகைச்சுவையுணர்வு, நல்ல தமிழில் பேச்சு, இலக்கிய, வரலாற்று, உளவியல் அறிவு போன்ற பல விஷயங்கள் இதற்குத் தேவைப்படும். இதற்கு மிகப் பொருத்தமானவர் என்று கமல்ஹாசனை சொல்லலாம். எனவே அவரே இந்த முறையும் தொகுத்தளிப்பது மகிழ்ச்சி. அது மட்டுமல்ல, இப்படி ஒரு பிரபலமே ஐந்து சீசன்களையும் தொடர்ச்சியாக தொகுத்தளிப்பது தமிழில் மட்டுமே நிகழ்கிறது.

என்னவொன்று, “கமல் சார்... வெளில மழை பெய்யுதுல்ல?” என்று யாராவது சும்மா ஒரு உரையாடலை அவரிடம் ஆரம்பித்தால் கூட “மழை இயற்கை நமக்களித்த கொடை. நான் ஏவிஎம்ல ‘சகலகலா வல்லவன்’ ஷூட்டிங்கில் இருந்த போது” என்று ஆரம்பித்து ஒரு நீண்ட பொழிப்புரையை அவர் நிகழ்த்துவதுதான் சில சமயங்களில் சங்கடமாக இருக்கிறது.

பிக்பாஸ் - 1
பிக்பாஸ் - 1

ஏறத்தாழ முந்தைய சீசன்களில் நடந்த அதே ஃபார்மட்டில்தான் தொடக்க நாள் நிகழ்ச்சி நடந்தது. நவீன ‘விக்ரம்’ படத்தின் பின்னணி இசையுடன் ஐந்தாவது சீசனின் வீட்டை நமக்கு முறையாக அறிமுகப்படுத்தினார் கமல். அந்த அட்டகாசமான ஆரம்ப ஷாட் முதற்கொண்டு வெவ்வேறு இடங்களில் கமல் தோன்றிய ஐடியா வரை தொடக்கமே சூப்பர்.

ஐந்து என்கிற சீசனின் எண்ணை இந்தியாவின் பஞ்சசீலக் கொள்கையோடு எல்லாம் லிங்க் தந்து கமல் பேசியது வேற லெவல். (ஐந்து என்று குறிக்கும் வகையில் கமல் கைவிரல்களை விரிக்கும் போது கட்சி மாறி விட்டாரோ என்று யாரும் நினைத்துக் கொள்ளக்கூடாது)

வீட்டின் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தின் ஏரியாக்கள் வழக்கம் போல் அட்டகாசமாக, வசீகரமான வண்ணங்களில் வடிவமைக்கப்பட்டிருந்தன. ஜெயில் மட்டும் நீச்சல் குளத்துக்குள் சென்று விட்டது. வரவேற்பறை என்னும் விஷயம் புதிதாக இணைக்கப்பட்டிருந்தது. அமர்ந்து பேச தோட்டத்தில் பல நாற்காலிகள் இருந்தன. 5 என்று தனியாக அடையாளம் பொறிக்கப்பட்டிருந்த படுக்கையும் நாற்காலியும் இருந்தது. (வீட்டின் கேப்டனுக்காக இருக்குமோ?).

ஓ... என்கிற பிரத்யேக அலறல் இசை பின்னணியில் ஒலிக்க புன்னகைத்தபடி அரங்கத்தில் நுழைந்தார் கமல். கொரானோ காரணமாக கடந்த சீசனில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. இம்முறை போதிய இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டிருந்தனர். “ஐந்து வயதில் குழந்தை நட்சத்திரத்துக்கான ஜனாதிபதி விருது பெற்றேன்” என்று ஐந்து என்கிற எண்ணிக்கைக்கு மறுபடியும் லிங்க் தந்தார் கமல். “இப்பவும் நான் மக்கள் பிரதிநிதிதான்; உங்கள் நான்தான்’’ என்று தனது சிக்னேச்சர் வார்த்தைகளை சொல்லத் தவறவில்லை.

சீசன் 5-ல் கலந்து கொள்ளப் போகும் போட்டியாளர்களின் பட்டியல், கடந்த வருடங்களைப் போலவே, இம்முறையும் ஏறத்தாழ முன்பே வெளியாகி விட்டது. போகிற போக்கைப் பார்த்தால், அடுத்தடுத்த சீசன்களில் இணையத்தில் வெளியான பின்புதான், பிக்பாஸ் டீமுக்கே அந்த மேட்டர் தெரியும் போலிருக்கிறது. ஆனால் இப்படி கசிந்த பட்டியலைத் தவிர சில புதிதான ஆச்சரிய முகங்களும் இருந்தன.

பிக்பாஸ் - 1
பிக்பாஸ் - 1

சீசன் 5-ன் போட்டியாளர்களின் பட்டியல் என்பது சுவாரசியமான கலவையாக இருந்தது. எனவே இந்த சீசன் நிச்சயம் வித்தியாசமாக இருக்கும் என்று தோன்றுகிறது. நமக்கு மிகவும் பழக்கமான பிரபல முகங்களைத் தவிர சில துறைகளில் சாதனை படைத்திருக்கும் புதிய ஆளுமைகளைக் காண முடிகிறது. இதனால் ஒரு நிகழ்ச்சிக்கு புதிதான வண்ணங்களும் கோணங்களும் கிடைக்கும்.

ஆனால் ரியாலிட்டி ஷோக்களில் பொதுவாக நாம் பிரபலமான முகங்களையே எதிர்பார்க்கிறோம். அவர்களோடுதான் நெருக்கமாக உணர்கிறோம். இது ஒரு பழைய ஃபார்மட். அத்தனை பிரபலமாக இல்லாவிட்டாலும் வெவ்வேறு ஆளுமைகளைக் கொண்டவர்கள் இணையும் போது பல சுவாரசியமான பார்வைகள் கிடைக்கும். இது சீசன் 5-ல் சாத்தியமாகும் என்று நம்புவோம். ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு கதை உண்டு.

மற்றபடி போட்டியாளர்களின் வயது வித்தியாசத்தைக் கவனித்தால், வழக்கம் போல் ‘ஒரு குடும்பம்’ என்கிற அமைப்பைக் காண முடியும். வயதான அம்மா, அப்பா, இரண்டு மூத்த அண்ணன்கள், அண்ணிகள், தங்கைகள், அத்தைப் பெண்கள் (அப்போதானே லவ் ட்ராக் வரும்?!) என்று விக்ரமன், கே.எஸ்.ரவிக்குமார் படங்களின் பாணியில் பாத்திரங்கள் அமைக்கப்பட்டிருப்பார்கள். இப்போதும் அதே ஃபார்மட்தான். (குடும்பம்-ன்னு ஒண்ணு இருந்தாதானே சண்டை வரும்!).

இந்த சீசனின் போட்டியாளர்களைக் கவனித்தால் இதை ‘உலகமயமாக்கத்தின் குறியீடு’ என்று சொல்லி விடலாம். தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தில் உள்ள நாட்டுப்புற இசைக் கலைஞர்களையும், அயல்தேசத்தில் இருந்து கிளம்பி வந்திருக்கும் இசைக் கலைஞர்களையும் இந்த மேடை ஒன்று சேர்த்திருக்கிறது. இன்னொரு பக்கம் பார்த்தால் விளிம்புநிலைச் சமூகத்தினர், மைய நீரோட்டத்தை நோக்கி நகரும் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் நிரூபிக்கிறது. கானா இசைப்பாடகர், திருநங்கை என்று இந்தச் சமூகத்தின் பிரதிநிதித்துவமும் அமைந்திருக்கிறது.

இன்னொரு கோணத்தில் பார்த்தால் சமூகவலைத்தளங்களின் வழியாக புகழ் அடைந்திருப்பவர்கள் இப்போது சினிமா, ரியாலிட்டி ஷோ போன்ற பிரபலமான மேடைகளில் வாய்ப்பு பெறுகிறார்கள். யூட்யூப் பிரபலம், ராப் இசைப் பாடகர் போன்ற பட்டியலையும் இதில் காண முடிகிறது. (‘சர்வைவர்’ நிகழ்ச்சியிலும் பார்வதி, லேடி காஷ் போன்றவர்களை உதாரணம் சொல்லலாம்).

இன்னொரு விதத்தில் ஐந்தாவது சீசனை ஒரு முக்கியமான காரணத்திற்காக வியக்கலாம். இது பிக்பாஸ் போட்டியா அல்லது உலக அழகிப் போட்டியா என்று வியக்கும் வகையில் பல மாடல் அழகிகள் இந்த சீசனில் இருக்கிறார்கள். பிக்பாஸ் வீட்டில் யார் மீது முட்டிக் கொண்டாலும் அவர் ஒரு மாடலாக இருக்க வாய்ப்புண்டு.

பிக்பாஸ் - 1
பிக்பாஸ் - 1

போட்டியாளர்களை கமல் அறிமுகப்படுத்தும் சடங்கு நடைபெற்றது. இதைச் சற்று சுருக்கமாக ஆக்கிக் கொள்ளலாம். இது நீண்ட நேரம் ஒளிபரப்பாவதால் பார்வையாளர்கள் நிச்சயம் சோர்வு அடைவார்கள். கமல் தனது மொழிப்புரையைச் சுருக்கிக் கொண்டால் கூட பல நிமிடங்கள் மிச்சமாகும். ஒரு கட்டத்தில் ‘‘அடுத்த போட்டியாளரைப் பார்த்து விடலாமா?” என்று கமல் கேட்கும் போது, கொட்டாவியுடன் “போதுங்க... ரொம்ப லென்த்தா போயிட்டு இருக்கு” என்று மெல்லிய சலிப்பும் சேர்ந்தே வருகிறது.

மேடைக்கு வரும் போட்டியாளர்கள் பெரும்பாலும் கமலை அருகில் பார்த்தவுடன் “பேச்சே வரலைங்க” என்று திணறினார்கள். ஊடகத்துறையில் அனுபவமுள்ள இமான் அண்ணாச்சி போன்றவர்கள் கூட பேசுவதற்கு தடுமாறினார்கள். போட்டியாளர்கள் தங்களின் சுயஅறிமுகங்களைப் பற்றி ஒரு வரியில் தொடங்கும் போதே அவர்களை இடைமறித்து “இப்படித்தான் பார்த்தீங்கன்னா... அந்தக் காலத்துல... எம்.ஜி.ஆர் வந்து” என்று கமல் தனது நெடிய சுயபுராணத்தை இணைத்துக் கொள்வதை தவிர்க்கலாம்.

ஓகே... மொத்தம் பதினெட்டு நபர்கள் இந்த சீசனில் போட்டியிடுகிறார்கள். வெவ்வேறு பின்னணி, துறை, கலாசாரம் போன்றவற்றின் சந்திப்பு நிகழும் போது அதில் சுவாரசியமான காட்சிகள் கிடைக்கலாம். இந்த வகையில் ஒவ்வொரு போட்டியாளரைப் பற்றியும் சுருக்கமாக பார்த்து விடலாம்.

1. இசைவாணி

பிக்பாஸ் - 1 இசைவாணி
பிக்பாஸ் - 1 இசைவாணி

முதலில் அழைக்கப்பட்டவர் ‘இசைவாணி’. கானா பாடகர். இசை மேடைகளில் கடைசியாக அழைக்கப்பட்டவரை பிக்பாஸ் மேடை முதலில் அழைத்ததில் ஆரோக்கியமான ‘அரசியல்’ இருந்தது. இவருடைய தந்தையும் ஓர் இசைக்கலைஞர். வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர். இசைவாணி சற்று புகழ்பெற்றவுடன், இயக்குநர் பா.இரஞ்சித் உருவாக்கியுள்ள ‘The Casteless Collective’ என்கிற இசைக்குழுவில் பாடத் தொடங்கி பிரபலமானார். BBC 100 women விருதைப் பெற்றுள்ளார்.

2. ராஜு ஜெயமோகன்

பிக்பாஸ் - 1 ராஜு ஜெயமோகன்
பிக்பாஸ் - 1 ராஜு ஜெயமோகன்

இரண்டாவதாக வந்தவர் ராஜூ ஜெயமோகன். மிமிக்ரி, சீரியல் நடிகர், ஸ்கிரிப்ட் ரைட்டர் என்று பல முகங்களைக் கொண்டவர். இயக்குநர் பாக்யராஜிடம் உதவியாளராக இருந்தவர். பிக்பாஸ் மேடை தனக்கு நல்ல வாய்ப்புகளைத் தேடித் தரும் என்று நம்புகிறார். வீடியோவில் வந்த பாக்யராஜ் இவருக்கு வாழ்த்துரை வழங்கினார்.

3. மதுமிதா

பிக்பாஸ் - 1 - மதுமதி
பிக்பாஸ் - 1 - மதுமதி

மூன்றாவதாக வந்தவர் மதுமிதா. (நோ.. நோ. கடந்த சீஸன் மதுமிதா இல்லை). இவர் ஜெர்மனியைச் சேர்ந்த மாடல் மற்றும் ஃபேஷன் டிசைனர். இவருடைய பெற்றோர் இலங்கையைச் சேர்ந்தவர்கள். இவர் தமிழை உச்சரிக்கும் போது பியானோ இசையைக் கேட்பது மாதிரியே இருக்கிறது.

4. அபிஷேக்

பிக்பாஸ் - 1 அபிஷேக்
பிக்பாஸ் - 1 அபிஷேக்

நான்காவதாக வந்தவரைப் பார்த்தவுடன் ‘மாட்டினியா மவனே” என்று சமூகவலைத்தளங்களில் இருப்பவர்கள் சந்தோஷப்பட்டிருப்பார்கள். ‘சினிமாப்பையன்’ என்று தன்னை அழைத்துக் கொள்ளும் அபிஷேக். நேர்காணல் செய்யும் போது இவர் செய்யும் கொனஷ்டைகளை ரசிப்பவர்களும் உண்டு. திட்டுபவர்களும் ஏராளம். “நான் எப்போதுமே interview செய்வது கிடையாது. அது interaction-ஆக இருக்கும்” என்கிறார் அபிஷேக். பிக்பாஸ் சர்ச்சைகளில் இவருக்கு முக்கிய பங்கு இருக்கலாம்.

5. நமீதா

பிக்பாஸ் - 1 - நமீதா
பிக்பாஸ் - 1 - நமீதா

ஐந்தாவது போட்டியாளர் நிச்சயம் ஒரு சுவாரசியமான ஆளுமை. நமீதா மாரிமுத்து. Trans Model. மிஸ் சென்னை, மிஸ் தமிழ்நாடு, மிஸ் இந்தியா, மிஸ் வேர்ல்ட் என்று இவரின் கிராஃப் அட்டகாசமாக அமைந்துள்ளது. சர்வதேச அழகிப் போட்டிகளில் திருநங்கைகளின் இந்திய பிரதிநிதியாக இருந்தவர் இவர் மட்டுமே. தன்னைப் போல பலரையும் உருவாக்கி அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்பது இவரது கனவு.

இவரது பாலின மாற்றத்தை முதலில் ஒப்புக் கொள்ளாத பெற்றோர், பிறகு மனம் உவந்து ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். “பாஸ்போர்ட்ல என் பெயரை மாத்தினதைப் பாபிரியஙர்த்து வெளிநாட்டில ஆச்சரியப்பட்டாங்க. ஏன்னா.. அங்க இப்படி செய்ய முடியாது. இறுதி வரைக்கும் ஒரே பெயர்தான்” என்கிற தகவலைத் தெரிவித்தார் நமீதா. இவர்களை ‘பால்கடந்தோர்’ என்று அழைக்கலாமா? என்று புதிய வார்த்தையை பரிந்துரைத்தார் கமல்.

6.பிரியங்கா

பிக்பாஸ் - 1 பிரியங்கா
பிக்பாஸ் - 1 பிரியங்கா

ஆறாவதாக வந்தவருக்கு அறிமுகம் தேவையில்லை. விஜய் டிவி பிரியங்கா. ‘Who’s the hero..’ என்கிற, கமல் நடித்த திரைப்படப் பாடலை பாடிக் கொண்டே உள்ளே நுழைந்தார். இந்த லீட் கமலுக்குப் போதாதா? முதலில் அந்தப் பாடலை தான் பாடியதாகவும் பிறகு ஹீரோவே தன்னைப் பற்றி எப்படி புகழ்ந்து பாடுவது என்று ஆண்ட்ரியாவை விட்டு பாட வைத்ததாகவும் ஒரு பொழிப்புரை தந்தார் கமல். (முடியல ஆண்டரே!).

முதலில் ஜெர்க் அடித்தாலும் பிறகு சளசளவென்று பேசிக் கொண்டிருந்த பிரியங்கா, “உங்க கூட சேர்ந்து ஒரு நிமிஷமாவது பிக்பாஸ் host பண்ணணும்னு ஆசை சார்” என்று வேண்டுகோள் வைக்க “இப்ப அதான் பண்ணிட்டு இருக்கீங்க” என்று டைமிங்கில் அடித்து பிரியாங்கை காலி செய்தார் கமல். “அகரீதியாக அசெளகரியமாக உணர்கிறவர்களை இழுத்துக் கொண்டு வந்து comfort zone-ல் அமர வைப்பது தனக்கு பிடிக்கும்’ என்கிறார் பிரியங்கா. பிக்பாஸ் வீட்டிலும் இதைச் செய்வாரா அல்லது அவர்களை அசெளகரியமாக உணர வைப்பாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

7. அபிநய்

பிக்பாஸ் - 1 அபிநய்
பிக்பாஸ் - 1 அபிநய்

ஏழாவதாக உள்ளே வந்தவர் அபிநய். ஜெமினி கணேசன் – சாவித்ரி தம்பதியினரின் பேரன். ‘ராமானுஜர்’ படத்தில் நடித்திருக்கிறார். Farming என்பதை வணிகமாக அல்லாமல் சேவை நோக்கிலும் செய்கிறார். டேபிள் டென்னிஸில் நேஷனல் லெவல் பிளேயர். சினிமா வாய்ப்பிற்காக முயன்று கொண்டிருக்கிறார். “இவரோட எனக்கு எமோஷனல் கனெக்ட் இருக்கு” என்று அந்தப் பின்னணியை நினைவுகூர்ந்து நெகிழ்ந்தார் கமல்.

8. பாவனி

பிக்பாஸ் - 1 பாவினி
பிக்பாஸ் - 1 பாவினி

எட்டாவதாக வந்தவர் பாவனி ரெட்டி. மாடல்/ஃபேஷன் டிசைனர்/நடிகர் என்கிற பல முகங்களைக் கொண்டவர். தொலைக்காட்சி சீரியல்களில் நடித்திருக்கிறார். இவருடைய கணவர் தற்கொலை செய்து கொண்டதால் அது சார்ந்த இழப்பின் சோகத்தில் இருக்கிறார். பிக்பாஸ் அனுபவம் இவரை மீட்டெடுக்கும் என்று நம்புவோம். ‘ரிசர்வ்ட் டைப்தான்... ஆனா கோபம் வந்தாலும் வந்துடும்” என்று எச்சரிக்கிறார்.

9. சின்னப்பொண்ணு

பிக்பாஸ் - 1 - சின்னபொண்ணு
பிக்பாஸ் - 1 - சின்னபொண்ணு

ஒன்பவதாக வந்தவருக்கு பெரிய அறிமுகம் தேவையில்லை. நாட்டுப்புற இசைப்பாடகர் சின்னப்பொண்ணு. இவருடைய தந்தை நாட்டுப்புற இசை நடனக் கலைஞர். “உனக்கு டான்ஸ்லாம் வேண்டாம்மா... அதில பல சிக்கல் இருக்கு. பாடகியாயிடு” என்று தந்தை வழிகாட்டுதலின் பேரில் பாடகியானார். “நிறைய அவமானங்களைச் சந்திச்சுதான் இந்த இடத்திற்கு வந்திருக்கேன் தம்பி. கொரானோ என்னைப் போன்ற பல கலைஞர்களின் வாழ்வாதாரத்தை முடக்கிப் போட்டிருச்சு. பிக்பாஸ் அடையாளம் மூலமா மறுவாழ்வு கிடைக்கும்னு நம்பறேன்” என்ற சின்னப்பொண்ணு கமலை குறித்தும் ஒரு பாட்டுப் பாடி விட்டுச் சென்றார். பிக்பாஸ் வீட்டின் ‘அம்மா’ கேரக்டருக்கு பொருந்துபவர். ஆனால் அதிக நாட்கள் தாங்குவாரா என்று தெரியவில்லை.

10. நாடியா

பிக்பாஸ் - 1 நாடியா
பிக்பாஸ் - 1 நாடியா

பத்தாவதாக வந்தவர் நாடியா. மலேசிய மாடலாம். “எனக்கு மூணு ஏஞ்செல்ஸ் இருக்காங்க” என்று தன் மகள்களைப் பற்றி சொன்ன போது சற்று திக்கென்றுதான் ஆகி விட்டது. பார்க்க அத்தனை இளமையாக இருக்கிறார். டிக்டாக் மூலம் புகழ் பெற்றவராம். (அப்ப நம்ம ஜிபி முத்து இங்க வரலையா?!).

11. வருண்

பிக்பாஸ் - 1 வருண்
பிக்பாஸ் - 1 வருண்

பதினோறாவதாக உள்ளே வந்தவர் வருண். பழைய நகைச்சுவை நடிகர் ஐசரிவேலனின் பேரன். சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கெளதம் மேனன் இயக்கிவரும் ‘ஜோஷ்வா’ படத்தின் ஹீரோ. ஸ்டன்ட் தொடர்பான பயிற்சிகளை ஆர்வமாக மேற்கொள்கிறார். “நடிக்க வர்றவங்க... இந்த மாதிரி பல முன்தயாரிப்புகளுடன் வர வேண்டும்” என்று கமல் இவரை உதாரணம் காட்டி பாராட்டினார்.

12. இமான்

பிக்பாஸ் - 1 இமான்
பிக்பாஸ் - 1 இமான்

பனிரெண்டாவதாக வந்தவருக்கும் பெரிய அறிமுகம் தேவையில்லை. குட்டீஸ் சுட்டீஸ் புகழ் ‘இமான் அண்ணாச்சி’. “உள்ளே இருக்கிற குட்டீஸ்.. சுட்டீஸை எப்படி ஹேண்டில் பண்ணப் போறீங்க?” என்று பார்வையாளர்களில் ஒருவர் அதிரடியாக கேட்டார்.

13. சுருதி

பிக்பாஸ் - 1 சுருதி
பிக்பாஸ் - 1 சுருதி

பதிமூன்றாவதாக வந்தவரும் ஒரு மாடல்தான். பெயர் சுருதி. (சுருதி சுத்தமாக உச்சரிக்க வேண்டும். ஸ்ருதி அல்ல). கூடைப்பந்து விளையாட்டு வீரரும் கூட. தமிழ்க்கடவுள்களை கருமையான நிறத்தில் வைத்து சமீபத்தில் வெளியான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகின. அதற்கு மாடலாக இருந்தவர் இந்த சுருதிதான். தனது தோல்நிறம் காரணமாக சில பின்னடைவுகளைச் சந்தித்திருக்கிறார்.

14. அக்ஷரா

பிக்பாஸ் - 1 அக்‌ஷரா
பிக்பாஸ் - 1 அக்‌ஷரா

“சுருதி வந்துட்டாங்க. அப்புறம் என்ன அக்ஷராதானே?.. ஆனா என் பசங்க இல்லை. இது வேற அக்ஷரா” என்று அடுத்த வந்த போட்டியாளரை அறிமுகப்படுத்தினார் கமல். இவர் மாடல் மற்றும் நடிகை. சுருதியையும் அக்ஷராவையும் பூனை நடை நடக்க வைத்து ‘மாடல்’ என்பவரின் பணி என்ன என்பதை சுருக்கமாக வகுப்பெடுத்தார் கமல்.

15. ஐக்கி பெர்ரி

பிக்பாஸ் - 1 ஐக்கி பெர்ரி
பிக்பாஸ் - 1 ஐக்கி பெர்ரி

அடுத்து வந்தவரின் பெயரை உச்சரிக்க சிக்கலாக இருக்கும் போலிருக்கிறது. ‘ஐக்கி பெர்ரி’. மருத்துவர் மற்றும் ராப் இசைக்கலைஞர். ‘ராப் என்பது தமிழில் ஏற்கெனவே இருப்பதுதான். புதிய விஷயமில்லை’ என்ற கமல், அருணகிரிநாதரை மேற்கோள் காட்டியது டைமிங்கான உதாரணம்.

‘காரப்பொறி’ மாதிரி பெயர் ஒரு மாதிரியாக இருந்தாலும் இவர் தஞ்சாவூர் பொண்ணு. ‘independent music இங்க இன்னமும் நல்லா வளரணும்னு நெனக்கறவன் நான்” என்ற கமல் “இவங்களைப் பார்த்தா பிளெட்சரோட (‘தசாவதாரம்’ கேரக்ட்டர்) தங்கச்சி மாதிரியில்ல” என்று சொல்ல கலகலவென்று சிரித்தார் ஐக்கி. ஐக்கியம் என்பதன் சுருக்கமாம் அது.

16. தாமரை செல்வி

பிக்பாஸ் - 1 தாமரை செல்வி
பிக்பாஸ் - 1 தாமரை செல்வி

பதினாறாவதாக உள்ளே வந்தவர் ஒரு சுவாரசியான ஆளுமை. பெயர்: தாமரை செல்வி. கூத்துக்கலைஞர். நகைச்சுவை நடிகை. இந்த ஏரியாவில் இவர் சூப்பர் ஸ்டார் போலிருக்கிறது. மக்கள், குறிப்பாக பெண்கள் இவரைத்தான் விரும்பி நடிக்க அழைப்பார்களாம். ஆபாசமாக பேசவோ, உடுத்தவோ மாட்டேன் என்றது சிறப்பான விஷயம். இயல்பான தோற்றத்தில் இருக்கும் இவர், ஒப்பனை அணிந்து மேடையில் ஏறி விட்டால் வேறு நபராக மாறி விடுகிறார். “கிராமங்கள்தான் நாட்டுப்புறக் கலைஞர்களை தொடர்ந்து வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன. அரிதான சில நாட்கள் தவிர தினசரி இவர்களுக்கு கலைப்பணி இருக்கும். நகரத்தில் இருப்பவர்களும் இவர்களைப் புரிந்து கொள்ள பிக்பாஸ் மேடை உதவும்’ என்றார் கமல்.

17. சிபி

பிக்பாஸ் - 1 சிபி
பிக்பாஸ் - 1 சிபி

பதினேழாவது என்ட்ரி ‘சிபி’ என்கிற நடிகர். வஞ்சகர் உலகம் என்கிற திரைப்படத்தில் முக்கிய பாத்திரம். ‘மாஸ்டர்’ திரைப்படத்திலும் வந்திருக்கிறார்.

18. நிரூப்

பிக்பாஸ் - 1 - நிரூப்
பிக்பாஸ் - 1 - நிரூப்

கடைசியாக... (ஹப்பாடா!) அதாவது பதினெட்டாவது போட்டியாளராக உள்ளே வந்தவர் நிரூப். இவர் ஒரு தொழில்முனைவர். சென்னையில் cloud kitchen இருக்கிறதாம். ‘ முதலில் சற்று மல்லுக்கட்டினாலும் தந்தை என் விருப்பங்களை சுதந்திரமாக அனுமதிப்பார்’ என்று சொன்ன நிரூப்பின் பின்னணியைப் பற்றி அறிய சற்று நெகிழ்வாக இருந்தது. இவர் ஒன்பதாவது வகுப்பு படிக்கும் போது இவரின் தாய்க்கு ‘schizophernia’ இருப்பது தெரிந்ததாம். “ரொம்ப கடவுள் நம்பிக்கை உள்ளவங்க அவங்க. ஒரு பூஜையைக் கூட விட மாட்டாங்க. அவங்களுக்கு ஏன் இப்படி நடக்கணும்? அதுல இருந்துதான் எனக்கு கடவுள் மேலயும் மனிதத்தின் மேலேயும் நம்பிக்கை போயிடுச்சு. ஆனா ஒரு மனிதர் இன்னொருவருக்கு உதவுவது ஆதாரமான விஷயம்தானே?” என்று சொல்லும் நிரூப்பிற்கு நடிப்பிலும் ஆசையுண்டாம்.

ஆக... போட்டியாளர்களின் அறிமுக சடங்கு ஒருவழியாக முடிந்தது. ஒவ்வொருவரும் சாக்லெட் டப்பாவுடன் தட்டுத்தடுமாறி உள்ளே நுழைந்து ஒருமாதிரியாக செட்டில் ஆனார்கள். சிலருக்கு சிலரை முன்பே தெரிந்திருந்தது. இவர்கள் செளகரியமாக உணர, அறிமுகம் அதிகம் இல்லாதவர்கள் ‘வாங்க பழகலாம்’ மோடில் இருந்தார்கள். ‘தங்களின் பெட் எது?’ என்கிற தேர்வில் பெண்கள் கவனமாக இருந்தார்கள்.

பிக்பாஸ் - 1 கமல்ஹாசன்
பிக்பாஸ் - 1 கமல்ஹாசன்

அகம் டிவி வழியாக உள்ளே வந்தார் கமல். “மாப்ளே... கடைசியா ஒரு ஸ்மைல் பண்ணுங்க… போட்டோ எடுத்துடலாம்” என்று திருமணத்தில் புகைப்படக்காரர் ஜோக் சொல்வாராம். அது போல “எல்லோரையும் ஒண்ணா பார்க்க சந்தோஷமா இருக்கு. அடுத்த வாரம் எப்படியிருக்குமோ? மக்கள் சின்னச் சின்ன விஷயங்களைத்தான் பார்ப்பாங்க. அதில் சறுக்காமல் இருந்தாலே போதும்... சுருக்கமாக ‘அவையடக்கம் வேண்டும்’ என்றபடி விடைபெற்றார் கமல்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு பிக்பாஸின் குரல் கேட்டது. ஐந்து என்கிற எண்ணிக்கையை தானும் ஸ்கிரிப்டில் கொண்டு வந்த பிக்பாஸ், ‘இது பஞ்சபூதங்களைக் கொண்டு கட்டப்பட்ட வீடு’ என்றார். (‘அனபெல் சேதுபதி’ மாதிரி இது பேய் காமெடி ஸ்கிரிப்ட்டா பாஸ்?!). “முதல்ல பதற்றமாத்தான் இருக்கும். அப்புறம் பழகிடும். ‘மகிழ்வித்து மகிழ்’ – இந்த தாரக மந்திரத்தை நீங்கள் பின்பற்றினால் நல்லது” என்று உபதேசித்தபடி பிக்பாஸூம் விடைபெற்றுக் கொண்டார்.

ஏற்கெனவே சொன்னபடி ‘உலகமே ஒரு கிராமமாக’ சுருங்கிய வடிவத்தின் உதாரணம் என்று இந்த சீஸனை சொல்லலாம். அந்த அளவுக்கு வெவ்வேறு வித்தியாசமான ஆளுமைகள் இந்த மேடையில் ஒன்றுகூடியிருக்கிறார்கள். எனவே பல சுவாரசியமான அனுபவங்கள் நமக்கு கிட்டும் என்று நம்புவோம்.

இந்தக் களேரபரத்துக்கு நடுவே ‘புத்தகப் பரிந்துரை’ என்கிற முக்கியமான விஷயத்தை கமல் மறக்கவில்லை. இந்த நாளில் அவர் பரிந்துரை செய்த புத்தகம் ‘ஞானக்கூத்தன் கவிதைகள்’ என்கிற தொகுப்பு. இவர் நவீன தமிழ் இலக்கியத்தின் குறிப்பிடத்தகுந்த முன்னோடிகளில் ஒருவர்.

ஓகே... நாளைக்கு பார்க்கலாமா மக்களே?!

எதிர்பார்ப்போம்!