Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 46: `ஆமா அசிம் திருடிட்டாரு' வண்டு முருகனான ஜனனி; க்வீன்சியின் `மாமா குட்டி' ஐடியா

பிக் பாஸ்

இதன் பின்னணியில் ஒரு காரணம் இருக்கலாம். அமுதவாணனுக்கு விக்ரமனைப் பிடிக்காது. எனவே ஜனனிக்கும் விக்ரமன் ஆகாமல் போய் விட்டார். இதுதான் இந்த வழக்கின் ரகசியம் என்று தோன்றுகிறது.

Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 46: `ஆமா அசிம் திருடிட்டாரு' வண்டு முருகனான ஜனனி; க்வீன்சியின் `மாமா குட்டி' ஐடியா

இதன் பின்னணியில் ஒரு காரணம் இருக்கலாம். அமுதவாணனுக்கு விக்ரமனைப் பிடிக்காது. எனவே ஜனனிக்கும் விக்ரமன் ஆகாமல் போய் விட்டார். இதுதான் இந்த வழக்கின் ரகசியம் என்று தோன்றுகிறது.

பிக் பாஸ்
நீதிமன்ற டாஸ்க் என்பது, ஒன்று சீரியஸாக இருந்திருக்க வேண்டும் அல்லது நம்மைச் சிரிக்க வைக்கும் அளவிற்கு காமெடியாகவாவாது இருந்திருக்க வேண்டும். ஆனால் இரண்டுமே இல்லாமல் இரண்டாங்கெட்டான்தனமாக இருந்தது. எந்த வழக்கிலும் சூடு இல்லை. எந்தத் தீர்ப்பிலும் சுவை இல்லை.
பிக் பாஸ் 6 நாள் 46: ஜனனி, அசிம்
பிக் பாஸ் 6 நாள் 46: ஜனனி, அசிம்

ஆனால் விதிவிலக்காக இந்த எபிசோடில் கதிரவனின் அபாரமான நகைச்சுவைத்திறன் வெளிப்பட்டது. அசிம் ஆப்பிள் திருடிய வழக்கில், கதிர் கொளுத்திப் போட்ட நகைச்சுவை புஸ்வாணங்கள் பிரமாதமாக இருந்தன. மனிதர் இப்போதுதான் அதிகம் வெளிப்படத் துவங்கியிருக்கிறார். இதே ரேஞ்சில் போனால் கடைசிக் கட்டம் வரை தாக்குப் பிடிப்பார் போல.

‘ஷிவினை மறைமுகமாக கிண்டலடிக்கிறோம்’ என்கிற பெயரில் கதிரும் க்வீன்சியும் இணைந்து நடத்திய ‘டிராமா’ அத்தனை ரசிக்கத்தக்கதாக இல்லை. ஆனால் ஷிவின் இதை திறமையாகச் சமாளித்தார்.

நாள் 46-ல் நடந்தது என்ன?

‘அடியே கொல்லுது’ என்கிற ரகளையான பாடலுடன் நாள் 46 விடிந்தது. அமுதவாணனுக்கும் ராபர்ட்டிற்கும் இடையில் ‘ஸ்பின் போர்டு டாஸ்க்’கின் மறுஒளிபரப்பு. அமுதவாணன் என்னதான் வேகமாகச் சுற்றினாலும் ராபர்ட் நின்று தாக்குப் பிடித்தார். அமுதவாணன் தனியாக இல்லாமல் கூட்டணி அமைத்திருந்தால் ஒருவேளை ஜெயித்திருக்கலாம்.

பிக் பாஸ் 6 நாள் 46: மைனா, ஷிவின், க்வீன்சி, ஆய்ஷா
பிக் பாஸ் 6 நாள் 46: மைனா, ஷிவின், க்வீன்சி, ஆய்ஷா

‘உங்க பொண்ணு க்வீன்சிக்கு முட்டை வேணுமாம் மாஸ்டர்.. கேமை விட்றாதீங்க” என்று மணிகண்டன் உசுப்பேற்ற, ‘கீழேயே பாருங்க’ என்று ரச்சிதா வழிகாட்ட, ராபர்ட் ஒருவழியாக வெற்றி பெற்றார். அதுவரை போர்டு உடையாமல் இருந்தது ஆச்சரியம். மனிதர் அவ்வப்போது உண்ணாவிரதம் இருந்தாலும் எடை குறையாமல் இருக்கிறார் போல. பிக் பாஸ் வீட்டிற்கு வந்ததில் இருந்து இதுதான் ராபர்ட் செய்து முடித்த முதல் உருப்படியான காரியம்.

மக்களை ஒன்று திரட்டிய பிக் பாஸ் “என்ன ஓய்ஞ்சு உக்காந்துட்டீங்க.. நீதிமன்றம் தயாரா இருக்கு.. வழக்குகளோடு நீங்க தயாரா?’ என்று ‘வார்ம் –அப்’ செய்தார். மக்கள் நினைவுகளை தூசு தட்டி தங்களின் பிராதுகளை சொல்ல ஆரம்பித்தார்கள். ஆனால் அத்தனையுமே தேவையில்லாத ஆணிதான். கதிரவன் போட்ட ‘பொதுநல வழக்கு’ மட்டுமே சுமார். ஆனால் அதில் கூட ‘சேஃப் கேம்’தான் இருந்தது.

வழக்கு எண்.5 – இளவரசியை அவமதித்த ராஜகுரு

‘அருங்காட்சியக டாஸ்க் தொடர்பாக, குறைவான பங்களிப்பாளர் தோ்வின் போது ‘உங்கள் தமிழில் பிரச்சினையுள்ளது’ என்று விக்ரமன் கூறினார். மேலும் டாஸ்க்கின் போது ‘நீங்கள் ஒன்றும் உண்மையான இளவரசி கிடையாது’ என்று காரெக்ட்டரில் இருந்து வெளியே வந்து பேசினார். இது எனக்கு மனவேதனையைத் தந்தது. விக்ரமன் தன் தவறை ஒப்புக் கொள்ள வேண்டும்’ – இதுதான் விக்ரமன் மீது ஜனனி போட்ட வழக்கின் சாரம்.

தனது வழக்கறிஞராக அசிமை நியமித்தார் ஜனனி. “என்னது?! எனக்கு சம்மனா.? நான் அப்படி சொல்லவேயில்லையே?’ என்று ஆச்சரியப்பட்டார் விக்ரமன். மொழி தொடர்பானது என்பதால் க்வீன்சியை தனது வழக்கறிஞராக விக்ரமன் நியமித்திருக்கலாம். ஆனால் இங்கு க்வீன்சியின் துணிச்சலை பிரத்யேகமாக பாராட்ட வேண்டும். ‘அவரு யாரு தெரியுமா.. ரொம்ப பயங்கரமானவராச்சே?!’ என்று ஒட்டுமொத்த வீடே பயந்து கொண்டிருக்கும் போது, அசிமை எதிர்த்து வாதாட க்வீன்சி ஒப்புக் கொண்டது நல்ல விஷயம்.

ஜனனி போட்ட இந்த வழக்கு மிக மிகச்சுமாரானது. சுமாரான லாஜிக் தெரிந்த சராசரி நபர் கூட இந்த வழக்கை எடுத்துக் கொள்ள மாட்டார். ஆனால் அசிம் எடுத்துக் கொண்டார். ஏனெனில் இது விக்ரமனுக்கு எதிரான வழக்கு என்பதால் இருக்கலாம்.
பிக் பாஸ் 6 நாள் 46: விக்ரமன், ஜனனி
பிக் பாஸ் 6 நாள் 46: விக்ரமன், ஜனனி

ஜனனியை அவமதித்தாரா விக்ரமன்?

இந்த வழக்கு விவகாரத்தை சற்று சுருக்கமாக அலசி விடுவோம். ‘நான் பேசும் (இலங்கை) தமிழில் பிரச்சினையுள்ளது என்று விக்ரமன் சொன்னது சரியல்ல. மக்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்?’ என்பது ஜனனியின் புகார். “டாஸ்க்கில் அனைவரும் பேச முயன்ற ‘செந்தமிழ்’ பற்றித்தான் நான் கேட்டேன். அதைப் பேச சிரமமாக இருந்ததா?’ என்று அக்கறையில்தான் ஜனனியிடம் கேட்டேன்’ என்பது விக்ரமனின் விளக்கம்.

இந்த டாஸ்க்கிற்கு முன்பே “நீங்கள் பேசும் தமிழ் நன்றாக இருக்கிறது. நான் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்’ என்று விக்ரமன் ஜனனியிடம் சொல்லியிருக்கிறார். எனில் எவ்வாறு அதைப் பற்றி அவர் பிறகு குறை சொல்லியிருக்க முடியும்? மேலும் டாஸ்க் தொடர்பானது என்னும் போது, அதில் பேசப்பட்ட ‘செந்தமிழ்’ பற்றித்தான் அவர் கேட்டிருப்பார் என்பது சொல்லாமலேயே எவரும் தன்னிச்சையாக புரிந்து கொள்ளக்கூடியது.

பிக் பாஸ் 6 நாள் 46: க்வீன்சி, விக்ரமன்
பிக் பாஸ் 6 நாள் 46: க்வீன்சி, விக்ரமன்

ஜனனி வைத்த புகாரின் இரண்டாவது பகுதியை பார்த்து விடுவோம். டாஸ்க்கின் போது ஜனனி மறைத்துக் கொண்டு நின்றதால் ‘சற்று நகர்ந்து நில்லுங்கள் இளரவரசி’ என்று விக்ரமன் சொல்லியிருக்கிறார். வயது காரணமாகவும் ராஜகுரு என்கிற உரிமை காரணமாகவும் விக்ரமன் அப்படிச் சொன்னதில் தவறில்லை. ஆனால் விக்ரமனின் மீது ஏதோவொரு காண்டில் இருந்த ஜனனி, உண்மையான இளவரசியைப் போலவே பந்தா காட்டியிருக்கிறார். பிறகு தங்களின் பெற்றோரிடம் சென்று புகார் கூறியிருக்கிறார், ‘அவர் ராஜகுரு. வயதில் பெரியவர்’ என்று ராணி ரச்சிதாவும் ஆலோசனை சொன்னார். விக்ரனும் மன்னிப்பு கேட்டு விட்டதோடு இந்த விஷயம் முடிந்து விட்டது.

ஆக.. உப்பு பெறாத இந்த விஷயத்தை ஜனனி நீதிமன்றத்திற்கு கொண்டு வந்திருப்பது நேரத்தை வீணாக்கும் செயல். இன்னமும் வலுவான வழக்காக கொண்டு வந்து விக்ரமனை திணறடித்திருக்கலாம். இதன் பின்னணியில் ஒரு காரணம் இருக்கலாம். அமுதவாணனுக்கு விக்ரமனைப் பிடிக்காது. எனவே ஜனனிக்கும் விக்ரமன் ஆகாமல் போய் விட்டார். இதுதான் இந்த வழக்கின் ரகசியம் என்று தோன்றுகிறது.

வாதத்தில் அசிமை வென்ற க்வீன்சி

இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் அசிமை எதிர்த்து திறமையாக வாதிட்டார் க்வீன்சி. ‘அந்த தமிழ்.. இந்த தமிழ்’ என்று அசிம் குழப்ப முயன்றாலும் திறமையாக தன் வாதத்தை முன்வைத்தார். ஆனால் அசிமோ ‘அவங்க தமிழ் கிளாஸ்ல தூங்கிட்டாங்க போல’ என்று க்வீன்சியைப் பற்றி நீதிமன்றத்திலேயே சொன்னது தனிப்பட்ட அவதூறு.

‘விக்ரமன் சொன்னது செந்தமிழ் பற்றித்தான் என்பது நிரூபணமாகி விட்டது. இதில் தனிப்பட்ட தாக்குதல் ஏதும் இல்லை’ என்று நீதிபதி மணிகண்டன் தீர்ப்பு தர, விக்ரமன் தரப்பு வெற்றி. ‘பிரச்சனையே இல்லாத ஒரு பிரச்சனையைக் கொண்டு வந்து பிரச்சினையாக்கப் பார்க்கறாங்க’ என்று ரகளையாக பேசி வெற்றியைத் தேடித் தந்தார் க்வீன்சி.

பிக் பாஸ் 6 நாள் 46: அசிம், கதிரவன்
பிக் பாஸ் 6 நாள் 46: அசிம், கதிரவன்

இதில் என்ன ஒரு வேடிக்கையான விஷயம் என்றால் ‘பிக் பாஸ் ரோஸ்ட்’ டாஸ்க்கின் போது ‘நீ எப்ப ஒழுங்கா தமிழ் பேசப் போறே?’ என்று கலாய்ப்பது போல் ராபர்ட் ஜனனியை கேள்வி கேட்டார். ஆனால் அந்தக் கேள்வி அப்போது ஜனனிக்கு உறுத்தவில்லை என்பது சுவாரசியமான முரண். ‘தமிழைப் பொறுத்த வரைக்கும் இலக்கணத் தமிழ், செந்தமிழ், தமிழ்ன்னு மூணு வகை இருக்கு’ என்று பிறகு மணிகண்டனிடம் விளக்கம் (?!) தந்து கொண்டிருந்தார் அசிம். அவரின் தமிழ் ஆர்வம் பாராட்டத்தக்கதுதான். ஆனால் சில விஷயங்களில் அடிப்படையிலேயே தடுமாறுகிறார் என்பதுதான் உண்மை. ‘டங் ஸ்லிப்’ ஆவது தவிர, அவர் எழுதுவதிலும் நிறைய பிழைகள் உள்ளன.

“ஒரு விஷயத்துல அசிம் உள்ளே வரும் போது வீடே ஏன் அவருக்கு எதிர்ப்பா மாறிடுது?” என்பது ஜனனியின் புதிய சந்தேகம். “எனக்கு அப்பவே தெரியும். இந்த கேஸ் நிக்காதுன்னு’ என்பது போல் சொன்னார் அமுதவாணன். ஜனனியின் சந்தேகத்திற்கு ‘அப்படில்லாம் நெனக்காத’ என்று சமாதானம் சொன்னார் ஷிவின்.

தன்னைக் கடந்து சென்ற விக்ரமனை ஜனனி குழப்பத்தோடு அழைக்க ‘இலங்கை.. தமிழ்... நல்லா இல்லைன்னு நான் சொன்னதா dirty game ஆடிட்டிங்களே?’ என்று அடிபட்ட முகத்துடன் விக்கிரமன் கேட்டார். இது எத்தனை சென்சிட்டிவ்வான பிரச்சினை என்பது அவருக்குத் தெரியும். ‘நேர்மையா சொல்றேன்.. நான் செந்தமிழ் என்கிற அர்த்தத்தில்தான் சொன்னேன்’ என்று விக்ரமன் விளக்கம் தர “செந்தமிழ்ல நான் எங்க பிழை விட்டேன்?’ என்று இன்னமும் குட்டையைப் குழப்பினார் ஜனனி.

கதிரவன், க்வீன்சி நடத்திய ‘லவ் டிராக் டிராமா’

அடுத்ததாக கதிரவனும் க்வீன்சியும் இணைந்து ஒரு டிராமாவை நிகழ்த்தினார்கள். ஷிவினுக்கு கதிரவன் மீது ஒரு ‘க்ரஷ்’ இருப்பது தெரியும். அதை வைத்து அவரை கிண்டலடிக்கலாம் என்று க்வீன்சி முடிவு செய்தார். எனவே கதிரவன் அணிந்திருந்த அதே நிற ஆடையை அணிந்து கொண்டார். ‘நான் கதிர் பக்கத்துல போய் உட்காருகிறேன். நீ ஷிவினை கூப்பிடு’ என்று ஆயிஷாவிடம் தன் திட்டத்தை விளக்கினார்.

அதன்படி கதிரவனின் பக்கத்தில் சென்று க்வீன்சி அமர்ந்து கொள்ள, கதிரவன் அழுவது போல் பாவனை செய்தார். “க்வீன்சி என்னமோ சொல்லிட்டாங்க.. கதிர் அழறாரு" என்று ஷிவினிடம் சென்று ஜாலி பட்டாசு கொளுத்தினார் ஆயிஷா. மைனாவும் ஷிவினை கிண்டல் செய்தார். இந்தச் சம்பவங்களால் ஷிவினின் முகம் மாறியது என்றாலும் அதிகம் ரியாக்ட் செய்யாமல் இருந்தது புத்திசாலித்தனம். “நான் ஏன் பார்க்கணும்?” என்று மைனாவிடம் சொன்னாலும் கண்ணாடி வழியாக நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தார்.

பிக் பாஸ் 6 நாள் 46: க்வீன்சி, கதிரவன்
பிக் பாஸ் 6 நாள் 46: க்வீன்சி, கதிரவன்

இந்த டிராமாவில் இன்னொரு டிவிஸ்ட்டும் நடந்தது. அது க்வீன்சிக்கு பூமராங் எபெக்ட்டை தந்தது. க்வீன்சியின் ஓவர்ஆக்ட் காரணமாக, கதிரவன் கோபித்துக் கொண்டது போல் பாவனை செய்ய, இதனால் வருத்தமடைந்த க்வீன்சி பாத்ரூமிற்குச் சென்று அழ, “ஹேய். இதுவும் டிராமாதான்" என்று சமாதானப்படுத்தினார் மணிகண்டன். இந்தக் களேபரத்தில் வீட்டிலிருந்த ‘வாத்து கொக்கு பொம்மையை’ க்வீன்சி உடைத்து விட, ‘அனைத்து காமிராக்களின் முன்பும் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்றார் பிக் பாஸ். வீட்டின் கேப்டனான மைனா இதைக் கண்காணிக்க வேண்டும்.

பிக் பாஸ் அழைக்கும் போதெல்லாம் ‘ஹாங்...’ என்று மைனா செய்யும் ரியாக்ஷன் ரசிக்கத்தக்கதாக இருக்கிறது. ‘அடியே இவளே..’ என்று வீட்டில் அம்மா அழைக்கும் போது மகள் தரும் இயல்பான மாடுலேஷன் மைனாவின் ரியாக்ஷனில் இருக்கிறது.

வழக்கு எண்.6 – அசிம் ஆப்பிள் திருடிய வழக்கு

‘அசிம் இரவு நேரத்தில் ஆப்பிள், தயிர் போன்றவற்றை திருடி சாப்பிட்டு விடுகிறார். இதனால் உணவுப்பற்றாக்குறை ஏற்படுவதோடு என் மீதும் வீண் சந்தேகம் வருகிறது’ என்பது தனலஷ்மியின் புகார். ஆனால் இந்த வழக்கு நீதிமன்றத்தில் மிக காமெடியாக மாறியது.

தனலஷ்மியின் வழக்கறிஞராக ஆஜர் ஆன கதிரவன் ‘இதோ பாருங்க முக்கியமான எவிடென்ஸ். இதெல்லாம் மத்தவங்க எடுத்துக்கற ஊட்டச்சத்து மருந்து. அந்த அளவிற்கு எடுத்துச் சாப்பிட்டு உணவுப்பற்றாக்குறையை அசிம் ஏற்படுத்துகிறார். இதன் இன்னொரு முக்கிய சாட்சி, அசிம் செரிமானத்திற்காக சாப்பிடும் மருந்து பாட்டில் இதோ’ என்று கதிரவன் சொன்னதும் வெடிச்சிரிப்பு எழுந்தது. இதில் கூடுதலாக “பாருங்க யுவர் ஆனர். இது செரிமான மருந்துன்னு கூட தெரியாம ஜூஸ்ன்னு நெனச்சு குடிச்சிட்டு இருந்திருக்காரு’ என்று இன்னொரு பட்டாசை கதிரவன் கொளுத்திப் போட நீதிபதியாக இருந்த மைனாவால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

பிக் பாஸ் 6 நாள் 46: மைனா
பிக் பாஸ் 6 நாள் 46: மைனா

அசிமின் சார்பில் ஆஜரான ஜனனி ‘சிரிப்பு வக்கீலாக’ மாறினார். ‘அப்படியென்ன தவறு செய்து விட்டார் என் கட்சிக்காரர்?’ என்று இவர் ஆரம்பிக்கும் போதே கோர்ட் வெடித்து சிரித்தது. ‘உணவு வீணாகக் கூடாதென்று திருடித் தின்றது குற்றமா?’ என்று சேம் சைட் கோல் போட்டார் ஜனனி. இப்படி சொதப்பலாக வாதாடினாலும் சாட்சியங்கள் வலுவாக இருந்ததால் இந்த வழக்கில் அசிம் – ஜனனி தரப்பிற்கு வெற்றி கிடைத்தது. ‘நியாயம் ஜெயித்து விட்டது’ என்று உற்சாகமான அசிம், இன்னொரு ஆப்பிளை ஜாலியாக திருடித் தின்றார். பழத்தை கழுவி விட்டுத்தான் சாப்பிடுவார்கள். ஆனால் சாப்பிட்டு விட்டு கழுவுவது அசிமின் ஸ்டைல் போல.

வழக்கு எண்.7 – கதிரவன் போட்ட ‘களேபர’ வழக்கு

``மக்கள் உணவு சாப்பிட்டு விட்டு தட்டு மற்றும் கோப்பைகளை கழுவாமல் ஆங்காங்கே வைத்து விடுகிறார்கள். எனவே வீட்டின் தலைவரான மைனா மீது வழக்கு தொடுக்கிறேன்” என்று கதிரவன் சொல்ல, முதலில் ஒப்புக் கொண்டாலும் ‘பிக் பாஸ் கமிட்டி’ இதை நிராகரித்து விட்டதாக பிறகு சொன்னார் பிக் பாஸ். “இந்தப் பிரச்சினை நீண்ட நாட்களாக நடக்கிறது. மேலும் மைனா பதவியேற்று மூன்று நாட்கள்தான் ஆகிறது" என்று அவரின் விளக்கம்.

‘ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களின் மீது இந்த வழக்கை மாற்றலாம்’ என்பது பிக் பாஸின் ஆலோசனை. ஆனால் “யாருன்னு சரியாத் தெரியலையே?” என்று குழம்புவது போல் கதிரவன் நடித்தது, நிச்சயம் ஒரு சேஃப் கேம். ‘இத்தனை நாட்கள் இந்த வீட்டில் இருக்கும் நீங்கள் அதைப் பார்த்திருக்க மாட்டீர்களா?’ என்று சரியான பாயின்ட்டை சுட்டிக் காட்டினார் பிக் பாஸ். “நீங்களே ஐடியா கொடுங்களேன்” என்று கதிரவன் குழம்பினார். ஆனால் பிக் பாஸ் விலாங்கு மீன். இதில் எல்லாம் மாட்டுவாரா என்ன?

பிக் பாஸ் 6 நாள் 46: பிக் பாஸ் வீடு
பிக் பாஸ் 6 நாள் 46: பிக் பாஸ் வீடு

கடைசியில் ‘ஏழு நபர்கள் கொண்ட குழு’வின் மீது பொதுநல வழக்கு போட முடிவு செய்தார் கதிரவன். இதற்காக மணிகண்டனை வழக்கறிஞராக நியமித்தார். “என்னது.. எங்கள் மீது குற்றமா?” என்று எழுவர் குழு அதிர்ச்சியடைந்து இந்த வழக்கை எதிர்கொள்ள ரச்சிதாவை வக்கீலாக நியமித்தார்கள். இந்த வழக்கை விசாரிப்பதற்கான நீதிபதி தேர்வு நடந்தது. விக்ரமனும் க்வீன்சியும் இதற்காக மோதினார்கள். ‘விக்ரமன் இருந்தால் சரியாக இருக்கும்’ என்று பலரும் எதிர்பார்த்தார்கள். விட்டுத் தருவதற்கு க்வீன்சியும் தயாராக இருந்தார். என்றாலும் க்வீன்சிதான் நீதிபதியாக முடிவு செய்யப்பட்டார். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் இந்த வழக்கின் பிரதான குற்றவாளியே க்வீன்சிதானாம். உணவுப்பாத்திரங்களை அப்படியே போட்டு விடுவது அவர்தானாம்.

இந்த ‘களேபர’ வழக்கின் முடிவு என்னவாகிறது என்பதை அடுத்த எபிசோடில் பார்ப்போம்.