ஜனனி வெளியேறியது நிச்சயம் ஒரு டிவிஸ்ட். ஏனெனில் இணையத்தின் ‘மாதிரி வாக்கெடுப்பில்’ ஏடிகேவின் பெயர்தான் கடைசியில் இருந்தது. ஆனால் ஜனனி போன்ற சுமாரான போட்டியாளர்கள் வெளியேறுவது ஒருவகையில் நல்லதுதான். சுமை குறைந்தால்தான் ஒரு பயணத்தின் வேகம் அதிகமாகும்.

ஜனனி வீட்டிற்குள் வரும் போது பல பார்வையாளர்களின் மனங்களைக் கொள்ளை கொண்டிருப்பார். ‘வடிவான’ தோற்றம், மிக இளமையான போட்டியாளர், கொஞ்சும் தமிழ், குழந்தையின் உடல்மொழி என்று புறவயமாக அவருக்கு பல நல்ல அம்சங்கள் இருந்தன. ஆனால் ஒரு நபர் அழகாவது புறவயமான தோற்றத்தால் மட்டுமல்ல. அழகு உள்ளேயும் இருக்க வேண்டும். புறணி பேசுதல், வில்லங்கமான வார்த்தைகளை விடுதல், தொட்டதெற்கெல்லாம் கோபம், அழுகை, சண்டை என்று அவரிடமிருந்த எதிர்மறையான குணங்களைக் கவனித்த போது மெல்ல மெல்ல எரிச்சல் வர ஆரம்பித்தது.
‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ திரைப்படத்தின் ஹீரோயின் கேரக்ட்டரின் நிஜ வடிவம்தான் ஜனனியைப் போன்றவர்கள். வளர்ந்த பிறகும் தங்களை குழந்தைகளாக கற்பனை செய்து கொள்வது, மற்றவர்களும் தன்னை குழந்தையாக கையாள வேண்டும் என்று செல்லத்தை எதிர்பார்ப்பது, யாரையாவது எப்போதும் சார்ந்திருப்பது போன்ற விஷயங்கள் அவர் மீதான கவர்ச்சியை மங்க வைத்து விட்டன. ‘ஜனனி வெளியே போனால் போதும்’ என்றாகி விட்டது. ஆனால் அவருடைய பயண வீடியோவைப் பார்க்கும் போது மனம் சற்று இளகி நெகிழ்ந்து போனது. அதன் பிரதிபலிப்பு கமலிடமும் தெரிந்தது.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?
ஸ்போர்ட்ஸ் கோச், ரயில்வே டிடிஆர் ஆகிய இரண்டின் நேர்த்தியான கலவை மாதிரி தெரிந்த கோட், சூட்டில் வசீகரமாக நுழைந்தார் கமல். “யாரு நேர்மையா விளையாடினதுன்னு ஒரு கேள்விதான் கேட்டேன். அவங்களே அதை வெளிப்படுத்திட்டாங்க” என்கிற சுருக்கமான முன்னுரையுடன் அகம்டிவி வழியாக உள்ளே நுழைந்தார்.

“மறுபடியும் அதே மாதிரி உக்காந்திருக்கீங்க. மாறி உக்காருங்க. மைனா, கதிரவன்.. எப்பவும் ரைட்டா... லெஃப்ட்ல வாங்க. ரச்சிதா. நீங்க ரைட்ல வாங்க.. மணி பக்கத்துல உக்காருங்க’ என்று ஆட்டையைக் கலைத்து விட்டு விசாரணைக்கு தயாரானார். “இங்க யாரு அடிக்கடி சீன் கிரியேட் பண்றது.. இரண்டு பெயர்களைச் சொல்லணும்?” என்பது கமல் வைத்த முதல் கேள்வி. முதலில் எழுந்த தனலஷ்மி “அப்படி யாரும் இல்லையே?!’ என்பது போல் தயங்கி விழித்து தோசை மாவில் குஷ்பு இட்லியை ஒளித்து வைக்க முயன்றார். கமலின் முன்னால் இப்படி இவர்கள் நடிப்பதைக் காணும் போதெல்லாம் நமக்கு எரிச்சல்தான் வருகிறது.
“யாருமே இல்லையா.. அப்படின்னா இவ்ள சத்தம் எப்படி வருது?” என்று கமலும் தனலஷ்மியுடன் இணைந்து வியந்த போது அசடு வழிந்த தனலஷ்மி, ஷிவின் மற்றும் விக்ரமன் பெயரைச் சொன்னார். ஜனனி எழுந்த போது ‘தோசை மாவு’ பிரச்சினையை இழுக்க “அதை விட்டுடுங்களேன். போதும். தோசை கருகிடும்” என்று கமல் அடித்த கமெண்ட்டிற்கு வாய் விட்டு சிரித்தார் ஷிவின்.
சிரிச்சா மாதிரியே முகத்தை வைத்து சமாளிக்கும் அசிம்
ஏதோ பிஹெச்டி பேப்பர் சப்மிட் செய்வது போல ‘Vibrant Scene Creator’, ‘Silent Scene Creator’ என்றெல்லாம் பெயர்கள் வைத்து தனது வியாக்கியானத்தை சொன்ன அசிம், ஷிவின் மற்றும் விக்ரமனை சுட்டிக் காட்டினார். வழக்கம் போல் கமலிடமிருந்து அசிமிற்கு பூமராங்க் எபெஃக்ட் ஷாட்கள் வந்தன. “இருக்கறதுலயே loudest voice ஆன உங்க கிட்ட இருந்து இந்தக் கமெண்ட் அவங்களுக்கு கிடைக்கறது வசிஷ்டர் வாயால பிரம்மரிஷி பட்டம் வாங்கற மாதிரிதான். அப்புறம் அசிம்.. ஒருத்தரோட தொழிலைக் குறிப்பிட்டு கிண்டல் செய்யறதை நீங்க ஒரு பழக்கமாவே வெச்சிருக்கீங்க. அது இங்க வேணாம். மணி சொன்ன மாதிரி நாம ஏன் ஒரு ‘சுமூகமான சமூகமா இருக்கக்கூடாது?’ என்றெல்லாம் அசிமிற்கு கமல் ஆப்பு வைத்தார்.

அசிமிடம் உள்ள ஒரு நல்ல பழக்கம் என்னவெனில், என்னதான் கடுமையான விமர்சனங்களை கமலிடமிருந்து வாங்கினாலும், தனலஷ்மி போல் அடுத்த நொடியே தன் டெரரான ரியாக்ஷனை காட்டுவதில்லை. ‘சிரிச்சா மாதிரியே முகத்தை வைத்துக் கொண்டு’ கடப்பாறை முழுங்கி லிச்சி ஜூஸ் அருந்துவார். ஏடிகேவிற்கான காரணத்தை கதிரவன் சொன்ன போது, ‘விக்ரமன் தவறுதலாக சொன்ன வார்த்தை கூட ஏடிகேவின் கோபத்திற்கு காரணமாக இருக்கலாம்’ என்று கமல் கண்டுபிடித்து சொன்னதை தலையசைப்பின் மூலம் ஆமோதித்தார் ஏடிகே.
‘யார்அதிகம் சீன் கிரியேட் செய்யறது?’ என்கிற இந்த டாஸ்க்கின் இறுதியில் எதிர்பார்த்தபடியே அசிம் மற்றும் தனலஷ்மியின் பெயர்கள் அதிகமாக வந்தன. ‘நான் எனக்காகத்தான் பேசறேன்” என்று தனலஷ்மி விளக்கம் அளிக்க “நான் மத்தவங்களுக்காக பேசித்தான் மாட்டிக்கறேன்” என்று அசிம் சொன்னார். “இதைத்தான் தானே போய் ஆப்புல உக்கார்றதுன்னு சொல்லுவாங்க.. மத்தவங்களுக்காக பேசறதைத்தானே விக்ரமனும் செய்யறாரு?” என்று அசிமிற்கு வலுவான செக்மேட் வைத்தார் கமல்.
நீண்ட நேரமாக தன் விளக்கத்தை அளிக்க காத்திருந்த விக்ரமன் எழுந்து “அசிம் மத்தவங்க விஷயத்துல பேசறது சுமூகமா முடியல. இவர் போய் விடற அதீதமான வார்த்தைகள் பலரைக் காயப்படுத்துது. Attention seeking பண்றாரு” என்று அசிமின் ஸ்ட்ராட்டஜியை அம்பலப்படுத்த “இது சீன் கிரியேட் இல்ல. சீன் ஸ்டீலிங்.. சில நடிகர்கள் சட்டுன்னு ஒரு குட்டிக்கரணம் போட்டு கவனத்தை ஈர்த்து சீனை கெடுத்துடுவாங்க” என்ற கமல் ‘இங்க ரச்சிதா தவிர மத்தவங்க எல்லோருமே சண்டை போட்டிருக்காங்க.. நான் கூட வெளில போட்டிருக்கேன். ஆனா உணர்ந்தோம்னா.. இந்த கெட்ட பழக்கத்தை குறைச்சுக்கலாம். அதுக்காகத்தானே மக்கள் உங்களுக்கு ஒரு வாய்ப்பு தந்திருக்காங்க. அசிம் நீங்க SAVED” என்று சொல்ல, வசூல்ராஜா பிரகாஷ்ராஜ் சிரிப்புடன் அந்த இனிப்புச் செய்தியை ஏற்றுக் கொண்டார் அசிம்.

அப்ரைசல் டைம் – அழுகினி ஆட்டம் ஆடிய தனலஷ்மி
கமலின் தலை மறைந்ததும் மக்கள் தங்களுக்குள் பேசிக் கொள்ள ஆரம்பித்தார்கள். “மக்கள் என்னை வறுத்தெடுத்து விட்டு அப்புறம் காப்பாத்தியிருக்காங்க” என்று அதையும் பெருமையாக சொல்லிக் கொண்டார் அசிம். “பத்து பேர் இருந்தாலும் ஷிவினுக்குத்தான் விக்ரமன் சப்போர்ட் பண்ணுவாரு’ன்னு அசிம் சொல்றதுக்கும் மக்கள் கைத்தட்டறாங்களே?!” என்று ஷிவின் ஆதங்கத்துடன் வியக்க, இசை நடத்துனர் மாதிரி சைகை காட்டினார் தனலஷ்மி. கமல் சொல்வதற்கு ஏற்ப மக்களும் ரியாக்ட் பண்றாங்க.. என்பது அதன் பொருளா?
கமல் நுழைவதற்கு முன்பு கதிரவனும் தனலஷ்மியும் பேசிக் கொண்டார்கள். “ஜனனி – விக்ரமன் மேட்டர் இவ்ள பெரிசாவும்ன்னு நெனக்கல” என்று தனலஷ்மி ஆதங்கப்பட, “நீ கேம்ல ஃபோகஸ் பண்ணு.. சமயங்கள்ல இப்படி ஆகிடும். பார்க்கலைன்னா.. பார்க்கலைன்னு சொல்லிடு” என்று கதிரவன் சரியான ஆலோசனையைத் தந்தார். குறும்படம் போடப்பட்டு சரியான வெற்றியாளர் அடையாளம் காட்டப்பட்ட பிறகும் கூட “ஜனனி போனதை நான் பார்த்தேன்” என்று இன்னமும் தனலஷ்மி சொல்லிக் கொண்டிருப்பதையெல்லாம் எப்படி புரிந்து கொள்வது என்றே தெரியவில்லை. ஒரு முக்கியமான சமயத்தில், ஒருவரின் வெற்றி தடுக்கப்படுவதை “இவ்ளோ பெரிசா ஆகும்ன்னு நெனக்கலை” என்கிறார் தனலஷ்மி. இதே அநீதி இவருக்கு இழைக்கப்பட்டிருந்தால் இத்தனை சும்மாவா விட்டிருப்பார்?!
கமல் உள்ளே நுழைந்ததும் ‘Self appraisal time’ என்று புதிய ஆட்டத்தை துவக்கி வைத்தார். ஒவ்வொருவரும் தனக்கான புள்ளிகளை நேர்மையான சுயபரிசீலனையுடன் வழங்க வேண்டும். பிறகு அடுத்தவரின் புள்ளிகளில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். இதில் ஏறத்தாழ அனைவரும் நேர்மையாக ஆடினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் வழக்கம் போல தனலஷ்மியின் ஆட்டம் போங்காட்டமாக இருந்தது. தனக்கு அதிக புள்ளிகளை வைத்துக் கொண்ட அவர், பிறகு மைனாவிடமிருந்து கணிசமாக உருவி அநியாயம் செய்தார். ஏடிகே வரும் போது தனலஷ்மியின் புள்ளிகளை எடுக்க மக்களிடமிருந்து கைத்தட்டல் வர, தனத்தின் ரியாக்ஷன் டெரராக இருந்தது.

இந்த ஆட்டம் முடிந்த பிறகு ஸ்கோர் போர்டைப் பார்க்க ரகளையாக இருந்தது. இருப்பதிலேயே குறைந்த மார்க் மைனாவிற்குத்தான். அது தனலஷ்மியின் கைங்கர்யம். “இது இவங்க கணிப்பா இருக்கலாம். நான் எதையும் ஈஸியாத்தான் எடுத்துப்பேன். மக்கள் மனசுல இடம் இருக்குன்னு நம்பறேன்” என்று மைனா ஸ்போர்டிவ்வாக சொல்ல, அடுத்த வரிசையில் இருந்த தனலஷ்மி “நான் கேமை சரியாத்தான் ஆடறேன்” என்று சாதித்தார்.
அதிகமான எண்ணிக்கையைப் பெற்றதில் விக்ரமனும் மணிகண்டனும் இருந்தார்கள். “சக ஹவுஸ்மேட்ஸ்களுக்கு நன்றி. இப்பத்தான் ‘Boring performer’ தந்தாங்க. இப்ப இதைத் தந்திருக்காங்க” என்று விக்ரமன் நன்றி சொல்ல “ஆனா ஷோ் மார்கெட் மாதிரி உங்க பாயிண்ட்ஸ்ல ஏற்ற இறக்கங்கள் இருந்துட்டே இருந்தது. பார்த்தீங்களா?” என்று மெலிதான எச்சரிக்கையை விக்ரமனுக்குத் தந்தார் கமல். மணிகண்டனின் வெற்றி நட்பின் அடிப்படையில் அமைந்ததோ என்று தோன்றியது. குறிப்பாக மைனாவுடைய புள்ளிகளை கணிசமாக எடுத்து மணிகண்டனின் இடத்தில் தனலஷ்மி அழிச்சாட்டியமாக வைத்தது இந்த திருப்பத்திற்கு காரணமாக இருக்கலாம்.
‘மணிக்கு உண்மையை உணர்த்தவே இந்த நாடகத்தை யாம் நிகழ்த்தினோம்’ – கமலின் குறும்பு
“நாமினேட் ஆனவங்கள்லாம் ஒண்ணா உக்காருங்க’ என்று சொல்லி விட்டு மறைவானார் கமல். இப்போதெல்லாம் ஷிவினுக்கு அதிகமான கோபம் வருவதைப் பற்றி ரச்சிதா சொல்லிக் கொண்டிருக்க, அதற்கு ஷிவின் விளக்கம் அளித்தார். “எனக்கு ஏன் மக்கள் கைத்தட்ட மாட்றாங்க? ஹர்ட் ஆகுது” என்று ஆதங்கப்பட்டார் மணி. குறைந்த புள்ளிகள் பெற்று கவலையாக இருந்த மைனாவிடம் ‘உங்களுக்கு கைத்தட்டல் வந்தது.. பார்த்தீங்களா?” என்று ஆறுதல் சொன்னார் கதிரவன்.
பிரேக் முடிந்து திரும்பிய கமல் “யார் போவாங்கன்னு நெனக்கறீங்க?” என்கிற வழக்கமான வசனத்தை சொல்ல, நாமினேஷன் பட்டியலில் மீதமிருந்த மணி, ஜனனி, ஏடிகே ஆகிய மூவருமே ‘நான்தான். நான்தான்..’ என்று போட்டி போட்டார்கள். ஜனனியின் பெயரை அமுதவாணன் சொன்னதும் அனைவரும் சிரிக்க, பாவனையாக ஜெர்க் ஆன கமல் அதைப் பற்றி விசாரிக்க “அதனாலதான் அவங்க போவாங்கன்னு நெனக்கறேன்” என்று அடிபட்ட முகத்துடன் அமுதவாணன் சொன்னதில் வலுவான பொருள் இருந்தது. “ஓ.. பிரிந்ததா கூட்டணி?” என்று சர்காஸ்டிக்காக கேட்டார் கமல்.

பிறகு கமல் ஆடிய நாடகம் சற்று ‘கிம்மிக்ஸ்’ ஆக இருந்தாலும் சற்று சுவாரசியமாக இருந்தது. “மூணு பேருமே போட்டி போடறீங்க.. மணிகண்டன் முன்னாடி சொன்ன ஒரு ஐடியா மாதிரி சீட்டு குலுக்கிப் போட்டு எவிக்ஷனை தேர்ந்தெடுக்கலாம். இந்தக் குடவோலை முறை ராஜராஜன் காலத்துல இருந்து இருக்கு. மக்களுக்கும் அதுதான் பிடிச்சிருக்காம்’ என்று ஜாலியாக முன்னுரை தந்து மூன்று சீட்டுக்களை குலுக்கி ஏடிகேவை எடுக்க வைத்தார். அதில் ‘மணிகண்டா’ என்று இருக்கவே மணி அதிர்ச்சி அடைந்தார். அவரை விடவும் மைனாவின் அதிர்ச்சிதான் அதிகமாக இருந்தது.
“மணிகண்டன். இருங்க பேசலாம்” என்று நமட்டுச் சிரிப்புடன் கமல் எழுந்து செல்ல, மக்களுக்கு சஸ்பென்ஸ் தாங்கவில்லை. ‘நான் வெளிய போறேன்’ என்று மணிகண்டன் பாவனையாக சொல்ல ‘இரு.. அவரு முடிவைச் சொல்லல” என்று மற்றவர்கள் ஆற்றுப்படுத்தினார்கள். மறுபடியும் எவிக்ஷன் கார்டுடன் பூனை மாதிரி நடந்து வந்த கமல் “அதிர்ஷ்டத்தின் மூலம் ஒருவரைத் தேர்ந்தெடுப்பது தவறு. அது சரியான முறையல்ல. நியாயமாக விவாதித்து ஒரு முடிவை எட்டுங்கள். இந்த உண்மையை மணிக்கும் மற்றவர்களுக்கும் உணர்த்தவே இந்த நாடகத்தை யாம் நிகழ்த்தினோம்’ என்று சஸ்பென்ஸை உடைத்த பின்னர்தான் மற்றவர்களுக்கு மூச்சு வந்தது. குறிப்பாக மைனா ஹாப்பி அண்ணாச்சி. (மூன்று சீட்டுக்களிலும் மணியின் பெயர்தான் எழுதப்பட்டிருக்கும் என்பது எளிதான யூகம்).

மணிகண்டன் காப்பாற்றப்பட்ட செய்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும் ஜனனிக்கும் ஏடிகேவிற்கும் திகில் நீடித்தது. மீண்டும் சிறிய சஸ்பென்ஸை எழுப்பிய கமல், ‘ஜனனி’ என்கிற பெயர் போட்ட கார்டை நீட்டி நாடகத்தை ஒருவழியாக முடித்தார். “என் பொருள்லாம் பார்த்து கவனமா அனுப்பிச்சிடுங்க” என்று அங்குமிங்கும் உலவிய ஜனனியின் பின்னாலேயே திரிந்தார் அமுதவாணன். “வெளிய உனக்கு பெரிய வாய்ப்பு இருக்கு” என்று கமலை விடவும் அதிகமாக உருட்டினார் அசிம். ‘பிக் பாஸ் கவனமா இருங்க. மண்ட பத்ரம்’ என்று அவருக்கே எச்சரிக்கையைத் தந்து விட்டு வெளியே சென்றார் ஜனனி.
புத்தகப் பரிந்துரை – ஆடு ஜீவிதம் – மலையாள நாவல்
பிரேக் முடிந்து திரும்பிய கமல், அடுத்ததாக புத்தகப் பரிந்துரை பகுதிக்கு வந்தார். இந்த வாரம் அவர் அறிமுகப்படுத்திய நூல் ‘ஆடு ஜீவிதம்’. கேரள சாகித்ய அகாதமி விருது பெற்ற இந்த மலையாள நாவலின் இரண்டு தமிழ் மொழி பெயர்ப்புகள் வெளிவந்துள்ளன. பொருளாதாரக் காரணத்திற்காக வளைகுடா நாட்டிற்கு செல்கிறான் நஜீப் என்கிற இளைஞன். ஆடுகளை மேய்க்கிற இயந்திரத்தனமான பணியினுள் அவன் தள்ளப்படுகிறான். சுற்றிலும் ஆள் நடமாட்டமேயில்லாத பாலைவனம். கடுமையான வெப்பம் வீசும் அந்தப் பிரதேசத்தில் அவனும் ஆடுகளும் மட்டுமே. தப்பித்துச் செல்வது எளிதல்ல. ஒரு கட்டத்தில் ஆடுகளோடு அவனும் ஒரு ஆடாக மாறுகிறான். ஒரு தனிமனிதனின் வாதையின் சூடும் இறுக்கமும் நிறைந்த இந்த அனுபவத்தை வலி மிகுந்த சொற்களால் விவரிக்கிறது இந்த நாவல். இன்னொரு நோக்கில் ஆன்மீக அனுபவத்தையும் தருகிறது. இந்த நாவல் பிளெஸ்ஸியின் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைப்பில் திரைப்படமாகவும் தயாராகிக் கொண்டிருக்கிறது.

மேடைக்கு வந்த ஜனனியை கனிவாக வரவேற்றார் கமல். “இவ்வளவு நாள் என்னை இருக்க வெச்ச மக்களுக்கு நன்றி” என்று கலங்கியபடி ஜனனி சொல்ல “இருப்பதிலேயே வயதில் இளையவர் நீங்கள். ஆனால் உங்களை விட பெரியவர்களாக இருந்தவர்களும் அதே சறுக்கல்களைச் சந்தித்தார்கள்” என்று அவருக்கு ஆறுதல் சொன்ன கமல், ஜனனியின் பயண வீடியோவை திரையிட்டார். அதில் ஜனனியின் பல ‘க்யூட்’டான தருணங்களைப் பார்த்த போது இவை மட்டுமே இருந்திருந்தால் ஜனனியின் பயணம் இன்னமும் நீண்டிருக்கும் என்று தோன்றியது. வீடியோ முடிந்ததும் “ப்பா.. இதுவே போதும்” என்று கலங்கி காலில் விழுந்த ஜனனியை அரவணைத்துக் கொண்டார் கமல்.
வெளியேறிய ஜனனி – கலங்கிய அமுதவாணன்
பிறகு நிகழ்ந்தது அந்த காமெடி. ‘நண்பர்களை சந்திக்க அகம் தொலைக்காட்சி வழியே உள்ளே போகலாமா?” என்று கமல் கேட்க, நேராக திரையை நோக்கி நடந்தார் ஜனனி. (டெக்னாலஜி இன்னமும் அந்த அளவிற்கு முன்னேறவில்லை). பிறகு ரைட் டர்ன் எடுத்து இன்னொரு பக்கம் அவர் திரும்பிச் செல்ல, கமலே பதறி “இங்க வாங்க” என்று பிடித்து வைத்துக் கொள்ள வேண்டியிருந்தது. வீடியோவின் வழியாக நண்பர்களைச் சந்தித்த ஜனனி, வழக்கமான மழலை மொழியில் ‘கவனமா விளையாடுங்கோ” என்று சொல்லி விடைபெற்றார்.

ஜனனியின் பிரிவால் கலங்காதது போலவே அதுவரை இருந்த அமுதவாணனால் அதற்கு மேல் தாங்க முடியவில்லை. காமிரா கண்ணில் படாமல் அழ வேண்டும் என்பதுதான் அவரது நோக்கமாக இருந்தது. ஒளிந்து ஒளிந்து அழுதார். மற்றவர்கள் ஆறுதல் சொல்லச் சொல்ல உடைந்து கதறினார். ‘அமுது.. அமுது..’ என்று ஜனனி அனத்திக் கொண்டேயிருக்கிற குரல் அவரது மனதில் எதிரொலித்திருக்க வேண்டும். ‘அவளோட வீட்ல இருந்து வர்ற வரைக்குமாவது ஜனனி இருந்திருக்கலாம்” என்று தனலஷ்மி ஆதங்கப்பட “அதுக்குத்தான் நாமினேஷன் ஃப்ரீ ஜோன்ல அவளை வரவழைச்சேன். வீணாப் போச்சு” என்று இதிலும் தற்பெருமை பேசினார் அசிம். ஜனனி இருக்க வேண்டுமென்றால் அவர்தான் விளையாட வேண்டும். அந்த வெற்றிதான் ஜனனிக்கும் பெருமை.
மனம் உடைந்து வாய் விட்டு கதறி அழுது சுருண்டு படுத்துக் கொண்ட அமுதவாணனை விக்ரமனும் ஷிவினும் கட்டியணைத்து ஆறுதல் சொன்னார்கள். ஆக வீட்டின் எண்ணிக்கை பத்தாக குறைந்திருக்கிறது. வைல்ட் கார்ட் போன்ற ஆச்சரியங்கள் நிகழுமா? போட்டி இன்னமும் விறுவிறுப்பாகுமா? காத்திருந்து பார்ப்போம்.