Published:Updated:

பிக் பாஸ் - 4 | படுத்தே விட்டானய்யா அபிஷேக்... இமான் அண்ணாச்சியின் சோக சிரிப்பும், டிஸ்லைக்ஸும்!

பிக்பாஸ் - 4 | இமான் அண்ணாச்சி

கமல்ஹாசன் தொகுத்து வழங்க விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் 4-ம் நாள் எப்படியிருந்தது... எழுதுகிறார் சுரேஷ் கண்ணன்!

பிக் பாஸ் - 4 | படுத்தே விட்டானய்யா அபிஷேக்... இமான் அண்ணாச்சியின் சோக சிரிப்பும், டிஸ்லைக்ஸும்!

கமல்ஹாசன் தொகுத்து வழங்க விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் 4-ம் நாள் எப்படியிருந்தது... எழுதுகிறார் சுரேஷ் கண்ணன்!

Published:Updated:
பிக்பாஸ் - 4 | இமான் அண்ணாச்சி

“வாத்தி கம்மிங்” பாடலுடன் பொழுது விடிந்தது. சிலர் வெறி கொண்டு குத்தாட்டம் போட்டுக் கொண்டிருக்க, இன்னும் சிலரோ ‘வாந்தி… கம்மிங்’ என்பது மாதிரி தள்ளாடிக் கொண்டிருந்தார்கள்.

பிக்பாஸ் மீது பிரியாங்காவுக்கு என்ன கடுப்போ என்று தெரியவில்லை. உள்பாவாடை காணாமல் போன கேஸையெல்லாம் அவர் மீது போட்டு அடி வெளுத்துக் கொண்டிருந்தார். சின்னப்பொண்ணுவின் நைட்டியை திருடுமளவுக்கு பிக்பாஸ் கேவலமானவரா என்ன? ‘சுப்பிரமணியம்’ திரைப்படத்தின் நகைச்சுவைக் காட்சியில் பூட்டிய வீட்டின் முன்பு ‘கஞ்சா கருப்பு’ சவடால் வசனம் பேசுவது போல, பிக்பாஸ் வெளியே வரமாட்டார் என்கிற தைரியத்தில் ஓவராக சவுண்டு விட்டார் பிரியங்கா. (நம்ம சேனல்தானேன்ற தைரியமோ?!)

மழையில் நனைந்து அண்ணாந்து பார்த்து ‘ரொமான்ட்டிக் ஹீரோ’ லுக் தர முயன்று கொண்டிருந்தார் ராஜூ. (சின்ன கவுண்டர் மாதிரி இருக்கான்னு பார்த்தேன். ம்ஹூம்... இல்லை!). ஐக்கியுடன் ‘வாட்டர் ஃபுட்பால்’ என்கிற புது விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தார் அபிஷேக். தோட்டத்தில் தேங்கியிருக்கும் மழைநீரை காலால் உதைத்து ஐக்கியின் மீது தெறிக்க விடும் இந்த விளையாட்டு உற்சாகமாக நடந்தது.

பிக்பாஸ் - 4 |
பிக்பாஸ் - 4 |

டைனிங் டேபிளில் ‘கானங்கருங்குயிலே’ பாடலை மிக அருமையாகப் பாடினார் சின்னப்பொண்ணு. மற்றவர்கள் உற்சாகமாக தாளம் போட்டார்கள். (சாப்பாட்டுக்கு தாளம் போடுவது என்பது இதுதான் போல!)

“இமான்… உங்க கதையை ஆரம்பிங்க” என்று சொன்னார் பிக்பாஸ். ஆனால், அழுகாச்சி டாஸ்க் என்றாலும் தன் சொந்தக்கதையை சிரிக்கச் சிரிக்க அண்ணாச்சி சொன்னது நன்றாகவே இருந்தது. ஒருவேளை ‘’இந்த ராஜூப்பய திட்டுவானோ?” என்று நினைத்து விட்டாரோ?! சினிமா ஆசையில் சென்னை வந்து மளிகைக்கடையில் மூட்டையோடு மூட்டையாக கிடந்து 18 ஆண்டுகள் சிரமத்துக்குப் பிறகு தொலைக்காட்சி வாய்ப்பு கிடைத்ததை ஜாலியாக சொன்னார் இமான்.

“எப்பவாவது ஒரு முறைதான் வாய்ப்பு வரும். அந்தச் சமயத்தில் உங்களை நூறு சதவிகிதம் நிரூபித்து விடுங்கள்” என்று அவர் சொன்னது நல்ல மெசேஜ். “பிக்பாஸ்ல முதன் முதலாக ஒரு காமெடியன் ஜெயிக்கணும்” என்று அவர் விரும்பியது வித்தியாசமான வேண்டுகோள். நடக்கட்டும். ‘அழுகாச்சி’ டாஸ்க்கை சிரித்துக் கொண்டே சொன்ன பாவத்துக்காக சில டிஸ்லைக்குகள் அண்ணாச்சிக்கு விழுந்தன. “கேட்ட கதையாவே இருக்கு” என்றார் நமீதா. “எனக்கு கனெக்ட் ஆகலை” என்றார் அக்ஷரா. . (அழுகாச்சி டாஸ்க்கை சிரிச்சிக்கிட்டே சொன்னது ஒரு குத்தமாய்யா?!).

இமான் ஜாலியாக பேசியதைக் கேட்டு நிரூப் சிரித்தார் போலிருக்கிறது. பக்கத்தில் இருந்த அபிஷேக், ஏதோ ஃபிலிம் ஃபெஸ்டிவலில் உலக சினிமா பார்த்துக் கொண்டிருந்த தோரணையில் ‘’உஷ்... பேசாம இருங்க” என்று சொல்லியிருக்கிறார். ஆனால் சண்டை நடந்ததென்னவோ நிரூப்புக்கும் சிபிக்கும் இடையில். “நான் சிரிச்சது தப்பா அண்ணாச்சி?” என்று நிரூப் கேட்க, “யப்பா சாமி... நான் சொன்னது என் கதையே இல்ல. ‘வானத்தைப் போல’ படத்தின் கதை போதுமா... ஆளை விடுங்கப்பா” என்று ஜாலியாக சொல்லி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் இமான்.

தன் துயரத்தை புன்னகைக்குப் பின்னால் ஒளித்து வெளிப்படுத்தும் போதுதான், அந்த துயரம் பார்ப்பவருக்கு இன்னமும் ஆழமாக உணர்த்தப்படும். (உதாரணம் : சார்லி சாப்ளின்).

பிக்பாஸ் - 4 |
பிக்பாஸ் - 4 |

நிரூப்பிடம் நடந்த சம்பவத்தையொட்டி பிறகு கேமரா முன்பு வந்த அபிஷேக் ‘’இனிமே நான் பக்குவ நிலையை அடைஞ்சுடறேன்” என்று வாக்குமூலம் கொடுத்தார். ஆனால் அடையவில்லை என்பது அடுத்த சில நிமிடங்களிலேயே தெரிந்தது. “உங்க எல்லோரையும் ரிவ்யூ பண்றேன்” என்று மீண்டும் மரத்தடி ஜோசியத்தை ஆரம்பித்து விட்டார். குறுக்கே வந்து எதையோ சொன்ன தாமரையை “பட்டையை போட்டு ஊரை ஏமாத்தறீங்களா?” என்று ஜாலியாக அபிஷேக் கேட்டு விட “பட்டையைப் பத்தி பேசினா எனக்கு கெட்ட கோபம் வந்துடும்’’ என்று கிண்டலும் சீரியஸுமாகச் சொன்னார் தாமரை. உடனே ‘படுத்தே விட்டானய்யா’ மோடுக்குச் சென்று முழு சரணாகதி அடைந்து விட்டார் அபிஷேக். “தாமரையை பகைச்சுக்கிட்ட... உனக்கு ரெண்டு லட்சம் ஓட்டு போச்சு” என்று குறுக்குச் சால் ஓட்டினார் இமான்.

‘அழுகாச்சி டாஸ்க்கில்’ அடுத்து வந்தவர் ஸ்ருதி... மன்னிக்க சுருதி. இவர் விவரித்த அனுபவம் உண்மையிலேயே உருக்கமாக இருந்தது. சிலருடைய சோகங்கள் நாம் கற்பனை செய்வதை விடவும் அதிக துயரத்துடன் இருக்கும். அப்படியொரு துயரமான சங்கதி, சுருதியின் வாழ்க்கையில் இருந்தது. இரண்டாம் மனைவிக்கு பிறந்த குழந்தைகள் படும் அத்தனை கஷ்டத்தையும் சுருதி பட்டிருக்கிறார். எந்த அளவுக்கு என்றால், ‘அப்பா இறந்து விட்டார்’ என்கிற செய்தியை அறிந்த போது அவர் சந்தோஷப்படும் அளவுக்கு.

சுருதியின் அம்மாவுக்கு திருமணம் ஆகும் போது வயது 18. அவரைத் திருமணம் செய்தவருக்கு வயது 50. அவருடைய முதல் மனைவி இறந்து விட்டதால் சொந்தத்தில் வலுக்கட்டாயமாக சுருதியின் அம்மாவை திருமணம் வைத்திருக்கிறார்கள். காரணம் வறுமை. சுருதியின் அம்மா அழகாக இருப்பார் என்பதால் சந்தேகத்தின் பேரில் மனைவியையும் மகளையும் வீட்டுக்குள் பூட்டி வைப்பாராம். தெருவில் உணவின்றி படுக்க நேருமாம். ‘அப்பா’ என்று ஒருமுறை கூட சுருதி அழைத்ததில்லையாம்.

கல்விதான் தன்னைக் கரை சேர்க்கும் என்கிற நிதர்சனத்தை உணர்ந்த சுருதி, கஷ்டப்பட்டு படித்து முதல் வகுப்பில் தேர்வாகியும் மனதுக்குப் பிடித்த வேலை கிடைக்கவில்லை. தற்செயலாக வந்த மாடலிங் வாய்ப்புதான் அவரது முதல் வெளிச்சம். பிறகு ‘dark is divine’ என்கிற தலைப்பில், அதுவரை வெள்ளை நிறத்தில் சித்தரிக்கப்பட்ட தமிழ்க்கடவுள்களை, கறுப்பு நிறத்தில் புகைப்படம் எடுத்ததற்கு மாடலாக நின்றாராம். அதுவே இவருக்கு பெயர் வாங்கித் தந்திருக்கிறது. “உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு சிறிய முடிவையும் யோசித்து எடுங்கள். என் அம்மாவின் பெற்றோர் யோசிக்காமல் எடுத்த முடிவுதான் எங்கள் இருவரையும் பல வருடங்களுக்கு அவதிப்பட வைத்தது. நோ சொல்ல வேண்டிய இடத்தில் தயங்காமல் நோ சொல்லுங்கள்” என்று முடித்துக் கொண்டார் சுருதி. இவரின் பேச்சில் இருந்த துயரம் உண்மையாக இருந்ததால், பலரும் லைக் பட்டனை அள்ளித் தெளித்தார்கள்.

பிக்பாஸ் - 4 |
பிக்பாஸ் - 4 |

கழிப்பறை பராமரிப்பு அணித்தலைவரான ராஜூ, நாட்டு மக்களை அழைத்து “ஏதேனும் குறையிருக்கிறதா?” என்று விசாரிக்க “ஆமாம் மன்னா... ஒரே கலீஜா இருக்கு” என்று சிலர் கோரஸ் பாடினர். அப்போது ராஜூ சொன்ன டயலாக் உண்மையிலேயே மாஸ் மெசேஜாக இருந்தது. “நீங்க உள்ள போகும் போது க்ளீனா இருக்கான்னு பாருங்க. அதை விட முக்கியம், வெளியே வரும் போதும் க்ளீனா இருக்கான்னு பாருங்க” என்று அவர் சொன்னது, மற்றவர்களை குறை சொல்வதை விடவும் தான் அதற்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்கிற செய்தியை அண்டர்லைன் செய்து சொல்லியது. (தம்பி ஒத்துக்கறேன்... நீங்க பாக்யராஜ் அஸிட்டென்ட்தான்!)

அக்ஷராவும் தாமரையும் அன்னியோன்யமாக அமர்ந்திருந்த காட்சி பார்க்க நன்றாக இருந்தது. ‘என்னிக்கு புட்டுக்குமோ’ என்று அபசகுனமாக தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.

பிரியங்கா இத்துடன் தொகுப்பாளர் பணியை விட்டு விடலாம் என்று திட்டம் வைத்திருக்கிறாரோ என்று தெரியவில்லை. (யூடியூபிலேயே இவருக்கு நல்ல வருமானம் வருகிறதாமே?!). விஜய்டிவியையும் பிக்பாஸையும் கழுவி கழுவி ஊற்றிக் கொண்டிருந்தார். “இனிமேல் எனக்கு விஜய்டிவியில் வாய்ப்பு கிடைக்காது என்று நினைக்கிறேன்” என்று வெளிப்படையாகவே சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் இதெல்லாம் முன்கூட்டியே பேசிக் கொண்ட திட்டமாகவும் இருக்கலாம். (கன்டென்ட்டுக்காக நான் என்ன வேணா பேசுவேன்... கண்டுக்காதீங்க!).

பிரியங்கா போடும் மொக்கையைக் கூட ஒருவாறாக சகித்துக் கொள்ளலாம். ஆனால் இதற்குப் போய் விழுந்து விழுந்து சிரிக்கும் நிரூப்பைக் கண்டால்தான் கொலைவெறி வருகிறது. (இந்த ஆசாமியை ஹீரோ ரேஞ்சுக்கு நான் கற்பனை செய்து வைத்திருந்தேன்!). இவருடன் பக்க வாத்திய சிரிப்பாக அபினய் வேறு எரிச்சலூட்டிக் கொண்டிருந்தார். இவர்களை விடவும் ஓவர் எக்ஸ்பிரஷன் சிரிப்பைத் தந்து கொண்டிருந்தார் அண்ணாச்சி.

“நீங்க பிக்பாஸுக்கு எப்படி வந்தீங்க?” என்று தாமரையை விசாரித்துக் கொண்டிருந்தார் பிரியங்கா. பிரியங்கா தன்னை மிகவும் கலாய்ப்பதற்கு பழிவாங்க வேண்டுமென்று பிக்பாஸுக்கு தோன்றியதோ, என்னமோ... “பிரியங்கா... மைக்கை ஒழுங்கா மாட்டுங்க” என்று பயத்துடன் எச்சரிக்கை தந்தார். “ஹாங்... ஹாங்…. ஓகே... ஓகே” என்று அந்த வேண்டுகோளை இடது கையால் ஹேண்டில் செய்தார் பிரியங்கா.

பிக்பாஸ் - 4 |
பிக்பாஸ் - 4 |

‘நாமினேஷன்னா என்னங்கய்யா?” என்று முதல் சீசனில் கேட்ட கஞ்சா கருப்புவைப் போல “எலிமினேஷன்னா என்ன?” என்று வெள்ளந்தியாக கேட்டுக் கொண்டிருந்தார் தாமரை. ‘அதாவது... உங்களை இந்த ஷோவை விட்டு வெளியே அனுப்பிடுவாங்க’ என்று மற்றவர்கள் கலாட்டா செய்யும் போது “ஏன் சாமி. நான் போகணும்... ரொம்ப நாள் கழிச்சு இப்பத்தான் நான் சந்தோஷமா இருக்கேன். வேளா வேளைக்கு சோறு போடுறாங்க. குளுகுளுன்னு ஏசி இருக்கு. வெயிட்டான பேக்கை மாட்டிட்டு வேலைக்கு போக வேண்டாம்… நான் போக மாட்டேன்” என்று தாமரை சொன்னது அப்பாவித்தனமாக இருந்தாலும் அவர் அப்படிச் சொல்வதின் பின்னால் உள்ள சோகமான காரணங்களை புரிந்து கொள்ள முடிகிறது.

இந்த சீசனில் ஒப்பனையில்லாமல் மிக இயல்பாக புழங்குகிறவராக தாமரையை மட்டுமே முதன்மையாக சொல்ல முடியும் என்று தோன்றுகிறது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்... யார் இந்த சீசனில் மிக இயல்பாக நடந்து கொள்கிறார்கள்? கமென்ட் பாக்ஸில் வந்து சொல்லுங்கள்.