Published:Updated:

பிக்பாஸ்.. இவ்ளோ பாசக்காரங்களை டார்ச்சர் பண்றியே! #BiggBossTamil2

பிக்பாஸ்..  இவ்ளோ பாசக்காரங்களை டார்ச்சர் பண்றியே! #BiggBossTamil2
பிக்பாஸ்.. இவ்ளோ பாசக்காரங்களை டார்ச்சர் பண்றியே! #BiggBossTamil2

நீருக்கும் பிக் பாஸ் வீட்டிற்குமான பந்தம் இன்னமும் விடாது போலிருக்கிறது. நேற்று தண்ணீரை வைத்து விளையாடிய பிக்பாஸ் இன்று போட்டியாளர்களின் கண்ணீரை வைத்து விளையாடினார். ‘எந்தவொரு நபரின் பிரிவினால் தாங்கள் அதிகம் துயருகிறோம்?’ என்பதை ஒவ்வொரு போட்டியாளரும் சொல்ல வேண்டும். இந்தப் பகுதியின் மூலம் போட்டியாளர்களின் இன்னொரு முகங்களை அறிய முடிந்தது. ‘பாசக்காரப் பயலுவளா’ இருக்கிறார்கள். குறிப்பாக டேனி, ரித்விகா போன்றவர்களின் பேச்சுக்கள் உருக்கமாக இருந்தன. 

இதன் மூலம் போட்டியாளர்கள் ஒருவரையொருவர் அதிகம் புரிந்து கொள்ளவும் ஒருவரையொருவர் ஆறுதலாக அணைத்துக் கொள்ளவும் இந்தப் பகுதி நிச்சயம் உபயோகமாக இருக்கும். காலையில் சென்றாயனிடம் ஆக்ரோஷமாக சண்டை போட்ட மஹத், இந்தப் பகுதி முடிந்ததும் ‘மன்னிச்சிர்ரா சென்றயான்’ என்று தானாக முன்வந்து சொன்னது ஒரு நல்ல உதாரணம். ஆத்மார்த்தமான இரண்டு துளி கண்ணீரால் பல வருட மனக்கசப்பை ஒரு நொடியில் கழுவி விட முடியும் என்பதை நிரூபித்தது இந்தப் பகுதி. 

காலையில் சண்டை, மாலையில் நெகிழ்ச்சி என்று சமநிலையுடன் காணப்பட்டது பிக்பாஸ் வீடு. 
‘சுப்பம்மா.. சுப்பம்மா..’ என்கிற குத்துப்பாடலுடன் பிக்பாஸ் வீடு எழுந்தது. (இதுவே எங்கள் வீடாக இருந்தால், ‘கருமம் பிடிச்சவனே…காலைல.. ஏதாவது நல்ல சாமிப்பாட்டா போடக்கூடாதா?’ என்று என் அம்மா திட்டுவார்). இந்தப் பாடலுக்கு மும்தாஜூம் நித்யாவும் ஏற்கெனவே நடனமாடியிருப்பதாலோ என்னமோ, நித்யா உற்சாகமாக ஆடினார். (இப்பல்லாம் ‘குட்மார்னிங் போஷிகா’ சொல்ல மறந்துடறீங்க மேடம்).

முதல் சீஸனைப் போல் இந்த சீஸனில் ‘ஹோம் சிக்னஸ்’ துயரோடு காமிராவைப் பார்த்து அழுகிறவர்கள் குறைவு. இந்த வகையில் வையாபுரியை நினைவுப்படுத்தி அந்தக் குறையைப் போக்கினார் சென்றாயன். தன் மனைவி ‘கயல்விழி’ மற்றும் பெற்றோரை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார். 

‘தண்ணியில கண்டம்’ போட்டியில் அத்தனை கஷ்டப்பட்டதற்கு ‘சிறப்புச் சலுகை’ வழங்கப்படும் என்று பிக்பாஸ் ஏற்கெனவே அறிவித்திருந்தார். ‘என்னடா அது சிறப்புச்சலுகை’ என்பதற்கு விடை இன்று கிடைத்தது. நாலு பாக்கெட் நூடுல்ஸாம்.. அடச்சை.. அதை ஒரு பூட்டப்பட் பெட்டியில் வைத்து தருவாராம்.. நாலு பாக்கெட் மட்டும் எடுத்துக் கொண்டு மறுபடியும் சாவியை பிக்பாஸிடமே தந்து விட வேண்டுமாம். ‘சீரியல் மாமியார்களை’ விட டெரராக இருக்கிறார் பிக்பாஸ். இதற்கான அறிவிப்பை படித்த மஹத் ‘கேப்டனை அதிகம் பேசாமல் ஓரமாக உட்காரச் சொல்லவும்’ என்று எக்ஸ்ட்ரா பிட்டை அதில் இணைத்தது ஜாலியான நகைச்சுவை. 

சமையல் உதவியில் ஐஸ்வர்யா சரியாக செயல்படாதது குறித்து மறுபடியும் ஒரு பஞ்சாயத்து கிளம்பியது. ‘காய்கறி வெட்டச் சொன்னால் பாதியில் கிளம்பி விட்டாராம்’ நாட்டாமையின் பணி ஓவர்டைமையும் மீறி சென்று கொண்டிருப்பதால் ‘நீங்களே பார்த்துக்கங்க’ என்று கழன்று விட்டார். ஐஸ்வர்யாவின் சண்டித்தனத்தினால் பாலாஜி அதிகம் எரிச்சலாகி விட்டார். 

‘நான் உன்னை என்ன வாங்கிட்டு வரச்சொன்னேன்’ என்கிற கவுண்டமணி மாதிரி ‘ஐஸூம்மா.. நான் உன்கிட்ட என்ன சொன்னேன்..’ என்று காய்கறி வெட்டும் பிரச்னையை நிதானமாக விளக்கினார் டேனி. ‘என்னை குழந்தை மாதிரி டிரீட் பண்ணாதீங்க’ என்று சலம்பல் செய்யும் ஐஸ்வர்யா குழந்தை மாதிரிதான் பிஹேவ் செய்தார். திருவிழாவில் தன் பெற்றோரை தொலைத்து விட்டு அழுது கொண்டு நிற்கும் சிறுமியை விசாரித்தால், கடும் அழுகையுடன் திக்கித்திணறி விவரங்களைச் சொல்வாள் அல்லவா? ‘மழலைத் தமிழில்’ பிரேக் பிரேக் அடித்து ஐஸ்வர்யா தன் தரப்பு விளக்கத்தைச் சொன்னதும் அப்படித்தான் இருந்தது. எதிராளியால் பதிலுக்கு எதுவும் பேசவே முடியாது. புரியாது என்பது பாதி காரணம். 

இந்தப் பிரச்னை காரணமாக தனிமையில் அழுது கொண்டிருந்த ஐஸ்வர்யாவை யாஷிகா வந்து சமாதானம் செய்தார். “உனக்கு எந்தப் பிரச்னைன்னாலும் கமல் சார் கிட்ட சொல்லிடு. நீ பாதில விட்டுட்டு போனதும் தப்புத்தானே? போய் கிச்சன் பக்கத்துலயே நில்லு. ‘டேனி அண்ணா… என்ன உதவி வேணும்”னு கேளு…” என்று யாஷிகா செய்த உபதேசம் நன்கு வேலை செய்தது. கிச்சனுக்கு சென்ற ஐஸூ… “டேனி.. உனக்கு மட்டும்தான் ஸாரி சொல்வேன்.. இப்ப நான் என்ன பண்ணணும்:” என்று கேட்டதைப் பார்த்த போது குழந்தையைப் போல்தான் இருந்தது. (ஸாரி பேபிம்மா..). (டேனிக்கு மட்டும் ஸாரி சொன்ன கோபத்தை பாலாஜி பிறகு தீர்த்துக் கொண்டார்).

டேனியும் பாலாஜியும் இந்தப் பிரச்னையை வைஷ்ணவியிடம் எடுத்துச் சென்ற போது.. “முதல்ல… நீங்களா உங்களுக்குள்ள பேசுங்க… அப்படியும் ஸால்வ் ஆகலைன்னா என் கிட்ட வாங்க” என்று வைஷ்ணவி சரியாகத்தான் பேசினார். ஆனால், ‘ஆமாம்.. அப்புறம் இவங்க பேசியே அதை இன்னமும் பெரிசாக்கிடுவாங்க” என்று டேனி அடித்த கவுண்ட்ட்ருக்கு ஒட்டுமொத்த பிக்பாஸ் வீடே அடக்க முடியாமல் சிரித்தது. வைஷ்ணவியாலும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. 

டேனி ஆங்கிலத்தில் பேசியதால் ஐந்து நபர்கள் நீச்சல் குளத்தில் இறங்க வேண்டும். இதற்காக, ‘தொண்டைல ஆப்ரேஷன்.. காசு கொடு’ மாதிரி ஒவ்வொருவரிடமும் சென்று கெஞ்சிக் கொண்டிருந்தார் வைஷ்ணவி. மும்தாஜ் இந்த வேண்டுகோளை ஏற்க கறாராக மறுத்து விட்டார். ‘எப்படியாவது போய்த் தொலைங்க’ என்கிற சலிப்புடன் தலைவியான பாவத்தை பிக்பாஸ் நீச்சல் குளத்தில் தலைமுழுகச் சென்றார் வைஷ்ணவி. 

பல சமயங்களில் கொடுமைக்காரராக இருந்தாலும் சொன்ன சொல்லைக் காப்பாற்றுவதில் நியாயஸ்தராக இருக்கிறார் பிக்பாஸ். மும்தாஜ் தனது ‘சீக்ரெட் டாஸ்க்’கை வெற்றிகரமாக கையாண்டதால், 3000 மதிப்பெண்கள் + போனஸ் 300 மதிப்பெண்கள் என… மொத்தம் 3300 பாயிண்ட்டுகள் லக்ஸரி பட்ஜெட்டிற்கு கிடைத்தது. எனவே மக்கள் ஆர்வமாக புகுந்து விளையாடினார். நான்வெஜ் அயிட்டங்கள் ஆவேசத்துடன் தேர்வு செய்யப்பட்டன. ‘வாட் ஈஸ் கொத்துக்கறி?’ என்று அப்பாவித்தனமாக விசாரித்துக் கொண்டிருந்தார் ஜனனி. வீட்டிற்கான பொருட்களை தேர்ந்தெடுக்கும் போது சைவப்பழக்கம் உள்ளவர்களையும் நினைவு வைத்துக் கொள்ளலாம் அல்லது முன்கூட்டியே பேசி வைத்துக் கொள்ளலாம். 

‘பாத்திரங்கள் சரியாக சுத்தம் செய்யப்படுவதில்லை’ என்கிற பிரச்னை நேற்றே புகைந்து கொண்டிருந்தது. மஹத் – சென்றாயனின் மோதல் மூலம் இன்று அது மேலும் வெடித்தது. 

‘குற்றம் – நடந்தது என்ன?’ என்கிற பாணியில் பார்த்தால் ‘சம்பவத்தின்’ விவரம் இதுதான். கழுவப்பட்டிருந்த கோப்பைகளில் ஒன்றை எடுத்த ஜனனி, அதில் சுடுதண்ணீரை ஊற்றி அருந்த முற்பட கோப்பையில் முட்டை வாசனை அடிக்க.. ‘நீ பாரேன்.. நீ பாரேன்’ என்று ஒவ்வொருவரையும் முகரச் செய்ய.. அவர்களும் ‘உவ்வேக்’ என்று அருவருப்பு எபக்ட் கொடுத்தார்கள். 

சென்றாயன் பாத்திரங்களை வேக வேகமாக கழுவி விடுகிறார் என்று குற்றஞ்சாட்டிய அவர்கள், சரியாக அந்தச் சமயத்தில் வந்த சென்றாயனை விசாரித்தார்கள். ‘உபயோகித்த கோப்பையை கழுவிய பாத்திரங்களின் இடையில் மஹத் வைத்து விட்டாரோ’ என்பது சென்றாயனின் சந்தேகம் கலந்த குற்றச்சாட்டு. இதை அவர் உறுதிப்படுத்திக் கொண்டு சொல்லியிருக்கலாம்தான். ஆனால் தன் மீது சொல்லப்பட்ட இந்தப் புகாருக்கு மஹத் மிகையாக எதிர்வினை செய்தார். ‘நான்தான் வெச்சேன்னு உனக்குத் தெரியுமா.. நான் வெக்கலை-ன்னு சொல்லிட்டே இருக்கேன். கிறுக்கன் மாதிரி பேசற..’ என்று எகிற.. “மச்சான்.. ஓவரா போற.. நல்லால்ல.’ என்று நிதானமான கோபத்தைக் காட்டினார் சென்றாயன்.. ‘அப்படித்தாண்டா பேசுவேன்.. என்ன வேணும்னாலும் செஞ்சுக்கோ..’ என்று இன்னமும் ஓவராக பேசிய மஹத்தைப் பார்த்த போது, இவருக்கும் ஏதாவது ரகசிய டாஸ்க் தரப்பட்டிருக்குமோ என்கிற சந்தேகம் எழாமல் இல்லை. 

‘அவரு பண்றது சரியில்லை.. பார்த்துக்கங்க’ என்பது போல் பொறுமையுடன் கடந்து சென்ற சென்றாயனை, மும்தாஜ் அழைத்துச் சென்று சமாதானப்படுத்தினார். உருவத்தில் எளிமையாக இருப்பவர்களை மேட்டிமைத்தனமான உணர்வுடன் பாரபட்சமாக கையாள்வது சமூகத்தில் உள்ள ஒரு கெட்ட வழக்கம். இந்த மனோபாவமே பிக்பாஸ் வீட்டிலும் பிரதிபலிக்கிறது. சென்றாயன் ‘எடுப்பார் கைபிள்ளையாகவே’ பல சமயங்களில் அணுகப்படுகிறார். அதற்காக அவர் கோபமும் கொள்ளக்கூடாது என்று எதிர்பார்ப்பது ஓவர். ‘நானே ‘இறங்கி’ வந்து பேசறேன். கேட்க மாட்டேங்கறான்’ என்று மஹத் பிறகு சொன்ன வசனத்தில்தான் அந்த மேட்டிமைத்தனம் அடங்கியிருக்கிறது. 

இந்தச் சந்தடியில் ‘நித்யா’ குறிப்பிட்ட முக்கியமான காரணத்தை பலர் செளகரியமாக கவனிக்கவில்லை. குறிப்பாக சமையல் டீம். ‘யாராவது காஃபி மக்ல முட்டையை அடிப்பாங்களா.. அதுக்குன்னு உள்ள ஃபவுல்லதானே செய்யணும்?’ என்று அவர் எழுப்பிய கேள்வியை பாலாஜி உள்ளிட்டவர்கள் கண்டுகொள்ளவில்லை. ‘எல்லாத்திற்கும் காரணம் இந்த விஷபாட்டில்’ என்று டேனி கிண்டலடித்தாலும் பிரச்னைக்கு காரணம் ஜனனி அல்ல. சென்றாயனை குற்றம் சொன்னவர்கள், மிகையாக எதிர்வினை செய்த மஹத்தை மட்டும் எவருமே கண்டிக்கவில்லை. 

‘அவன் லூஸூ மாதிரி பண்றான்’ என்று மஹத்தை சமாதானப்படுத்தும் நோக்கில் வழக்கம் போல் உளறிக் கொட்டினார் வைஷ்ணவி. ‘நான் சொன்னா அவனுக்கு ஹர்ட் ஆச்சுல்ல.. எனக்கும் ஹர்ட் ஆகும்’ என்றார் மஹத். ‘சரிடா.. விடுடா… “ என்று இதர பெண்களும் சமாதானப்படுத்தினார்கள். ஆண்களின் பல அசட்டுப்பிடிவாதங்களை பெண்களின் அன்பு எளிமையாக கையாளும் போதுதான் பல சர்ச்சைகள் பெரிதாகமல் தவிர்க்கப்படுகின்றன. 

“ஒரு பிரச்னைன்னா.. நீ உடனே போய் பேசணும்னு அவசியமில்ல… கொஞ்சம் டைம் எடுத்துக்கிட்டு அப்புறம் கூட பேசலாம். நீ இதைக் கிளறாம இருந்தா.. மஹத்தே போய் கூட ஸாரி கேட்டுடுவான்’ என்று வைஷ்ணவிக்கு உபதேசம் செய்தார் ரம்யா. வைஷ்ணவியின் பிரச்னை என்னவென்றால், நாட்டாமை என்கிற பதவியின் மூலம் தான் எல்லாப்பக்கமும் இழுபடுவது ஒருபக்கம் அவஸ்தையைத் தருகிறது என்றாலும்.. ‘As a president …நான் என்ன சொல்ல வர்றேன்னா..’ என்று நாட்டாமைத்தனத்தை விட்டுக்கொடுக்கவும் மனதில்லாமல் அல்லாடுகிறார். 

சண்டை போட்டு சோர்ந்து போனதால் வைஷ்ணவி, அனந்த் உள்ளிட்டவர்கள் கண் அயர, மேலிடத்திலிருந்து அழைப்பு வந்தது வைஷ்ணவிக்கு. ‘இனிமே நான் பகல்ல தூங்கினா.. தலைவி போஸ்ட்டை பிடுங்கிடுவாங்களாம்.. அதைப் போலவே மத்தவங்க தூங்கினாலும் நேரடியா ‘எவிக்ஷனுக்கு’ தகுதி ஆகிடுவாங்களாம்’ என்று விரக்தியாகச் சொன்னார். 

மஹத்தும் சென்றாயனும் சமாதானம் பேச அமர்ந்தாலும் பிரச்னை அணையாமல் நீடித்தது. “என் காரெக்ட்டர் வேற.. உன் காரெக்ட்டர் வேற.. இது சரியா வராது.. உனக்கு நிறைய கோபம் வருது.. நல்ல டாக்ட்டரா பாரு.. கொஞ்ச நாள் நாம பேசாம இருப்போம்’ என்றெல்லாம் சென்றாயன் சொல்ல, மறுபடியும் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டு கோபமாகச் சென்றார் மஹத்.

‘விதைக்கும் விதை சரியாக இருந்தால் கிடைக்கும் பலன்களும் சரியாக இருக்கும்’ என்கிற முன்னோட்டத்துடன் ஓர் அறிவிப்பு வந்தது. (இது பிக்பாஸ் பிளான் சாயல்லேயே இருக்கே). இதன் படி போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு செடி தரப்படும். அவர்கள் அதை கண்ணுங்கருத்துமாக பராமரித்து வளர்க்க வேண்டுமாம். ஒருவர் வீட்டை விட்டுச் செல்லும் போது தனக்குப் பிரியமான ‘ஹவுஸ்மேட்டிடம்’ இந்தச் செடியை பரிசாக அளித்து விட்டுச் செல்லலாமாம். இது அன்பை வெளிக்காட்ட ஒரு சந்தர்ப்பமாம். ‘மியூச்சுவல் பண்ட்ஸ்’ஸின் மறைமுக விளம்பரம். பிக்பாஸிற்கும் இவர்களுக்கும் ‘மியூச்சுவலாக’ செய்யப்பட்ட ஒப்பந்தம் போல. 

அவரவர்களின் செடிகளைத் தேர்ந்தெடுத்து தண்ணீர் ஊற்றினார்கள். அது வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டன. (ஏற்கெனவே ‘கடலை’ விவசாயத்தை ஜரூராக நடத்தும் மஹத், இனி இதையும் கவனித்தாக வேண்டும்).

அடுத்த பகுதி ‘அன்புடன்’

‘கடந்த மூன்று வாரங்களாக உங்கள் உறவுகளையும் நட்புகளையும் பிரிந்து பிக்பாஸ் வீட்டில் பயணித்து வருகிறீர்கள். அவர்களில் எவர் மீது அதிகமான பிரிவுத்துயரை அடைகிறீர்கள் என்பதையும் அவர்களுக்கு சொல்ல விரும்பும் அன்புத்தகவல் என்ன என்பதையும் தெரிவிக்க வேண்டும். அந்த தகவல் கோல்டன் பெட்டியில் வைத்து ஆர்ட்டின் வடிவ பொம்மையுடன் சம்பந்தப்பட்டவருக்கு அனுப்பி வைக்கப்படும்’ என்ற அறிவிப்பு வந்தவுடனே பலர் சோகமாக உணரத் துவங்கினார்கள். 

முதலில் துவங்கியவர் நித்யா. “எல்லோருக்குமே நல்லாத் தெரியும். நான் என் மகள் போஷிகாவைத்தான் ரொம்ப மிஸ் பண்றேன். நான் அவளுக்கு ஒரு அம்மாவா இல்லாம.. நல்ல பிரெண்டா இருந்திருக்கேன். என் வயசுக்கு அவளும் அவ வயசுக்கு நானும் மாறி.. அன்பு செலுத்தியிருக்கோம். அடுத்தது.. எங்க அம்மா.. அப்பா.. அவங்களையும் மிஸ் பண்றேன். .. நான் இங்க வந்ததுக்கு காரணம் போஷிகாதான். அவ பெருமையடையறா மாதிரி நடந்துப்பேன்” என்று உருக்கமாகப் பேசினார். 

இதயத்தை தன் காதல் மனைவி ‘கயல்விழி’க்கு தர விரும்பினார் சென்றாயன்.  “நான் இங்க தினமும் உன்னை நாலைஞ்சு முறையாவது நெனச்சுப் பார்ப்பேன். ஆனா.. எனக்குத் தெரியும்.. நீ என்னை 24 மணி நேரமும் நெனச்சிட்டு இருப்பேன்னு.. நீ என் பக்கத்துல இருக்கும் போது உன்னோட அருமை எனக்குத் தெரியல.. இங்க வந்த பிறகுதான் தெரியுது.. என் மனசறிஞ்சு எவ்ளவொ சமைச்சுப் போட்டிருக்க.. அடுத்ததா எங்க அப்பா.. அம்மாவையும் மிஸ் பண்றேன். நான் இங்க சந்தோஷமா இருக்கேன். கவலைப்படாதீங்க” என்றார். 

“என் குடும்பத்தை விட்டு பிரிஞ்சு இருந்ததே கிடையாது. எங்காவது ஊருக்குப் போயிருந்தா கூட போன்ல பேசிட்டு இருப்பேன். இப்ப கஷ்டமா இருக்கு. இங்க நான் இன்டிபென்டன்ட்டா.. இருக்கேன். நெறைய வேலை செய்யறேன். பார்த்துட்டுதான் இருப்பீங்க.. இங்க நிறைய ஃபிரெண்ட்ஸ் கிடைச்சிருக்காங்க..” என்ற ஜனனி, இதயத்தை தன் அம்மாவிற்கு பரிசளித்தார். இதைப் போலவே ஐஸ்வர்யாவும் தன் அம்மாவிற்கு இதயத்தைத் தந்து அன்புத்தகவலைப் பகிர்ந்தார். 

மஹத்தின் பேச்சு இயல்பானதாக இருந்தது. தன் கேர்ள் பிரெண்டை அவர் மிஸ் செய்வதாக சொன்ன போது, ‘அடப்பாவி’ என்று தோன்றினாலும்.. உங்க நேர்மை ரொம்ப பிடிச்சிருக்கு பாஸ்… தனக்கு இன்னொரு அம்மாவாக இருந்த அக்காவிற்கு அவர் எதுவுமே இதுவரை செய்ததில்லையாம். அவருக்கு இதயத்தை பரிசளிப்பதாக சொல்லி சுருக்கமாக முடித்துக் கொண்டார் மஹத். வெல்டன்.

தன் அப்பாவை நினைவுகூர்ந்து வைஷ்ணவி பேசியது உருக்கமாக இருந்தது. “சின்ன வயசுல இருந்து நான் ரொம்ப ஸ்ட்ராங் பெர்சன்.. ஈஸியா அழ மாட்டேன். என்னை அழ வைக்கறது ரொம்ப கஷ்டம். (நாட்டாமை பதவிக்கு பிறகுமா?!)  என் அப்பா எத்தனையோ விதங்களில் என் மீது அன்பை செலுத்தியிருக்கிறார். காலைல அவர் செய்யற முதல் வேலையே.. என் தலையை தடவிக் கொடுக்கறதுதான். தூக்கத்துல அது எனக்கு தொந்தரவா இருக்கும். சலிச்சுப்பேன். அப்பல்லாம் நான் அதைப் புரிஞ்சுக்கவேயில்லை..” என்று உருக்கமாக உரையாடிய வைஷ்ணவி இதயத்தை தன் பெற்றோருக்கு பரிசாக தந்தார். வைஷ்ணவி தன் தந்தையைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது தாங்க முடியாத ரித்விகா ஒரு பலத்த கேவலுடன் அழுதார். மற்றவர்களும் கண்கலங்கினர்.

“எனக்கு அப்பா இல்லை.. அம்மா மற்றும் அண்ணன்தான்” என்று துவங்கிய மும்தாஜ், தன்னுடைய சகோதரர்தான் மிகப்பெரிய வழிகாட்டி.. என்று பெருமிதமாகச் சொன்னார். 

பாலாஜியின் உரையை பலரும் எதிர்பார்த்திருப்பார்கள். “பாலாஜி யாருன்னு என் நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும்தான் தெரியும். கோபம் வந்தா கத்திடுவேன். அப்புறம் நானே போய் சமாதானமாயிடுவேன். இங்க இருக்கற ஜெயில் செட்டப்புல போறதுக்கு கூட நான் கவலைப்படலே.. ஆனா என் மகளைப் பிரிஞ்சு இருக்கறதுதான் ரொம்ப வேதனையா இருக்கு” என்ற பாலாஜி, ‘எதுக்காக நாம் சம்பாதிக்கறோம்.. எதுக்காக இப்படி ஓடறோம். ஒண்ணும் புரியல.. எங்களுக்குள் இருக்கிற பிரச்னையைப் பற்றி மூன்றாவது நபர்கள் எதுவும் தீர்ப்பு எழுதத் தேவையில்லை” என்றதும் மற்றவர்கள் கைத்தட்டினார்கள். தன் தந்தையின் மறைவின் போது உறுதுணையாக இருந்த நித்யாவிற்கு மனமார நன்றி சொன்ன பாலாஜி, இதயத்தை மகள் ‘போஷிகா’விற்கு பரிசளித்தார். 

தான் சொல்ல விட்டுப் போனதை சொல்வதற்காக மறுபடியும் நித்யா வந்தார். “என்னைப் பற்றி பொதுவில் எதிர்மறையான பிம்பம் வந்த போது ரொம்ப மனசு உடைஞ்சுட்டேன். வீட்டை விட்டு வெளியே கால் வைக்கவே அத்தனை பயமாக இருந்தது. அந்தச் சமயத்தில் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்து துணிச்சலை ஊட்டிய மனோஜ் அண்ணாவிற்கு கண்டிப்பா நன்றி சொல்லணும். அதைப் போல..’ஊரே என்னை கெட்டவ’ன்னு சொல்லும் போது.. ‘என் பொண்ணு தப்பு பண்ணியிருக்க மாட்டா’ன்னு ஆதரவா இருந்தா அப்பா…அம்மாவிற்கு நன்றி சொல்லணும்’ என்று மனம் கலங்க பேசினார். (ஆனால் இதை பாலாஜி ரசிக்கவில்லை என்பது அவரது முகபாவங்களில் இருந்து தெரிந்தது).

யோசித்து.. யோசித்து.. தயங்கி.. தயங்கி.. நெகிழ்ச்சியில் பேச வராமல் நிறுத்தி நிறுத்தி பேசிய.. டேனியின் இன்னொரு முகத்தைப் பார்க்க முடிந்தது. மற்றவர்களை கதறக்கதற கலாய்க்கும் டேனியா.. இவர்? ஏறத்தாழ உயிர் போகும் ஆபத்தில் மருத்துவமனையில் இருந்த போது அவருடைய கையின் மீது விழுந்த தந்தையின் கண்ணீர் தன் ஆயுள் முழுதும் சுட்டுக் கொண்டேயிருப்பதை உருக்கமாக தெரிவித்தார் டேனி. ‘வீட்ல நிறைய சேட்டை பண்ணுவேன். அப்பா சொன்னது எதையும் நான் கேட்டது கிடையாது. எல்லாத்துக்கும் மாற்று இருக்கு.. அப்பாவுக்கு அது கிடையாது. ஒரு விழால தன் அப்பாவை நினைத்து சிவகார்த்திகேயன் கலங்கிய போது ‘என்னடா .. இது’-ன்ற மாதிரி சிரிச்சிருக்கேன். ‘இப்ப சிரிப்படா.. அப்புறம் தெரியும்’ ன்னு அப்பா சொன்னாரு..  இப்பத்தான் புரியது… அதைப் போலவே.. என்னை நம்பி வந்த என் பெண் தோழி.. குட்டு.. என்னை தாங்கிப் பிடிச்சிருக்கா.. அவளையும் ரொம்ப மிஸ் பண்றேன்.. இந்த ஹார்ட்டை அவளுக்குத் தர்றேன். என்று தன் உரையை முடித்தும் கூட அழுகையை அடக்க முடியாமல் இருந்தார். ஷாரிக்கும் மஹத்தும் அவரைத் தேற்றினார்கள். 

ரம்யாவும் இறந்து போன தன் அப்பா தொடர்பான அன்புத்தகவலைப் பகிர்ந்து கொண்டார். ரித்விகாவின் பேச்சு இயல்பான உருக்கத்துடன் இருந்தது. ‘எங்க அப்பாவிற்கு ஒருமுறை ஆக்சிடெண்ட் ஆனதுல தாங்கி தாங்கித்தான் நடப்பாரு.. ரெண்டு பேரும் பயங்கரமா சண்டை போட்டுப்போம். வீட்டுக்குள்ள பேசாம இருப்போம். ஆனால செகண்ட் ப்ளோர்ல இருக்கற எங்க வீட்ல லிஃப்ட் வேலை செய்யலைன்னா ரொம்ப பதறிடுவேன்.. எங்க அப்பா வர்றதுக்குள்ள அதைச் சரி செய்யணும்னு அல்லாடுவேன்..” என்ற ரித்விகாவின் அன்பு யதார்த்தமானது. 

‘தன் அம்மா, அப்பா.. மற்றும் தன் நண்பர்களை மிஸ் செய்வதாக சொல்லி சுருக்கமாக முடித்துக் கொண்டார் ஷாரிக்.. 

“நான் யார் முன்னாடியும் அழ மாட்டேன். பொறக்கும் போது கூட நான் அழலைன்னு சொன்னாங்க.. இங்க வந்ததுக்கு அப்புறம்தான் எங்க ஃபேரண்ட்ஸ்ஸோட அருமை தெரியுது. ஒவ்வொருத்தரும் தங்களின் உறவுகள் மீது இருக்கும் அன்பை வெளிப்படையாக தெரிவிச்சா நல்லா இருக்கும்.  இனிமே நான் சாப்பாட்டை வேஸ்ட் பண்ண மாட்டேன்.. ஃபோனை அதிகம் நோண்ட மாட்டேன்’ என்றெல்லாம் பேசிய யாஷிகாவின் உரையின் மூலம் இன்றைய இளம்பெண்களுக்கான செய்தி நிறைய இருந்தது. 

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம். 

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

பொன்னம்பலத்தின் பேச்சு வித்தியாசமாகவும் முதிர்ச்சியாகவும் இருந்தது. “நாங்கல்லாம் அழுது முடிஞ்ச வயசு.  ‘அழக்கூடாது’ன்னு மத்தவங்களுக்கு சொல்ற வயசு. இந்த ஹார்ட்டை யாருக்கும் தரப்போவதில்லை. காரணம்.. வரும் போதே.. எங்கள் வீட்டு உறுப்பினர்களின் ஹார்ட்டை கையோடு கொண்டு வந்துட்டேன். அவங்க என் கூடத்தான் இருக்காங்க.. பாதி நாள்.. ஃபைட்.. பாதி நாள் ஆஸ்பிட்டல்-னு காலத்தைக் கழிச்சுட்டேன்.. இங்க நான் சந்தோஷமா இருக்கேன்.. எனவே இந்த ஹார்ட்டை நானே வெச்சுக்கறேன்’ என்று மாறுபட்ட பேச்சை வழங்கினார். 

“நான் பாடகனாக ஆசைப்பட்டேன். ஆனால் பயிற்சியாளனாத்தான் வர முடிஞ்சது.. என்னோட தொழில்தான் இந்த வாய்ப்பை எனக்குத் தந்திருக்கு… என்னோட அருமையான மாணவர்களுக்கு இந்த இதயத்தை தர விரும்புகிறேன்” என்றார் அனந்த். 

முன்பே குறிப்பிட்டபடி இந்தப் பகுதி உணர்ச்சி மிகுதியாகவும் நெகிழ்வுபூர்வமானதாகவும் இருந்தது. போட்டியாளர்கள் பரஸ்பரம் மற்றவர்களின் அதுவரை அறியப்படாத முகங்களையும் அந்தரங்கமான பிரியங்களையும் அறியக்கூடிய பகுதியாக இருந்தது. இது அவர்களுக்குள் நெருக்கத்தையும் நட்பையும் அதிகரிக்கக்கூடும். அவர்களுக்கு மட்டுமல்லாமல், பார்வையாளர்களும் தங்களின் உறவுகளையும் நட்புகளையும் நினைவுகூர்வதற்கான ஓர் அருமையான சந்தர்ப்பமாக அமைந்தது. 

மும்தாஜிற்கு பிறந்தநாள் என்பதால் அவரது சகோதரர் பிரியாணி அனுப்பியிருந்தார். இதற்காக கண்கலங்க நன்றி சொன்னார் மும்தாஜ். போட்டியாளர்கள் ஆரவாரத்துடன் பிரியாணி மீது பாய்ந்தார்கள். ‘ரம்ஜான் வந்தா பிரியாணி நினைவுதான் வருமா?” என்று சிலர் சலித்துக் கொள்வார்கள். பிரியாணி என்பது ஒருவகையில் சமூக நல்லிணக்கத்தின் அடையாளம். இன்னொரு மதத்தைச் சேர்ந்தவரிடம் உரிமையுடன் கேட்டுப்பெறும் பிரியத்தின் கலாசார குறியீடு. சகிப்புத்தன்மைக்கு ஆதாரமாக இருக்கும் இது போன்ற கலாசாரப் பரிமாற்றங்கள் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். 

இன்று – அசல் நாட்டாமை வரும் நாள். உறைபடம், குறும்படம், விசாரணை, வாதப் பிரதிவாதங்கள் என்று போகும். வார இறுதியில் வெளியேறப் போகிறவர் யார் என்பது தொடர்பான நாடகங்களும் நடக்கும். பொறுத்திருந்து பார்ப்போம்.