Published:Updated:

பாலாஜியின் நினைவெல்லாம் நித்யா... இனியாவது பிக்பாஸ் ஆட்டம் ஆரம்பமாகுமா! #BiggBossTamil2

சுரேஷ் கண்ணன்
பாலாஜியின் நினைவெல்லாம் நித்யா... இனியாவது பிக்பாஸ்  ஆட்டம் ஆரம்பமாகுமா! #BiggBossTamil2
பாலாஜியின் நினைவெல்லாம் நித்யா... இனியாவது பிக்பாஸ் ஆட்டம் ஆரம்பமாகுமா! #BiggBossTamil2

‘’யார் இன்று வெளியேற்றப்படவிருக்கிறார் என்கிற ஆர்வம் ஒரு பக்கம்’, “பெரும்பாலானோரால் எதிர்பார்க்கப்பட்ட யூகம் பொய்த்துப் போன சோகம் இன்னொரு பக்கம்’, ‘ஒரு குடும்பத்தின் நெகிழ்வுபூர்வமான சந்திப்பு’ போன்ற சம்பவங்களால் இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சி களைகட்டியிருந்தது. ‘யாஷிகாதான் வெளியேற வேண்டும் அல்லது வெளியேறுவார்’ என்கிற எதிர்பார்ப்பும் ஆருடமும் பொய்த்து நித்யா வெளியேற்றப்பட்டார். பாலாஜி சொன்ன படி நித்யாவின் வெளியேற்றம் அவர்களின் குழந்தைக்கு ஒருவகையில் நல்லதுதான். 

பாலாஜி – நித்யா – போஷிகா ஆகியோர்களிடையில் நிகழ்ந்த நெகிழ்வுபூர்வமான சந்திப்பு, நமக்கு உணர்த்தியது இதைத்தான். உறவுகளின் அருமையை பிரிவில்தான் அதிகமாகவும் ஆழமாகவும் உணர முடிகிறது. விவாகரத்து வழக்கு காரணமாக ஏறத்தாழ ஒரு வருடம் பிரிந்திருந்த அந்தக் குடும்பம், பிக்பாஸ் மூலமாக சந்தித்த போது கிடைத்தது ‘ஐந்தே நிமிடங்கள்’தான். இருக்கும் போதே உறவுகளைக் கொண்டாடாமல் இழந்த பிறகு வருத்தம் அடைவதில் என்ன உபயோகம் இருக்கிறது?

விவாகரத்து கோரும் புதுமண ஜோடியை ஒரு குறிப்பிட்ட காலம் இணைந்து வாழ நிர்ப்பந்திக்கும் வகையில் சட்டம் அமைந்திருப்பதும் இதற்காகத்தான். உணர்ச்சியின் அடிப்படையில் அவர்கள் ஒருவேளை எடுத்திருக்கக்கூடிய அவசரமான முடிவை, நிதானமான மனநிலையில் மறுபரிசீலனை செய்யும் வாய்ப்பை சட்டம் அளிக்கிறது. பாலாஜி –நித்யா விஷயத்தில் அது பிக்பாஸ் வீடாக இருந்தது. 

**

அகம் டிவி வழியாக கமல் வந்தவுடன் ‘உட்காருங்க சார்’ என்று போட்டியாளர்கள் கெஞ்சினார்கள். ‘சரி வரட்டும்.. உக்கார்ரேன்.. இல்லைன்னா ‘நாற்காலி’க்கு ஆசைப்படறார்னு சொல்லிடுவாங்க’ என்ற வந்தவுடனேயே ஒரு பவுண்டரியை அடித்தார் கமல். ‘முதல்ல கொஞ்சம் சந்தோஷமா இருப்போம்’ என்று டப்பிங் விளையாட்டைத் துவக்கினார். 

பிக்பாஸ் வீட்டில் சிலர் உரையாடிக் கொண்டிருக்கும் வீடியோ துண்டு ஒளிபரப்பப்படும். வேறு எவராவது அதற்கு ‘டப்பிங்’ அளிக்க வேண்டும். பெரும்பாலோனோர் திரைத்துறையில் இருப்பதால் அவர்களுக்கு இந்தப் பணி அத்தனை சிரமமாக இல்லை என்பதை யூகிக்க முடிந்தது. 

‘சென்றாயனின்’ வீடியோவிற்கு நன்றாகவே பேசினார் மஹத். வைஷ்ணவியின் காட்சிகளுக்கு பொன்னம்பலம் பேசினார். மும்தாஜ் மற்றும் டேனியின் காட்சிகளுக்கு ஜனனியும் ரம்யாவும் பேசினார்கள். யாஷிகாவிற்கு சென்றாயன் ‘லவ் ப்ரபோஸ்’ செய்யும் காட்சிக்கு பொன்னம்பலமும் மும்தாஜூம் பேசி அசத்தினார்கள். “மஹத்.. இதுல உங்களுக்கு ஆட்சேபணை இல்லையா?” என்று கிண்டலடித்தார் கமல். (இப்படியே சொல்லி ஆளுங்களை தூண்டி விடறது.. அப்புறம் பஞ்சாயத்தும் நடத்தறது.. என்னா வில்லத்தனம்!)

இறுதியாக, பொன்னம்பலம் மற்றும் வைஷ்ணவியின் வீடியோவிற்கு பாலாஜியும் ரித்விகாவும் இணைந்து பேசினார்கள். இந்த நிகழ்ச்சியில் அதிகம் டாமேஜ் ஆனது வைஷ்ணவியின் இமேஜ்தான். புறம்பேசும் அவரது குணாதிசயம் மீண்டும் குத்திக் காட்டப்பட்டதில் அவர் சற்று கோபம் அடைந்து ‘நீங்க அப்படி பேசியிருக்க கூடாதுண்ணே’ என்று பொன்னம்பலத்திடம் வருத்தப்பட்டார். “நான் ஒண்ணும் தப்பா பேசலையே” என்று தன் வழக்கமான டயலாக்கை சொன்ன பொன்னம்பலம், “ரெண்டு பேர் கிட்ட விசாரிச்சேன். தப்புதான்னு சொன்னாங்க. ஸாரி” என்று வைஷ்ணவியிடம் பிறகு மன்னிப்பு கேட்டார். ஆனால் வைஷ்ணவியிடம் வெளிப்படையான அதிருப்தி தெரிந்தது. 

“எங்க காலத்துல டப்பிங்-ன்றதுல்லாம் ரொம்ப கஷ்டம். இப்ப ‘dubmash’ –ன்னு சராசரி ஆட்கள் கூட கலக்கறாங்க. இந்த மாதிரி நுட்பம்லாம் அப்பவே இருந்திருந்தா நாங்க இன்னமும் சிறப்பா செஞ்சிருப்போம்” என்றார் கமல். 

‘ரெட்டைக்காலி’ இருக்கை வர அதில் அமர்ந்தார் கமல். “இந்த முறை நாமினேஷன் பிராசஸ் வேற மாதிரி இருந்தது இல்லையா, அதே மாதிரி டீமா உட்காருங்க’ என்று குழு பிரித்தார். ‘தன்னைத்தானே நாமினேட் செய்யக்கூடாது’ன்றது பிக்பாஸோட ஒரு முக்கியமான விதி. ஆனா பலரும் அதைத்தான் செஞ்சீங்க. ஏன்?” என்று தன் விசாரணையைத் துவக்கினார். 

“எனக்கு கோபம் நிறைய வந்துட்டு இருந்தது சார். அது மத்தவங்களுக்கு இடைஞ்சலா இனியும் இருக்கக்கூடாது..ன்னு என்னை நாமினேட் பண்ணுங்க’ ன்னு சொன்னேன்” என்றார் பாலாஜி. “அப்ப அது கோபத்துல எடுத்த முடிவா?” என்று கமல் சாமர்த்தியமாக கேட்டார். (ஒரு மனுஷன் எப்படித்தான்யா பதல் சொல்றது.. முடியல!).

மஹத், ஐஸ்வர்யா, யாஷிகா ஆகிய மூவரும் நெருக்கமான நண்பர்கள் என்பதால் யாரை நாமினேட் செய்வது என்பதில் அவர்களுக்கு பரஸ்பரம் வருத்தமும் துயரமும் தயக்கமும் இருந்தது. சரி.. யாரையாவது ஒருத்தரை செய்துதான் ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தில் ‘யாஷிகா’வைத் தேர்ந்தெடுத்தோம்’ என்றார் மஹத். 

“பிரெண்ட்ஸ்ல வேற யாரையாவது தேர்ந்தெடுத்திருக்கலாமே. மத்தவங்க பிரெட்ண்ஸ் இல்லையா?” என்று கேட்பதன் மூலம் சம்பந்தப்பட்ட சூழலை கமல் மறந்து விட்டார் என்பது தெரிந்தது. “அந்த ரூம்ல மூணு பேருதான் இருந்தோம். அதுக்குள்ளதான் நாமினேட் செய்யணும் சொன்னாங்க” என்றவுடன் கமல் தெளிவடைந்தார். 

‘யாஷிகாதான் வெளியேற்றப்படக்கூடும்’ என்பது மாதிரியான சமிக்ஞை விளையாட்டை முதலில் இருந்தே கமல் காட்டிக் கொண்டிருந்தார். இதனால் ஐஸ்வர்யாவிடம் துவங்கிய திகில் பின்பு அழுகையாக வெடித்தது. 

‘யாஷிகா வெளியேறினால் குற்றவுணர்ச்சி அடைவேன்’ என்றார் மஹத். ‘தமிலக மக்கள் அப்படியெல்லாம் விட்டுட மாட்டாங்கன்னு தெரியும். இந்த வீட்ல அவதான் என் பர்ஸ்ட் பிரெண்ட். என் உடம்போட ஒரு பகுதியாயிட்டா.. அதனாலதான் இந்த வீக் ஃபுல்லா நான் டல்லா இருந்தேன்” என்று உணர்ச்சிவசப்பட்டார் ஐஸ்வர்யா. ('தமிலக' மக்கள் கைவிடலை ஐஸூம்மா!). 

“நித்யாவை முதல்ல தப்பா புரிஞ்சுக்கிட்டேன். ‘அழுது டிராமா பண்றாங்கன்னு தோணித்து. ஆனா அவங்க கிட்ட பழக பழகத்தான் ‘அவங்க அவங்களா’ இருக்கறாங்கன்னு புரிஞ்சது’ என்று ‘நித்யா’வை நாமினேட் செய்த காரணத்தைக் கூறினார் ‘ரம்யா’. ‘நீங்க தொடர்ந்து நாமினேஷன்ல வந்தாலும் மக்கள் மறுபடி மறுபடி உக்கார வெச்சிடறாங்க பார்த்தீங்களா.. அவ்ளோ அன்பு” என்றார் கமல் நித்யாவிடம். 

நித்யாவிற்கு சொல்லப்பட்ட அதே விஷயம்தான் பொன்னம்பலத்திற்கும் சொல்லப்பட்டது. மக்களின் அன்பு! “சமையல்ல செய்யற ஆர்வக்கோளாறை நாமினேஷன்லயும் செஞ்சாரு” என்றார் சென்றாயன்.. “இல்ல.. சார்.. இவங்கள்லாம் வளர வேண்டிய பசங்க. சினிமால நல்லா வரணும். அதனால்தான் அப்படியொரு முடிவு எடுத்தேன்” என்றார் பொன்னம்பலம். “வைஷ்ணவி எப்பவும் ஆர்வக்கோளாறா இருக்காங்க.. அவங்க தலையை ஆட்டி ஆட்டி பேசறதை ‘புறம் பேசுறாங்க போல’ன்னு மத்தவங்க தப்பா நெனச்சிடுவாங்க’ன்னு சொல்லிக்கிட்டே இருக்கேன்” என்றதைத் தொடர்ந்து “மத்தவங்களை விட பொன்னம்பலம்தான் மனசுல இருக்கறதை அப்படியே பேசிடறாரோ” என்று தோன்றுகிறது” என்றார் கமல். (பார்வையாளர்களின் கைத்தட்டல்கள் மற்றும் கமலின் வழிமொழிதலால் வைஷ்ணவி அதிகமாக புண்பட்டிருக்கலாம்., பாவம்!).

இந்த பிரேக்கில் பொன்னம்பலம் பேசிய சில விஷயங்கள் ஐஸ்வர்யாவை புண்படுத்தியதை உணர முடிந்தது. ஐஸ்வர்யாவின் நோக்கில் அது நியாயமான வருத்தம்தான். ‘ஷாரிக்கோடது எவ்ளோ நல்ல ஃபேமிலி –ன்னு தொடர்ந்து சொல்லிட்டே இருக்காங்க.. அப்ப நான் என்ன சீப்பான குடும்பத்தில் இருந்து வந்திருக்கேனோ?” என்று அழுது வெடித்தார் ஐஸ்வர்யா. ஆண்-பெண் தொடர்பாக நிகழும் சர்ச்சையில் அதிகம் பாதிக்கப்படுவது பெண் மற்றும் அவரது குடும்பமும்தான் என்பது சமூக நடைமுறை. அது தொடர்பாகத்தான் ஐஸ்வர்யாவின் வருத்தமும் கோபமும் இருந்ததை புரிந்து கொள்ள முடிந்தது. “ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான நீதியை வைக்க வேண்டும்’ என்று பாரதி சொன்னதன் காரணமும் இதுதான். 

“சினிமா வழியா பொன்னம்பலத்திற்கு அவங்க ஃபேமிலியை நல்லாத் தெரியும்ன்றதால அப்படிச் சொல்றாரு.. உலகமே உன்னைப் பற்றி தப்பா பேசினாலும் கூட ‘உன் மனச்சாட்சி தெளிவா இருந்தா’ யாருக்கும் நீ பயப்படத் தேவையில்லை’ என்று சரியான சமயத்தில் தெளிவான உபதேசத்தை வழங்கினார் மும்தாஜ். (உலகமே உன்னை எதிர்த்தாலும்.. நீயா ஒப்புக்கற வரைக்கும்…. Never ever give up. ‘தல’ ..வசனம் ஞாபகம் வருகிறதா?!).**

வெளியேற்றப்படப் போகிறவரின் பெயர் தாங்கிய அட்டையை விசிறிக் கொண்டே வந்தார் கமல். “பதட்டத்துல உங்களுக்குத்தான் வியர்க்குமா.. எனக்கு வியர்க்காதா?” என்கிற நையாண்டி வேறு. 

“நாம என்னதான் யோசிச்சாலும் மக்கள் அதுல ஏதாவது ஒரு மருந்து வெச்சிடறாங்க.. பாலாஜி.. நான்தான் போவேன்.. ன்னு முந்திரிக்கொட்டை மாதிரி வரம் கேட்டீங்க இல்லையா.. மக்கள் வரம் கொடுக்கலை’ என்று பாலாஜி காப்பாற்றப்பட்ட விஷயத்தை மறைமுகமாக சொன்னார் கமல். மகிழ்ச்சியடைவதற்குப் பதிலாக பதட்டமும் வருத்தமும் அடைந்த பாலாஜியின் தோரணையைப் பார்த்து விசாரித்தார் கமல். பாலாஜியால் அதற்கு எதையும் சொல்ல முடியவில்லை. ‘நித்யா போயிடுவாங்களோன்னு வருத்தப்படறார் சார்.. “ என்று மற்றவர்கள் எடுத்துச் சொல்லி உதவினார்கள். 

“ஒரு வருஷமா நாங்க பேசிக்கலை. கோர்ட்லதான் பார்த்துக்குவோம். என் பொண்ணையும் இதனால பார்க்க முடியல. ஆனா, ‘நான் மாறிட்டேன்’னு அவங்களுக்கு நிரூபிப்பதற்கான வாய்ப்பை பிக்பாஸ் வீடுதான் தந்துச்சு” என்று பாலாஜி உணர்ச்சிவசப்பட, நித்யாவும் கண்கலங்கினார். 

“நித்யாதான் போவாங்கன்ற மாதிரியே… பேசறீங்க.. உங்க எதிர்பார்ப்பு தப்பான மாதிரி அதுவும் ஆகக்கூடாதா?.. ‘யாஷிகா’ன்னு மக்கள் முடிவு பண்ணியிருந்தா?” என்று கமல் பொடியைத் தூவ.. இப்போது அழுவது ஐஸ்வர்யாவின் டர்ன். “இதுல உங்க பேர் இல்லையே.. ஏன் வருத்தம்?” என்று தன் திருவிளையாடலைத் தொடர்ந்தார் கமல். 

‘சரி..ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு சொல்றேன்’ என்று வெறுப்பேற்றுவதை கமல் ஜாலியாக தொடர ‘சார்…’ என்று கொலைவெறியுடன் போட்டியாளர்கள் அலறினார்கள். பார்வையாளர்களும் அதே மனநிலையில் இருந்திருக்கலாம். 

யாஷிகாதான் வெளியேறக்கூடும் என்பது மாதிரியான ஐடியாவை கமல் ஆழமாக விதைத்ததால் ஐஸ்வர்யாவின் துயரம் அதிகமடைந்தது. ‘No Eviction’-ன்னு கூட இருக்கலாம்.. அழுவாத” என்று மற்றவர்கள் சமாதானப்படுத்தியும் ஐஸ்வர்யா சமாதானம் ஆகவில்லை. 

மறுபடியும் வந்த கமல்.. ஐஸ்வர்யா இன்னமும் அழுகையைத் தொடர்வதைக் கண்டு.. “எனக்கொண்ணும் ஆகாது.. ஆனா நான் அழுது அந்தச் சோகம் உன்னையும் தாக்கிடுமோன்னு நெனக்கும் போது அழுகையா வருது’ என்று ‘குணா’வாக மாறி ஐஸூவின் மீது அனுதாபப்பட்டார். என்றாலும் தன் கொலைவெறி விளையாட்டை விடவில்லை. ‘வெளியே போறவங்க பேரு மூணு எழுத்து.. தமிழ்ல’ என்று சொல்லி குட்டையை இன்னமும் குழப்பினார். 

யாஷிகாதான் வெளியேறுவார் என்று பல கணிப்புகளும் வாக்கெடுப்பு முடிவுகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்த சமயத்தில் அது பொய்யானது. ‘நித்யா’ வெளியேற்றப்படுகிறார் என்பதை ஒருவழியாக தெரிவித்தார் கமல். 

“அஞ்சு நிமிஷம் தர்றேன். முடிச்சுட்டு வாங்க” என்று கமல் சொன்னதைத் தொடர்ந்து நித்யாவிற்கு பலரும் ஆறுதல் கூறினர். ‘அவங்க தனியா பேசட்டும்.. நகர்ந்து நிற்போம்’ என்று கண்ணியமாக விலகினர். “எனக்கு அப்பவே தோணுச்சு” என்று அனைவரையும் கட்டியணைத்த நித்யா, “கோபப்படாத.. கெட்ட வார்த்தை பேசாத.. இது ஒரு நல்ல வாய்ப்பு. ஜெயிச்சுட்டு வா” என்று பாலாஜிக்கு உபதேசம் செய்தார். தன் செடியையும் பாலாஜிக்கு பரிசளித்தார்.

பாலாஜி, ‘உண்மையிலேயே வருத்தப்படுகிறாரா?” அல்லது ‘பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா’ என்கிற மோடில் இருக்கிறாரா என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் மையமாக இருந்தார். ஆனால், ‘நித்யா வெளியேற்றம்’ என்கிற எதிர்பாராத திருப்பத்தினால் பிக்பாஸ் வீட்டினர் அதிர்ச்சியடைந்திருப்பதை உணர முடிந்தது. 

“இந்த முடிவு ஒரு பக்கம் சந்தோஷமாத்தான் இருக்கு. இனி நித்யாவால பாப்பாவ பார்த்துக்க முடியும். இதுவரைக்கும் நான் எனக்குன்னு ஒண்ணுமே வாங்கிக்கிட்டது இல்ல.. “ என்றெல்லாம் உணர்ச்சிவசப்பட்டார் பாலாஜி. 

வெளியே வந்த நித்யாவை கமல் சந்தித்து உரையாடினார். “இந்த நாலு வாரத்துல சுயபரிசீலனை செய்ய முடிந்தது. இங்க நான் நானாத்தான் இருந்தேன். வந்தவுடனே போஷிகாவைத்தான் தேடினேன்.. எங்க சார்?” என்று நித்யா ஆவலாக கேட்க.. ‘அவ வீட்லதானே இருப்பா” என்று விளையாட்டு காட்டிய கமல்.. “நீங்க அப்படியே இருந்ததா சொன்னீங்க.. ஆனா உங்களால மத்தவங்களுக்கு மனமாற்றம் ஏற்பட்டது.. கவனிச்சீங்களா? என்று பாலாஜியை மறைமுகமாக சுட்டிக்காட்ட உணர்வுபூர்வமாக ஒப்புக் கொண்டார் நித்யா.

“எனக்கிருக்கும்  எதிர்மறை பிம்பம் மாறணும்னுதான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன்’ ன்னு இங்க வர்றப்ப சொன்னீங்க.. இப்ப வெளில போய் பாருங்க. மாற்றம் தெரியும்” என்று கமல் சொன்னவுடன் ‘விஜய்டிவிக்கு நன்றி.. அவங்க எங்களுக்கு எப்பவுமே சப்போர்ட்டா இருந்திருக்காங்க’ என்று நெகிழ்வடைந்தார் நித்யா. இதைத் தொடர்ந்து நித்யா தொடர்பான வீடியோ ஒளிபரப்பானது. இது போன்ற வீடியோக்களை உருவாக்குவதில் விஜய் டிவியினர் விற்பன்னர்கள். 

இதைத் தொடர்ந்து இதர போட்டியாளர்களின் புகைப்படங்களுக்கு கீழே அவர்களைப் பற்றி ஒற்றை வார்த்தையில் கருத்து தெரிவிக்க வேண்டும் என்கிற வழக்கமான விளையாட்டு. 

நித்யா -நான், பாலாஜி –அன்பு .. (பார்றா…)  ரம்யா - உண்மை  , சென்றாயன் – பாசம் (உண்மைதான்), பொன்னம்பலம் - அக்கறை , ரித்விகா –பொறுமை, டேனி –வளர்ச்சி,  ஷாரிக் -Play boy (லீலா விநோதன்னு சொல்லலாமா என்றார் கமல். அட டைட்டில் நல்லாயிருக்கே!. இது மஹத்திற்குத்தானே அதிகம் பொருந்தும் என்று நாம் யோசித்துக் கொண்டிருக்கும் போதே ‘ இதை மஹத்திற்கும் தரலாம்’ என்று சொல்லி ஆசுவாசத்தை அளித்தார் நித்யா). 

மஹத் – Emotional (எந்த எமோஷன்?!), ஐஸ்வர்யா – Childish, (ஆமாம்.. அது பேபிதான்), ஜனனி – pleasant, யாஷிகா – Strong will, வைஷ்ணவி – achiever, மும்தாஜ் – drama queen (இன்னமும் அவங்க மேல உள்ள கோபம் போலையா?!) என்று நித்யா எழுதி முடிக்கும் சமயத்தில் போஷிகாவின் என்ட்ரி நிகழ,.. அதிர்ச்சியான மகிழ்ச்சியில் தாவி அணைத்துக் கொண்டார் நித்யா. சினிமாக்காட்சி மாதிரி இருந்தாலும் இதில் எத்தனை உண்மை! நெகிழ்வுப்பூர்வமான காட்சி.

“இத்தனை நாள் யாரை மிஸ் பண்ணீங்க?” என்று போஷிகாவிடம் கேட்டார் கமல். (குழந்தைகளிடம் பன்மையில் உரையாடுவது ஒரு நல்ல வழக்கம்). ‘அம்மாவை…’ என்று சொல்லிய போஷிகா.. பிறகு ‘டாடி’யையும் என்றார். 

தாய் – மகள் என்று இருவரின் அனுமதியுடன் பாலாஜியுடன் அவர்களை உரையாட வைத்தார் கமல். அவர்களுக்கு இடையே நிகழ்ந்த பரஸ்பர விசாரிப்புக் காட்சிகள், பிக்பாஸ் வீட்டைப் போலவே நம்மையும் கலங்க வைத்தது. பெரியவர்கள் மனம் கலங்கினாலும் உணர்ச்சிவசப்படாமல் தெளிவாக இருந்த போஷிகாவைக் கண்டு பிரமிப்பாக இருந்தது. மற்றவர்களின் வழிகாட்டுதலுடன் ‘love you both’ என்று பாலாஜி சொல்ல .. பிக்பாஸ் வீடே உணர்ச்சி வெள்ளத்தில் மிதந்தது. பாலாஜியின் சார்பாக போஷிகாவின் கன்னத்தில் முத்தமிட்டு கமல் ஆசிர்வசித்தது மிகவும் ரசிக்க வைத்த காட்சி. (கலக்கிட்டீங்க.. ஆண்டவரே!).

பாலாஜிக்கும் போஷிகாவிற்கும் இடையே நிகழ்ந்த நெகிழ்வுபூர்வமான உரையாடலைத்தான் பிக்பாஸ் வீட்டு மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தால், சைடு கேப்பில்… புகைப்படங்களுக்கு கீழே தரப்பட்டிருந்த பெயர்களையும் வீடியோவில் பார்த்து வைத்திருந்தார்கள். அது பற்றிய விமர்சனங்களும் நடந்தன. 

நித்யாவிற்கும் போஷிகாவிற்கும் கமல் வழியனுப்பி வைக்க, அவர்கள் தவறுதலாக வீட்டின் உள்ளே சென்ற பாதைக்கு சென்றது ஜாலியான பிழை. ‘இந்த மாதிரி காட்சிகளை சினிமாவிற்காக எழுதிட முடியும். ஆனால நிஜத்தில் எத்தனை உண்மையா இருக்கு.. நானும் எமோஷனல் ஆகிட்டேன். ‘அழாத மாதிரி நடிக்கறதுதான் கஷ்டம்’ன்னு முன்ன சொன்னேன். இப்ப அதுக்கு பழகிட்டு இருக்கேன்.. இந்த நிகழ்ச்சி என்னையும் செதுக்குது. நான் 'நான்’ சொல்றத சிலர் விமர்சனம் பண்றாங்க.. அது ‘உங்களில் நான்’தான். சினிமால கிடைச்ச பெருமையை விட இந்த ‘உங்களில் நான்’தான் எனக்கு அதிக பெருமையைத் தருது” என்று உணர்ச்சிவசப்பட்ட பாவங்களுடன் உரையாடினார் கமல். 

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம். 

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

துக்கமும் மகிழ்ச்சியும் கலந்து காணப்பட்ட பாலாஜியை வீட்டிற்குள் பிறகு காண முடிந்தது. அவர் தனிமையில் அமர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்த காட்சி, அவருக்குள் ஏற்பட்டிருக்கும் மனமாற்றத்தை யூகிக்க வைத்தது. அவரே சொன்னது போல ‘புது பாலாஜி’யாக திரும்பி வரட்டும். 

பாலாஜிக்கு மட்டுமல்ல, நமக்கும் இதில் நிறைய பாடங்கள் இருந்தன. பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி அவற்றையும் உணர்ந்து கற்றுக் கொள்வோம்; பின்பற்ற முயற்சி செய்வோம். 

பாலாஜி - நித்யா இடையிலான நிஜ வாழ்க்கை சூழ்நிலை காரணமாக, போட்டிகளில் கெடுபிடி காட்ட முடியாத தர்மசங்கடம் இனி பிக்பாஸுக்கு இல்லை. எனவே, இனி ஆக்ரோஷ, ரெளத்ரமான போட்டிகளை எதிர்பார்க்கலாம். இனியாவது பிக்பாஸின் ரியல் ஆட்டம் ஆரம்பமாகுமா?