Published:Updated:

பாலாஜி ஓகே... மஹத் நாட் ஓகே... கமல் மிஸ் செய்த டாஸ்க் #BiggBossTamil2

சுரேஷ் கண்ணன்
பாலாஜி ஓகே... மஹத் நாட் ஓகே... கமல் மிஸ் செய்த டாஸ்க் #BiggBossTamil2
பாலாஜி ஓகே... மஹத் நாட் ஓகே... கமல் மிஸ் செய்த டாஸ்க் #BiggBossTamil2

கமலின் பஞ்சாயத்துக் காட்சிகளால் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி நன்றாக களை கட்டியது. `இதையெல்லாம் தட்டிக் கேட்க ஒருத்தன் வராமயா போயிடுவான்’ என்று திரைப்படங்களில் ஓர் எளியவர் ஆத்திரத்துடன் புலம்பிய பிறகு காட்டப்படும் ஹீரோ என்ட்ரிகள் கிளிஷேவாக இருந்தாலும் பிக்பாஸ் வீட்டில் சில அநீதிகளை கமல் விசாரணை செய்ய வேண்டும் என்று ஆர்வத்தோடு காத்திருந்த பார்வையாளர்களுக்கு இன்று நல்ல தீனி இருந்தது. குறிப்பாக பாலாஜி விவகாரம். ஆனால் இந்தப் பஞ்சாயத்தும் இந்த வணிக நிகழ்ச்சியின் ஒரு பாவனையான அங்கமே. எல்லாம் மாயை. 

பாலாஜி ஓகே... மஹத் நாட் ஓகே... கமல் மிஸ் செய்த டாஸ்க் #BiggBossTamil2

ஒருவர் செய்த தவற்றை அவருடைய முகத்தில் அடிப்பது போல் சுட்டிக்காட்டுவது ஒருவழி. இதனால் தவறு செய்தவர் உள்ளூற வன்மம் கொண்டு அதை மேலும் நீட்டிப்பார். அவர் திருந்த வாய்ப்பில்லை. இதர மொழி பிக்பாஸ்களில் அப்படி நடப்பதாக சொல்கிறார்கள். ஆனால் தவறு செய்தவரே தன் மனதால் உணரும்படியாக அவருடைய பிழைகளை புண்படாமலும் அதே சமயத்தில் அழுத்தமாகவும் சுட்டிக்காட்டுவது ஒரு கலை. அதை கமல்ஹாசன் திறம்படச் செய்தார் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. மற்றவர்களின் தவறுகளைப் பற்றி விசாரணை செய்யும் நேரத்தில் தன்னையும் அதில் இணைத்து சுயபரிசீலனைக்குள்ளாக்கும் நியாயவுணர்ச்சியும் அவரிடம் இருந்தது. 

அட்டகாசமான ஃபார்மல் உடையுடன் ஸ்மார்ட்டாக அரங்கத்திற்குள் நுழைந்தார் கமல். ‘விதிவிலக்குகள் விதியாகாது. விதிமீறல்கள் தண்டனையில்லாமல் போகாது’ என்கிற பஞ்ச் வசனத்துடன் நிகழ்ச்சியை துவங்கினார். ‘இந்த நிகழ்ச்சியின் வெற்றியே.. வீட்டில் உள்ள நபர்கள் செய்யும் நிறைகுறைகளை ‘உங்களோடு’ ஒப்பிட்டுப் பார்ப்பீர்கள். முதல் சீஸனில் இருந்தவர்கள் ‘அவர்களாக’ இருந்தார்கள். இம்முறை அப்படியில்லையோ என்று தோன்றுகிறது.:” 

பாலாஜி ஓகே... மஹத் நாட் ஓகே... கமல் மிஸ் செய்த டாஸ்க் #BiggBossTamil2

“உதாரணமாக எஜமானர்கள் – உதவியாளர்கள் விளையாட்டை விளையாட்டாக அல்லாமல் சீரியஸாக எடுத்துக் கொண்டு அவஸ்தைப் பட்டார்களோ என்று தோன்றுகிறது. உண்மையான எஜமானர்கள் மக்கள்தான். இது புரியாம விளையாடறாங்க. எந்தக் கட்டிடடத்தில் இருந்தாலும் இதை உணராதவர்கள் அங்கிருந்து ‘எவிக்ட்’ செய்யப்படுவார்கள்” என்று சமகால அரசியல் வாசனையையும் தன் பேச்சில் இணைத்தார் கமல். 

இந்த வார recap ஒளிபரப்பாகியது. பிறகு பார்வையாளர்களின் சில கேள்விகளுக்கு பதிலளித்தார். ‘பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் தமிழில்தான் பேச வேண்டும் என்று சொல்கிறீர்கள். ஆனால் நிகழ்ச்சிக்கு மட்டும் ஏன் ஆங்கிலத்தலைப்பு?” என்று ஒருவர் கேட்டார். ‘நான் தமிழ் உணர்வுள்ளவன். ஆனால் என் பெயரில் வடசொல் இருக்கிறது. பச்சை ..ன்னு என்ன கலர் வேணா வெச்சுக்கங்க.. நான் தமிழன். வேறு மொழியில் இருந்தவர்களும் தமிழ்ப்பற்றுவர்களாக இருந்திருக்கிறார்கள். உள்ளுணர்வுதான் முக்கியம். இது ஒரு பிராண்டின் பெயர்” என்று விளக்கமளித்தார்.

“உள்ளே நிறைய பேர் போலியா இருக்காங்களே” என்ற கேள்விக்கு ‘நானும் அதை வழிமொழிகிறேன்” என்ற கமல், “போன சீஸன் பார்த்து அதன் வழிமுறைகளை பார்த்துக் கற்றுக் கொண்டு செயற்கையாக இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. இதனால் அவர்களின் அசல் முகங்களை இழந்து விடுகிறார்கள். நான் அவங்க கிட்ட பேசறேன்’ என்றார். 

“நித்யா பாலாஜி விவகாரம்தான் அதிகமாக காட்டப்படுகிறதே?” என்பது இன்னொரு சரியான கேள்வி. ‘கடைத்தெருவில் சத்தமாக பேசுகிறவர்களைத்தான் மற்றவர்கள் கவனிப்பார்கள். அப்படித்தான் இதுவும். மற்றவர்களின் சமாதானங்களையும் அவர்கள் ஏற்கவில்லை. அவங்களுக்கு போரடிக்குதோ இல்லையோ.. நமக்கு போரடிக்க ஆரம்பிச்சுடுச்சு” என்றார். 

பாலாஜி ஓகே... மஹத் நாட் ஓகே... கமல் மிஸ் செய்த டாஸ்க் #BiggBossTamil2


“அரசியல், சினிமா, டிவிட்டர், பிக்பாஸ் என்று பல விஷயங்களில் இயங்குகிறீர்கள். எப்படி நேர மேலாண்மை செய்கிறீர்கள்?” என்ற கேள்விக்கு ‘சந்தோஷமா எந்த வேலையையும் செய்தாலும் களைப்பு தெரியாது” என்றார் கமல்.

அடுத்த கேள்வி பல பார்வையாளர்களின் எண்ணத்தை பிரதிபலித்தது. “எஜமானர் விளையாட்டில் ஊட்டிவிடறது, சட்டையைக் கழட்டி விடறது… ன்னு ஆண்கள் செய்த சில விஷயங்கள் எல்லை மீறியதாக இருந்ததே” என்ற கேள்விக்கு ‘நானே அப்படி பல தவறுகள் செஞ்சிருக்கேன். எஜமானன் போல என் அம்மாவை இம்சை பண்ணியிருக்கேன். அன்பு காரணமாக அதை அவர்கள் பொறுத்துக் கொண்டார்கள். இதையே வெளியே போய் செஞ்சிருந்தேன்னா அதற்கான தண்டனை கிடைச்சிருக்கும். இதைப் போலவே task என்பதால் சிலர் பொறுத்துக் கொண்டிருக்கலாம். எந்தவொரு விஷயத்திலும் எல்லை மீறுதல் அனுமதிக்கப்பட முடியாதது” என்றார். ஆனால், ஆண்கள் எஜமானர்களாக இருந்த போது, அங்கு நடைபெற்ற பல அத்துமீறல்களை மெல்லிய சாமரம் வீசுவது போலத்தான் கமல் கேள்விக்களை தொடுத்துக்கொண்டு இருந்தார். அதில் நக்கல் இருந்த அளவுக்கு கோபம் இல்லை என்று தான் தோன்றியது. 

இதன் பிறகு 13-ம் நாள் காட்சிகள் காட்டப்பட்டன. ‘என் வீட்டுல நான் இருந்தேனே’ பாடல் ஒலிபரப்பானது. ‘நான் லவ்வாலே.. பல பல்பு வாங்கின பையன்’ என்ற வரி வரும் போது, ஆழமாக தூங்கிக் கொண்டிருந்த ஷாரிக்கை குறும்பாக காட்டியது காமிரா. (அல்லது எடிட்டிங்). “இங்க யாரும் ரொம்ப நாள் நடிக்க முடியாது. அவங்க அசல் முகம் வெளிய வந்துடும். நீங்க கெட்ட வார்த்தைகள் பேசுவது தொடர்பாக கமல் நிச்சயம் கேட்பார்” என்று பாலாஜியிடம் சொல்லிக் கொண்டிருந்தார் ஜனனி. 

பாலாஜி ஓகே... மஹத் நாட் ஓகே... கமல் மிஸ் செய்த டாஸ்க் #BiggBossTamil2

‘மனசுக்கு இங்க அறுவை சிகிச்சை நடக்குது.. கடைசில என்ன இருக்கு.. எல்லாம் சூன்யம்..” காமிரா முன்னால் தத்துவம் பேசிக் கொண்டிருந்தார் அனந்த். (பாவம்.. கலர் கலரா சுரிதார் போட்டு…எப்படிலாம் இருந்த மனுஷன்).

மும்தாஜ் உடையின் மீது தெரியாமல் ஊறுகாய் பாட்டிலைக் கவிழ்த்து விட்டார் சென்றாயன். அது தனக்குப் பிடித்தமான உடை என்பதால் பயங்கரமாக கோபப்பட்டார் மும்தாஜ். திகைத்துப் போய் பல முறை மன்னிப்பு கேட்டார் சென்றாயன். ‘ஐயோ.. இன்னிக்கு பஞ்சாயத்து நாளாச்சே” என்று தோன்றியதோ அல்லது உண்மையாகவே மனம் வருந்தினாரோ என்று தெரியவில்லை, தான் திட்டியதற்கு சென்றாயனிடம் மன்னிப்பு கேட்டார் மும்தாஜ். ‘டிரஸ்ஸை விட மனுஷன்தான் பெரிசு” என்று அவர் சொன்னதெல்லாம் வேற லெவல். ‘சாயம் போற டிரஸ்ஸூக்கா இத்தனை அலப்பறை’ என்று சென்றாயனின் மைண்ட்வாய்ஸ் நினைத்திருக்கக்கூடும். ‘அண்ணா.. அண்ணா.. என்று சென்றாயனை மும்தாஜ் கூப்பிட்டதுதான் இந்தப் பஞ்சாயத்தை விடவும் கொடுமையானதாக இருந்தது. 

வைஷ்ணவியின் இரட்டைநிலையைப் பற்றி சிலர் கூடிப் புறம் பேசிக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரம் கழித்து அங்கு வைஷ்ணவி வர பேச்சு திசை திரும்பியது. 

பாலாஜி ஓகே... மஹத் நாட் ஓகே... கமல் மிஸ் செய்த டாஸ்க் #BiggBossTamil2

இந்த நாள் முடிய, அகம் டிவி வழியே கமல் வந்தார். “வாங்க சார்.. பிரியாணி சாப்பிடலாம்” என்று வரவேற்ற சென்றாயன், பிடிவாதமாக ஆங்கிலத்தில் பேச.. ‘மொழிப்பசில இருக்கீங்க போல’ என்று கிண்டலடித்தார் கமல். 

சில ‘உறைபடங்கள்’ காண்பிக்கப்பட்டன. அவற்றை வைத்து போட்டியாளர்களை கலாய்த்தார் கமல். அனந்த் டான்ஸ் ஆடும் புகைப்படம். ‘பாட்டு வாத்தியார், டான்ஸ் வாத்தியாரா மாறிட்டீங்க போல” என்றதற்கு ‘இங்க எல்லாமே மாறுது” என்றார் அனந்த். இரண்டு பெண்களின் நடுவே மஹத் படுத்திருந்த புகைப்படத்திற்கு ‘அங்க இடவசதி குறைவோ?” என்று மஹத்தின் காலை வாரினார். 

டிரெட் மில்லின் மீது தவழ்ந்து சுத்தம் செய்து கொண்டிருந்த டேனியின் புகைப்படம் அடுத்தது. ‘அது மேல காலால இல்ல நடக்கணும்” என்பது கமலின் ‘கிரேசி’தனமான கமென்ட். மும்தாஜ் சென்றாயனுக்கு உணவு ஊட்டும் காட்சி. “அன்னிக்கு பசியா இருந்தது. ‘வாங்க-ன்னு சொல்லி..மும்தாஜ் மேடம் ஊட்டி விட்டாங்க’ என்று பிளேட்டை திருப்பி சொன்னார் சென்றாயன். ‘இல்ல சார்.. வாயில குத்தினாங்க” என்று போட்டுக் கொடுத்தார் மஹத். ‘அவருக்கு பாசம் தெரிஞ்சிருக்கு. உங்களுக்கு காட்ட முடியலை’ என்று நாசூக்காக மும்தாஜை குத்தினார் கமல். முகம் மாறிய மும்தாஜ், “இல்ல சார்.. ஜோக்’ என்று சமாளிக்க… “பயப்படாதீங்க.. நானும் ஜோக்குக்குத்தான் சொன்னேன்’ என்று கமல் சொன்ன விதம் அசலான ‘கமல் பிராண்ட்’ காமெடி. ‘ஒத்த சொல்லால’ பாடலுக்கு மறுபடியும் ஆடிக்காட்டினார் பொன்னம்பலம். 

பாலாஜி ஓகே... மஹத் நாட் ஓகே... கமல் மிஸ் செய்த டாஸ்க் #BiggBossTamil2

விளையாட்டுக்கள் முடிந்து விவகாரங்கள் துவங்கின. “எல்லோரும் முதல் சீஸன் பார்த்துட்டு வந்திருப்பீங்க. அது ஒருவகையில் பலம். இன்னொரு வகையில் பலவீனம். எல்லோருமே இங்க போலித்தனமா, முகமூடி போட்டுட்டு இருக்கற மாதிரி தெரியுது. இதை நான் மட்டும் சொல்லலை. மக்களின் கருத்தும் அதுதான். “மெஜாரிட்டியா இங்க போலித்தனம் இருக்கறதால அப்படி தெரியுது. ஒண்ணு ரெண்டு பேர் உண்மையா இருக்கலாம். போலியாக நடிக்கிறவர்களை கண்டுபிடிச்சு அவங்களுக்கு உத்வேகம் தர்ற முயற்சிக்கலாம். இங்க போலியா இருக்கறவங்க யாரு.. நீங்களே சொல்ல முடியுமா? என்று பஞ்சாயத்தை ஆரம்பித்தார் கமல். 

ஏறத்தாழ அனைவருமே ‘நான் நானாகத்தான் இருக்கிறேன்’ என்பதை விதம் விதமான சொற்களில் நியாயப்படுத்தத் துவங்கினார்கள். “அப்படி இல்லைன்னுதானே மக்கள் சொல்றாங்க. இப்ப மத்தவங்களைப் பற்றி சொல்லுங்க” என்று விசாரணையை வேறு பக்கம் திருப்பினார் கமல். முதல் பந்தை எறிந்தவர் மஹத். ‘வைஷ்ணவிதான் இங்க போலியா இருக்கறாங்க. ஒவ்வொருத்தர் கிட்டயும் ஒவ்வொரு மாதிரி பேசறாங்க’ என்று காட்டிக் கொடுத்தலை துவங்கி வைக்க மற்றவர்களும் இதைப் பின்பற்றினார்கள். வைஷ்ணவி ‘மமதி’யை சுட்டிக் காட்டினார். ஓரெல்லை வரை மும்தாஜூம் போலியாம்.  

‘ஒரேயொரு ஆள் இந்த வீட்டின் முகத்தை மாத்த முடியாது’ என்று கமல்தனமாக ஆரம்பித்த மமதி, ‘நித்யாதான் முகமூடி அணிந்து கொண்டிருப்பது போல் தோன்றுகிறது” என்றார். “இங்க எல்லோருமே fake-ஆத்தான் இருக்காங்க” என்று சிக்ஸர் அடித்தார் நித்யா. “எல்லா நேரமும் அப்படி இல்ல சார். ஏதாவது பிரச்னை-ன்னு வரும் போது போலியா மாறிடறாங்க. நான் கூட” என்று நடைமுறை உண்மையை யதார்த்தமாக சொன்னார் ரித்விகா.  ‘நீ போ… சரி.. நீ வா… நீ தள்ளி நில்லு‘ என்று ஒவ்வொருவராக செலக்ட் செய்து ஏறத்தாழ பாதி பேர்களை போலி என்று வரிசைப்படுத்தினார் பொன்னம்பலம். 

பாலாஜி ஓகே... மஹத் நாட் ஓகே... கமல் மிஸ் செய்த டாஸ்க் #BiggBossTamil2

‘பொன்னம்பலம்… இப்பத்தான் உங்க முகமூடி கொஞ்சம் கொஞ்சமா கழன்று வருது. நீங்கதான் நேர்மையா பேசறதா தோணுது” என்று அவரையும் பட்டியலில் இணைத்தார் கமல். என்னவொரு வில்லத்தனம்! 

‘நீங்கள் புறம் பேசும்போது தெரிகிற முகம்தான் உண்மையானது. மத்த சமயங்கள்ல போலியா இருக்கீங்க-ன்னு மக்கள் நெனக்கறாங்க.  இங்க காட்டற பணிவு உண்மையான முகமா.. மத்த சமயத்துல இருக்கறதுதான் உண்மையான முகமா?’ என்ற கேள்வி மக்கள் கிட்ட இருக்கு” என்று அவர்களுக்கே அவர்களின் முகங்களை காண்பித்தார் கமல். 

‘புடவை மாற்றும் விஷயத்திற்காக’ மும்தாஜ் செய்த சர்ச்சை பஞ்சாயத்திற்கு வந்தது. ‘நீங்க இங்கேயும் நட்சத்திர அந்தஸ்தை, செளகரியத்தை எதிர்பார்க்கிறீர்களா?” என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தார் கமல். “இப்பத்தான் கேரவன் வசதில்லாம் வந்திருக்கு. முன்னல்லாம் ஸ்டூடியோ அறைதான். அவுட்டோர்ல பெண் நடிகைகள் மரத்திற்கு பின்னால நின்னு உடை மாத்தியிருக்காங்க.. பெரிய பெரிய மலையாள ஸ்டார்ஸ்லாம்.. ‘என்று பழைய நினைவுகளைச் சொன்னார் கமல். 

“எனக்கு அந்த டைம்ல சரியாப் பட்டதைத்தான் செஞ்சேன். நட்சத்திரம் என்கிற பந்தாவையெல்லாம் இங்கு நான் பின்பற்றவில்லை.’ என்று மும்தாஜ் விளக்கமளிக்கும் போது ‘அதுக்கு இது பதில் இல்லையே’ என்பது போல் திரும்பி நடந்த கமலின் உடல்மொழியில் இருந்த நக்கல் அபாரம். 

அடுத்தது, மும்தாஜ் மைக்கை கழற்றி வைத்த பஞ்சாயத்து. “இது அடிப்படையான விதிமீறல். அது உங்களுக்கே கூட ஆபத்தை உருவாக்கலாம். மைக்கை கழட்டி வெச்சிட்டு.. நீங்க பாத்ரூம்ல இருக்கும் போது மயங்கி விழுந்திட்டீங்கன்னா… எங்களுக்கு எப்படி தெரியும்? எப்படி உதவிக்கு வர முடியும்? என்றார் கமல். (ஆனால் இந்த உதாரணம் தவறானதோ என்று தோன்றுகிறது. போட்டியாளர்கள் குளிக்கும் போது மைக் அணிந்திருக்க வாய்ப்பில்லை. அப்போதும் உடல்நலக்குறைவு ஏற்படலாம் இல்லையா? ‘இது அடிப்படை விதிமீறல் என்று மட்டும் அழுத்தமாக சுட்டியிருக்கலாம்.) 

பாலாஜி ஓகே... மஹத் நாட் ஓகே... கமல் மிஸ் செய்த டாஸ்க் #BiggBossTamil2

“‘வெங்காயம்’ பிரச்னையில் நித்யாவைப் போட்டு வதக்கிய நீங்கள், மைக்கைக் கழற்றி வைத்த மும்தாஜை அப்படியேதும் கேள்வி கேட்டது போல் தெரியவில்லையே. ஏன் இந்தப் பாரபட்சம்? அவங்களுக்கு பயப்படறீங்களா?’ என்றொரு நேரடியான கேள்வியை மற்றவர்களிடம் முன்வைத்தார் கமல். “ஆமாம்..” என்று வெளிப்படையாக ஒப்புக் கொண்டார் அனந்த். “உங்க கிட்ட ஏத்துக்கற மனப்பான்மை இல்லை” என்று மும்தாஜிடம் ஆவேசமாக விவாதம் செய்த பாலாஜியை தடுத்து நிறுத்திய கமல்… ‘இருங்க பாலாஜி.. உங்க கிட்டயும் கண்டிப்பா வருவேன்” என்று அவருக்கான அபாய எச்சரிக்கையை முன்பே தந்த நையாண்டி ரசிக்க வைத்தது. 

மும்தாஜ் தன் தவற்றை ஒப்புக் கொண்டாலும் .. ‘இப்ப நான் சொல்ற வரைக்கும் .. மைக்கை கழட்டி வெச்சிட்டு ஓரமா இருங்க” என்று கண்டிப்பைக் காட்டினார் கமல். மெல்லிய கோபத்துடன் மைக்கைக் கழற்றி வைத்து வெளியேறினார் மும்தாஜ். (மன்னிக்கறவன்.. பெரிய மனுஷன் இல்லையா.. கமல்..மும்தாஜை மன்னிச்சிருக்கலாம்.) மற்றவர்களுக்கு எச்சரிக்கையாக இந்த தண்டனை வழங்கப்பட்டிருக்கலாம். 

அடுத்த பஞ்சாயத்து. பெண்கள் அணி ‘உதவியாளர்களாக’ இருந்த சமயத்தில் மோசமான பணியாளராக நித்யா தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்தான விசாரணையைத் துவங்கினார் கமல். “ஏன் நித்யாவைத் தேர்ந்தெடுத்தீர்கள்? இது கூட்டு முடிவா.. தனிநபருக்காக எடுத்த முடிவா?” என்று மெல்ல தூண்டிலை வீசினார் கமல். ‘நூறு சதவீதம்ஆலோசித்து எடுத்த முடிவுதான்’ என்று உறுதியாக சொன்னது ஆண்கள் அணி. ‘இருங்க உங்களுக்கு ஒரு குறும்படம் காட்டறேன்’ என்று கமல் சொன்னதும்… “போச்சா.. சோனாமுத்தா. போச்சா.. ‘என்று அலறினார் டேனி. 

பாலாஜி ஓகே... மஹத் நாட் ஓகே... கமல் மிஸ் செய்த டாஸ்க் #BiggBossTamil2

‘பிக்பாஸ் சீஸன் இரண்டின் முதல் குறும்படம்’ என்கிற அந்தஸ்தைப் பெற்ற அந்த வீடியோ காண்பிக்கப்பட்டது. ‘சரியாக வேலை செய்யாத பணியாளர்கள்’ என்று மும்தாஜ் மற்றும் மமதியை முதலில் சுட்டிக் காட்டிய ஆண்கள் அணி, பிறகு ‘நித்யா’வை தேர்ந்தெடுத்தற்கு பாலாஜி தந்த அழுத்தமே என்பது வீடியோவின் மூலம் தெளிவானது. நித்யா செய்ய வந்த பணிகளை மற்றவர்கள் தடுத்தார்கள். குறிப்பாக பாலாஜி வெறுப்பைக் காட்டி மறுத்தார்.. மேலும் அவமதிப்பான வார்த்தைகளை அவர் பேசியதும் இது குறித்து கண்ணீருடன் பிக்பாஸிடமும் மற்றவர்களிடமும் நித்யா முறையிடுவதுமான காட்சிகள் ஒளிபரப்பாகின. 

தன் தரப்பு நியாயம் உறுதியானதில் நித்யாவின் முகத்தில் மகிழ்ச்சியும் கண்ணீரும் தெரிந்தது. பார்வையாளர்களும் கூட அந்த மகிழ்ச்சியையும் ஆசுவாசத்தையும் உணர்ந்திருக்கக்கூடும். 

“இதற்கு என்ன காரணமாக இருக்கக்கூடும்?” என்று நித்யாவிடம் வந்தார் கமல். ‘உங்களை வெளியேற்ற எவரேனும் முயல்கிறார்களா? என்ற கேள்விக்கு ‘தனிப்பட்ட பிரச்னைகள் காரணமாக இருக்கும். பாலாஜி பேசும் வார்த்தைகள் ரொம்பவும் ஆபாசமா இருக்கு” என்றார்.

‘நித்யாவை வெளியேற்றுவதற்காக நீங்கள் ஏதேனும் செய்கிறீர்களா பாலாஜி?” என்று நேரடியாக பாலாஜியிடம் வந்தார் கமல். அதை பாலாஜி விதம் விதமாக மறுத்தார். “தூண்டி விட்டால்தான் எனக்கு கோபம் வரும். மத்தவங்க சரியா இருக்கும் போது இவங்கதான் மூஞ்சைக் காட்டறாங்க.. நான் நானாத்தான் இருக்கேன். கோபம் வரும் போது எனனால் காட்டாம இருக்க முடியாது. 

பாலாஜி ஓகே... மஹத் நாட் ஓகே... கமல் மிஸ் செய்த டாஸ்க் #BiggBossTamil2

“நியாயமான விஷயங்களுக்கு கோபம் வரலாம். ஆனால் அது நியாயமா இருக்கான்னு பார்க்கலாம்” என்று கமல் சொல்ல, இன்னொரு குறும்படமும் ஒளிபரப்பானது. ‘எந்த மூஞ்சை வெச்சிக்கிட்டு இந்த ஷோவிற்கு வந்தே..” என்று பாலாஜி மூஞ்சைக் காட்டுவதில் இருந்து பல வசைகள் அந்தக் காட்சிகளில் இருந்தன. ‘இதை எலிமினேட் பண்ணிட்டுத்தான் மறுவேலை பார்க்கணும்’ என்று நித்யாவை பாலாஜி ஓரிடத்தில் சொல்லும் வசனம் மிக முக்கியமான ஆதாரம். வீடியோ முடிந்த பிறகு, ‘தட்ஸ் ஆல் யுவர் ஆனர்’ என்பது போல் ‘தாங்க்யூ சார்’ என்றார் நித்யா ஆசுவாசமாக.

‘எத்தனையோ குறும்படங்கள் இங்க போட்டிருக்கேன். இத்தனை பீப் சத்தம் வந்ததில்லை’ என்று பாலாஜியின் வசைகளை நுட்பமாக கிண்டலடித்தார் கமல். ‘இது கூடி வாழும் இடம்’ என்று துவங்கி சகிப்புத்தன்மையின் அவசியத்தை விதம் விதமாக விளக்கமளித்தும் பாலாஜி அதை உணர்ந்தது போல் தெரியவில்லை. தன் தனிப்பட்ட பிரச்னைகளை பேசத் துவங்கி தன்னைத் தானே அம்பலப்படுத்திக் கொண்டார். 

‘எந்தவொரு உறவிலும் பிரிவுகள் நேர்வது இயல்பானது. ஆனால் அந்தப் பிரிவு கண்ணியமாக இருக்க வேண்டும்” என்று சொன்ன கமல் அதற்காகத் தன்னையே முன்னுதாரணமாக காட்டிக் கொண்டார். ‘எந்தப் பிரிவின் போதும் கெட்ட வார்த்தையில் நான் பேசியதில்லை” என்றார். 

பாலாஜி ஓகே... மஹத் நாட் ஓகே... கமல் மிஸ் செய்த டாஸ்க் #BiggBossTamil2

‘உங்களின் சச்சரவுகளை உங்கள் மகள் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதை நினைவில் வையுங்கள். உங்களின் சர்ச்சையான உரையாடல்களை சமூகம் கவனித்துக் கொண்டிருக்கிறது. அவர்களும் இதனால் உளைச்சல் அடைகிறார்கள். சமூகத்தில் எத்தனையோ பேர் எத்தனையோ விதமாக பல சோகங்களில் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் தங்கள் கோபத்தை வெளியில் காட்டினால் என்ன ஆகும்? பிக்பாஸ் வீட்டிலும் சரி. வெளியிலும் சரி சகிப்புத்தன்மையுடன் இயங்க வேண்டும்” என்றெல்லாம் பாலாஜிக்கு உறைக்கும்படியாக அவருடைய பிழையை விதம் விதமான சொற்களில் சுட்டிக்காட்டினார் கமல். 

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம். 

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

இனியாவது பாலாஜி தன் தவற்றை உணர்ந்து திருந்துகிறாரா என்று பார்ப்போம். இன்றிரவு நித்யா ஆசுவாசத்துடன் உறங்கக்கூடும். 

ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா, நிகழ்ச்சியில் தமிழில் பேச வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்ட, திட்டுவது போல் ‘திருக்குறள்’ ஒன்றை சொல்லி கலாய்த்தார் கமல். கூடவே மொழி அரசியல் பற்றியும் சில வார்த்தைகள் சொன்னார். 

நாமினேஷன் பட்டியலில் இருந்தவர்கள் அழைக்கப்பட்டார்கள். பெண்களிடம் ஆபாசமாக பேசிய பொன்னம்பலம் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டார். விருமாண்டி வசனத்தை உதாரணம் காட்டிய கமல், அதற்காகவே நாமினேஷன் பட்டியலில் இருந்து பொன்னம்பலத்தை விலக்கினார். 

பாலாஜி ஓகே... மஹத் நாட் ஓகே... கமல் மிஸ் செய்த டாஸ்க் #BiggBossTamil2

பட்டியலில் இருந்த இதர மூன்று போட்டியாளர்கள், அனந்த், மமதி மற்றும் மும்தாஜ். இதற்கான விடை நாளைக்கு தெரியும். (அனந்த் வெளியேற்றப்படலாம் என்றொரு யூகம். அவரால் எந்தவொரு விவகாரமான ஃபுட்டேஜூம் கிடைக்கவில்லை என்று பிக்பாஸ் கருதலாம்). 

விஸ்வரூபம் -2 பாடலின் அரங்கேற்றம் நாளை நிகழும் என்று தெரிகிறது. இது தொடர்பான முன்னோட்டக் காட்சியில் ஸ்ருதிஹாசன் பாடுவதைக் காண முடிந்தது.