Published:Updated:

ரேகாவின் துயரம், மீண்டும் அர்ச்சனாவின் அன்பு கேங், ஆரியின் அப்செட்... பிக்பாஸ் – நாள் 100

பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 100

‘சண்டி மாடுகளை’ வைத்துக் கொண்டு வேலை செய்யச் சொல்லி அவர்களிடம் மல்லுக்கட்டுவதை விட தானே அதை செய்து விட்டுப் போகலாம் என்றுதான் உண்மையான உழைப்பாளிகள் எண்ணுவார்கள். அதை ஆரி பின்பற்றுகிறாரா?

Published:Updated:

ரேகாவின் துயரம், மீண்டும் அர்ச்சனாவின் அன்பு கேங், ஆரியின் அப்செட்... பிக்பாஸ் – நாள் 100

‘சண்டி மாடுகளை’ வைத்துக் கொண்டு வேலை செய்யச் சொல்லி அவர்களிடம் மல்லுக்கட்டுவதை விட தானே அதை செய்து விட்டுப் போகலாம் என்றுதான் உண்மையான உழைப்பாளிகள் எண்ணுவார்கள். அதை ஆரி பின்பற்றுகிறாரா?

பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 100

இன்று பிக்பாஸின் நூறாவது நாள். போட்டியாளர்களைப் போலவே பார்வையாளர்களுக்கும் இதுவொரு நீண்ட பயணம். போட்டியாளர்களும் சரி, பார்வையாளர்களும் சரி, ‘இந்த நிகழ்ச்சியில் இருந்து நாம் என்ன பெற்றோம்’ என்பதுதான் இரு தரப்புமே யோசிக்க வேண்டிய முக்கியமான விஷயம். இந்த நூறாவது நாளையொட்டி சில ஆதாரமான விஷயங்களை தொகுத்து நினைவுப்படுத்தலாம் என்று நினைத்தேன். நிகழ்ச்சி முடியட்டும். அவற்றைப் பற்றி ஒரு தனிக்கட்டுரையாக எழுதி விடலாம் என்று உத்தேசம்.

நூறாவது நாள். சார்ந்தோர்க்கு வாழ்த்துகள்.

ஓகே. நாள் 100-ல் என்ன நடந்ததென்று பார்ப்போம்.

‘அன்பு கூட்டணி’ உள்ளே வந்ததில் பாட்டு போடுபவர் உற்சாகமாகியிருக்கிறார் போலிருக்கிறது. எனவே நேற்றைய தினத்தைப் போலவே காக்டெயில் பாணியில் சில பாட்டுக்களை கலந்து அடித்தார். ‘வேட்டையாடவே வெறியோட சுத்தறான்’ என்கிற வரி போது எத்தனை பேருக்கு அனிதாவின் நினைவு வந்தது? எனக்கு வந்தது. பாவம், அவரது தந்தை சமீபத்தில் மறைந்திருப்பதால், அவரால் பிக்பாஸ் வீட்டுக்கு வர முடிந்திருக்காது என்று நினைக்கிறேன்.

பாட்டு முடிந்ததும் வழக்கம் போல் ‘குட்மார்னிங் பிக்பாஸ்’ என்று கோரஸாக கத்தினார்கள். ‘காலை வணக்கம்’ என்று சொல்லலாம் என்கிற ஆரியின் ஆலோசனையை யாரும் பின்பற்றவில்லை. ‘நல்லதையெல்லாம் பின்பற்றக்கூடாது’ என்பதுதான் நம் கலாசாரம்.

பிக்பாஸ் – நாள் 100
பிக்பாஸ் – நாள் 100

அன்பு கூட்டணி உள்ளே நுழைந்து மீண்டும் அலப்பறை செய்து கொண்டிருப்பதால் ஆரி மூட் அப்செட்டில் இருக்கிறார் போலிருக்கிறது. முகத்தில் சுரத்தில்லை. உர்ரென்று அவர் இருப்பது போல் ஒரு பிரமை. (இல்லைங்க.. அவர் எக்ஸ்பிரஷனே அப்படித்தான்!). அவர் மட்டும் தனியாக வீடு சுத்தம் கொண்டிருந்தார். ‘டேய்.. மச்சான்.. கூப்பிட்டிருக்கக்கூடாது?” என்ற படி சோம் வர “இல்ல. போரடிச்சது. அதான் பெருக்கிட்டு இருந்தேன். முடிஞ்ச்’ என்றார் ஆரி.

முன்பும் இப்படித்தான் பாலாவின் வேலையை தான் இழுத்துப் போட்டுக் கொண்டு ஆரி செய்தது நினைவிருக்கும். இதை இரண்டு விதங்களில் பார்க்கலாம். ‘சண்டி மாடுகளை’ வைத்துக் கொண்டு வேலை செய்யச் சொல்லி அவர்களிடம் மல்லுக்கட்டுவதை விட தானே அதை செய்து விட்டுப் போகலாம் என்றுதான் உண்மையான உழைப்பாளிகள் எண்ணுவார்கள். அதை ஆரி பின்பற்றுகிறாரா? அல்லது தனக்கு மைலேஜ் தேடிக் கொள்வதற்காகவும் மற்றவர்களை குற்றவுணர்வு அடைய வைப்பதற்காகவும் தானே இழுத்துப் போட்டு வேலை செய்கிறாரா?.. இது அவரின் உத்தியா என்று தெரியவில்லை.

பிக்பாஸ் – நாள் 100
பிக்பாஸ் – நாள் 100

அன்புக்கூட்டணியை தவிர்ப்பதற்காக அவர் உள்ளேயே இருக்கிறாரா அல்லது உண்மையிலேயே வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற கடமையுணர்ச்சியா? கடைசி வாரம் என்பதால் நன்மதிப்பைப் பெற போராடுகிறாரா என்பது அந்த பகவானுக்குத்தான் வெளிச்சம். ஆனால் மற்றவர்களை விடவும் ஆரி வேலைக்கு அஞ்சாதவர் என்பது மட்டும் நிச்சயம்.

ரியோ பறித்துத் தந்த பூவை வாங்கிய நிஷா, ‘இந்த வெள்ளைப் பூவுக்குள் ஒரு கறுப்பு எறும்பு’ என்று பட்டிமன்ற பாணியில் ஏதோவொரு தத்துவத்தை சொல்ல முயல ‘அப்புறம்.. மச்சான். எனக்கு வேலையிருக்குது.. பார்க்கலாம்’ என்றபடி ஆளாளுக்கு கலைந்து சென்றார்கள். இதனால் நொந்து போனார் நிஷா. ஒரு நகைச்சுவைக் காட்சியில், ‘டாய்.. நான்தான் சரக்கு வாங்கித் தந்தேன். ஒழுங்கா நான் அனத்தறதை இருந்து கேட்டுட்டுப் போங்கடா’ என்று கலைந்து செல்பவர்களை இழுத்துப் பிடித்து அனத்துவார் விவேக். அதுதான் நினைவிற்கு வந்தது.

பிக்பாஸ் – நாள் 100
பிக்பாஸ் – நாள் 100


சற்று நேரத்தில் வேல் முருகனின் சாயலில் ஓர் நவீன பாணி இளைஞர் உள்ளே நுழைந்தார். ஒருவேளை அவரின் மகனோ. என்று யோசித்தால், இல்லை. அவரேதான். (இருங்க. கோபப்படாதீங்க. சும்மாதான் சொன்னேன்). நடை, உடை, அலங்காரம் என்று ஆளே மாறி விட்டார். நாட்டுப்புற பாடகராக வெளியே சென்றவர் ‘hi dude’ என்கிற ‘யூத்’ மாதிரி காதில் கடுக்கன் எல்லாம் மாட்டி அலங்கரித்துக் கொண்டிருக்கிறார். ‘வேல் பிரதர்ஸின் ஓனர்’ என்பதால் அதற்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டார் போலிருக்கிறது.

அனைவரிடமும் தாவும் சுட்டிக் குழந்தை போல ஒவ்வொருவரின் இடுப்பிலும் காக்காவைக் கூப்பிடுவது போன்ற கூச்சலுடன் ஆரவாரமாக ஏறி அமர்ந்து உற்சாகமானார் வேல்முருகன். ‘என்ன டியூட்... ஆளே மாறிட்டீங்க’ என்று மக்கள் வியந்தார்கள். ‘இனிமே அப்படித்தான்... பாலாஜிக்கு போட்டியா வந்திருக்கேன்’ என்று உற்சாகமாக குத்தாட்டம் போட்டார் வேல்ஸ்.

பிக்பாஸ் – நாள் 100
பிக்பாஸ் – நாள் 100அடுத்ததாக ஓணம் பண்டிகையை நினைவுப்படுத்துவது ‘சனம்’ சேச்சி அலங்காரமான தோற்றத்துடன் உள்ளே நுழைந்தார். அவருடைய ‘சனம்’, அதாவது ஆர்மி... உற்சாகமடைந்திருப்பார்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு பிக்பாஸ் வீட்டைப் பார்ப்பதால் பிறந்து வீட்டிற்கு வந்திருக்கும் மகள் போல அகம் மகிழ்ந்து போனார் சனம். ஓடி வந்து வரவேற்ற ரம்யாவை, ‘நான் மொதல்ல பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தப்பவும் உன் முகத்துலதான் முழிச்சேன்’ என்றதும் ரம்யாவின் முகம் ஒரு கணம் ‘கெதக்’ என்று ஆனது. (என்ன சொல்றாங்க. இவங்க?!). "என்ன நிஷா ஸ்லிம் ஆகிட்டீங்க" சனம் விசாரிக்க மெளனப்புன்னகை பூத்தார் நிஷா.

விழா நடக்கும் வீட்டிற்குள் ஒவ்வொருவராக வருவது போல் அடுத்து சுச்சியும் ஆஜித்தும் உள்ளே வந்தார்கள். சுச்சியிடம் புது களை குடியேறியிருந்தது. (இப்படியே இருங்க அம்மணி!). வெளியே சென்ற பிறகும் ஆஜித்திற்கு முடி வெட்டிக்கூட நேரமில்லை போலிருக்கிறது. அப்படியேதான் வந்தார். இந்தக் கேள்வியையே பிறகு ரம்யாவும் கேட்டார்.

மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்றிருக்கும் மாணவனை, இதர மாணவர்கள் ஸ்பெஷலாக பார்ப்பதைப் போல, வீட்டிற்குள் நுழையும் ஒவ்வொருவரும் ஆரியை தனியாக விசாரித்து ‘வணக்கம்’ வைத்து விட்டுப் போனார்கள். ‘உங்களைப் பார்க்கத்தான் வந்தேன்’ என்று ஆரிக்கு எக்ஸ்ட்ரா ஐஸ் வைத்தார் சனம். ‘'என்னடா கிறுக்கா... எப்படி இருக்கே?” என்பது போல் பார்த்து பாலாஜியை கட்டிக் கொண்டார் சுச்சி.

சிறிது நேரத்தில் ஆக்ட்டிவிட்டி ஏரியா வழியாக உள்ளே வந்தார் சாம். அதென்னமோ புதிதாக நுழைகிறவர்கள் பெரும்பாலும் முதலில் ரம்யா கண்ணில்தான் படுகிறார்கள். அவரை ஓடிச் சென்று கட்டிக் கொண்ட ரம்யா. பிறகு ‘நான் எப்படி விளையாடறேன்?” என்று ரகசியமாக கேட்க ‘மாஸ்’ என்றார் சாம். ‘நம்பற மாதிரி இல்லையே” என்று ஜெர்க் ஆனார் ரம்யா. தங்களின் விளையாட்டு குறித்த சந்தேகம் ரம்யாவிற்கும் பாலாஜிக்கும் அதிகம் இருக்கிறது போல.

பிக்பாஸ் – நாள் 100
பிக்பாஸ் – நாள் 100


சுச்சியை வீட்டிற்குள் அழைத்து ஓரங்கட்டிய பாலாஜியும் இதையேதான் கேட்டுக் கொண்டிருந்தார். ‘கேரியர்ல சோறு மிச்சமிருக்கா?” என்பதைப் போல ‘என் கேரியர் ஏதாச்சும் வெளியே மிச்சம் இருக்கா?” என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு பாலாஜி கேட்க ‘டேய்.. லூசு.. இப்ப ஃபைனல் கோடு கிட்ட வந்துட்டே. அதுல மட்டும் ஃபோகஸ் பண்ணு. வெளியே உலகம் அப்படியேதான் இருக்கு. டோன்ட் வொர்ரி’ என்று ஆறுதல் சொன்னார் சுச்சி.

பாலாவைத் தேடியபடியே வந்த சாம், தொண்டையைக் கனைத்து தன் இருப்பைத் தெரிவிக்க, தாயைத் தேடி ஓடும் பசு மாதிரி விரைந்து சென்று சாமைக் கட்டிக் கொண்டு கண்கலங்கினார் பாலாஜி. “குழந்தைடா நீீ" என்றபடி செல்லம் கொஞ்சினார் சாம். ‘வெளில எப்படி இருக்கு?” என்று பாலாஜி கேட்க “அதையேன் கேட்கிற. எந்த இண்டர்வியூக்குப் போனாலும்... நீங்க பாலாஜி ஆர்மிதானே?’ன்னு கேட்டு உயிரை வாங்கறாங்க...” என்று சலித்துக் கொண்டார். (யாரையாவது எந்த ஆர்மியிலாவது சேர்த்து விடாவிட்டால் மக்களுக்கு தூக்கம் வராது போலிருக்கிறது... பீ கேர்ஃபுல்.. நான் என்னைச் சொன்னேன்!).

பிக்பாஸ் – நாள் 100
பிக்பாஸ் – நாள் 100


“பாலாஜிக்கும் ஆரிக்கும் வாக்குவாதம் நடந்தப்ப சண்டை அதிகமாயிடக்கூடாதேன்னு நான் பாலாஜியை இழுத்துட்டுப் போனேன்... ‘உங்க பிரண்டுதானே’ –ன்னு ஆரி சொன்னார்.. ‘ஒன்சைடு’ன்னு என்னைச் சொல்லிட்டாங்க.. பாலாஜி கிட்ட நான் அதிகமா பேசினது கூட இல்லை. எனக்கும் இங்க அதுதான் நடக்குது’ என்று சாமுடன் இணைந்து கொண்டார் ரம்யா. ‘பாலாஜியைப் போய் என் ஃபிரண்டுன்னு சொல்லிட்டாங்களே..’ என்கிற கவலை அவரது முகத்தில் ஜாலியாகத் தெரிந்தது.

வேல்முருகனின் கூலிங்கிளாஸை இரவல் அணிந்து கொண்டிருந்த பாலாஜி '‘சாரி சனம்'’ என்று சம்பந்தமில்லாமல் தழுதழுக்க.. '‘ஏய், புதுசா ஏதாவது தப்பு பண்ணியா?” என்று வீட்டம்மணி மாதிரி குறுகுறுப்பாக விசாரித்தார் சனம். பிறகு ‘இறுதிப் போட்டியில் வெல்ல வாழ்த்துகள்’ என்று வாழ்த்தினார்.நீண்ட நாட்களுக்குப் பிறகு பிக்பாஸ் வீட்டின் சோபா நிறைந்திருந்ததைப் பார்க்க மனதிற்கு சந்தோஷமாக இருந்தது. “அப்படியே ஜாலியா இருந்துடலாம்னு பார்க்காதீங்கபார்க்காதீங்க... வந்திருக்கிற விருந்தினர்கள் வேணா அப்படி இருக்கட்டும். ஆனா ஃபைனலிஸ்ட்டுகளான நீங்கள் உங்கள் கடமையில்தான் கருத்தா இருக்கணும். கொடுக்கற டாஸ்க்கை ஒழுங்கா பண்ணனும்’ என்று பிக்பாஸ் ஜாலியான மிரட்டலுடன் ஓர் அறிவிப்பைத் தர, போட்டியாளர்களுக்கு கடுமையான டாஸ்க் காத்திருக்குமோ என்று தோன்றியது. அப்படியெல்லாம் இல்லை. கடலை மிட்டாய், பஞ்சு மிட்டாய்களுக்கான ‘லுலுவாய்’ போட்டிதான் பிறகு நடந்தது.

முதலில் இருந்தே சுரத்தில்லாமல் இருந்த ஆரி, இப்போதும் அதே மூடில் அமர்ந்திருக்க, அணி பிரிக்கும் போது ‘ஆரி... கூட உங்களுக்கு ஓகேவா...” என்பது மாதிரியே கேபி விசாரித்துக் கொண்டிருந்தார். ‘'கம்முன்னு இருக்கியா. பூச்சாண்டி கிட்ட பிடிச்சி கொடுத்துடவா?” என்று குழந்தைகளை மிரட்டுவது மாதிரியே அந்த அழைப்பு இருக்க ஆரியின் முகத்தில் ‘சுர்’ இன்னமும் அதிகமானது.

பிக்பாஸ் – நாள் 100
பிக்பாஸ் – நாள் 100எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவது போல ‘ஏங்க.. அதான் கேக்கறாங்கள்ல, சொல்லுங்களேன்’ என்று ரியோ கேட்டு விட “ஏன் நீங்க சொல்லுங்களேன்’ என்று ‘கல்லூரி’ படத்தில் வரும் இளைஞர்கள் மாறி இருவரும் மாறி மாறி பேசிக் கொண்டிருந்தார்கள். ரியோவும் இதை அதிகம் நோண்டாமல் அப்படியே விட்டிருக்கலாம். போலவே ஆரியும் இந்தச் சிறிய விஷயத்திற்கு அதிக ‘உர்’ரைக் காட்டாமல் இருந்திருக்கலாம்.

வீட்டை ஐந்து அணிகளாகப் பிரித்து ‘தங்கமே உன்னைத்தான் தேடி வந்தேன்’ டாஸ்க்கை மீண்டும் நடத்தினார் பிக்பாஸ். முதலில் உள்ளே சென்ற அணி ‘இன்னாதிது.. ஒண்ணுமே காணோம்..” என்று அதிர்ச்சியடைந்தபடி கீழே கிடக்கும் மண்ணைக் கிளறி சில பேப்பர்களை மட்டும் பொறுக்கி வந்தார்கள். ‘எலந்த பயம், கொர்கலிக்கா’ என்று சில்லறை அயிட்டங்களை இதற்குப் பரிசாக கொடுத்தார் பிக்பாஸ்.

இந்த ‘லுலுவாய்’ டாஸ்க்கில் கூட ‘Out of the box thinking’ ராஜதந்திரத்தைக் காட்டி சொதப்பினார் பாலாஜி. “நாம முதல்ல போகலாம்’ என்று ரமேஷ் சொல்லியிருக்கிறார் போலிருக்கிறது. ‘இல்ல. ரெண்டாவதா போவோம்’ என்று பாலாஜி சொல்ல, இவர்கள் சென்ற போது அந்த துண்டு பேப்பர்கள் கூட இல்லை. ‘எதுவுமே இல்லாம போக மாட்டேன்’ என்று அடம்பிடித்த பாலாஜி, பஸ்ஸர் அடித்த பிறகும் கூட மண்ணை நோண்டி ஒரு பேப்பரை எடுத்துக் கொண்டுதான் கிளம்பினார். ‘குழந்தை... குழந்தை’ என்று சொல்லி பாலாஜியின் கையில் ஃபீடிங் பாட்டிலை கொடுத்து விடுவார்கள் போலிருக்கிறது.

ரியோ அணி கொண்டு வந்ததில் புதிய அயிட்டங்கள் கிடைத்தன. இதற்காக பெருமையடித்துக் கொண்டார் ரியோ. ‘ஐஸ்கிரீம்’ என்று வந்த போது ‘மேங்கோ ஃபிளேவர் அனுப்புங்க பிக்பாஸ்’ என்று மறக்காமல் கேட்டுக் கொண்டார் ரம்யா. அர்ச்சனாவிற்கு பிடித்த ‘சோன்பப்டியும்’ லிஸ்ட்டில் வந்தது. (எனக்கும் ரொம்ப பிடிக்கும்.)

பிக்பாஸ் – நாள் 100
பிக்பாஸ் – நாள் 100

.

‘முறுக்கு வந்திருக்கு. சரக்கு வரலையே’ என்று கவலைப்பட்டார் சோம். சனம் இருந்த அணி சென்று வந்த பிறகு, ‘நான் என்ன கொண்டு வந்திருக்கேன்.. சொல்லுங்க பார்க்கலாம்’ என்று அவர் பில்டப் தந்த போது ‘லெமனா?” என்று யாரோ டைமிங்காக கேட்டார்கள். ‘இல்ல.. நம்ம ஆஜித்.. குட்டி பாபி சிம்ஹா மாதிரி இருக்கான்ல. பாபி சிம்ஹா நடித்த படம்’ என்றெல்லாம் சுற்றி வளைத்து அவர் ‘க்ளு’ தர ‘ஜிகர்தண்டாவா?’ என்று கண்டுபிடித்தார்கள்.

இணையத்தில் வேல்முருகனை வைத்து வெளிவந்த மீம்ஸ்களை விடவும் வீட்டில்தான் அவரை நிரம்புவும் ஓட்டியிருக்கிறார்கள் போலிருக்கிறது. ‘எங்கவே ஒளிஞ்சீட்டு இருந்தீரு.. நாங்க வீட்ல டிவி பின்னாடி கூட போய் தேடிப் பார்த்தோம். ஆளைக் காங்கலையே’ என்று வீட்டில் சலித்துக் கொண்டார்களாம். இதை அவர் சிரிக்க சிரிக்கச் சொன்னதை வீடே உற்சாகமாக அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது. முன்பே இந்த நகைச்சுவையை அவர் வெளிப்படுத்தியிருந்தால் இன்னமும் சற்று காலம் இருந்திருக்கலாம். வேல்முருகனும் சரி, நிஷாவும் சரி, தன்னைத் தாழ்த்திக் கொண்டு அதில் நகைச்சுவையை வெளிப்படுத்துகிறார்கள். (வடிவேலுவின் பாணி இது!).

பிக்பாஸ் – நாள் 100
பிக்பாஸ் – நாள் 100“நீங்க பரவாயில்லை. என்னை வீட்ல ரெண்டு மாசம் தேடியிருக்காங்க.. இவன் பிக்பாஸ் வீட்டுக்குள்ளதான் இருக்கானா-ன்னு வீட்ல சந்தேகமே வந்துடுச்சு. போலீஸ்ல புகார் கொடுத்து ‘காணவில்லை’ போஸ்டர் ஒட்டறதுக்குள்ள. நான் யதேச்சையா

ஒரு சீன்ல வந்து அவங்க கண்ல பட்டிருக்கேன்’ என்று வேல்மிருகனையும் மிஞ்சினார் ஆஜித்.

மக்களை மீண்டும் சபையில் ஒன்று கூட்டிய பிக்பாஸ், நூறாவது நாள் சிறப்பு நிகழ்ச்சியாக பிக்பாஸ் வீட்டில் நிகழ்ந்த நகைச்சுவை தருணங்கள் அடங்கிய வீடியோவை ஒளிபரப்புவதாக அறிவிக்க ‘மாஸ்டர்’ படத்திற்கு முதல் ஷோ டிக்கெட் கிடைத்தது போல் மக்கள் உற்சாகமானார்கள். ‘நகைச்சுவை’ என்று அறிவித்ததுமே ஏதோ அதை தான் மட்டுமே குத்தகைக்கு எடுத்திருப்பது போல் ரியோ எழுந்து நின்றதும் பிறகு அநாவசியமாக கண்கலங்கியதும் உண்மையிலேயே நல்ல காமெடி.


வீடியோ தரமான சம்பவமாக இருந்தது. ‘மீசை வரைந்த முகத்துடன் சாம் நடந்து வர, அதைப் பார்த்து பயந்து நிஷா தடுக்கி விழுவது போல் எடிட் செய்திருந்த விதம் அபாரம். இரண்டும் வெவ்வேறு தருணங்களில் நடந்த காட்சிகள். அவற்றை அழகாக ஒட்ட வைத்திருந்தார்கள். ‘பிக்பாஸ் வீட்டில் உங்கள் பங்களிப்பு என்ன?” என்று ஆபிஸ் ரூமில் ஒவ்வொருவரையும் அழைத்து ஊமைக்குத்தாக பிக்பாஸ் குத்திய காட்சிகளின் பின்னால் இணைக்கப்பட்டிருந்த பாடல் நல்ல நகைச்சுவை. மிக குறிப்பாக ரமேஷ் டிசைன் டிசைனான போஸ்களில் உறங்கும் காட்சி சிரிக்க வைத்தது.

‘We are in national television’ என்று ரியோ ஆவேசமாக கத்திய காட்சியை, ‘பாட்ஷா’ படத்தின் பின்னணியைப் போட்டு அவரின் கோபத்தை காமெடியாக்கி வைத்திருந்தார்கள். இந்தத் தொகுப்பில் ரியோ, நிஷா ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகள் உண்மையிலேயே சுவாரசியமாக இருந்தன. தான் பாம்பு டான்ஸ் ஆடிய காட்சியைக் கண்டு விழுந்து விழுந்து சிரித்தார் அர்ச்சனா.

பிக்பாஸ் – நாள் 100
பிக்பாஸ் – நாள் 100நகைச்சுவை என்பது ஊறுகாய் போலத்தான் இருக்க வேண்டும். அதுவே முழு சாப்பாடு ஆகி விடக்கூடாது என்கிற ஞானம் எடிட்டருக்கு இருந்தது. எனவே அடுத்ததாக ரேகா அழும் காட்சி வந்தது. உண்மையில் இது தேவையில்லாத ஆணி. ‘கடந்து வந்த பாதையில்’ மற்றவர்கள் சிரித்து விடுவார்களோ என்று எண்ணி தன் தந்தையின் மரணத்தைப் பற்றிய விஷயத்தை ரேகா சொல்லாதது அவரின் தனிப்பட்ட தேர்வு. அதற்காக அவரின் வீட்டார் ரேகாவை கோபித்துக் கொண்டிருக்கத் தேவையில்லை. ரேகாவும் அதற்காக இப்படி ஃபீல் செய்யத் தேவையில்லை.

எனவே அப்போது விட்டுப் போன கதையை இப்போது அழ அழச் சொன்னார் ரேகா. அவர் சொல்லி முடித்ததும் ‘ஆறுதல் சொல்கிறேன் பேர்வழி’ என்று ரேகாவை ரியோ கட்டியணைக்க ‘விடுப்பா. மூச்சு முட்டுது’ என்று ரேகா சொன்னதிற்கு தன்னிச்சையாக சனம் சிரித்தது க்யூட்டான காட்சி.

மற்றவர்களின் துயரக்கதைகளைக் கண்டு சிரிப்பது ஒரு மனவியாதிதான். போலவே தங்களின் துயரத்தை எங்கே சொல்ல வேண்டும் என்கிற சந்தர்ப்பமும் சூழலும் இருக்கிறது. தங்களின் அந்தரங்கமான துயரத்தை, தனக்கு நெருக்கமானவர்களிடம் தனிமையில் சொல்வதுதான் சரியானது. இதைத் தொலைக்காட்சியில் சொல்ல வேண்டும் என்று எவ்வித கட்டாயமும் இல்லை. இதற்காக ரேகாவோ அவரது குடும்பத்தாரோ குற்றவுணர்வு கொள்ளத் தேவையில்லை.

ஆனால், ரேகா சொல்ல வந்ததின் செய்தி முக்கியமானது. சுயநலம், பணிச்சுமை, சலிப்பு, கோபம், வயதானவர்கள் செய்யும் சேஷ்டைகள் போன்ற காரணங்களால் தங்களின் பெற்றோர்களை முதிய வயதில் சரியாக கவனிக்காமல் விட்டு விடுபவர்கள் அதிகம். ஆனால் பெற்றோர் மறைந்த பிறகு நம்முடைய பிழைகள், தவறுகள் எல்லாம் ஒட்டுமொத்தமாக ஞாபகம் வந்து குற்றவுணர்வையும் சங்கடத்தை ஆழமாக ஏற்படுத்தும். எனவே பெற்றோர்கள் இருக்கும் போதே அவர்களை சரியாக கவனித்துக் கொள்வதுதான் சரியானது.

பிக்பாஸ் – நாள் 100
பிக்பாஸ் – நாள் 100ரேகாவின் சோக எபிஸோட் முடிந்ததும் வீட்டை மறுபடியும் கலகலப்பாக மாற்றும் பொறுப்பை பிக்பாஸ் ஏற்றுக் கொண்டு விட்டார். ‘நிஷூ’ என்று செல்லமாக நிஷாவை அவர் அழைத்த போது அம்மணிக்கு தலை, கால் புரியவில்லை. ‘பிக்பாஸ். இந்தக் கொடுமையை எல்லாம் எங்களால பார்க்க முடியாது” என்று இதர போட்டியாளர்கள் நொந்து போனார்கள்.

‘என்ன நிஷூ.. கொயட்டா இருக்கீங்க. டயட்டா?’ என்று நிஷாவின் ஸ்லிம் க்யூட்னஸை பிக்பாஸ் புகழ சந்தோஷமும் வெட்கமும் தாங்காமல் தத்தளித்தார் நிஷா.. ‘பிக்பாஸ்.. ஒருமுறையாவது ஐ லவ் யூ’ன்னு சொல்லிடுங்க’ என்று வழக்கமாக கெ(கொ)ஞ்சுவது போல நிஷா கேட்க பிக்பாஸ் மனம் இளகி ‘நிஷா ஐ லவ் யூ’ என்று மெளன ராகம் கார்த்திக் மாதிரி மைக் போட்டு அறிவித்து விட, பிறகு சின்ராசுவை கையிலேயே பிடிக்க முடியவில்லை.

பிக்பாஸ் – நாள் 100
பிக்பாஸ் – நாள் 100

‘இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே அங்கே பறந்தன’ என்கிற பாடல் பின்னணியில் ஒலிக்காத குறையாக வீடெங்கும் பறவையாக பறந்து திரிந்தார் நிஷா. ‘இன்னமும் என்னென்ன கொடுமையையெல்லாம் பார்க்க வேண்டியிருக்குமோ’ என்று மற்ற போட்டியாளர்கள் கண்களை மூடிக் கொண்டார்கள்.

இதற்குள் பிக்பாஸ் வீட்டு அம்மணியிடமிருந்து ‘என்னவே. வில்லங்கமா விளையாடிட்டு இருக்கீரு” என்று பிக்பாஸிற்கு SMS வந்திருக்கும் போல. ‘இல்லம்மா.. சும்மா பேசிட்டு இருந்தோம்’ என்று பிறகு பிளேட்டை திருப்பிப் போட்டார் பிக்பாஸ்.

வீடெங்கும் உற்சாகமாக அலைந்து திரிந்து கொண்டிருந்த நிஷாவை அழைத்து ‘காமெடி நல்லாயிருந்துதா” என்று அவர் கேட்க (என்னா வில்லத்தனம்?!) நிஷாவின் உற்சாக பலூனில் இருந்த காற்று முழுவதும் இறங்கி அப்படியே மடங்கி மூலையில் சோகமாக அமர்ந்தார். ‘தண்ணியக் குடி, தண்ணியக் குடி’ என்று தண்ணீர் கொண்டு வந்து தந்தார் வேல்முருகன். ‘தலைமகளே.. கலங்காதே..’என்று அரவணைத்து ஆறுதல் சொன்னார் பாலாஜி.

உலகத்திலேயே மிகச் சுருக்கமான காதல் கதை என்பது இதுதான் போல.