Published:Updated:

பிக் பாஸ் EXCLUSIVE: கமல் பிறந்தநாள், ஆனாலும் எவிக்ஷன் இருக்கு... இந்த வாரம் வெளியேறியது யார்?

இந்த வாரம் கமல்ஹாசனின் பிறந்த நாள் (நவம்பர் 7) வருவதையொட்டி போட்டியாளர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் தரலாமென நினைத்து முதலில் எவிக்ஷன் வேண்டாமென நினைத்தார்களாம். ஆனால்...

'பிக் பாஸ்' தமிழ் சீசன் 5 தொடங்கி ஒரு மாத காலம் முடிவடைந்து விட்டது. முந்தைய சீசன்களைப் போல இல்லாமல், வழக்கத்திற்கு மாறாக 18 போட்டியாளர்கள் பங்கேற்றாலும், பெரும்பாலான போட்டியாளர்கள் புது முகங்கள் என்பதால் நிகழ்ச்சிக்கான வரவேற்பு தொடக்கத்தில் சுமாராகவே இருந்து வந்தது.

தொடர்ந்து திருநங்கை நமீதா மாரிமுத்துவின் திடீர் வெளியேற்றம், கன்டென்ட் தந்து கொண்டிருந்த அபிஷேக்கின் எலிமினேஷன் ஆகியவற்றைத் தொடர்ந்து கொஞ்சம் விறுவிறுப்படைவது போல் தெரிந்தது.

ஆனாலும் இன்னும் சிலர் அந்த வீட்டுக்குள் 'தேமே' என உட்கார்ந்து கொண்டிருப்பதாலோ என்னவோ நிகழ்ச்சியின் டி.ஆர்.பி. ரேட்டிங் சேனல் எதிர்பார்த்த அளவுக்கு இன்னும் கிடைக்கவில்லையாம். கடந்த வார ரேட்டிங் எல்லாம் ரொம்பவே குறைவு என்கிறார்கள்.

பிக் பாஸ்
பிக் பாஸ்

இந்தச் சூழலில் இந்த வாரம் கமல்ஹாசனின் பிறந்த நாள் (நவம்பர் 7) வருவதையொட்டி போட்டியாளர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் தரலாமென நினைத்து முதலில் எவிக்ஷன் வேண்டாமென நினைத்தார்களாம்.

ஆனால், ஏற்கெனவே நிறையப் போட்டியாளர்கள் உள்ளே இருப்பதால், எவிக்ஷன் இல்லாவிட்டால் சரியாக இருக்காது என டைரக்ஷன் டீம் சொல்லவே, கடைசியில் அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த வார எவிக்ஷனுக்கான ஷூட்டிங் இன்று (6/11/21) காலை சென்னை பூந்தமல்லி இ.வி.பி.ஃபிலிம் சிட்டியில் உள்ள பிக் பாஸ் செட்டில் தொடங்கியது. காலை சரியான நேரத்துக்கு கமல் வந்துவிட்டார். நாளை அவரது பிறந்த நாள் என்பதால் இன்று மாலை ஷூட்டிங்கை சற்று முன்னதாகவே முடித்துவிட்டார்கள்.

வெளியேற்றப் படுவதற்கான நாமினேஷன் பட்டியலில் இந்த வாரம் நிரூப், அக்ஷரா, இசைவாணி, ஐக்கி, அபிநய், சுருதி, மதுமிதா, சிபி, பாவனி ஆகிய 9 பேர் இருந்தனர்.

இவர்களில் ஐக்கி, அபிநய், மதுமிதா ஆகிய மூன்று பேரில் ஒருவர்தான் வெளியேற்றப் படலாமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசியில் சுருதி எவிக்ட் ஆகி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி இருக்கிறார்.

பிக் பாஸ்
பிக் பாஸ்

அடிப்படையில் மாடலாக இருக்கும் சுருதி கூடைப்பந்து விளையாட்டு வீரரும் கூட. தமிழ்க்கடவுள்களை கருமையான நிறத்தில் வைத்து சமீபத்தில் வெளியான புகைப்படங்கள் சமீபத்தில் இணையத்தில் வைரல் ஆகப் பார்த்திருப்பீர்கள். அவற்றிற்கு மாடலாக இருந்தவர் இந்த சுருதிதான். தன்னுடைய‌ நிறம் காரணமாக பல இடங்களில் பின்னடைவுகளைச் சந்தித்திருக்கும் இவர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓரளவு நேர்மையாக விளையாடினார் என்றுதான் சொல்ல வேண்டும். சக போட்டியாளர் தாமரையின் காயினைச் சர்ச்சையான முறையில் திருடியதற்காக இவரது வளர்ப்பு குறித்து தாமரை விமர்சித்த எபிசோடு, சில நாள்களுக்கு முன் பரபரப்பானது நினைவிருக்கலாம்.

சுருதி வெளியேறிய எபிசோடு நாளை (7/11/21) இரவு ஒளிபரப்பாகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு