Published:Updated:

சென்றாயா... இந்த கட்டிப்பிடி சேட்டைகளுக்குத்தான் சென்றாயா?! #BiggBossTamil2

சுரேஷ் கண்ணன்
சென்றாயா... இந்த கட்டிப்பிடி சேட்டைகளுக்குத்தான் சென்றாயா?! #BiggBossTamil2
சென்றாயா... இந்த கட்டிப்பிடி சேட்டைகளுக்குத்தான் சென்றாயா?! #BiggBossTamil2

பாலாஜி மற்றும் நித்யா ஆகியோர் எதற்காக பிக்பாஸ் போட்டியாளர்களாக சேர்க்கப்பட்டார்களோ, அந்த நோக்கத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார், பிக்பாஸ். இந்த வீட்டின் பெரும்பாலான சர்ச்சைகளும் உரையாடல்களும் இவர்களையே மையமாகக்கொண்டிருக்கின்றன. ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சிபோல, இந்த விஷயத்துக்காக ஆளாளுக்கு ‘கவுன்சலிங்’ தந்து கொண்டேயிருக்கிறார்கள். இப்படி ஒருபக்கம் இருக்க, சென்றாயனை வைத்து ' சென்றாயா சென்றாயா ' என செந்தூரா பாடல் அளவுக்கு கட்டிப்பிடிகளும் அரங்கேறத்தான் செய்தன. 

மனைவியின் அருகில் இருக்கும்போது ‘நினைவெல்லாம் நித்யா’ என்பதுபோல் நட்பாக பேசும் பாலாஜி, இந்தப் பிரச்னையைப் பற்றி மற்றவர்களிடம் பேசும்போது வேறு முகம் காட்டுகிறார். ஆனால், இந்த விவாகரத்தை வைத்தே நிகழ்ச்சியை ஓட்டிக்கொண்டிருந்தால் சலிப்பாகிவிடும். வரும் நாள்களில், இவர்களின் குழந்தையை வீட்டுக்குள் அழைத்து வந்து எப்படியும் ஒரு சென்ட்டிமென்ட் ‘எபிஸோடை’ தேற்றி விடுவார்கள் என்று தோன்றுகிறது. 

மூன்றாம் நாள் இன்னமும் முடியவில்லை. நிலவில் வடை சுடும் பாட்டி மாதிரி, இருட்டில் சமையல் செய்துகொண்டிருந்தார், மும்தாஜ். நித்யாவின் புகார்களையடுத்து அடுத்த நாள் காலை உணவுக்கான ஏற்பாடுகளை அப்போதே செய்கிறாராம். உணர்ச்சிவசப்பட்டு உடனே அழுவது, காக்கை, எறும்புக்கெல்லாம் உணவளிக்கும் ஜீவகாருண்யம் போன்றவற்றின் மூலம் தன்னைப் பற்றிய நேர்மறையான பிம்பத்தை பார்வையாளர்களிடம் மும்தாஜ் விதைக்க முயல்கிறாரா, அல்லது இதுவேதான் இவரது இயல்பான குணாதிசயமா என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் கேமரா முன்னால் கொஞ்சிப் பேசும் கொடூர பழக்கத்தை மட்டும் விட்டுவிடுங்கள் மேடம். முடியல. 

நான்காம் நாள் காலை. 

‘ஓம்……..’ என்கிற ரீங்காரத்துடன் தியானம் செய்துகொண்டிருந்தார், அனந்த் வைத்தியநாதன். அவருடைய தவத்தை கொலைவெறியுடன் கலைப்பது போல.. ‘ஒரு குச்சி.. ஒரு குல்பி..’ என்கிற குத்துப்பாடல் ஆவேசமாக ஒலிக்க ஆரம்பித்தது. பாவம் மனிதர் நொந்திருப்பார். 

காலையிலேயே சமையல் டீம், நித்யா – மும்தாஜ் உரசல் துவங்கியது. ‘என்னை விட்டுடும்மா. கண்ணைக் கட்டுது..முடியல’ என்று எஸ்கேப் ஆனார் மும்தாஜ். ‘சிக்கன் வேணும்… பிக்பாஸ்… குக்குக்கூ…’ என்று தனது மழலை மொழியில் கூவியது ஐஸ்வர்யா குயில்.  

அதிகம் பேசாத மெளனிகா… ச்சே.. ரித்விகா, முதல் சீஸனின் எபிஸோடுகளையெல்லாம் ‘ஓவர்டைம்’ போட்டு பார்த்து தயாராகி வந்திருக்கிறார் போலிருக்கிறது. ‘லக்ஸரி பட்ஜெட்’ அறிவிக்கப்படும்போது, குறுகிய நேரத்தில் எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என்கிற டிப்ஸ்களை அள்ளி வழங்கிக்கொண்டிருந்தார். 

தன்னுடைய விவகாரத்தைப் பற்றி அனந்த் வைத்தியநாதனிடம் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார், பாலாஜி. அல்லது இவருடைய வாயை, ‘Voice Expert’ அனந்த் கிண்டுகிறாரா என்று தெரியவில்லை. அவை உண்மையோ அல்லது பொய்யோ, ஒரு தம்பதிக்குள் நிகழ்ந்த சர்ச்சையான விஷயங்களைப் பற்றி, தனக்குச் சாதகமான பிம்பம் உருவாகும்படி மற்றவர்களிடம் ஒருவர் தொடர்ந்து பேசுவது முறையற்றது. பாலாஜி அதைத்தான் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார். ``அப்பவே சொன்னேன், பொண்ணை கொடைக்கானல் ஸ்கூல்ல சேர்த்துடலாம். அது பாட்டுக்கு படிச்சிட்டிருக்கும்னு. இப்ப அதுக்கும் அந்த ரகசியம் (?!) தெரிஞ்சிடுச்சு. நீங்க வேணா பாருங்க.. நாங்க… வெளிய போகும்போது ‘அப்பாதான் வேணும்-னு என் கிட்ட ஓடி வந்துடுவா’ என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார், பாலாஜி. 

க்ளீனிங் டீமில் சேர்த்துவிட்டதாலேயோ என்னவோ, பொதுவாகவே சோர்ந்து காணப்படுகிறார் யாஷிகா. துவக்க நாளின் உற்சாகங்கள் குறைந்துவிட்டன. 

பாலாஜியின் காமெடி சென்ஸ் அவ்வப்போது பளிச்சிடுவது சிறப்பு. ``இங்க இருந்து போறதுக்கு முன்னாடி உன் வாழ்க்கைல விளக்கு ஏத்தி வெச்சிட்டுதான் போவேன்’ என்று மஹத்திடம் எதற்கோ உறுதியளித்துக்கொண்டிருந்தார். மஹத் ஏதோ சொல்ல வர, ‘விளக்கை அணைக்கறதுக்குத்தான் உதவி பண்ணணும்ங்றியா,’ என்று வாரினார். “இல்ல.. கேமரா இல்லாத இடமா ஒண்ணு செட் பண்ணித் தாங்களேன்’ என்று வில்லங்கமாக ஜோக் அடித்தார், மஹத். 

மமதியும் மும்தாஜூம் பரஸ்பரம் அடிக்கடி கொஞ்சிக்கொள்வது அவர்களுக்கு நல்ல விஷயம்தான். ஆனால், பார்க்கும் நமக்குத்தான் கடுப்பாகி விடுகிறது. ‘ஆர்டின்’ வடிவத்தில் ஒரு சப்பாத்தியை செய்ய முயன்றார் நித்யா. ‘அது பாலாஜிக்குத்தான்’ என்று மற்றவர்கள் கலாட்டா செய்துகொண்டிருந்தார்கள். 

அனந்த் வைத்தியநாதன் தந்த பயிற்சியை இன்னமும் கைவிடாமல் கொலைவெறியுடன் பின்பற்றுகிறார், பொன்னம்பலம். அவருக்குள் இருந்த பாடகன், நடனக்கலைஞன் ஆகியோர் வெளிப்பட்டதைத் தொடர்ந்து, இன்று ‘கவிஞனும்’ வெளிப்பட்டுவிட்டான். ‘சென்றாயா’ என்று சென்றாயனை வைத்து சிலேடையில் பாட்டெல்லாம் பாடி அசத்தினார். அவருக்குள் இன்னமும் எத்தனை ‘ரூபங்கள்’ இருக்கின்றனவோ என்று கலவரமாக இருக்கிறது. 

பெண்களின் கண்ணீர் எத்தனை வலிமையான ஆயுதம் என்பது மறுபடியும் நிரூபிக்கப்பட்டது. ‘ம்ம்…. என்னை அடிச்சிட்டான்’ என்கிற குழந்தைகளின் பொய் அழுகை மாதிரி, டேனியால் பாதிக்கப்பட்டது போல் அழுது நடித்து விளையாடினார், வைஷ்ணவி. வீடே பரபரப்பாகி, பின்பு விஷயம் புரிந்து சிரிக்க ஆரம்பித்தது. டேனியும் சற்று ஜெர்க் ஆகிவிட்டார். பாவம், பொழுது  போகாமல் அவர்களும் என்னதான் செய்வார்கள்? ஆனால், குழந்தைகளின் விளையாட்டை பெரியவர்கள் செய்யும்போது சற்று கடுப்பாகத்தான் இருக்கிறது. வைஷ்ணவியிடம் லேசாக ஜூலி குணாதிசயத்தின் சாயல் இருக்கிறது. ஒரு பிரச்னையைப் பற்றி தனியாக பேசி திரிக்கும்போது ‘அது வந்துக்கா….’ என்ற ஜூலியை நினைவுப்படுத்துகிறார். அப்படி இல்லையென்றால் மகிழ்ச்சி.

சென்றாயனை, அணைப்பதுபோல் துரத்தி துரத்தி கலாட்டா செய்துகொண்டிருந்தனர் யாஷிகாவும் ஐஸ்வர்யாவும். விலகிச் சென்றால்தான் இன்னமும் அதிகமாக விளையாடுவார்கள் என்றோ என்னமோ, தப்பித்து ஓடி மகிழ்ந்தார் சென்றாயன். சென்றாயா, இந்த அதிர்ஷ்டத்துக்குத்தான் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றாயா?

லக்ஸரி பட்ஜெட்டின் அடுத்த டாஸ்க். ‘யாரென்று தெரிகிறதா?” போட்டியாளர்கள் இரண்டு அணிகளாகப் பிரிய வேண்டும். ஒரு அணி, தங்கள் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி ஒன்றைப் பற்றி எழுத வேண்டும். ‘எழுதப்பட்ட விதத்தை வைத்து” அது எவரால் எழுதப்பட்டது என்பதை மற்ற அணி சரியாக கண்டுபிடிக்க வேண்டும். 

போட்டியாளர்கள் மும்முரமாக எழுதிக்கொண்டிருந்தனர். ஐஸ்வர்யா left hander என்கிற முக்கியமான விஷயம் நமக்குத் தெரிய வந்தது.. ‘தத்தக்கா பித்தக்கா’ தமிழில் அவர் எழுதியதை வைத்து எதிர் அணியினர் உடனே கண்டுபிடித்து விட்டனர். அவர் எழுதியது, இளம் பருவத்தில் வீட்டின் வறுமையோடு தொடர்புடைய ஒரு சம்பவம்’. சற்று உணர்ச்சிகரமானதுதான். 

ஆனால், அவர் எழுதிய மழலைத் தமிழ் காரணமாக நகைச்சுவையாக பார்க்கப்பட்டது. தன்னுடைய பதிவு மற்றவர்களால் விளையாட்டாக அணுகப்படுவதை சற்று வருத்தத்துடன் கவனித்துக்கொண்டிருந்தார் ஐஸ்வர்யா. அவருக்குள் இருந்த குழந்தைத்தனம் மறைந்த தருணம் அது. இந்த விஷயத்தை அப்படி விளையாட்டாக கையாண்டதற்காக மற்றவர்கள் மன்னிப்புக் கேட்டனர். மும்தாஜ் கலங்கியே விட்டார். இதைப் போலவே சென்றாயனின் கதையைக் கிண்டலடித்த மமதியும் தனியாகச் சென்று மன்னிப்புக் கேட்டார். 

நேற்று நிகழ்ந்த ‘வெங்காய’ சர்ச்சை, இன்று ‘ரசம்’ வடிவில் வந்தது. ஆனால் பெரிதாகாமல் அடங்கியது, நாம் செய்த துர்பாக்கியம். மற்ற உணவு ஒத்துக்கொள்ளாது என்பதால், தனக்கு ‘ரசம்’ வேண்டும் என்று பாலாஜி கேட்டாராம். ஒருவருக்கு மட்டும் தனியாக சமையல் செய்ய முடியுமா என்கிற ஆட்சேபனை எழுந்தது. ‘நான் வைத்துத் தருகிறேன், விடுங்கள்’ என்று ஆட்டத்தைக் கலைத்தார் மஹத். ஆண்களின் பெருந்தன்மையைால்தான் உலகில் பல பிரச்னைகள் சுமுகமாக முடிகின்றன.

தமிழ் சினிமா பாடல்களை வைத்து பாலாஜியைக் கலாட்டா செய்தார் ஐஸ்வர்யா.. ‘வாடி.. வாடி.. ஹாட் பொண்டாட்டி..’ ‘பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா’ ‘ஒன்றா.. ரெண்டா.. ஆசைகள்’ என்று வெவ்வேறு தருணங்களுக்கான பாடல்களைப் பொருத்தமாகத் தேர்ந்தெடுத்து பாடினார். அதிலும் ‘நீதானே.. நீதானே… என் நெஞ்சை தட்டும் சத்தம்’ பாடலை பாடியபோது, இனிமையாக இருந்தது, திடீர் ஆச்சர்யம். கான்வென்ட் பேபிக்குள் இப்படியொரு கல்பனா அக்காவா?

சமையலுக்கான பொறுப்பில் இருப்பவர்கள்தான் ‘லக்ஸரி பட்ஜெட்’டில் பொருள்களைத் தேர்ந்தெடுக்கும் முன்னுரிமையை அடைய வேண்டும் என்று மும்தாஜ் சொல்லியது சரியான விஷயம். 

‘வாடா.. வாடா..’ விளையாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது, மஹத், யாஷிகா, ஜஸ்வர்யா கூட்டணி. இரண்டாவது ‘வாடா’வை ஹஸ்கியான தொனியில் சொல்லி கூடுதல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்திவிட்டார் அனந்த் வைத்தியநாதன். கொஞ்ச நேரம் இந்த கவர்ச்சியான விளையாட்டு ஓடியது. இந்தச் சமயம் பார்த்து சற்று தூரத்தில் இருந்த மஹத்தை, பாலாஜி ‘வாடா’ என்று யதேச்சையாக கூப்பிட ‘அவனா நீயி’ என்று இந்த சூழல் ரகளையான காமெடியாக மாறியது. 

இந்த வாரம் எலிமினேஷன் இல்லையென்பது பார்வையாளர்களுக்குத் தெரிந்தாலும், போட்டியாளர்களுக்குத் தெரியாது என்பதால் அது குறித்த கவலையுடன் பேசிக்கொண்டிருந்தனர். நாமினேஷன் பட்டியலில் மும்தாஜ் இருப்பது, வீட்டின் தலைவியான ஜனனிக்கே நினைவில் இல்லை. ‘அப்படியா?’ என்று ஆச்சர்யமாக கேட்டுக்கொண்டிருந்தார். இந்தத் தலைவர்களே இப்படித்தான் எஜமான். 

மீட்டிங்கிற்காக வீட்டின் உறுப்பினர்களை ஜனனி அழைத்தபோது சிலர் தாமதமாக வந்ததால், லக்ஸரி பட்ஜெட்டின் மதிப்பெண்கள் குறைக்கப்படுவதாக பிக்பாஸ் அறிவித்தார். இதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சியானார்கள். அதற்கு சற்று நேரம் முன்னால்தான், கடைசியாக வந்த சென்றாயனை, மும்தாஜூம் மமதியும் ஜனனியும் இணைந்து கரித்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், தாமதமாக வந்தவர்களின் பட்டியலில் தங்களின் பெயர்களைக் கேட்ட மும்தாஜூம் மமதியும் ஜெர்க் ஆனது காமெடி. மற்றவர்களைக் குறை சொல்வதற்கு முன் தாம் சரியாக இருக்கிறோமா என்று பார்த்துக்கொள்வது நல்லது. 

சென்றாயனின் சுருள்முடி தலையை நேராக்கித் தீர்வது என்கிற விபரீதமான விளையாட்டை ஆட முடிவு செய்தார்கள். காது குத்து விழா போல குதூகலமாக நடந்த இந்த விழாவில், குழந்தைபோல அடம்பிடித்த சென்றாயனை கோழியைப் போல அமுக்கினார்கள். சென்றாயனுக்கு மாற்றப்பட்ட சிகையலங்காரம், வித்தியாசமான தோரணையைத் தந்ததுதான் என்றாலும், சுருள்முடிதானே அழகு? கடந்த சீஸனில் வையாபுரியை அலங்கரித்து அழகு பார்த்தது போல், இம்முறை சென்றாயனுக்கு ஜெர்கின் போட்டு உலா வரவைத்தார்கள். அவரோ மும்தாஜூடன் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் நின்று நடனமாடி விட்டு ‘நான் மும்தாஜூடன் ‘டூயட்’ பாடிவிட்டேன் என்று அகமகிழ்ந்து போனார். 

ஷாரிக்கை பார்க்கும் போதெல்லாம் மும்தாஜின் உறவுக்காரப் பையன் ஒருவனின் நினைவு வருகிறதாம். ஷாரிக் அச்சு அசலாக அவனைப் போலவே இருக்கிறானாம். அந்த நினைவில் குலுங்கி குலுங்கி அழுதார் மும்தாஜ். 

பாலாஜிக்கும் நித்யாவுக்கும் இடையில் ‘சமரச தூதுவராக’ இயங்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தார் அண்ணன் சென்றாயன். பாலாஜி தனக்கு நிகழ்த்திய விபரீதமான கொடுமைகளை, அவதூறுகளை வேதனையுடனும் துயரத்துடன் தெரிவித்தார் நித்யா. 

கணவன் –மனைவி பிரச்னை, கிராமத்தைவிட நகரத்தில் அதிகமாக இருப்பதாக ஒரு கருத்தை தெரிவித்தார் சென்றாயன். அதற்கு புத்திசாலித்தனமானதொரு எதிர் கருத்தை சொன்னார் நித்யா. ‘கிராமத்திலுள்ள பெண்கள் பொருளாதார ரீதியாக கணவனைச் சார்ந்திருப்பதால், வேறு வழியில்லாமல் கணவனின் கொடுமைகளைச் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால், நகரத்துப் பெண்கள் பணிபுரிவதின் மூலம் பொருளாதார சுதந்திரம் அடைந்திருப்பதால் எதிர்த்துக் கேள்வி கேட்கிறார்கள். இதை சகித்துக்கொள்ள முடியாத கணவர்களால் பிரச்னை உருவாகிறது” என்றார். சரியான பார்வை. 

பாலாஜியின் பிரச்னையைப் பற்றி அவரிடம் உரையாடிக்கொண்டிருந்தார் மமதி. தன் மனைவியைப் பற்றி பாலாஜி அலட்சியமாக ஏதோ சொல்ல, ‘அப்படி என்கிட்ட சொல்லாதீங்க. உங்க மனசுல வேணா நெனச்சுக்கங்க’ என்று விநோதமான வழிமுறை ஒன்றைச் சொன்னார் மமதி. கமலைப் போலவே இந்த மமதி பேசுவதும் நடப்பதும் பல சமயங்களில் புரிவதில்லை.

லக்ஸரி பட்ஜெட்டுக்கான அடுத்த டாஸ்க் அறிவிக்கப்பட்டது. உறுப்பினர்கள், இரண்டு பேர் கொண்ட அணியாக பிரிய வேண்டும். வைக்கப்பட்டிருக்கும் உறைகளைப் பிரித்து படிக்க வேண்டும். அவரவர்களின் துரதிர்ஷ்டங்களின் படி விநோதமான தண்டனைகள் அதில் இருக்கும். அதற்கு அடையாளமாக ஒரு தமிழ் சினிமா பாடலும். 

டேனி – யாஷிகா கூட்டணிக்கு கிடைத்தது ஒரு மூட்டை வெங்காயம் நறுக்கும் பணி. (மறுபடியும் ‘வெங்காயமா?’ தாங்கமுடியாது குருநாதா!) அதற்கு அடையாளமான பாட்டு ‘சோதனை மேல் சோதனை’. 

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

அவரவர்களின் பாடல் ஒலிக்கும்போதெல்லாம் அவர்களுக்கான கொடுமைகள் நிகழும்.  பொன்னம்பலம் - நித்யா கூட்டணியை கவுண்டமணியின் 'எம் வெரி ஹேப்பி வசனத்தை ஸ்பீக்கரில் ஒலிக்கவிடும்போது மற்ற ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் சேர்ந்து நீச்சல் குளத்துக்குள் தூக்கி வீச வேண்டும். மும்தாஜ் - பாலாஜி கூட்டணி, பின்னணியில் குழந்தை அழும் சத்தம் கேட்டவுடன்  போட்டியாளர்களிடம் குழந்தைத் தனமாக நடந்துகொள்ள வேண்டும் (இதென்ன பிரமாதம் இதைவிட ஸ்பெஷல் ஐட்டம் ஒண்ணு இருக்கும்). கோழி கூவும் சத்தம் கேட்டதும், ரித்விகா - சென்றாயன் மீது மற்ற போட்டியாளர்கள் மீது முட்டை அடிக்க வேண்டும். இந்த டாஸ்க்கை வாசித்தவுடன் மற்ற போட்டியாளர்கள் 'ஜாலி' மோடுக்கு போய்விட்டனர். இந்த முட்டை என்கிற வஸ்து பிக்பாஸ் வீட்டை பாடாய்ப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஒரு முட்டையை வைத்து ஓதி விட்டால் வீட்டின் திருஷ்டி கழியக்கூடும். சென்றாயன் ஸ்ட்ரெயிட்னிங் பண்ணது பிக் பாஸுக்குப் பிடிக்கலையோ?

ஆக.. இந்த விநோதமான விளையாட்டை வைத்து நாளைய பொழுதை ஓட்டுவார்கள் என்று தெரிகிறது. அதை வைத்து ஏதாவது சண்டை நிகழலாம். அதையும்தான் பார்ப்போம்.