Published:Updated:

பிக் பாஸ் - 3 | அழவைத்த இசைவாணி, சின்னப்பொண்ணு, அபிஷேக்… எல்லாவற்றையும் ‘கதை’யாய் கடந்துபோகும் ராஜு!

பிக் பாஸ் - 3 |

கமல்ஹாசன் தொகுத்து வழங்க விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் 3-ம் நாள் எப்படியிருந்தது... எழுதுகிறார் சுரேஷ் கண்ணன்!

பிக் பாஸ் - 3 | அழவைத்த இசைவாணி, சின்னப்பொண்ணு, அபிஷேக்… எல்லாவற்றையும் ‘கதை’யாய் கடந்துபோகும் ராஜு!

கமல்ஹாசன் தொகுத்து வழங்க விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் 3-ம் நாள் எப்படியிருந்தது... எழுதுகிறார் சுரேஷ் கண்ணன்!

Published:Updated:
பிக் பாஸ் - 3 |

‘’நாங்க வேற மாறி’’ என்கிற ‘வலிமை’ படத்தின் பாடலுடன் பொழுது விடிந்தது. (நாளை காலையில் ‘லிஃப்ட்’ படத்திலிருந்து ‘இன்னா மயிலு’ ஒலிக்கலாம் என்று உள்ளுக்குள் ஒரு பட்சி சொல்கிறது). இந்தப் பாடலுக்கு நோகாமல் உட்கார்ந்தபடியே நடனமாடி, நடனக்கலையில் ஒரு புதிய பாணியை உருவாக்க முயன்றார் பிரியங்கா. பாவனிக்கு ‘ரஜினி டயலாக்’ சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார் சிபி. (‘பாவனி – பாவம் நீ’ என்று சொல்லத் தோன்றியது).

பிரியங்கா நெடுங்காலமாக ஊடகத்துறையில் இருப்பதால் ‘கன்டென்ட்’ பற்றியே எப்போதும் சிந்தித்துக் கொண்டிருப்பார் போலிருக்கிறது. நேற்று ‘எமோஷன் இல்லாம நோ சொல்லும்’ விளையாட்டை விளையாடினார். இன்றோ, ‘’சீரியல்ல வர்றா மாதிரி பேசலாமா?” என்றொரு ஆட்டத்தை ஆரம்பித்தார். ஆனால் இந்த விளையாட்டு நேற்று மாதிரியே ‘புஸ்’ என்று போயிற்று. (இவர் எதைச் சொன்னாலும் பின்குறிப்பாக சிரிக்கும் அந்த சத்தத்திற்கு பேட்டன் வாங்கி வைத்துக் கொள்ளலாம். மிக அரியவகை சத்தம் அது).

நிரூப்பிற்கு தாடி இருக்கவே வித்தியாசம் தெரிகிறது. நாமும் தப்பித்தோம். இல்லாவிட்டால் தூரத்தில் பார்க்கும்போது அவரையும் மாடல் அழகிகள் ஒருவராகவே கருதி விட வாய்ப்புண்டு. அத்தனை வசீகரமான கூந்தல். (என்ன ஆயில் உபயோகிக்கறாரோ?!).

பிக் பாஸ் - 3
பிக் பாஸ் - 3

‘’இங்க நானே சமைக்கறதால.. சாப்பிடவே தோண மாட்டேங்குது” என்று சொல்லிக் கொண்டிருந்தார் பிரியங்கா. (நல்ல விஷயம். எனில் பிக்பாஸ் முடிவதற்குள் பிரியங்கா, பிரியங்கா சோப்ராவாக மாறி வெளியே வருவார் போலிருக்கிறது).

சிலர் ‘வட்டார வழக்கில் பேசுகிறேன்... இன்னொரு மொழியில் பேசுகிறேன் பேர்வழி’ என்று மரியாதைக் குறைவாக ஒருமையில் பேசி விடுவார்கள். அது அவர்களுக்கே தெரியாது. அது போல், குளிக்கப் போன இமானை நோக்கி “ஏலெ.. மைக் எங்கலே?” என்று கேட்டு விட்டார் பிரியங்கா. அண்ணாச்சி தனது பிரத்யேக டைப் முழியால் எச்சரித்தார்.

‘what’s up man?’ என்பதை ஸ்டைலாக சொல்ல இமானுக்கு பயிற்சியளித்துக் கொண்டிருந்தார் ஐக்கி. ‘’எலே வாட்சப்ல இருக்கியாலே?” என்று அதை நெல்லை தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தார் இமான். (இந்த மாதிரியெல்லாம் கொடுமை செய்தால் வாட்சப் ஒரு நாள் மட்டும் முடங்காது. மொத்தமாகவே ஊத்திக் கொள்ளும்).

‘சிபி... கன்ஃபெஷன் ரூமூக்கு வாங்க” என்று அழைத்தார் பிக்பாஸ். “முதன்முறையாக கன்பெஷன் ரூம் செல்லும் முதல் போட்டியாளர்’’ என்று ஹைடெஸிபலில் கத்திக் கொண்டிருந்தார் பிரியங்கா. அவர் இன்னமும் சூப்பர்சிங்கர் அறிவிப்பு மோடில் இருந்து வெளியே வரவில்லை போலிருக்கிறது. நாம்தான் டிவி வால்யூமை சட்டென்று குறைக்க வேண்டியிருந்தது.

சிபியை அழைத்த பிக்பாஸ் ‘’இந்த லெட்டரை லிவ்விங் ஏரியால எல்லோருக்கும் படிச்சுக் காட்டுங்க” என்று சொல்லி விட்டு பின்குறிப்பாக ‘ஆல் தி பெஸ்ட்’ என்றார். (லெட்டர் படிக்கிறதுக்கு என்ன ஆல் தி பெஸ்ட் வேண்டிக் கிடக்கு?!).

அது லக்ஷுரி பட்ஜெட் டாஸ்க். “எல்லோருக்குள்ளயும் ஒரு கதை இருக்கும். கதை என்பது தூணிலும் இருக்கும் துரும்பிலும் இருக்கும்” என்பது போல் நீண்ட வியாக்கியானத்தின் அந்தக் கடிதத்தின் சுருக்கம் என்னவென்றால் “என்னல்லாம் சொல்றான் பாருங்க... கம்பி கட்டற கதையெல்லாம் சொல்றான்” என்பதே.

அதாவது அழுகாச்சி டாஸ்க். ‘’ஒரு கத சொல்லட்டுமா?” என்று அதற்கு பெயர் சூட்டியிருந்தார்கள். (‘வேண்டாம்ப்பா’.. என்றால் விட்டு விடவா போகிறார்கள்?!). ‘ஒருவர் எப்படி கதை சொல்கிறார்’ என்பதைப் பொறுத்து அதற்கு லைக், டிஸ்லைக், heart என்று கேட்பவர்கள் எமோஜியை போடலாமாம். (சோஷியல் மீடியா கலாசாரம் நம் வாழ்க்கைக்குள் கொலைவெறியாக ஊடுருவியிருக்கிறது என்பதற்கு இதுவே உதாரணம்).

பிக் பாஸ் - 3 |
பிக் பாஸ் - 3 |

சற்று உணர்ச்சிவசப்படாமல் இந்த ‘அழுகாச்சி டாஸ்க்’ பற்றி முதலில் பார்த்து விடலாம். ரியாலிட்டி ஷோ என்றல்ல, சீரியல்கள், திரைப்படங்கள் என்று பலவகையான வணிக பொழுதுபோக்குகளில் இது போன்ற கிம்மிக்ஸ்கள் நிச்சயம் இருக்கும். ஒருவர் பெரும்பாலும் மற்றவர்களின் துயரங்களைக் கேட்டு அழுவதில்லை. மாறாக அங்கு தன்னைப் பொருத்திக் கொண்டு தனக்காக அழுகிறார் என்பதே உண்மை.

அழுகை என்பது மிக அந்தரங்கமான உணர்வு. உங்களைப் பற்றி நன்கு அறிந்தவர்களின் முன்னால் மட்டும் உங்கள் பிரச்னையை சொல்லி அழுதால் அதற்கு ஒருவேளை உபயோகம் இருக்கும். மாறாக பொது மேடையில் அழும் போது அது வெறும் பாசாங்காகவே போய் விடும். “சிரி... உலகம் உன்னுடன் சேர்ந்து சிரிக்கும். அழு... நீ மட்டுமே தனியாக அழுது கொண்டிருப்பாய்’ என்றொரு பழமொழி உள்ளது.

ஆனால், இதற்கு இன்னொரு கோணமும் உள்ளது. சிலர் தங்களின் துயரங்களை நினைவுகூரும்போது சுயபச்சாதாபத்தில் அவர்களால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியாது. குறிப்பாக பெண்கள் எளிதில் அழுது விடுவார்கள். இதுதான் அவர்களுக்கு பெரிய வடிகாலே.

அனைவரும் ஆக்டிவிட்டி ஏரியாவுக்கு வந்தார்கள். சிந்துபைரவியில் ‘கலைவாணியே...’ என்று சிவகுமார் ஆரம்பிப்பதைப் போல ‘’இசைவாணி... நீங்க ஆரம்பிங்க” என்றார் பிக்பாஸ். இவரின் கரகரப்ரியா குரலைக் கேட்டவுடனே பெண்களுக்கு சட்டென்று தூக்கி வாரிப் போடுகிறது. (பூச்சாண்டி பிக்பாஸ்!).

தன்னுடைய வறுமைப் பின்னணி பற்றி கண்கலங்க சொன்னார் இசைவாணி. வாத்தியக் கலைஞராக இருந்த தந்தைக்கு செய்து கொண்டிருந்த வேலை போனதும் வீட்டின் நிலைமை இன்னமும் மோசமாக ஆனது, வாடகை தர முடியாமல் அடிக்கடி வீடு மாற்ற வேண்டிய கொடுமை, உறவினர்களின் புறக்கணிப்பு போன்றவற்றையெல்லாம் உருக்கமாக விவரித்தார் இசைவாணி. மேடைகளில் சினிமாப்பாடல்களை பாடுவதில் இருந்து விலகி ‘கானா’ என்னும் தனித்த அடையாளத்தை ஏற்றுக் கொண்ட பிறகுதான் சற்று வெளிச்சம் பிறந்ததாம். குடும்பச் செலவை சற்றாவது சமாளிக்கும் அளவுக்கு வருமானம் வரத் தொடங்கியது என்றார்.

பிக் பாஸ் - 3 |
பிக் பாஸ் - 3 |

‘’என்னோட கோபத்தையெல்லாம் என் பாட்டுல காட்டுவேன். எல்லோருக்கும் காலம் ஒரு நாள் மாறும்” என்று அவர் சொன்னது நல்ல பாயின்ட். பேச்சை முடித்து விட்டு சென்ற அவர் பிறகு மறுபடியும் எழுந்து வந்து ‘’பெண்கள்லாம் கானா பாடலாமான்னு கேட்டாங்க. நான் அப்படிப் பாடியதால்தான் BBC பெண்கள் விருது வாங்கினேன்” என்று முடித்தவுடன் பலரும் பாராட்டினார்கள்.

பிறகு இசைவாணியை தனியாக அழைத்த ராஜூ “நீ பட்ட கஷ்டமெல்லாம் ஓகே. அதை ஏன் அழுதுக்கிட்டு சொல்லணும்... நல்லா மாஸா சொல்லலாம் இல்லையா?!’’ என்று கேட்டது நல்ல விஷயம். ‘’எனக்கு பழைய ஞாபகமெல்லாம் வந்துடுச்சு” என்று அதற்கு இசை பதிலளித்ததும் சரியான கோணம்தான். (ஒருவேளை இசை துணிச்சலுடன் பேசியிருந்தால், பிக்பாஸ் டீம் தயாராக வைத்திருந்த ‘சிங்கப்பெண்ணே’ பாடலை ஆயிரமாவது தடவையாக போட்டிருப்பார்கள். பாவம் ரஹ்மான்!).

‘இங்கு ஜோசியம் பார்க்கப்படும்’ என்று போர்டு எழுதாத குறையாக அமர்ந்திருந்த அபிஷேக், ஆண்கள் டீமை அழைத்து ஒவ்வொருவரையும் பற்றி அனலைஸ் செய்து கொண்டிருந்தார். (ஆண்களுக்கு மட்டும்தான் ஜோசியம் பார்ப்பார் போலிருக்கு!) இவர் சொல்வதை அத்தனை பேரும் சிரிக்காமல் சீரியஸாக கேட்டுக் கொண்டிருந்தார்கள் என்பதுதான் ஆச்சர்யம்.

“வருண் பணக்காரப் பையனா இருந்தாலும் அதை வெளியில் காண்பிச்சுக்க மாட்டாரு. இதுக்கு வருத்தப்படணுமா?’’ன்னு கேக்குற ஆளு சிபி. ராஜ பரம்பரைல பிறந்தாலும் பதவிக்கு ஆசைப்படாதவர் அபிநய். நிரூப் சிங்கம் மாதிரி. (பிடரி மாதிரி கூந்தல் இருக்கறதாலயா?!) எல்லோரும் போற வழில போக மாட்டாரு” என்று அபிஷேக் இஷ்டத்திற்கு அடித்து விட “கிளி.. எனக்கும் ஒரு சீட்டு எடேன்” என்பது போல் வந்து நின்றார் பிரியங்கா. இதனால் கிளி அப்செட் ஆகி ஜோசியக் கடையை மூடி விட்டு சென்றது.

“நீங்க என்னடா... ஆக்ட்டிவிட்டி ஏரியாக்குள்ள டாஸ்க் கொடுக்கறது. இந்த அழுகாச்சி டாஸ்க்கை நானே தனியாவர்த்தனமா நடத்திக்கறேன்” என்று பிளான் போட்டாரோ... என்னமோ, வெளியே தோட்டத்தில் மற்றவர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த அபிஷேக், திடீரென தன் அம்மாவை நினைவுகூர்ந்து அழ ஆரம்பித்து விட்டார். உடனே பக்கத்திலுள்ள இளம் பெண்கள் பாய்ந்து வந்து லைக், Heart இமோஜியை ஏராளமாக அள்ளி விட்டார்கள்.

பிக் பாஸ் - 3 |
பிக் பாஸ் - 3 |

அபிஷேக்குக்கு நிகழ்வது ஏறத்தாழ அனைத்துப் பிள்ளைகளும் எதிர்கொள்ளும் குற்றவுணர்ச்சிதான். சந்தர்ப்பம் இருக்கும் போதெல்லாம் பெற்றோரை அலட்சியப்படுத்தி, அவமானப்படுத்தும் இளைய தலைமுறை காலம் கடந்த பின்புதான் தன் தவறுகளை உணர்ந்து வருந்துகிறது. எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் இந்த கெட்ட வழக்கம் போகவில்லை. இதிலிருந்து விதிவிலக்காக இருப்பவர்கள் ஒரு சிலர்தான்.

இணையத்தில் அலட்டலாக பேசும் அபிஷேக்கின் இன்னொரு முகத்தை இன்று காண முடிந்தது. இதுதான் பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளின் பலம்.‘அழுகாச்சி’ டாஸ்க்கில் அடுத்தபடியாக வந்தவர் சின்னப்பொண்ணு. இசைவாணியின் ஃபிளாஷ்பேக்கும் இவருடையதும் ஏறத்தாழ ஒன்றாகவே இருந்தது. அது நகர்ப்புறம் என்றால் இது கிராமம். “பிக்பாஸ்லாம் பார்த்திருக்கேன். பசங்களும் சொல்லி அனுப்பியிருக்காங்க. எனவே அழாம சொல்றேன்” என்று ஆரம்பித்தவர் ஒரு கட்டத்தில் தன்னிச்சையாக அழுது விட்டார்.

தன்னுடைய இசைக்குடும்பம் எதிர்கொண்ட கடுமையான வறுமையை மீறி நாட்டுப்புறக்கலையை வாழ வைப்பேன் என்று சின்னப்பொண்ணு காட்டிய உறுதி பாராட்டத்தக்கது. இறந்து போன அப்பா, அம்மாவுக்கு செய்ய முடியாததை சக நாட்டுப்புறக்கலைஞர்களுக்கு செய்வதாக இவர் சொன்னதும் சிறப்பு. ஒட்டுமொத்த கலைஞர்களின் சார்பாக, அவர்களின் பெருமையை ஊருக்கு எடுத்துச் சொல்வதற்காக பிக்பாஸ் வந்திருப்பதாக சொல்லி சின்னப்பொண்ணு தன் உரையை முடித்தார். இறுதியில் ஓர் உருக்கமான பாடலும் இருந்தது.

சின்னப்பொண்ணுவை எல்லோருமே பாராட்டும் போது ‘வித்தியாசமாக’ யோசிக்கும் ஸ்கிரிப்ட் ரைட்டர் ராஜூ மாத்திரம் டிஸ்லைக் செய்தார். “கலைஞர்கள் தங்கள் கஷ்டத்தை வெளியில் காட்டக்கூடாது. எவ்வளவு துயரத்தைக் கடந்து வந்திருந்தாலும் அதை மாஸா வெளியில் சொல்லணும். இதையேதான் இசை கிட்ட தனியா சொன்னேன்” என்ற ராஜூ, “தடைச்சுவர்களை உடைச்சாதான் மேல முன்னேற முடியும். அப்படியொரு சுவரா என்னை நினைச்சுக்கங்க” என்று தனது டிஸ்லைக்கை சின்னப்பொண்ணுவுக்கு வலிக்காத மாதிரி குத்தியது புத்திசாலித்தனம்.

“உங்க கதை நல்லா இருந்துச்சு.. ஆனா’’ என்பது போன்ற சொற்பிரயோகங்களை உபயோகிக்கிறார் ராஜூ. ஒருவரின் ‘சொந்த அனுபவங்களை’ கூட கதையாகத்தான் பார்ப்பார் போலிருக்கிறது. “நீங்க பட்ட கஷ்டமெல்லாம் ஓகே. ஆனா பஸ்ஸூல குழந்தை கீழே விழுந்துடுச்சுன்னு சொன்னதெல்லாம் தேவையில்லாத எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க்ஸ்” என்று ராஜூ சுட்டிக்காட்டியது உண்மையிலேயே அருமை. பலர் தங்கள் துயரங்களைப் பகிரும் போது அனுதாபத்தை ஈட்டுவதற்காக எக்ஸ்ட்ரா மசாலாக்களைக் கலந்து விடுவார்கள்.

இதையேதான் அபிநய்யும் பின்னர் சின்னப்பொண்ணுவிடம் சொன்னார். “நீங்க கடைசில ‘நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு உதவி செய்வேன்’னு சொன்னீங்க பார்த்தீங்களா… அங்கதான் நான் கனெக்ட் ஆனேன்” என்றது சரியான பாயின்ட்.

பிக் பாஸ் -3
பிக் பாஸ் -3

அழுகாச்சி முடிந்த கையோடு ஆடல் பாடல் என்று மக்கள் சிறிது நேரம் கொண்டாடினார்கள். “இமான்றது உங்க பேரு... அண்ணாச்சின்றது நீங்க வாங்கின பட்டமா?” என்பது போல் சீரியஸாக சந்தேகம் கேட்டுக் கொண்டிருந்தார் பாவனி. அது மட்டுமல்லாமல் “இம்மானுவேல்ன்றது கிறிஸ்துவப் பெயர்தானே... ஆனா அதுல வர்ற வேல் முருகன் கையிலதான இருக்கும்?” என்று அவரின் சந்தேகங்கள் நீண்டன. (ஏதேது! அம்மணி மதக்கலவரத்தை உருவாக்கிடுங்க போலயே!).

ஒரு சந்தேகம்: பிக்பாஸ் சீசன் தொடங்குவதற்கு முன்பே யாருக்காவது ‘ஆர்மி’ ஆரம்பித்து விடுவதுதான் தமிழ் சமூகத்தின் பொதுவான மரபு. இந்த முறை அப்படி எந்த ஆர்மியையும் பார்த்த நினைவு இல்லை. ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு?’

எதிர்பார்ப்போம்!
இந்த சீசனில் உங்களின் மனம் கவர்ந்த போட்டியாளர் யார்? கமென்ட் பாக்ஸில் சொல்லுங்கள்.