Published:Updated:

``மானே தேனே போட்டுப் பார்த்தால், கமல் சொல்லும் `மய்யக்' கருத்து புரியும்!" - `பிக் பாஸ்' கமல்

தார்மிக் லீ

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த வார கமல் எபிசோடு எப்படிப் போனது... ஒரு சின்ன அலசல்!

``மானே தேனே போட்டுப் பார்த்தால், கமல் சொல்லும் `மய்யக்' கருத்து புரியும்!" - `பிக் பாஸ்' கமல்
``மானே தேனே போட்டுப் பார்த்தால், கமல் சொல்லும் `மய்யக்' கருத்து புரியும்!" - `பிக் பாஸ்' கமல்

``பொதுமக்கள்தான் மெஜாரிட்டி. நீங்க பொறுப்புல வெச்சவங்க மைனாரிட்டி. சில நேரம் மைனாரிட்டி போடுற ஆட்டைத்தைப் பார்த்து, மனம் வெதும்பி, அவங்க போடுற ஆட்டைத்தையே பொதுமக்கள் போட்டாங்கன்னா, விளையாட்டே கெட்டுப்போயிடும். அதுவும் இல்லாமல், இதெல்லாம் நமக்கு எதுக்குனு ஒதுங்கியிருந்தாலும், விளையாட்டு கெட்டுப் போயிடும்'' - வழக்கமான தனது வார்த்தை விளையாட்டுகளால் அன்றைய பிக் பாஸ் ஷோவுக்குப் பிள்ளையார் சுழி போட்டு வைத்தார், கமல். இப்போ நான் சொல்றது இங்கே நடக்கிறதுதான் என டிஸ்க்ளைமர் வேறு கொடுத்தார். இதைத் தொடர்ந்து ஷோ எப்படிப் போனது... ஒரு சின்ன அலசல்!

கமலைப் பார்த்ததும் போட்டியாளர்கள் அனைவரும் எழுந்து நின்று சலாம் போட்டனர். `எங்கே, யாஷிகாவையும் ஐஸ்வர்யாவையும் காணோம்?' எனக் கேட்டு, `ஓ... ஆடை பாதி ஆள் பாதினு பார்த்தது, இப்போ முழுசா பார்த்ததுல அடையாளம் தெரியலை. இந்த மாதிரி டிரெஸ் எல்லாம் இவங்களுக்குப் பிடிக்கும்' எனச் சொல்லி, இருவரையும் கிண்டலடித்தார். கடந்த வார எபிசோடில் சொன்ன விஷயத்தின் பிரதிபலிப்பாகத்தான் இப்படி இருவரும் டிரெஸ் அணிந்திருக்க வேண்டும். இனி வரும் வாரங்களிலும் இது தொடரலாம். `பொன்னம்பலம் சொல்லுங்க... உங்க அனுபவம் எப்படி இருந்தது?' எனக் கேட்டதற்கு, `நல்ல வேளை சார், இது கேமோட முடிஞ்சது. நிஜ வாழ்க்கையிலும் இப்படி இருந்தா பப்ளிக்குக்குக் கண்டம்!' எனச் சொல்லி முடிக்க, மில்லியன் டாலர் எக்ஸ்பிரஷன் கொடுத்தார், கமல். இதற்கு எந்தவித விளக்கமும் கொடுக்கத் தேவையில்லை. 

கமல் ஸ்பெஷாலிட்டிகளில் ஒன்று, `குழந்தையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடுவதுதான்' இதைத் தொடர்ந்து எல்லா வாரங்களிலும் செய்துகொண்டிருக்கிறார். சில முறை அப்பட்டமாக, சில முறை மறைமுகமாக!. போட்டியாளர்கள் யார் என்ன குறை சொல்லிக்கொண்டிருந்தாலும், கமல் அவர் எதிர்பார்க்கும் ரம்யாவின் தலைமைப் பொறுப்பை நோக்கி அம்பை எய்துகொண்டே இருந்தார். அப்போதான் சில காரசாரமான அரசியல் பேச்சுகளை அள்ளித் தூவ முடியும். யாரும் அதைப் பற்றி பேசுவதாய் இல்லை. ஆகையால் ஆண்டவரே அந்த டாப்பிக்கை ஆரம்பித்து வைத்தார். `ரம்யா, தலைமைப் பொறுப்பைப் பற்றி நீங்க முழுமையாப் புரிந்துகொள்ளவில்லை என்பது என் கருத்து' என லேசாக ஆரம்பித்து வைத்தார். `ரம்யா', `தலைவர்' என்ற வார்த்தைகள் இருக்கும் இடத்தில், மானே தேனே பொன்மானே... எல்லாம் நீங்களே போட்டுப் பார்த்தால், கமல் இதிலிருந்து சொல்லவரும் `மய்ய'க் கருத்து புரியும். 

`தகுதியற்ற தலைவர்' என்ற பட்டத்தை ரம்யாவுக்குக் கொடுத்ததும், `கரெக்ட் இது மாதிரி பளிச்சுனு கொடுத்திடணும். புரியிதுங்களா' என்று பொதுமக்களை நோக்கி ஒரு லுக் விட்டவர், குறியீடு பேச்சுகளை விடுவதாக இல்லை. `இது ஏதோ உன்னதமான முறையில நாங்க தேர்ந்தெடுத்த தலைவரை வேண்டாம்னு சொல்லிட்டீங்களேனு கவலைப்பட முடியாதுங்கிறதுக்காகச் சொல்றேன், இல்லேங்களா!' என மீண்டும் பொதுமக்களைப் பார்த்து கேட்டார். போட்டியாளர்களில் சிலர், ``ஏன் அப்பப்போ பொதுமக்களைப் பார்த்து புரியிதுங்களா, தெரிஞ்சுக்கிட்டீங்களா'னு கேட்குறீங்க?" எனக் கேட்காதது மட்டும்தான் குறை. `நான் ஒரு நல்ல லீடர் இல்லை, அதை நான் மனசாரப் புரிஞ்சுக்கிட்டேன்' எனச் சொன்னதும், `அய்யோ... இந்த மாதிரி எல்லோரும் புரிஞ்சுக்கிட்டா நல்லா இருக்குமே' என மீண்டும் இவர் பாணியில் புரியாத பாஷையிலே பேசினார். ஆனால், எங்களுக்குப் புரிந்துவிட்டது ஆண்டவரே!

அடுத்த எபிசோடு டப்ஸ்மாஷ், கேலி, கிண்டல் எனப் படு ஜாலியாக ஆரம்பித்தது. போகப் போக எவிக்‌ஷன் செய்யப்படுவதை அடுத்து கொஞ்சம் பதற்றமான சூழல் போட்டியாளர்களுக்கிடையே நிலவியது. ஆனால், கமலோ எலிமினேட் ஆகப்போகும் பெயர் கொண்ட கவரை விசிறிக்கொண்டே வந்தார். `கவரைத் திருப்பணுமா?' எனச் சொல்லி விளையாட்டைத் தொடர்ந்துகொண்டே இருந்தார். இதைத் தொடர்ந்து நித்யா எலிமினேட் ஆகி வெளியே வந்தார். வழக்கம்போல் அங்கிருக்கும் போட்டியாளர்களின் புகைப்படங்களை வைத்து அவர்களைப் பற்றி ஒரு வார்த்தையில் எழுதவேண்டும் என்ற விளையாட்டில் கலந்துகொண்டார், நித்யா. அவர் புகைப்படத்தில் 'நான்' என்று எழுதினார். ``நான் இருக்கும்போது எப்படி நீங்க `நான்'னு எழுதலாம், அது என் டயாக்ல.." என ஏதோ சொல்ல வந்தவர், பாலாஜியைப் பற்றி எழுதப்போனதும் நிறுத்திக்கொண்டார். ``எங்க அப்பா சார்பா போஷிகாவை ஆசீர்வாதம் பண்ணுங்க சார்!" என்று பாலாஜி சொல்லியதும், போஷிகாவை அள்ளித் தழுவி முத்தமிட்டார், கமல். ``அணைப்பு உங்களது அப்பாவுக்காக, முத்தம் உங்களுக்காக!' எனச் சொல்லி, சமூகத்துக்குச் சில கருத்துகளைக் கூறி விடைபெற்றார், 'நான்' கமல்.