Published:Updated:

Bigg Boss 6: பொது மக்களிலிருந்து போட்டியாளர்கள், அடிபடும் பிரபலங்களின் பெயர்கள் - ஆரம்பிக்கலாங்களா?!

Bigg Boss Season 6

பிக் பாஸ் நிகழ்ச்சி முதன் முதலாக தமிழில் வந்து இறங்கிய போது நமக்கு மிக மிக அந்நியமாக இருந்தது. "என்னது... பிரபலங்களை ரூம்ல போட்டு அடைச்சு வக்கறதை நாம வேடிக்கை பார்க்கணுமா?” என்று விநோதமாக கருதினோம். இப்போது இந்த ஃபார்மேட்டும் ரூல்ஸூம் நமக்குப் பழகிவிட்டன.

Bigg Boss 6: பொது மக்களிலிருந்து போட்டியாளர்கள், அடிபடும் பிரபலங்களின் பெயர்கள் - ஆரம்பிக்கலாங்களா?!

பிக் பாஸ் நிகழ்ச்சி முதன் முதலாக தமிழில் வந்து இறங்கிய போது நமக்கு மிக மிக அந்நியமாக இருந்தது. "என்னது... பிரபலங்களை ரூம்ல போட்டு அடைச்சு வக்கறதை நாம வேடிக்கை பார்க்கணுமா?” என்று விநோதமாக கருதினோம். இப்போது இந்த ஃபார்மேட்டும் ரூல்ஸூம் நமக்குப் பழகிவிட்டன.

Published:Updated:
Bigg Boss Season 6
பிரியமுள்ள பிக் பாஸ் உறவுகளே! நலம்தானே? மீண்டும் உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி...
மறுபடியும் பிக் பாஸ். இது ஆறாவது சீசன்.

‘ஹைய்யா... புது சீசன் ஆரம்பிக்கப் போகுது’ என்று சந்தோஷம் அடைபவர்களும் உண்டு. ‘அடப்போங்கய்யா... மீண்டும் பிக் பாஸா?’ என்று சலித்துக் கொள்பவர்களும் உணடு. மனம் தளர வேண்டாம். எப்படியும் இந்த சீசன் ஆரம்பித்தவுடன் இரண்டு தரப்புமே தானாக உள்ளே வந்து ஒவ்வொரு போட்டியாளரைப் பற்றியும் உற்சாகமாக வம்பு பேசத்தான் போகிறோம். ஒவ்வொரு சம்பவத்தைப் பற்றியும் நோண்டி நுங்கெடுத்து சமூக வலைத்தளங்களில் கொலைவெறியுடன் அலசத்தான் போகிறோம்.

எனவே கொரானாவுடன் வாழப் பழகிக் கொண்டது போல இந்த ‘விடாது கருப்பு’ பிக் பாஸூடனும் குடும்பம் நடத்த இப்போதே தயாராகிக் கொள்வோம்.

Bigg Boss Season 6
Bigg Boss Season 6

மனசாட்சி என்னும் கேமரா

நீங்கள் சலித்துக் கொண்டாலும் பரவாயில்லை, இந்த ஆதாரமான விஷயத்தை மறுபடியும் நினைவுப்படுத்தி விடுகிறேன். பொதுவாகவே ரியாலிட்டி ஷோக்கள் பொழுதுபோக்கை அடிப்படையாகக் கொண்டவை; வணிக லாபத்தை பிரதானமாகக் கொண்டவை. அதிலும் பிக் பாஸ் என்பது இருபக்கமும் கூர்முனை கொண்ட கத்தி மாதிரி.

இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களைப் பற்றி வம்பு பேசி நமக்குள் இருக்கிற கீழ்மைகளை வழக்கம் போல் மறைத்துக் கொள்ள வேண்டாம். மாறாக நம்மை நாமே சுயபரிசீலனை செய்து கொள்வதுதான், பொழுதுபோக்கைத் தாண்டி இந்த நிகழ்ச்சியின் மூலம் நமக்குக் கிடைக்கும் நிகர பயனாக இருக்கும்.

நாமும் பிக் பாஸ் போட்டியாளர்களைப் போலத்தான். நமக்குள்ளும் எத்தனையோ நல்ல மற்றும் கெட்ட குணங்கள் இருக்கும். குறிப்பாகக் கெட்ட குணங்களைப் பற்றி நமக்கே அவ்வளவாக தெரியாது. ‘நான் ரொம்ப நல்லவன்டா’ என்பது மாதிரியேதான் ஒவ்வொருவரும் நம்மைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் தன்னிச்சையாக எத்தனையோ போ்களைக் காயப்படுத்திக் கொண்டிருப்போம். நிறைய தீமைகளைச் செய்து கொண்டிருப்போம். அவற்றை நம்மால் உணர முடியாது. ஏனெனில் அவற்றைப் பதிவு செய்து நம்மிடமே காட்ட எந்த கேமராவும் கிடையாது. மனசாட்சி மட்டுமே ஒரே வலிமையான கேமரா. ஆனால் பல போ் அதை அவுட் ஆஃப் போகஸில்தான் வைத்துள்ளார்கள். மேலும் சிலரோ ஒரேடியாக அணைத்து வைத்துள்ளார்கள்.

எனவே பிக் பாஸ் போட்டியாளர்கள் சறுக்கும் இடங்களில் எல்லாம் நம்மையும் அங்கு பொருத்திப் பார்த்து, நம்மிடம் இருக்கும் எதிர்மறையான குணாதிசயங்களைத் திருத்திக் கொள்ள முனைவதுதான், இந்த நிகழ்ச்சியை முறையாக நுகர்வதற்கான வழிமுறையாக இருக்கும்.

Bigg Boss Season 6
Bigg Boss Season 6
ஓகே... அதிகம் போரடித்து விட்டேன் என்று நினைக்கிறேன். இந்த பிக் பாஸ் ஆறாம் சீசனில் என்னவெல்லாம் இருக்கப் போகிறது?

மீண்டு(ம்) வந்த கமல்ஹாசன்

பிரியாணியையும் முட்டையையும் போல கமல்ஹாசனையும் இந்த நிகழ்ச்சியையும் பிரித்தே பார்க்க முடியாது. முதல் சீசனில் இருந்தே இந்த நிகழ்ச்சியை அவர்தான் திறம்படத் தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் என்பது இதர ரியாலிட்டி ஷோக்கள் போல் அல்ல. சில தனிமனிதர்களின் அன்றாட வாழ்க்கையை நேரடியாக ஒளிபரப்பும் தொடர். ப்ளஸ் ஆகவோ அல்லது மைனஸ் ஆகவோ அவர்களை நேரடியாக பாதிக்கக்கூடிய நிகழ்ச்சி.

சம்பந்தப்பட்டவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் மட்டுமே முக்கியம் என்று கருதி செயற்கையான பரபரப்புகளையும் விறுவிறுப்புகளையும் கூட்டுவது ஒரு நல்ல தொகுப்பாளரின் பணியல்ல. அவருக்குத் தனிநபர் மற்றும் சமூகத்தைப் பற்றிய கரிசனமும் நுண்ணுணர்வும் சமயோசிதமும் நகைச்சுவையுணர்வும் விஷய ஞானமும் தேவை. இந்த ஏரியாவில்தான் கில்லியாகக் கலக்கி வருகிறார் கமல். அவரைத் தவிர்த்து விட்டு இந்த நிகழ்ச்சியை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. குறும்படம், புத்தகப் பரிந்துரை, சினிமா அனுபவங்கள், ஜாலியான குறுக்கு விசாரணை என்று ஒவ்வொரு வார இறுதியையும் கொண்டாட்டமாக்கி வந்திருக்கிறார்.

Bigg Boss Season 6
Bigg Boss Season 6
ஆனால் – பிக் பாஸ் அல்டிமேட்டின் நான்காவது வாரத்திலிருந்து ‘பணிச்சுமை காரணமாக விலகுகிறேன்’ என்று கமல் அறிவித்த போது சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அவர் விலகுவதை விடவும், அந்த இடத்தை நிரப்பப் பொருத்தமான நபர் வரவேண்டுமே என்கிற கவலையும் கூடுதலாக ஏற்பட்டது. வந்தாரய்யா சிம்பு! வம்பு இல்லாமல் நிகழ்ச்சியை ஜாலியாக நடத்திச் சென்றதோடு தட்டிக் கேட்க வேண்டிய இடங்களிலும் பொறுப்பாக நடந்து கமலின் பெயரைக் காப்பாற்றினார்.

பிக் பாஸிற்குள் விதம் விதமான சமூக விலங்குகள்

இந்த ஆறாவது சீசனை கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்கப் போகிறார் என்கிற அறிவிப்பைப் பார்த்தவுடன்தான் மூச்சே வந்தது. 'விக்ரம்' படத்தின் பிரம்மாண்ட வெற்றி மற்றும் வசூலின் மகிழ்ச்சி சமீபத்திய கமலின் முகத்தில் பிரகாசமாகத் தெரிகிறது. 'விக்ரம்' படத்தின் டீசரில் வந்த அதே வாசகங்களைக் கொண்டு ‘காடுன்னா... கரப்பான் பூச்சியும் இருக்கும். டைனோசரும் இருக்கும்’ என்பது மாதிரியான வாசகங்களோடு பிக் பாஸ் ஆறாம் சீசனின் டீசர் வெளியானது.

Bigg Boss Season 6
Bigg Boss Season 6
இந்த டீசரின் உள்ளடக்கமும் மேக்கிங்கும் கனகச்சிதமாக இருக்கிறது. ஒரு வனத்திற்குள் பல்வேறு குணாதிசயங்கள் கொண்ட விலங்குகள் இருப்பதைப் போலவே சமூகத்திற்குள்ளும் பல்வேறு விலங்குகள் இருக்கின்றன. ‘Man is a Social Animal’ என்கிற மேற்கோளுக்குப் பொருத்தமாக உள்ள டீசர்.
பிக் பாஸ் நிகழ்ச்சி முதன் முதலாக தமிழில் வந்து இறங்கிய போது நமக்கு மிக மிக அந்நியமாக இருந்தது. ‘என்னது... பிரபலங்களை ரூம்ல போட்டு அடைச்சு வக்கறதை நாம வேடிக்கை பார்க்கணுமா?” என்று விநோதமாகக் கருதினோம். இப்போது இந்த ஃபார்மேட்டும் ரூல்ஸூம் நமக்குப் பழகி விட்டது.

எனவே ஐந்தாம் சீசனில் ஒரு வித்தியாசத்தைச் செய்தார்கள். பிரபலங்கள், நடிகர்கள், மாடல்களைத் தாண்டி நம்மைப் பிரதிபலிக்கும் ஒரு சராசரி நபரையும் உள்ளே கொண்டு வந்தார்கள். அவர் தாமரை. ‘எனக்கு எதுவுமே புரியலையே... தெரியலையே...” என்று சொல்லிக் கொண்டே இறுதிக்கட்டம் வரைக்கும் வந்து விட்ட தாமரையின் வெள்ளந்தி + புத்திசாலித்தனத்தை மக்கள் வெகுவாக ரசித்தார்கள். இன்று அவரின் ரேஞ்சே வேறு. “லைக் பண்ணுங்க... சப்ஸ்கிரைப் பண்ணுங்க” என்று யூடியூப் சானலே தொடங்குமளவிற்கு பிரபலம் ஆகிவிட்டார்.

Bigg Boss Season 6
Bigg Boss Season 6

பிரபலங்களைத் தாண்டி ஒரு சராசரி நபரையும் உள்ளே சோ்த்தால் இந்த நிகழ்ச்சியை நாம் நெருக்கமாக உணர்வோம் என்பதற்கு ஒரு நல்ல உதாரணம் தாமரை. எனவே ஆறாம் சீசனில் பொது மக்களும் கலந்து கொள்ளலாம் என்று போட்டி வைத்திருந்தார்கள். இது தொடர்பாக, 5-வது சீசனின் டைட்டில் வின்னரான ராஜூ பாய் நடித்த டீசர் வெளிவந்து யூடியூப் அமர்க்களப்பட்டது. இந்தப் போட்டி ‘லுலுவாய்க்கா... அல்லது உண்மையிலேயே பொதுமக்களில் சிலரைத் தோ்ந்தெடுத்து உள்ளே அனுப்புவார்களா’ என்பது இறுதி லிஸ்ட் வந்தவுடன் தெரிந்துவிடும்.

பிக் பாஸ் ஃபார்மேட்டும் ரேஷன் கார்டும்

பிக் பாஸ் போட்டியாளர்களின் பொதுவான வரைபடம் எப்படி இருக்குமென்று நமக்குத் தெரியும். ரேஷன் கார்டை போல ஒரு குடும்பத்தின் டிசைன் இதில் இருக்கும். ஒரு அம்மா மற்றும் அப்பா கேரக்ட்டர்களில் இரு போட்டியாளர்கள் வருவார்கள். இதில் சினிமா சென்டிமென்ட் மாதிரி அம்மா கேரக்ட்டரை சீக்கிரத்தில் விலக்கி போட்டோவிற்கு மாலை போட்டு விடுவார்கள். அப்பா கேரக்ட்டர் சற்று தாக்குப் பிடித்து பிறகு அவரும் மறைவார்.

இரண்டு அண்ணன்மார் கேரக்ட்டர்கள் இருப்பார்கள். எனவே அண்ணிகளும் இருப்பார்கள். நிச்சயம் ஒன்று அல்லது இரண்டு லவ் ஜோடி இருக்கும். தாஜ்மஹால் கட்டும் ரேஞ்சிற்கு அந்த ஜோடிகள் ரொமான்ஸைப் பிழியும். நாமும் "அய்யோ... இந்த ஜோடி ஒன்று சோ்ந்தால் நன்றாக இருக்குமே” என்று ஃபீல் ஆகி கண்ணீர் சிந்துவோம். அப்படித்தான் ஒரு சீசனில் கவின் – லோஸ்லியாவிற்காக நம் உணர்வுகளை அநாவசியமாக விரயம் செய்தோம்.

பிக் பாஸ் பிரபலங்கள்
பிக் பாஸ் பிரபலங்கள்

வில்லி மாதிரியான கேரக்ட்டரில் ஒன்றிரண்டு போ்கள் இருப்பார்கள். சரியான உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் வனிதாக்காவை விட்டால் சட்டென்று வேறு உதாரணம் தோன்றவில்லை. பிக் பாஸின் நீலாம்பரி. லவ் ஜோடிக்கு டார்ச்சர் தருவது, கிச்சனில் பருப்பு டப்பாவை ஒளித்து வைத்து பாலிட்டிக்ஸ் பண்ணுவது, சகட்டு மேனிக்கு எகத்தாளமாகப் பேசி போட்டியாளர்களை மட்டுமல்லாது பார்வையாளர்களின் பிபியையும் ஏற்றுவது என்று இவரின் லீலைகள் இருக்கும்.

வில்லன்கள் இருந்தால் காமெடியர்களும் இருந்துதானே ஆக வேண்டும்? எனவே தாடி பாலாஜி போல மீசை அண்ணாச்சி என்று யாராவது உள்ளே வரலாம். யாராக இருந்தாலும் கடந்த முறை அல்டிமேட்டில் சதீஷ் சொதப்பியதைப் போல நமத்துப் போன பட்டாசாக ஆகிவிடக்கூடாது. தனக்குக் கிடைத்த வாய்ப்பை அவர் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவேயில்லை. ரகளையான நகைச்சுவையாளரால்தான் பிக் பாஸ் ஷோ சுவாரஸ்யம் பெறும்.

பிக் பாஸ் நமீதா
பிக் பாஸ் நமீதா

விளிம்புநிலை சமூகத்தினரையும் ரியாலிட்டி ஷோக்களில் கொண்டு வருவது ஒருவகையான சமூகநீதி. இந்த வகையில், ஒரு திருநங்கையையும் பிக் பாஸ் ஷோவில் கொண்டு வந்தால் நன்றாக இருக்குமே என்று நான் யோசித்ததுண்டு. ஐந்தாம் சீசனில் நமீதாவை உள்ளே கொண்டு வந்த போது மகிழ்ச்சியாக இருந்தது. தனது பின்னணியை அவர் உருக்கமாகச் சொன்னதும் நமக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் என்ன காரணத்தினாலோ அவர் நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே விலகிவிட்டார். இந்த ஆறாம் சீசனில் அப்படி சிலரை நிச்சயம் கொண்டு வருவார்கள் என்று நம்புவோம்.

‘பிக் பாஸிற்கு வணக்கத்தைப் போடு’

வேறென்ன... பொதுவாக விஜய் டிவி கோட்டாவில் இருந்து எப்படியும் இரண்டு பேர் வருவார்கள். இந்த முறை மைனா என்கிறார்கள். கலக்கப் போவது பாலா என்கிறார்கள். பார்ப்போம்... இதைப் போலவே சிம்புவிற்கும் ஒரு கோட்டா இருப்பதாக அதிகாரபூர்வமற்ற ஒரு தகவல் இருக்கிறது. எனவே அந்த சைடில் இருந்தும் யாராவது வரலாம். ‘வெந்து தணிந்தது காடு... பிக் பாஸிற்கு வணக்கத்தைப் போடு’ என்று கூல் சுரேஷ் கூட அதிரடியாக உள்ளே வரலாம்.

ஜி பி முத்து முதல் மதுரை முத்து வரை பல பெயர்கள் அடிபடுகின்றன. மன்சூர் அலிகான் உள்ளே வந்தால் ரகளையாக இருக்கும் என்று ஒவ்வொரு முறையும் பார்வையாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் மன்சூர் உள்ளே வந்தால் மற்றவர்களுக்குத்தான் இன்சூர் செய்ய வேண்டி இருக்கும்.
Bigg Boss Season 6
Bigg Boss Season 6

இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் என்று கோபால் பல்பொடி போல பிக் பாஸ் அங்கேயும் பிரபலமாக இருப்பதால் அந்த ஏரியாவில் இருந்தும் சில பிரபலங்கள், மாடல்கள் நிச்சயம் வருவார்கள். (போட்டியாளர்களைப் பற்றிய லேட்டஸ்ட் நிலவரங்களைத் தெரிந்து கொள்ள, நண்பர் அய்யனார் ராஜன், பிக் பாஸ் செட்டின் அருகிலேயே வசித்து ஓவர் டைம் செய்து பதிவு செய்யும் கட்டுரைகளைப் பார்த்துவிடவும்).

பிரபலங்கள் என்கிற வகையில் மட்டுமே போட்டியாளர்களைத் தோ்ந்தெடுக்காமல் வெவ்வேறு வகையான ஆளுமை, குணாதிசயம் கொண்ட நபர்களை உள்ளே கொண்டு வந்தால், அந்த ஆளுமைகளுக்குள் நிகழும் முரண்கள் போட்டிக்கு சுவாரஸ்யமாக அமையும். இந்த personality test-ஐ ஆடிஷனின் போது கவனத்தில் கொள்கிறார்களா என்று தெரியவில்லை.

பிக் பாஸ்
பிக் பாஸ்
கடந்த இரண்டு சீசன்களில், போட்டி மற்றும் சவால்கள் அதிகமாகவும் இல்லை; சுவாரஸ்யமாகவும் இல்லை. வெறும் வம்புகளும் சர்ச்சைகளும் மட்டுமே இடம்பெற்றன. இந்த ஆறாம் சீசனிலாவது சுவாரஸ்யமான டாஸ்க்குகள் தரப்படும் என்று எதிர்பார்ப்போம் குறிப்பாக க்ளைமாக்ஸில் நிச்சயம் சவாலான போட்டிகள் தரப்பட்டாக வேண்டும்.

பிக் பாஸ் ஜோதிக்குள் ஐக்கியமாவோம் மக்களே...

பிக் பாஸ் அல்டிமேட் போலவே இந்த ஆறாம் சீசனும் 24 X 7 டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும். ஒரு மணிநேர சுருக்கப்பட்ட வடிவம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் என்றும் சொல்லப்படுகிறது. (இரவு 09.30 – 10.30 மணி). ஆறாம் சீசனின் துவக்க நாள் நிகழ்ச்சி வருகிற ஞாயிறு அன்று (09.10.2022) ஒளிபரப்பாகவிருக்கிறது. போட்டியாளர்களை அறிமுகப்படுத்தி அவர்களிடம் கடுகு டப்பாவைத் தந்து உள்ளே அனுப்புவார் கமல்.
Bigg Boss Season 6
Bigg Boss Season 6

ஓகே... வேறென்ன? ஒவ்வொரு தின நிகழ்வுகளைப் பற்றியும் உங்களுக்குத் தினமும் ஒரு கட்டுரையின் வடிவில் சொல்லப் போகிறேன். வழக்கம் போல் உங்களின் ஆதரவு தேவை. ஒவ்வொரு சீசனிலும் விகடன்.காம் எனக்குத் தரும் இந்த இடம் குறித்து நெகிழ்ச்சியுடன் எப்போதும் நன்றி கூறுவேன்.

நேயர்களே... பிக் பாஸ் தமிழ் 6-வது சீசன் என்கிற இந்த ஜோதிக்குள் உற்சாகமாக ஐக்கியம் ஆவோம். இந்த ரத்தபூமிக்குள் ரகளையாக உள்ளே நுழைந்து இந்தத் திருவிழாவைக் கொண்டாடுவோம்.

ஆரம்பிக்கலாங்களா..?