Published:Updated:

பிக் பாஸ் டபுள் மீனிங் தகராறு... மும்தாஜ் ஐ.ஜி ஆன வரலாறு! #BiggBossTamil2

சுரேஷ் கண்ணன்
பிக் பாஸ் டபுள் மீனிங் தகராறு... மும்தாஜ் ஐ.ஜி ஆன வரலாறு! #BiggBossTamil2
பிக் பாஸ் டபுள் மீனிங் தகராறு... மும்தாஜ் ஐ.ஜி ஆன வரலாறு! #BiggBossTamil2

பொன்னம்பலம், தனது பெயருக்கு ஏற்ப ‘பொண்ணு’ங்களிடம் விவகாரமாகப் பேசி தொடர்ந்து ‘அம்பலப்’பட்டுக் கொள்கிறார். சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வரும் ஒருவர், அன்றைய தினமே மீண்டும் குற்றத்தில் ஈடுபடுவதுபோல, அத்தனை கலாட்டாக்கள் நிகழ்ந்த பிறகும் அன்றைய இரவே சர்ச்சையான வார்த்தையைச் சொல்லி பிரச்னையில் மாட்டிக்கொண்டார் பொன்னம்பலம்.

22-ம் நாள் இரவு. ‘ஆட்களைத் தூக்கும்’ சவால் பற்றி வைஷ்ணவியும் சென்றாயனும் பொன்னம்பலத்தின் அருகில் பேசிக்கொண்டிருந்தார்கள். “ஓர் ஆண் நினைத்தால் வீரத்துடன், வீறாப்புடன் எத்தனை பளுவுள்ள பெண்ணையும் தூக்கிவிடுவான்” என்ற சென்றாயன், ‘என்னண்ணே... சொல்றீங்க... கரெக்ட்டுதானே?” என்று பொன்னம்பலத்திடம் கேட்க, அவரோ... “டே எஃபெக்ட்ல ஒண்ணும் தெரியாது. நைட் எஃபெக்ட்ல நான்தான் வின் பண்ணுவேன்” என்றார். சற்று அதிர்ச்சியடைந்த சென்றாயன், “நைட்டு… என்று இழுக்க, “டே எஃபெக்ட்ல தோத்துருவேன். நைட் எஃபெக்ட்ல நான்தான் வின்னர்” என்றார் பொன்னம்பலம் மறுபடியும். (‘நோட் திஸ் பாயின்ட் யுவர் ஆனர்’ என்பதுபோல பொன்னம்பலத்தின் இந்த விவகாரமான வசனத்துக்கு சப்டைட்டில் எல்லாம் போட்டுக்காட்டினார் பிக் பாஸ்).

“நீங்க பேசறது தப்புண்ணே... நான் சீரியஸா எடுத்துக்க மாட்டேன்றது வேற... ஆனா நீங்க சொன்னது தப்பு... கொழுப்புதானே உங்களுக்கு... இப்படித்தான் முன்ன வாயைக் கொடுத்து மாட்டிக்கிட்டீங்க!” என்றார் வைஷ்ணவி. ‘நான் தப்பா ஒண்ணும் சொல்லலையே... நான் கொச்சையால்லாம் பேச மாட்டேன்’ என்று மழுப்பினார் பொன்னம்பலம். 

சிலர் உற்சாகமான மனநிலையோடு நிகழ்த்தும் உரையாடல்களில் பாலியல் தொடர்பான கிண்டல்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் இணைத்துப் பேசுவது பொதுவாக வழக்கம். பழக்கப்பட்ட சூழல்களி்ல் இது முரணாகவும் நெருடலாகவும் தெரியாது. எதிராளியும் அதே போன்றதொரு மலினமான கிண்டலைச் சொல்லிவிட்டுச் சிரிப்பார். 

இது போன்றதொரு பழக்கம் பொன்னம்பலத்திடமும் இருப்பது பெரிய குற்றம் இல்லைதான். ஆனால், புரிந்துகொள்ளப்பட்ட சூழல்களில், நபர்களிடம் மட்டுமே அதைப் பேச வேண்டும். அத்தனை அறிமுகமில்லாதவர்களிடம், குறிப்பாக பெண்களிடம் இப்படிப் பேச முடியாது; பேசக் கூடாது என்பது அடிப்படை. அதிலும் பிக்பாஸ் போன்ற கண்காணிப்புச் சூழல்களில் தங்களின் வார்த்தைகள் குறித்த கவனம் இருக்க வேண்டும். அதிலும் பொன்னம்பலம் போன்ற வயதில் மூத்தவர்களுக்கு இது சார்ந்த பொறுப்பு அதிகம் இருக்க வேண்டும். 

கொச்சையான மொழியில் பேசுவது பெரிய பிழையில்லை என்றாலும்கூட தமிழ் கலாசாரம், பண்பாடு குறித்து தனக்கு அக்கறையிருப்பதாகக் காட்டிக்கொள்ளும் பொன்னம்பலம் அது குறித்து தானே முன்னுதாரணமாக இருக்க வேண்டாமா. பெரும்பாலான வசவு வார்த்தைகள் பெண்களின் கற்பு குறித்தும் உடல் உறுப்புகள் சார்ந்தும்தானே இருக்கின்றன? (இதையே கமலும் ஒருமுறை குறிப்பிட்டார்). 

இப்படி வில்லங்கமாகப் பேசுவதைத் தொடக்க நாளிலிருந்தே பின்பற்றுகிறார் பொன்னம்பலம். ‘அடுத்து வரப்போகும் போட்டியாளர், ஆணா பெண்ணா’ என்ற யூகம் நடந்துகொண்டிருக்கும்போது, ‘ரெண்டுங்கெட்டானா வந்துட்டா என்ன பண்றது’ என்றார். பெண்களிடம் தவறாகப் பேசியது குறித்து மும்தாஜ் விசாரிக்கும்போது ‘எங்க பசங்க தப்பு செஞ்சா கெட்ட வார்த்தைலதான் திட்டுவேன். கம்னு ஆயிடுவாங்க” என்றார். இதெல்லாம் மோசமான கலாசாரம் இல்லையா. பாலியல் தொடர்பான இரட்டை அர்த்த கிண்டல்களை செய்வதையே வழக்கமாக வைத்திருக்கும் நபர்களில் ஒருவராகப் பொன்னம்பலம் தென்படுகிறார். கூடவே தமிழ்ப் பண்பாடு பற்றியும் கவலைப்படுவதாகப் பாவனை செய்வதுதான் நகைச்சுவை. 

இது தொடர்பான பஞ்சாயத்து இன்றைய நாள் முழுக்க வெடித்தது. “யார் கிட்டயும் சொல்லையே” என்று பிறகு சாதித்த வைஷ்ணவி, இந்த நிகழ்வைப் பற்றி முதலில் ஜனனியிடம் சொல்லிக்கொண்டிருந்தார். “பகல்ல தூக்க முடியாது... நைட்ல தூக்கிடுவேன்”-னு பொன்னம்பலம் சொல்றாரு. அவர் வளர்ந்த விதம் அப்படி. வீட்லயும் கொச்சையாத்தான் பேசுவாராம்’ என்றெல்லாம் சொன்னார் வைஷ்ணவி. 

“இதுவரைக்கும் என் கிட்ட அவர் எதுவும் தப்பா பேசலை. பொண்ணு மாதிரிதான் டிரீட் பண்றாரு” என்றார் ஜனனி. 

‘விஷ பாட்டில்’ சும்மா இருக்காமல், சென்றாயனிடம் இந்த விவகாரம் பற்றி தெரியாத மாதிரி பிறகு விசாரிக்க... அவரும் நடந்ததைச் சொன்னார். பக்கத்தில் பாலாஜியும் நித்யாவும் அமர்ந்திருந்தார்கள். ‘பஞ்சாயத்து பாலிடால் குடிச்சிட்டானாம்’ கதையாக, இந்தப் பஞ்சாயத்தும் அந்த வீட்டுக்குள் தீப்போல பரவியது. 

ஒரு வம்பு, வெவ்வேறு வார்த்தைகளுடனும் வடிவங்களுடனும் மனிதர்களின் இடையே எப்படி வேகமாகப் பரவுகிறது என்பதற்கான உதாரணம் இது. பாலாஜி  மற்றும் நித்யாவிடம் இந்த விஷயத்தைச் சொன்ன சென்றாயன், பிறகு ‘தான் சொல்லவில்லை’ என்று மறுத்தார். ‘நியாயமா பேசுடா... தலையைவா எடுத்துருவாங்க’ என்று பதிலுக்குப் பாலாஜி கோபப்பட்டார். 

“நைட்ல தோத்துருவேன்-னுதான் சொன்னேன். தூக்கிடுவேன்னு சொல்லலை… அதுவும் பொதுவாத்தான் சொன்னேன். இது கெட்ட வார்த்தை இல்லையே. நீங்க... எல்லோரும் ஜாலியா விளையாடறீங்க. ஏன் நான் சொல்றத மட்டும் பிரச்னையாக்குறீங்க…” என்று பொன்னம்பலம் ஆதங்கப்பட, “இந்த வீட்ல இனிமே டபுள் மீனிங். கெட்ட வார்த்தை இதெல்லாம் வேண்டாம்” என்றார் ரம்யா. “ம்... அப்படி நேரடியா சொல்லுங்க ஏத்துக்கறேன்” என்றார் பொன்னம்பலம்… (இதைத்தானே மத்தவங்களும் சொன்னாங்க... முடியல...)

**

23-ம் நாள் காலை... `எனக்கு உம்மேலதான் உனக்கு எம்மேலதான் ஏதோவொண்ணு இருக்கு இருக்கு…’ என்கிற பாடல் ஒலித்தது. வீட்டுக்குள்  இருக்கிற பிரச்னையை குத்திக் காட்டுவது போல அல்லது எரியும் தீயில் பெட்ரோலை ஊற்றுவது போன்ற பாடலையே தேர்வு செய்யும் பிக்பாஸின் ராஜதந்திரங்களைப் பற்றி தனியாகவே ஒரு கட்டுரை எழுதலாம். 

வீட்டில் நடக்கும் சம்பவங்களை கவனித்து அதையொட்டியே.. பிக்பாஸ் தனது சவால் போட்டிகளை அமைக்கிறார் என்று தோன்றுகிறது. ‘வெங்காயம்’ பிரச்னை ஆரம்பித்த பிறகு ‘வெங்காயம் வெட்டும் போட்டி’ வந்தது போல் பல உதாரணங்களைச் சொல்ல முடியும். 

இன்றும் அப்படியே ஆயிற்று. மஹத்தின் சில பொருட்களை யாஷிகா ஒளித்து வைத்துக் கொண்டு விளையாட, போட்டிக்கு ஐடியா இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த பிக்பாஸிற்கு ‘ஸபார்க்’ வந்திருக்க வேண்டும். திருடர்கள் – காவலர்கள் – பொதுமக்கள் என்றொரு விளையாட்டை, லக்ஸரி மதிப்பெண்களுக்காக கொண்டு வந்தார். 

‘திட்டம் போட்டு திருடும் கூட்டம்’ என்கிற இந்த விளையாட்டில் மூன்று நபர்கள் திருடர்களாக இருப்பார்கள். வீட்டை ஸ்தம்பிக்கச் செய்யும் வகையில் அடிப்படையான பொருட்களை அவர்கள் திருட வேண்டும். அவர்கள் எந்தெந்த பொருட்களை திருடப் போகிறார்கள் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும். இதற்கு பிக்பாஸ் பொறுப்பேற்க மாட்டார். (என்னவொரு முன்ஜாக்கிரதை!)

காவலர்கள், வீட்டையும் பொதுமக்களையும் பாதுகாத்து திருடர்களை கண்காணிக்க வேண்டும். மூன்று அணிகளாக பிரிக்கப்படுவதில்,  பொதுமக்களுக்கு ரூ.1000, போலீஸிற்கு ரூ.500, திருடர்களுக்கு ரூ.250 பணம் வழங்கப்படும். அவரவர்கள் தங்கள் சாமர்த்தியத்திற்கு ஏற்ப பணத்தைப் பாதுகாக்கவும் பெருக்கிக் கொள்ளவும் வேண்டும். போட்டியின் இறுதியில் எந்த அணியிடம் அதிகப் பணம் இருக்கிறதோ, அவரே வெற்றியாளர். 

மஹத், மும்தாஜ், சென்றாயன் – போலீஸ் அணி. டேனி, யாஷிகா, ஐஸ்வர்யா ஆகியோர் திருடர்கள். இதர போட்டியாளர்கள் பொதுமக்களாக இருப்பார்கள். 

‘திருடர்கள் தாங்கள் திருடிய பொருட்களை தனியாக உள்ள பெட்டியில் போட்டு விட்ட பிறகு போலீஸ் அவற்றை கைப்பற்ற முடியாது. மேலும் கறுப்புக் கோட்டு எல்லையை திருடர்கள் தாண்டிய பிறகு அவர்களைத் தடுக்க முடியாது…. என்று பல விதிகள் இருந்தன. 

சிக்கலான நீதிமன்ற தீர்ப்பை விடவும் அதிக குழப்பத்தைக் கொண்ட இந்த விதிகளின் மீதான விளையாட்டு ஜாலியாக அமைந்தது. சமீபத்திய சர்ச்சை காரணமாக அதுவரை இறுக்கமாக இருந்த பிக்பாஸ் வீடு, இதன் பிறகு சற்று கலகலக்கத் துவங்கியது. 

கான்ஸ்டபிள் உடையில் சென்றாயன் ‘சிரிப்பு போலீஸ்’ மாதிரியே இருந்தார். ‘என்னை செக் செஞ்சுக்கோங்க’ என்று ஐஸ்வர்யா கெக்கலிக்கும் போது, சோதனை செய்ய தயங்கி ‘சரி போ.. என்று விட்டுவிட்டார். ‘அவ எதுவுமே எடுக்காம உன்னைக் கலாய்க்கறாடா” என்றார் டேனி.. தன்னுடைய பொருட்களைக் காணவில்லை என்று ரித்விகா புகார் தரும் போது, ‘யாரு.. திருடினது.. அவன் பேரு, அட்ரஸ் என்ன?” என்று கேட்டு நிஜ போலீஸ்காரர்களை விடவும் அதிக காமெடி செய்தார் சென்றாயன். ஒரு கட்டத்தில், பொருட்கள் திருடப்பட்ட பிறகு கடைசியாக ஓடி வந்து ‘கிளைமாக்ஸில்’ வரும் தமிழ் சினிமா காவலர்களை நினைவுப்படுத்தினார். 

அசோகன், நம்பியார் காலத்து பழைய தமிழ் சினிமாக்களைப் போல முகத்தில் மரு வைத்துக் கொண்டிருந்தார் டேனி. (திருடனாம்). “உண்மையைச் சொல்லலைன்னா.. என்கவுண்ட்டர்.. பண்ணிடுவேன்’ என்று இன்ஸ்பெக்டர் மஹத், ஒரு கட்டத்தில் இவரை கெத்தாக மிரட்டிக் கொண்டிருக்கும் போது.. ‘நான் சொல்லல.. சார் நல்லா காமெடி பண்ணுவாருன்னு’ என்கிற மாதிரி சிரிக்க வைத்தார் டேனி. 

திருடர்கள் உடையிலும் க்யூட்டாக இருந்த யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவிடம், நாமே முன்வந்து மனதை திருட்டுக் கொடுக்கலாம் போலிருந்தது. ‘பெண் குற்றவாளிகளை’ லேடி போலீஸ்தான் கைது செய்யணும்’ என்கிற ரூல்ஸை சரியாக பின்பற்றுகிற ஸ்ட்ரிக்ட் ஆபிசராக மாறி கறாரான ஏட்டம்மாக மாறி விட்டார் மும்தாஜ். 

இந்த விளையாட்டு தொடர்பான விதிமுறைகளை ஜனனி வாசித்துக் கொண்டிருக்கும் போது நிகழ்ந்த ஒரு சர்ச்சையான விஷயம் அன்றைய நாள் பூராவும் புகைந்தது. …’திருடிய பொருட்களே நாங்களே வெச்சுப்போம்’ என்று யாஷிகா விளையாட்டாக சொல்ல, ‘செருப்பால அடிப்பேன்’ என்று நட்பு சார்ந்த உரிமையில் மஹத் பேசினார். அதற்கு எதுவும் பேசாமல் யாஷிகா முகத்தை திருப்பிக் கொண்டதால் வருத்தம் அடைந்த மஹத், விதிமுறைகள் இன்னமும் வாசிக்கப்படவிருந்த சூழலில் கோபத்துடன் வெளியேறினார். ‘எல்லாத்துக்கும் மூஞ்சி தூக்கி வெச்சிக்கறா.. எரிச்சலா வருது.. நான் விளையாடலை.. விட்டுடுங்க..” என்று கோபித்துக் கொண்ட மஹத்தை மற்றவர்கள் சமாதானப்படுத்தி அழைத்து வந்தார்கள். 

மஹத்தின் கோபத்திற்கான காரணம் அவருக்கே பிறகு தெரிகிறது என்பதுதான் ஆச்சரியம். சற்று நிதானமான மனநிலையில் யோசித்தால் ‘நமக்குள் எப்படி கோபம் உருவாகிறது?’ என்பதை நாமே கண்டுபிடித்து விடமுடியும். பல சமயங்களில் அது அற்பமான காரணங்களாக இருக்கிறது என்பதையும் நாம் உணர முடியும். யாஷிகாவை தான் நாமினேட் செய்து விட்டதால் அது சார்ந்த குற்றவுணர்ச்சியில் இருக்கிறார். இந்தச் சமயத்தில் யாஷிகா செய்யும் இயல்பான எதிர்வினை கூட இவரிடம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. 

சுயபரிசீலனையில் அமைந்த இந்த வாக்குமூலத்தை ஜனனியிடம் பிறகு சொல்லிக் கொண்டிருந்தார் மஹத். கோபம் இல்லாத மனநிலையில் சற்று தெளிவாக சிந்திக்கக்கூடிய மஹத், பிறகு இதே போல் மறுபடியும் கோபப்பட்டது அபத்தம். ‘ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு’  என்கிற பழமொழி மறுபடியும் உறுதியானது. 

பொன்னம்பலம் பிரச்னையையொட்டி வீடு பிரிவாக மாறி விட்டது தெளிவாகத் தெரிகிறது. ‘செருப்பால அடிப்பேன்’ என்று மஹத் மட்டும் கெட்ட வார்த்தை பேசலாமா?’ என்பது நித்யாவின் ஆட்சேபம். இதை பாலாஜியிடம் சொல்லிக் கொண்டிருந்தார். இது மற்றவர்களுக்கும் பரவி, மஹத்திடம் வந்த போது கோபப்பட்டார்.. ‘பிரெண்ட்ஸூக்குள்ள எப்படி வேணா பேசிப்போம். ‘மூஞ்சை உடைச்சுடுவேன்’னு பதிலுக்கு அவளும் சொல்வா… இவங்க யாரு கேக்கறது?’ என்று எகிறினார். (‘அவன் என்னை அசிங்கமா திட்டறதும்.. நான் அவனை பச்சை பச்சையாக திட்டறதும்.. எங்களுக்குள்ள ஒரு பழக்கமாவே மாறிடுச்சு’ என்கிற காமெடியாக இது அமைந்தது).

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம். 

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

‘பாலாஜி மற்றும் நித்யாவை முன்கூட்டி திட்டமிட்டு ஒரு task ஆக பிக்பாஸ் வீட்டில் வைத்திருக்கிறார்களோ’ என்பது மும்தாஜின் சந்தேகம். ‘சமயங்கள்ல சண்டை போட்டுக்கறாங்க.. அப்புறம் சிரிச்சுப் பேசறாங்க.. ‘மோசமான பணியாளர்’ பட்டம் நித்யாவிற்கு தரப்பட்டதற்கு பாலாஜிதான் காரணம் என்பதை அறிந்த பிறகும் ‘நித்யா’ பாலாஜிக்கு சப்போர்ட் செய்வதைப் பார்க்கும் போது” என்றலெ்லாம் உண்மையான போலீஸ்காரராகவே மாறி சந்தேகத்துடன் யோசித்தார் மும்தாஜ். (நீங்க சீக்கிரமே ஐ.ஜி ஆகிடுவீங்க.. மேடம்).

“சந்தைக்குப் போகணும்.. ஆத்தா வையும்’ என்கிற சப்பாணி கதையாக ‘நான் வீட்டுக்குப் போறேன்’ என்று கோபத்தில் அவ்வப்போது அடம்பிடித்த மஹத்தின் மரமண்டைக்கு உறைக்கிறாற் போல யாஷிகா உபதேசம் செய்த காட்சி அற்புதமானது. பொதுவாகவே நடிகைகளை, குறிப்பாக கவர்ச்சி நடிகைகளை நாம் உடலாக மட்டுமே பார்க்கிறோம். ஆனால் புத்திசாலித்தனமும் நுண்ணுணர்வும் கொண்ட மனுஷிகளாக அவர்களைப் பார்ப்பவர்கள் குறைவு. தான் அந்த வகை என்பதை நிரூபித்தார் யாஷிகா…

“இங்க பாரு.. நீ எதுக்கு ஆத்திரப்பட்டாலும் என்னைத்தான் வந்து விசாரிக்கறாங்க.. சம்பந்தம் இல்லாததுக்கு கூட நான் பதில் சொல்ல வேண்டியிருக்கு… எனக்கு இரிடேட் ஆகுது.. நாமினேஷன் விஷயம் நாம பேசி எடுத்த முடிவுதான். அதுக்கு நீ கில்ட்டியா ஃபீல் பண்ணாத… என்னைப் பத்தி யாராவது சொன்னா.. அதுக்கு நீ ரியாக்ட் பண்ணாத.. இது ஒரு கேம். அதுல மட்டும் கவனம் செலுத்து.. எப்படியும் நாம ஒவ்வொருவரா இந்த கேமை விட்டு போகப் போறோம்.. நாம பிரண்ட்ஸ். அது நமக்குள்ள தெரியும்… என்னைப் பத்தி யோசிச்சு.. நீ ஓவர் ஆக்ட் பண்ணாத… அந்தப் பிரச்னை நடந்ததற்கு அப்புறம், நாம.. டிஸ்டன்ஸ் மெயின்டெயின் பண்றது நல்லது’ என்றெல்லாம் அவர் பேசியது அருமை. ஒரு விஷயத்தை ஆழமாகவும் அகலமாகவும் யோசிப்பதில் ஆண்களை விட பெண்களே மேம்பட்டவர்கள் என்பதை யாஷிகாவின் நிதானமான உபதேசம் வெளிப்படுத்தியது. 

“ஆ.. ஊ..ன்னா.. சும்மா கத்தறே.. இல்ல. கையில் இருக்கற பொருட்களை தூக்கிப் போட்டு உடைக்கறே.. பசங்க தப்பு பண்ணா கூட அந்தப் பிரச்னைல்லாம் பொண்ணுங்க மேலதான் விழும்.. புரிஞ்சுக்கோ’ என்று டேனியும் தன் பங்கிற்கு சரியான முறையில் மஹத்திற்கு உபதேசித்தார். 

ஆனால் ‘தற்காலிமாக மட்டுமே திருந்தும்’ மோடில் இருக்கும் மஹத் அவ்வப்போது முருங்கை மரத்தில் ஏறிக் கொள்ளும் கெட்ட வழக்கத்தை நிறுத்தவில்லை. ‘உனக்குள்ள முழிச்சிக்கிட்டிருக்கற மிருகம் எனக்குள்ள தூங்கிட்டிருக்கு. தட்டி எழுப்பிடாத’ என்கிற தேவர் மகன், கமல் –நாஸர் மாதிரி .. மஹத்தும் பாலாஜியும் மூக்கோடு மூக்கு உரசி சண்டை போட்டுக் கொண்ட காட்சி ‘நாளை’ பகுதியில் ஒளிபரப்பானது.