Published:Updated:

பிக் பாஸ் சாம்பியன் ஆக இவருக்குத்தான் வாய்ப்பு அதிகமோ?! #BiggBossTamil2

சுரேஷ் கண்ணன்
பிக் பாஸ் சாம்பியன் ஆக இவருக்குத்தான் வாய்ப்பு அதிகமோ?! #BiggBossTamil2
பிக் பாஸ் சாம்பியன் ஆக இவருக்குத்தான் வாய்ப்பு அதிகமோ?! #BiggBossTamil2

சண்டை, சமாதானம் என்று இரண்டு விஷயங்களிலும் பிக்பாஸ் வீடு இன்று சமநிலையுடன் காணப்பட்டது. பணியாளர்கள் – உதவியாளர்கள் போட்டி முடிந்த பிறகு ஒருவரையொருவர் கலாய்த்துக் கொண்டு ஜாலியாக விளையாடினார்கள். சில தனிப்பட்ட உரசல்களும் இருக்கத்தான் செய்தன. சிலரின் மோசமான குணங்கள் மேலும் அம்பலப்பட்டன. ‘அட’ என்று வியக்க வைக்கும் அளவிற்கு சிலரின் நேர்மை புலப்பட்டது. 

ஆண்-பெண் சமத்துவத்தை நோக்கி நாம் பயணிப்பதற்கான தூரம் இன்னமும் அதிகம் என்பதை பணியாளர்கள்-உதவி யாளர்கள் போட்டி உறுதிப்படுத்தியது. இதில் பெண்கள் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையோடு செயல்பட, ஆண்களால் தங்களின் அகங்காரத்தையும் ஆதிக்க மனோபவத்தையும் விளையாட்டுக்காக கூட விட்டுத்தர முடியவில்லை. பெண்ணோடு ஒப்பிடும் போது ‘தான் உயர்ந்தவன்’ என்கிற உயர்வு மனப்பான்மை ஆண்களின் பிரக்ஞையிலேயே ஆழமாக ஊறிப்போயிருக்கிறது. பிக்பாஸ் வீட்டு ஆண்களின் மனோபாவத்திலும் இது பிரதிபலிக்கிறது. இது நிச்சயம் மாற வேண்டும். 

பத்து நாட்கள் கடந்த நிலையில் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் கவனிக்க முடிகிறது. தலைமுறைகள் கடக்க கடக்க அவர்களுக்குள் இருக்கும் சமூகவுணர்வு, அரசியல் விழிப்புணர்வு, சுயமரியாதை போன்ற அடிப்படையான உணர்வுகள் இளையதலையிடம் குறைந்து கொண்டே வருகின்றன. இளைஞர்கள் தன்னை மட்டுமே மையப்படுத்தி சுயநலத்துடன் யோசிக்கிறார்கள். சுயநல ஆதாயங்களுக்காக அதிகாரத்திற்கு முன் எவ்வளவு வேண்டுமானாலும் அடிபணிய தயாராக இருக்கிறார்கள். “ரூல்ஸ் படி..  ஆம்பளேங்க… இன்ன சொன்னாலேம் பொம்ளேங்க செய்ணும். நான் சேய்வேன்’ என்று மழலைத் தமிழில் உளறிக் கொட்டிய ஐஸ்வர்யா ஓர் உதாரணம். 

இவர்களோடு ஒப்பிடும் போது முந்தையை தலைமுறையினரிடம் சுயமரியாதையுணர்வு கூடுதலாக இருக்கிறது. மும்தாஜ் இதற்கு உதாரணம். இதைப் போலவே ஆண்களும் பெண்களும் தீண்டிப் பழகுவதில் இளைய தலைமுறை தாராளவுணர்வுடன் இருக்கிறது. இவர்கள் பழகுவது ‘விளையாட்டா, விவகாரமா’ என்பதைக் கண்டறிவது சிரமமாக இருக்கிறது. ஆனால் இந்த விஷயத்தில் கடந்த தலைமுறையினர் சற்று கவனமாக இருக்கின்றனர். தவிர்க்க முடியாத கால மாற்றங்கள் இவை. 

ஆண்களால் இழைக்கப்படும் அநீதி சார்ந்த விஷயத்தில் ஏறத்தாழ அனைத்து பெண்களுக்குமே புகார் இருப்பது ஒருபுறம் இருந்தாலும் இது சார்ந்து அவர்களுக்குள் ஒற்றுமையில்லை என்பது பெரிய நடைமுறைப் பிரச்னை. இது அவர்களின் முன்னேற்றத்தை பின்னடையச் செய்யும். உதாரணமாக மாமியார் –மருமகள் பிரச்னையில் மருமகள் பக்கம் நியாயம் இருப்பதை அறிந்தாலும் தன் மகன் பக்கமே நிற்கும் மாமியார்களே அதிகம். பாதிக்கப்பட்ட பெண்களை, பெண் சமூகத்தின் ஒரு பகுதியே ஆதரவு தராமல் தனிமைப்படுத்துகிறது. இதையும் பிக்பாஸ் வீட்டில் பார்க்க முடிகிறது. 

பெண்கள் அணியின் எஜமானர்கள் சவால் முடிந்த போது, ‘சரியாக வேலைகள் செய்யாத, நன்மதிப்பைப் பெறாத உதவியாளரை தேர்வு செய்யலாம்’ என்கிற வாய்ப்பு பெண்களுக்கு தரப்பட்டது. இதன் மூலம் தேர்வு செய்யப்படுபவர் நேரடியாக நாமினேஷனுக்கு செல்வார். நித்யாவைத் தொடர்ந்து ஆபாசமாகவும் அவமதிப்பாகவும் பேசிய பாலாஜியை தேர்வு செய்வதற்குப் பதிலாக ‘உடல்நிலையை’ காரணம் காட்டி அனந்த்தை தேர்வு செய்தது பெண்கள் அணி. இவர்கள் நித்யா பக்கம் நின்றிருக்கலாம். 

பன்னிரெண்டாம் நாள் நிகழ்வுகளின் தொகுப்பைப் பற்றிப் பார்ப்போம். 

பெண்கள் உதவியாளர்களாக இருக்கும் போது 07:30 மணிக்கே அடித்த அலாரம், ஆண்கள் உதவியாளர்களாக இருக்கும் போது எட்டு மணிக்கு அடித்தது. என்னவொரு பாரபட்சம்? 

‘டங்காமாரி ஊதாரி’ என்கிற ஹைடெக் குத்துப்பாடல் ரகளையாக ஒலிக்க ஆரம்பித்தது. ‘அழுக்கு மூட்டை மீனாட்சி, மூஞ்சைக் கழுவி நாளாச்சு’ என்கிற வரி வரும் போது பல விடியாமூஞ்சிகளை காமிரா காண்பித்தது. பெண்கள் அணியுடன் இணையாமல் தனியாக ஆடிக் கொண்டிருந்தார் நித்யா. 

ஜனனியின் கால் விரல்களுக்கு நெயில் பாலிஷ் வைத்துக் கொண்டிருந்தார் மஹத். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா? கருவாடு வாசனைக்கு சுற்றும் பூனை போல, பெண்களின் பின்னாலேயேதான் சுற்றுகிறார் மஹத். யாஷிகாவின் பின்பக்கத்தை தடவிய இவர், இன்னொரு சந்தர்ப்பத்தில் ‘கல்யாணம் பண்ணிக்கலாமா?’ என்று யாஷிகாவிடம் கேட்கிறார். ‘ஈஷிகா’ என்று பெயரை மாற்றி விடலாம் எனுமளவிற்கு இவரிடம் ‘ஈஷிக்’ கொண்டேயிருக்கும் யாஷிகா, ஒரு சமயத்தில் ‘மஹத் என்னோட பிரதர்’ என்கிறார். என்னங்கடா நடக்குது இங்க?... இந்த லட்சணத்தில் ‘யாஷிகாவையும் மஹத்தையும் சேர்த்து’ பாத்ரூமில் தள்ளி விடுகிறார்களாம். அது ஒன்றுதான் பாக்கி. 

‘நம்ம ஓவரா பண்றோம்-னு பாய்ஸ் டீம் சொல்றாங்க.. நம்ம என்ன அப்படியா பண்றோம்?” என்று ஜனனியிடம் வைஷ்ணவி சொல்லிக் கொண்டிருந்தார். ஆண்கள் செய்த அலப்பறைகளோடு ஒப்பிடும் போது பெண்கள் அணி மரியாதையாகத்தான் நடத்துகிறது என்பதே நாம் கண்ட காட்சிகளின் மூலம் உணர்ந்த உண்மை. 

“நித்யா மாதிரி அடங்காம இருந்தியின்னா தூக்கிப் போட்ருவன் பார்த்துக்க’ என்று குக்கரிடம் பேசிக் கொண்டிருந்தார் பாலாஜி. முன்பே சொன்னது போல் கிச்சன் அமைந்திருக்கும் இடத்தின் வாஸ்து சரியில்லை. அந்த இடத்தில்தான் பெரும்பாலான சண்டைகள் உற்பத்தியாகின்றன. 

அவமதிப்பான தோரணையுடன் பாலாஜி தந்த சாப்பாட்டை நித்யா உண்ண முடியாமல் அவதிப்பட்டார். அவரின் கோபம் நியாயமானது. டேனி சமாதானப்படுத்தியதற்காக சிறிது சாப்பிட்டவர் மீதவுணவை குப்பையில் போட்டார். ‘சாப்பாட்டை யாராவது வீண் செய்வாங்களா.. எத்தனை பேர் சாப்பாடு இல்லாம கஷ்டப்படறாங்க தெரியுமா’ என்று இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு ஓவராக சீன் போட்டார் மஹத். ‘நான் எச்சில் செய்ததை மற்றவர்கள் பயன்படுத்த மாட்டார்கள். அப்படி பயன்படுத்துவதிலும் எனக்கு விருப்பமில்லை. அதனால்தான் குப்பையில் போட்டேன்’ என்கிற நியாயமான காரணத்தை நித்யா சொன்னார். இதர சமயங்களில் சில உணவுகள் அப்படி வீணாகின்றன என்பதையும் சுட்டிக் காட்டினார். 

‘நாங்கள்லாம் எவ்ள கஷ்டப்பட்டு காலைல எழுந்திரிச்சு உணவு தயாரிச்சோம் தெரியுமா?” என்று புலம்பியது ஆண்கள் அணி. இதே ஆண்கள் வீடுகளில் ‘உணவு பிடிக்கவில்லை’ என்பதையொட்டி எத்தனை சண்டைகள் போட்டிருப்பார்கள், எத்தனை தட்டுகள் பறந்திருக்கும்? ஆக.. தானே ஒரு பொருளை உருவாக்கும் போதுதான் அதன் அருமை நமக்குப் புரிகிறது. வீடுகளில் மீந்த உணவுகளை வீணாக்காமல் சாப்பிடுவது பெரும்பாலும் பெண்கள்தான். 

‘நீங்க எத்தனை பொருட்களை வீணாக்கியிருக்கிறீர்கள் என்று நான் சொல்லட்டுமா?” என்று நித்யா வலுவாக தன் தரப்பைச் சொன்னவுடன் அப்படியே அடங்கிப் போனார் மஹத். உரத்த குரலில் முதலில் கத்தி விட்டு, ‘என் கிட்ட பேசாதீங்க மஹத்’ என்று நித்யாவும் எகிறியவுடன் ‘என் கிட்ட மூஞ்சைக் காட்டாதீங்க’ என்று மஹத் சொன்னது ஓவர். மேலும். அப்போது அவர் ‘உதவியாளர்’ மோடில் இருந்ததையும் மறந்து விட்டார் போலிருக்கிறது. எந்த வீட்டில் முதலாளி சாப்பாடு கொட்டியதற்காக, வேலைக்காரர் சத்தம் போடுவார்?
 இதைப் போலவே பாலாஜி – நித்யா பிரச்னையை நியாயத்தோடு அணுகுகிற இன்னொரு நபர் சென்றாயன். ‘பாலாஜி பேசும் வார்த்தைகள் எல்லாம் விஷம் போன்றது” என்றவர் ‘காமெடி வேற.. ஃபேமிலி’ என்கிற தத்துவத்தையும் உதிர்த்து விட்டு, ‘மற்ற பெண்களின் முன்னால் நித்யாவை அவமதிப்பது சரியல்ல’ என்று பேசி நித்யாவிற்கு ஆதரவு தந்தார். 

‘சிறந்த எஜமானிகளாக நித்யா, வைஷ்ணவி, மமதி’ ஆகிய மூன்று நபர்களை தேர்ந்தெடுக்காதீர்கள்’ என்று ஜனனி, ரம்யாவிடம் ‘பாலிட்டிக்ஸ்’ செய்து கொண்டிருந்தார் மஹத். 

‘நான் கவர்ச்சி நடிகையாக இருந்தாலும் திரைத்துறையில் என்னைப் பற்றி ஒரு வம்பு கூட வந்தது கிடையாது. சில பேருக்குத் தோன்றலாம், திரைப்படங்களில் அப்படி கவர்ச்சியாக தோன்றி விட்டு, ஒரு புடவை மாற்றுவதற்கு இப்படி ‘சீன்’ போடுகிறாரே.. என்று.. காலம் கடக்கும் போது, மதத்தில் அதிக நம்பிக்கை உருவாகும் போது.. அது சார்ந்த முதிர்ச்சியும் வந்து விடுகிறது. தொலைக்காட்சியில் என்னுடைய பாடல்கள் ஒளிபரப்பாகும் போது என் வீட்டுப் பிள்ளைகள் அதைப் பார்ப்பதை நான் விரும்பமாட்டேன்’ என்று மும்தாஜ் வைஷ்ணவியிடம் பேசிக் கொண்டிருந்தார். ‘ஆமாம்.. நான் கூட சொன்னேன். ‘மல.. மல.. பாட்டுக்கெல்லாம் அப்படி ஆடிட்டு… ஒரு புடவை கட்டறதுக்கு இப்படி பண்றாங்களேன்னு’’ என்று பதிலளித்த…வைஷ்ணவி, ‘அது அப்போது உங்கள் சாய்ஸ்’ என்பது மாதிரி இன்னொருபுறமாகவும் பேசினார். வைஷ்ணவியின் இந்த இரட்டை நிலையைப் பற்றி மற்றவர்கள் தொடர்ந்து புறம்பேசிக் கொண்டேயிருந்தார்கள். ஒரு சமயத்தில் வைஷ்ணவியின் தோற்றத்தைப் பற்றி மலினமான கிண்டலைச் சொன்னார் பாலாஜி.

பெண்கள் எஜமானர்களாக இருந்த விளையாட்டு முடிவிற்கு வந்தது. ‘நாங்கல்லாம் ரெண்டு நாள் செஞ்சோமே’ என்கிற மெல்லிய முனகல் பெண்கள் தரப்பிடமிருந்து வந்ததை எவரும் கவனிக்கவில்லை.. ‘சரியாக வேலை செய்யாத பணியாளரை’ பெண்கள் அணி கூடி ஆலோசித்து தேர்ந்தெடுத்தது. ‘உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் ‘அனந்த்’ தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்பே குறிப்பிட்டபடி நித்யாவிடம் சர்ச்சைக்குரிய வார்த்தைகளை தொடர்ந்து இறைத்த பாலாஜிதான் நியாயமான தேர்வாக இருநதிருக்க வேண்டும். சிறந்த எஜமானி ‘ரித்விகா’வாம். எப்படித்தான் யோசிக்கிறாங்களோ..

ஆக.. அனந்த் அடுத்த வார நாமினேஷனிற்கு அனந்த் நேரடியாக செல்வார். இதைப் போலவே அடுத்த வார நாமினேஷில் ‘ரித்விகா’வின் பெயரை சொல்ல முடியாது. 

‘சிறந்த எஜமானர்களாக’ இருந்த ஆண்களுக்கு லக்ஸரி 1600 மதிப்பெண் முழுமையாக வழங்கப்பட்டது. ஆனால் பெண்கள் எஜமானர்களாக இருக்கும் போது சரியாக நிர்வகிக்காததால் வெறும் 200 மதிப்பெண்கள் மட்டுமே. ஆண்கள்தான் அதிக அலப்பறைகள் செய்தார்கள் என்பதற்கு இதை விடவும் அதிக சாட்சியம் தேவையில்லை. எவர் மற்றவர்களை அதிகமாக tease செய்கிறார்களோ, அவர்களே சிறந்தவர் என்பது பிக்பாஸ் வீட்டு லாஜிக். 

லக்ஸரி பட்ஜெட்டை வெற்றி பெற்ற ஆண்கள் அணியிலிருந்து மூவர் மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும். அவ்வாறு அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்க.. ‘என்ன இவனுங்க.. லூஸூங்க மாதிரி செலக்ட் பண்றாங்க’ என்று தவிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தது பெண்கள் அணி. 

“தீஞ்சு போன மோட்டார் ஓடற சத்தம் மாதிரி இருக்கு’ என்று பாட்டுப் பாடுகிற மமதியின் குரலை கிண்டலடித்தார் மஹத். பெரும்பாலேனோர் இதற்கு சிரித்து தீர்த்தார்கள். சிம்புவின் நண்பர் என்பதை அவர் பாணியிலேயே ஒரு பாடல் பாடி ‘கொடுமையான முறையில்’ மூலம் நிரூபித்தார் மஹத். ‘Home sick’ல் வருந்திக் கொண்டிருந்த யாஷிகாவிற்கு ஆறுதல் சொன்னார் ஐஸ்வர்யா.

ரித்விகா மற்றும் நித்யாவிடம் கார்டன் ஏரியாவில் பேசிக் கொண்டிருந்தார் சென்றாயன். மறுமுனையில் அமர்ந்திருந்த பாலாஜி கும்பலுக்கு இது பிடிக்காததால் ஊளையிட்டு அவர்களை வெறுப்பேற்ற முயன்றனர். இந்தக் கூச்சலால் சற்றும் கவனம் கலையாத சென்றாயன், தொடர்ந்து பேச கூக்குரல்களும் அதிகமாயிற்று. சென்றாயனை எப்படியாவது வெறுப்பேற்ற வேண்டும் என்ற பாலாஜி கும்பலின் முயற்சி பலிக்கவில்லை. 

வீட்டுக்குள் சென்ற பாலாஜி ‘தங்களுக்குள் சண்டை நிகழ்ந்தது’ போன்றதொரு நாடகத்தை ஏற்படுத்தினார்கள். அதன்படி உரத்த குரலில் பேசினார்கள். ஓவர் ஆக்ட் செய்த மஹத், உரையாடலின் இடையே, முதல் சீஸன் காயத்ரிக்கு பிடித்தமான, சர்ச்சையான வார்த்தையைப் பயன்படுத்தினார். கமலைப் போலவே அதை சமிக்ஞையால் சுட்டிக் காட்டினார் மும்தாஜ். விளையாட்டு என்றாலும் கூட வார்த்தைகள் எல்லைமீறக்கூடாது என்பது மும்தாஜின் கண்டிப்பான அபிப்ராயம். இந்தச் சண்டை ஒரு ‘டிராமா’ என்பதை மும்தாஜால் எளிதில் கண்டுபிடிக்க முடிந்தது. 

‘நாடக’ சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு ஜாடை மாடையாக நித்யாவிற்கும் சில செய்திகளை பாலாஜி சொன்னது போல் தெரிந்தது. இந்த நாடகத்தை இழுக்க முடியாமல் ஒரு கட்டத்தில் ‘டேனி’ சிரித்து விட நாடகம் பாதியில் முடிவடைந்தது. பாவம், அவர்களுக்கும் பொழுது போக வேண்டுமே? போலவே நமக்கும். பாலாஜியிடம் பாய்ந்த ‘சென்றாயனுக்குள்’ இருந்த ஓர் ‘அன்னியன்’ வெளிப்பட்டது இந்த நாடகத்தின் மூலம் நாம் கண்ட காட்சி. 

அடுத்த போட்டி. ‘ஒரு குடும்பத்தில் அக்கறையும் பொறுப்பும் இல்லாமல் சுயநலத்துடன் செயல்படுபவர்கள் ஆண்களா, பெண்களா என்கிற தலைப்பில் இரு அணியும் விவாதிக்க வேண்டும். சில பட்டிமன்றங்களில் தலைப்பிலேயே அதற்கான வெளிப்படையான விடை இருக்கும்.  வாதம் செய்ய வேண்டுமே என்கிற கடமைக்காக இழுப்பார்கள். இதுவும் அப்படிப்பட்டதொரு தலைப்புதான். இதற்கு விடை ‘ஆண்கள்’தான் என்பதை ஆண்களே ஒப்புக் கொள்வார்கள். 

இந்த தலைப்பில் முதலில் பேச வந்த ரித்விகாவின் சமயோசிதம் நன்கு புலப்பட்டது. ‘முதலில் பேச பெண்களை அனுப்பிய ஆண்களின் சுயநலம் தெரிகிறது. நாங்கள் பேசுவதில் இருந்து பாயிண்ட்டுகளை நீங்கள் எடுத்துக் கொள்வீர்கள். எத்தனை ஆண்கள் தங்கள் மனைவிகளை பணிக்கு அனுப்புகிறீர்கள்? வீட்டு வேலைகள், குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளச் சொல்வீர்கள்..இதிலும் சுயநலம். .. அப்படியே பெண்கள் வேலைக்குப் போனாலும் அதையும் செய்து விட்டு வீட்டு வேலைகளையும் வந்து அவர்கள் பார்க்க வேண்டியிருக்கிறது. இதுவும் ஆண்களின் சுயநலம்” என்று பேசி அமர முயன்றார். இதற்கு பாலாஜி நக்கலாக ஏதோ சொல்ல, “இதுவும் ஆண்களின் சுயநலம்தான். பெண்களை மட்டம் தட்டிக் கொண்டேயிருப்பது’ என்று அதையும் தன் வாதத்திற்கு உபயோகித்துக் கொண்டார் ரித்விகா. 

“எங்களுக்கு வந்த பரிசுப் பொருட்களை ஆண்களாகிய நாங்கள் பகிர்ந்து கொண்டோம். ஆனால் பெண்களுக்கு கிடைத்ததில் மும்தாஜ் மூன்று சாக்கெலட்டுக்களை பதுக்கி வைத்திருக்கிறார். இது சுயநலம்தானே?” என்று சந்தடி சாக்கில் மும்தாஜை போட்டுக் கொடுத்தார் டேனி. இதற்கு மும்தாஜ் சீரியஸான முகபாவத்தை தந்தார். 

இதற்குப் பதிலடியாக பேச வந்த நித்யா, ‘எந்தவொரு ஆணும் திருமணத்திற்குப் பின் தன் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்வதில்லை.  தீய பழக்கங்களையும் கூட. ஆனால் பெண் மட்டும் புகுந்த வீட்டிற்கேற்ப தன் பழக்கங்களை மாற்றிக் கொள்ள எதிர்பார்க்கிறார்கள். இது சுயநலம்தானே?’ என்றொரு வலுவான கேள்வியை எழுப்பினார். ‘அகங்காரமும் ஆதிக்க உணர்வும் ஆண்களுக்கு இருக்கிறது. பெண்களின் திறமையை ஊக்குவிக்காமல் அவர்கள் அடக்கி வைத்திருக்கும் ஆண்களின் சதவீதமே அதிகம். சில விதிவிலக்குகள் இருக்கலாம்’ என்றும் நித்யா பேசினார். இவரின் பேச்சு பாலாஜியை நோக்கியதாக இருந்தது என்பதை பாலாஜியின் கோணலான முகபாவங்களில் இருந்து அறிய முடிந்தது. 

பிறகு பேச வந்த பாலாஜியின் பேச்சு நித்யாவிற்கு பதிலடி தருவதாக இருந்தது. ‘ரித்விகா சொன்னாங்க.. கணவர்கள் தங்களின் மனைவிமார்களை வேலைக்கு அனுப்புவதில்லை என்று. அது தவறு. இன்றைய காலத்தில் இரண்டு பேரும் வேலைக்குச் செல்கிறார்கள். அப்படித்தான் குடும்ப பொருளாதாரம் மேம்படும். தம்பதியினர் தங்களின் பிரச்னைகளை ஒருவருக்கொருவர் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைக்காக அவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்’ என்றெல்லாம் அள்ளி விட்டார். இந்த உபதேசத்தை அவரும் பின்பற்ற முயல்வது நல்லது என்றே தோன்றுகிறது. 

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம். 

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun


நவீன காலத்துப் பெண்கள் ஆண்களை அண்டி நிற்காமல், பொருளாதார சார்போடு சுதந்திரமாக இயங்குவது பல ஆண்களுக்கு உள்ளூரப் பிடிக்காது என்பதே நடைமுறை. தனிக்குடும்பங்கள் பெருகி விட்ட, விலைவாசி உயர்ந்து விட்ட, சமகாலைச் சூழலையொட்டி வேறு வழியில்லாமல் பெண்களைப் பணிக்கு அனுப்புகிறார்கள் என்பதே உண்மை. 

அடுத்து பேச வந்த வைஷ்ணவி, பாலாஜியை நோக்கி ‘உங்கள் மகள் பெயரின் பின்னால் உங்கள் பெயர்தான் ஒட்டிக் கொண்டிருக்கிறது. ஒரு குழந்தையை பெற்று வளர்த்து ஆளாக்குவதில் பெரும்பங்கு தாய்க்குத்தான் இருக்கிறது” என்றார். இதை வரவேற்று ஆமோதித்தார் நித்யா. ‘சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்’ என்று ஆபாசமான சமிக்ஞையின் மூலம் தன் உடலை குலுக்கிக் காட்டினார் பாலாஜி.. ஓர் ஆணின் உடல்ரீதியான தொடர்பின்றி, பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ளக்கூடிய அளவிற்கு மருத்துவம் வளர்ந்திருக்கிறது என்பதை பாலாஜி போன்ற ஆண்கள் உணர வேண்டும். ‘குடும்பத்திற்காக பல தியாகங்களைச் செய்வது பெண்களே’ என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொன்னார் வைஷ்ணவி.

‘குடும்பத்தின் நிதி சார்ந்த விஷயங்களுக்காக ஆண்கள்தான் பாடுபடுகிறார்கள்’ என்பது சென்றாயனின் வாதம். இதற்காக ஏதேதோ உளறிக் கொட்டி பெண்களின் கிண்டல்களைச் சம்பாதித்துக் கொண்டார். இந்த விவாதத்திற்கு மஹத் நடுவராம். காலக்கொடுமை. “ஆண்கள் நன்றாக பேசினார்கள். பெண்கள் சுமாராக பேசினார்கள். என்றாலும் பெண்கள் அணி ஜெயிக்கப்படுது’ என்று சென்றாயனை விடவும் அதிகமாக உளறி தீர்ப்பு சொல்லி விட்டுச் சென்றார். 

இந்த விவாதங்களின் இடையே ஏதோவொரு சந்தர்ப்பத்தில் வைஷ்ணவி நித்யாவை, “மூடிட்டு இரு’ என்று சொல்லி விட்டார் போலிருக்கிறது. நித்யா அதை பலமாக ஆட்சேபித்தார். சுயமரியாதை சார்ந்து இது சரியான ஆட்சேபம்தான்.  

இன்று ‘நாட்டாமை’ வரும் நாள். விஸ்வரூபம் பாடலை ஒருபக்கம்  அறிமுகப்படுத்துவதோடு,  இன்னொரு பக்கம் பிக்பாஸ் வீட்டின் பிரச்னைகளையும் பாரபட்சமின்றி விசாரணை செய்து நாட்டாமைத்தனத்திலும் கமல்ஹாசன் விஸ்வரூபமெடுப்பார் என்று நம்புவோம்.

பிக்பாஸ் வீட்டின் ஆண்களில் அதிக நியாயவுணர்ச்சியுடன் இருப்பவர் டேனி என்று தோன்றுகிறது. வரும் போது விளையாட்டுப் பிள்ளை போல தோற்றமளித்த இவர், ஒரு பிரச்னையை பொறுமையாகவும் ஆளுமைத்திறனுடனும் கையாள்கிறார். நித்யா கோபத்தில் சாப்பிடாமல் இருக்கும் போது, அவரைச் சமாதானப்படுத்தி சாப்பிட வைத்தவர், மற்ற ஆண்களோடு பேசும் போது … பாலாஜி –நித்யாவோட தனிப்பட்ட விஷயத்துல நாம தலையிட வேண்டாம். இது விஷயமா பாலாஜிக்கு சாதகமாக நாம் நடக்கக்கூடாது. அவங்க பொண்ணுக்காக.. 

“அவமதிப்போட சாப்பாடு தந்தா யாருக்குத்தான் கோபம் வராது.. நான்லாம் அப்படி ரொம்ப அவமானப்பட்டிருக்கேன்.. எனக்குத் தெரியும்’ என்றெல்லாம் சரியாகப் பேசினார் டேனி. ‘ரெண்டு பேரும் சில சமயத்துல சிரிச்சுப் பேசிக்கறாங்க.. சில சமயத்துல அடிச்சுக்கறாங்க’ ஒண்ணியும் புரிய மாட்டேங்குது’ என்றும் அலுத்துக் கொண்டார். (எங்களுக்கும் அதே பிராப்ளம்தான் ப்ரோ). 

பெண்கள் அணி தங்களைப் பழிவாங்குவதாக’ ஆண்கள் புலம்பிக் கொண்டிருக்கும் போது ‘விட்டுத்தந்தால்தான் எந்தவொரு பிரச்னையும் தீரும். இல்லையென்றால் பழிவாங்கலுக்கு இன்னொரு பழிவாங்கல் என்று தொடர்ந்து கொண்டே இருக்கும்…’ என்று இன்னொரு சந்தர்ப்பத்திலும் முதிர்ச்சியாகப் பேசினார் டேனி. பாராட்டுக்கள். இந்த சீசனில் (தற்போதிருக்கும் போட்டியாளர்களில்) வெற்றி பெறும் வாய்ப்பு டேனிக்குத்தான் இருக்கிறதோ என்று தோன்றுகிறது.

இப்போதிருக்கும் போட்டியாளர்களில், யாருக்கு வெற்றி பெறும் முனைப்பும், தகுதியும் இருக்கிறது என நினைக்கிறீர்கள். கமென்ட்டில் உங்கள் விருப்பப்பட்டியலை தெரிவிக்கவும்.