Published:Updated:

பிக் பாஸ் -17| பஞ்ச தந்திரம் டாஸ்க்கும், பஞ்சர் ஆன அபிஷேக், பிரியங்கா கூட்டும்… குரூப்பிஸம் ஆரம்பம்!

பிக் பாஸ் -17

“சிபியை கேப்டன் ஆக்குவதற்கு நான் ஒரு விளையாட்டு விளையாண்டேன் தெரியுமில்ல?” என்று ராஜூவிடம் பந்தாவாக சொல்லிக் கொண்டிருந்தார் அபிஷேக். 'நீதான் அள்ளி விடுவியே... எதையாவது சொல்லித் தொலை' என்பது போல் நின்று கொண்டிருந்தார் ராஜூ.

பிக் பாஸ் -17| பஞ்ச தந்திரம் டாஸ்க்கும், பஞ்சர் ஆன அபிஷேக், பிரியங்கா கூட்டும்… குரூப்பிஸம் ஆரம்பம்!

“சிபியை கேப்டன் ஆக்குவதற்கு நான் ஒரு விளையாட்டு விளையாண்டேன் தெரியுமில்ல?” என்று ராஜூவிடம் பந்தாவாக சொல்லிக் கொண்டிருந்தார் அபிஷேக். 'நீதான் அள்ளி விடுவியே... எதையாவது சொல்லித் தொலை' என்பது போல் நின்று கொண்டிருந்தார் ராஜூ.

Published:Updated:
பிக் பாஸ் -17

பிக்பாஸ் வீட்டில் இதுவரை ‘பிரியங்கா’ குரூப் இருப்பது மட்டும்தான் வெளிப்படையாக தெரிந்து கொண்டிருந்தது. ஆனால் ‘பஞ்சதந்திரம’ டாஸ்க்கின் மூலம் ‘யார், யார் யாரோடு இணக்கமாக இருக்கிறார்கள் அல்லது எதிராக செயல்படுகிறார்கள்’ என்கிற பல்வேறு விதமான ‘குரூப்பிஸத்தை’ சற்று தெளிவாக அடையாளம் காண முடிந்தது.

நாணயம் திருடும் டாஸ்க் சுவாரசியமானதுதான். ஆனால் எடிட்டிங் பிரச்னையா அல்லது போட்டியாளர்கள் அதை கையாண்டதில் பிரச்சனையா என்று தெரியவில்லை. ஒரே குழப்பம். ‘சொப்பனசுந்தரி வெச்சிருந்த காரை இப்ப யாரு வெச்சிருக்கா’ காமெடி மாதிரி, யார் ஒரிஜினலாக திருடியது, அவரிடமிருந்து சுட்ட பலே திருடர் யார், யார் திருடியதெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது... என்பதில் நிறையக் குழப்பங்கள் தெரிந்தன.

‘தாமரையை நான் காப்பாத்தறேன். நான் காப்பாத்தறேன்’ என்று ஆளாளுக்கு பரோபகார சிகாமணிகள் போல் நடித்துக் கொண்டிருந்த போது அதிலிருந்த உள்குத்தை ராஜூ உடைத்துப் போட்ட காட்சி இருக்கிறதே? அதுதான் நேற்றைய எபிசோடின் ஹைலைட்.

ஆனால் ஒன்று, இந்த டாஸ்க் முழுவதும் வீடு அமைதியாக இருந்ததுதான் இதில் நாம் அடைந்த ஒரே ஆறுதல். குறிப்பாக பிரியங்காவை ரகசியம் பேச வைத்த காரணத்திற்காகவே பிக்பாஸை நாம் பாராட்டலாம்.

எபிசோட் 17-ல் என்ன நடந்தது?!

பிக் பாஸ் -17
பிக் பாஸ் -17

ஷேவிங் க்ரீமை ‘சேவ்’ செய்து வைக்காமல் ஒருவர் மீது ஒருவர் இறைத்து வீணாக்கிய பிரியங்கா குரூப், விடியற்காலை வரையிலும் தூங்காமல் புறணி பேசிக் கொண்டிருந்தது. “நான் ஏன் சிபியை கேப்டன் ஆக்கினேன்னா, ராஜூ நாமிஷேன்ல வர்றானான்னு எனக்கு தெரிய வேண்டியிருந்தது” என்று அலட்டலாக பேசிக் கொண்டிருந்தார் பிரியங்கா. இவரும் சரி, அபிஷேக்கும் சரி, ஏதோ இவர்கள்தான் பிக்பாஸின் சூத்ரதாரி போலவும், இவர்கள்தான் எல்லா மாஸ்டர் பிளானுக்கும் காரணம் போலவும் சீன் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். பிக்பாஸ் வீட்டிற்குள் ராஜூவுக்கு வளர்ந்திருக்கிற செல்வாக்கின் மீது இந்த இருவருக்குமே உள்ளூற அச்சம் இருப்பதை உணர முடிகிறது.

தாமரை, இசை ஆகிய இருவரும் தங்களின் வறுமைப் பின்னணியைச் சொல்லி சீன் போடுவதாகவும் ஆனால் ‘தாமரையை நான் தட்டி அடக்கி வைத்திருக்கிறேன்’ என்பதாகவும் பிரியங்கா அலட்டிக் கொண்டிருக்க, இமான் அண்ணாச்சிதான் குழப்பத்தின் முதல் காரணம் என்று அபிஷேக் குற்றம் சாட்டிக் கொண்டிருந்தார்.

விடிந்தது. ‘’ஏ.. சின்ன மச்சான்... ஊருக்குள்ள உன்ன ஏசுறாக.. கண்டபடி பேசுறாக’’ என்கிற பாடலைப் போடுவதின் மூலம் பிக்பாஸ் தாமரைக்கு செய்தி சொல்ல விரும்பினார் போலிருக்கிறது. ‘பிரியங்கா உங்களை கண்டபடி பேசிட்டிருக்காங்க... ஜாக்கிரதை’.

இசையின் மீது தனக்கு இருக்கும் மனஸ்தாபத்தை சின்னப்பொண்ணு வருத்தத்துடன் சொல்லிக் கொண்டிருக்க “அதுக்கேத்த மாதிரில்லாம் நீ மாற வேண்டாம். நீ நீயாக இரு. மக்கள் பார்த்துக்கிட்டு இருக்காங்க. அவங்களுக்கு தெரியும். நியாயமா நடக்கறவங்களுக்கு ஓட்டை அள்ளி வீசுவாங்க” என்று ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார் இமான். இவர் வந்த நாள் முதலே ‘மக்கள் வாக்குகளைப்’ பற்றி தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். இந்த கான்ஷியஸ் இவருக்குள் தொடர்ந்து இருக்கிறது. ஆனால் பிக்பாஸ் வீட்டில் ஓரளவிற்கு நியாயமாக விளையாடிக் கொண்டிருப்பவர்களில் இமான் முக்கியமானவர்.

பிக் பாஸ் -17
பிக் பாஸ் -17

இமான் நடிக்க வாய்ப்பு கேட்டு வந்து நிற்க, “நீ என்ன பண்றே... சிரி... அழுதுக்கிட்டே சிரி. சிரிச்சிக்கிட்டே அழு” என்று அவரை ஆடிஷன் செய்து கொண்டிருந்த டைரக்டர் ராஜூ சம்பந்தப்பட்ட காட்சி சுவாரஸ்யமாக இருந்தது. இமான் அதை காமெடியாக செய்தாலும் அவரின் நடிப்பு பாராட்டத்தக்க அளவில் இருந்தது.

‘இதுவரை எந்தவொரு சீசனிலும் தரப்படாத சில அரிய சலுகைகள் இப்போது தரப்படுகின்றன’ என்கிற ஆடித்தள்ளுபடி ஆஃபரோடு பிக்பாஸின் அறிவிப்பு வந்தது. ‘லக்ஷரி பட்ஜெட் டாஸ்க்’ அதன் தலைப்பு. ‘பஞ்சதந்திரம்’ பிக்பாஸ் வீடு அருங்காட்சியமாக மாறுமாம். (ஏற்கெனவே அப்படித்தான் இருக்கு).

விலை மதிப்பில்லாத (?!) ஐந்து நாணயங்கள் வெவ்வேறு ஏரியாக்களில் ஐந்து கண்ணாடிப் பெட்டிகளில் வைக்கப்படும். ஒரு நபர் எத்தனை நாணயங்களை வேண்டுமானலும் கைப்பற்றலாமாம். (திருட்டு என்பதை ‘கைப்பற்றுதல்’ என்று மொழிபெயர்த்ததறகு பிக்பாஸின் சாமர்த்தியத்தை பாராட்டலாம்). நாணயத்தை கைப்பற்றியவர் அதை கேமராவின் முன் வந்து நாணயத்துடன் ஒப்புக் கொள்ள வேண்டுமாம். அப்படிச் செய்தால்தான் கணக்காம். ஆனால் திருடும் போது பிடிபட்டு விட்டால் சிறைக்குச் செல்ல நேரிடுமாம். ‘Terms & Conditions are Subject to change’ என்கிற பின்குறிப்புடன் அறிவிப்பை முடித்துக் கொண்டார் பிக்பாஸ். இந்த திருட்டு வேலைக்கு நேரம் காலம் எதுவும் கிடையாதாம்.

இந்த டாஸ்க்கில் இருந்த அந்த அரிய சலுகை என்னவென்றால், நாணயத்தை எடுத்தவர் ஒருவேளை எலிமினேஷன் பட்டியலில் இருந்தால் அதை வைத்து தன்னை காப்பாற்றிக் கொள்ளலாம்; அல்லது தனது நண்பர்கள் எவரையாவது காப்பாற்றலாம்.

ஆள் வெள்ளந்தியாக இருந்தாலும் தாமரை சொன்ன யோசனை நிதர்சனமானது. ‘செட்டு சேராம இதை எடுக்க முடியாது’ என்று சொன்னாலும் எடுக்க அவருக்குப் பயம். “ஓ... உனக்கு எடுத்துக் கொடுத்துட்டு நான் ஜெயிலுக்குப் போகணுமா, உன்னையெல்லாம் நம்ப முடியாது. உனக்கு உதவி செய்தால் நீயே கூட என்னை காட்டிக் கொடுத்துடுவே” என்று ஜாலியாக சொல்லிக் கொண்டிருந்தார் சிபி. உண்மைதான். ‘தென்னை மரத்துல ஒரு குத்து... பனை மரத்துல ஒரு குத்து’ என்கிற பாலிசியை, தெரிந்தோ, தெரியாமலோ பின்பற்றுகிறார் தாமரை.

பிக் பாஸ் -17
பிக் பாஸ் -17

இசைக்கு திருடுவதில் தயக்கம் இருந்தது. எனவே ‘இந்த வாரம் மட்டும் என்னை காப்பாத்தி வுட்டுருங்கண்ணா” என்று இமான் மற்றும் ராஜூவிடம் அவர் கெஞ்சிக் கொண்டிருந்தார். ‘யாமிருக்க பயமேன்’ என்று ஆறுதல் சொன்னார் இமான். “ஏ புள்ள... இங்க வா..” என்று இசையை அதிகாரமாக கூப்பிட்ட ராஜூ, இசை அருகே வந்தவுடன் “ஒண்ணுமில்ல” என்றது நல்ல காமெடி. அவர் ஏதொ சொல்ல வந்து பக்கத்தில் ஆள் இருந்ததால் அப்படி மாற்றிக் கொண்டாரா என்று தெரியவில்லை.

இமான் அண்ணாச்சி மறைத்துக் கொள்ள ஐக்கி தனது முதல் திருட்டை வெற்றிகரமாக நிகழ்த்தினார். “அய்யய்யோ... அதுக்குள்ள ஒண்ணு காணோம்” என்று பின்னர் மக்கள் அலறினார்கள். ‘திருடத் தெரிஞ்சவனுக்கு பதுக்கத் தெரியணும்” என்றொரு பழமொழி இருக்கிறது. அதைப் போல் ஆகி விட்டது ஐக்கியின் நிலைமை. கேமராவில் தனது திருட்டை பதிவு செய்து விட்டு பிறகு அதை பாத்ரூமில் ஐக்கி ஒளித்து வைக்க, பின்னாடியே மோப்பம் பிடித்துச் சென்ற அக்ஷரா அதை சுட்டு விட்டார்.

“நான் உன்னைக் காப்பாத்தறேன்” என்று தாமரைக்கு அபயம் தந்து கொண்டிருந்த அபிஷேக், வரவேற்பறையில் இருந்த நாணயத்தை எடுத்து கிச்சன் ஏரியாவில் ஒளித்து வைத்தார். பிறகு “உங்களையும் கவனிச்சுக்கறேன்... பொறுமையா இருங்க” என்று சின்னப்பொண்ணுவுக்கு ஆறுதல் கூறினார்.

இதில் இரண்டு விஷயங்கள் தெளிவாக்கப்பட வேண்டும். நாணயங்களை எடுப்பவர்கள் அதை தனக்கு உபயோகப்படுத்தாமல் “ஊருக்கு நல்லது செய்வேன்’ என்று சீன் போடுவது ஏன்? இன்னொன்று, இவர்கள் இப்படி குழுவாக இணைந்து செய்யும் கூட்டு கயவாளித்தனத்தை பிக்பாஸ் ஆதரிக்கிறாரா? அது விதிமுறையில் உள்ளதா?

பார்க்க பூனை மாதிரி உலவினாலும் மதுமிதாவும் ஒன்றை சுட்டு விட்டார். ஆனால் அதை வைத்துக் கொண்டு அவர் அடைந்த பாடு இருக்கிறதே... பரிதாபம். திருடியவனுக்கு தேள் கொட்டியது மாதிரி தவித்தார். ஆனால் இவர் எவிக்ஷன் பட்டியலில் இல்லை. இசைக்காக திருடி வைத்திருக்கிறார்.

பிக் பாஸ் -17
பிக் பாஸ் -17

சந்தடி சாக்கில் வருணும் ஒன்றை திருடி விட்டு ‘யாருப்பா அந்த திருடன்’ என்று கூட்டத்தோடு இணைந்து கூவிக் கொண்டிருக்க, ‘அபினய்தான் எடுத்தான்’ என்று அவர் மீது மக்கள் வீணாக பழிபோட்டுக் கொண்டிருந்தார்கள். “எடுத்தவன் கேமரா முன்னாடி சொல்லியே ஆகணும்ல. அப்போ வந்து பிடிப்பம்டா” என்று சிபிஐ வெலலில் யோசித்துக் கொண்டிருந்தார் இசை.

இசையிடம் ஏதோ ரகசியம் பேசி விட்டு ஐக்கி ஓட, பஸ்ஸர் சத்தம் காதைப் பிளந்தது. “பார்த்துட்டான்... பார்த்துட்டான்” என்று கவுண்டமணி ஒரு நகைச்சுவைக்காட்சியில் அலறுவதைப் போன்ற சத்தம். ‘2 நாணயங்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. 3 நாணயங்களை காணவில்லை’ என்று பிக்பாஸின் சூட்சுமமான அறிவிப்பு வந்தது. ‘கைப்பற்றப்பட்டன’ என்றால் திருடியவர் தனது தொழிலை சுருதி சுத்தமாக செய்திருக்கிறார் என்று பொருளாம். காணவில்லை என்றால் அது அரைகுறைத்திருட்டு என்று அர்த்தம். கேமரா முன் பதிவு செய்யப்பட்டது மட்டுமே கணக்கில் எடுக்கப்படும் என்பதை இந்த அறிவிப்பின் மூலம் பிக்பாஸ் நினைவுபடுத்துகிறார்.

தேளை சுமந்து கொண்டு தவித்துக் கொண்டிருந்த மதுமிதாவிடம் ரகசிய பேரம் பேசிக் கொண்டிருந்தார் பிரியங்கா. “நான் என்கிட்ட இருக்குறத உனக்குத் தர்றேன்... நீ வெச்சிருக்கறத எனக்குத் தா” என்று மகா குழப்பமாக இருந்தது அந்த பேரம். “இசை என் கிட்ட ஏற்கெனவே கேட்டிருக்காளே... இதை ஏன் எடுத்தேன்னு எனக்கே தெரியல” என்று அனத்திய மதுமிதா அதை தரையில் போட்டு விட, அதை பிரியங்கா எடுத்து கிச்சன் ஏரியாவில் பத்திரப்படுத்திக் கொண்டார். “அங்க வைக்காத சேஃப் இல்ல” என்று இன்டெலிஜென்ட் அபிஷேக் ஐடியா கொடுக்க, தன்னுடைய ஆடைகள் வைத்திருந்த பையில் ஒளித்து வைத்தார் பிரியங்கா. (பிரியங்காவின் பொருட்களைத் தொடுவதற்கு பிக்பாஸ் வீட்டில் யாருக்கும் தைரியம் கிடையாதாம்!).

“கேமரா முன்னால் காண்பித்தால்தான் கணக்கு. இல்லையென்றால் கிடையாது’’ என்கிற விதியை மீண்டும் நினைவுபடுத்தினார் பிக்பாஸ். “நான் காண்பிச்சிட்டனே..” என்று பிரியங்கா குழப்பத்துடன் சொல்ல “ஆமாம்... நானும் காண்பித்தேன்” என்று பாவனி சொல்லும் போதுதான் ‘’இவர் எப்போது திருடினார்?” என்கிற குழப்பம் நமக்கு ஏற்பட்டது. இதற்குப் பிறகுதான் பாவனி நாணயத்தை திருடி, கேமரா முன் ஒப்புதல் தரும் காட்சி வந்தது.

தாமரை ஏதோ நடு ஆற்றில் தவித்துக் கொண்டிருப்பது போல ஆளாளுக்கு ‘‘நான் தாமரையை காப்பாத்தறேன்” என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். “என்னை எப்படியாவது காப்பாத்தி விட்ரு சாமி” என்று அபிஷேக்கின் காலில் அநாவசியமாக விழுந்து கதறிக் கொண்டிருந்தார் தாமரை. அபிஷேக்கோ ‘கபாலி’ ரஜினியின் நடிப்புக்கு இணையாக கண்கலங்கி இதை சென்டிமென்ட் சீன் ஆக மாற்ற முயற்சித்துக் கொண்டிருந்தார்.

“ஏம்ப்பா... எல்லோருமே தாமரையை காப்பாத்தறதா சொல்றீங்களே பாவம்... இந்த சின்னப்பொண்ணுவை யாராவது காப்பாத்தக்கூடாதா?” என்று இமான் கேட்க “நான் அவங்களைத்தான் நாமினேட் பண்ணியிருக்கேன். என்னால முடியாது” என்று மறுத்து விட்டார் பிரியங்கா. இமானுக்கும் சின்னப்பொண்ணுவுக்கும் இடையில் ஏற்கெனவே சிறு சச்சரவு இருந்தாலும், சின்னப்பொண்ணுவை காப்பாற்ற இமான் இரஞ்சுவது சிறப்பான குணம்.

பிக் பாஸ் -17
பிக் பாஸ் -17

‘வருண்... நீ என்ன பண்றே. நீ வெச்சிருக்கிற நாணயத்தை வெச்சு அக்ஷராவை காப்பாத்தறே சரியா... ஏன்னா, அதை நான் சொல்றேன்... நீ செய்யறே’’ என்று அபிஷேக் தன் வழக்கமான பாணியில் வருணிடம் அலட்டலாகச் சொல்ல “ஏன் நான் காப்பாத்தறேன்னு ஸ்டாம்ப் பேப்பர்ல கையெழுத்து போட்டு உன் கிட்ட கொடுத்திருக்கேனா?” என்று நக்கலாக கேட்டார் வருண். அதை விடவும் அபிஷேக்கை அக்ஷரா நோஸ் கட் செய்தவிதம்தான் சூப்பர். “டேய்... நானே கெஞ்சிக் கேட்டிருந்தா அவன் கொடுத்திருப்பான். இப்ப நீ அவனை சொறிஞ்சு விட்டதால அவன் தரவே மாட்டான். என் வாயில நல்லா வந்துரும்... ஓடிடு” என்று எரிச்சலாக சொல்ல “ஸாரி... ஸாரி’’ என்றபடி விலகினார் அபிஷேக். (இதுதான் ஆரம்பம்... இனி அபிஷேக் பங்கமாக எதிர்கொள்ளப் போகும் எதிர்ப்புகள் நிறைய வரும் என்று தோன்றுகிறது).

“சிபியை கேப்டன் ஆக்குவதற்கு நான் ஒரு விளையாட்டு விளையாண்டேன் தெரியுமில்ல?” என்று ராஜூவிடம் பந்தாவாக சொல்லிக் கொண்டிருந்தார் அபிஷேக். 'நீதான் அள்ளி விடுவியே... எதையாவது சொல்லித் தொலை' என்பது போல் நின்று கொண்டிருந்தார் ராஜூ. “நான்தான் சிபியை கேப்டன் ஆக்கினேன்” என்று பிரியங்காவும் காலையில் சொல்லிக் கொண்டிருந்தார். அப்ப சிபி... தன்னால கேப்டன் ஆகலையா?

“நான்தான் சிபி கழுத்துல மாலையை மாத்த வெச்சேன்” என்று அபிஷேக் சொல்ல “அப்ப முதல்லயே அங்க போட்டிருக்க வேண்டியதுதானேடா... ஏன் என் கழுத்துல போட்டீங்க. உங்க ராஜதந்திரத்துல தீய வெக்க” என்று ராஜூ அளித்த பதில் சூப்பர். தன் இடுப்புக்குள் ஒளித்து வைத்திருந்த நாணயத்தை லேசாக வெளியில் எடுத்துக் காட்டிய அக்ஷரா “காணவில்லை... காணவில்லைன்னு அனத்திட்டே இருக்காத... என் கிட்டதான் இருக்கு பார்த்துக்க...” என்று பிக்பாஸிடம் ரகசியமாக பதிவு செய்தார்.

“ஏன் தெரியுமா... உனக்கே எல்லோரும் சப்போர்ட் பண்றாங்க. நீ பணக்கார பின்னணில இருந்து வந்திருந்தா. யாரும் உன்னை சட்டை பண்ணியிருக்க மாட்டாங்க. ஏழ்மையான பின்னணி. நாடகக்கலைஞர்... உனக்கு உதவி பண்ணினா. அவங்களுக்கு மைலேஜ் கூடும். இதுதான் அவிய்ங்க உதவி செய்யற லட்சணம்... புரியதா?” என்று தாமரையிடம் ராஜூ போட்டுடைத்த அந்த அரசியல்தான் இன்றைய நாளின் ஹைலைட்டான விஷயம்.

பிக் பாஸ் -17
பிக் பாஸ் -17

ஸ்டோர் ரூமில் அக்ஷரா ஒளித்து வைத்த நாணயத்தை ஆட்டையைப் போட்டார் பாவனி. அக்ஷராவுக்கு இது உடனே தெரிந்து விட ‘சோனா முத்தா...போச்சா” என்று தலையில் வைத்துக் கொண்டார். தோட்டத்தின் கதவின் இடுக்கில் பாவனி (அபினய் மூலம்) ஒளித்து வைத்த இரண்டு நாணயங்களை நீரூப் எடுக்க முயலும் போது அபினய் பார்த்து விட்டு ‘திருடன்... திருடன்..’என்று கூவ ‘பெடஸ்ட்ல்ல இருக்கும் போது எடுத்து பிடிபட்டாதான் செல்லுபடியாகும்” என்று நிரூப் அவரிடம் மல்லுக் கட்டிக் கொண்டிருந்தார். (விதிகளை உடைப்பதில் வல்லவரான அபினய்க்கே டியூஷனா?!). அதுவரை அமைதியாக இருந்த வீடு சில நிமிடங்களில் அமளி துமளியானது. பிரியங்காவின் கூச்சல் காதை கிழித்தது.

“நீங்க படிக்கற ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்டா” என்று நினைத்த பிக்பாஸ், நிரூப்பை அள்ளிக் கொண்டு போய் பாதாளச் சிறையில் தள்ளினார். அவர் எடுத்த இரண்டு நாணயங்கள் மறுபடியும் பீடத்துக்குப் போகும். ‘’நான் ஜெயிலுக்குப் போறேன்” என்று பந்தாவாக கிளம்பிய நிரூப், ‘ஹைய்... இங்க ரொம்ப வசதியா இருக்கே” என்று மகிழ்ந்தார். (எதுக்கு வசதியா இருக்கும்?! விவகாரம் பண்ணிடாதீங்கப்பா!).

கிச்சன் அருகே அபிஷேக் ஒளித்து வைத்த நாணயத்தைக் கண்டுபிடித்த பாவனி அதை கேமராவிடம் முன்னால் பதிவு செய்தார். பார்க்க பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு இந்த அம்மணி செய்கிற காரியங்களைப் பார்த்தால் ‘ஆரண்ய காண்டம்’ திரைப்படத்தின் நாயகிதான் நினைவுக்கு வருகிறார். அதுவரை அழுது புலம்பி விட்டு க்ளைமாக்ஸில் அத்தனையையும் திருடிக் கொண்டு பந்தாவாக கிளம்பும் கேரெக்ட்டர் அது.

சிபியின் கண் எதிரேயே நாணயத்தை பாவனி லவட்டிய காட்சி இருக்கிறதே?! அற்புதம். பின்னர் அதை அவர் தேர்ந்த திருடன் போல சுருதியிடம் கைமாற்றி விட்டார். பாவனி எடுக்கும் போது பராக்கு பார்த்து விட்டு, பிறகு ‘பார்த்துட்டேன்... பார்த்துட்டேன்’ என்று பஞ்சாயத்து வைத்துக் கொண்டிருந்த சிபியிடம் ‘அதெல்லாம் நான் எடுக்கல’ என்று பாவனி பதிலுக்கு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் காட்சியோடு இந்த எபிசோட் நிறைந்தது. (ஹப்பாடா!).

முடிவுகள் அறிவிக்கப்படும் போதுதான் நல்ல திருடர்கள் (?!) யாரென்பது நமக்குத் தெரியவரும்.

ஓகே... உங்களுக்கு ஒரு கடினமான சவால். ‘யார்... யார்.. எத்தனை நாணயங்கள் வைத்திருக்கிறார்கள்?’ என்று கமென்ட் பாக்ஸில் சொல்லுங்கள்.