Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 23: `சின்ராசு திருந்திட்டாப்ல!' ஷாக் கொடுத்த அசிம்; ராபர்ட் - தனலஷ்மி மோதல்!

பிக் பாஸ்

‘ரச்சிதாவின் பக்கம் ராபர்ட் சாய்ந்து விட்டார்’ என்கிற முணுமுணுப்பை தனலஷ்மி ஏற்கெனவே சொல்லிக் கொண்டிருந்தார்.

Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 23: `சின்ராசு திருந்திட்டாப்ல!' ஷாக் கொடுத்த அசிம்; ராபர்ட் - தனலஷ்மி மோதல்!

‘ரச்சிதாவின் பக்கம் ராபர்ட் சாய்ந்து விட்டார்’ என்கிற முணுமுணுப்பை தனலஷ்மி ஏற்கெனவே சொல்லிக் கொண்டிருந்தார்.

பிக் பாஸ்
செய்தி சேனல் என்கிற பழைய டாஸ்க்கை இந்த எபிசோடில் தூசு தட்டி எடுத்தார் பிக் பாஸ். இதில் ‘விவாத மேடை’ என்கிற தலைப்பில் ஒரே சத்தம். ஒரிஜனல் சானல்களில் எப்படி பரஸ்பரம் அடித்துக் கொள்வார்களோ, அப்படியே இவர்களும் வார்த்தைகளால் அடித்துக் கொண்டார்கள்.
நிவா
நிவா

விவாதம் என்பதின் அர்த்தம் என்ன? ஒரு தலைப்பைப் பற்றி பல்வேறு அறிஞர்களின் கருத்துகள் வெளிப்பட்டு ஒன்றோடு ஒன்று உரசுவதின் மூலம், சராசரி நபர்கள் பல விஷயங்களை அறிந்து கொண்டு தெளிவடைய முடியும். ஆனால் நம்முடைய ‘செய்தி விவாதங்களில்’ இதுவா நடக்கிறது?! அரசியல் மேடைகளில் நிகழும் அத்தனை அநாகரிகங்களையும் நம் வரவேற்பறைக்குள் இவர்கள் கொண்டு வந்து சேர்த்ததுதான் மிச்சம். பிக் பாஸ் வீட்டிலும் ஏறத்தாழ இதுவேதான் நிகழ்ந்தது. ‘அந்த டிவி’, ‘இந்த டிவி’ என்கிற பெயரில் இரண்டு சேனல்களை ஆரம்பித்து கடைசியில் ‘நொந்த டிவி’யாக ஆக்கி விட்டார்கள்.

நாள் 23-ல் நடந்தது என்ன?

இந்த வாரத்தின் டாஸ்க், டிவி சேனல் ஆக இருக்கும் என்கிற அறிவிப்பை மைனா வாசித்தார். வீடு இரண்டு அணிகளாகப் பிரியும். இரண்டு அணிகளிலும் ஒரு சானல் தலைமையாளர், இரண்டு நீதிபதிகள் இருப்பார்கள். Creativity மற்றும் performance ஆகியவற்றைக் கொண்டு நீதிபதிகள் TRP ரேட்டிங்கை தீர்மானிப்பார்கள்.

விக்ரமன், ரச்சிதா
விக்ரமன், ரச்சிதா

‘அந்த டிவி’, ‘இந்த டிவி’ – கடைசியில் பார்த்தால் ‘நொந்த’ டிவி

‘இந்த’ டிவியின் சேனல் ஹெட் மைனா. ஏடிகே மற்றும் மகேஸ்வரி ஆகிய இருவரும் நீதிபதிகள். மணிகண்டன், நிவா, ஏடிகே, கதிரவன், அசிம், ராம், தனலஷ்மி ஆகியோர் இந்த அணியில் இருப்பார்கள். ‘அந்த’ டிவியின் சேனல் ஹெட் அமுதவாணன். ரச்சிதா மற்றும் விக்ரமன் நீதிபதிகள். ஜனனி, ராபர்ட், ஆயிஷா, ஷெரினா, குயின்சி மற்றும் ஷிவின் இதில் இருப்பார்கள்.

“‘இந்த’ டிவி சரியில்லை.. ‘அந்த’ டிவிதான் பெஸ்ட்ன்னு நடைமுறையில் சொல்லுவாங்க. அந்த வகையில் நாங்கதான் பெஸ்ட்” என்று அப்போதே அமுதவாணன் ஜாலியாக சண்டையை ஆரம்பித்து வைக்க அவரோடு மல்லு கட்டினார் மைனா. கிச்சன் ஏரியாவில் வழக்கம் போல் ஒரு மினி பஞ்சாயத்து. “இன்னமும் நாலு போ் சாப்பிடலை..” என்று தோசை மாவு காலியாவதை வைத்து ரச்சிதா நினைவுப்படுத்த, ஆயிஷா கோபித்துக் கொண்டு ‘எனக்கு போதும்’ என்று மூக்கைச் சிந்தினார். ஆயிஷாவையும் கண்ணீரையும் பிரிக்கவே முடியாது போல. “அண்ணன் தோசையை நீ எடுத்துக்கம்மா. தங்கச்சி’ என்று பாசம் காட்டினார் அசிம்.

‘நான் நாயாவே இருக்கேன். அதை நீங்க சொல்லாதீங்க’ – தனலஷ்மி ஆவேசம்

இன்னொரு உக்கிரமான பஞ்சாயத்து தனலஷ்மிக்கும் ராபர்ட்டிற்கும் இடையில் நடைபெற்றது. ‘ரச்சிதாவின் பக்கம் ராபர்ட் சாய்ந்து விட்டார்’ என்கிற முணுமுணுப்பை தனலஷ்மி ஏற்கெனவே சொல்லிக் கொண்டிருந்தார். தனலஷ்மி தூங்க முற்படும் போது அதை ஆட்சேபித்து நட்பு உரிமையில் சில அதிகப்படியான வார்த்தைகளை விட்டு விட்டார் ராபர்ட்.

‘தனலஷ்மி, தொட்டாலே ‘ஷாக்’ அடிக்கும் எலெக்ட்ரிக் கம்பியாச்சே’ என்பதை ராபர்ட் யோசித்திருக்க வேண்டும். நடுத்தர வயது ஆசாமிகள், தங்களின் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால், இளைய தலைமுறையினரிடம் சற்று இடைவெளி விட்டுத்தான் பழகியாக வேண்டும். வயது காரணமாக அதிக உரிமை எடுத்துக் கொண்டால் பந்து என்றேனும் வேகமாக திரும்பி வரக்கூடும்.

தனலஷ்மி
தனலஷ்மி

ராபர்ட் சொன்ன வார்த்தைகளால் மனம் புண்பட்ட தனலஷ்மி, தனது கடுமையான ஆட்சேபத்தை உடனே வெளியிட சூழலில் உஷ்ணம் ஏறியது. தனலஷ்மியின் சுயமரியாதை பாராட்டப்பட வேண்டியதுதான். ஆனால் இத்தனை நாட்கள் நட்பு பாராட்டிய ராபர்ட்டிடம் அவரது பிழையை தனிமையில் சுட்டிக் காட்டி ‘இனி இப்படி பேசாதீர்கள்’ என்று தடுத்திருக்கலாம். “அவளுக்குப் பிடிக்கலைன்னு இப்ப தெரிஞ்சு போச்சுல்ல. இனிமே அப்படி பேசாதீங்க” என்று ராபர்ட்டிற்கு சரியான ஆலோசனையைத் தந்தார் ஷிவின். விக்ரமனும் ஷிவினும்தான் அந்த வீட்டில் பெரும்பான்மையான சமயங்களில் சரியான கோணத்தில் யோசித்து கருத்துக்களை வெளிப்படுத்துகிறார்கள். அரசியல்சரித்தன்மையோடு யோசிக்கிறார்கள்.

‘ராசிபலன்’ என்கிற பெயரில் அசிமைக் கலாய்த்த அமுதவாணன்

‘நாங்க வேற மாதிரி’ என்கிற பாடலோடு நாள் 23 விடிந்தது. ‘ராசி பலன்’ என்கிற தலைப்பில் சில போட்டியாளர்களை அமுதவாணன் கலாய்த்தது ரகளையான நகைச்சுவையாக இருந்தது. குறிப்பாக அசிமின் இமேஜை கருணையேயில்லாமல் டாமேஜ் செய்தார் அமுதவாணன். இதை அசிமும் ஸ்போர்டிவ்வாக எடுத்துக் கொண்டார்.

அமுதவாணன்
அமுதவாணன்

வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் திரைப்படத்தில் கமலால் ரிவிட் அடிக்கப்படும் போதெல்லாம் பிரகாஷ்ராஜ் ‘சிரிப்பு தெரபி’ மூலம் செயற்கையாக ஒரு சிரிப்பு சிரிப்பார். அசிமின் வலுக்கட்டாயமான புன்னகையும் அதைத்தான் பல சமயங்களில் நினைவுப்படுத்துகிறது. அமுதவாணனால் கலாய்க்கப்பட்ட இந்த முறையும் அதே ‘டிரேட் மார்க்’ புன்னகையை வரவழைத்துக் கொண்டார் அசிம்.

‘மோதிக் கொண்ட இரண்டு சமையல் அணிகள்’

‘இந்த டிவி’ அணியில் ‘சமையல் நிகழ்ச்சி’ ஒன்றை ஒளிபரப்ப ஆரம்பித்தார்கள். குழந்தைகள் வந்து நேயர்களுக்கு சமையல் கற்றுத் தருமாம். மைனாவும் மணிகண்டனும் கான்வென்ட் குழந்தைகளின் கெட்டப்பில் வந்து அலற வைத்தார்கள். இருவரும் சேர்ந்து ‘சமையல்’ என்கிற பெயரில் மைதா மாவை பரஸ்பரம் முகத்தில் இறைத்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல் நிகழ்ச்சித் தொகுப்பாளரான நிவாவின் மீதும் மாவை தெளித்து பங்கப்படுத்தினார்கள். இவர்கள் தயார் செய்த ‘வஸ்து’வை, எதிர் டீம் ரச்சிதாவிற்குத் தந்து சுவை பார்க்கச் சொல்லி பழிவாங்கினார்கள்.

‘அந்த டிவி’ அணியில் அமுதவாணன் தொகுப்பாளராக இருக்க அதே சமையல் ப்ரோக்ராம். ரச்சிதாவும் ஷிவினும் இணைந்து சமைத்தார்கள். ‘கலக்கப் போவது யார்’ நிகழ்ச்சியில் உருவக்கேலி என்பது மிக சகஜமாக நிகழும். அதே பழக்கத்தின் காரணமாகவோ, என்னவோ “இதுவா சிங்கப்பூர் மாயா? எங்க வீட்டு ஆயா மாதிரி இருக்குது” என்று ஷிவினைக் கலாய்த்தார் அமுதவாணன். ரச்சிதாவும் ஷிவினும் இணைந்து வணக்கம் சொல்வது போல அமுதவாணனின் கன்னத்தில் அடிக்க “இதெல்லாம் ஸ்கிரிப்ட்டில் இல்லையே மேடம்” என்று பரிதாபமாக வலியில் முனகினார் அமுதவாணன். செஃப் என்கிற பெயரில் வந்த ராபர்ட், சில சர்க்கஸ் வேலைகளைச் செய்து உணவைச் சுவைத்தார்.

நிவா, மைனா, மணிகண்டன் டி.வி. டாஸ்க்கில்
நிவா, மைனா, மணிகண்டன் டி.வி. டாஸ்க்கில்

ரேட்டிங் தரும் நேரம். ‘இந்த டிவி’க்கு நான்கு ரேட்டிங்கும் ‘அந்த டிவி’க்கு 5 ரேட்டிங்கும் கிடைத்தது. “எங்களை விட அவங்களுக்கு எப்படி அதிகம்?” என்று மணிகண்டனும் மைனாவும் ஆட்சேபிக்க ‘நீதிபதிகள் முடிவு ஃபைனல். கிளம்புங்க. காத்து வரட்டும்” என்று பஞ்சாயத்தை மூடினார் மகேஸ்வரி. இது நியாயமான தீர்ப்புதான். அமுதவாணன் டீம் நடத்திய நிகழ்ச்சி, இன்னொரு நிகழ்ச்சியை விடவும் அதிக ஜாலியாக இருந்தது.

‘தங்களின் அணிக்காக மகேஸ்வரி பாயிண்ட்டுகளை சரியாக எடுத்து வைக்கவில்லை’ என்று அசிம் ஆட்சேபிக்க ``எப்படி ஜட்ஜ் பண்ணனும்னு நீங்க எனக்கு சொல்லித்தர வேணாம். உங்க வேலையைப் பாருங்க” என்று சூடானார் மகேஸ்வரி. மைனாவும் தன் தோழி மகேஸ்வரியை ஆதரிக்க, அசிம் வேறுவழியின்றி இறங்கி வந்து ‘கடவுள் மீது ஆணையாக சொல்கிறேன். எனக்கு நீதிபதி பதவி மேல ஆசையில்லை. டீம் முன்னேற்றம்தான் முக்கியம்’ என்று மகேஸ்வரியிடம் சமாதானம் பேசினார்.

ஹைடெசிபலில் அலறிய ஹவுஸ்மேட்ஸ்

அடுத்ததாக ‘விவாத களம்’ என்கிற டாஸ்க். இரண்டு அணிகளும் ஒரே சமயத்தில் மோத வேண்டும். ஒவ்வொரு அணியிலும் இரண்டு பேர் பேசுவார்கள். ‘பிக் பாஸில் ‘எண்டர்டெயின்மென்ட்’ என்று மக்கள் எதைக் கருதுகிறார்கள்.. அதைத் தருவது யார்? தராதது யார்?’ இதுதான் தலைப்பு.

‘பிக் பாஸ்ன்றது தமிழ் சினிமா மாதிரி.. சண்டை.. பாசம். சென்ட்டிமென்ட்ன்னு எல்லாம் இருக்கணும். இங்க சும்மா இருக்கறது கதிரவன். ஆக்ஷனுக்கு அசிம். பஞ்சாயத்துக்கு விக்ரமன். கம்ப்ளீட் பேக்கேஜூக்கு ஷிவின்” என்பது போல் பேசி விவாதத்தை ஆரம்பித்து வைத்தார் தனலஷ்மி. `சமூகத்தைப் பிரதிபலிக்கிறதுதான் பிக் பாஸ் நிகழ்ச்சி’ என்று பிரசங்கம் செய்ய ஆரம்பித்தார் விக்ரமன். ‘இங்க பங்களிக்காதவங்கன்னு பார்த்தா அது கதிரவன் மற்றும் ஷெரினா. கருத்துத் திணிப்பும் இங்க நடக்குது” என்பதும் விக்ரமனின் கருத்து.

ஷிவின்
ஷிவின்

‘கருத்து மோதல் வந்தால் கூட அது நாகரிகமான சண்டையா இருக்கணும்’ என்று சொல்லி நம்மை அதிர வைத்தார் அசிம். (சின்ராசு!.. நீங்க திருந்துங்க. ஆனா திடீர்னு திருந்தி எங்களுக்கு ஹார்ட் அட்டாக் வர வெச்சுடாதீங்க!). ‘எண்டர்டெயின் தருபவர்களாக’ அமுதவாணன், ராபர்ட், தனலஷ்மி ஆகியோரின் பெயர்களைச் சொன்ன அசிம், ‘சும்மா இருப்பவர்களாக’ கதிரவன், ரச்சிதா பெயர்களைச் சொன்னார். விக்ரமன் உதிர்க்கும் கருத்துகளில் 70 சதவிகிதம் சரியாக இருக்கிறதாம். தனலஷ்மி வேண்டுமென்றே சண்டை இழுக்கிறாராம்.. இதுவும் அசிம் பதிவு செய்த கருத்துதான்.

‘அது சரியோ. தப்போ.. அசிமோட பெயர் நிறைய அடிபடுது.. அடுத்ததா மகேஸ்வரியைச் சொல்லலாம். இந்த இரண்டு பேரும் துணிச்சலா கருத்து சொல்றாங்க. மைனாவும் அமுதவாணனும் எண்டர்டெயின்மென்ட் கேட்டகிரி. ‘அரிதான காட்டகிரி’ன்னு பார்த்தா ஜனனி, நிவாஷினி, ஷவின் ஆகிய மூவர்களை சொல்லலாம். அவங்க மூலமாக புது ஃபிளேவர் கிடைக்குது. சும்மா இருப்பவர்கள்ன்னு பார்த்தா மைனா, கதிரவன் மற்றும் ஷெரினா’ என்று அடுத்து வந்த ஷிவின் படபடவென பேசினார்.

‘பேரறிஞர் அண்ணா.. என்ன சொல்றார்னா..’ – விக்ரமன் அட்ராசிட்டி

“ஷிவினின் கருத்துக்களை நான் வழிமொழிகிறேன். அவங்களை ஆரம்பத்துல என்னமோன்னு நெனச்சேன்.. உற்றுப் பார்த்தாதான் தெரியுது.. ஷிவின் ரொம்பா சரியா பேசறாங்க. அமுதவாணன் நகைச்சுவையைத் தாண்டி தன் ஒரிஜினல் முகத்தை இன்னமும் அதிகம் காட்டலை.” என்று அசிம் சொல்ல “அசிம் சொல்றது கரெக்ட்டுதான். ஆனா எண்டர்டெயின்மென்ட்ல தனம், என்னோட பெயர்களையும் இணைத்திருக்கலாம்” என்றார் விக்ரமன்.

பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்
பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்

‘மொழியை ஒருத்தர் வித்தியாசமா பேசறதுல்லாம் கணக்குல வராது. அதைப் போலவே அழகுல்லாம் மேட்டரே கிடையாது’ என்பது போல் கடுமையாக ஆட்சேபித்தார் தனலஷ்மி. ஜனனி மற்றும் நிவாவை ‘அரிதான கேட்டகிரி’ என்று ஷிவின் பாராட்டியதற்கான பதிலடி இது. பிறகு இந்த விவாதம் ‘கச்சா.. முச்சா’வென்று ரணகளமாக செல்ல ‘ஒரே சமயத்துல மூணு போ் கிட்டயும் விவாதம் பண்றீங்க' என்று தனலஷ்மியை ஆட்சேபித்தார் விக்ரமன்.

‘தனலஷ்மி தள்ளி விட்டதைப் பார்க்கலைன்னு சொன்னீங்க.. அப்படின்னா ‘ஷெரினா தலைல அடிபடலைன்னு எப்படி சொன்னீங்க?’ என்று விக்ரமனிடம் அந்தப் பஞ்சாயத்தை மீண்டும் ஆவேசமாக தூசு தட்டி உதறினார் அசிம்.

சில நிமிடங்களுக்குப் பிறகு அசிமிற்கும் தனத்திற்கும் இடையில் ஆவேசமான மோதல் ஏற்பட்டது. “பேரறிஞர் அண்ணா.. என்ன சொல்லியிருக்கார்னா..” என்று அவரையெல்லாம் விக்ரமன் இதில் இழுக்க பிக் பாஸிற்கே பொறுக்க முடியாமல் பஸ்ஸர் அடித்து விவாதத்தை நிறுத்தினார்.

‘மரியாதையா பேசுங்க’ – மகேஸ்வரியிடம் மல்லுக் கட்டிய விக்ரமன்

‘தனலஷ்மி பேசினது நன்று’ என்று ரச்சிதா சொல்ல “அசிம் பேசியது ஒரு கட்டத்தில் பாதை மாறிப் போயிடுச்சு” என்று இன்னொரு நடுவரான விக்ரமன் சொல்ல ‘இந்த டிவி’க்கு 4.5 ரேங்கிங் கிடைத்தது. இது தொடர்பாக சந்தைக்கடை போல ஆளாளுக்கு பேச ஒரே குழப்பம். “நீங்க விளக்கம் தந்துட்டே இருக்க வேணாம். அடுத்ததா எங்க நீதிபதி காத்திருக்காங்க” என்று மைனா எகிறிக் குதிக்க “விளக்கம் கேட்கறவங்களுக்கு சொல்ல வேணாமா?” என்று விக்ரமனும் மைனாவின் சண்டைக்கு ஈடு கொடுத்தார். “உக்காருங்க. உக்காருங்க..” என்று மகேஸ்வரி சொன்ன தோரணையும் விக்ரமனுக்கு கோபத்தைக் கொடுக்க ‘மரியாதையா பேசுங்க. உங்க பாடி லேங்வேஜ் சரியில்ல’ என்று உஷ்ணமானார் விக்ரமன்.

ஜனனி, நிவா
ஜனனி, நிவா

ஒருவழியாக இந்தச் சத்தம் ஓய்ந்து தன் தீர்ப்பை மகேஸ்வரி வாசித்தார். “ஷிவினும் தனலஷ்மியும் பேசினது அருமை. தலைப்பு சார்ந்து நல்லாப் பேசினாங்க. ஆனா. அசிமும் விக்ரமனும் நல்லா ஆரம்பிச்சாலும் அசிம் தலைப்பை விட்டு விலகிட்டாரு. அதனால ஒரு பாயிண்ட் கம்மி பண்றோம்” என்றார் மகேஸ்வரி.

கிச்சன் சுற்றில் தங்கள் அணியின் சார்பாக மகேஸ்வரி வலுவாக பேசவில்லை என்று அசிம் முன்பே குற்றம் சாட்டியதால், ஒரு பாயிண்ட்டை குறைக்கும் அழுத்தத்திற்கு மகேஸ்வரி ஆளாகியிருக்கலாம். அதே அணியில் இருந்து கொண்டே தனலஷ்மி தன்னைப் பற்றி குறை சொன்னதால் டென்ஷன் ஆன அசிம் “நான்.. தலைப்புல இருந்து எங்க விலகினேன்.. சொல்லு.. பார்க்கலாம்” என்று கேள்வி கேட்க “கேமிற்காக என்னால பொய் சொல்ல முடியாது. எனக்கு சரின்னு பட்டதைதத்தான் பேசுவேன்” என்று அசிமை விடவும் அதிகமாக டென்ஷன் ஆனார் தனலஷ்மி. இந்தச் சண்டை இடம் பெயர்ந்து ஷிவினுக்கும் தனலஷ்மிக்குமாக மாறியது. “உன் அணிக்காக சில விஷயங்களை நீ செஞ்சுதான் ஆகணும்” என்று ஷிவின் சொன்னதை மறுத்து கத்திக் கொண்டிருந்தார் தனலஷமி.

பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ்
பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ்
ஆக.. இந்த ‘விவாத மேடை’ அடுத்த எபிசோடிலும் தொடருமா என்று தெரியவில்லை. அதிலும் சத்தம் அதிகமாக வந்தால் ‘இந்த டிவி’ ‘அந்த டிவி’ ஆகிய இரண்டையும் புறக்கணித்து விட்டு, ரிமோட்டை எடுத்து கைக்கு ‘வந்த’ டிவியை பார்க்க வேண்டியதுதான். முடியல மக்களே!