விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 முடிவடைந்ததைத் தொடர்ந்து வரும் ஞாயிற்றுக் கிழமை முதல் டிஸ்னி பளஸ் ஹாட் ஸ்டாரில் தொடங்க இருக்கிறது பிக் பாஸ் அல்டிமேட். ஒ.டி.டி.யில் முதன் முதலாக ஒளிபரப்பாக இருக்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் உறுதி செய்யப்பட்ட ஓவியா, ஜூலி உள்ளிட்ட ஆறு போட்டியாளர்களின் பட்டியலை ஏற்கெனவே கடந்த வாரம் வெளியிட்டிருந்தோம். தற்போது மேலும் சில போட்டியாளர்களின் பட்டியல் நம்பகமான சோர்ஸ் மூலம் நமக்குக் கிடைத்திருக்கிறது. யார் யார் பார்க்கலாமா?

தாடி பாலாஜி
பிக் பாஸ் இரண்டாவது சீசனின் போட்டியாளர். அந்த சீசனுக்குள் செல்வதற்கு சில மாதங்களுக்கு முன்புதான் இவர் பத்திரிக்கைகளின் பரபரப்புச் செய்தி ஆனார். காரணம், இவருக்கும் இவரது மனைவி நித்யாவுக்குமான குடும்பப் பிரச்னை கோர்ட்டுக்கு வந்தது. பரஸ்பரம் இருவரும் மாற்றி மாற்றிப் புகார் வாசித்தார்கள்.
பார்த்தது சேனல். ‘பேசாமல் இருவரையும் சேர்த்து அந்த வீட்டுக்குள் அனுப்பினா என்ன’ என நினைத்தது. பாலாஜியின் மனைவி நித்யாவும் சம்மதம் தெரிவிக்க இருவருமே போட்டியாளர்களாக உள்ளே சென்றார்கள். ஆனால் நித்யா சேனல் எதிர்பார்த்த அளவுக்கு கண்டென் தரவில்லை. கடைசியில் ’பிரிந்திருந்த இந்த தம்பதியினர் சேர்ந்து விட்டனர்’ எனக் கமல் முன்னிலையில் அறிவித்து நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்கள். ஆனால் இப்போது வரை இருவரும் தனித்தனியேதான் வசித்து வருகிறார்கள். இந்தச் சூழலில் தற்போது பாலாஜி பிக் பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொள்கிறார். இந்த தடவையும் நித்யாவைக் கூப்பிடுவார்களா, கூப்பிட்டால் அவர் போவாரா என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பரணி
’எதையுமே வெள்ளந்தியாப் பேசற டைப் நான். அந்த வீட்டுக்குள் ஒரு சிலரைத் தவிர பலரும் போலியாத்தான் திரிஞ்சிட்டிருந்தாங்க. அதனாலதான் என்னால தாக்குப் பிடிக்க முடியலை. இயல்புக்கு மாறா இருக்க என்னால் முடியலை. ராத்திரி படுத்தா தூக்கம் வரலை. அதனாலதான் 14வது நாள் வெளியில வந்துட்டேன்’ தன்னுடைய பிக் பாஸ் அனுபவம் குறித்து இப்படிப் பேசியிருந்த பரணியிடம் என்ன பேசி சம்மதிக்க வைத்தார்களோ , அல்டிமேட்டுக்குள் இவரும் செல்வாரெனத் தெரிகிறது. ஆனால் முதல் நாளிலேயே செல்லாமல் சில தினங்கள் தாமதமாகச் செல்ல அனுமதி கேட்டிருப்பதாகச் சொல்லப் படுகிறது.
ஷாரிக்
நடிகர் ரியாஸ் கான் – உமா ரியாஸ் தம்பதியினரின் மகன். சில படங்களிலும் நடித்திருக்கிறார். இவரும் பிக் பாஸ் 2வது சீசன் போட்டியாளரே.

அபிநய்
நடிகர் ஜெமினி கணேசனின் பேரன். சில தினங்களுக்கு முன் முடிந்த பிக் பாஸ் 5வது சீசனின் போட்டியாளர். முடிந்த சீசனில் ஓரளவுக்கு நல்லபடியாக விளையாண்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
அனிதா சம்பத்
சன் டிவியில் செய்தி வாசித்துக் கொண்டிருந்தவரைக் கூட்டி வந்து பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக இறக்கி விட்டார்கள். இவரும் 84 நாட்களை அந்த வீட்டுக்குள் கடத்தி விட்டுத்தான் வெளியேறினார்.
மேற்கண்ட இவர்கள் அனைவரும் நிகழ்ச்சிக்குள் செல்ல ஆயத்தமாகி விட்டதாகக் கூறப்படுகிறது.
இவர்களைத் தவிர, சுஜா வருணி, ஷெரின், 4-வது சீசனின் ரன்னரான பாலாஜி முருகதாஸ் ஆகியோருக்கும் எந்த நேரமும் தயாராக இருக்குமாறு சொல்லப் பட்டிருக்கிறதாம்.