Published:Updated:

பிக் பாஸ் - 2|வெப்சீரிஸ்னா ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மொபைல்ல வருமே… வெள்ளந்திகளும், உவ்வேக் ஜோக்குகளும்!

பிக் பாஸ் - 2

கமல்ஹாசன் தொகுத்து வழங்க விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் இரண்டாம் நாள் எப்படியிருந்தது... எழுதுகிறார் சுரேஷ் கண்ணன்!

பிக் பாஸ் - 2|வெப்சீரிஸ்னா ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மொபைல்ல வருமே… வெள்ளந்திகளும், உவ்வேக் ஜோக்குகளும்!

கமல்ஹாசன் தொகுத்து வழங்க விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் இரண்டாம் நாள் எப்படியிருந்தது... எழுதுகிறார் சுரேஷ் கண்ணன்!

Published:Updated:
பிக் பாஸ் - 2

இந்த சீஸனில் மொத்தம் பதினெட்டு போட்டியாளர்கள் என்பதால், பிக்பாஸ் வீடு கல்யாண சத்திரம் மாதிரி இருக்கிறது. தூரத்து உறவினர் ஒருவரைப் பார்த்தும் கூட அவரின் பெயர் சட்டென்று நினைவுக்கு வராமல் தவிப்பதைப் போன்ற நிலைமைதான் இங்கும். வந்த முதல் நாளிலேயே தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த குடையை உடைத்து பிக்பாஸுக்கு நஷ்டம் ஏற்படுத்தினார் நிரூப். அவர் இருக்கிற உயரத்துக்கும் அகலத்துக்கும் மெரினா பீச் குடையே சிறியதுதான். இதைப் போய் எடுக்கலாமா?

குளியல் அறையில் குழாயை எந்தப் பக்கம் திருப்பினால் சுடுநீர் வரும் என்பதில் இசைவாணிக்கு குழப்பம். ‘இடதா வலதா’ என்று அரசியல் நிலைப்பாடு போல் தவித்த அவருக்கு, இமான் அண்ணாச்சி உதவி செய்து குழப்பத்தை தீர்த்தார்.

பிக்பாஸ் - 2
பிக்பாஸ் - 2

ஒரு மினி சூப்பர் மார்க்கெட் வைக்கும் அளவுக்கு சமையல் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் வந்தன. தாமரைச் செல்வியிடமிருந்து விபூதி வாங்கி நெற்றியில் வைத்துக் கொண்ட வருண், அதை சற்று வாயில் போட்டுக் கொண்டார். (இந்தப் பழக்கம் இன்னமும் இருக்கிறதா?!).

“நீங்க பார்க்கிறதுக்கு அமலா மாதிரி இருக்கீங்க” என்று அக்‌ஷராவைப் பார்த்து சொல்லிக் கொண்டிருந்தார் ராஜூ. ‘பயபுள்ள நம்மளை அவ்ளோ வயசானவ-ன்னு சொல்றான் போல’ என்று எண்ணிக் கொண்டாரோ என்னவோ ‘’அமலா பால் –ன்னு சொல்றீங்களா?” என்று தனக்குத் தானே காம்ப்ளிமென்ட் கொடுத்து சமாளிக்க முயன்றார் அக்‌ஷரா ‘இல்ல... அமலா மாதிரி இருக்கீங்க” என்றதும் வேறு வழியில்லாமல் சிரித்து வைத்தார். (ஸ்கிரிப்ட் ரைட்டருக்கு ஒரு பொண்ணை எப்படி பாராட்டறதுன்னு கூட தெரியல! 90’s கிட்ஸ்ஸே அமலாவை மறந்திருப்பாங்க!).

மதுமிதாவிடமிருந்து ஈழத் தமிழை கற்றுக் கொள்ள முயன்றார் பிரியங்கா. ஆனால் அவரோ சினிமாவைப் பார்த்துதான் பாதி தமிழ் பேச கற்றுக் கொண்டாராம். (வெளங்கிடும்!). ஐக்கி பெர்ரியும் தாமரை செல்வியும் அருகருகே அமர்ந்து அந்நியோன்யமாக பேசிக் கொண்டிருந்தார்கள். வெவ்வேறு இடங்களில் சூழல்களில் பிறந்து வளர்ந்த இந்த எதிரெதிர் முனைகளை பிக்பாஸ் மேடை சேர்த்து வைத்த காட்சி பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.

பிக்பாஸ் - 2
பிக்பாஸ் - 2

“அனைவரும் லிவ்விங் ஏரியாவுக்கு வாங்க” என்று அழைத்தார் பிக்பாஸ். வீட்டின் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நேரம். முதல் நாள் என்பதால் குடுமிபிடிச் சண்டைக்கான முகாந்திரம் இன்னமும் ஏற்படவில்லை. எனவே “நீங்க போங்க... ஏன் நீங்கதான் போறது” என்று ஒருவர் மற்றவர்களைச் சுட்டிக் காட்டிக் கொண்டிருக்க, ராஜூ, நமீதா, சின்னப்பொண்ணு, பாவனி, நிரூப் ஆகிய ஐவரும் சென்று சபை நடுவே நின்றார்கள். ஆனால் இருப்பது நான்கு அணிகள் என்பதால் ‘இது உனக்குத் தேவைதானா?” என்கிற மோடில் நிரூப் திரும்பி வந்தார். மிக எளிமையாக இந்தத் தேர்தல் நடந்து முடிந்தது.

ராஜூ (கழிப்பறை பராமரிப்பு), நமீதா (பாத்திரம் விளக்குதல்), சின்னப்பொண்ணு (சமையல்), பாவனி (வீடு சுத்தம் செய்தல்) ஆகிய அணிகளுக்குத் தலைவராக பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் எடுத்துக் கொண்டார்கள். அந்தந்த அணிகளுக்கான நபர்களை தலைவர்களே தேர்ந்தெடுத்து அறிவித்தார்கள்.

‘Vessel Washing’ என்று நமீதா சொன்ன போது ‘தமிழ்ல நல்லா விளக்கிச் சொல்லு” என்றார் சின்னப்பொண்ணு. (அந்த வேலையே பாத்திரம் விளக்குவதுதான். அதில் மேலும் என்ன விளக்குவது?!).

“பிக்பாஸ்... பாத்ரூம்ல இந்தப் பக்கம் மட்டும் நாங்க க்ளீன் செஞ்சா போதுமில்ல... எங்களுக்கு பிரஷ் கொடுங்க... இங்க நாலைந்து மெழுகுவர்த்தி ஏத்தி வைங்க... ரொமான்டிக் மூட்ல கேன்டில் லைட் தேவைப்படலாம்” என்று பிக்பாஸுக்கே ஆர்டர் போட்டுக் கொண்டிருந்தார் ராஜூ. (இருடி மவனே... டாஸ்க் சந்தர்ப்பம் வரட்டும்’ என்று பிக்பாஸ் உள்ளே கறுவிக் கொண்டிருக்கலாம்).

“நீங்க காமெடியனா?” என்று முன்பு ராஜூவைப் பார்த்து பங்கம் செய்த மதுமிதா, இப்போதோ சிபியைப் பார்த்து “நீங்க ஹீரோவா நடிக்கிறீங்களா?” என்று சரோஜா தேவி பாணியில் கொஞ்சி கொஞ்சி கேட்டார். “ஆமாம்... ரெண்டு மூணு படத்துல ஹீரோவா நடிச்சிருக்கேன்” என்றார் சிபி. (நல்ல வேளை! மாஸ்டரில் நான்தான் ஹீரோ... கூட விஜய்ன்னு ஒருத்தர் நடிச்சிருக்கார்’ என்பது போல் அலட்டலாக சொல்லவில்லை).

பிக்பாஸ் - 2
பிக்பாஸ் - 2

என்ன இருந்தாலும் தாமரை செல்வி இத்தனை வெள்ளந்தியாக இருக்கக்கூடாது. இவர் பாவனியை நோக்கி “உங்களுக்கென்ன 17 வயசு இருக்குமா?” என்று கேட்டு பாவனியை மட்டுமல்லாது நம்மையும் அதிர்ச்சியடைய வைத்தார். பிக்பாஸ் ஸ்பான்சர்களில் கண்ணாடிக் கடை ஏதாவது இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். பாவனி உடனே சந்தோஷமாகி “இந்தக் கண்ணாடில சொல்லுங்க” என்று ரிப்பீட் மோடில் கேட்டு மகிழ்ந்தார். அடுத்து அவர் சொன்ன பரிந்துரை தூக்கிப் போட வைத்தது. ‘நீங்களும் இந்த மாதிரி ஃபிராக் போட்டுக்கங்க. வயசு குறைச்சு தெரியும்”.

‘நான் வெப்சீரிஸ்ல நடிக்கலாம்னு இருக்கேன்” என்று பாவனி சொல்ல, “ம்... பார்த்திருக்கேன். ‘பாரதி கண்ணம்மா’லாம் மொபைல்ல வரும்” என்று தொலைக்காட்சி சீரியலை பற்றி தாமரை சொல்ல... ஒரே கூத்தாக இருந்தது. “அப்ப டிவி நாடகத்துல வர்றது உங்க குரல் இல்லையா?” என்று ஆச்சரியமாக கேட்டார் தாமரை. கூத்து மேடைகளில் சொந்தக் குரலில் பாடி நடிக்கும் தாமரை இதைக் கேட்பதில் நிறைய அர்த்தம் உள்ளது.

சின்னப்பொண்ணு தலைமையில் சமையல் அணி ‘டீ’ போடும் வேலையில் இறங்கியது. இந்த சின்ன விஷயத்தை ஏதோ மாஸ்டர் செஃப் எபிசோட் போல் டீடெய்லாக காட்டிக் கொண்டிருந்தார்கள். “அண்ணே... இதுல எப்படிண்ணே பெட்ரோமாக்ஸ் லைட் எரியும்?” என்று கேட்கும் செந்தில் போல, “ப்ரெளன் கலர்ல வந்தா அதான் டீயா?” என்று ஓவர் ஆர்வத்துடன் சுற்றும் அப்ரன்ட்டிஸாக அதிர்ச்சி தந்து கொண்டிருந்தார் சிபி.

“ஐக்கியைப் பார்த்தா ஜமீன்கோட்டைல வர்ற கிழவி மாதிரி இல்ல?!” என்று எல்லை தாண்டிய பயங்கரவாதியாக கிண்டல் செய்து கொண்டிருந்தார் ராஜூ. இவர் சீக்கிரம் ஏதாவதொரு சர்ச்சையில் மாட்டுவார் போலிருக்கிறது. “அய்யோ... நான் ஷக்கீரான்னு சொல்ல வந்தேன்” என்றார் இசைவாணி.

பிக்பாஸ் - 2
பிக்பாஸ் - 2

“எமோஷன் இல்லாம ‘நோ’ சொல்லணும்” என்று நவரச திலகமாக மாறி, பெண்கள் கூட்டணியை அமைத்து விதம் விதமாக ‘நோ’ சொல்லி காட்டு மொக்கை போட்டுக் கொண்டிருந்தார் பிரியங்கா. அவர் ‘கிளுகிளுப்பாக’ நோ சொன்ன பாணிக்கு சிறப்பு ஆஸ்கர் விருது தரலாம். இந்தக் கூட்டணியிடம் இமான் அண்ணாச்சி மாட்டிக் கொண்டு விழித்தார். (‘என் கெரகம்.. இதையெல்லாம் ரெக்கார்ட் பண்ண வேண்டியிருக்கு’ – கேமராவின் மைண்ட் வாய்ஸ்).

‘பாத்ரூம் சுத்தம்’ பற்றி சம்பந்தப்பட்ட அணியிடம் பிரியங்கா புகார் சொன்ன போது அவரைக் கலாய்த்து திருப்பி அனுப்பியது ஆண்கள் அணி. குறிப்பாக ராஜூ சொன்ன ஜோக் எல்லாம் ‘உவ்வேக்’ ரகம். “உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?” என்று சுருதியிடம் விசாரித்துக் கொண்டிருந்தார் ராஜூ. ஐக்கி committed ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறாராம்.

டீ போடும் சாதனையை முடித்த சமையல் அணி இப்போது ‘இட்லி உப்புமா’வை ஆவேசமாக கிளறிக் கொண்டிருந்தது. ‘’எனக்கு ஏதாவது வேலை கொடுங்களேன்” என்று ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்தார் சிபி. “ரசம் வெக்கட்டுமா?’’ என்று பரபரத்தவரை “உனக்கு வெஷம் வெச்சுடுவேன்... ஓடிடு” என்பது மாதிரி அப்புறப்படுத்தினார்கள்.

பிக்பாஸ் - 2
பிக்பாஸ் - 2

ராஜூவை விட்டால் வேறு யாரிடமும் கன்டென்ட் தேறவில்லை போலிருக்கிறது. கேமரா அங்கேயே நிலை கொண்டிருந்தது. ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படத்தில் வரும் ‘பாலைய்யா – நாகேஷ்’ காமெடி போல எதையோ முயன்று கொண்டிருந்தார் ராஜூ. இவர் ஒரு சென்டிமென்ட் கதையை தாமரையிடம் சொல்ல ஆரம்பித்து, பிறகு அது வேலைக்கு ஆகாததால் ‘பேய்க்கதையாக’ மாற்றி அவரை பயமுறுத்திக் கொண்டிருந்தார். தாமரையும் ‘சரண்யா’ போன்ற சினிமா லூஸூ அம்மா கேரெக்ட்டர் போல மிகையாக பயந்து கொண்டிருந்தார். (ராஜூ ஒரு ஸ்கிரிப்ட் ரைட்டர் என்பதையும் தாமரை ஒரு நடிகை என்பதையும் நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். ஆனால் அதை இத்தனை மொக்கையாக நிரூபிக்கக்கூடாது!).

தூங்கச் செல்வதற்கு முன்னால் பிக்பாஸிடம் தாமரை நன்றி சொன்னதற்குப் பின்னால் உள்ள காரணம் இருக்கிறதே... அது மிக முக்கியமானது. தினசரி இயந்திர வாழ்க்கையில் சிக்கி, மூச்சு விடக்கூட நேரமில்லாமல் உழைக்கும் ஏராளமான பெண்களின் பிரதிநிதியாக தாமரையின் குரல் ஒலித்தது. “நான் இந்த மாதிரி சிரிச்சு ரொம்ப நாளாச்சு... அதற்காக உங்களுக்கு நன்றி பிக்பாஸ்” என்றார்.

பிக்பாஸ் - 2
பிக்பாஸ் - 2

“நீங்க... ரொம்ப வருஷமா ஒரு சின்ன சர்க்கிள்ல வாழ்ந்திருக்கீங்க. இந்த அனுபவம் உங்களுக்கு வித்தியாசமா இருக்கும். அதான் சந்தோஷத்துக்குக் காரணம்” என்று சரியான பாயின்ட்டைப் பிடித்தார் அபிஷேக்.

“கவலைப்படாதீங்க... சீக்கிரமா அழ வெச்சிடுவாங்க” என்று பாவனி இதற்கு கவுன்ட்டர் வசனம் சொன்னதும் “என் இனமடா நீ” என்று உள்ளுக்குள் பிக்பாஸ் மகிழ்ந்திருப்பார்.

முதல் நாள் என்பதால் ‘வாங்க... வாங்க... எப்படியிருக்கீங்க.. ஊர்ல மழை எப்படி... ஹிஹி…’ என்று சம்பிரதாயமாக விசாரிப்பது போல் நிகழ்ச்சி சென்றிருக்கிறது. இனிதான் மெல்ல மெல்ல புகைய ஆரம்பிக்கும். நெருப்பு கிளம்பும். மேலும் பரவும். அது ஊழித்தீயாக மாறும்.

எதிர்பார்ப்போம்!