Published:Updated:

எஜமானர்கள் முன் பெண் பணியாளர்கள் ஆடும் டாஸ்க்... இது வக்கிரம் பிக்பாஸ்! #BiggBossTamil2

சுரேஷ் கண்ணன்
எஜமானர்கள் முன் பெண் பணியாளர்கள் ஆடும் டாஸ்க்... இது வக்கிரம் பிக்பாஸ்! #BiggBossTamil2
எஜமானர்கள் முன் பெண் பணியாளர்கள் ஆடும் டாஸ்க்... இது வக்கிரம் பிக்பாஸ்! #BiggBossTamil2

நேற்றைய தினத்தைப் போலவே, இன்றும் பிக் பாஸ் வீட்டின் பரபரப்பிற்கான காட்சிகளுக்கும் சர்ச்சைகளுக்கும் மும்தாஜ்தான் மையமாக இருந்தார். தன்னுடைய ‘ஒத்துழையாமை இயக்கத்திற்காக’ அவர் சொல்லும் சில காரணங்களில் உள்ள லாஜிக் சரியாகவே இருக்கிறது.  ‘தண்டனை என்ற பெயரில் தரப்படும் வேலையைச் செய்ய மாட்டேன்’ என்று தன் தரப்பில் உறுதியாக அவர் நிற்பது சரியானது.

கடந்த சீஸனிலாவது, பல நாட்களுக்குப் பிறகே ‘மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வைத்தியம் செய்வது’ போன்ற சர்ச்சைக்குரிய சவால்கள் வந்தன. ஆனால் இரண்டாவது சீஸனி்ல் ஒன்பதாவது நாளில் இருந்தே தன் ‘திருவிளையாடல்களை’ பிக்பாஸ் துவங்கிவிட்டார். பெண் பணியாளர்களை மோசமாக சித்தரிக்கும் காட்சிகள், இன்னமும் ஒருபடி முன்னேறத் துவங்கிவிட்டன. ஆண்கள் மெத்தைகளில் அமர்ந்து ரசிக்க, கலைநிகழ்ச்சி என்கிற பெயரில் பெண் போட்டியாளர்களை ஆட வைத்தது அப்பட்டமான பிற்போக்குத்தனம். அதிகாரமும் செல்வாக்கும் மிகுந்த மமதையில் பெண்களை போகப்பொருட்களாக மட்டுமே பார்க்கும் ஜமீந்தாரர் காலத்தின் அநீதிகளை மறுபடியும் மீட்டெடுக்கும் சித்தரிப்புகளை ‘பிக் பாஸ்’ செய்வது கண்டிக்கத்தக்கது. துளித்துளியாக நகரும் பெண்களின் முன்னேற்றத்தை பல அடிகள் பின்னுக்கு இழுக்கும் இதுபோன்ற பிற்போக்கு சவால்களை ‘பிக் பாஸ்’ பின்பற்றக்கூடாது. இதன் மூலம் பெண் பார்வையாளர்களின் ஆதரவை இழந்தால் இந்த நிகழ்ச்சியின் வெற்றி சதவீதம் கணிசமாக பாதிக்கப்படக்கூடும். சென்ற சீசனில் கமல், மனநலம் பாதிக்கப்பட்டோர் நிகழ்ச்சிக்கு , தார்மீகமாக மன்னிப்பும் கேட்டு, இனிமேல் இது போல் நிகழக்கூடாது என பிக்பாஸுக்கு கோரிக்கையும் வைத்தார். ஆனால், இந்த முறை பெண்களை காட்சிப்படுத்தும் சில காட்சிகள் voyeuristic வகையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இடுப்பு விஷயத்தை வைத்து மஹத் பேசியது ஒரு துளி. வேலையாள் , உதவியாளர் என்பதைக் கடந்து, வைஷ்ணவி இன்றைய நிகழ்ச்சியில் சொன்னது போல்  இது அடிமை நிலை. ப்ரைம் டைம் நிகழ்ச்சியில், வீட்டில் அனைவரும் பார்க்கும் நிலையில் இருக்கும் பிக்பாஸ் மாதிரியான நிகழ்ச்சியில், இது போன்ற சம்பவங்கள் வருவது அபத்தமானது கண்டிக்கத்தக்கது

இதை விடவும் கொடுமை, ‘பாடல்’ என்கிற பெயரில் மமதி நம் மீது நிகழ்த்திய வன்முறை. ‘பேசக்கூடாது’ என்ற தண்டனையைத் தந்த ‘எஜமானர்களுக்கு’ அவர் தந்த சரியான தண்டனை இது. விரிவாகப் பார்ப்போம். 

ஒன்பதாம் நாளின் நள்ளிரவில் மும்தாஜூம் மமதியும் கழிவறைப் பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். ‘ஆந்தை’ என்கிற பெயர் யாருக்குப் பொருந்தும் என்கிற கமல் விசாரணையில் பெரும்பாலேனோர் மும்தாஜை சுட்டியதை மெய்ப்பித்துக் காட்டினார், மும்தாஜ். ‘ரெண்டு பேரும் நைட்ல டிஸ்கஸ் பண்ணிட்டே இருக்காங்க’ என்று நேற்று ஷாரிக் சொன்னது உண்மை என்பதையும் பார்க்க முடிந்தது. ‘மற்ற பெண் போட்டியாளர்கள் சங்கடமாக உணராத காரியங்களைச் செய்யட்டும். ஆனால் நான் அப்படி உணர்வதை எக்காரணம் முன்னிட்டும் செய்ய மாட்டேன்’ என்கிற தம் தரப்பை  மமதியிடம் உறுதியாகச் சொல்லிக் கொண்டிருந்தார், மும்தாஜ்.

‘எஜமானர்கள்’ எழுந்திருப்பதற்கு முன் அவர்களுக்கான தேவைகளை தயார் செய்து வைத்திருக்க வேண்டும் என்பதால் ‘உதவியாளர்களின்’ அறையில் 07:15 மணிக்கே அலாரம் அடித்தது. பெண்களில் சிலர் வேண்டா வெறுப்பாக எழுந்தனர். 

அனந்த் மூச்சுப்பயிற்சி செய்து கொண்டிருந்தார் போலிருக்கிறது. விநோதமான சப்தத்துடன் மேலும் கீழும் அவருடைய தலை வேகமாக அசைந்ததைக் கண்டவுடன், ஒரு கணம் திகிலாகிவிட்டது. (சொல்லிட்டு செய்யங்கய்யா.. பயமா இருக்கு). பாவம், இந்த வீட்டில் இவர் இருக்கிறாரா இல்லையா என்றே சந்தேகமாக இருக்கிறது. ஆண்களில் பெரும்பாலோனார் ‘எஜமானர்கள்’ என்கிற பெயரில் அலப்பறைகள் செய்ய, அனந்த்தும் பொன்னம்பலமும் ஒதுங்கி இருக்கிறார்கள் போல. 

‘அதாரு.. அதாரு… காட்டாத உதாரு’ என்கிற ஆதார் அட்டை எதிர்ப்பு பிரச்சார பாடல் ஒலிபரப்பட்டது. நித்யா உற்சாமாக வந்து நடனமாடியது இதுதான் முதன்முறை போல. தலைவியான குஷியில் இருக்கிறார் என்று நினைக்கத் தோன்றுகிறது. 

‘மும்தாஜ் உடல் உபாதையால் அவதிப்படுகிறார் என்பதால் எளிதான வேலையாக, அவரை எவருக்காவது உதவியாளராக போடலாம் என்று பார்த்தால் அவர் உடம்பை வருத்திக்கொண்டு துணி துவைக்கிற பணியை எடுத்துக் கொண்டார், என்ன செய்வது’ என்று டேனி வருந்திக் கொண்டிருந்தார்.

‘உதவியாளர்கள்’ அறையில் தரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த, ஜனனி, ‘மும்தாஜ் genuine’ ஆக இருப்பது போல்தான் எனக்குத் தெரிகிறது’ என்று ரித்விகாவிடம் பேசிக் கொண்டிருந்தார். “கோபமாக இருந்தாலும் வெளிப்படையாக நடந்து கொள்கிறார். ஆனால் மமதியைப் புரிந்துகொள்ள முடியவில்லை. நாட்கள் கடந்தவுடன் ஒருவரின் அசலான தன்மை வெளிவந்துதான் ஆக வேண்டும்’ என்று அவர் சொன்னதை ரித்விகாவும் வழிமொழிந்தார். 

‘பெண்கள் அறையில் உள்ள பாத்ரூமை திறக்க வேண்டும். அல்லது பிக்பாஸிடம் பேச வேண்டும்’. இரண்டில் ஒன்று நடக்காதவரை நான் மைக் அணியப் போவதில்லை’ என்கிற அறிவிப்புடன் மைக்கை கழற்றி வைத்தார், மும்தாஜ். வழக்கமான குளியலறை ஈரமாக இருப்பதால் அங்கு உடைமாற்ற செளகரியமில்லை போலிருக்கிறது. எனவே இந்தப் போராட்டம். ‘ஒரு புடவை கட்டறதுக்கா இத்தனை பிரச்சினை. நாமள்லாம் கட்டிட்டு வரலை. ஏன் இப்படி பண்றாங்க?’ என்று சலித்துக் கொண்டார், வைஷ்ணவி. ‘அது அவரவர்களின் செளகரியத்தைப் பொறுத்தது. நாம் எப்படி அதை தீர்மானிக்க முடியும்’ என்று சரியாகப் பேசினார், ரம்யா. 

இந்த விஷயத்தில் மும்தாஜின் பிடிவாதம் முறையற்றதாகத்தான் தோன்றுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பற்றி அறிந்துதான் உள்ளே வந்திருக்கிறார்கள். சிறு சிறு அசெளகரியங்களைக் கூட அவர் பஞ்சாயத்தாக்குவது சரியாகத் தோன்றவில்லை. ‘மும்தாஜ்... மைக்கை மாட்டுங்க’ என்று வரவழைத்துக்கொண்ட கண்டிப்புடன் பிக்பாஸ் எச்சரிக்கை அறிவிப்பு தந்தாலும் மும்தாஜ் தம் கோரிக்கையில் உறுதியாக இருந்தார். தலைவி நித்யாவும் வந்து ‘மைக்’கை மாட்டச் சொல்லி வேண்டியும் மும்தாஜ் ஏற்கவில்லை. ‘பெண்களின் பிரச்சினையைப் புரிந்துகொண்டு இந்த சிறு செளகரியத்தையும் தரவில்லையென்றால் எப்படி?’ என்று ஆதங்கப்பட்டார், மும்தாஜ். பிறகு புடவையை மாற்ற சம்மதித்த மும்தாஜ், மைக்கை மாட்டும் விஷயத்தை ஒப்புக்கொள்ளவில்லை.

மும்தாஜின் இந்த நடவடிக்கையால், லக்ஸரி மதிப்பெண்களை இழப்பதோடு அனைவருக்கும் பாதிப்பு ஏற்படும் என்கிற காரணத்தை ஆண்கள் அணி பதட்டத்துடன் மறுபடியும் மறுபடியும் சுட்டிக் காட்டிக்கொண்டிருந்தது. பெண்கள் அணியில் இருந்தவர்களுக்கே மும்தாஜின் செய்கைகள் பிடிக்கவில்லை. மமதி மட்டுமே ஆதரவாக இருந்தார். ‘நீங்கள் சென்று பேசலாமே’ என்று ஆண்கள் மமதியுடம் கோரிக்கை வைக்க.. ‘நான் அட்ஜஸட் பண்ணிப்பேன். அவங்களையும் பண்ணச் சொல்லி எப்படி கட்டாயப்படுத்த முடியும்?” என்றார்.

உணவு தொடர்பாக இன்னொரு பஞ்சாயத்து. ‘காலை உணவாக தமக்கு எத்தனை இட்லிகள் இடஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றன என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன்’ என்று மமதியிடம் வந்தார், பொன்னம்பலம். ‘சற்று பொறுங்கள். உறுப்பினர்களின் எண்ணிக்கையையொட்டி கணக்கு போட்டுவிட்டுச் சொல்கிறேன்’ என்றார், மமதி. ‘சரி.. பத்து நிமிஷத்துல வர்றேன்..’ என்று கிளம்பினார், பொன்னம்பலம். 

‘எப்படிம்மா.. உங்க ஐயாவை சமாளிக்கிறீங்க.. அவசரக்குடுக்கையாக இருக்காரே.. உனக்கு கோயில் கட்டித்தான் கும்பிடணும்’ என்று மைண்ட் வாய்ஸில் பேசுவதாக நினைத்து மமதி ஜனனியிடம் சத்தமாக பேசிவிட ‘நான் என்ன அவ்ளோ கொடுமைக்காரனா’ என்று இதை ஆட்சேபித்தார், பொன்னம்பலம். ‘மன்னிச்சுடுங்கய்யா’ என்று பாவனையாக மன்னிப்பு கோரினார், மமதி. பிறகான பஞ்சாயத்திலும் இந்த விஷயம் வெடித்தது. 

மும்தாஜின் ஒத்துழையாமை இயக்கம் ஆண்கள் தரப்பை பதட்டப்படுத்தியது. மும்தாஜ் வலிமையான போட்டியாளராக இருப்பதால் அவரை நேராக கேள்விகள் கேட்கவும் தயங்கினார்கள். ‘புடவை மாற்றும் பிரச்சினையில்’ அவர் இரண்டு மணி நேரங்களை வீண் செய்ததால், சும்மா ‘லுல்லூவாய்க்கு’ ஏதாவது தண்டனை தந்து பிரச்சினையை கடந்துவிடலாம் என்று ஆண்கள் அணி முடிவு செய்தது.

ஆண்கள் அணி சமயங்களில் மிகையாக நடந்துகொள்வது போன்றதொரு தோற்றம் நமக்கு கிடைத்தாலும், இதற்குப் பின்னணியில் பிக்பாஸின் அழுத்தம் அவர்களுக்கு இருக்கிறது என்பதை யூகிக்க முடிகிறது. இது தொடர்பான காட்சிகள் காட்டப்படாததால் ஆண்கள்தான் அலப்பறை செய்கிறார்கள் என்கிற மாதிரியான எண்ணத்திற்கு வந்து சேர்கிறோம். பெரும்பாலான சமயங்களில் நேரடியாக அல்லாமல், மறைமுகமான வழிகளைத்தான் முதலாளித்துவ சமூகம் பின்பற்றும். சம்பந்தமில்லாமல் எவர் எவர்களோ அடித்துக்கொள்ள இடையில் ‘பிக்பாஸ்கள்’ குளிர் காய்வார்கள். 

சமாதான உடன்படிக்கையாக மும்தாஜிற்கு எளிய தண்டனையை வழங்க முடிவு செய்த ஆண்கள் அணி, ‘நீச்சல் குளத்தை இரண்டு மணி நேரம் சுத்தம் செய்யப் பணித்தது. ஆனால் இதை கறாராக மறுத்தார், மும்தாஜ். ‘நான் உடலுழைப்பு சார்ந்து நிறைய கடுமையான பணிகளைச் செய்திருக்கிறேன்.. டாஸ்க் என்கிற எல்லைக்குள் நின்று வேலை செய்வேன். ஆனால் நான் வேலை செய்யவில்லை என்கிற காரணத்தைக் காட்டி ‘தண்டனை’ என்கிற பெயரில் எதையும் செய்யமாட்டேன். நீங்கள் புகார் செய்ய விரும்பினாலும் செய்யுங்கள்’ என்று மறுத்துவிட்டார். ‘நீங்க செஞ்சுதான் ஆகணும்’ என்று வற்புறுத்தினார், ஷாரிக். (பேட்டா… உன்னை எப்படில்லாம் பாசம் காட்டி வளர்த்தாங்க… மும்தாஜ்… பார்த்துப் பார்த்து வளர்த்த கிளி இப்படி டைனோசர் ஆக மாறிவிட்டதே..!)

அடுத்த பஞ்சாயத்து சின்னம்மாவான மமதியிடம் சென்றது. ‘நான் எந்த வேலையை செய்யலை .. சொல்லுங்க’ என்று பாய்ந்தார், மமதி. “ஆங்.. இதேதான்… நீங்க ரொம்ப ஓவரா பேசறீங்க.. பொன்னம்பலத்தைப் பற்றி தப்பா பேசியிருக்கீங்க’ என்றார், மஹத். ‘வேலைக்காரங்கள புறணி பேசறதும் அலவ்டுதானே… ரூல் புக்ல இருக்கே’ என்ற மமதியின் லாஜிக் ஏற்கப்படவில்லை. ‘இன்னிக்கு முழுக்க நீங்க பேசக்கூடாது’ என்ற தண்டனையை விதித்தார் சென்றாயன். இந்த வீட்டில் அவர் செய்த முதல் உருப்படியான காரியம் இதுதான். 

வைஷ்ணவி அடுத்த பஞ்சாயத்தை ஆரம்பித்தார். ‘என்னதான் பணியாளர்கள் என்றாலும் உணவு ஊட்டிவிடுவது.. துடைத்து விடுவது போன்றவற்றை எந்த வீட்டிலும் செய்ய மாட்டார்கள். இதை தவிருங்கள்’ என்கிற அவரின் கோரிக்கை நியாயமானது. 

ஐஸ்வர்யா, ஷாரிக்கிற்கு உணவு ஊட்டியதை சாட்சியாக சுட்டிக் காட்டினார், வைஷ்ணவி. ‘இதை ஆட்சேபமாக உணர்கிறவர்கள் செய்ய வேண்டாம். உணராதவர்கள் செய்யட்டுமே’ என்று உரையாடல் தொடர்ந்தது. இதன் நடுவில் எழுந்த ஐஸ்வர்யா. எல்கேஜி தமிழில் தத்தக்கா பித்தக்கா என்று சொன்ன விஷயம் இதுதான். ‘லக்ஸரி டாஸ்க்கிற்காக எல்லாத்தையும் பண்ணிதான் ஆகணும். நோட்டீஸ்ல அப்படித்தான் இருந்தது. ஆம்பளை சொல்ற எல்லா வேலையும் பொம்பளை செய்யணும். நான் செய்வேன்’ என்று ஐஸூ ஆவேசமாக சொன்னதை ஆண்கள் தரப்பு கைத்தட்டி வரவேற்றது. 

ஒரு குழுவாக இணைந்து இயங்கும் போது, அதில் ஒருவருக்கு ஏற்படும் பிரச்சினையை, அது தன்னைப் பாதிக்காவிட்டாலும்கூட, அதற்காக குரல் தருவதே சரியானது. ஒற்றுமையுணர்வின் அடையாளம் இது. பெண்களின் முன்னேற்றத்திற்கு சில பெண்களே தடையாக இருப்பார்கள் என்பதற்கான உதாரணம் ஐஸ்வர்யாவின் முதிர்ச்சியின்மை. வேலை வாங்கும் விஷயத்தில் ஆண்கள் அணி எத்தனை ஒற்றுமையுடன் இருக்கிறது என்பதைப் பார்த்தாவது இதைக் கற்றுக்கொள்ளலாம். 

வைஷ்ணவி எழுப்பிய ஆட்சேபத்திற்கு பெண்களிடமிருந்தே ஆதரவு இல்லாததால் அவர் பின்வாங்க வேண்டியிருந்தது. ‘வேலைக்காரங்கன்னா.. டான்ஸ் கூட ஆடச் சொல்வீங்களா?’ என்று அவர் எழுப்பிய ஆட்சேபம்.. பிக்பாஸ் காதில் விழுந்திருக்கும்… ‘அட நல்ல ஐடியாவா இருக்கே” என்று அப்போதே யோசிக்க ஆரம்பித்து விட்டார். ‘எங்க முதலாளி சென்றாயன் சொன்னதற்காக டான்ஸ் ஆடுவதில் எனக்குப் பிரச்சினையில்லை’ என்று ரித்விகாவும் சேம் சைட் கோல் போட்டார். ஆண்களின் ஆதிக்க மனோபாவம் தொடர்வதற்கு பெண்களின் அறியாமையும் முக்கிய காரணமாக இருக்கிறது. 

மைக்குகள் வெடித்து விடும்படியான சப்தங்களுடன் இது தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் ‘கசகசவென்று’ நெடுநேரம் நடந்தன. ‘பிக்பாஸால்தான் நேரம் வீணாயிற்று. அவருக்குப் போய் தண்டனை கொடுங்க’ என்றொரு சிக்ஸரை இடையில் வீசினார், மும்தாஜ். இந்த வீட்டின் துணிச்சலான ஒரே ' கெத்து ராணி' மும்தாஜ்தான் எனத் தோன்றுகிறது.  

யாஷிகாவிடமும் ஐஸ்வர்யாவிடமும் காது நோண்டிக் கொண்டே மன்னிப்பு கேட்டார், பொன்னம்பலம். ‘லேடீஸ்னா நான் ரொம்ப மரியாதை கொடுப்பேன். அன்னிக்கு சத்தம் அதிகமா இருந்தது. அதனால்தான்” என்றார். 

‘சும்மா லுலுவாய்க்காக இந்த தண்டனையை மும்தாஜ் செஞ்சிட்டு போகலாம். ஏன் புரிஞ்சுக்க மாட்றாங்க’ என்று சலித்துக் கொண்டது ஆண்கள் அணி. 

இதற்கிடையில் பிக்பாஸிடமிருந்து முறையான அறிவிப்பு தலைவி நித்யாவின் வழியாக வந்தது. ‘பெண்கள் அறையில் உள்ள கழிவறை பொதுவாக திறக்கப்படாது. அனைத்துப் பெண்களும் டாஸ்கிற்காக தயார் ஆக வேண்டிய சூழலில் மட்டுமே திறக்கப்படும், இரண்டாவது, போட்டியாளர்கள் மைக்கை எக்காரணம் கொண்டு கழற்றக்கூடாது. இது அடிப்படையானது”. இதை அப்போதே சொல்லித் தொலைத்திருக்கலாம். அவஸ்தைப்பட வைத்து பிறகு காட்சி தருவதுதானே ஆண்டவர்களின் வழக்கம்? என்றாலும் தலைவி சொல்வதால் மைக்கை அணிந்து கொண்ட மும்தாஜ், ‘பிக்பாஸிடம் பேச வேண்டும்’ என்கிற கோரிக்கையை கைவிடவில்லை. 

“உங்களுக்கு மட்டுமில்லைங்க.. நாங்க சில அடிப்படையான வசதிகள் கேட்டா கூட பிக்பாஸ் நிறைய அலைய விடறாரு. உங்களுக்காவது சில விஷயங்கள் வந்துடுது. எங்களுக்கு இல்லை. அப்புறம் ஏன்?” என்று அங்கலாய்த்தார், மஹத். 

அடுத்த பஞ்சாயத்து ‘சர்க்கரை’ வடிவத்தில் வந்தது. மதிய உணவு முடிந்த சிறிது நேரத்திலேயே சில முதலாளிகள் காஃபி கேட்டதால் நித்யா கிச்சனுக்குள் வர, வைஷ்ணவி ஆட்சேபித்தார். ‘மறுபடியும் சாயந்திரம் கேட்டாங்கன்னா என்ன பண்றது?” இது தொடர்பாக இருவருக்கும் உரசல் ஏற்பட, இந்தப் பஞ்சாயத்தை பாலாஜியிடம் எடுத்துச் சென்றார், வைஷ்ணவி. நித்யா தொடர்பான பிரச்சினையை ஏன் பாலாஜியிடம் எடுத்துச் செல்ல வேண்டும்? நித்யாவிடம் பிறகு பேசிய பாலாஜி, ‘தலைவி என்கிற முறையில் நீதான் பிக்பாஸிடம் பொருட்களை கேட்க வேண்டும். உன்னை டார்கெட் பண்ணா... உஷாரா இருந்துக்க’ என்று உபதேசம் செய்தார். 

பிக்பாஸிடமிருந்து அடுத்து வந்த அறிவிப்பை வாசித்தார் டேனி. ‘உதவியாளர்கள் அணி, நடனமாடி ‘எஜமானர்’களை மகிழ்விக்க வேண்டுமாம். இதற்காக மாலை கலை நிகழ்ச்சிகள் நடைபெறுமாம். இதெல்லாம் எந்த வீட்டில் ஐயா நடைபெறுகிறது? கலைநிகழ்ச்சிகளை எவர் சிறப்பாக செய்கிறாரோ.. அவருக்கு ‘முதலாளிமார்கள்’ கூடி ஆலோசனை செய்து பரிசு வழங்குவார்களாம். கலைநிகழ்ச்சி என்ற பெயரில் சில இடங்களில் ‘காபரே டான்ஸ்’ நடப்பது போன்ற தில்லுமுல்லு வேலைதான் இது. பெண்களை ஆபாசமாக சித்தரித்து வணிகத்தீனியாக்குவதில் பிக்பாஸ் நிகழ்ச்சியும் விலக்கல்ல. 

நடனமாடும் விஷயத்தில் பெண்கள் அணிக்கு உதவி செய்ய சென்றாயன் சென்றார் போலிருக்கிறது. இதை மஹத் ஆட்சேபிக்க. இருவருக்கும் சிறு முட்டலும் பிறகு சமாதானமும் நடந்தது. 

‘கலை நிகழ்ச்சிகள்’ ஆரம்பமாகின. மெத்தைகள் போடப்பட்டு, பழங்கள் வைக்கப்பட்டிருக்க, ஆண்கள் அதில் ஒய்யாரமாக அமர்ந்திருந்தனர். குத்துப்பாடலுக்கு ‘உய்.. உய்’ என்று விசிலடித்தனர். நோட்டுக்கட்டுக்களை தூக்கிப் போடாததுதான் பாக்கி. அதைத்தான் பரிசு என்கிற பெயரில் கொடுத்தார்கள் போலிருக்கிறது. இன்னமும் என்னென்ன ஆபாசங்கள் இந்த நிகழ்ச்சியில் நிகழவிருக்கிறதோ என்று தெரியவில்லை. ஆண்களின் கூச்சல்களும் விசில்களும் ஆபாசமாக இருந்தன. ‘அமைதி’ அனந்த்கூட சற்று உற்சாகம் காட்டினார். 

'நீதானே பொன் வசந்தம்' திரைப்படத்திலிருந்து, தானே பாடிய ‘சற்று முன்பு’ என்கிற பாடலை ரம்யா அருமையாகப் பாடினார். இது அவர் பாடிய பாடல்தானே... ஸோ வெளுத்து வாங்கிட்டார். ஐஸ்வர்யா பாடியது தத்தக்கா பித்தக்கா தமிழில் இருந்தாலும், அவர் வெளிப்படுத்திய உணர்வு தத்ரூபமாக இருந்தது. ‘காதல் என்பது மாயவலை’ என்றெல்லாம் டைமிங்காக பாடிக்கொண்டிருந்த போது ‘கேமிரா’ ஷாரிக்கின் பக்கம் திரும்பியது. இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் ஐஸு! 

நித்யா ஆண் வேட கொடுமையுடன் மும்தாஜூடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடினார். மற்ற விஷயங்களில் கறாராக இருந்த மும்தாஜ், ஏன் நடனம் ஆடும் விஷயத்திறகு ஆட்சேபிக்கவில்லை என்று தெரியவில்லை. ஒரு ‘நடிகையாக’ அவர் திரைப்படங்களில் ஆடியிருப்பது வேறு. அது அவரின் தொழில். ஆனால் ‘உதவியாளர்’ கேரக்ட்டரில் நடனமாடுவது நிச்சயம் இல்லை. மற்ற எவரும் கூட இதை ஆட்சேபிக்கவில்லை. ‘உதவியாளர்கள்’ என்பதற்காக நடனமாடவும் சொல்வீர்களா?’ என்று முன்பு ஆட்சேபித்த வைஷ்ணவியாலும் இதிலிருந்து தப்ப முடியவில்லை. 

யாஷிகா – ஐஸ்வர்யா கூட்டணியும், யாஷிகா –நித்யா கூட்டணியும் மிட்நைட் மசாலா பாடல்களுக்கு நடனமாடி முதலாளிமார்களை சிறப்பாக மகிழ்வித்தனர். ‘இதெல்லாம் கலைநிகழ்ச்சிகள்தானே. திரைப்படங்களிலும் பாடல்காட்சிகளிலும் இல்லாத ஆபாசமா’ என்றெல்லாம் சிலர் நியாயப்படுத்த முயலக்கூடும். நம் வீட்டின் வரவேற்பறைக்குள் நுழையும் ஆபாசங்களைப் பற்றிய கவனமும் விழிப்புணர்வும் ஆட்பேசங்களும் நமக்கு இருக்க வேண்டும். நிகழ்ச்சி என்பதைக் கடந்து, நம் வீட்டில், அலுவலகத்தில், வெளி உலகில் இருக்கும் ஒரு வேலையாளிடம் நாம் எத்தகைய எல்லைக்கும் செல்லலாம் என்கிற ரீதியில் இருக்கும் காட்சிகளை எதில் சேர்ப்பது என தெரியவில்லை. இதற்கு ஐஷ்வர்யா, யாஷிகா போன்ற இளம் தலைமுறையினர் ஆட்சேபிக்காதது ஒரு புறம் அபத்தம் என்றால், தாங்கள் செய்வது தவறு என்பதை உணர்ந்த ஒரு ஆண் போட்டியாளர் கூட இல்லை என்பது தான் பெருஞ்சோகம். ஒவ்வொருமுறை மும்தாஜ் முடியாது என மறுக்கும் போதும், கூடிப் பேசுகிறார்கள், கடுமையான தண்டனைகளை யோசிக்கிறார்கள். நீங்கள் எஜமானர்களாக போட்டியில் பங்கேற்கலாம். ஆனால், சென்ற சீசனில் எஜமானியாய் உள்ளே இருந்த சிலருக்கும் இன்னும் சமூக வலைதளங்களில் ' பணிவிடைகள்' நடந்துகொண்டு தான் இருக்கிறது. உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் என இருந்த ஓவியா போன்றவர்களைத் தான் இந்த உலகம் ரசித்திருக்கிறது, ரசிக்கும்.

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம். 

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

தன்னுடைய பாடலால் அதுவரை இருந்த உற்சாகத் தீயில் தண்ணீரை ஊற்றினார் மமதி. ‘பேசக்கூடாதுன்னா தண்டனை தர்றீங்க... இருக்குடா உங்களுக்கு ஆப்பு’ என்று அவர் பாடிய பாடலால் பிக்பாஸ் வீடே மயான அமைதியாயிற்று. உனைக்காது நான் இங்கு நானில்லையே என கமலின் பாடலில் இருந்து ஆரம்பித்தார் மமதி. அதற்கு பாலாஜி கொடுத்த ரியாக்ஷ்ன்கள், கறிக்கடை பாய் பாலிருக்கி பழமிருக்கி பாட, கவுண்டமணி கொடுத்த ரியாக்ஷனை நினைவுபடுத்தியது. இந்த இரண்டு நாட்களில் ஆண்கள் டீமுக்கு நடந்த ஒரே துன்பவியல் சம்பவம் இதுதான்.

வரும் நாட்களில் இதே போன்றதொரு சவால்களை ஆண்கள் செய்ய நேரும் போது இன்னமும் எத்தனை கொடுமையான காட்சிகளை காணவிருக்கிறோமோ என்று தெரியவில்லை.  

எஜமானர்கள் , பணியாளர்கள் என்ற பெயரில், கடந்த இரண்டு நாட்களாக நடந்த நிகழ்வுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை கமென்ட்டில் பதிவு செய்து உரையாடுங்களேன்