Published:Updated:

பிக் பாஸ் - 24 | மதம்கொண்ட தாமரை என்ன செய்யும் தெரியுமா… நாணயம் சுருட்டிய சுருதியிடம் சீறிப் பாயும்!

பிக் பாஸ் - 24

ராஜூவின் இன்னொரு முகம் இப்போது வெளியாகிறது. “நாங்கதானே தாமரைக்கு காயின் எடுத்துக் கொடுத்தோம். அதை நீ எடுக்கலாமா?” என்று அவர் சுருதியிடம் கேட்பது லாஜிக் இல்லாத கேள்வி.

பிக் பாஸ் - 24 | மதம்கொண்ட தாமரை என்ன செய்யும் தெரியுமா… நாணயம் சுருட்டிய சுருதியிடம் சீறிப் பாயும்!

ராஜூவின் இன்னொரு முகம் இப்போது வெளியாகிறது. “நாங்கதானே தாமரைக்கு காயின் எடுத்துக் கொடுத்தோம். அதை நீ எடுக்கலாமா?” என்று அவர் சுருதியிடம் கேட்பது லாஜிக் இல்லாத கேள்வி.

Published:Updated:
பிக் பாஸ் - 24

‘’நான் தாமரையைக் காப்பாத்தணும்’’, ‘’நான் தாமரையைக் காப்பாத்தப் போறேன்’’ என்று கடந்த வாரத்தில் ஆளாளுக்கு அலைமோதிக் கொண்டிருந்தார்கள். ஆனால் இந்த வாரத்திலோ ‘‘ஐயா... தாமரை கிட்ட இருந்து எங்களைக் காப்பாத்துங்கய்யா’’ என்று தலைதெறிக்க ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் பிக்பாஸ் வீட்டின் சமீபத்திய நிலைமை. ‘காற்று’ நாணயத்தை வைத்திருந்த தாமரை, அதை பறி கொடுத்த பிறகு புயலாக மாறி விட்டார். ‘’ஒரேயொரு கேள்விதான் கேட்டான்... டோட்டலா க்ளோஸ் ஆயிடுச்சு’’ என்கிற வடிவேலு காமெடி மாதிரி, ஸ்ருதி பிசகி சுருதி செய்த ஒரு அபஸ்வர சம்பவத்தினால் வீடே அமளி துளியாகியது.

‘‘இத... இத இதத்தான் நான் எதிர்பார்த்தேன்’’ என்று மகிழ்ந்த பிக்பாஸ், ஆவலாக அனைத்து ஃபுட்டேஜ்களையும வாரி சுருட்டிக் கொண்டார். ‘உலகின் சாலைகள் அனைத்தும் ரோமை நோக்கி’ என்பது போல பிக்பாஸ் வீட்டின் கேமராக்கள் அனைத்தும் தாமரையை நோக்கியே இருந்தன. ‘அடப்பாவமே’ என்பது போல் இதுவரை இருந்த தாமரை ‘அடப்பாவிகளா’ என்பது போல் கூப்பாடு போட்டு வீட்டை தலைகீழாக்கினார்.

குற்றம் நடந்தது என்ன... தவறு தாமரை மீதா, சுருதி மீதா? இந்த அதிமுக்கியமான பிரச்னைக்கு விடை காண முயல்வோம்.

பிக்பாஸ் - 24
பிக்பாஸ் - 24

எபிசோட் 24-ல் என்ன நடந்தது?

தாமரை – சுருதி பிரச்னைக்குள் செல்வதற்கு முன் இரண்டு ஃபிளாஷ்பேக் சம்பவங்களை நினைவுகூர்ந்து கொள்வோம்.

சம்பவம் ஒன்று: நாணயம் வைத்திருந்தவர்களுக்கு பிக்பாஸ் வீடு பிரித்துத் தரப்பட்ட போது கார்டன் ஏரியாவை ஆட்சி செய்த தாமரை “என் காயினை யாராவது எடுப்பீங்களா?’’ என்று கேட்க மற்றவர்கள் ‘’நான் ஏம்மா எடுக்கப் போறோம்” என்பது மாதிரி அமர்ந்திருந்தார்கள். ஆனால், ‘’நான் எடுப்பேன்” என்று தீர்மானமான குரலில் சொன்னார் சுருதி. ‘நான் விளையாட்டுக்காக சொல்லவில்லை’ என்கிற தொனி அவர் சொன்னதில் தெரிந்தது. ஏனெனில் நாணயம் கைப்பற்றுதலுக்காக அந்தளவுக்கான போங்காட்டத்தை மக்கள் அப்போது நிகழ்த்தியிருந்தார்கள். இதனால் சுருதி வெறுப்படைந்திருந்தார்.

சம்பவம் இரண்டு: “நீங்க இப்ப காயினை எடுக்குறதா இருந்தா எடுக்கலாம். நிரூப்... பாவனி நாணயம்னா நான் தூக்கிடுவேன். தாமரையக்காவோடதை எடுத்தா ஒப்பாரி வைப்பாங்க” என்று நேற்று சின்னப்பொண்ணுவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் அக்ஷரா. ஆக... சின்னப்பொண்ணுவின் நாணயத்தின் மீது கைவைத்தால் அவர் அழுது ஊரைக்கூட்டி விடுவார் என்பது அந்த வீட்டில் உள்ள அனைவருக்குமே தெரிந்திருக்கிறது. இதை சுருதி சற்று கவனித்திருக்கலாம்.

இப்போது மெயின் சம்பவம்: காலையில் குளித்து விட்டு உடை மாற்றும் சூழலில் இருந்தார் தாமரை. இவர் காயினை கீழே வைத்திருப்பதை சுருதி ஆரம்பத்தில் இருந்தே நோட்டம் பார்த்திருக்கிறார் போலிருக்கிறது. எனவே அதை எடுப்பதற்காக பாவனியின் உதவியைக் கேட்கிறார். ‘’நீ திசை திருப்பி விட்டால் நான் எடுத்துக் கொள்வேன்’’ என்பது சுருதியின் பிளான். முதலில் இதற்கு மறுக்கும் பாவனி, பிறகு உதவ முன்வருகிறார். இருவருக்குமே அந்த நேரத்தில் விளையாட்டு முனைப்புதான் அதிகம் தெரிகிறது. தாமரைக்கு சங்கடம் ஏற்படுத்துவது அவர்களின் நோக்கம் அல்ல.

பிக்பாஸ் - 24
பிக்பாஸ் - 24

இசைவாணிக்காக ஆடை எடுப்பது போல் சுருதி உள்ளே செல்ல, நிராயுதபாணியாய் நிற்கும் தாமரைக்கு உதவி செய்வது போல் துணியால் அவரை மறைக்கிறார் பாவனி. சுருதி சட்டென்று ஆடையோடு நாணயத்தையும் சேர்த்து எடுத்துக் கொண்டு வெளியே வந்து விடுகிறார். பிறகு பாவனியும் நாடகத்தை சற்று நீட்டித்து விட்டு வெளியே வருகிறார். ஒரு கட்டத்தில்தான் தாமரைக்கு நாணயம் களவு போன விஷயம் தெரிகிறது. அதை சுருதிதான் எடுத்திருப்பார் என்பதை எளிதாக தெரிந்த கொண்டு தாமரை, சுருதியைத் தேடுகிறார். இந்த இடைவெளியில் நாணயத்தை தனக்கு உரிமையாக்கிக் கொள்கிறார் சுருதி.

பாத்ரூம் கதவைத் தட்டி சுருதியைத் தேடும் தாமரை “ஏன் எடுத்தே?” என்றுதான் கேட்கிறார். “நான் அந்த மாதிரி நிலைமையில் இருக்கும் போது எடுக்கலாமா?” என்று கேட்கவில்லை. தன் நாணயம் பறிபோனதுதான் தாமரைக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. பிறகு சுருதியை கண்டபடியான வார்த்தைகளில் வசைபாடுகிறார். (“வளர்ப்பு சரியில்லை’’ என்பது முதற்கொண்டு தாமரை சொன்னதாக சுருதி புலம்பிய வார்த்தைகள் ப்ரமோவில் வந்தன. ஆனால் மெயின் நிகழ்ச்சியில் வரவில்லை). இதற்கு உடந்தையாக இருந்த பாவனியையும் ‘’நீ துரோகம் செஞ்சுட்டே” என்று குற்றம் சாட்டுகிறார் தாமரை.

தாமரையின் மிகையான எதிர்வினையைக் கண்ட சுருதிக்கும் பாவனிக்கும், இது தன்மானப் பிரச்சனையாக மாற அவர்களும் பதிலுக்கு மல்லுக்கட்டுகிறார்கள். “நீ பெரிய பெரிய வார்த்தையெல்லாம் உபயோகிக்கிற” என்பது பாவனியின் எதிர்வினை. “தேவையில்லாத வார்த்தைகளைப் பேசாதீங்க” என்பது சுருதியின் கடுமையான ஆட்சேபம்.

பிக்பாஸ் - 24
பிக்பாஸ் - 24

நாணயத்தை உடலில் மறைத்து வைக்க வேண்டாம் என்பது ஆரம்பக்கட்டத்தில் இவர்களாக போட்டுக் கொண்ட விதி. ஆனால் நாணயத்தின் சலுகைகள் பற்றி தெரிய வந்தவுடன் உடலில் மறைத்து வைத்துக் கொண்டு சுற்றுகிறார்கள் போல. எனில் “எப்படித்தான் எடுப்பது?” என்பது சுருதியின் கேள்வி. அதுக்காக “இந்தச் சமயத்திலா எடுப்பாங்க? நான் உன்னை நம்பித்தானே உள்ளே விட்டேன்” என்பது தாமரையின் கோபம்.

அந்த வீட்டில் மூன்று குரூப் இருப்பதை ஏற்கெனவே பார்த்தோம். தாமரைக்கு ஆதரவான குரூப்பான ராஜூ, இமான் போன்றவர்கள் வந்து சுருதி மற்றும் பாவனியிடம் கடுமையாக ஆட்சேபம் செய்கிறார்கள். ராஜூவின் இன்னொரு முகம் இப்போது வெளியாகிறது. “நாங்கதானே தாமரைக்கு காயின் எடுத்துக் கொடுத்தோம். அதை நீ எடுக்கலாமா?” என்று அவர் சுருதியிடம் கேட்பது லாஜிக் இல்லாத கேள்வி. இது மட்டுமல்லாமல் “நீங்க டிரஸ் மாத்தும் போது நான் வந்து எடுக்கலாமா?” என்று பாவனியிடம் ராஜூ கேட்டதும் மிக அநாகரிமான கேள்வி. (ராஜூவின் உயர்ந்து வரும் கிராஃப்பில் இது சேதாரத்தை ஏற்படுத்தலாம்).

பாவனி எவ்வளவு புத்திசாலி என்பது இந்தச் சமயத்தில் வெளிப்படுவதைக் கவனிக்கலாம். ஏறத்தாழ வீடே ஒன்று சேர்ந்து கார்னர் செய்வதைக் கண்ட பாவனி “இவங்களுக்கு எதுக்கு விளக்கம் தரணும்... சார் கேட்கும் போது சொல்லிக்கலாம்?” என்று சுருதியிடம் சொன்னது சரியான பாயின்ட். ஆளாளுக்கு கேள்விகளால் குடையும் போது அப்படித்தான் தோன்றும். ஆனால் வீட்டையே பகைத்துக் கொண்டு அங்கு இருக்கவும் முடியாது. ஒரு கட்டத்தில் ‘இதற்கும் எனக்கும் தொடர்பில்லை... எடுத்தது சுருதிதான்’ என்று கை கழுவவும் முடிவு செய்கிறார் பாவனி. இதிலும் பெரிய பிழையில்லை. ஏனெனில் தாமரையின் குற்றச்சாட்டுகள் அத்தனை கடுமையானதாக இருக்கிறது.

சுருதிக்கு ஆதரவாக பாவனியும் மதுமிதாவும் வந்து நிற்கிறார்கள். பிரியங்கா, நிரூப் எல்லாம் இந்தக் காட்சிக்குள் முதலில் வரவில்லை. “தன்னைக் காப்பாத்திக்கணும்-னு ஆர்வக்கோளாறுல எடுத்திருப்பா... அப்புறம் கொடுத்துருவா” என்பது போல் பிறகு பிரியங்கா சொன்னது சரியான அப்சர்வேஷன். ‘’ஏம்பிள்ளே அழுவுறே... இது ஒரு கேம்தானே?” என்று பிரியங்கா சொல்லும் யதார்த்தமான விஷயம் தாமரைக்குப் புரியவில்லை.

பிக்பாஸ் - 24
பிக்பாஸ் - 24

‘இது ஒரு கேம்’ என்கிற விஷயம் பிரியங்காவிற்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் புரிகிறது. ஆனால் தாமரையின் கோபம், கண்ணீர் போன்ற விஷயங்கள் அவர்களை மெளனமாக்குகின்றன. தாமரைக்கு ஆதரவான நிலையை எடுக்க வைக்கின்றன. ஒரு பெண், அந்தரங்கமான பிரச்னையைச் சொல்லி நீதி கேட்கும் போது ‘’என்னதான் இருந்தாலும் இது கேம். நீதான் உஷாரா இருந்திருக்கணும்” என்று கறாராக சொல்ல முடியாது.

இதில் இரண்டு கோணங்கள் இருக்கின்றன. பிக்பாஸ் வீட்டு விதிகளின் படி சுருதி செய்தது பிழை கிடையாது. ஆனால் விளையாட்டில் எப்போதுமே சில ஆதாரமான தர்மங்கள் இருக்கின்றன. எதிராளி கையறு நிலையில் இருக்கும் போது அவனை வீழ்த்தி வெற்றியடைவது வீரமல்ல. நிராயுதபாணியாய் நிற்பவனை ‘இன்று போய் நாளை வா’ என்று நேரம் தருவதுதான் போர் தர்மம். அதே சமயத்தில் ‘All is Fair in Love and War’ என்கிற ஆங்கில மேற்கோளும் இருக்கிறது.

நாணயம் திருடப்பட்டது பிரச்னையா, முறையற்ற சமயத்தில் திருடப்பட்டது பிரச்னையா... இந்த ஆதாரமான கேள்விக்கு தாமரையின் மனச்சாட்சிதான் சரியாக பதில் சொல்ல முடியும். நாணயம் பறிபோன கோபத்தை அவர் ‘மானப் பிரச்னையாக’ மாற்றியிருக்கலாம். அல்லது உண்மையிலேயே மானப்பிரச்னையாக அவர் கருதியதால் கோபம் எழுந்திருக்கலாம். ஒருவரின் மனம் உற்பத்தி செய்யும் நாடகங்களை அவராலேயே புரிந்து கொள்ள முடியாது. ‘’நான் எந்த நிலைமைல இருந்தேன் தெரியுமா’’ என்பதை சபையில மீண்டும் மீண்டும் சொல்வதின் மூலம் தனக்குத்தானே அவமதிப்பை தேடிக் கொள்கிறோம் என்கிற எளிய லாஜிக் கூட தாமரைக்குப் புரியவில்லை.

‘தாமரையின் கோபமும் ஆட்சேபமும் சரி’ என்று ஒரு தலைப்பிலும் ‘சுருதி செய்தது சரியா?’ என்று இன்னொரு தலைப்பிலும் பட்டிமன்றங்கள் ஆவேசமாக நடந்தன. “அவங்க வெளியில இருக்கும் போது எடுத்திருந்தா கூட இதே மாதிரிதான் கலாட்டா செஞ்சிருப்பாங்க” என்று சுருதி ஒரு கட்டத்தில் சொன்னது யோசிக்க வேண்டிய லாஜிக். “என் கிட்டயும் சீப்பு இருக்கு. நாங்களும் சீவுவோம்” என்று சுருதியும் தன் அழுகையைக் கூட்ட என்ன செய்வது என்று முடிவெடுக்க முடியாமல் தவித்தது பிக்பாஸ் வீடு.

பிக்பாஸ் - 24
பிக்பாஸ் - 24

பாவம்… ‘பிள்ளைப்பூச்சி’ மதுமிதா தலைவர் ஆன மறுநாளே இப்படியொரு பூகம்பப் பிரச்னை. “நான் லீடர் சொன்னா கேழ்க்கணும் ஓக்கே..” என்று பரிதாபமாக உலவிக் கொண்டிருந்தார் மதுமிதா. தாமரைக்கு இருந்த கோபத்திற்கு மதுமிதாவை கடாயில் தூக்கிப் போட்டு வறுத்து தின்றாலும் தின்றிருப்பார்.

நகரத்து மனிதர்கள் போல் மூடி மறைத்து உள்ளே புழுங்காமல் வெளியே அசலாக வெளிப்பட்ட தாமரையின் கோபத்தைப் பார்க்க ஒருபக்கம் சுவாரசியமாக இருந்தது. “ங்ங்கொப்புராணை… கொங்ப்பன் தந்தானே... நான் பொல்லா கோபக்காரியா மாறிடுவேன். கேமுன்னு சொல்லாதீங்க... என்னை விடுங்க... நான் போய்த் தொலையேறன்... உங்க மேலலலாம் பாசம் வெச்சது என் தப்பு” என்று தாமரை புலம்ப “பாசம் இருக்கறவ... எப்படி நாமினேட் பண்ணுவே?’’ என்று அந்தக் கோபத்தில் டைமிங்காக ஒரு சிரிப்பு வெடிகுண்டை ராஜூ தூக்கிப் போட்டது அதகளமான காமெடி. ‘‘நான் போ மாட்டேன். நான் போ.. மாட்டேன்ன்னு முன்னாடி சொன்னியே” என்று நினைவுப்படுத்தி சிரித்தார் இமான்.

“நான் செய்ததைப் பற்றி விளக்கம் தருவதற்க்கு ஒரு சான்ஸ் கொடுங்க” என்று சுருதி எவ்வளவு கெஞ்சியும் தாமரை அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. ‘நான் செம கோபத்துல இருக்கேன். பேசப்பிடிக்கலை. போயிடு பாப்பா” என்றே சொல்லிக் கொண்டிருந்தார். அந்தக் கோபத்திலும் ‘’பாப்பா… பாப்பா’’என்று தாமரை சொன்னது ரசிக்கத்தக்க விளியாக இருந்தது. “சரி... எப்போ பேசணும்னு தோணுதே. அப்ப பேசுங்க” என்று நகர்ந்து விட்டார் சுருதி. நாணயத்தை திரும்ப வாங்கிக் கொள்வதிலும் முரண்டு பிடித்தார் தாமரை.

என்னதான் குளிக்கும் அறையாக இருந்தாலும், கவனக்குறைவாக இருந்து நாணயத்தை இழந்து விட்டதில் தாமரையின் பங்கும் இருக்கத்தான் செய்கிறது. எனவே சுருதியை தனியாகச் சந்தித்து “அந்தச் சமயத்தில் போய் எடுக்கலாமா... நான் உள்னை நம்பினேனே..” என்று தாமரை இதமாக பேசியிருந்தால் இந்தப் பிரச்னை காதும் காதும் வைத்த மாதிரி போயிருக்கும். பாவனியாக இருந்தால் இதை திறமையாக செய்திருப்பார். ஆனால் கிராமத்து தாமரைக்கு இப்படியெல்லாம் சாதுர்யமாக நடக்கத் தெரியவில்லை. ‘அழுகாச்சி’ நாடகத்தின் மூலம் தன் கோபத்தை பதிவு செய்து விட்டார்.

படுக்கையறையில் ஒய்யாரமாக சாய்ந்தபடி, சப்பாத்தி ஒன்றை எடுத்து வரச்சொல்லி நிரூப்பிடம் திருட்டுக்கெஞ்சு கெஞ்சிக் கொண்டிருந்தார் பாவனி. “பத்து பத்து ரூபாயா வேணுமா... அஞ்சு அஞ்சு ரூபாயா வேணுமா? என்று ஓர் இளம் பெண்ணிடம் பிரேம்ஜி சில்லறை தேடித்தரும் ‘சென்னை-28’ன் காட்சி போல “சப்பாத்திய ரெண்டு பக்கமும் சூடு பண்ணி எடுத்து வரவா. அதுல சாஸ் தடவி கொண்டு வரவா” என்று நிரூப் எக்ஸ்ட்ரா விருந்தோம்பல் செய்ய ‘’பாசக்காரப்பயடா நீ” என்று அவருக்கு திருஷ்டி கழித்தார் பாவனி. (அடேங்கப்பா!. பாவனியின் பல அவதாரங்கள் இதில் வெளியாகும் போல!).

பிக்பாஸ் - 24
பிக்பாஸ் - 24

இதைக் கவனித்துக் கொண்டிருந்த பிரியங்காவின் காதுகளில் புகை வர “டேய் நிரூப் இந்த நாளை உன் டைரில குறிச்சு வெச்சுக்கோ... உனக்கும் ஒரு பாயசத்தை நான் போடறேன்” என்று காண்டுடன் சபதம் செய்து கொண்டார். இந்த அற்பமான பஞ்சாயத்திற்காக ‘நீயா நானா’ கோபிநாத்தையெல்லாம் வேறு அவர் சாட்சிக்கு அழைத்தார். (பெண்கள் போடுவதில் ஜிமிக்கி அழகா, கம்மல் அழகா’ன்னு பட்டிமன்றம் வைக்கற அளவுக்கு என் நிலைமை ஆனது என்னமோ உண்மைதான். ஆனா சப்பாத்திக்கெல்லாமா என்னைக் கூப்பிடுவீங்க’ என்பது கோபிநாத்தின் மைண்ட்வாய்ஸாக இருக்கலாம்).

தாமரை - சுருதி தொடர்பான ஃபுட்டேஜ் ஏராளமாக கிடைத்துக் கொண்டிருக்கும் மகிழ்ச்சியில் இருந்த பிக்பாஸ், ‘இந்தச் சமயத்தில் யாராவது இசையின் நாணயத்தை திருடி காரியத்தைக் கெடுக்கப் போகிறார்கள்’ என்று நினைத்தார் போலிருக்கிறது. ஏனெனில் இசையின் ஃபுட்டேஜ், இன்னொரு நாளைக்கு பயன்படலாம். எனவே ‘‘இந்த வாரம் முழுவதும் இசையின் நாணயத்தை யாரும் எடுக்க முடியாது” என்று சட்டவிதியைத் திருத்தி அமைத்தார். ’ஹப்பாடா... இனிமே நிம்மதியா டிரஸ் மாத்தலாம்’ என்பது இசையின் மைண்ட் வாய்ஸாக இருந்திருக்கும்.

ஐக்கியின் நாணயம் பறி போய் முன்னர் அவர் தனிமையில் அழுதுகொண்டிருந்த போது எந்த ஈ காக்காவும் சென்று அப்போது ஆறுதல் சொல்லவில்லை. ஆனால் இப்போதோ தாமரைக்காக ஊரே அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. (தாமரையின் பவர் அப்படி!).

‘’தாமரையை எப்படியாவது காப்பாத்துவோம்” என்று முன்னர் வீரமுழக்கம் செய்த வீடு, இப்போது ‘தாமரையின் பிரச்னையை எப்படியாவது தீர்ப்போம்’ என்று உறுதி செய்தபடி ‘குற்றம் நடந்தது என்ன?’ என்கிற விசாரணையில் இறங்கியது. பெட்ரூம் ஏரியாவில் வாதப் பிரதிவாதங்கள் ஆவேசமாக நடந்தன. தன் நிலைப்பாட்டில் இருந்து தாமரை சற்றும் இறங்கி வரவில்லை. மாறாக சுருதியையும் பாவனியையும் அழுத்தமாக குற்றம் சாட்டவே “உன்னை அவமானப்படுத்தி காயின் எடுக்கணும்ன்றது எங்க நோக்கம் இல்ல. அந்த நாகரிகம் இல்லாம நாங்க இல்ல” என்று பாவனி கண்கலங்க, கூடவே சுருதியும் அழத் தொடங்கினார்.

பிக்பாஸ் - 24
பிக்பாஸ் - 24

“இப்ப தாமரையை சமாதானப்படுத்தறதா... இவங்க ரெண்டு பேரையும் சமாதானப்படுத்தறதா” என்று வீடு தத்தளித்தது. எந்த முடிவையும் எட்டாமல் பட்டிமன்றம் படார் என்று கலைந்தது. ‘’எல்லாம் மேல இருக்கறவன் பார்த்துப்பான்” என்கிற பிக்பாஸிடம் பிரச்னையை ஒப்படைத்து விட்டு எல்லோரும் வேலையைப் பார்க்க கிளம்பினார்கள். ஆரம்பத்தில் சுருதிக்கு ஆதரவாக நின்ற பாவனி கூட, வீட்டின் ஏச்சு பேச்சுகளுக்கு ஆளான பிறகு “இதுக்கும் எனக்கும் சம்பந்தமில்ல. எடுத்தது சுருதிதான்’’ என்று கைகழுவினார். ‘கூட உதவப் போனது ஒரு குத்தமாய்யா?’ என்பது அவரின் மைண்ட் வாய்ஸ்.

தாமரை-சுருதி ஃபுட்டேஜ் பிக்பாஸிற்கே பிறகு புளித்து விட்டதோ என்னமோ.. ‘லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கை’ அறிவித்தார். இது பழைய புளித்துப் போன அதே டிராமா. ‘நகரம்’, ‘கிராமம்’ என்று வீடு இரண்டு அணியாக மாறுமாம். அதற்கேற்ப கார்டன் ஏரியாவில் செட்டப்கள் போடப்பட்டிருந்தன. நகரத்திற்கு தலைவர் நிரூப். கிராமத்திற்கு தலைவர் அக்ஷராவாம். (வெளங்கிடும்!). பீட்டரிலேயே பேசிக் கொண்டிருக்கும் அபினய் கிராமத்து ஆளா?” என்று ராஜூ கேட்டதற்கு வீடு வெடித்து சிரித்தது. லண்டன் துரையம்மா கெட்டப்பில் பாவனி அட்டகாசமாக வர, ஸ்பைக்கி ஸ்டைலில் சிகையலங்காரத்தை மாற்றிக் கொண்டு காமெடியாக உலவினார் அண்ணாச்சி.

‘’ஏன்தான் தனக்கு நெருப்பு ஆற்றல் வந்ததோ... ஒரு பருப்பை எடுக்கறதுக்கு கூட எவனும் என்னைக் கேட்க மாட்டேன்கிறார்களே’’ என்று மூலையில் அமர்ந்து புலம்பிக் கொண்டிருந்தார் இசை. ‘நாளைக்கு பஞ்சாயத்தை கூட்டிட வேண்டியதுதான்’ என்று அவர் முடிவு செய்த கையோடு நள்ளிரவிலும் கடமை வீரராக இயங்கிக் கொண்டிருந்த காட்சியோடு எபிசோடும் முடிவுக்கு வந்தது.

குற்றம் யார் மீது... நாணயம் தவறிய சுருதி மீதா... நாணயத்தை தவற விட்ட தாமரையின் மீதா... கமென்ட் பாக்ஸில் சொல்லுங்களேன்!