Published:Updated:

ஆங்ரி ஐஸ்வர்யா...ரௌத்ர ரித்விகா... இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பிக் பாஸ்?! #BiggBossTamil2

சுரேஷ் கண்ணன்
ஆங்ரி ஐஸ்வர்யா...ரௌத்ர ரித்விகா... இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பிக் பாஸ்?! #BiggBossTamil2
ஆங்ரி ஐஸ்வர்யா...ரௌத்ர ரித்விகா... இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பிக் பாஸ்?! #BiggBossTamil2

பிக் பாஸ் போட்டியாளர்களை, ‘லெப்ட் அண்ட் ரைட்’ என்று பரேட் விட்டதாலும் மஹத்தை களி திங்க வைத்ததாலும் வீட்டின் உறுப்பினர்கள் இப்போது தீவிர அக்கறை காட்டத் துவங்கியிருப்பதை காண முடிகிறது. இது மட்டுமல்லாமல்  ‘எங்க ஏரியா, உள்ள வராத” என்கிற இன்றைய டாஸ்க்கும் சற்று சுவாரசியமாகவே இருந்தது. இப்படியே முன்னேறினால் பிக்பாஸ் என்கிற சவலைப்பிள்ளை பிழைத்துக் கொள்ளும். வெல்டன் பிக் பாஸ்

இதுநாள் வரை சமர்த்துப் பிள்ளையாக இருந்த ரித்விகா  சண்டை போட்டு, கத்தி விவாதம் செய்து கலங்கியதுதான் இன்றைய ஹைலைட். சாந்த சொரூபியான ரித்விகாவையே கோபப்பட வைத்ததுதான் ஐஸ்வர்யாவின் இன்றைய சாதனை. உப்புப் பெறாத விஷயத்திற்காக கத்தி, அழுது, ஆர்ப்பாட்டம் செய்து ஓவராக சீன் போட்டார் ஐஸ்வர்யா. காமிரா தன்னையே கவனி்க்க வேண்டும் என்பதற்காக அவர் போடும் நாடகமா, என்ன செய்தாலும் ‘தமிலக மக்கள்’ சூப்பர் பவர் தந்து தன்னைக் காப்பாற்றி விடுவார்கள் என்கிற மிகையான நம்பிக்கையா அல்லது அவர் ஏதேனும் உளப்பாதிப்பில் இருக்கிறாரா என்பது தெரியவில்லை. 

கடைசியாக குறிப்பிட்ட யூகத்திற்குத்தான் அதிக சாத்தியம் என்று தோன்கிறது. வேற்றுக்கலாசாரத்துக்குள் சிக்கித் தவிக்கும் பிரச்னைகள், ஹோம் சிக்னெஸ், ஷாரிக் விவகாரம் என்று பல்வேறு அழுத்தங்கள் அவரிடம் சேர்ந்து அற்ப காரணங்களுக்காக கூட வெடிக்க வைக்கிறதோ என்று தோன்றுகிறது. (‘கோபத்தில் கூட ஐஸூ அத்தனை அழகு” என்று எழுதத்தான் ஆசை. ஆனால், ‘கியாரே.. சப்போர்ட்டிங்கா?” என்று பின்னூட்டத்தில் சிலர் கண்டுபிடித்து விடுவதால், அந்த உண்மையை குறிப்பிடாமல் கடக்கிறேன்).

ஐஸூவுக்கும் ரித்விகாவுக்குமான பிரச்னை எதனால் எழுந்தது என்பதை சுருக்கமாகப் பார்த்து விடுவோம். 

டாஸ்க்கின் படி, டைனிங் ஏரியாவுக்கு சாப்பிட வரும் எதிர் அணி, கிச்சன் ஏரியாவை கைப்பற்றிய ‘ஜனனி’ அணியிடமிருந்து அனுமதி வாங்க வேண்டும். அதற்கு அவர்கள் சொல்லும் சிறு டாஸ்க்கை முடிக்க வேண்டும். ஒரு சமயத்தில் ஒருவர்தான் சாப்பிட முடியும். அதன்படி அனுமதி வாங்கி பாத்திரம் சுத்தம் செய்து விட்டு யாஷிகா சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அடுத்தது வைஷ்ணவி செல்லலாம் என்று திட்டம். 

ஆனால் எதனாலோ வைஷ்ணவி செல்ல விரும்பாமல் போனதால் மும்தாஜ் தான் செல்லலாம் என்று விரும்பியிருக்கிறார். இதைப் பற்றி எதிரணி நபரான ஐஸ்வர்யாவிடம் ரித்விகா விசாரித்திருக்கிறார். அந்தச் சமயத்தில் கிச்சன் ஏரியாவில் இருந்த எதிரணி நபர் ஐஸ்வர்யா மட்டுமே. ‘ஆள் மாறியதால் அதற்கேற்ப டாஸ்க்கும் மாறும்’ என்பது ஐஸ்வர்யாவின் அபிப்ராயம். ‘சரி.. அது என்னன்னு கேட்டுச் சொல்லுங்க’ என்று ரித்விகா கேட்டதும்தான் தாமதம், சற்று நேரம் பேய் பிடித்தது போல் அமர்ந்திருந்த ஐஸ்வர்யா, பிறகு ரித்விகாவை நோக்கி. ‘நான் என்ன பொம்மையா.. நான் ஏன் போய்க் கேட்கணும்?” என்று என்னென்னமோ.. சொல்லி கூச்சலிட்டார். (‘வெறும் ரெண்டு ரூவாதான்டா கேட்டேன்.. அவன் என்ன கோபத்துல இருந்தானோ தெரியல.. இத்தாம் பெரிய கத்திய உருவிட்டான்’ மோமெண்ட்’).

“நீங்க மட்டும்தானே கிச்சன்ல இருந்தீங்க. உங்க கிட்டதானே கேட்க முடியும்? உங்க டீம் கிட்ட கேட்டு சொல்றதுல என்ன பிரச்னை?” என்று ரித்விகாவும் மும்தாஜூம் கேட்கும் நியாயமான கேள்விகளை ஐஸ்வர்யாவால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. ‘நான் குளந்தே இல்லெ’ என்று அவர் அடிக்கடி வெடித்தாலும் பல சமயங்களில் குழந்தைத்தனமாகத்தான் நடந்து கொள்கிறார். 

“அந்தப் படத்துல ஐஸ்வர்யா ராய் சூப்பரா நடிச்சிருந்தாங்கள்ல’ என்று எவராவது பேசிக் கொண்டிருந்தால் கூட ‘என்னைப் பத்தி ஏன் பேசணும்’ என்று கொலைவெறியோடு பாயுமளவுக்கு ஐஸ்வர்யா மனக்குழப்பத்தில் இருக்கிறார் என்று தோன்றுகிறது. நெருக்கமான தோழியான யாஷிகாவால் கூட அவரைச் சமாதானப்படுத்த முடியவில்லை. சமாதானப்படுத்தும் போது ‘இந்த வீட்ல யாரும் சந்தோஷமா இருக்க முடியாது’ யாஷிகா சொன்னது திருவாக்கியம். இது ஒரு கேம் என்பதையும் போட்டியாளர்களுக்குள் மோதலை உருவாக்குவது இந்த விளையாட்டின் அடிப்படை என்பதையும் மறந்து ‘உண்மையான வாழ்க்கை’யின் தீவிரத்தை பலர் ஏன் தருகிறார்கள் என்பது புரியவில்லை. 

**

36-ம் நாளின் நிகழ்வுகள் இன்னமும் முடியவில்லை. ‘கமல் சார் கிட்ட சொல்லிக்கறேன்’ என்று வீறாப்பாக கிளம்பிய பொன்னம்பலம் டேனியுடன் அவரது பிரச்னையைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். “பட்டப் பெயர் வெச்சு முதல்ல யாரு கூப்பிட்டது யாரு..” என்று பொன்னம்பலம் கேட்டதுக்கு ‘அவங்களாத்தான் விரும்பி கேட்டாங்க.. கூப்பிட்டு கேட்டுப்பாருங்க’ என்று டேனி வாதாடியது அபத்தம். தன் மீதான கிண்டல்களை எவராவது தானே அனுமதித்துக் கொள்வார்களா என்ன? வேறு வழியில்லாமல் சகித்துக் கொண்டிருப்பார்கள் என்பதுதான் யதார்த்தம். “நீங்க மட்டும் வயசுக்கு ஏத்த மாதிரியா நடந்துக்கறீங்க?” அறுபது வயது, முப்பத்தைந்து வயது அனுபவம்’ ன்னு நீங்க சொல்றதெல்லாம் வேஸ்ட்” என்று டேனி வாதாட.. “பாருப்பா.. தம்பி.. நீ நல்லா வரணும்.. ஆசிர்வாதத்தோட சொல்றேன்” என்று பொன்னம்பலம் இறங்கியதும் டேனியின் சூடும் சற்று தணிந்தது. 

மஹத்திற்கான சிறப்பு உணவு வந்தது. இப்போதெல்லாம் உண்மையான சிறைகளிலேயே வாரத்துக்கு இருமுறை சிக்கன் போடுமளவுக்கு முன்னேற்றம் அடைந்து விட்டதாக சொல்கிறார்கள். ஆனால், ‘ஜெயில்ல களி திங்கப் போறியா?’ என்கிற பழைய விஷயத்தை நினைவு வைத்துக் கொண்டு.. மஹத்திற்கு களி வழங்கினார் பிக்பாஸ். “இறைவன் என்ன கொடுத்தானோ அதைத்தான் சாப்பிடணும்” என்று மஹத் சொன்னதும் பார்வையாளர்களுக்கு நிச்சயம் புல்லரித்திருக்கும். (‘சிறையில் பெற்ற ஞானம்’ என்கிற ஆன்மீக நூலை மஹத்திடமிருந்து விரைவில் எதிர்பார்க்கலாம் போல. அத்தனை பக்குவம்!). 

மஹத் களி தின்பதை இதர போட்டியாளர்களில் சிலர் வருத்தமுடன் வந்து எட்டிப் பார்த்தனர். குறிப்பாக பாலாஜி கண்கலங்கி விட்டார். (‘அக்யூஸ்ட்டு கூட சேர்ந்து அழுத ஒரே போலீஸ்காரன் நீதான்டா’). ‘உடம்புக்கு குளிர்ச்சி’ என்று மஹத் தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டாலும், களி, கூழ், கஞ்சி போன்ற பாரம்பரிய உணவுகள் உடலுக்கு ஏற்றவை. அவற்றை மலினமாகவும் தண்டனையாகவும் பார்க்கத் தேவையில்லை. (பிட்ஸா போன்ற அந்நிய உணவுகளின் மீதான மோகம்தான் நமக்கு நாமே அளித்துக் கொள்ளும் சிறைத்தண்டனை!).

மஹத் களி தின்பதைப் பார்த்து பிக்பாஸூம் உள்ளூற கலங்கி விட்டாரோ என்னமோ, முன்னர் மற்ற சிறைவாசிகளுக்கு கூட அளிக்காத வசதியான, ‘கொசு வலை’யை கட்டி மஹத்துக்கு சிறப்பு தாலாட்டு பாடினார். 

37-ம் நாளின் காலை, ‘அடி என்னடி ராக்கம்மா.. பல்லாக்கு’ பாடலோடு விடிந்தது. டேனி கூட்டணியிலும் இப்போது விரிசல் விழத் துவங்கியிருக்கிறது. அவர் மும்தாஜூடன் புதிய கூட்டணி அமைத்திருப்பது இதற்கு காரணமாக இருக்கலாம். “டேனி எங்களை பிரெயின் வாஷ் பண்றான்.. ‘எனக்குப் பிடிக்கலை, நான் போறேன்’-ற மாதிரி சீன் போடறான். அப்பத்தான் நாங்க அவனுக்கு சப்போர்ட்டா இருப்போன்னு நெனக்கறான். நேத்திக்கு மும்தாஜ் கூட சேர்ந்து சென்றாயனை கிண்டல் பண்ணிட்டு இருந்தான். அப்ப அவன் பிரெண்டு, மும்தாஜா.. சென்றாயனா,” என்றெல்லாம் சிறையில் இருந்த மஹத்திடம் அனத்திக் கொண்டிருந்தார் யாஷிகா. 

பிளாஸ்டிக்கால் ஆன முகமூடியை அணிந்து மஹத்தையும் நம்மையும் பயமுறுத்த முயன்று கொண்டிருந்தார் ஜனனி. ‘காட்டுப்பூனை’ மாதிரியான தோற்றத்தில் உறுமிக் காட்டினார். (இதை நீங்க சாதாரணமா செஞ்சாலே போதும்.. எங்களுக்கு உயிர் பயம் வரும் மேடம்!). 

‘எங்க ஏரியா.. உள்ள வராதே’ என்றொரு சுவாரஸ்மான லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கை’ அறிமுகப்படுத்தினார் பிக்பாஸ். பெரும்பான்மையான போர்கள் நில ஆக்ரமிப்பிற்காக நிகழ்ந்திருக்கின்றன. நிலம் என்பது அதிகாரம். பிக்பாஸ் உங்களின் சொந்த வீடு என்பதால் இதைப் பாதுகாக்கும் உரிமையும் கடமையும் உங்களுக்கு இருக்கிறது” என்று அர்ஜூன் பட வசனங்களைப் போல் இதன் அறிமுக உரை புல்லரிக்க வைக்கும் வகையில் இருந்தது. 

இதன் படி வீட்டின் போட்டியாளர்கள், நீலம் மற்றும் மஞ்சள் நிறம் என்று இரண்டு அணிகளாகப் பிரிவார்கள். கிச்சன், பாத்ரூம், கார்டன்.. என்று வீடு ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்படும். ஒவ்வொரு ஏரியாவிற்காகவும் டாஸ்க் தரப்படும். வெற்றி பெற்ற அணியே அந்தப் பகுதியின் உரிமையைப் பெறுவார்கள். எதிரணி அங்கு வர வேண்டுமென்றால் அனுமதி பெற வேண்டும். மும்தாஜ்  மற்றும் ஜனனி அணித்தலைவர்களாக இருப்பார்கள். ஷாரிக் இதன் நடுவராம்.  (தெருவில் விளையாடும் கிரிக்கெட்டுக்களில் அப்பிராணியா வர்ற பையனை ‘ஒப்புக்கு சப்பானா’ அம்பயரிங் நிக்க வெச்ச மாதிரியே இருக்கு!). 

தன் அணிக்காக யாஷிகா, ரித்விகா, வைஷ்ணவி, பாலாஜி ஆகியோரைத் தேர்ந்தெடுத்தார் மும்தாஜ். இதைப் போலவே தன் அணிக்காக, டேனி, ஐஸ்வர்யா, சென்றாயன் மற்றும் பொன்னம்பலத்தை தேர்ந்தெடுத்தார் ஜனனி. (சிறந்த போட்டியாளர்களை கைப்பற்ற போட்டி இருந்தது. டேனியின் பெயரை ‘டோனி’ என்று மாற்றி விடலாம் போல. அவர் செல்லும் இடமெல்லாம் வெற்றி கிடைக்கிறது).

“அவங்க என்ன பண்றாங்கன்னு யோசிச்சு.. நம்ம மூளையை வேஸ்ட் பண்ண வேண்டாம். நாம என்ன செய்யப் போறோம்-னு யோசிப்போம்” என்று தன் அணியிடம் சொல்லிக் கொண்டிருந்தார் டேனி. எதிரணியில் இருந்த யாஷிகா, ‘திருடன் போலீஸ் டாஸ்க்ல டேனி கூட இருந்ததால.. அவன் ரகசியம் எல்லாம் எனக்குத் தெரியும். அவன் சும்மா எடுபிடி பையன்தான். அந்த டாஸ்க்ல ஜெயிக்கறதுக்கு நான் போட்ட பிளான்தான் காரணம்” என்றெல்லாம் ‘அணி மாறியதும்’ அடித்து விட்டுக் கொண்டிருந்தார். (அரசியலுக்கு வந்துடுங்க தாயி.. இப்படி பின்றீங்களே..!) ‘நீங்க கோபப்பட்டு சொதப்பிடாதீங்க” என்று பாலாஜியை எச்சரித்துக் கொண்டிருந்தார்கள். ‘அவங்க எது சொன்னாலும் சிரிச்சுடுங்க.. எதுக்கு சிரிக்காறான்னு தெரியாம குழம்பட்டும்’ என்றொரு மகத்தான ஐடியாவை தந்தார் யாஷிகா. (நிச்சயம் வருங்கால தலைவிதான்).

டைனிங் /கிச்சன் ஏரியாவை கைப்பற்றுவதற்கான முதல் போட்டி ஆரம்பித்தது. கேசரி மற்றும் மீன் துண்டுகள் வைக்கப்பட்டிருக்கும். (என்ன எழவு காம்பினேஷன் இது!) எவர் முதலில் அதிக உணவை காலி செய்கிறாரோ அந்த அணி வெற்றி பெறும். ஜனனி அணியிலிருந்து சென்றாயனும், மும்தாஜின் அணியிலிருந்து ரித்விகாவும் இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டு போட்டிக்கு தயார் ஆனார்கள். சென்றாயனை டேனி பயங்கரமாக உற்சாகப்படுத்தினார். (தோனிடா!) போலவே ரித்விகாவை மும்தாஜ் சப்போர்ட் செய்தார். 

உணவு உண்பதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் நிச்சயம் வித்தியாசம் இருக்கிறது. எனவே தகுந்த போட்டியாளரை தேர்ந்தெடுத்திருக்கலாம். குதித்து குதித்து சென்றாயன் வேக வேகமாக உணவுகளை தின்றுத் தீர்க்க, அவருடன் போட்டி போட முடியாமல் மூச்சு திணறினார் ரித்விகா. (இவ்வாறு நடைபெற்ற ஓர் உணவுப் போட்டியில் ஒருவர் மூச்சுத்திணறி இறந்து விட்டதால், இப்படிப்பட்ட போட்டிகளை ஆதரிப்பதில்லையென்று ‘கின்னஸ்’ சில ஆண்டுகளுக்கு முன் முடிவு செய்த தகவலை வாசித்த நினைவிருக்கிறது. பிக்பாஸூம் இப்படிப்பட்ட போட்டிகளில் உள்ள ஆபத்தை கவனிக்க வேண்டும்).

சிறிய அளவு மீன்கள் என்றாலும் அவை முள்ளோடு இருந்ததால் இரண்டு போட்டியாளர்களுமே ஒரு சமயத்தில் விழுங்க முடியாமல் துப்பி விட்டார்கள். எனவே இது சார்ந்த சர்ச்சையும் எழுந்தது. ‘சென்றாயன் முதல் முறை துப்பியது வேண்டுமானால் இயற்கையாக இருக்கலாம். ஆனால் இரண்டாம் முறை துப்பியது திட்டமிட்டது” என்று மும்தாஜ் ஆவேசமாக புகார் தந்தார். இதை எதிரணியினர் மறுத்தனர். ‘வேண்டுமென்றால் முதலில் இருந்து போட்டியை நடத்துங்கள். சாப்பிடுகிறேன்’ என்று பரோட்டா ‘சூரி’யாக மாறி ஆச்சரியப்படுத்தினார் சென்றாயன். 

“போய் அவங்க துப்பினதை பாருங்க” (உவ்வேக்!) என்றெல்லாம் வந்த புகாரை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார் ஷாரிக். (ஒரு பிள்ளைப் பூச்சி மேல கல்லைத் தூக்கி வெச்சிட்டு கருணையேயில்லாம இந்த உலகம் எப்படில்லாம் வேடிக்கை பார்க்குது!) 

எனவே இந்த சர்ச்சையை எதிர்கொள்ள முடியாமல் ‘third umpire decision’ மாதிரி பஞ்சாயத்திற்காக ‘பிக் பாஸிடம்’ போனார் ஷாரிக்.. ‘வெண்ணைய்.. அதுக்குத்தானே உன்னை நடுவரா போட்டிருக்கு. மறுபடியும் என் கிட்ட வந்தா எப்படி?” என்பது போல் பதில் அளிக்காமல் கல்லுப்பிள்ளையாராக பிக்பாஸ் மெளனம் சாதிக்க.. ‘தானே இதை டீல் செய்வது’ என்கிற ஆவேசத்திற்கு வந்தார் ஷாரிக். வாந்தி உள்ளிட்ட கசுமாலங்களை ஆராய்ச்சி செய்து முடித்தவுடன் ‘நீல நிற அணி’ (ஜனனி டீம்) வெற்றி பெற்றதாக அறிவித்தார் ஷாரிக். (அப்பாடா! ஆளை விடுங்கடா!). 

‘கேசரில முந்திரி, திராட்சை போட்டு பார்த்திருக்கேன். மீன் போட்டு இப்பத்தான் பார்க்கறேன்’ என்று பாலாஜி அடித்த ‘டைமிங்கான’ காமெடி சிறப்பு. ‘சீட்டிங் பண்றாங்கோ’ என்று மும்தாஜ் கூக்குரலிட ‘நடுவர் இருக்கும் போது சீட்டிங்கின்னு சொல்லக்கூடாது’ என்று பொன்னம்பலம் குறிப்பிட்டது சரியானது. ஆனால் ‘நடுவரை’ ஒரு ஆளாகவே எவரும் மதிக்கவில்லை என்பதுதான் பிரச்னை. தோற்று விட்டாலும் ‘am proud of you’ என்று ரித்விகாவைத் தேற்றி விஜய்காந்த்தை விடவும் தான் சிறந்த கேப்டன் என்பதைக் காண்பித்தார் மும்தாஜ்.

‘நாட்டாமை.. தீர்ப்பை மாத்து’ என்பது போல் ஷாரிக்கை குறைகூறிக் கொண்டிருந்தது மஞ்சள் அணி. அவர்கள் கண்ணில் படாமல் இருக்க பாடுபட்டுக் கொண்டிருந்தார் ஷாரிக். ‘வெற்றி வேல்.. வீரவேல்’’ என்று டேனி தலைமையில் உற்சாகமாக கத்திக் கொண்டு ஓடிய நீல அணி தங்களின் வெற்றிக்கொடியை கிச்சன் ஏரியாவில் நட்டு வைத்தது. 

‘நான் மாது வந்திருக்கேன். சாப்பாடு இருக்குமா?” என்கிற ‘மாடிப்படி மாது’ மாதிரி தட்டை ஏந்திக் கொண்டு கிச்சன் பக்கம் சாதுவாக வந்தது எதிரணி. ‘நாங்க சொல்ற வேலையை செஞ்சுட்டு சோத்துல கை வைங்க’ என்று கெத்து காட்டியது நீல அணி. (‘தட்டுல சோறு வெக்கட்டுமா.. கெளரவம் வெக்கட்டுமா’ன்னு கேட்டா ‘கெளரவம் போடுங்க’ன்ற குடும்பம் நம்பளது’ என்கிற சென்ட்டிமென்ட் வசனம் போல வெட்டி வீறாப்பாக திரிந்தது மும்தாஜ் அணி). டாஸ்க் விதிகளில் அவ்வப்போது குழப்பம் ஏற்பட ‘கூப்பிட்றா நடுவரை’ என்று அடிக்கடி ஷாரிக்கை கூப்பிட்டு  படுத்தி எடுத்தார்கள். (மம்மி.. நான் வீட்டுக்கு வந்துடறேன்.. இங்க முடியல!). 

அடுத்த போட்டி ‘kargil calling’. விஜய்காந்த், அர்ஜூன் படத்தின் வசனங்களைக் கலந்து கடந்த வாரம் கமல் உசுப்பேற்றி விட்டுப் போயிருந்ததால் அதையே தனது டாஸ்க் ஆக மாற்றி விட்டார் பிக்பாஸ். இதில் வெற்றி பெறும் அணிக்கு ‘கார்டன் ஏரியா’ சொந்தம். ராணுவ வீரர்களுக்கான பயிற்சி போல செட்டப் செய்யப்பட்டிருந்தது. சில பல தடைகளைத் தவழ்ந்து, உருண்டு, தாண்டிச் சென்று நீச்சல் குளத்தில் போடப்பட்டிருக்கும் தங்களின் அணி நிற அடையாளத்தை வேகமாக எடுத்து வர வேண்டும். 

முதலில் ஆரம்பித்தவர் பாலாஜி. அப்போது மழை வேறு பெய்து கொண்டிருந்ததால் (இல்ல.. செட்டிங்கா?) போட்டியாளர்களுக்கு சிரமமாக இருந்தது. எப்படியோ தட்டுத் தடுமாறி இலக்கை அடைந்து தன் பங்கை அளித்தார் பாலாஜி. அடுத்து வந்தவர் வைஷ்ணவி. ‘கிச்சன்’ ஏரியாவில் விட்டதை ‘கார்டன்’ ஏரியாவில் பிடித்து விட வேண்டுமென்கிற ஆவேசத்தில் ‘தத்தக்கா பித்தக்கா’ என்று ஓடி வந்த வைஷ்ணவி ஒரு கட்டத்தில் தடுமாறி கீழே விழ மற்றவர்கள் பதறிப் போனார்கள். என்றாலும் தன் ஆவேசத்தை கைவிடாத வைஷ்ணவி மீண்டும் எழுந்து போட்டியை முடித்தார். 

அடுத்து இன்னொரு அணியைச் சேர்ந்த ஐஸ்வர்யா வந்தார். டயர் மீது மாற்றி மாற்றி காலை வைப்பதில் இவர் தவறு செய்து விட்டதாக எதிரணி குற்றம் சாட்ட, ஐஸூவின் மீது உள்ளூற இருக்கும் பாசத்தை மறைத்த நடுவர் ஷாரிக் ‘அவங்க விதியை மீறவில்லை’ என்று விளக்கம் தந்தார். அடுத்து வந்தவர் டேனி. மின்னல் வேகத்தில் டாஸ்க்கை முடித்து எல்லோரையும் அசர வைத்தார். (டோனிடா!). ஆக.. நீல நிற அணி மறுபடியும் வெற்றி பெற்று கார்டன் ஏரியாவையும் கைப்பற்றியது. 

இதற்கிடையில் இன்னொரு காமெடியும் நடந்தது. நீல அணி அசந்திருந்த நேரம் பார்த்து, மஞ்சள் அணி ஓடி வந்து அவர்களின் கொடிகளைப் பிடுங்கிப் போட்டு தங்களின் கொடியை நட்டது. பதறிப் போய் ஓடி வந்த நீலம், ‘இது என்ன அக்கிரமம். எங்க அனுமதியில்லாம எப்படி இந்த ஏரியாவுல காலை வெச்சீங்க?” என்று ஒப்பாரி வைக்க.. ‘இப்படி செய்யக்கூடாதுன்னு ரூல் புக்ல இருக்கா?” என்று சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞராக மாறினார் மும்தாஜ். ‘கூப்பிட்றா நடுவரை’ என்று பலியாடு ஷாரிக்கை மறுபடியும் கூப்பிட்டு விசாரித்து ‘இது போல் கைப்பற்றும் விதி இல்லை’ என்று மஞ்சளி அணியின் ஆக்ரமிப்பைக் கலைத்தார்கள். 

முந்திரிக்கொட்டை போல் மும்தாஜ் யோசித்து இந்த விஷயத்தைச் செய்தாலும் லாஜிக்படி இது சரியே. எதிரணி பலவீனமாக இருக்கும் நேரத்தில் அதிரடியாக நுழைந்து அந்த இடத்தைக் கைப்பற்றுவது ஒரு சரியான போர் வியூகமே. இந்த நோக்கில் மும்தாஜ்ஜின் லாஜிக்கும் பிளானிங்கும் சரியே. தன்னுடைய சிறந்த யோசனையை தந்ததற்காக பிக்பாஸ் மும்தாஜுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். இந்த விஷயத்தையும் டாஸ்க்கில் சேர்த்திருந்தால் ஆட்டம் இன்னமும் சுவாரசியமாக இருந்திருக்கும். 

இது தொடர்பான களேபரங்களையும் சத்தங்களையும் சிறையில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த மஹத்.. ‘பிக் பாஸ்..ஐ லவ்யூ.. இந்தக் கொடுமைகளில் இருந்து என்னைக் காப்பாத்திட்டீங்க” என்று பிக்பாஸை கொஞ்சிக் கொண்டிருந்தார். (களி தின்னும் கொழுப்பு அடங்கலையே மக்கா!).

கிச்சனையும் கார்டனையும் இழந்த மஞ்சள் அணி, அடுத்ததையாவது கைப்பற்ற வேண்டும் என்று தீவிரமாக ஆலோசித்துக் கொண்டிருந்தது. ‘இந்த டாஸ்க் மூணு நாளாவது போகும் போலிருக்கும். நாம பாத்ரூமை எப்படியாவது கைப்பற்றணும்” என்று ரித்விகா சொல்லிக் கொண்டிருந்தார். (ஆம். இது சிறந்த யோசனை.. சாப்பாட்டிற்காவது.. அனுமதி கேட்டு காத்திருக்கலாம். பாத்ரூம் வெயிட் பண்ற சமாச்சாரமா என்ன! பின்னிட்டீங்க ரித்துமா!).

பாத்ரூம் ஓரமாக அமர்ந்து ‘பாத்ரூமை’ கைப்பற்றுவது பற்றி நடந்து கொண்டிருந்த இந்த சதி ஆலோசனையை ‘எங்க ஏரியா உள்ள வராதே’ என்று சொல்லியபடி வந்து கலைக்க முயன்றார் ஜனனி. ‘கூப்பிட்றா நடுவரை’ என்றவுடன் ‘இது இப்பத்திக்கு பொது இடம்தான்’ என்று சமாதானம் செய்தார் ஷாரிக். “நூறு நாள் முடிஞ்சவுடனே.. எல்லோரையும் கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்ளப் போறாங்க.. ரொம்ப ஆட வேண்டாம்னு அவங்க கிட்ட சொல்லு” என்று பாலாஜி ஜாலியாக கோபப்பட்டார். “நாங்க எவ்ள நல்ல டீமா இருக்கோம்.. நீயே சொல்லு’ என்று மஞ்சள் அணி நடுவரை இம்சைப்படுத்திக் கொண்டிருந்தார்கள். ‘ஒரு தனிநபர் செய்யும் சிறு அலட்சியமும் அணியின் ஒட்டுமொத்த உழைப்பை வீணாக்கும்’ என்கிற அறிவிப்பை வாசித்து அவர்களை பயமுறுத்த முயன்றார் ஷாரிக். 

தங்களின் கிச்சன் ஏரியாவை அராஜகமான வழியில் கைப்பற்ற முயன்ற எதிரணிக்கு ஏதாவது தண்டனை தந்தேயாக வேண்டும் என்று ஆவேசமாக இருந்தது நீல அணி. ‘சோறு –ன்னு வந்து நிக்கட்டும். ரெண்டு மிளகாயை கொடுத்தனுப்பறேன்’ என்று டெடரராக கோபப்பட்டுக் கொண்டிருந்தார் பொன்னம்பலம். (விருந்தோம்பல் தமிழ் கலாசாரம் இல்லையா.. சித்தப்ஸ்?!). 

‘போலீஸ் - திருடன் டாஸ்க் நடந்தப்ப… டேனி ஓவரா கத்தறான்னு’ புகார் சொல்லிட்டு இப்ப அவன் டீம்ல இருக்கும் போது ஜனனியும் சேர்ந்து கத்துதே..’ இது என்ன நியாயம்?” என்று புதிய பஞ்சாயத்திற்கான விதையைப் போட்டார் பாலாஜி. இதை அவர் மஹத்திடம் சொல்ல, மஹத் ஜனனியிடம் சொல்ல.. ஜனனி தங்கள் அணியிடம் இதைச் சொல்ல.. ‘வாழ்க்கை ஒரு வட்டம்டா..’ என்று விஜய்ணா.. சொன்னது உண்மை என்பதை நிரூபித்தார்கள். ‘டேனி கத்தறான்னு நான் சொல்லவேயில்ல. அவன் ஒருமுறை என்னை ஹர்ட் பண்ணான். அவ்வளவுதான்’ தன் அணியின் சிறந்த வீரரை இழந்து விடக்கூடாத பொறுப்புடன் ஒரு தலைவராக சொல்லிக் கொண்டிருந்தார் ஜனனி. பஞ்சாயத்து செய்தே ஓய்ந்து போயிருந்த நடுவருக்கு ‘சுண்டக் காய்ச்சி பாலை’ கொடுத்து கூல் செய்தார் டேனி. (டோனிடா!) 

பிக் பாஸ் தந்த கடுமையான எச்சரிக்கை காரணமாக, ‘வாருங்கள். நாற்காலியில் அமர்ந்து உணவு அருந்துங்கள்’ என்பது போல் ‘தூய தமிழில்’ பேசி இம்சைப்படுத்திக் கொண்டிருந்தது டேனி அணி. டாஸ்க் முடித்தவுடன் தனக்கு அளிக்கப்பட்டிருந்த தேநீரை வேறு இடத்தில் எடுத்துச் சென்று சாப்பிட யாஷிகா முயன்ற போது அதைத் தடுக்க முயன்றது நீல அணி. (உணவைப் பகிர்ந்து சாப்பிடக்கூடாது என்று சில ஹோட்டல்களில் போடப்பட்டிருக்கும் ரூல்தான் நினைவுக்கு வந்தது). ‘அது ஏன் இங்க வந்து சாப்பிடக்கூடாது?” என்று எதிரணி புகார் தர.. மறுபடியும் ‘கூப்பிட்றா நாட்டாமையை’ என்ற குரலால் பதறி ஓடி வந்தார் ஷாரிக். ‘ஷேரிங் தப்பில்ல’ என்று தான்தோன்றித்தனமாக சொல்லி.. பிறகு மறுபடியும் மாற்றிக் கொண்டார். “ச்சே.. ஒரு டீதானே சாப்பிட்டுப் போகட்டும்’ என்று அனுமதித்து அதற்குப் பின்னால் ஒரு ஊரே லாரியில் வந்து சோறு சாப்பிட்டால் என்ன செய்வது?” என்கிற ‘பகவதி’ காமெடி போல நிஜத்தில் நடந்து விட்டால் என்ன செய்வது என்று பயந்தது ‘நீல’ அணி. 

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம். 

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

இதற்கிடையில் இன்னொரு டெரரான ஐடியாவை யோசித்தார் மும்தாஜ். ‘சாப்பாட்டுக்கு இவங்க கிட்ட ஏன் கையேந்தி நிக்கணும்?.. பொது இடத்துல வெச்சிருக்க. பழங்களை எடுத்து வந்து சாப்பிடலாம்’ என்று அவர் தந்த புத்திசாலித்தனமான ஐடியாவை (இதுக்குப் பெயர்தான் lateral thinking!) வைஷ்ணவியும் யாஷிகாவும் செயல்படுத்த ஆரம்பித்தனர். எதிரணி பதறிப் போய் இதை ஆட்சேபிக்க.. மறுபடியும் அதேதான். ‘கூப்பிட்றா நாட்டாமையை’.. ‘பொது ஏரியால இருந்தாலும் இதெல்லாம் கிச்சன் பிராப்பர்டிஸ்’ என்று இந்த முறை தெளிவான குரலில் தீர்ப்பளித்தார் நடுவர். 

‘நாங்க வெயிட் பண்றோம்.. இன்னமும் சாப்பாடு ரெடியாச்சுன்னு அவங்க வந்து சொல்லவேயில்லை..” என்று நடுவரிடம் புகார் தந்து கொண்டிருந்தது மஞ்சள் அணி. (மீல்ஸ் ரெடி’ன்னு போர்டா வெப்பாங்க.. நீங்தான் போய் கேட்கணும்!). 

இதன்படி யாஷிகா உணவருந்திக் கொண்டிருந்த போதுதான் கட்டுரையின் துவக்கத்தில் விவரிக்கப்பட்டிருந்த பஞ்சாயத்திற்கான துவக்கம் ஆரம்பித்தது. ‘வைஷ்ணவிக்கு தரப்பட்டிருந்த டாஸ்க்கை தான் செய்து விட்டு சாப்பிடப் போகலாமா?’ என்று மும்தாஜ் கேட்க.. ‘உங்களுக்கு வேற இருக்கும்.. எங்க டீம்தான் சொல்லணும்’ என்று ஐஸ் பதில் அளிக்க ‘நான் சொல்லலை. எனக்குன்னு ஸ்பெஷல் டாஸ்க் வெச்சிருப்பாங்க’ என்று மும்தாஜ் கிண்டலடித்துக் கொண்டிருந்ததை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஐஸ் உள்ளுக்குள் கலவரமாக உணர்ந்து ‘என் இடுப்பைப் பார்த்தியா’ .. என்று ‘குஷி’ ஜோதிகா போல மெல்ல மெல்ல உக்கிரத்தைக் கூட்டினார். ஆனால் அவரது கோபம் மும்தாஜின் மீதுதான் பாய்ந்திருக்க வேண்டும். ஆனால் பக்கத்தில் இருந்த ‘சவலைப் பிள்ளை’யான ரித்விகாவை அடித்து தன் ஆத்திரத்தை தீர்த்துக் கொள்ள முயன்றார். 

கோபத்தில் கலங்கி நின்ற ஐஸ்வர்யாவை, எதிரணியில் இருந்தாலும் பொங்கிய பாசத்தால் வந்து சமாதானப்படுத்தினார் யாஷிகா. என்றாலும் சமாதானம் ஆகாமல் நீண்ட நேரம் அழுது கொண்டிருந்த ஐஸ்வர்யா, வேறு சில மன அழுத்தங்களுடன் இருக்கலாமோ என்று தோன்றுகிறது. 

இதற்கிடையில் பஞ்சாயத்திற்காக வந்த ஜனனிக்கும் மும்தாஜுக்கு வேறு முட்டிக் கொண்டது. மும்தாஜ் உரத்த குரலில் கத்துவதை சகிக்க முடியாத ஜனனி, காதை அடைத்துக் கொண்டு நகர இன்னமும் உக்கிரமானார் மும்தாஜ். (பசி வந்தால் பத்தும் பறக்கும்!). 

‘உன் மேல எந்தத் தப்பும் இல்ல..இந்த விளையாட்டில் எவரும் சந்தோஷமாக இருக்க முடியாது’ என்று ஐஸ்வர்யாவிடம் யாஷிகா சொன்ன மகா தத்துவத்துடன் இன்றைய நாள் முடிந்தது. 

யாஷிகா சொன்னது பிக்பாஸ் விளையாட்டுக்கு மட்டுமல்ல.. நம் வாழ்க்கை என்னும் விளையாட்டுக்கும் பொருந்தும்தானே.?! (என்னதிது.. நானும் மஹத் மாதிரியே நானும் தத்துவம் பேச ஆரம்பிச்சுட்டேன்?!).