Published:Updated:

'அன்பே சிவம்' எடுத்தவரிடமே அன்பு பஞ்சாயத்தா... ஆரியின் பக்கம் உண்மை இருக்கா?!பிக்பாஸ் – நாள் 55

பிக்பாஸ்

போட்டியாளர்களை கமல் ஏன் கடுமையாக கண்டிக்க மாட்டேன்கிறார் என்று பல பார்வையாளர்களுக்கு நெருடல் இருந்திருக்கலாம். அவர்களுக்கான பதில் இதில் கிடைத்திருக்கலாம்.

Published:Updated:

'அன்பே சிவம்' எடுத்தவரிடமே அன்பு பஞ்சாயத்தா... ஆரியின் பக்கம் உண்மை இருக்கா?!பிக்பாஸ் – நாள் 55

போட்டியாளர்களை கமல் ஏன் கடுமையாக கண்டிக்க மாட்டேன்கிறார் என்று பல பார்வையாளர்களுக்கு நெருடல் இருந்திருக்கலாம். அவர்களுக்கான பதில் இதில் கிடைத்திருக்கலாம்.

பிக்பாஸ்

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு ஒரு அடிப்படையான சிக்கல் இருக்கிறது. தாங்கள் செய்வதில் எதுவெல்லாம் மக்களின் பார்வைக்குச் செல்லும் என்பது அவர்களுக்குத் தெரியாது. பார்வையாளர்களே இல்லாத மேடையில் நடிப்பது மாதிரி. ‘ஹோம் கிரவுண்டில்’ பார்வையாளர்களின் கரகோஷ ஆதரவுடன் வெற்றி பெறும் கிரிக்கெட் டீம் போன்ற வாய்ப்பு இவர்களுக்கு கிடையாது. காட்டில் காயும் நிலவு போல இயங்கிக் கொண்டிருக்க வேண்டும்.


இப்படிப்பட்ட சூழலில் அவர்களுக்கும் வெளியுலகத்திற்குமான தொடர்பு என்பது ஒரேயொரு புள்ளி மட்டுமே. அது நிகழ்ச்சித் தொகுப்பாளர் கமல்ஹாசன். அவரின் மூலமாகத்தான் மக்கள் என்ன நினைக்கிறார்கள், அவர் என்ன நினைக்கிறார் என்பதை அவர்கள் அறிந்து கொள்ள முடியும். ரிப்போர்ட் கார்டடைப் பெற முடியும். ஆனால் நிகழ்ச்சி விதிகளின் படி தொகுப்பாளர்கள் வெளிப்படையாகப் புரியும்படி அதிக டிப்ஸ்கள் தர முடியாது. ‘ஒரு குன்சாகத்தான்’ வழிகாட்ட முடியும்.

கமல் சாதாரணமாக பேசுவதே சூசகமாகத்தான் இருக்கும். இதில் இது போன்ற கட்டுப்பாட்டுடன் அவர் வார்த்தைகளை மிக கவனமாக பயன்படுத்த வேண்டிய சூழல். இந்த நிலையில் கமல் சொல்லும் ஒவ்வொரு ‘டிப்’பும் போட்டியாளர்களுக்கு முக்கியம். அதுதான் அவர்களின் கலங்கரை விளக்கம். எனவே கமல் சொல்லும் ஒவ்வொன்றையும் அவர்கள் மிக ஜாக்கிரதையாக கவனிக்க வேண்டும். அவரை அதிகம் பேச விட வேண்டும்.

ஆனால் போட்டியாளர்களிடையே நடப்பது என்ன? ''அடிச்சிட்டான் சார்... கிள்ளிட்டான் சார்…’ என்று பரஸ்பரம் புகார் செய்து நேரத்தைக் கடத்துகிறார்கள்.

'அன்பே சிவம்' எடுத்தவரிடமே அன்பு பஞ்சாயத்தா... ஆரியின் பக்கம் உண்மை இருக்கா?!பிக்பாஸ் – நாள் 55இதைப் போலவே கமலும் தனது விசாரணையை சுருக்கமாகவும் கச்சிதமாகவும் அமைத்து பல்வேறு உத்திகளின் மூலம் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்கலாம். ‘நடந்தது என்ன?’ என்று அவர் விசாரிக்க ஆரம்பிக்க... போட்டியாளர்கள் நீளமான பதில்களைச் சொல்ல ‘இதையெல்லாம் நாங்க பார்த்துட்டம். விஷயத்திற்கு வாங்கப்பா’ என்று நாம் கொட்டாவி விட வேண்டியிருக்கிறது.

இதைப் போலவே போட்டியாளர்கள் எந்தப் பஞ்சாயத்தைப் பற்றி பேசுகிறார்கள் என்பது புரியாமல் ‘நோலன்’ படத்தின் கதாபாத்திரம் போல காலத்தை முன்னும் பின்னுமாக நகர்த்தி நாம் யோசிக்க வேண்டியிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை இயன்ற அளவில் நெருக்கமாக அவதானிக்கும் எனக்கே சமயங்களில் மண்டை குழம்புகிறது, என்றால் சும்மா பொழுது போக்கிற்காக பார்க்கிறவர்களின் நிலையை யோசித்தால் எனக்கே பரிதாபமாக இருக்கிறது.

கமலும் பிக்பாஸ் டீமும் இணைந்து வார இறுதி எபிஸோடுகளை நிச்சயம் சரியாக்க வேண்டும். போட்டியாளர்களின் பதில்களை கோர்வையாகச் சொல்லச் சொல்லி அதை எடிட்டிங் வழியாக திறமையாகச் சமைத்து பார்வையாளர்களுக்கு தரலாம் என்பது என் ஆலோசனை அல்ல, ‘Tip’.

கமல் நுழையும் போதே ‘தனது’ விளம்பர இடைவேளையுடன் வந்தார். ‘மையம் கொண்ட புயல்' எனது தனது அரசியல் கட்சியின் பெயரை சாமர்த்தியமாக உள்ளே நுழைத்தார். (விகடனின் ‘வலைபாயுதே’ பகுதியில் முன்னர் ஒரு சமூகவலைத்தள கிண்டல் பதிவு வந்திருந்தது. ‘கமல் தனது சம்பளத்திற்கான பில்லை விஜய் டிவியிடம் நீட்டும் போது, அவர்கள் ‘சார்.. இது உங்கள் அரசியல் கட்சி விளம்பரத்திற்கான பில்’ என்று பதிலுக்கு நீட்டப் போகிறார்கள்’ என்று. அது உண்மையாகி விடக்கூடாது).''மழை நீரை நீர்நிலைகளில் சேமிக்க வேண்டும், சாலையில், வீட்டில் சேமிக்கக்கூடாது'’ என்கிற குத்தலான நகைச்சுவையுடன் வந்த கமல், சமீபத்திய புயலை அரசு இயந்திரங்கள் சமாளித்த விதத்தை நன்றியுடன் பாராட்டவும் செய்தார்.வெள்ளிக்கிழமை நிகழ்வுகள்: ரம்யா செய்யும் அரசியலை ரமேஷிடம் விளக்கிக் கொண்டிருந்தார் ஆரி. இவருக்கும் ரம்யாவிற்கு எங்கோவொரு விரோதப் புகை ஆரம்பித்து கமழ்ந்து கொண்டேயிருக்கிறது. பொதுவாக யாரைப் பற்றியும் புறணி பேசாத ரம்யா, ஆரியை தொலைவில் இருந்து அவ்வப்போது கிண்டலடிக்கிறார்.

''தன்னிடம் கேட்க கேள்விகளே இல்லாத போதும் கால்சென்டர் டாஸ்க்கில் ரமேஷை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும், ‘சாமை பாலாஜி கேப்டன் ஆக்கினதிற்கு மூல காரணமே ரம்யாதானே... அவர்தானே தனது அதிர்ஷ்ட வாய்ப்பின் மூலம் சாமை உள்ளே நுழைத்தார், தான் பேச வேண்டியதையெல்லாம் பாலாஜியின் மூலம் பேசுகிறார் என்றெல்லாம் ஆரியின் புகார்கள் தொடர்ந்தன. '‘ஆங்... புரியது... புரியது'’ என்று மையமாகத் தலையாட்டிக் கொண்டிருந்தார் ரமேஷ். 'இவன் நம்மள விட்டா அப்படி போய் கொஞ்சம் நிம்மதியா கட்டையைச் சாய்க்கலாம்’ என்பதே அவரின் மைண்ட் வாய்ஸாக இருந்திருக்கும்.

55-ம் நாள் விடிந்தது. ‘எங்க… வீட்டு குத்துவெளக்கு’ என்கிற ரகளையான கானா பாடலைப் போட்டு மக்களை எழுப்பினார் பிக்பாஸ்.

''அனிதா என்னை நாமினேட் பண்ணதாலதான் நான் அப்செட். அதைத்தான் அவங்க முகப்பருவிற்கு க்ரீம் போடும் போது சொன்னேன். இந்த விஷயத்தை அனிதாவும் சனமும் சேர்ந்து ஊதிப் பெருக்கிட்டாங்க'’ என்று ஷிவானியிடம் சலித்துக் கொண்டார் சாம். (இந்த அற்பமான விஷயத்தை ‘worst performer’ கேட்டகிரியில் போய் அனிதா சொல்வது ரொம்ப வொர்ஸ்ட்)

“ஜெயில் ஆப்ஷனே இதுவரைக்கும் அஞ்சு முறைதான் வந்திருக்கிறது. அதில் மூன்று முறை சென்று ஆரி சாதனை படைத்திருக்கிறார்’ என்று ரம்யா கிண்டல் செய்ய ‘அப்ப எவ்வளவு கடியா இருந்திருப்பார்?’ என்று சாம் அதில் கூடுதல் மசாலாவைச் சேர்க்க தூரத்தில் ஆரி ‘அந்நியன்’ அம்பி முகபாவத்தில் வந்து கொண்டிருந்தார். (எப்ப அந்நியனா மாறப் போறாரோ?!).

திடீரென்று வீட்டில் எல்லோரும் அமைதியாக குசுகுசுத்துக் கொண்டிருக்க (அர்ச்சனா இந்த ‘குசுகுசு’வை செய்கையினால் காட்டி விட்டார்) காரணம் விசாரிக்கப்பட்ட போது '‘சனம் மேடம் தூங்கறாங்களாம்.. யாரும் பேசக்கூடாதாம், உஸ்… ” என்று சாம் தாழ்ந்த குரலில் சொல்ல ''ச்சை... நான் என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன்'' என்றார் நிஷா. (ஊரு ‘சனம்’ தூங்கிடுச்சு).

வீடு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ரியோ உதவிக்கு கேபியை அழைத்துக்கொள்ள ''ஹலோ... ஹவுஸ்கீப்பிங் கேப்டன் நானு... என் கிட்ட அனுமதி கேட்கணும்'' என்றபடி கெத்தாக வந்தார் அனிதா. ''மேடம் நான் வீட்டோட கேப்டன்-னு நெனச்சேன்'’ என்று சர்காஸ்டிக்காக பதில் சொன்னார் ரியோ. (பத்தாங்கிளாஸ் ஃபெயிலு... எட்டாங்கிளாஸ் பாஸூ… எது பெரிசு?). ‘'நம்ம தலைவரை இந்த வாரம் முழுக்க தலையிலேயே கொட்டினாங்கள்ல. எவ்ளோ அடிச்சாலும் தாங்கறாரு'’ என்று சோமுவும் ரமேஷூம் இணைந்து ரியோவை கிண்டல் செய்து கொண்டிருந்தார்கள்.

'அன்பே சிவம்' எடுத்தவரிடமே அன்பு பஞ்சாயத்தா... ஆரியின் பக்கம் உண்மை இருக்கா?!பிக்பாஸ் – நாள் 55

கமல் என்ட்ரி. '‘பிக்பாஸ் சீஸனில் யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு உங்களுக்கு மட்டும் கிடைச்சது. வெளில போய்ட்டு வந்த அனுபவம் எப்படி?” என்று விசாரிக்க ''பிக்பாஸ் அங்கிள் சரியாவே சுத்திக் காட்டலை. தூரத்துல ஒரு கார் லைட் மட்டும் பார்த்தோம்’' என்று சந்தோஷப்பட்டார் ரம்யா.

'‘சென்னைல வெள்ளம் இருக்கா?” என்று ரியோ சற்று கவலையுடன் கேட்டபோது, ஏதோ அது உலக மகா சதி ரகசியம் என்பது போல ‘'அதெல்லாம் சொல்ல முடியாது'’ என்று முதலில் பிகு செய்து கொண்ட கமல்... '‘உங்கள் வீட்டார் பாதுகாப்பாக இருக்கிறார்கள்’' என்கிற ஆறுதலைப் பிறகு சொன்னார்.

“ஆண் போட்டியாளர்கள் Nomination topple card-ஐ முதல்லயே விட்டுக் கொடுத்திட்டீங்ளே. அம்பூட்டு நல்லவிய்ங்களா நீங்க?” என்று முதல் பஞ்சாயத்தை தூசு தட்டி ஆரம்பித்தார் கமல். ‘'எடக்கு மொடக்கா கேள்வி கேக்கறாங்க சார்... பேஜாராவுது'’ என்று வெள்ளந்தியாகச் சொன்னார் ரமேஷ். விட்டால், ‘சார்... கொஞ்சம் டயர்டா இருக்கு... நான் அப்படி ஓரமா சாஞ்சிக்கிட்டே தூங்குவேனாம்… நீங்க பாட்டுக்கு தாலாட்டு பாடற மாதிரி பேசிட்டே இருக்கீங்களா?’ என்று கமலிடம் கேட்டு விடுவார் போலிருக்கிறது. ‘அதானய்யா போட்டி’ என்று ரமேஷை கிண்டலடித்தார் கமல்.

நிஷாவிடமிருந்து கார்டை சூசகமாகத் தட்டிப் பறித்த அனிதாவின் திறமையைப் பாராட்டிய கமல், ‘'எனக்கு கொடுத்து ஆட்டத்தை முடிங்கப்பா’' என்று வெளிப்படையாக கேட்ட சனத்தின் விளையாட்டு முனைப்பை மிகவும் பாராட்டினார். (சம்பந்தப்பட்ட நாளின் கட்டுரையிலும் சனத்தை நானும் பாராட்டியிருந்தேன். மற்றவர்கள் போடும் நாடகங்களை விடவும் சனத்தின் செயல்பாடு சிறப்பாக இருந்தது. அதுதான் ஸ்போர்ட்ஸ்வுமன்ஷிப்).

'‘சார்... அதுக்கே நாலு மணி நேரம் ஆயிடுச்சு... நான் தூங்கப் போக வேணாமா?” என்று இடைமறித்தார் ரமேஷ். ‘'நேரமா சார் முக்கியம்...'’ என்று சொன்ன சனம் பிறகு, ''சார்... லாஜிக்படி நான்தான் வின்னர்'’ என்று தலையைச் சுற்றும் ஒரு விளக்கத்தை சொல்ல... ‘ம்க்கும்.. இப்ப சொல்லுங்க’ என்று கிண்டலடித்தார் கமல். சனத்தின் மூளையில் உள்ள பல்பு எப்போதுமே தாமதமாகத்தான் எரிகிறது.

'அன்பே சிவம்' எடுத்தவரிடமே அன்பு பஞ்சாயத்தா... ஆரியின் பக்கம் உண்மை இருக்கா?!பிக்பாஸ் – நாள் 55

மற்றவர்கள் தந்த நெருக்கடியினால் உணர்ச்சிவசப்பட்டு அதிர்ஷ்ட அட்டையை இழந்த நிஷாவின் பக்கம் வந்தார் கமல். ''உங்க விளையாட்டை நீங்கதான் விளையாடணும்... மத்தவங்களை ஜெயிக்க வெக்கறதுக்கு நீங்க வரலை... அது மக்களோட வேலை... இந்த வாய்ப்புத் தகுதியான வேறு எவருக்காவது கிடைச்சிருக்கலாம்னு மக்கள் நெனச்சிடுவாங்க... அன்புல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். அது விளையாட்டை பாதிக்காம பார்த்துக்கணும். தனித்துவத்தோடு விளையாடுங்க’' என்பதுதான் கமல் சுற்றிச் சுற்றி நிஷாவிற்கு சொன்ன ‘டிப்’. (இதையே நானும் இந்த வாரத்தின் கட்டுரையில் சொல்லியிருந்தேன்.).

நிஷாவிற்கு மட்டுமல்ல, அர்ச்சனா மற்றும் பாலாஜி ஆகிய இரு அணிகளுக்குமே இந்த ஆலோசனையை தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருந்தார் கமல். ஆனால் இரு தரப்புமே தங்களிடம் இருக்கும் இந்தக் குறையை மறுத்து தொடர்ந்து மழுப்பி அதை நியாயப்படுத்திக் கொண்டேயிருந்தார்கள். ‘மக்கள் தங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்களே... அவர்களுக்குத் தெரியாமலா இருக்கும்’ என்று கூட அவர்கள் யோசிக்கவில்லை.

நிஷா பல சமயங்களில் ரியோவின் போர்ப்படைத் தளபதி மாதிரிதான் செயல்படுகிறார். யாராவது ரியோவை தாக்கிப் பேசினாலோ, வாக்குவாதம் செய்ய முயன்றாலோ பக்கத்தில் கவலையுடன் வந்து நின்று கொள்வார். அப்போது அவரின் முகபாவங்கள் பார்க்க வேடிக்கையாக இருக்கும். கமலின் விசாரணை சபையில் கூட தன் முகபாவங்களை அப்படியே வெளிப்படுத்தி விடுகிறார் நிஷா. இதுவே சுரேஷ் இருந்தபோது, கமல் என்னதான் கிடுக்கிப்பிடி போட்டாலும் முகத்தை வெறுமையாக வைத்துக் கொள்வார். அவர் மனதில் என்ன ஓடுகிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியாது.

ஆனால், ரியோவிற்கு நிஷா செய்யும் தவறு புரிகிறது. நிஷாவின் பாசம் தன்னையும் உள்ளே சேர்த்து இழுத்து விடும் என்கிற எச்சரிக்கையுணர்ச்சி இருக்கிறது. எனவே இதை கரிசனமாகவும் கோபமாகவும் பல சமயங்களில் வெளிப்படுத்துகிறார். ஆனால் அடிப்படையில் வெள்ளந்தியான நிஷாவிற்கு இது புரியவில்லை.

ஒருவர் சற்று பிரபலமாக இருக்கிறார் என்பதற்காகவே அவரைப் போட்டிக்குள் கொண்டு வராமல் அவரின் அறிவுத்திறமையையும் சற்று சோதித்து ஆட்டத்திற்குள் கொண்டு வந்தால் இந்த விளையாட்டு இன்னமும் அதிக சுவாரசியத்துடன் இருக்கும். ஆனால், கஞ்சா கருப்பு, வையாபுரி, செண்ட்ராயன் என்று சீஸனுக்கு ஒரு காமெடியரை கொண்டு ‘காமெடி டிராக்கிற்காக’ மட்டுமே பயன்படுத்துவது பிக்பாஸின் ஸ்டைல். எனில் அவர்கள் மக்களுக்கு ‘என்டர்டெய்ன்’ செய்யும் வேலையை மட்டுமே செய்ய முடியும். (நிற்க... உடனே இதை நகைச்சுவையாளர்கள் மூளையில்லாதவர்களா என்று புரிந்து கொள்ள வேண்டாம். கமலும் சிறந்த நகைச்சுவையாளர்தான்).

'அன்பே சிவம்' எடுத்தவரிடமே அன்பு பஞ்சாயத்தா... ஆரியின் பக்கம் உண்மை இருக்கா?!பிக்பாஸ் – நாள் 55

“56 நாட்கள் ஆகுது.. இன்னும் இதையே சொல்ல வேண்டியிருக்கு” என்பது போல் சலித்துக் கொள்ள நிஷா முகத்தில் சங்கடமான சிரிப்பு வெளிப்பட்டது.

''நான் நிஷாவிற்கான சரியாக காரணத்தைச் சொல்லி ஆட்சேபித்தாலும் அவங்க அதை தப்பா புரிஞ்சுக்கிட்டு கோபப்படறாங்க.. நாமினேஷன், ‘Worst performer’ போன்ற சமயங்கள்ல பழிவாங்கிடறாங்க’' என்று சனம் சொன்ன புகாரை ஆரியும் வழிமொழிந்தார். இதற்காக அவர் நீண்ட விளக்கத்தை அளிக்க முற்பட்டுக் கொண்டிருந்த போது பக்கத்திலிருந்த கேபிக்கு தூக்கமே வந்து விட்டது போல. கமலுக்கும் கொட்டாவி வந்திருக்க வேண்டும். அதை அடக்கிக் கொண்டு ''பழைய மூட்டைகளையெல்லாம் இன்னமும் சுமந்து கொண்டிருக்காதீர்கள். போகியில் எரித்து விடுங்கள்’' என்று சம்பந்தமில்லாத ஆலோசனையைச் சொல்ல ''என்னையா... சொல்றீங்க?” என்று திகைத்துப் பார்த்தார் ஆரி.

''ஒரு வாரம் ஓட்டிடலாம்னு பார்த்தேன். இந்த அனிதாப் பொண்ணு காரியத்தை கெடுத்துடுச்சு... தெரிஞ்சிருந்தா அந்த முகப்பருல பாசிப்பருப்பை தடவியிருப்பேன்'’ என்று நொந்து போய் சொன்னார் சாம். அடுத்து அர்ச்சனா பக்கம் வண்டியைத் திருப்பிய கமல், முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு '‘அன்பு ஜெயிக்கும்னு நெனக்கறீங்களா?'’ என்று சர்காஸ்டிக்காக கேட்க, அந்தக் கிண்டல் அர்ச்சனாவிற்குப் புரிந்ததோ அல்லது புரியாதது மாதிரி நடித்தாரோ தெரியவில்லை… '‘ஜெயிக்கும் சார்...'’ என்று சீரியஸாக பதில் சொன்னார்.

கமல் செய்த கிண்டலுக்கு கூட அதிகம் சிரிப்பு வரவில்லை. அர்ச்சனாவின் அந்த பதிலுக்குத்தான் விழுந்து விழுந்து ‘அன்பாக’ சிரிக்க வேண்டியிருந்தது. இந்த சீஸன் முடிவதற்குள் ‘அன்பு’ என்கிற வார்த்தையை ஆழமாக குழிதோண்டிப் புதைத்து விடும் அளவிற்கு கொலைவெறி ஏறி விடும் போலிருக்கிறது. (வெற்றிமாறன் இயக்கிய ‘வடசென்னை’ திரைப்படத்தை மீண்டுமொருமுறை பார்க்கலாம் என்று நினைத்திருந்தேன். அதை இப்போது கைவிட வேண்டியதுதான். ஏனெனில் அந்தத் திரைப்பட நாயகனின் பாத்திரப் பெயர் ‘அன்பு’. அந்த அளவிற்கு இந்த வார்த்தையின் மீது வெறுப்பைக் கிளப்பி விட்டார் அர்ச்சனா.).

'அன்பே சிவம்' எடுத்தவரிடமே அன்பு பஞ்சாயத்தா... ஆரியின் பக்கம் உண்மை இருக்கா?!பிக்பாஸ் – நாள் 55

''இனிமே சத்தம் போட்டு விளையாடலாம்... சத்தம் போடாம அன்பைக் காட்டலாம். இதுதான் புது வியூகம்'’ என்று அர்ச்சனா தனது புதிய திட்டத்தை நிஷாவிடம் வெளியே பிரேக்கில் சொல்லிக் கொண்டிருந்த போது சிரிப்பதா, அழுவதா என்றே தெரியவில்லை.

கமல் என்ட்ரி. ‘கால்சென்டர் டாஸ்க்கில் பொறுமையாகவும் அழகாகவும் விளையாடிய பாலாஜிக்கு பாராட்டு’ என்று கமல் பாராட்டிய போது பின்பெஞ்ச் மாணவன் ஆவரேஜ் மார்க்கில் முதன்முறையாக பாஸானது போன்ற பிரகாச புன்னகையைக் காட்டினார் பாலாஜி.

'அன்பே சிவம்' எடுத்தவரிடமே அன்பு பஞ்சாயத்தா... ஆரியின் பக்கம் உண்மை இருக்கா?!பிக்பாஸ் – நாள் 55

“நீங்க ஏன் பாலாஜியை தேர்ந்தெடுத்தீங்க” என்று ‘காலர்’ அர்ச்சனாவிடம் விசாரித்த போது “மூணு பேரை முன்னிறுத்தி நான் விளையாடியதா பாலாஜி சொன்னாரு. சரி.. அந்த மேட்டரை விசாரிப்போம் என்று தோன்றியது. பேசியாச்சு... இப்ப அது சரியாயிடுச்சு...” என்றார் அர்ச்சனா. “ஆக்சுவலி அது அஞ்சு பேரு” என்றார் பாலாஜி. ‘கணக்கு தப்பு அது ஆறு பேரு’ என்று பிறகு திருத்தினார் சாம். (ஏதாவது ஒரு முடிவுக்கு வாங்கப்பா!)

இதற்கு பாலாஜி அளித்த விளக்கம் முக்கியமானது. ''அந்த டீம்ல தகுதியில்லாதவங்க இருந்தா கூட காப்பாத்திடறாங்க. நாமினேட் பண்ண மாட்டேங்கறாங்க. இதனால் விளையாட்டு சமநிலையில்லாம ஆயிடுது. ஆனா நாட்கள் செல்லச் செல்ல போட்டியாளர்கள் எண்ணிக்கை குறையும். அப்ப வேண்டியவங்களையே குத்த வேண்டியிருக்கும். கஷ்டமாப் போயிடும். அதனாலதான் நான் மொதல்ல இருந்தே இந்த ‘அன்பு பிஸ்னஸ்'க்கு எல்லாம் போறதில்லை. நான் விளையாட மட்டும்தான் வந்திருக்கேன்’' என்று சொன்ன போது பாலாஜி உருவத்தில் சுரேஷை பார்த்தது போலவே இருந்தது.

“ஏம்ப்பா தம்பி, அப்ப இதுவரைக்கும் ஷிவானி, சாமை ஒருமுறையாவது நீ நாமினேட் பண்ணியிருக்கியா?” என்று அந்தச் சமயத்தில் கிடுக்கிப்பிடி கேள்வியை கேபி எழுப்ப, பாலாஜியால் தெளிவாக பதில் சொல்ல முடியவில்லை.

ஒரு கட்சியிலிருந்து விலகி புதிய கட்சிக்கு ஒருவர் செல்லும் போது தனது விசுவாசத்தை காட்டுவதற்காக, பழைய கட்சியை கன்னாபின்னாவென்று ஆவேசமாக திட்டுவார். அரசியல் சூழலில் வழக்கமாக நடக்கும் விஷயம் இது. கேபியின் ஆவேசத்தைப் பார்க்கும் போது அர்ச்சனா டீமிடம் நல்ல பேர் வாங்கி விட வேண்டுமென்கிற முனைப்பும் பாலாஜியை பழிவாங்க வேண்டும் என்கிற ஆவேசமும் தெரிகிறது. என்றாலும் அவர் சுட்டிக் காட்டியது சரியான உண்மை.

“அப்ப நீங்களும் ஒரு டீமை மெயின்டெயின் பண்றீங்க போல'’ என்று நமட்டுச்சிரிப்புடன் பாலாஜியை கமல் விசாரிக்க ‘'இல்லை'’ என்று சாதித்தார் பாலாஜி. '‘சார். அவங்க அன்பா இருந்தாலும் ஒருத்தரை கெடுக்கணும்ன்ற மாதிரி பிளான் பண்றதில்லை’' என்று அர்ச்சனா டீமிற்கு சாதகமாகப் பேசினார் சாம். (கேபியைப் போல இவரும் கூடிய விரைவில் அர்ச்சனா டீமிற்கு ஷிஃப்ட் ஆகி விடுவாரோ?!) ‘எங்களை பாலாஜி டீம்ல சேர்க்காதீங்க.. எங்களை யாரும் சேர்த்துக்க மாட்டாங்க” என்று அனிதாவை கூட்டு சேர்த்துக் கொண்டு புலம்பினார் சனம்.

'அன்பே சிவம்' எடுத்தவரிடமே அன்பு பஞ்சாயத்தா... ஆரியின் பக்கம் உண்மை இருக்கா?!பிக்பாஸ் – நாள் 55

''பாலாஜி சொல்ல வேண்டிய குறைகளை உடனே சொல்லிடலாம். சுமந்துக்கிட்டு வந்து சபைலதான் கொட்டணுமா?'’ என்று ரியோ கேள்வி எழுப்ப ‘'கேப்டன்தான் என் கிட்ட பேசவே மாட்டேன்றாரே... நான் ஒண்ணு சொன்னா வேற ஒண்ணா தப்பா புரிஞ்சுக்கறாரு’' என்று ‘காத கிழிச்சுடுவேன்’ உதாரணத்தை சரியான சமயத்தில் எடுத்து வைத்தார் பாலாஜி. இது போன்ற சமயோசித புத்தி பாலாஜியிடம் அபரிதமாக இருக்கிறது.

“அது சரிப்பா தம்பி… கேப்டன்னு ஒரு ஆளு இருக்கும் போது கூட நீ வைஸ் கேப்டன் கிட்ட மட்டும்தான் பேசுவேன்னு அடம்பிடிக்கிறியே'’ என்று கமல் குத்திக் காட்ட சபை வெடித்து சிரித்தது. ‘Practice what you preach’ என்கிற வாக்கியத்தை பாலாஜிக்கே திருப்பி அனுப்பி வைத்தார் கமல்.

அடுத்ததாக அனிதாவின் பக்கம் வந்த கமல் ‘'ஏன் நிஷா கிட்ட இருந்து பிரிஞ்சு வந்தீங்க?'’ என்று கேட்க ''அங்க அசெளகரியமா இருந்தது சார்... அந்த மாதிரி ரியாக்ட் பண்றாங்க. குறைகளை சொன்னா கோச்சுக்கறாங்க. வெளிப்படையா இருக்க முடியலை. அதான் விலகி வந்துட்டேன்'’ என்று அனிதா விளக்கம் தர ‘'நட்பு இருந்தாதான் குறைகளை இன்னமும் அழுத்தமாக சொல்ல முடியும்'’ என்று மறுப்பு தெரிவித்தார் அர்ச்சனா.

“நாங்க யாரை நாமினேட் பண்ணணும்னு பேசியெல்லாம் வெச்சிக்கறதில்லை'’ என்று அர்ச்சனா கூறுவது உண்மை என்றே வைத்துக் கொள்வோம். ஆனால் அவர்கள் தங்கள் குழுவிற்குள் செலுத்திக் கொள்ளும் அன்பு, தன்னிச்சையாக செயல்பட்டு விடும். சதித்திட்டம் என்று தனியாக அவர்கள் செய்யாவிட்டால் குழு மனப்பான்மை காரணமாக சார்போடு இயங்க வைக்கும். தானாகவே இது நடக்கும் இது அர்ச்சனாவிற்குப் புரிகிறதா, அல்லது புரியாதது போல் நடிக்கிறாரா என்று தெரியவில்லை.

'அன்பே சிவம்' எடுத்தவரிடமே அன்பு பஞ்சாயத்தா... ஆரியின் பக்கம் உண்மை இருக்கா?!பிக்பாஸ் – நாள் 55

'‘நீங்க இந்த வாரம் நாமினேட் ஆகணும்னா, ஒண்ணியும் பண்ண வேண்டாம்.. லவ் பெட்ல போய் கம்ப்ளெயின்ட் பண்ணா போதும்'’ என்று உள்விவகார ரகசியத்தை சபையில் போட்டு உடைத்தார் பாலாஜி. ''ஆம், பாதிக்கப்பட்டேன்... நேரடியாக பாதிக்கப்பட்டேன்'’ என்று இதற்கு கைதூக்கி ஆதரித்தார் அனிதா.

தங்கள் குழுவின் நம்பகத்தன்மையை நிரூபிக்க, ''சோம் என்னை நாமினேட் செய்தார்’' என்கிற சப்பையான காரணத்தைச் சொன்னார் அர்ச்சனா. இது நகைப்பான காரணம் என்று நான் முன்பே எழுதியிருந்தேன். சோம் அர்ச்சனா மீது புகார் எதையும் நேர்மையாக வைக்கவில்லை. மாறாக... ''அவங்க இங்க ரொம்ப கஷ்டப்படறாங்க. மத்தவங்க பேச்சையெல்லாம் ஏன் சகிச்சக்கணும். வெளியே போகட்டும்'’ என்று பாசத்துடன் உருகியிருந்தார். இதைத்தான் பாலாஜியும் ‘டிராமா’ என்று சொன்னார்.

இந்த எளிய விஷயத்தை இரு அணிகளுக்கும் புரிய வைப்பதற்குள் கமலுக்கும் சர, நமக்கும் சரி மண்டை காய்ந்து விடும் போலிருக்கிறது. ‘தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது’ என்று முன்னர் ஒருமுறை சொன்னார் அர்ச்சனா. இப்போது இது அவருக்கே பொருந்தும்.

''பரஸ்பரம் அன்பு காட்டுங்க, தப்பில்ல. அது நிபந்தனையில்லாத அன்பா இருக்கணும். அதுக்கு கைமாறு செய்யணும்னு நெனக்கும் போதுதான் அது குரூப்பிஸமாக மாறி விடுகிறது'’ என்று இதை துல்லியமாக வரையறுத்துச் சொன்னார் கமல்.

'‘உங்க கூடயும் ஒரு மினி க்ரூப் இருக்கே'’ என்று நேரடியாக பாலாஜியை கமல் குற்றம்சாட்டிய போது அவர் அதை மறுத்தார். '‘என் முடிவுகள் அவர்களிடம் செல்வாக்கு செலுத்துமாறு நான் செயல்படுவதில்லை'’ என்று அவர் சொன்ன விளக்கம் செல்லுபடியாகாது. அர்ச்சனாவிற்கு சொன்ன அதே தர்க்கம்தான். நேரடியாக சொல்லாவிட்டாலும் தங்களின் செயல்பாடுகளின் மூலம் அந்த செல்வாக்கு மற்றவர்களிடம் பரவி விடும்.

‘பாலாஜியின் முடிவு என்னிடம் செல்வாக்கு செலுத்துவதில்லை’ என்று சொல்லி பாலாஜியின் தரப்பிற்கு சாம் ஆதரவு அளித்தார். அர்ச்சனா அணி சார்புடன் செயல்படுகிறது என்பதற்காக சில உதாரணங்களைச் சொன்னார் சாம். ‘'அந்த அணியில் இருப்பவர்கள் ஜெயிலுக்குப் போவது போன்ற சூழல் வருகிற போது அதற்கேற்ப முடிவுகளை மாற்றியிருக்கலாமே என்று ஆதங்கத்துடன் பேசிக் கொண்டார்கள்” என்று ரகசியத்தை உடைத்தார் சாம்.

பிறகு ‘கச்சா முச்சா’வென்ற சத்தத்துடன் சபை அவர்களுக்குள் பேசிக் கொண்டிருந்த போது நமட்டுச் சிரிப்புடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் கமல். ''ஏம்மா ஷிவானி... உங்களுக்கு சொல்றதுக்கு எதுவுமே இல்லையா?” என்று கமல் கேட்டவுடன்தான் தன் பிரச்னைக்கு விளக்கம் அளிக்க முன்வந்தார் ஷிவானி. ''இறுதிப் போட்டியில் உறுதியாக வருவார் என்று சொல்லப்பட்ட பெயர்கள் காரணமாக அர்ச்சனா என்னை நக்கல் செய்தார்’' என்கிற ஷிவானியின் புகாரை வன்மையாக மறுத்தார் அர்ச்சனா.

இது குழு விளையாட்டு அல்ல. தனித்தனியாக விளையாடும் விளையாட்டு’ என்கிற செய்தியை மறுபடியும் அழுத்திச் சொன்னார் கமல். (வந்ததுல இருந்து இதைத்தான் சொல்லிட்டு இருக்கீங்க... அவங்களுக்குப் புரிய மாட்டேங்குதே?!).

ஓர் என்ட்ரிக்குப் பிறகு திரும்பி வந்த கமல், ஆரிக்கும் பாலாஜிக்கும் நிகழ்ந்த மோதலைப் பற்றி விசாரிக்க அதைப் பற்றி இருவருமே நீண்ட விளக்கம் அளித்தது சலிப்பை ஏற்படுத்தியது. இதையெல்லாம் நாம் காட்சிகளாக பார்த்து விட்டோம். அவர்களிடம் விசாரிக்காமல் தாமே கேள்விகளை கமல் முன் வைக்கலாம். அவர்கள் எல்லாவற்றையும் சொல்லி முடித்து விட்ட பிறகு ‘இதையெல்லாம் மக்கள் பார்த்துட்டாங்க’ என்று அவர் சொன்னது வேடிக்கை.

பிறகு ஆரி தன் தரப்பை விளக்க ஆரம்பித்த போது ‘'நீங்கள் வெளியில் கின்னஸ் சாதனை செய்தவர். ஆனால் இங்கு விளையாட்டை விட்டுக் கொடுப்பது என்பது சாதனையாளர் செய்யும் வேலை அல்ல. அது சாதனையாளருக்கு அழகல்ல. கடந்த சீசனில் கடுமையான போட்டிகள் எல்லாம் இருந்தது’ என்று கமல் இடைமறித்து சொன்னது அருமையான விஷயம்.

இதைத்தான் நான் என் கட்டுரையில் சொல்லியிருந்தேன். ரியோ தன் கேப்டன்சியை எப்படி கையாள்கிறார் என்று சோதிப்பதெல்லாம் ஆரியின் வேலையல்ல. அதை பிக்பாஸூம் மக்களும் பார்த்துக் கொள்வார்கள். அதை அவர் தன் விளையாட்டை மட்டும் பார்க்க வேண்டும். (ஆனால் இதைச் சுட்டிக் காட்டினால் ஆரியின் ரசிகர்கள் கோபித்துக் கொள்கிறார்கள்.)

'அன்பே சிவம்' எடுத்தவரிடமே அன்பு பஞ்சாயத்தா... ஆரியின் பக்கம் உண்மை இருக்கா?!பிக்பாஸ் – நாள் 55

‘'கேப்டன்சி விளையாட்டில் சில முறைகேடுகள் நடந்தன. எனக்கு கோபம் வந்தது. ரியோவிடம் சண்டையாகி விடக்கூடாது என்பதற்காக விட்டுக் கொடுத்து விட்டேன்'’ என்று இதற்கு விளக்கம் அளித்தார் ஆரி.

“அது சரிங்க. ரியோ கூட சண்டை ஆகக்கூடாதுன்னு நெனச்ச நீங்க... பாலாஜி கூட சண்டையை முடிக்காம துரத்தி துரத்தி போனீங்களே ஏன்?” என்று சரியான பாயின்ட்டைப் பிடித்தார் கமல்.

''பாலாஜி சாமிற்கு விட்டுக் கொடுப்பதின் மூலம் சோமின் தலைவர் வாய்ப்பை தட்டிக் கெடுத்தார். அது ஒரு வியூகம். ஆனால் நீங்கள் ரியோவிற்கு விட்டுக்கொடுத்தீர்கள். இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கிறது'’ என்று கமல் அளித்த விளக்கம் சரியானது. ‘'விட்டுக்கொடுத்தேன்-னு வெளில சொல்றது இன்னொருத்தர் உழைப்பை கெடுக்கறது இல்லையா?’' என்றார் பாலாஜி.

'‘விட்டுக்கொடுத்த விஷயத்தை பாலாஜியிடம் நான் சொல்லும்படியான சூழல் உருவாகியது. உரையாடல் அப்படிச் சென்றது.. அதை பாலாஜி அப்போதே ஆட்சேபித்திருக்கலாம்'’ என்று ஆரி விளக்கம் அளித்தார். பாலாஜி இதைப் பிறகு உபயோகப்படுத்திக் கொள்வார் என்பதை ஆரி எதிர்பார்த்திருக்க வேண்டும். அவர் அடிப்படையில் புத்திசாலி.

'‘நானும் உங்களை மாதிரியே கடுமையான வார்த்தைகளில் பேச முடியாது. பேசவும் மாட்டேன். அது உங்களுக்கான உதாரணம் அல்ல. எனக்கான உதாரணம். என்னுடைய நேற்றுதான் இன்று. பேசக்கூடாது என்பது சபை மரியாதை. பேச மாட்டேன் என்பது சுயமரியாதை'’ என்று ரைமிங்கில் கமல் அடித்தது எல்லாம் நல்ல பஞ்ச் வசனம்.

போட்டியாளர்களை கமல் ஏன் கடுமையாக கண்டிக்க மாட்டேன்கிறார் என்று பல பார்வையாளர்களுக்கு நெருடல் இருந்திருக்கலாம். அவர்களுக்கான பதில் இதில் கிடைத்திருக்கலாம். சுற்றி வளைத்து அவர்களின் தவறை அவர்களே உணரும்படி செய்வதுதான் கமலின் ஸ்டைல். ஆனால் இதற்காக கமல் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம். ‘தப்பு செஞ்சால் தட்டிக் கேட்பேன்’ என்பதுதான் பிக்பாஸின் துவக்க பிரமோ வாசகம். அதை சற்று அழுத்தமாகச் செய்யலாம் என்பதுதான் வேண்டுகோள்.

''ஓகே. ரெண்டு பேரும் சரிக்கு சமமா நின்னு விளையாடுங்க... விவாதிங்க... ஆனா எதிரியா மாறிடாதீங்க. கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தாதீங்க'’ என்ற கமல், ஆரி மற்றும் பாலாஜி இரண்டு பேரும் மக்களால் காப்பாற்றப்பட்ட செய்தியை போகிற போக்கில் சொல்லி விடைபெற்றார்.

இந்த வாரம் ரமேஷ் வெளியேற்றப்பட்டார் என்கிற அழுத்தமான தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. இல்லை… ‘சாம்’தான் குறைந்த வாக்குகளில் வெளியேறியிருக்கிறார் என்று இன்னொரு தகவலும் வெளியாகியிருக்கிறது. ரமேஷோடு ஒப்பிடும் போது சாம் திறமையான போட்டியாளர்.

என்ன நடக்கிறது என்று காத்திருந்து பார்ப்போம். பாவம் ரமேஷை அனுப்பி விடலாம் என்று தோன்றுகிறது. வீட்டிற்குச் சென்றாவது எந்த தொந்தரவும் இல்லாமல் நிம்மதியாக தூங்குவார்.