Published:Updated:

'பஞ்சாயத்தெல்லாம் நித்யா!' - கச்சிதமாகக் கையாண்ட 'குட்பாஸ்' கமல் #BiggBossTamil2

சுரேஷ் கண்ணன்
'பஞ்சாயத்தெல்லாம் நித்யா!' - கச்சிதமாகக் கையாண்ட 'குட்பாஸ்' கமல் #BiggBossTamil2
'பஞ்சாயத்தெல்லாம் நித்யா!' - கச்சிதமாகக் கையாண்ட 'குட்பாஸ்' கமல் #BiggBossTamil2

இன்று கமலின் பஞ்சாயத்து தினம். எதிர்பார்த்ததைப் போல  ‘வெங்காயம்’ CoPowered by நித்யா தான்  பஞ்சாயத்தின் மையமாக இருந்தது.

 ‘உன் கண்ல தெரியற பயத்தை உனக்கே மெல்ல மெல்ல அறிமுகப்படுத்துகிறேன்’ என்று ‘குருதிப்புனல்’ திரைப்படத்தில் ஒரு வசனம் பேசுவார் கமல். அதைப் போல, ஒரு வழக்கறிஞருக்கே உரிய சாமர்த்தியத்துடன், பிரச்னையில் சம்பந்தப்பட்டவர்களுடன் உரையாடி, அவர்களை மெல்ல மெல்ல நகர்த்திச் சென்று பிரச்னையின் மையம் என்ன என்பதை அவர்களையே உணர வைத்தார். ஆனால் இதில் சில பிசிறுகளும் இருந்தன என்பது என் பார்வை. விரிவாகப் பார்ப்போம். 

பார்வையாளர்கள் ஆர்ப்பரிக்க அட்டகாசமான உடையுடன் நுழைந்தார் கமல். “போன பிக்பாஸ்ல பார்த்த அதே வீடுதானே-ன்னு நெனச்சிருப்பீங்க. ஆனா உள்ள விஷயங்கள் எப்படில்லாம் திரும்புது பார்த்தீங்களா? சின்ன சின்ன விஷயங்கள்ல குழம்பறாங்க. எடிசன் பல்பை கண்டுபிடிச்சதும் பகல் – இரவு –ன்ற பிளவில் மாற்றம் ஏற்பட்டது. இரவு பகல் ஆனதால் அந்தச் சமயத்தில் சிலருக்கு மனபாதிப்பு ஏற்பட்டதுன்னு கூட சொல்றாங்க. ஆனால் கல்வி பெருகிய நல்ல விஷயங்களும் நடந்தது.” 

கடந்த சீஸனில் ‘அகம் டிவி’யாக இருந்ததை ‘அகக்கண்’ என்று பெயர் மாற்றம் செய்த கமல், இந்த வாரம் என்ன நடந்தது என்பதை சுருக்கமாகப் பார்ப்போம் என்றார். அதைத் தொடர்ந்து Recap ஒளிபரப்பானது. சனி மற்றும் ஞாயிறு மட்டும் பார்ப்பவர்களுக்கு ஒரு வாய்ப்பு. கடந்த சீஸனில் ஒரு விசையை அழுத்தி எதிரேயிருக்கும் திரையை உயிர்க்கச் செய்வார் கமல். இம்முறை அந்த மாதிரி பில்டப்பெல்லாம் இல்லை.

 அடுத்தது, ஆறாம் நாளில் நிகழ்ந்த சம்பவங்கள் ஒளிபரப்பாகின. ‘கருத்தவன்லாம் கலீஜாம்’ என்கிற ரகளையான பாடல் ஒலிபரப்பாகியது. நாமினேஷன் பற்றிய யோசனை, Task-களின் மூலமான சோர்வு ஆகிய காரணங்களால் உற்சாகம் குறைவாக இருந்தது. ஐஸ்வர்யா வழக்கம் போல் உற்சாகத்தை இழக்காமல் ஆடினார்.

\

கிச்சன் ஏரியாவில் வாஸ்து சரியில்லை போல. அங்குதான் பெரும்பாலான பிரச்னைகள் உருவாகின்றன. காலையிலேயே எழுந்து விடுவதால் பசியோடு இருந்த அனந்த் வைத்தியநாதன், சமையலை கிச்சன் டீமில் இல்லாதவர்களும் செய்யலாமா? என்றொரு கருத்தை முன்வைக்க ஜனனியுடன் வாக்குவாதம் நிகழ்ந்தது. கிச்சனில் இருக்க வேண்டிய மும்தாஜ், ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருந்ததையும் அனந்த் சுட்டிக் காட்டினார். தான் ‘பாட்டுக்கு’ இருந்து கொண்டு டென்ஷனே ஆகாத மனுஷனையும் பிக்பாஸ் வீடு விட்டு வைக்கலை.

ஐஸ்வர்யா அணிந்திருந்த உடை விவகாரமாக இருந்தது போல. இதைப் பற்றி மெல்லிய எச்சரிக்கை தந்தார் ஜனனி. ஆனால் இளம் தலைமுறையினருக்கேயுரிய பிடிவாத மனப்பான்மையுடன் ‘என்ன ஆடை உடுத்தறேன்னு எனக்குத் தெரியும். Don’t comment’ என்றார் ஐஸ்வர்யா. ‘அவ நல்லதுக்குதானே சொல்றேன். புரிஞ்சுக்காம என்னைத் திட்டறாளே!” என்ற வேதனையில் அழுதார் ஜனனி. ஒரு தலைவி இப்படி ‘பொசுக் பொசுக்’ என்று அழலாமா? ‘விட்றா சூனா பானா’ ன்னு பஞ்சாயத்தைக் கலைச்சுட்டு போயிட்டே இருக்கணும். பிறகு ஐஸ்வர்யா தாமாக முன்வந்து மன்னிப்பு கேட்டு ‘லவ்யூ’ சொன்னவிதம் அத்தனை க்யூட்டாக இருந்தது. 

வெவ்வேறு கலாச்சார பின்னணிகளில் இருப்பவர்களின் உரசல் என்றுதான் இதைப் பார்க்கத் தோன்றுகிறது. உடை அணிவது ஒருவரின் தனிப்பட்ட தேர்வு. தவறாக பார்ப்பவர்கள்தான் தங்களின் பார்வையை மாற்றிக் கொள்ள வேண்டும், மாறாக உடையணிபவர்களின் சுதந்திரத்தில் தலையிடக்கூடாது என்கிற முதிர்ச்சி இங்கு இன்னமும் பரவவில்லை. 

‘நானா ஒண்ணும் உன்னை வார்ன் பண்ணலை. ஒரு பையன் வந்து சொன்னான். அதனால்தான்” என்றும் சொன்னார் ஜனனி. யார்ப்பா இத்தனை அக்கறையோடு சொன்ன பையன்? ஷாரிக்?

யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் அவ்வப்போது தனியாலோசனைகளில் ஈடுபடுகிறார்கள். ‘அவங்கள்லாம் நிறைய கேம் ஆடறாங்க. நீ நீயா இரு” என்று உபதேசம் செய்து கொண்டிருந்தார் யாஷிகா. 

பொன்னலம்பத்தைத் தொடர்ந்து நித்யாவிற்கு பாட்டுப் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார் அனந்த் வைத்தியநாதன். இனி நித்யா மும்தாஜிடம் வசனங்களின் மூலமாக அல்லாமல் பாடலாக சண்டை போடும் விபரீதங்களையெல்லாம் பார்க்க வேண்டும் போல. ‘நீ பாடி கிழிச்சது போதும். பூண்டு உறிக்கற வேலையை அதிகம் கலீஜ் இல்லாம பண்ணு” என்பது போல அங்கு வந்தார் மும்தாஜ். வழக்கம் போல் உரசல் ஏற்பட, ‘நானே பண்ணிக்கறம்மா நீ கிளம்பு” என்று நித்யாவை கும்பிடு போட்டு அனுப்பி வைத்தார். 

சக போட்டியாளர்களின் தோரணையை நக(க்)ல் செய்து மற்றவர்களை சிரிக்க வைத்துக் கொண்டிருந்தார் டேனி. ‘பிக்பாஸை’ காதலிக்கும் ஐஸ்வர்யாவின் சேஷ்டைகளை செய்து காண்பிக்க, மற்றவர்கள் சிரித்து தீர்த்தனர். 

முன்பே நினைத்தது போல இந்த சீஸனின் ஆரவ் – ஓவியா –வாக, ஷாரிக் - ஐஸ்வர்யா இருப்பார்கள் என்று தோன்றுகிறது. (போஸ்ட்டர் ஒட்டலை ஆண்டவரே... ஒரு தோராயமான ஒப்பீடுதான்). 

இரவு நேரத்தில் இருவரும் தனிமையாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். 'உன்னைப் பிடிச்சிருக்கு’ என்று சினிமாத்தனமாக சொன்னார் ஷாரிக். அதை ஐஸ்வர்யாவும் வழிமொழிந்தார் என்றுதான் தோன்றுகிறது. ‘யாஷிகா கிட்டயும் சொல்லிட்டு இருந்தேன். ஷாரிக் ரொம்ப நல்ல ‘டைப்’னு. எனக்கு பொறுப்புகள் இருக்கு. உனக்கும் அழகான குடும்பம் இருக்கு. எங்க குடும்பத்திற்கு என்னோட தேவை இருக்கு” என்றெல்லாம் பதில் சொன்னார் ஐஸ்வர்யா.

ஆண் தன்னை மட்டும் முன்னிலைப்படுத்தி பேசும் போது, பெண் இரண்டு குடும்பங்களின் நிலைமையையும் இணைத்து, யதார்த்தத்துடன் பேசியதில் இருந்து இரண்டு பாலினங்களுக்கும் உள்ள அடிப்படையான பார்வை வேறுபாட்டை புரிந்து கொள்ள மறுபடியும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. சந்தித்த ஐந்தாவது நாளிலேயே வருவதெல்லாம் காதலாக இருக்குமா? அல்லது இனக்கவர்ச்சியா? கடந்த சீஸனில் ஒவியா பின்னர் உணர்ந்தது போல்,  ஐஸ்வர்யாவும் பின்னர் உணர்வாரா? அல்லது கண்டதும் காதல் வகையறாவாக இறுக்கிக் கொள்வாரா என்பதை காலம்தான் சொல்லும்.

ஆறாம் நாளின் சம்பவங்கள் முடிய கமல் மறுபடியும் வந்தார். 

சென்றாயனை கடந்த சீஸன் பரணியோடு ஒப்பிட்டு ஒரு பார்வையாளர் கேள்வி கேட்டார். ‘உங்களுக்கெல்லாம் ஒரு வேண்டுகோள். ஆலோசனைன்னும் வெச்சுக்கங்க. போஸ்டர் மேல போஸ்டர் ஒட்டலாம். ஆனால் ஒரு மனித முகத்தின் மேல் இன்னொரு மனிதரை ஒட்டாதீங்க. கைரேகையைப் போல இந்த உலகத்தில் உள்ள அனைவருக்கும் ஒரு தனித்தன்மை இருக்கு. அந்தப் பார்வையோடு பார்த்தால் இந்த நிகழ்ச்சி சுவாரசியமா அமையும்” என்கிற அவரது கருத்து சரியானது. 

‘சீஸன் ஒண்ணு பார்த்துட்டு safe-ஆ ப்ளே பண்றாங்களே’ என்று இன்னொரு கேள்வி. “எத்தனை நாளைக்கு பிளாட்பாரம் மேலயே நடக்க முடியும். ரோட்டை கிராஸ் பண்ணிதானே ஆகணும்” என்றார் கமல். 

அகக்கண் வழியாக போட்டியாளர்களை சந்தித்த கமல், “இதுவரையான அனுபவம் எப்படியிருந்தது சொல்லுங்க” என்று பாலாஜியில் இருந்து துவங்கினார். ‘வித்தியாசமான அனுபவம். வித்தியாசமான மனிதர்கள்’ என்றார் பாலாஜி. ‘உடல் ரீதியா செய்யற சண்டைகளை சினிமால நெறைய பார்த்துட்டேன். வாய் சண்டையைப் பார்க்கலாம்னு காத்துக்கிட்டிருக்கேன்’ என்றார் பொன்னம்பலம். (அப்ப எதுக்கு காதைப் பொத்திக்கிட்டு ஒய்யாரமா தூங்கினீங்க சித்தப்ஸ்?). 

“இங்க எல்லோருக்கும் என்னைப் பிடிச்சிருக்கு. எனக்கும். ஒரு பெஸ்ட் பிரண்ட்டும் கிடைச்சிருக்காங்க. அது யாஷிகா’ என்றார். (மைண்ட் வாய்ஸில் ‘ஷாரிக்?”)

“அயல் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ் கற்றுக் கொண்டு பேசுவது நமக்குப் பெருமை. கேலி பண்றாங்கன்னு விட்டுடாதீங்க. தயங்காம பேசுங்க. நான் இந்தி பேச தயங்கியிருந்தா, ‘ஏக் துஜே கேலி’யேன்னு ஒரு படம் வந்திருக்காது.” என்ற கமல் அடுத்தது சென்றாயனிடம் வந்தார். கமல் ஆங்கிலத்தில் பொளந்து கட்ட, திருவிழாவில் தொலைந்து போன பையன் மாதிரி விழித்தார் சென்றாயன்.

“நான் பேசறது புரியலைல்ல. அதே மாதிரி நீங்க பேசற இங்லீஷூம் புரியல. அது தப்பில்ல. வேடிக்கையாத்தான் இருந்தது. ஆனா இங்லீஷ் கத்துக்கிட்டு பேசுங்க” என்றார். இதே  பிரச்னையை வைஷ்ணவியுடமும் கொண்டு சென்றார். “உங்க தாத்தா.. வாஷிங்டனில் தமிழ் கல்யாணம் பண்ணி வெச்சவரு’. இது தொடர்பான கேள்வி மும்தாஜிடமும் சென்றது. 

“ஒண்ணு புரிஞ்சுக்கங்க.. தமிழ் வெறியினால் நீங்க தமிழ்லதான் பேசணும்னு நாங்க கட்டாயப்படுத்தல. இந்த நிகழ்ச்சியை சிறுநகரங்களை, கிராமங்களை சேர்ந்த பார்வையாளர்களும் பார்த்துக்கிட்டு இருக்காங்க. அவங்களையும் சென்று சேரணும்னு நெனச்சீங்கன்னா தமிழ்ல பேசுங்க. அதுக்காகத்தான் இதை ஒரு விதியா கொண்டு வந்திருக்கோம்” என்றார் கமல். 

‘இங்க ஒவ்வொரு பீஸூம் டிப்ரண்டா இருக்கு. நல்லா பழகறாங்க’ என்று லோக்கல் மொழியில் சொன்னார் டேனி. ‘’மடி கிடைச்ச இடம்லாம் படுத்துக்கறீங்க.. என்னா விஷயம்?’ என்று ஷாரிக்கை கமல் கலாட்டா செய்யும் போது சிரிப்பை அடக்க முடியவில்லை. ரம்யாவின் மடியில் ஷாரிக் தலை வைத்திருந்த காட்சி நினைவிற்கு வந்தது. “இங்க மும்தாஜ் அம்மா மாதிரி. பொன்னம்பலம் அப்பா மாதிரி. பைட்டர்-ன்றதால எங்க அப்பாவை நினைவுப்படுத்தறார்” என்று உருக்கமுடன் சொன்னார் ஷாரிக். இந்தச் சமயத்தில் மும்தாஜூம் கலங்க, அதற்கான காரணத்தை விசாரித்து அறிந்து கொண்டார் கமல். இந்தச் சந்தடி குழப்பத்தில் தன் வயதையும் மறைக்காமல் சொன்னார் மும்தாஜ். இடைவேளையில் ஷாரிக் பாத்ரூம் அருகில் நின்று அழ, மற்றவர்கள் சமாதானப்படுத்தினர். 

வீட்டின் தலைவருக்காக நிகழ்ந்த தேர்தல் பற்றி பேசினார் கமல். ஜனனிக்கு எட்டு வாக்குகள் கிடைத்தது. மும்தாஜூக்கு ஒன்றுதான். ‘தெரியும் சார்.. instinct. ராகவன் instinct’ என்று வேட்டையாடி விளையாடினார் மும்தாஜ். 

“தலைவியாக உங்கள் கடமையை சரியாக செய்ததாக உணர்கிறீர்களா?” என்று ஜனனியிடம் கேட்கப்பட்டது. ‘இந்தப் பொறுப்பு ஈசியா இல்ல. ஆனா பெருமையா இருக்கு. இந்த சீஸனின் முதல் தலைவர் நான். (வரலாறு முக்கியம் அமைச்சரே). என்னோட பெஸ்ட்டை தந்திருக்கேன். ஆனா சில பேர் சரியா ஒத்துழைக்கல. பகல்ல தூங்காதீங்கன்னு சொன்னா கேட்க மாட்டாங்க. ஆங்கிலத்தில் பேசுவாங்க.. இந்த மாதிரி பிரச்னைகள் இருந்தது” என்றார் ஜனனி. 

அடுத்தது, சமையல், வாஷிங், பாத்ரூம் க்ளீனிங் அணி பிரிப்பதைப் பற்றிய விசாரணை. இதில் ஏற்பட்டதொரு நெருடலை அப்போதே பார்த்தோம். எளியவர்களாக தோற்றமளித்தவர்களுக்கு பாத்ரூம் க்ளீனிங் பணி தரப்பட்டது. அல்லது வேறு வழியில்லாமல் அவர்களாக முன்வந்து பெற்றுக் கொண்டார்கள். இது திட்டமிட்டு நடந்ததில்லை. இந்த தன்னிச்சையான உந்துதலுக்குப் பின்னால் பல நூற்றாண்டின் தொடர்ச்சியோடு கூட சமூகக் காரணங்கள் இருக்கின்றன.

எனவே இந்த விஷயம் தொடர்பான தன் கேள்வியை நுட்பமாக முன்வைத்தார் கமல். க்ளீனிங் அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் காரணம் என்ன? அவங்களுக்குத் தெரியாது, கத்துக்கட்டும்-னு முடிவு பண்ணிட்டீங்களா? என்றார். “இல்லை.. சார்.. அவங்களே முன்வந்தாங்க” என்று ஜனனி சொன்னதும் சென்றாயனின் முகத்தில் மாற்றம் தெரிந்தது. அது தொடர்பாக அவர் ஏதோ சொல்ல வந்தார். அவரைக் குறுக்கிட்ட மமதி, ‘நாங்க யாரும் கம்ப்பல் பண்ணலை. அவங்களா முன்வந்தாங்க.. இதற்காக அவங்களைப் பாராட்டணும்” என்று திசை திருப்பி விட்டார். எல்லோரும் கைத்தட்ட, வேறுவழியில்லாமல் அந்தப் பாராட்டை சென்றாயன் ஏற்றுக் கொண்டது போல்தான் தெரிந்தது. அவரைப் பேச அனுமதித்திருக்கலாம். 

ஜனனி சொன்னது போல் ‘சென்றாயன் தானாக முன்வரவில்லை. அழைக்கப்பட்டவுடன் வந்தார். உற்சாகமாக ஏற்றுக் கொண்டார். போலவே டேனியும் தன்னைக் கூப்பிடுவார்கள் என்று எதிர்பார்த்திருந்தார் என்பது இது தொடர்பான நாளின் வீடியோவை பார்க்கும் போது நன்றாகவே தெரிகிறது. 

அடுத்தடுத்த வாரங்களில் இந்தச் சுழற்சி மாறத்தான் போகிறது. என்றாலும் ஒருவரின் உருவம், உடல்மொழி ஆகியவற்றை வைத்து அவர்கள் இதற்குத்தான் சரி என்று நம் பொதுமனம் இயங்கும் விதத்தில் உள்ள முன்தீர்மானங்களையும் அதன் பின்னால் சமூகப் படிநிலை சார்ந்த காரணங்களையும் நாம் உணர்ந்தாக வேண்டும். அந்தப் பாரபட்ச மனோபாவங்களில் இருந்து விடுபட்டாக வேண்டும். 

“பாத்ரூம் க்ளீன் பண்றது பெருமையான விஷயம். நான் நிறைய பண்ணியிருக்கேன். தேவர் பிலிம்ஸ்ல சின்னப்பா அவரோட சீட்டை ஆசையா ஒரு முறை தடவிப்பார்த்தேன். “நீ தாரளமா உக்காரு. ஆனா இங்க இருந்து இறங்கிப் போய் கழிவறையை சுத்தம் செய்யும் முதிர்ச்சியும் இருந்தா உக்காரு” என்றார் சின்னப்பா, என்று தன் அனுபவத்தை பகிர்ந்தார் கமல். 

தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் எப்படி அர்ப்பணிப்புடன் இயங்க வேண்டும் என்பது தொடர்பாக ஆசிரியர் பகவானை நினைவு கூர்ந்தார். அரசு பள்ளியில் பணியாற்றிய அந்த ஆசிரியருக்கு இடமாற்றம் நேர்ந்த போது, மாணவர்கள் அழுது. அடம்பிடித்து நீங்கதான் வேண்டும் என்றதையும் ஆசிரியர் கண்கலங்கிதையும் சரியான சந்தர்ப்பத்தில் கமல் குறிப்பிட்டார். 

அடுத்து, ‘சொன்னபடி கேளு’ task-ல் சரியாக செயல்படாத போட்டியாளர்கள் விஷயத்திற்கு வந்தார். “உங்களுக்கு வீட்ல போரடிக்கும் –ன்றதுக்காக கொடுக்கல. இது உங்கள் திறமை மற்றும் பொறுமையைச் சோதிக்கும் பரீட்சை. ஒரு நடிகனாக எனக்கு தரப்பட்ட பாத்திரத்தை சரியாக செய்யவில்லை என்று யாராவது சொன்னால் வருந்துவேன். அதைச் சரியாக செய்யவேண்டியது கடமை. இதனால உங்க லக்ஸரி பட்ஜெட்டும் பாழாகுது. யார் சரியா செய்யலை.. நீங்களே சொல்லுங்க” என்றார். பாலாஜி, ரம்யா, வைஷ்ணவி, ஐஸ்வர்யா ஆகியோர் முன்வந்து தங்களின் தவறை ஒப்புக் கொண்டனர். 

ஒரு இடைவெளிக்குப் பின்னர் மறுபடியும் வந்த கமல், இந்த முறை பிக்பாஸின் ஹீரோவாகவே மாறி விட்ட வெங்காயத்தை கையில் எடுத்தார்.  ‘தரப்பட்ட மளிகைப் பொருட்கள் குறைவாக இருந்தது’ என்று மும்தாஜ் சொன்ன போது ‘ நான் என்னமோ போனவாரம் கண்ணைக் கட்டிக்கிட்டு போய் மறுபடியும் இப்ப வந்து கண்ணைத் திறந்தேன்னு நினைக்காதீங்க. Am watching” என்றது போட்டியாளர்களுக்கு சிறந்த எச்சரிக்கையாக இருந்திருக்கும். “கேரட் பொறியல்ல வெங்காயம் போடறது உலக மகா குற்றம் இல்லையே?” என்று இதைப் பற்றி நீண்ட விசாரணை செய்தார். 

வாதப் பிரதிவாதங்களை மெல்ல மெல்ல நகர்த்திச் சென்ற கமலின் திறமையை இந்த இடத்தில் வியக்க வேண்டும். ஒரு வலையை விரித்து இரை அதில் வந்து மாட்டும் வரை பொறுமையைக் கடைப்பிடித்தார். அதே சமயத்தில் எந்தவொரு தனிப்பட்ட நபரையும் பிரதானமாக குற்றம் சொல்லிவிடக்கூடாது என்கிற சமநிலையையும் கடைப்பிடித்தார். Hats off ஆண்டவரே.

“நான் கேட்டதால்தான் அவங்க வெங்காயம் போடலை” என்பது பாலாஜியின் குற்றச்சாட்டு. “ஆம். அவர்களுக்குள் இருந்த பிரச்னை காரணமாகத்தான் இதை நித்யா செய்தார்’ என்பதை மற்ற போட்டியாளர்களும் வெவ்வேறு வடிவங்களில் சொன்னார்கள். தாங்க முடியாத நித்யா, தம் தரப்பை சொல்ல முயலும் போது அவரை அமைதிப்படுத்திய கமல், பிறகு நித்யாவை நிதானமாக விசாரித்தார். “என்ன மெனு பண்ணலாம்னு மும்தாஜை முதல் நாள் விசாரித்தேன். உனக்கு எந்த ஸ்டைல்ல வருமோ அப்படி பண்ணுங்க –ன்னு பொறுப்பை ஒப்படைச்சிட்டாங்க. அப்படி செஞ்சிட்டிருக்கும் போது அதில் திடீர் மாற்றம் வந்த விதம் பிடிக்கலை. அது இல்லாம அங்க சுத்தி இருந்தவங்க எல்லாம் எனக்கு பிரஷர் தந்தாங்க. நான் blank ஆகிட்டேன். கேரட் நிறைய இருந்தது. அதை வெச்சு இன்னிக்கு பண்ணலாம் னு தீர்மானித்தேன்’ என்று விதம் விதமாக தம் தரப்பை நியாயப்படுத்தினார். 

இதை சுருக்கமாகப் பார்த்தால் விஷயம் இதுதான். சமையல் பொறுப்பு தரப்பட்ட பிறகு ‘அதை எந்த முறையில் சமைக்கலாம்?” என்கிற சுதந்திரம் ஒருவருக்கு தரப்பட்டாக வேண்டும். ஏனெனில் இந்த முறையில் செய்தால்தான் உணவு சுவையாக வரும் என்று அவர் நம்பக்கூடும். இதில் தலையிடுவது முறையில்லைதான். ஆனால் – பொறியல் அதிக அளவு வரும், சுவை கூடும் என்கிற காரணங்களுக்காக மற்றவர்களை இதை வேண்டுகோளாகவும் வற்புறுத்தலாகவும் கேட்கும் போது நித்யா அதைப் பின்பற்றியிருக்கலாம். ஒருவேளை வீட்டில் அவருடைய மகள் கேட்டிருந்தால் வெங்காயம் போடாமலா இருந்திருப்பார்? அதைப் போலவே பிக்பாஸ் வீட்டையும் தன் வீடாக நினைக்க வேண்டும். இந்த விளையாட்டிலுள்ள சவாலும் கடைப்பிடிக்க வேண்டிய சகிப்புத்தன்மையும் இதுதான். 

இந்த சர்ச்சையால் உணவுப் பொருள் வீணான விஷயத்தையும் கமல் சுட்டிக் காட்டினார். அதனால்தான் வெங்காயம் தராமல் பிக்பாஸ் பழிவாங்கி விட்டார் போல. ஒரு மூட்டை வெங்காயம் நறுக்கும் தண்டனையும் இதற்காக தரப்பட்டிருக்கலாம். “மத்தவங்க சுத்தி நின்னு சொன்னாங்க. Distract ஆகிட்டேன்றதெல்லாம் ஒரு காரணமா?’ நான் கூட சின்ன வயசுல சமையல் அறையில் எங்க அம்மாவை தொந்தரவு பண்ணிட்டே இருப்பேன்’ என்று யதார்த்தமான உதாரணத்தோடு சுட்டிக் காட்டினார் கமல். 

இதைப் போலவே பாலாஜியின் வேண்டுகோளான ‘ரசம்’ நிராகரிக்கப்பட்டதையும் பற்றிய பஞ்சாயத்தும் சிறிது நேரம் நடந்தது. இருவருக்குள் இருக்கும் பிரச்னை தொடர்பான அழுத்தத்தை நித்யா சக போட்டியாளர்களிடம் காட்டுகிறார் என்று பல புகார்கள் கொட்டப்பட்டன. 

ஏறத்தாழ விருமாண்டி திரைக்கதைதான். புகார் சொன்னவர்களின் கதைகளில் ஒரு கோணம் இருக்க, அதை மறுத்துச் சொன்ன நித்யாவின் காரணங்களில் வேறொரு கோணம் இருந்தது. “எல்லார் கிட்டயும் கனெக்ட் ஆக நேரம் தேவைப்பட்டது. இப்ப சரியாகிட்டேன். இனி தவறு நடக்காது’ என்று சமாதானத்திற்கு வந்தார் நித்யா.

நித்யா தன் தரப்பை விளக்கும் போது பாலாஜி எரிச்சல் மற்றும் அதிருப்தியான முகபாவங்களைக் காட்டினார். போலவே தன் தரப்பு நியாயத்தை உரத்த குரலில் ஆவேசமாக கொட்டினார். “என்னை ஒரு சக போட்டியாளரா மட்டும் பாருங்க.. என் மேல இருக்கற கோபத்தை ஏன் மத்தவங்க கிட்ட காட்றீங்க.. ஒரு முறை அவங்க சோகமா இருக்கப்ப.. ‘என்னன்னு விசாரிச்சேன்’ அலட்சியமா பேசிட்டாங்க’  ‘கடைசி நாள்ல மட்டும் ஏன் கனிவா இருக்கணும். நாமினேஷன் காரணமா? முதல்ல இருந்தே அன்பா இருக்கலாமே….என்றெல்லாம் பொங்கினார் பாலாஜி. ஆனால் இவர் நித்யா குறித்து மற்றவர்களிடம் தரக்குறைவாகவும் அவமதிப்பாகவும் பேசியதையும் கமல் விசாரணை செய்திருக்க வேண்டும். 

நித்யா தம் தரப்பு விளக்கத்தை தரும் போது ‘இங்க இருக்கறவங்க.. சினிமாத்துறையில் இருப்பவங்க.. நான் ஒரு சராசரி நபர். வாழ்க்கையில் நிறைய அடிபட்டதால் கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்தேன்’ என்றொரு காரணம் சொன்னார். “இங்க செலிபிரிட்டின்னுல்லாம் யாரும் கிடையாது. உலகம் முழுக்க உங்களைப் பார்க்கறாங்க. நீங்களும்தான் இப்ப செலிபிரிட்டி” என்று கமல் விளக்கமளித்தாலும் நடைமுறையில் இந்தப் பிரச்னை இருக்கத்தான் செய்கிறது. 

ஊடகங்களின் மூலம் சிறிது புகழ் அடைந்தவர்களுக்கு கூட ஒரு மிதப்பு வந்து விடுகிறது. இரண்டடி உயரத்தில் இருந்துதான் சராசரி நபர்களிடம் பேசுவார்கள். பிக்பாஸ் வீடு பாரபட்சமில்லாமல் இயங்க வேண்டும் என்பது விதியாக இருந்தாலும் பிரபலங்கள் தங்களின் கீரிடங்களை உடனே கழற்றுவது அத்தனை எளிதல்ல. கடந்த சீஸனில் ஜூலியும் இதே பிரச்னை சார்ந்த அழுத்தத்தில் இருந்ததையும் அதனாலேயே காயத்ரியின் பின்னால் நின்று கொண்டதையும் கவனித்தோம். ஆக. நித்யா குறிப்பிட்ட காரணம் நிராகரிக்கக்கூடியதல்ல. 

இந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த வைஷ்ணவி தாங்க முடியாமல் அழுதார். தோற்றம் காரணமாக சிறுவயதுகளில் நிறைய அவமானப்படுத்தப்பட்டதாகவும், அது சார்ந்த பதட்டத்தினால் ஒப்பனையின்றி எங்குமே செல்ல மாட்டேன் என்பதையும் பிக்பாஸ் வீட்டிலும் இந்த பிரச்னையை எதிர்கொள்ளக்கூடும் என்று பயந்ததாகவும், ஆனால் மற்ற போட்டியாளர்கள் இயல்பாக பழகியதால் நீண்ட கால உளைச்சலில் இருந்து இப்போது வெளியே வந்திருப்பதாகவும் தெரிவித்தார். அவருடைய இந்த வாக்குமூலம் உண்மையானதாகவும் நெகிழ்வுபூர்வமானதாகவும் இருந்தது. 

இது தொடர்பாக தன் சொந்தக்கதையையும் சொன்னார் கமல். வடநாட்டிற்கு நடிக்கச் சென்ற போது, அமிதாப்பச்சன் உள்ளிட்ட அனைவரும் உயரமாக இருந்ததால் ஏற்பட்ட மனசங்கடத்தையும், இவருடைய உயரக்குறைவு ஒரு பின்னடைவுக் காரணமாக சுட்டிக்காட்டப்பட்டதையும் நினைவுகூர்ந்தார். இந்தப் பிரச்னைக்கு பதில் சொல்லும் விதமாக தன் உயரத்தை இன்னமும் குறைத்துக் கொண்டு உருவாக்கிய திரைப்படம்தான் – அபூர்வ சகோதரர்கள் என்கிற சுவாரசியமான தகவலையும் பகிர்ந்து கொண்டார். ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படத்தில் வரும் வசனம் போல ‘எவ்வளவு உயரம் –ன்றது முக்கியமில்லை. எவ்வளவு உயர்றோம்’ ன்றதுதான் முக்கியமானது’ இந்த நோக்கில் கமலின் உயரம் ‘விஸ்வரூப’தனமானது. 
 

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம். 

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

‘நித்யா சரியாக பேச மாட்டேன்கிறார், தாமாக முன்வந்து உதவி செய்யச் சென்றாலும் அலட்சியப்படுத்துகிறார். Moody, adamant’ என்று விதம் விதமாக வந்த புகார்களுக்குப் பிறகு ‘இப்ப யாரெல்லாம் நித்யாவிற்கு சப்போர்ட் பண்ணுவீங்க?’ என்று கமல் கேட்டதற்கு சிலர் உடனடியாகவும் அதைப் பார்த்து மேலும் சிலர் கைதூக்க ‘விக்ரமன் திரைப்பட’தனமாக அந்தக் காட்சி நிறைந்தது. 

தன்னுடைய சில எதிர்மறையான அணுகுமுறைகள் பாலாஜிக்கு சாதகமாக அமையும் விபத்து குறித்தும் நித்யா கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களின் வேண்டுகோளை மதித்து வெங்காயத்தைப் போட்டிருந்தால் ‘சின்ன’ வெங்காயம், ‘பெரிய’ வெங்காயமாக மாறி இருக்காது. போலவே மும்தாஜ் உடன் இணக்கமாக போக்கை கடைப்பிடித்தால் நித்யா அடுத்தடுத்த சுற்றுகளில் நீடிப்பார்.

பாலாஜி – நித்யா இணைய வேண்டும் என்கிற அழுத்தத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் சக போட்டியாளர்கள் நித்யாவிற்கு தந்து கொண்டேயிருந்தார்கள். ஒருவகையில் கமலும் இதை வழிமொழிந்தார். ‘வெளியில் இருந்து ஆயிரம் பேர் ஆயிரம் விதமா சொல்லலாம். ஆனால் நேரடியாக பாதிக்கப்பட்ட எனக்குத்தான் அது தொடர்பான முழு பிரச்னையும் வலியும் தெரியும்’ என்கிற நித்யாவின் தரப்பை கமல் ஏற்றுக் கொண்டார். ஆம்.. நிச்சயம் அது உங்கள் தேர்வு’

‘தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்கிற சிறந்ததொரு தத்துவ வாக்கியத்தை பகிர்ந்தார். ‘அழுங்கள். சிரியுங்கள். நீங்கள் நீங்களாகவே இருங்கள்’ என்கிற உபதேசத்துடன் இன்றைய நாளை நிறைவு செய்தார் கமல்.

‘குற்றவுணர்வுகள்.. குற்றம் சாட்டுதல்’ ன்னு ஆரம்பிச்சிட்டாங்க.. போன பிக்பாஸ் மாதிரியேதான் இந்த பிக்பாஸ் இருக்கும்-னு நெனச்சவங்க ஏமாந்துட்டாங்க. ஒரு மனிதரின் வாழ்க்கையைப் போல இன்னொருவரின் வாழ்க்கை இருக்காது. புதிய மனிதர்கள் வீட்டை புதிதாக மாற்றி விட்டார்கள்’ என்று பார்வையாளர்களிடமும் விடைபெற்றுக் கொண்டார்.

அடுத்த வாரத்தில் பாலாஜி –நித்யா விவகாரத்தைத் தாண்டி புதிதாக ஒரு கான்செப்டை பிடித்தாக வேண்டும். பிக்பாஸ் இப்போதே கத்தியை தீட்டிக் கொண்டு அதற்கான ஏற்பாடுகளில் இருப்பார் என்பதை யூகிக்க முடிகிறது.

நேற்றைய நாள் சீரியஸ் வெங்காயமாக சென்றதால், இன்றைய எபிசோடில் கமல் சற்று ஜாலியாக இருப்பார் என்று தோன்றுகிறது. அதற்கேற்ப கமல், ப்ரோமோவில் ' மாருகோ மாருகோ  என பாடிக்கொண்டு இருக்கிறார். எல்லாம் சரி. கமலிடம் அழுதுவிட்டு யாரிடமும் சொல்ல வேண்டாம் என சொன்ன அந்த நடிகை யாராக இருக்கும் என யூகிக்க முடிகிறதா . கமென்ட்டில் உங்கள் யூகத்தை வெளிப்படுத்துங்களேன்