Published:Updated:

"ச்சும்மா பேசிட்டுதான் இருந்தாங்களாம்!" யாஷிகா-மஹத் சர்ச்சையில் நடந்தது என்ன? #BiggBossTamil2

சுரேஷ் கண்ணன்
"ச்சும்மா பேசிட்டுதான் இருந்தாங்களாம்!"  யாஷிகா-மஹத் சர்ச்சையில் நடந்தது என்ன? #BiggBossTamil2
"ச்சும்மா பேசிட்டுதான் இருந்தாங்களாம்!" யாஷிகா-மஹத் சர்ச்சையில் நடந்தது என்ன? #BiggBossTamil2

பிக் பாஸ் சற்று சூடு பிடித்து விட்டது’ என்று நினைக்கிறேன்’ என்று கடந்த சனிக்கிழமையன்று கமல் சொன்னார். ‘மக்கள் பங்கு பெறத்துவங்கியதால்’ என்ற காரணத்தை அவர் சொல்லியிருந்தாலும், பொன்னம்பலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறைத்தண்டனை இந்த உஷ்ணத்தை சற்று அதிகமாகியிருக்கிறது என்று தோன்றுகிறது.  செல்லும் போது அனந்த் ‘பற்ற வைத்து’விட்டு சென்ற செயலே இந்த உஷ்ணத்திற்கு காரணம். 

21-ம் நாள் இரவு பிக் பாஸ் வீடு அல்லோலகல்லோலப்பட்டது. இரண்டு பிரிவுகள் உருவாகின. பொன்னலம்பலத்திற்கு வழங்கப்பட்ட தண்டனை அநீதியானது என்பது ஒரு தரப்பு. மெளனமாக இருப்பதன் மூலம் ஆதரிப்பது இன்னொரு தரப்பு. இதில் கட்சி மாறியவர்களும் நடுநிலைவாதிகளும் வேறு கலந்து இருந்தார்கள். பொன்னம்பலத்தின் மீது விரோத மனப்பான்மையுடன் முதலில் இருந்தவர்கள், கமலின் தலையீட்டிற்குப் பிறகு சிலர் ‘டக்கென்று’ கட்சி மாறினார்கள்.

'பொன்னம்பலத்தை ‘சிறைக்கு அனுப்பாமலிருக்க எங்களின் உயிரையும்  தருவோம்’ என்பதை மட்டும்தான் சொல்லவில்லை. மற்ற எல்லா நாடகங்களும் அரங்கேறிவிட்டது. ‘சிறை போன்றதொரு அமைப்பிற்குள்’ இருப்பது என்பது பிக்பாஸ் விளையாட்டின் ஒரு பகுதியே. சில அசெளகரியங்களை சகித்துக் கொண்டு சில நாட்களை கழிக்க வேண்டும். இதர கடினமான சவால்களைப் போல இதுவும் ஒரு சவாலே. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு இதைப் பற்றி நிச்சயம் அவர்களுக்கு விளக்கப்பட்டிருக்கும். மேலும் வரும் வாரங்களிலும் இதர போட்டியாளர்கள் நிச்சயம் இந்த தண்டனையைப் பெறப் போகிறார்கள்? எனில் ஏன் இத்தனை பதட்டமும் திகைப்பும் கலந்த நாடகம் நடந்தது என்று புரியவில்லை.

டேனியும் யாஷிகாவும் இணைந்து இரவு முழுக்க (இருங்கய்யா.. அவசரப்படாதீங்க).. வெங்காயம் வெட்டிய சவாலின் போது மற்ற சில போட்டியாளர்களும் அவர்களுடன் நின்றதைப் போல, உடல் நலம் குன்றியிருக்கும் பொன்னம்பலத்தின் அருகில் சில போட்டியாளர்கள் இரவில் உறுதுணையாக நின்றிருந்தால் பிரச்னை தீர்ந்தது. 

முந்தைய பிரச்னைக்கு தான் மன்னிப்பு கேட்டும் ஏன் இந்த தண்டனை, வேறு நியாயமான காரணமாக இருந்தால் ஓகே.. என்பதுதான் பொன்னம்பலத்தின் ஆதங்கம் என்பதாகப் புரிந்து கொள்ள முடிகிறது. 

இருபத்தோராம் நாள் இரவில் பொன்னம்பலத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் கசகசவென்று நிகழ்ந்த உரையாடல்களை சற்று கோர்வைப்படுத்தி தொகுத்தால் விஷயம் இதுதான் என்று தோன்றுகிறது. இதில் எங்காவது இடைவெளிகளும் போதாமைகளும் இருக்கக்கூடும். 

துவக்க நாட்களில் பெண்கள் படுக்கையறையில் அவர்களுடன் மஹத் உரத்த குரலில் சிரித்துப் பேசிக் கொண்டிருந்ததை, தூக்கத்திற்கு இடையூறாக இருந்த காரணத்தினால் பொன்னம்பலம் ஆட்சேபித்திருக்கிறார். இளையவர்களுக்கு இருந்த அதே உற்சாகமான மனநிலையைப் பிரதிபலிக்கும் விதமாக அவரும் எரிச்சலை மறைத்துக் கொண்டு ஜாலியாக கமெண்ட் அடித்து விட்டார். ஆனால் அது பெண்களை அவதூறு செய்வது போல் இருந்ததால் பெண்கள் தரப்பிடமிருந்து ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. மும்தாஜ் இது குறித்து பொன்னம்பலத்திடம் தனியாகப் பேசினார். ‘தான் சொல்லியது தவறாக உணரப்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்கத் தயார்’ என்றார் பொன்னம்பலம். சொன்னது போலவே பிறகு ஐஸ்வர்யாவிடம் சென்று மன்னிப்பு கேட்டார். இது நடந்து முடிந்த பிரச்னை.

ஆனால் – கடந்த வார பஞ்சாயத்து நாளுக்கு முன்பாகவும் கூட ஷாரிக்கும் ஐஸ்வர்யாவும் பொன்னம்பலத்தின் படுக்கையில் (அது இரட்டை படுக்கை என்பதால்) அமர்ந்து நள்ளிரவு நேரத்தில் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள் போல. வெறுமனே பேசிக் கொண்டிருந்தார்களா அல்லது மெல்லிய சில அத்துமீறல்களில் ஈடுபட்டார்களா என்பது அறியப்படவில்லை. இவர்களின் பேச்சினால் தூக்கம் கலைந்த பொன்னம்பலம், பஞ்சாயத்து நாளின் போது கமலின் முன்பாக ‘முந்தா நேத்து.. நைட்டு .. என்ன நடந்தது தெரியுமா? என்று வாக்கியத்தை முழுதாக முடிக்காமல், அதைப் பற்றி தெளிவுப்படுத்தாமல் புகாராக முன்வைத்தது பிரச்னை. அது சம்பந்தப்பட்டவர்களைப் பற்றிய – குறிப்பாக பெண்களைப் பற்றிய – தவறான யூகங்களுக்கு இட்டுச் செல்லும். இது பொன்னம்பலம் செய்த அடிப்படையான பிழை என்பதாகத் தோன்றுகிறது. 

“ஏற்கெனவே அந்த ஊருக்கும் நமக்கும் வாய்க்கா தகராறு இருக்கு’ என்கிற கதையாக, துவக்க நாட்களில் பொன்னம்பலம் சத்தம் போட்டு, பிறகு மன்னிப்பு கேட்ட சர்ச்சைகளைத் தொடர்ந்தும் அவருடைய உறக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஷாரிக் மற்றும் ஐஸ்வர்யா இரவில் அவரின் அருகே பேசிக் கொண்டிருந்ததும் பிழைதான். அவர் மறுபடியும் கோபப்படுவதற்கான தூண்டுதலை இது அளித்தது. 

காரசாரமான பல விவாதங்களுக்குப் பிறகே, தன் தூக்கத்திற்கு இடையூறாக அவர்கள் ‘பேசிக் கொண்டிருந்தார்கள்’ என்கிற விஷயத்தை பொன்னம்பலம் சொல்கிறார். இதை முதலிலேயே தெளிவாக சொல்லியிருக்கலாம். 

தங்களைப் பற்றிய எதிர்மறையான பிம்பம் ஊடகங்களின் மூலமாக பொதுசமூகத்திடம் சென்று சேர்ந்திருக்கலாம் என்கிற கவலையிலும் பதட்டத்திலும் யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் பொன்னம்பலத்திடம் அழுத்தம் தந்த பிறகே இதை அவர் கூறுகிறார். ‘நாங்க கூட என்னென்னமோ கற்பனை பண்ணிக்கிட்டோம்’ என்று வைஷ்ணவி சொல்வதைப் போலத்தான் பலரும் நினைத்திருப்பார்கள். ‘எலியை யானையாக்கிட்டீங்க’ என்று மும்தாஜ் சொல்லிக் காட்டியதும் இதுதான்.

‘நீங்க விஷயத்தை முழுதாக சொல்லாமல்.. அரைகுறையாக சொல்வதன் மூலம் எங்களைப் பற்றி தவறான கருத்து உருவாகும்படி செய்து விட்டீர்களே’ என்று சொல்கிற பெண்களின் தரப்பில் நியாயமுள்ளது. மற்றவர்கள் சந்தேகப்படும்படி தங்கள் தரப்பில் ஏதேனும் குற்றம் நிகழ்ந்திருந்தால் பெண்களால் இப்படி அறச்சீற்றத்துடன் துணிச்சலாக பொன்னம்பலத்தை கேள்வி கேட்க முடிந்திருக்குமா என்பதையும் யோசித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. ‘அனந்த் சார் கொடுத்த தண்டனைக்கு எங்களை ஏன் கார்னர் பண்றீங்க?” என்று அவர்கள் கேட்கும் கேள்வியும் சரியானதே. 

தங்களின் நியாயத்திற்காக பெண்கள் ஆக்ரோஷமாக விவாதிக்கும் போது ஷாரிக் இதை மென்று முழுங்குவதன் ரகசியம் பிடிபடவில்லை. ‘நாங்க பேசிட்டிருந்தம்.. உங்க தூக்கத்தை டிஸ்டர்ப் பண்ணது தப்புதான். அதைத் தெளிவா சொல்லியிருக்கலாமே’ என்று அழுத்தம் திருத்தமாக பொன்னம்பலத்திடம் சொல்லியிருக்கலாம். அதற்கு மாறாக திருட்டு முழி முழித்தது குழப்பத்தைத்தான் ஏற்படுத்தும். ‘உங்க அப்பா கிட்ட இருக்கும் போது இப்படித்தான் நடந்துப்பியா?’ என்று ஏறத்தாழ Emotional blackmail வகையில் பொன்னம்பலம் கேட்டதின் காரணமாக அவர் திகைத்து நின்று விட்டாரோ என்று தோன்றுகிறது. 

“இவங்க இதை பெரிசா பண்ணப் போறாங்க போலிருக்கு. நம்மள பத்தி நமக்குத் தெரியும். நாம தப்பு எதுவும் பண்ணலை’ என்பது போல யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவிடம் பிறகு பேசிக் கொண்டிருந்தார் ஷாரிக். இதை பொதுச்சபையிலேயே அவர் அழுத்தமாக தெரிவித்திருக்கலாம். பெண்களிடம் இருக்கும் ஆக்ரோஷக் குணம் கூட இவரிடம் இல்லை. 

ஆனால் – இந்த சர்ச்சையில் இன்னமும் கூட வெளிவராத மர்மமும் இருப்பது போல்தான் தெரிகிறது. “தப்பு எங்கன்னு வீடியோல பார்த்தா தெரிஞ்சிடப் போவுது’ என்று பொன்னம்பலம் சொல்வது இதைத்தான் போல. பொன்னம்பலத்திற்கு ஆதரவாக கமல் பேசியதற்கும் சில ஆதாரங்கள் இருக்கக்கூடும். வரும் வாரங்களில் இது தொடர்பான குறும்படங்கள் திரையிடப்படலாம். 

ஒட்டுமொத்த பார்வையில் ‘ஒரு புறாவுக்கு இத்தனை அக்கப்போரா?’ என்றும் தோன்றாமல் இல்லை. ஆணும் பெண்ணும் பழகும் விதத்தில், கடந்த தலைமுறையினரோடு ஒப்பிடும் போது இளைய தலைமுறையினரிடம் நெருக்கம் கூடியிருக்கிறது. தொட்டுப் பேசுவது அவர்கள் ஒரு தடையாக இல்லை. பாலினம் சார்ந்த மனத்தடைகள் விலகி பரஸ்பரம் ‘போடா.. போடி.. என்று ஏக வசனத்தில் ஜாலியாக பேசிக் கொள்கிறார்கள். இது ஒருவகையில் நல்லதே. தவிர்க்க முடியாத மாற்றமும் கூட. ஆனால் தங்களின் எல்லை எதுவென்ற தெளிவுடன் இந்த நட்புகளை வளர்த்தெடுக்க வேண்டும். பொதுவாக பெண்கள் இந்த விஷயத்தில் தெளிவாகத்தான் இருக்கிறார்கள். 

கால மாற்றத்தில் நிகழும் இந்த விஷயங்களை முந்தைய தலைமுறையால் அத்தனை எளிதில் ஜீரணித்துக் கொள்ளமுடியவில்லை. முகச்சுளிப்புடனும் அருவருப்புடனும்தான் இந்த மாற்றத்தைக் கவனிக்கிறார்கள். பொன்னம்பலத்தின் பிரச்னையும் இதுவேதான் என்று எண்ணத் தோன்றுகிறது. ஐஸ்வர்யாவை தனிமையில் அழைத்து கண்டிப்பான குரலில் மும்தாஜ் உபதேசம் செய்த அதே முதிர்ச்சியான பாணியை பொன்னம்பலமும் பின்பற்றியிருந்தால் விஷயம் இத்தனை மிகையாகியிருக்காது. 

அவருடைய உடல்நிலையைக் கருதி, பொன்னம்பலத்திற்குப் பதிலாக தங்களில் எவராவது சிறையில் போய் இருக்கிறாம் என்று (யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா உட்பட) சில போட்டியாளர்கள் சொன்னது அவர்களின் மனிதாபிமானத்தைக் காட்டுகிறது. தியாகம் என்பது கூடிவாழ்தலில் உருவாகும் ஒரு நேர்மறையான உணர்வு. அதை பிக்பாஸ் வீடும் பின்பற்றுவது பாராட்டுக்குரியது. இதில் சில நாடகங்களும் கலந்திருக்கலாம் என்பதை சொல்லத் தேவையேயில்லை.

பிக்பாஸிற்கே தெரியாத விதிகளைக் கூட ரித்விகா அறிந்து வைத்திருப்பாரோ என்று எண்ணத்தூண்டும் வகையில் அவர் பயங்கரமாக ‘ஹோம் ஒர்க்’ செய்து வந்திருக்கிறார் போலிருக்கிறது. இதைப் பல சமயங்களில் நிரூபிக்கிறார். 

“நாம என்னதான் வேண்டுகோள் வெச்சாலும் பிக்பாஸ் கேட்க மாட்டாரு.. ‘ஒரு தடவை முடிவு பண்ணிட்டா.. அதற்குப் பிறகு அவர் பேச்சை அவரே கேட்க மாட்டாரு’ என்பதுதான் பிக்பாஸ் பாலிஸி.. அதனால நீங்க உள்ள போங்க.. அப்புறம் இதுக்கு ஒரு தெளிவு வரும்’ என்று பொன்னம்பலத்திடம் ரித்விகா சொன்னது சமயோசிதம். 

‘எல்லோரும் நின்னு கசகசன்னு பேசிட்டிருக்கறதை விட.. சம்பந்தப்பட்டவங்க கிட்ட போயி பேசுங்கண்ணே.. விஷயம் முடியும்’ என்று பொன்னம்பலத்தை வற்புறுத்திய டேனியின் அணுகுமுறையும் சிறப்பு. “அவங்க பழகறதை முதல் நாள்ல இருந்தே ஏன் மத்தவங்க தட்டிக்கேட்கலை” என்று டேனி கேட்பதிலும் விஷயமுள்ளது. ‘நாகரிகம் கருதி நாங்கள் பேசவில்லை. இப்போது பார்வையாளர்களின் ஆட்சேபம் கருதி தலையிடத் துவங்கியிருக்கிறோம்’ என்கிற ரித்விகாவின் விளக்கம் சரியாகத் தோன்றவில்லை. 

இளம் போட்டியாளர்களின் இந்த அத்துமீறல்கள் குறித்து துவக்கத்திலேயே பலருக்கும் உள்ளுக்குள் எரிச்சல் இருந்திருக்கிறது போல. பொன்னம்பலத்தின் பிரச்னைக்குப் பிறகு அது வெளியில் வரத்துவங்கியிருக்கிறது. “இவர்களை இணைத்துப் பேசி தொடர்ந்து கிண்டல் செய்து விட்டு பிரச்னை என்று வந்தவுடன் வேறு மாதிரியாக பாலாஜி பேசுகிறாரே” என்று ரம்யா சுட்டிக்காட்டியதிலும் நியாயமுள்ளது. (முதல் சீஸனில் ஆரவ் –ஓவியா விஷயத்திலும் இதேதான் நிகழ்ந்தது.)

“என்னண்ணணே.. உங்க பெட் பக்கத்துலயே.. இப்படி நடக்குது” என்று சென்றாயன் பொன்னம்பலத்திடம் விசாரித்ததால் அவர் கோபத்திற்கு தூண்டப்பட்டிருக்கிறார் என்கிற விஷயமும் பொன்னம்பலத்தின் மூலமாக நாம் அறிய முடிந்தது. (“எனக்கு எப்படி இருக்கும் பாருங்க.. சொல்றதுக்கு கூச்சமா இருக்கு..” என்று மறுநாள் காலையில் ரம்யாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் பொன்னம்பலம்).

‘தனிப்பட்ட பிரச்னை காரணமாக, வெளியேறும் போது  பொன்னம்பலத்தை அனந்த் பழிவாங்கி விட்டுச் சென்று விட்டார்’ என்கிற அபிப்ராயமும் உலவுகிறது. பாலாஜி இதை வெளிப்படையாக தெரிவித்தார். தத்துவம், ஆன்மீகம் என்று எப்போதும் நிதானமாகவும் பிறருடைய பிழைகளை கறாராக சுட்டிக்காட்டியும் செயல்பட்டுக் கொண்டிருந்த அனந்த், சிறுபிள்ளைத்தனமாக இப்படி செய்திருப்பாரா என்று யோசிக்க வேண்டியிருக்கிறது. செல்வதற்கு முன் பொன்னம்பலத்தைப் பற்றி புகழ்ச்சியாக பேசி ‘அவர்தான் இங்கு இருக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியவர் அனந்த். மேலும் வெளியே வந்து, புகைப்படங்களின் கீழே தனது அபிப்ராயங்களைத் தெரிவிக்கும் போது மிகக் கவனமாக எவருடைய மனதும் புண்படாமல் நேர்மறையான வார்த்தைகளையே பயன்படுத்தினார் என்பதையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. ‘பெண்களைப் பற்றி தவறாக பொன்னம்பலம் பேசியதுதான்’ தண்டனை தரும் அவரது முடிவிற்கு காரணமாக இருக்கக்கூடும். 

ஒரு பிரச்னையொட்டி அவரவர்களின் தனிப்பட்ட விரோதங்களும் பழிவாங்கல்களும் குறுக்கும் நெடுக்குமாக பயணிக்கும் விந்தைகளையும் இந்த விவகாரத்தில் பார்க்க முடிந்தது.

“பொன்னம்பலம் சிறைக்குப் போகவில்லையென்றால் ஒரு வாரத்திற்கான லக்ஸரி பட்ஜெட் வராது.. அவ்வளவுதானே.. என்ன இப்ப…” என்று ஆவேசமாகப் பொங்கிய பாலாஜி.. ‘எல்லா வாரத்திற்கும்’ என்று தெரிந்ததும் பின்வாங்கியது நல்ல நகைச்சுவை. 

இரவு முழுவதும் பொன்னம்பலத்தின் அருகாமையில் இருந்த மும்தாஜின் மனிதாபிமானம் (ஒருவேளை அது பாவனை என்றாலும் கூட) பாராட்டத்தக்கது. ஆனால், ‘நீங்க பொம்பளை.. நான் ஆம்பளை’.. “அப்புறம் சொல்லிக் காட்டுவீங்க…’ என்று என்னென்னமோ உளறிக் கொட்டிய பொன்னம்பலத்தின் முதிர்ச்சியின்மையும் வெளிப்பட்டது. ‘நானும் ரவுடி… ஜெயிலுக்குப் போறேன்.. பார்த்துக்கங்க..’ என்று அவர் முதலில் இயல்பாக இருந்ததாக காட்டிக்கொண்டாலும் அது சார்ந்த மனக்குழப்பத்தில் இருக்கிறார் என்பதாகத்தான் இந்த உளறல்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

22-ம் நாள் காலை.. ‘சொப்பன சுந்தரி.. நான்தானே.. ‘ என்று அசந்தர்ப்பமான சூழலில் ஒரு குத்துப்பாட்டு ஒலிபரப்பாகியது. பொன்னம்பலத்தின் மீதான அனுதாப அலை இரவு முழுவதும் கரைபுரண்டு ஓடியதால் எவருமே நடனமாட மாட்டார்கள் என்று கருதியதற்கு மாறாக .. ‘நீ ரசத்தை ஊத்து’ என்கிற கதையாக சிலர் உற்சாகமாக வந்து ஆடினார்கள். 

இந்த ரணகளமான சூழ்நிலைக்கு இடையிலும்… வெண்டைக்காய்.. முள்ளங்கி.. என்று சமையல் தொடர்பான பழைய பஞ்சாயத்தைப் பேசிக் கொண்டிருந்தார் நித்யா… (வெங்காயத்தைத் தொடர்ந்து இன்னமும் என்னென்ன காய்கறிகள் பிரச்னை அணிவகுக்கப் போகிறதோ?!). ‘தன்னைப் பற்றி மீடியாவில் எப்படி சித்தரித்திருக்கிறார்களோ என்று ஐஸ்வர்யா அஞ்சுகிறார்” என்று பிறகு நித்யா பேசிக் கொண்டிருந்தது நியாயமான விஷயம். ஆண்களை விடவும் பெண்களே அதிகம் உணரக்கூடிய பிரச்னை இது. மொழிப்பிரச்னையும் ஐஸ்வர்யாவின் விஷயத்தில் விளையாடியிருக்கலாம் என்றும் பேசிக் கொண்டார்கள். 

பொன்னம்பலத்தை சிறையிலிருந்து விடுவிக்கச் சொல்லி கொடூரமான ஆங்கிலத்தில் பிக்பாஸிடம் வேண்டுகோள் விடுத்துக் கொண்டிருந்தார் சென்றாயன். காலை 11..30 மணிக்கு பொன்னம்பலத்தின் தண்டனை முடிந்ததாக பிக்பாஸ் அறிவித்தார். (பயந்துட்டியா.. குமாரு). உற்சாக வரவேற்புடன் பொன்னம்பலத்தை வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்கள். ‘இதுக்கா இவ்ள  டிராமா’ என்ற யாஷிகாவின் கமெண்ட், நம்முடைய மைண்ட் வாய்ஸிலும் எதிரொலித்தது. 

‘ஒரு பொண்ணுக்கும் பையனுக்கும் கல்யாணம் நடந்துச்சு.. அவங்க கையில் பன் கொடுத்தாங்க.. ஏன்..னு சொல்லுங்க.. ஏன்னா.. கல்யாணம்.. ஜாம்..ஜாம்..னு நடந்துச்சு’ என்று கொடூரமான ஜோக்கை காமிராவின் முன்னால் சொன்னார் யாஷிகா. (இதற்காகவே இவரை சிறையில் ஒருமுறை தள்ளலாம்).

பொன்னம்பலத்தின் விடுதலையைத் தொடர்ந்து இன்னொரு நல்ல செய்தியும் வெளியானது. வைஷ்ணவியின் தலைவி பதவி முடிவுக்கு வருகிறது. மக்கள் மகிழ்ச்சியுடன் கைத்தட்ட ‘அடப்பாவிகளா’ என்று அலுத்துக் கொண்டார் வைஷ்ணவி. ‘குட் ஜாப்’ என்று அவரைப் பாராட்டினார்கள். 

அடுத்த தலைவருக்கான போட்டியை வித்தியாசமாக நடத்தினார் பிக்பாஸ். அதன் படி நீச்சல் குளத்தின் அருகே தண்ணீர் நிரப்பப்பட்ட குவளைகள் இருக்கும். ஒவ்வொரு நபரும் அதை எடுத்துக் கொள்ள வேண்டும். தலைவராக விரும்புபவர், தன்னுடைய கையில் உள்ள குவளைத் தண்ணீரை பத்திரமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ‘குறிப்பிட்ட நபர் தலைவராக வரத் தேவையில்லை’ என்று மற்றவர்கள் கருதினால் அவருடைய தண்ணீரை கீழே தள்ளுவதற்கு முயலலாம். போலவே தங்களின் ஆதரவு வேட்பாளரை பாதுகாப்பதற்கும் முயலலாம். 

இந்த கலாட்டாக்களுக்குப் பிறகும் எவருடைய குவளையில் தண்ணீர் அதிகம் பாதுகாக்கப்பட்டிருக்கிறதோ அவரே தலைவர். எவருமே இதில் ஜெயிக்கவில்லையெனில் வைஷ்ணவியே மீண்டும் தலைவராகத் தொடரும் ஆபத்தும் உண்டு. 

போட்டி துவங்கியது. ‘ஒருவரிடமிருந்து தட்டிப் பறித்தால்தான் தலைவர் பதவி’ என்கிற அரசியல் பாலபாடத்தை பிக்பாஸ் கற்றுத்தந்தார். அதன் படி மற்றவர்களின் குவளைகளை சிலர் ஜாலியாக தள்ளி விட்டார்கள். பாதுகாப்பாக தங்களின் குவளைகளைப் பாதுகாத்தவர்களை வம்படியாக சென்று தள்ளினார்கள். ஏறத்தாழ அனைவரின் குவளைத் தண்ணீரும் போய் விட, ‘ஐய்யய்யோ… வைஷ்ணவி மீண்டும் தலைவரா?” என்று பயந்த போட்டியாளர்கள், ரம்யாவை சுற்றி நின்று பாதுகாத்து அவரை தலைவராக்கினார்கள். 

ஆக.. பிக்பாஸ் வீட்டில் தொடர்ச்சியாக மீண்டும் ஒரு பெண் தலைவர். இதில் ரம்யா சிறந்த தேர்வு என்றுதான் சொல்ல வேண்டும். சிக்கலான சூழல்களில் நிதானமாகவும் அறிவுபூர்வமாகவும் அவர் இதுவரை செயல்பட்டிருக்கிறார். வைஷ்ணவியின் நெருக்கமான தோழி என்பதால் அது சார்ந்த பாரபட்சங்கள் இருக்கக்கூடும் என்கிற மெல்லிய குறை மட்டுமே உண்டு. 

வீட்டு வேலைகளுக்கான அணிகளை புதிய தலைவரான ரம்யா பிரித்துத் தந்தார். அதன் படி சமையல் பொறுப்பை, ஷாரிக், பொன்னம்பலம், ரித்விகா ஆகியோர் ஏற்றுக் கொள்வார்கள். கழிவறை பராமரிப்பை ‘பாலாஜி, ஐஸ்வர்யா, வைஷ்ணவி’ ஆகியோர் செய்வார்கள். (பாலாஜியின் கடந்த வார வேண்டுகோள் இப்படியாக நிறைவேறியது). பாத்திரங்கள் சுத்தம் செய்யும் அணிக்காக, மஹத், நித்யா, யாஷிகா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டார்கள். 

‘இங்க எல்லோரும் fake ஆ இருக்காங்க.. நான் எதுவாக இருந்தாலும் நேருக்கு நேராக பேசி விடுவேன்’ என்று ஐஸ்வர்யாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் யாஷிகா. இது ஒருவகையில் உண்மைதான். ‘என்ன நடந்துச்சு.. வெளிப்படையா சொல்லுங்க’ என்று பொன்னம்பலத்திடம் இவர் நேரடியாக கேட்டது ஓர் உதாரணம். உணர்ச்சிமிகுதியில் செயல்பட்ட ஐஸ்வர்யாவை கட்டுப்படுத்தி, பிரச்னையை மட்டும் பேச வைத்ததும் சிறப்பு. 

அடுத்ததாக நாமினேஷன் விவகாரம் துவங்கியது. கடந்த சீஸனில் கூட இல்லாத வித்தியாசத்தை இதில் அறிமுகப்படுத்தினார் பிக்பாஸ். பரஸ்பரம் மற்றவர்கள் அறியாமல் கன்ஃபெஷன் ரூமின் தனிமையில் அதுவரை செய்யப்பட்டிருந்த வழக்கமான நாமினேஷன் முறை இப்போது மாற்றப்பட்டது.

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம். 

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

அதன்படி மூன்று அல்லது நான்கு பேராக கன்ஃபெஷன் ரூமிற்கு அழைக்கப்படுவார்கள். அவர்கள் தங்களுக்குள் கூடிப் பேசி ஒருவரை, தகுந்த காரணங்களோடு நாமினேட் செய்ய வேண்டும். அறிவிப்பு வெளியாகும் வரை இதுபற்றி மற்றவர்களிடம் பேசக்கூடாது. 

முதலில் அழைக்கப்பட்டவர்கள் மஹத், யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா.. மூவரும் நெருக்கமான நண்பர்கள் என்பதால் தங்களில் ஒருவரை தேர்வு செய்ய மிகவும் தயங்கினார்கள். ‘நான் போறேன்’ என்று பரஸ்பரம் தியாகம் செய்ய முன்வந்தார்கள். ‘இதைத் தவிர்க்க வழியேயில்லையா பிக்பாஸ்’ என்று கெஞ்சினார் மஹத். ‘இல்லை’ என்று கடப்பாறையை விழுங்கிய குரலில் பதில் வந்தது. தியானம் செய்வது போல் சில நிமிடங்கள் யோசித்த மஹத், ‘யாஷிகா’வைத் தேர்ந்தெடுத்தார். ஐஸ்வர்யா இதை ஒப்புக் கொள்ளவில்லை என்றாலும் யாஷிகா அவரை அடக்கி விட்டார். ஆனால் யாஷிகாவை தேர்ந்தெடுத்தற்கான காரணம் சொல்லப்படவில்லை.

வெளியே வந்த மஹத் கண்கலங்க, ஐஸ்வர்யாவால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. 

அடுத்தது, டேனி, ரம்யா, நித்யா, ரித்விகா ஆகியோர். ‘நித்யா.. மாத்தி மாத்தி பேசி குழப்பறாங்க’ என்ற காரணத்தை சொன்னார் டேனி. ‘எல்லாவற்றையும் திட்டமிட்டு அதற்கான கணக்கோடு செயல்படுகிறார்’ என்று டேனியைப் பற்றி சொன்னார் நித்யா.. மூவரும் ஆலோசனை செய்து ‘நித்யா’வை நாமினேஷனுக்காக தேர்ந்தெடுத்தார்கள். இதற்குப் பதிலாக ‘இங்க்கி.. பிங்க்கி.. பாங்க்கி’ போட்டிருக்கலாம். 

அடுத்த கூட்டணி, பாலாஜி, மும்தாஜ், ஜனனி. ‘பாலாஜி ரொம்ப கோபப்படறார்னு என் பேரைச் சொல்லுங்க…” என்றார் பாலாஜி. ஜனனி இதற்குத் தயங்குவது போல் பாவனை செய்தாலும்.. ‘சரி..அவரே முன்வர்றாரு.. சொல்லிடுவோம்.. என்ன சொல்றீங்க..” என்று மும்தாஜிடம் கேட்க.. அவரும் பாவனையாக வேறு வழியில்லாமல் ஒப்புக் கொள்ள… பாலாஜி மறுபடியும் நாமினேஷன் பட்டியலில் வந்தார்.

பொன்னம்பலம், சென்றாயன், ஷாரிக், வைஷ்ணவி ஆகியோர் அடுத்த சென்ற அணி. “அண்ணணுக்கு வீட்டு ஞாபகம் வந்துடுச்சு’ என்று சென்றாயன் சொல்ல ‘ஏண்டா.. டேய்..: என்று சங்கடமாகச் சிரித்தார் பொன்னம்பலம். ஆக.. பொன்னம்பலமும் மீண்டும் நாமினேஷனில் வந்தார். 

இந்த வார நாமினேஷன் பட்டியல்: யாஷிகா, நித்யா, பாலாஜி மற்றும் பொன்னம்பலம். 

“கோபத்தை கொஞ்சம் கொஞ்சமா குறைச்சுக்கறேன்.. யாரோ சொல்லி திருந்தணும். கமல் சார் சொல்லி திருந்தினதா இருக்கட்டும். வீட்டுக்கு வரும் போது புதிய பாலாஜியைப் பார்ப்பீங்க’ என்று தன் உறவுகளிடம் காமிரா வழியாக பேசிக் கொண்டிருந்தார் பாலாஜி.

‘அனந்த்தின் முடிவால் பிளவுபட்ட பிக்பாஸ் வீடு, தன்னை மட்டும் காப்பாற்றிக் கொள்ளும் சிலர். இது நீடிக்குமா’ என்கிற பின்னணிக்குரலுடன் இன்றைய நாள் நிறைவடைந்தது. 

‘யாமே இந்த திருவிளையாடலை நிகழ்த்தினோம்’ என்று புராணப்படங்களில் வரும் வசனம் போல, இத்தனை ரகளைகளுக்கும் காரணமான பிக்பாஸ், இதைப் பற்றி கவலைப்படுவதாக பாவனை செய்வது கொடூரமான நகைச்சுவை.

இந்த வாரம் நீங்கள் காப்பாற்ற விரும்பும் போட்டியாளர்களின் பெயரையும், காரணத்தையும் கமென்ட்டில் பதிவு செய்யுங்களேன்