Published:Updated:

பிக்பாஸ் கமல்... அந்த இரண்டு விஷயத்துக்கு விசாரணை அவசியம்! #BiggBossTamil2

சுரேஷ் கண்ணன்
பிக்பாஸ் கமல்... அந்த இரண்டு விஷயத்துக்கு விசாரணை அவசியம்! #BiggBossTamil2
பிக்பாஸ் கமல்... அந்த இரண்டு விஷயத்துக்கு விசாரணை அவசியம்! #BiggBossTamil2

பிக் பாஸ் வீட்டின் நேற்றைய தினத்தை மும்தாஜ் தொடர்பான பரபரப்பு காட்சிகள் ஆக்ரமித்துக் கொண்டதைப் போல இன்று பாலாஜி – நித்யா விவகாரம் ஆக்ரமித்துக்கொண்டது. நித்யா வீட்டின் தலைவியான பின்னரும் அதற்கேற்ற தோரணையும் ஆளுமைத்திறனும் இல்லாமல் சக போட்டியாளரைப் போலவே சாதாரணமாக இருக்கிறார். தன் அதிகாரத்தை சிறப்பாக செயல்படுத்த முடியாத அப்பிராணியாக இருக்கிறார். 

பெண்களுக்காக இடஒதுக்கீடு செய்யப்பட்ட உள்ளாட்சி தேர்தல்களில் பெண்கள் வெற்றி பெற்றாலும் கூட அவர்கள் பெரும்பாலும் பினாமி வேட்பாளர்களாகத்தான் இருக்க முடியும். அதிகாரம் முழுக்க அவருடைய கணவரின் கையில்தான் இருக்கும்.  பெண்களின் முன்னேற்றத்திற்கான சமூகச் செயற்பாடுகளில் ஆர்வமாக இருக்கும் நித்யா, தன்னம்பிக்கையுடன் தானே அதற்கொரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். பிக்பாஸ் வீட்டின் பெரும்பாலோனோருடன் இணக்கமாக இருக்க முடியவில்லை என்பதுதான் அவருடைய ஒரே எதிர்மறையான அம்சம். உடனே கடந்து விடக்கூடிய ஓர் அற்பமான விவகாரத்தைக்கூட விவாதங்களின் மூலம் இழுத்துச் சென்று கெட்ட பெயரைச் சம்பாதித்துக் கொள்கிறாரோ என்று தோன்றுகிறது. மற்றபடி, உடல் உழைப்பைச் செலுத்துவதில் சிறப்பாகவே செயல்படுகிறார். 

இந்த சீஸனில் பாலாஜி மற்றும் நித்யா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முக்கிய காரணமே, அவர்களுக்கிடையே உள்ள பிரிவும், ஊடகங்களின் மூலம் வெடித்த சர்ச்சைகளும்தான். இதுதான் அவர்களின் முக்கிய தகுதி என்பது ஒருவகையில் கசப்பான நகைச்சுவை. இருவரையும் உள்ளே கொண்டு வந்தால் பல பரபரப்பான காட்சிகளை பதிவு செய்ய முடியும் என்கிற பிக்பாஸின் நோக்கம். அது வெற்றிகரமாக நிகழ்ந்துகொண்டும் இருக்கிறது. 

நித்யா, பாலாஜியுடன் இணக்கமான போக்கையே பெரும்பாலும் கடைப்பிடிக்க முயல்கிறார். பாலாஜி நட்பான மனநிலையில் பேசும் போது தானும் அதை பிரதிபலிக்கிறார். ‘தன் மகளுக்காகத்தான் இந்த நிகழ்ச்சிக்குள் வந்தேன்’ என்று சொன்னதை மனதில் இருத்திக் கொண்டு பொறுமையாக பல விஷயங்களைக் கடக்கிறார். அதைத் தாங்க முடியாத சமயங்களில்தான் இவர் அழ வேண்டிய சூழல்களும் ஏற்படுகின்றன. 

இன்னொரு புறம், பாலாஜியின் மனநிலையை கணிக்கவே முடிவதில்லை. சில சமயங்களில் மனைவியுடன் அன்பாக இருப்பதுபோல் தோன்றுபவர், வேறொரு சமயங்களில் எரிந்து விழுகிறார்; கோபமாக கத்துகிறார்; தானொரு கண்காணிப்பு குடிலுக்குள் இருக்கிறோம் என்பதை மறந்து ‘ம்யூட்’ செய்யப்படும்படியான ஆபாச வார்த்தைகளையும், மனதைப் புண்படுத்தும் சர்ச்சையான வார்த்தைகளையும் இறைக்கிறார். எனில் இதுதான் இவரது உண்மையான முகமோ என்று தோன்றுகிறது. அன்பாக பழகுவது எல்லாம், தன்னுடைய பொது சமூகத்தில் உருவாகியிருக்கும் தன் எதிர்மறை பிம்பத்தை போக்குவதற்கான நடிப்போ என்றும் தோன்றுகிறது. 

இன்றைய தினத்தில் பெண்கள் அணி ‘எஜமானிகளாக’ ஆன பின்பு, நித்யா பாலாஜியை வேலை வாங்க முயலும் சமயங்களில் எல்லாம் பாலாஜியிடமிருந்து எரிச்சலும் அதிருப்தியும் வசைகளுமே பல சமயங்களில் கிடைத்தது. தன் மனைவிக்குத் தானே பணிவிடை செய்ய வேண்டுமா என்கிற மனத்தடை அவருக்குள் பிரதிபலித்துக் கொண்டே இருந்தது. 

மமதி தவிர்த்து, மற்ற பெண் போட்டியாளர்களுடன் இணக்கமான அணுகுமுறையைக் கையாளும் பாலாஜி, நித்யாவிடம்  மட்டும் எரிந்து விழுவதிலிருந்து, நித்யாவை ஒரு சக போட்டியாளராக மட்டும் பார்க்கவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. வீட்டில் மனைவியின் மீது செலுத்தும் அதிகாரத்தையும் உரிமையையும் இங்கும் பயன்படுத்துகிறார். ‘என்னை சக போட்டியாளராக மட்டும் பார்க்கவேண்டும்’ என்று ‘வெங்காய’ சர்ச்சையில் முன்பு கூறிய பாலாஜி, இப்போதுதான் அதைக் கடைப்பிடிக்காதது முரண். 

இன்றைய தினத்தில் இன்னொரு கொடுமையும் நடந்தது. தனக்கு இழைக்கப்படும் அநீதிகளைப் பற்றி சக பெண் போட்டியாளர்களிடம் நித்யா முறையிடும்போது ‘நீங்க தள்ளி வந்துடுங்க” ‘சரி விடுங்க’ என்பது மாதிரி நித்யாவை கட்டுப்படுத்தும் செயல்களைத்தான் மற்ற பெண்கள் பெரும்பாலும் செய்தார்கள். பாதகம் செய்த ஆணை விட்டு விட்டு, ‘நீ ஒழுங்கா இருக்க வேண்டியதுதானே’ என்பது மாதிரி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கே மேலும் தண்டனை தரும் சமூக அவலம் சார்ந்த நடைமுறைகள் பிக் பாஸ் வீட்டிலும் பிரதிபலித்தன. படித்தவர்களும் இதில் விதிவிலக்கில்லை. 

‘பெண் பணியாளர்களை அவமதிப்பாக’ நிகழ்த்திய விஷயத்தில் பெண்ணுக்கே உரிய ஆக்ரோஷத்துடன் பொங்கிய வைஷ்ணவி, நித்யா தன் குறையை வந்து இவரிடம் முறையிடும் போது “யாராவது திட்டினா ரெண்டு தடவை சொல்லிப் பார்க்கலாம். இல்லைன்னா இந்தக் காதில வாங்கி அந்தக் காதுல விட்டுட்டு போயிட்டே இருக்கணும்’ என்று பிற்போக்கு மனோபாவத்தையே ஒரு சமயத்தில் பிரதிபலித்தார். ‘நான் இப்ப உங்களை கெட்ட வார்த்தைல திட்டினா சும்மா இருப்பீங்களா?” என்கிற நித்யாவின் தர்க்கத்தை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. நித்யாவின் சார்பாக பாலாஜியிடம் மோதினால் தனக்கும் வசைகள் விழலாம், எதற்குப் பிரச்னை’ என்பது பெண்களின் தயக்கத்திற்கு காரணமாக இருக்கலாம். 

என்றாலும் மும்தாஜ் உள்ளிட்ட சில பெண்கள் நித்யாவிற்கு அனுசரணையாக இருந்தனர். பாலாஜியின் அழிச்சாட்டியங்கள் மிகும்போது பிக்பாஸிடம் முறையிட்டனர். நித்யாவும் தன் பிரச்னையை கேமரா முன்பு உருக்கமாக முறையிட்டார். ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ மாதிரி இது போன்ற பரபரப்பு ஃபுட்டேஜ்களுக்காக காத்திருக்கும் பிக்பாஸ் உடனே தலையிட்டுவிடுவாரா என்ன? பொறுமையாக இழுத்து பிறகு ‘நீதி விசாரணை’ என்கிற பெயரில் அதையும் பரபரப்பு ‘ஃபுட்டேஜ்களாக’ மாற்றிக்கொள்வார். சரியான சமயத்தில் அல்லாமல் தாமதமாக தரப்படும் நீதி, தண்டனையை விடவும் கொடுமையானது. 

‘உங்க பொண்ணுக்காக நீங்க எல்லாத்தையும் விட்டுருங்களேன்’ என்கிற சென்றாயனின் ஆலோசனையையும் பாலாஜி கேட்பதாயில்லை. “இந்த நிகழ்ச்சியை நிச்சயமா உங்க பொண்ணு பாத்திட்டு இருக்கும். ஒரு பொது நிகழ்ச்சிக்குள்ளும் நீங்க இதே போல சண்டை போட்டுட்டு இருந்தீங்கன்னா… அதோட மனசு பாதிக்கும்ங்கிறதை நினைவில வைச்சுக்கங்க. பெண் குழந்தைகளுக்கு தகப்பனின் அரவணைப்பு முக்கியமானது’ என்ற டேனியின் உபதேசம் சரியானது. பாலாஜியின் மனதில் ஏதோ ஒரு சந்தேகம் புகைந்து கொண்டேயிருக்கிறது. அதையே விதம் விதமான வடிவங்களில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். ‘என்னாலதான் உனக்கு புகழ் கிடைக்குது.. அதனாலதான் இங்க வந்திருக்க..  வெளியே போயிடு’ என்றெல்லாம் தன்னை மையப்படுத்தியே யோசிக்கிறார். 

பதினொன்றாம் நாளின் நிகழ்வுகள் பற்றிய தொகுப்பைப் பார்ப்போம். 

முன்பே குறிப்பிட்டது போல பாலாஜி – நித்யா மோதலுடன் நிகழ்ச்சி துவங்கியது. பத்தாம் நாளின் சம்பவங்கள் இன்னமும் முடியவில்லை. ‘எத்தனை முறை இவர் திட்றதை பொறுத்துக்கறது’ என்று வெடித்த நித்யாவை ‘எந்த மூஞ்சை வெச்சிக்கிட்டு இந்த ஷோவிற்கு வந்தே?’ என்பது உள்ளிட்டு பல சர்ச்சையான வார்த்தைகளை பாலாஜி பயன்படுத்தினார். சென்றாயனின் சமாதானத்தை அவர் ஏற்கவில்லை. மும்தாஜூம் இது தொடர்பாக பாலாஜியிடம் பேசினார். ‘சாவட்டும் மேடம்’ என்பது போல் கோபத்துடன் வார்த்தைகளை இறைத்தார் பாலாஜி. ‘அல்ப ஷோ… இதுக்காக…. ‘என்ற பாலாஜி எதற்காக இந்த அல்ப ஷோவிற்குள் வந்தார் என்று தெரியவில்லை. 

‘எவண்டி உன்னைப் பெத்தான்’ என்று பதினோறாம் காலையில் ஒலித்த பாட்டால் சிம்புவின் நினைவு வந்து கண்கலங்கினார் மஹத். தமிழிற்கு பெருமை சேர்த்திருக்கும் இப்படியொரு காவியப்பாடலைக் கேட்டு தமிழக மக்கள்தானே கண்கலங்க வேண்டும் மஹத்?

முதல் சீஸனில் பிரிவுத் துயரத்தால் பலர் அவ்வப்போது கேமரா முன்னும் மற்ற சமயங்களிலும் கண்கலங்கிக் கொண்டே இருந்தார்கள். குறிப்பாக வையாபுரியின் கண்ணீர் ஆறாக ஓடியது. ஆனால் இந்த சீஸனில் இது போன்ற ‘அழுவாட்சி’ காட்சிகள் குறைவாகவே இருக்கின்றன. தன்னுடைய மகள் குறித்த நினைவில் துவக்க நாளில் நித்யா கலங்கியதோடு சரி.

‘லக்ஸரி மார்க் போயிடும்னு. மஹத் ரொம்ப எக்ஸைட் ஆகறாரு.. இந்த fun-க்கு பின்னாடி நிறைய gun- இருக்கு’ என்றெல்லாம் ரைமிங்காக டேனியிடம் எச்சரித்துக் கொண்டிருந்தார், அனந்த். பெண் பணியாளர்களிடம் மிகையாக வேலை வாங்க வேண்டாம் என்று அனந்த் சொல்லும் ஆலோசனை மஹத்திற்கு பிடிக்கவில்லை. டேனியை தனியாக அழைத்துச் சென்று எரிச்சல்படுகிறார். மஹத்தின் ஆட்டம் ரொம்ப ஓவராக இருக்கிறது என்பது சரிதான். 

நித்யாவின் மீதுள்ள கோபம் காரணமாக அவர் எந்தப் பணியையும் செய்ய பாலாஜி அனுமதிக்கவில்லை. எரிந்து எரிந்து விழுந்தார். இது குறித்து பிக்பாஸிடம் முறையிட்டார் நித்யா. இதர பெண்கள் வந்து சமாதானம் பேசினாலும் பாலாஜி அடங்குவதாக இல்லை. ‘நானா இல்லாம வேற போட்டியாளரா இருந்தா., இப்படி திட்டுவாரா?’ என்று நித்யா கேட்பது சரியானது. 

பிக்பாஸின் அதிரடியான அறிவிப்பு வந்தது. ‘எஜமானர்கள் vs உதவியாளர்கள்’ டாஸ்க்கில் சரியாக பணிபுரியாத உதவியாளரை, எஜமானர்கள் கூடி ஆலோசித்து தேர்ந்தெடுக்கலாம் என்றார் பிக்பாஸ். ஆண்கள் அணி கூடி நித்யாவை தேர்ந்தெடுத்தது அநியாயம். இதன் பின்னணியில் பாலாஜிதான் இருக்க வேண்டும். 

தன் சொந்தப் பிரச்னையால்தான் பாலாஜி அப்படி நடக்கிறார் என்பது வெளிப்படை. எனில் இதர ஆண்கள் ஏன் அவருக்கு சாதகமாக நடக்க வேண்டும்? மும்தாஜை தேர்ந்தெடுக்க பயம். கிடைத்த பலியாடு நித்யா. ‘உன்னை எலிமினேட் செய்ய வைக்கறேன் பாரு.. என்று முன்பு சொன்ன பாலாஜி, இந்தச் சந்தர்ப்பத்தை உபயோகித்துக் கொண்டார் என்று தோன்றுகிறது. இதற்கு மற்ற ஆண்களும் உடன்பட்டது அநீதி.

‘அவர் வேலை செய்ய அனுமதிக்கலைன்னா நான் என்ன செய்ய முடியும்? என்கிற நித்யாவின் கேள்வி பிக்பாஸ் உள்ளிட்ட எவர் காதிலும் விழவில்லை. ‘நான் சரியாத்தான் இருக்கேன். கடவுளுக்குத் தெரியும்’ என்றுதான் அவரால் புலம்ப முடிகிறது. 

இந்த அறிவிப்பின் இன்னொரு பகுதி இன்னமும் கொடுமையானது. சிறந்த எஜமானரைத் தேர்ந்தேடுக்க வேண்டுமாம். அதையுமே எஜமானர்கள் கூடிப் பேசித்தான் தேர்ந்தெடுக்க வேண்டுமாம். ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட போது தங்களுக்கு சாதகமாக போட்டுக் கொண்ட சட்டங்களை விடவும் கொடுமையானதாக இருக்கிறது பிக்பாஸின் விதிமுறைகள். சிறந்த எஜமானராக ‘டேனியலை’ தேர்ந்தெடுத்தார்கள். 

‘சிறப்பாக பணிபுரியாத’ உதவியாளர் அடுத்த வார நாமினேஷனுக்கு நேரடியாக தகுதியாவார். இதைப் போலவே ‘சிறந்த’ எஜமானர் நாமினேஷனில் இருந்து காப்பாற்றப்படுவார். 

பிக்பாஸிடமிருந்து வந்த புதிய அறிவிப்பால் காட்சிகள் தலைகீழாக மாறின. பெண் போட்டியாளர்கள் எஜமானர்களாகவும் ஆண்கள் ‘உதவியாளர்களாகவும்’ இருப்பார்கள். பெண்கள் அணி உற்சாகமாக இதை வரவேற்றது. ‘சோழர் பரம்பரையில் ஒரு எம்.எல்ஏ..’ என்கிற ‘அமாவாசை’ தோரணையில் சாய்ந்து கெத்தாக உட்கார்ந்தார் மமதி. ‘செத்தாண்டா சேகரு’ என்று ஜாலியாக துயரப்பட்டார் டேனி. இந்த லக்ஸரி டாஸ்கிற்கும் 1600 மதிப்பெண்கள். 

ஷாப்பிங் சவாலில் ஜெயித்ததற்காகத்தான் ஆண்கள் அணி ‘எஜமானர்களாக’ தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். எனில் பெண்கள் அணி எந்த முறையில் ‘எஜமானர்களாக’ தேர்ந்தெடுக்கப்பட்டது? பிக்பாஸ் வீட்டில் லாஜிக் என்கிற பேச்சுக்கே இடமில்லை. 

ஆண்களிடம் தரப்பட்டிருந்த அதிகாரம் பிடுங்கப்பட்டு  பெண்களிடம் வழங்கப்பட்டதில் ‘தமிழ் சினிமாவின்’ நூற்றாண்டுகால திரைக்கதையின் தன்மையும் உள்ளது. வில்லனால் நீண்டகாலம் பாதிக்கப்பட்டவர், திருப்பி தாக்கும் போது அல்லது ‘திடீர்’ நாயகனால் தாக்கப்படும் போது ஆசுவாச உணர்வில் பார்வையாளர்கள் உற்சாகம் கொள்வார்கள். ‘அப்படித்தான் நல்லா அடி’ என்று கூவுவார்கள். அதே தர்க்கம்தான் இந்த மாற்றத்திலும் இருக்கிறது. 

ஆனால் ஆண்களைப் போல் பெண்கள் அணி அலப்பறைகள் செய்யவில்லை. பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடவில்லை. பெண்களிடம் இயற்கையாக படிந்துள்ள தாய்மையுணர்வு ஆண்களைப் பழிவாங்க முயலாததற்கு ஒரு காரணமாகச் சொல்லலாம். 

இன்னமும் கேட்டால் இது ஆண்களுக்கு சாதமாகவே இருந்தது. வேலைக்காரர் தோரணயில் இருந்த ஷாரிக்கிடம் ஐஸ்வர்யா கொஞ்சிக் கொஞ்சி பேசிக் கொண்டிருந்தார். ‘யாரையாவது லவ் பண்றீங்களா’ என்று ஐஸ்வர்யா கேட்க.. ‘ஆமாம்மா.. அப்படித்தான் இருக்கு.. சொல்ல பயமா இருக்கு” ஷாரிக் பம்முவது போல நடிக்க.. ப்பா டேய்.. உலக நடிப்புடா இதெல்லாம். 

‘ரோஸ்மில்க் வாங்கித் தரேண்டா தம்பி..’ என்கிற மெர்சல் சமந்தா போல.. பாலாஜியை வேலை வாங்கிக் கொண்டிருந்தார் நித்யா.. ‘லைட்டா டிகாக்ஷன் போட்டு காபி எடுத்துட்டு வா .. தம்பி.. சூடா இல்ல பாரு. சுட வெச்சி எடுத்துட்டு வா தம்பி.. துணியை அயர்ன் பண்ணி வெச்சிடு தம்பி… என்றெல்லாம் அவர் பாலாஜியை கலாய்த்தது பார்க்க ஜாலியாக இருந்தது. எரிச்சலை மறைத்துக் கொள்ள முடியாமல் தவித்தார் பாலாஜி. ஆனால் ஒரு கட்டத்தில் தன் கோபத்தை வெளிப்படையாகவே காட்டினார். 

‘காந்தக் கண்ணழகி..இங்க பூசு… ம் மேலே பூசு’’ என்கிற கவுண்டமணி மாதிரி, தன் மீது விசிறச் சொன்ன யாஷிகாவின் கட்டளைகளை மட்டும் எவ்வித தயக்கமும் இல்லாமல் சிறப்பாக பாலாஜி நிறைவேற்றினார். என்னவொரு வித்தியாசம்? தரமான சம்பவம் இது. 

பெண்கள் உதவியாளர்களாக இருக்கும் போது ஆயிரம் அலப்பறைகள் செய்த ஆண்கள், இப்போது பெண்களால் வேலை வாங்கப்படுவதை விரும்பவில்லை என்று வெளிப்படையாகவே தெரிகிறது. ஆண் குழந்தைக்கும் பெண் குழந்தைக்கும் இடையே  பாலினக் கோடு போட்டு பாரபட்சமாக வளர்க்கும் நம் கலாசாரத்தின் வெளிப்பாடு இது. ‘பெண்ணை விட தான் உயர்ந்தவன்’ என்கிற எண்ணம் ஆண்களிடம் இளமையிலிருந்தே அழுத்தமாக படிகிறது. இதற்கு தாய்மார்களான பெண்களும் காரணமாக இருக்கிறார்கள் என்பதுதான் கொடுமை. 

வைஷ்ணவி காஃபி போட்டு தரச் சொல்லும் போது பாலாஜி கோபித்துக் கொண்டார். ‘எங்க வீட்லலாம் இந்த டைப்ல காஃபி போட மாட்டாங்க’ என்பது போல் யதேச்சையாக அவர் சொல்ல, ‘இது உங்க வீடு இல்ல. எங்க வீடு. நாங்கதான் இங்க பாஸ்’ என்று லா பாயிண்ட்டை சரியாகப் பிடித்தார் வைஷ்ணவி. 

இதைப் போலவே டேனி எதற்கோ சத்தமாக பேச, ‘எஜமானர்கள் முன்பு பணியாளர்கள் இப்படி சத்தமாக உரையாட மாட்டார்கள். யாரையாவது கூப்பிடணும்னா கிட்ட போய் கூப்பிடுங்க.. கத்தாதீங்க…கேரக்ட்டருக்குள்ள இருங்க’ என்று மமதி சொன்ன லாஜிக்கும் சரியானது. 

ஆண்கள் செய்யும் கொடுமைகளை தாங்க முடியாமல் கோயிலுக்குச் சென்று முறையிடம் பெண்களைப் போல பிக்பாஸிடம் முறையிட்டார் வைஷ்ணவி. ‘அம்பாள்.. எந்தக் காலத்திடா பேசினாள்?’ என்கிற பராசக்தி வசனம்தான் நினைவிற்கு வருகிறது. கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசிய பாலாஜிக்கு ‘இன்று முழுவதும் பேசக்கூடாது’ என்கிற தண்டனையைத் தந்தார் நித்யா. இதை வேண்டா வெறுப்பாக கடைப்பிடித்தார் பாலாஜி.

‘இந்தச் சவால் தலைகீழாக மாறும் போது ரொம்பவும் ஜாலியாக இருக்கும் என்று கற்பனை செய்து வைத்திருந்தேன். இப்படி சண்டையாகவே போய்க் கொண்டிருக்கிறதே’ என்று வருத்தப்பட்டார் ரித்விகா. “துவக்க நாட்கள் சந்தோஷமாக போயின. அப்படியே இருக்கும்னு நெனச்சேன். கஷ்டம் தெரியல. இப்போது ஒரே பஞ்சாயத்தும் சண்டையுமா இருக்கு. மீத நாட்களை எப்படி இங்க கழிக்கப் போறேன்னு தெரியல’ என்று கலங்கினார் ரம்யா. (பிக்பாஸ் தொடர்பா ஹோம்ஒர்க் செய்து விட்டு வரக்கூடாதா மேடம்? விக்ரமன் படம் மாதிரி வீடு ஒரே ஜாலியா இருந்தா, பிக்பாஸ் பிழைப்பு எப்படி நடக்கும்?)

பாலாஜியுடன் நிகழ்ந்து கொண்டிருக்கும் தன் பிரச்னையை மும்தாஜிடம் சென்று முறையிட்டார் நித்யா. உடல்நலம் குன்றியிருப்பதால் மும்தாஜை நிகழ்ச்சியில் இன்று பெரும்பாலும் பார்க்க முடியவில்லை. ‘உலகமே உன்னை எதிர்த்தாலும்.. நீயா உன் தோல்வியை ஒப்புக்கிற வைக்கும்’ என்கிற அஜித் பஞ்ச் வசனத்தைப் போல ‘விவேகமாக’ பேசி நித்யாவிற்கு ஆறுதல் சொன்னார் மும்தாஜ். ‘உன்னை அப்படில்லாம் விட்டுட மாட்டோம். நீ செய்யறது கரெக்ட்டுன்னு உங்க மனசுக்கு பட்டா அதற்காக இறுதி வரைக்கும் போராடுங்க.. நான் இங்க தனியா நின்னு அப்படிச் செய்யலையா?’ என்ற மும்தாஜின் கருத்து ரொம்பவும் சரியானது. 

பெண்கள் சார்ந்த கலைநிகழ்ச்சிகளைப் போலவே ஆண்களுக்கும் அது தொடர்பான அறிவிப்பு வந்தது. 

‘கும்பிடறேன் சாமியோவ்’ என்கிற தெருக்கூத்துக் கலைஞர்களின் பாணியில் டேனியும் பாலாஜியும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கத் துவங்கினா். ‘ஒத்த சொல்லால’ என்கிற ‘ஆடுகளம்’ திரைப்படத்தின் பாடலுக்கு ரகளையாக ஆடினார் பொன்னம்பலம். லுங்கியை தொடைக்கு மேல் கட்டிக் கொண்டு ஆடியதை ‘கவர்ச்சி நடனத்தின்’ வகையில் சேர்க்க முடியுமா என்று தெரியவில்லை.

‘டண்டணக்கா’ என்கிற டி.ஆரின் புகழைச் சொல்லும் பாடலுக்கு சிறப்பாக நடனமாடி மகிழ்வித்தார் சென்றாயன். ‘வேர் ஈஸ் த பார்ட்டி’ பாடலுக்கு ஷாரிக், மஹத், அனந்த்’ கூட்டணி ஆடியது. (ஆம். அனந்த்). மஹத்தின் நடனம் சிறப்பாக இருந்தது. 

சக போட்டியாளர்களைப் போல் நடித்துக் காட்டும் நிகழ்ச்சியை பாலாஜி அபாரமாக கையாண்டார். இவரிடம் நல்ல காமெடி சென்ஸ் இருக்கிறது. ஆனால் எதிர்மறையான குணங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டால் சிறப்பாக இருக்கும். 

‘இசை எங்கிருந்து வருது?’ என்பதற்காக முன்பு  கோபப்பட்ட அனந்த்தை அப்படியே நடித்துக் காட்டினார் பாலாஜி. இதை பார்த்துக் கொண்டிருந்த அனந்த் புன்னகையுடன் ரசித்தார். ரித்விகாவின் உடல்மொழியை பாலாஜி நகலெடுத்துக் காண்பித்ததைப் பார்த்து ரித்விகா வெடித்து சிரித்தார் இதர பார்வையாளர்களும் சிரித்து மகிழ்ந்தனர். பெண்களிடம் வழிவதில் மஹத் காட்டும் ஆர்வத்தை டேனியல் சிறப்பாக நடித்துக் காட்டினார். ரகளையான நகைச்சுவையாக அது இருந்தது.  ‘மச்சி.. ஓப்பன் தி பாட்டில்’ பாடலுக்கு ஷாரிக்கும் மஹத்தும் இணைந்து ஆடினர்.

நித்யா பரிசுகளை அறிவித்தார். பொன்னம்பலம், சென்றாயன், அனந்த் ஆகியோர்களுக்கு பரிசு அளிக்கப்பட்டது. ‘இன்னமும் என்னென்ன நடக்கப் போவுதோ’ என்று பாவனையாக கவலைப்பட்டது பின்னணிக்குரல்.

இது ஒரு புறம் இருக்க..இன்றைய பிக்பாஸில் சென்றாயனோடு ஆண்கள் டீம் சண்டை போடுவார்கள் போல...  அது பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்...

பெண்களின் மீது நிகழ்த்தப்படும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக சர்வதேச அளவில் செய்யப்பட்ட சர்வே ஒன்றின் முடிவு ஒன்று சமீபத்தில் வெளியானது. அதன்படி ‘உலக நாடுகளிலேயே இந்தியாதான் அதிக ஆபத்தான இடம்’ என்று வந்திருக்கும் செய்தி நமக்கு அதிர்ச்சியையும் எச்சரிக்கையையும் தரக்கூடியது. ‘சர்வதேச புகழ் நமக்கு எப்படில்லாம் கிடைக்குது.. பாத்தியா..” என்று தீவிரவாதி நாஸரிடம் குருதிப்புனல் திரைப்படத்தில் வசனம் சொல்லுவார் கமல். இந்தப் புகழும் அப்படிப்பட்ட எதிர்மறையானதுதான். 

இந்தச் சூழலில் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் எந்தவொரு வன்முறையும் கவனமாக கண்காணிக்கப்பட வேண்டியது; கண்டிக்கப்பட வேண்டியது. ஊடகங்களுக்கும் இது சார்ந்த பொறுப்புகள் அதிகமாக உள்ளன. 

‘ஆண் எஜமானர்கள்’ – ‘பெண் உதவியாளர்கள்’ தொடர்பான பகுதியில் ஆண்களின் சில செய்கைகள், சமிக்ஞைகள் எல்லையை மீறியிருந்தன. பெண்களின் ஆட்சேபத்தையும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. ‘task’ என்கிற பெயரில் தங்களின் அத்துமீறல்களை நியாயப்படுத்தினர். இதற்கு பிக்பாஸ் தந்த மறைமுக அழுத்தமும் காரணமாக இருந்திருக்கலாம். 

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம். 

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun


இதைப் போலவே ‘குடும்ப வன்முறை’யில் சிக்கித்தவிக்கும் இந்தியப் பெண்களின் சதவீதமும் அதிகமே. உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் அவர்கள் எதிர்கொள்ளும் கொடுமைகள் அதிகம். பிக்பாஸ் நிகழ்ச்சியில் நித்யாவிற்கு பாலாஜி இழைக்கும் அநீதியும் இதையேதான் பிரதிபலிக்கிறது. 

முதல் வார விசாரணயில் கமல்ஹாசன் ‘பாலாஜி’ விஷயத்தைக் கண்டுகொள்ளவேயில்லை. விட்டுப் பிடிக்கலாம் என்று காத்திருக்கிறாரா என்று தெரியவில்லை. இந்த வாரத்திலாவது, இந்த இரண்டு விஷயங்களைப் பற்றியும் பாரபட்சமின்றி நியாயவுணர்வுடன் அவர் பஞ்சாயத்து செய்வார் என்று நம்புவோம்.