Published:Updated:

``மேல கை வைடா பாக்கலாம்...? ஏன் இவ்ளோ கோபம் மும்தாஜ்? #BiggBossTamil2

சுரேஷ் கண்ணன்
``மேல கை வைடா பாக்கலாம்...? ஏன் இவ்ளோ கோபம் மும்தாஜ்? #BiggBossTamil2
``மேல கை வைடா பாக்கலாம்...? ஏன் இவ்ளோ கோபம் மும்தாஜ்? #BiggBossTamil2

நேற்று ஐஸ்வர்யா செய்ததைப் போல் ‘ஓவராக சீன் போடுவது’ இன்று மும்தாஜின் ‘டர்ன்’ ஆக இருந்தது. ‘என் டீ, எனது உரிமை’ என்று ஒரு சுதந்திரப் போராட்டத்தையே நிகழ்த்தி விட்டார். காலையில் சாப்பிட வேண்டிய ஒரு கோப்பை தேநீருக்காகத் தொடங்கிய இந்தப் போராட்டம் மாலை தேநீர் நேரம் வரை இழுத்து சாதனை படைத்துக்கொண்டிருந்தது. இதற்கான சமாதானப் பேச்சு வார்த்தையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முதல் வடகொரிய கிம் ஜாங்-உன் வரை கலந்துகொண்டிருக்க வேண்டியிருக்குமோ என்கிற அளவுக்கு ரணகளமாகச் சென்றது இந்தப் போராட்டம். 

``மேல கை வைடா பாக்கலாம்...? ஏன் இவ்ளோ கோபம் மும்தாஜ்? #BiggBossTamil2

‘பேட்டா’ ஷாரிக் தன் பேச்சைக் கேட்காததால், ‘சிட்டுக்குச் செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது’ என்ற பாடல் பின்னணியில் ஓட ‘நடிகையர் திலகம்’ போல ஒற்றைக் கண்ணில் சாமர்த்தியமாகக் கண்ணீர் விட்டார் மும்தாஜ். (இந்த இடத்தில் சரியாக க்ளோசப் கோணத்தை உபயோகித்த எடிட்டருக்கு வளமான எதிர்காலம் உண்டு). 

வந்த நாளிலிருந்தே தன் உடல்நிலையைக் காரணம் காட்டி சிலவற்றை மறுப்பதில் உறுதியாக இருக்கிறார் மும்தாஜ். ‘டாஸ்க்’க்கு சொன்னா எதை வேணா செய்வேன், தண்டனைன்னா செய்ய மாட்டேன்” என்று ‘புடவை மாற்றும்’ பிரச்னையில் உறுதியாகக் கூறிய மும்தாஜ், இன்று ‘டாஸ்க்கை’யும் செய்ய மாட்டேன்” என்று  சொல்லும் அளவுக்கு முன்னேற்றம் அடைந்திருக்கிறார். வலுவான போட்டியாளர்  என்பதால் பிக்பாஸ் கூட கையைப் பிசைந்துகொண்டு தவிக்க வேண்டிய நிலை. இதரப் போட்டியாளர்கள் கமல் முன்னால் ஸ்கூல் பிள்ளைகள் போல் பம்மும் போது சில விஷயங்களை துணிச்சலாக முன்வைப்பதில் கவரும் மும்தாஜ், இது போன்ற விவகாரங்களில் கீழறிங்கிப் போய்விடுகிறார். 

``மேல கை வைடா பாக்கலாம்...? ஏன் இவ்ளோ கோபம் மும்தாஜ்? #BiggBossTamil2

ஓர் அணித்தலைவராகத் தங்களின் வெற்றிக்கு உத்வேகமும் தியாகமும் செய்ய வேண்டிய பொறுப்பில் இருப்பவர், தனிப்பட்ட விரோதங்களுக்காக அனைத்தையும் பாழ்படுத்துவது நிச்சயம் மோசமான குணாதிசயம். நீல அணியின் கொடியைப் பிடுங்கிப் போட்டதன் காரணமாக, அவர்கள் இவருக்கு ஏதாவது தண்டனையைக் கொடுத்தே ஆக வேண்டும் என்கிற கொலைவெறியில் இருக்கிறார்கள் என்கிற திகிலான கற்பனையில் எல்லாவற்றையும் மறுக்கும் நிலைக்குச் சென்றிருக்கிறார் மும்தாஜ்.. குறிப்பாக ஜனனி மீதுள்ள தனிநபர் விரோத மனப்பான்மை வெற்றியைக் கூட இழக்குமளவுக்குச் சென்றுகொண்டிருக்கிறது. 

‘ஒரு புறாவுக்கு இத்தனை அக்கப்போரா?” என்று சென்றுகொண்டிருந்த இந்தப் பிரச்னையில் ஷாரிக் இன்று ‘ஸ்ட்ரிக்ட் ஆஃபீஸராக’ நடந்துகொள்ள முயன்று சில சமயங்களில் தோற்றுப் போனார். ஒரு கட்டத்தில் நிலைமையை சுமுகமாக்கும் நோக்கத்தில் இவர் மும்தாஜைத் தொட்டது இயல்பான விஷயம். ஆனால் மும்தாஜ் அதற்கு காட்டிய எதிர்வினை ‘டெரர்’ ஆனது. (வரும் நாள்களில் நிச்சயம் இரண்டு பேரும் இதற்கு கட்டியணைத்துக் கலங்கும் காட்சிகள் வரக்கூடும்!).

இதே சமயத்தில் எதிர் டீமும் சற்று ஓவராகத்தான் போய்க்கொண்டிருந்தது. சாப்பாடு விஷயம் என்பதால் சற்று விட்டுத் தந்து பிரச்னையைச் சுமுகமாக முடித்திருக்கலாம். ஆனால் ‘விஷபாட்டில்’ இந்தப் பிரச்னையை அவ்வாறு முடிக்க அனுமதிக்கவில்லை. “ஆக்ட்ரஸ்-ன்றதெல்லாம் வெளிய. இங்க எல்லோரும் சமம்தான்” என்று டேனியை ஏற்றி விட்டுக் கொண்டிருந்தார். மினிடாஸ்க் தர வேண்டிய பொறுப்பில் இருக்கும் பொன்னம்பலம், ‘இம்சை அரசன் புலிகேசியாக’ மாறி ‘தோப்புக்கரணம் போடு.. இஞ்சி தின்னு’ என்று விதம் விதமாக யோசித்து அவர் பங்குக்கு ஏழரையைக் கூட்டிக்கொண்டிருந்தார். 

``மேல கை வைடா பாக்கலாம்...? ஏன் இவ்ளோ கோபம் மும்தாஜ்? #BiggBossTamil2

**


37-ம் நாளின் சம்பவங்கள் தொடர்ந்துகொண்டிருந்தன. ஐஸ்வர்யா சாமியாடி அழுது ஒய்ந்து முடித்ததும், பாலாஜி தங்களின் டீமுக்கு எதிராகப் பேசி, ‘சேம் சைட் கோல்’ போட்டுக்கொண்டிருந்தார். அவரால் டீம் கேப்டன் மும்தாஜையோ, அல்லது எதிரணி டேனியையோ நேரடியாக முறைத்துக்கொள்ள துணிச்சல் கிடையாது என்பதால் ‘எளிய டார்க்கெட்’ ஆக அமர்ந்திருந்த வைஷ்ணவியைப் போட்டு வாங்கு வாங்கென்று வாங்கினார். “உன்னாலதான் பிரச்னையே ஆரம்பிச்சது.. நீ பாட்டுக்கு பாத்திரம் தேய்ச்சுட்டு சாப்பிடப் போயிருக்க வேண்டியதுதானே.. ஏன் மறுத்தே?” என்று அபத்தமாகப் பிரச்னையைக் கையாண்டார். ‘இது என்ன வம்பா இருக்கு.. எனக்குப் பசிக்கலை.. task செய்யப் பிடிக்கலை. வேண்டாம்னு சொன்னேன்’ என்கிற விஷயத்தை வழக்கம் போல் நீட்டி முழுக்கிச் சொன்னார் வைஷ்ணவி. அவரிடம் இருந்த/இருக்கும் ஒரே பிரச்னையைக் காரணம் காட்டி எல்லாச் சமயங்களிலும் போட்டு நவுத்துவது முறையல்ல.

இன்னமும் கலங்கி நிற்கும் ஐஸ்வர்யாவைச் சமாதானப்படுத்திக்கொண்டிருந்தார் டேனி. “இப்படித்தான் டிரிக்கர் பண்ணுவாங்க” (ப்பா.. இந்த ‘டிரிக்கர்’-ன்ற வார்த்தையை பிக்பாஸில் கேட்டு எத்தனை நாளாச்சு..? எங்கப்பா இருக்க சக்தி?”!). மும்தாஜின் பிடிவாதமும் கோபமும் அவரது அணியைச் சார்ந்தவர்களுக்கே அதிருப்தியை அளித்துக்கொண்டிருந்தது. அது பற்றி முணுமுணுத்துக் கொண்டிருந்தார்கள். 

38-ம் நாளின் காலை. 14-வது போட்டியாளராக இருந்த அணில் தோட்டத்தில் எதையோ தேடிக்கொண்டிருந்தது. பாலாஜி நேற்று சூடாக இருந்த காரணத்தினாலோ என்னமோ, ‘மாமா.. மாமா.. மாமா..’ என்ற பாடலைப் போட்டு அவரை கூலாக்க முயற்சி செய்துகொண்டிருந்தார் பிக்பாஸ். டீ வேண்டுமென்றால் ‘பஞ்ச பாண்டவர்கள்’ வாழ்க! என்று கூவ வேண்டுமாம். ‘வீரமங்கையே.. தேநீர் சீக்கிரம் தயார் செய்யுங்கள்’ என்று ரித்விகா தூயத் தமிழில் கெஞ்சிக்கொண்டிருந்தார். 

``மேல கை வைடா பாக்கலாம்...? ஏன் இவ்ளோ கோபம் மும்தாஜ்? #BiggBossTamil2

தேநீர் மற்றும் காலை உணவுக்காக மும்தாஜ் வந்து நின்றதும் ‘வாடி மாப்ளே’ என்று கொலைவெறியுடன் காத்துக்கொண்டிருந்தது ஜனனி டீம். ‘நான் தோத்தாங்கோளி” என்று சொல்லிக்கொண்டே கார்டன் ஏரியாவைச் சுற்றிவர வேண்டும் என்கிற விநோதமான சவாலைக் கொடுத்தார் இம்சை அரசர் பொன்னம்பலம். கூடவே இஞ்சியையும் தின்ன வேண்டுமாம். (என்ன எழவு காம்பினேஷன் இது!). ஒருவேளை ‘இஞ்சி டீயா’ இருக்கும் போல. 

‘இஞ்சி தின்ற குரங்காக’ தன்னால் மாற முடியாது என்று உறுதியாக மறுத்து விட்டார் மும்தாஜ். “இஞ்சி ஒத்துக்காது. அதைச் சாப்பிட்டப்புறம் என்னால உணவு சாப்பிட முடியாது.. அப்ப டாஸ்க் பண்றதே வேஸ்ட்தானே?” என்று மும்தாஜ் சொல்வதில் இஞ்சியளவுக்கான நியாயம் இருந்தது. ‘அவங்க நேத்தும் சாப்பிடலை” என்று ஒரு பக்கம் மும்தாஜுக்காகப் பரிதாபப்பட்டாலும் ‘இது அவங்க உத்தியா இருக்கலாம்’ என்று பேசிக்கொண்டிருந்தது ஜனனி அணி.

‘கார்கில் டாஸ்க்’ தொடர்பாக அடுத்த அறிவிப்பு வந்தது. எல்லையில் போராடும் ராணுவ வீரர்களை வாழ்த்தி சில ஸ்லோகன்களை எழுத வேண்டுமாம். 

``மேல கை வைடா பாக்கலாம்...? ஏன் இவ்ளோ கோபம் மும்தாஜ்? #BiggBossTamil2

‘வெற்றி.. வெற்றி.. வெற்றி.. என்று தேவர் ஃபிலிம்ஸ் படங்களின் முதல் வசனத்தைப் போல மங்கலகரமாக ஆரம்பித்தார் பொன்னம்பலம். இறுதியில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்பதற்குப் பதிலாக ‘ஜெய்ஹிந்த்’ என்றது ஆச்சர்யம். இப்படியே ஆளாளுக்கு அர்ஜூன், விஜய்காந்த் படங்களில் வரும் வசனங்களைப் பிய்த்து கொத்துப் பரோட்டாவாகப் படையல் போட்டுக் கொண்டிருந்தார்கள். “நன்றி என்பது சின்ன வார்த்தை” என்றார் மும்தாஜ். (ஆமாம்.. யாரு இல்லைன்னது!) 

“நீங்கள் தலைக்கவசம் அணிவதால் நாங்கள் தலைநிமிர்ந்து நிற்கிறோம்’ என்று ரைமிங்காக எழுதி ‘டெரர் கவிஞராக’ மாறிக் கொண்டிருந்தார் சென்றாயன். மண், ரத்தம், உறவு, தெய்வம் என்று ஆளாளுக்கு ராணுவ வீரர்களின் மீது திடீர்ப் பாசம் கொண்டு வார்த்தைகளை விரயம் செய்துகொண்டிருந்தார்கள். “நீங்கதான் ரியல் ஆர்மி.. ஆனால் மக்கள் யார் யாருக்கோ ஆர்மி வைத்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று குத்திக்காட்டினார் பாலாஜி. (இதைக் கேட்டு ஓவியா ஆர்மியின் ரிடையர்டு ஆபீஸர்களுக்கு நரைத்த மீசை துடித்திருக்கும்.. ‘போர்.. ஆம் .. போர்!)

வைரமுத்துவின் சாயலில் ஒரு கவிதையை வாசித்து எப்படியோ கவர்ந்து விட்டார் டேனி. “ஆடு மேய்க்கற பையனுக்கு இம்பூட்டு அறிவா?” என்பது மாதிரி மற்றவர்கள் வாயைப் பிளந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். டேனிக்கு ‘பைக்’ பரிசு என்கிற தகவல் வந்ததும் வீடே உற்சாகமாயிற்று. இதை முதலில் ஆரூடம் சொன்ன பாலாஜியின் வாயில் சர்க்கரையைப் போட்டார் டேனி. (நல்ல வேளை, பெட்ரோலை ஊத்தலை!) நீல அணி தொடர்ந்து வெற்றி பெறுவதால், டேனிக்கு பைக் கிடைத்த பரிசுத் தகவல், எரியும் நெருப்பில் பெட்ரோலை ஊற்றியது போலாயிற்று மஞ்சள் அணிக்கு. முகம் மாறி அமர்ந்திருந்தார்கள் மும்தாஜூம் வைஷ்ணவியும். 

``மேல கை வைடா பாக்கலாம்...? ஏன் இவ்ளோ கோபம் மும்தாஜ்? #BiggBossTamil2

“எதிரி ஜெயிச்சா கூட சந்தோஷப்படணும். என்ன ஜென்மங்களோ” என்று சத்தமாகப் புறணி பேசிக் கொண்டிருந்தார் மஹத். இவர் சிறைவாசி போலவே இல்லை. அவ்வப்போது ஜாமீனில் வந்து பெண்கள் படுக்கையில் படுப்பதும், ஆங்காங்கே உலவுவதுமாக இருக்கிறார். மட்டுமல்லாமல் பிக்பாஸிற்கும் இவருக்கும் ஏதோ ‘டீல்’ ஆகி விட்டது போல. காமிராவின் முன் கொஞ்சிக் கொஞ்சி எதையோ பேசுகிறார். பிக்பாஸ் சிறையில் மஹத் செய்யும் லூட்டிகள் ஏனோ பரப்பன அக்ரஹார சிறையின் வீடியோக்களை நினைவுபடுத்தியது. நோட் பண்ணிக்குங்க கமல்!

டீ பிரச்னை மறுபடியும் சுட ஆரம்பித்தது. ‘நான் மாது வந்திருக்கேன்’ என்றது போல் கிச்சன் பக்கம் வந்து நின்றார் மும்தாஜ். அவர்கள் தந்த டாஸ்க் படி ‘நாங்க தோத்தாங்கோளி’ என்பதை மந்திரம் போல் சொல்லிக்கொண்டே வலம் வந்தார் மும்தாஜ். சிலர் கோயில் பிரசாதத்துக்காக பாவனையாக சாமி கும்பிடுவது போல் அலட்சியமாக இருந்தது அவரது ‘தோத்தாங்கோளி’ உச்சரிப்பு. அவருக்கான டீயை ஐஸ்வர்யா தயார் செய்யப் போக மறுபடியும் பஞ்சாயத்து ஆரம்பித்தது. ‘எனக்கான டீயை நான்தான் போடுவேன். பிக்பாஸ் வீட்டுக்கு வந்ததுல இருந்து இதுதான் பழக்கம்’ என்று மும்தாஜ் பிடிவாதம் பிடிக்க, “அப்படியெல்லாம் ஒருத்தருக்குத் தனியா சலுகை காட்ட முடியாது” என்றது நீல அணி. இந்த விஷயத்தில் மும்தாஜுக்கு இணையாக ரகசியப் பிடிவாதம் காட்டினார் ஜனனி. மும்தாஜ் சார்பாக ஷாரிக்கும் பேசி தோற்றார். 

“அவங்களை நாட்டை விட்டே அனுப்பியிருக்கக் கூடாது. இங்கேயே பிடிச்சு வெச்சிருக்கணும்” என்று இதற்குள் இம்சை பேரரசராக மாறியிருந்தார் பொன்னம்பலம். “என் பேச்சை மதிக்காம வந்துட்டீங்க! என்று மும்தாஜிடம் நடுவர் ஷாரிக் தன் கெத்தைக் காண்பிக்க முயல ‘போடா சின்னப்பையா” என்று அவரை இடது கையால் ஓரங்கட்டினார் மும்தாஜ். ‘ப்ளீஸ் நான் சொல்ற பனிஷ்மென்ட்டை செஞ்சிடுங்க’ என்றார் ஷாரிக். அவரது குரல் உத்தரவு போடுவது போல் மேலுக்குத் தெரிந்தாலும் “உங்க கால்ல வேணா விழறேன். செஞ்சிடுங்க’ என்று உள்ளுக்குள் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்துகொண்டிருந்தது தெரிந்தது. (பில்டிங் ஸ்ட்ராங்க்.. பேஸ்மென்ட் வீக்!).

``மேல கை வைடா பாக்கலாம்...? ஏன் இவ்ளோ கோபம் மும்தாஜ்? #BiggBossTamil2

‘எக்ஸர்சைஸ்’ மாதிரியான விஷயங்களை தன்னால் செய்ய முடியாது என்று உறுதியாக மறுத்தார் மும்தாஜ். “நேத்திக்கு.. அந்த மிலிட்டரி டாஸ்க் செய்ய ரெடியா இருந்தீங்களே. அப்ப.. அது என்ன?” என்று லாஜிக்காக ஷாரிக் மடக்க முயல..  ‘என் உடம்பு கண்டிஷன் எனக்குத்தான் தெரியும்” என்று மும்தாஜ் மழுப்பினாலும் அவர் வீண் பிடிவாதம் பிடிப்பது தெளிவாகத் தெரிந்தது. ‘நீல அணியால் தனக்குத் தண்டனை கொடுக்க முடியாது’ என்கிற அழுத்தமான செய்தியைச் சொல்ல விரும்புவதே அவரது முக்கிய நோக்கமாக இருந்தது. இதற்காகப் பிடிவாதத்தின் எல்லைக்கே செல்ல முயன்றார். 

“சரி.. 100 முறை நடங்க” என்று ஷாரிக் சொல்ல.. ‘முடியாது அம்பது தடவை வேணா செய்யலாம். எனக்கிருக்க லோ –பிரஷர் எனக்குத்தான் தெரியும்” என்றார் மும்தாஜ். நடப்பது தொடர்பாக அவர் இவ்வாறு முறையற்று ‘நடந்து கொள்வது’ சரியில்லை. (கவித.. கவித!). 

``மேல கை வைடா பாக்கலாம்...? ஏன் இவ்ளோ கோபம் மும்தாஜ்? #BiggBossTamil2

‘சரி நடங்க’ என்று இறங்கி வந்த ஷாரிக் அத்தோடு பஞ்சாயத்தை முடித்து வைத்திருக்கலாம். தனது ஈகோ தொடர்ந்து காயப்பட்டதால் ‘நான் சொன்ன மாதிரி ஸ்ட்ரையிட்டா நடங்க” என்று பிரச்னையை மீண்டும் கிளற “என் இஷ்டம் போல்தான் நடக்க முடியும்” என்றார் மும்தாஜ். ‘ரொம்ப பேசறீங்க. வாயில பிளாஸ்திரி ஒட்டிடுவேன்” என்று ஷாரிக் விளையாட்டாகச் சொல்ல, ‘எங்க மேல கை வெச்சுப் பாரு” என்று சூழலின் தன்மையை மாற்ற முயன்றார் மும்தாஜ். ஷாரிக் விளையாட்டாக விரலை வைக்க, மும்தாஜின் எதிர்வினை டெரராக இருந்தது. சென்ற சீசனில் தானைத் தலைவி ஓவியா தொட்றா பார்க்கலாம் என ட்ரிக்கர் சக்தியை எதிர்த்து நின்றது சட்டென நினைவுக்கு வந்தது

“டாஸ்க் முடிச்சப்புறம் என்னை என்ன வேணா திட்டிக்கட்டும். நடுவராக இருக்கும் போது நான் சொன்னதைக் கேட்கணும்ல” என்பது ஷாரிக்கின் நியாயமான அனத்தலாக இருந்தது. ஒரு கட்டத்தில் ‘போதும் இருபது பண்ணுங்க’ என்று ஷாரிக் பரிதாபப்பட்டும் ‘நான் ஐம்பதுதான் பண்ணுவேன்’ என்று தன் பிடிவாதத்தை வெளிப்படையாகக் காட்டினார் மும்தாஜ். 

‘நம்ம டீமோட கேப்டனே இப்படிப் பண்றாங்களே.. வெளங்கினாப்பலதான். நாமளா இருந்தாலும் இப்படித்தானே அவங்களுக்குப் பண்ணியிருப்போம்’ என்று மும்தாஜ் அணியைச் சேர்ந்தவர்களே மும்தாஜின் மீதான அதிருப்தியை வெளிப்படுத்திக்கொண்டிருந்தார்கள். “இவ்ள திமிரா அடமென்ட்டா இருக்காங்களே’ என்று சொல்லிக் கொண்டிருந்தார் மஹத். 

``மேல கை வைடா பாக்கலாம்...? ஏன் இவ்ளோ கோபம் மும்தாஜ்? #BiggBossTamil2

“நடுவர் அவர்களே..  சோறு ரெடியா?” என்று கேட்டுக்கொண்டிருந்தார் ரித்விகா..  பாவம் கோயில் வாசலில் அமர்ந்திருப்பவர்கள் போல, இவரும் பாலாஜியும் வைஷ்ணவியும் கிச்சன் பக்கத்தில் ஓரமாக அமர்ந்திருந்தார்கள். வைஷ்ணவி வாழைப்பழம் சாப்பிட விரும்பினார். “குரங்கு மாதிரி செய்யச் சொல்லி டாஸ்க் கொடுங்க” என்று சொந்த அணிக்கே சூன்யம் வைத்தார் பாலாஜி. 

வைஷ்ணவி வாழைப்பழம் கேட்டதும்தான் தாமதம், ஷாரிக் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் தாங்களும் வாழைப்பழத்தை எடுத்து சாப்பிட்டு வைஷ்ணவியை வெறுப்பேற்ற முயன்றார்கள். 

“மூன்று கிளாஸ் தண்ணீர் குடித்து விட்டு வாழைப்பழம் எடுத்துக் கொள்ளலாம்’ என்ற டாஸ்க் தரப்பட்டது. (அதுக்கப்புறம் நேரா பாத்ரூமூக்குத்தான் போகணும். என்ன வில்லங்கமா யோசிக்கறாங்கப்பா!) கோப்பையில் தண்ணீரின் அளவைக் குறைத்துப் பிடித்துக் கருணை காட்டினார் ஐஸ்வர்யா. காமிரா மிக கவனமாக இந்தக் காட்சியைப் படம் பிடித்தது. 

``மேல கை வைடா பாக்கலாம்...? ஏன் இவ்ளோ கோபம் மும்தாஜ்? #BiggBossTamil2

படுக்கையறையில் கண்ணீர் சிந்தியபடி படுத்திருந்தார் மும்தாஜ். பாலாஜியும் ரித்விகாவும் சமாதான தூதுவர்களாகச் செல்ல முயன்றார்கள். “கொடியைப் பிடுங்கிய விவகாரத்துக்காக ஜனனி என்னைப் பழிவாங்க முயல்கிறார். அவர்களின் பிடிவாதம் ஜெயிக்க நான் அனுமதிக்க மாட்டேன்’ என்று பட்டினிப் போராட்டத்தைத் தொடர்ந்தார் மும்தாஜ். ஆக இரு அணித்தலைவர்களுக்குள் நிகழும் பனிப்போர் இது. (ச்சே.. உலகப் போர் ரேஞ்சுக்கு என்னவெல்லாம் எழுத வேண்டியிருக்கு!).

‘எங்க ஏரியா உள்ள வராத’ டாஸ்க்கில் அடுத்த விளையாட்டு தொடங்கியது. கார்டன் ஏரியாவில் உள்ள இரண்டு கதவுகளில் மூன்று பூட்டுகள் இருக்கும். ஒவ்வோர் அணியிலும் இரண்டு பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஒருவருக்கு ஜாக்கெட் அணிவிக்கப்பட்டு அதில் பல சாவிகள் தொங்கும். எதிரணியைச் சேர்ந்தவர் இவரைத் துரத்திச் சென்று ஒரு சாவியைப் பறித்து பூட்டைத் திறக்க வேண்டும். இவ்வாறு எவர் முதலில் மூன்று பூட்டுகளையும் திறக்கிறாரோ அந்த அணி ‘பெட்ரூம்’ ஏரியாவைக் கைப்பற்றலாம். 

மும்தாஜ் அணியிலிருந்து ‘வீரமங்கையான’ யாஷிகா மற்றும் வைஷ்ணவி வந்தனர். ‘ஜனனி’ அணியிலிருந்து ‘டோனி’ டேனியும் பெரிய சைஸ் கதவான பொன்னம்பலமும் வந்தார்கள். வழக்கம் போல் டேனி இதில் திறமையாக விளையாட முயன்றாலும் பொன்னம்பலத்தின் மெத்தனத்தால் பின்னடைவைச் சந்தித்தார். டேனிக்கு வைஷ்ணவி போக்குக் காட்டிக் கொண்டிருக்க, “நீங்க அந்தப் பக்கம் போங்க’ என்று பொன்னம்பலத்தைத் திசை திருப்ப முயன்ற டேனியின் முயற்சி பெரும்பாலும் பலிக்கவில்லை. 

``மேல கை வைடா பாக்கலாம்...? ஏன் இவ்ளோ கோபம் மும்தாஜ்? #BiggBossTamil2

இதற்கிடையில் யாஷிகா துறுதுறுவென ஓடி பொன்னம்பலத்திடமிருந்து சாவிகளைப் பறித்துச் சென்று இரண்டு பூட்டுகளைத் திறந்து விட்டார். ஒரு கட்டத்தில் யாஷிகாவைத் தடுக்க முயன்ற பொன்னம்பலம், அவர் மீதே மொத்தமாகச் சாய்ந்து விட (நான் என்ன செய்யறது?) அதையெல்லாம் பொருட்படுத்தாத யாஷிகா ‘வெற்றி நிச்சயம் வேத சத்தியம்’ போல கருமமே கண்ணாகச் சென்று மூன்றாவது பூட்டையும் திறந்துவிட்டார். ஆக.. மஞ்சள் அணிக்குக் கிடைத்த முதல் வெற்றி இது. இதன் மூலம் பெட்ரூம் அவர்களுக்குச் சொந்தமானது. நீண்ட நேரத்துக்குப் பிறகு இப்போதுதான் மும்தாஜின் முகத்தில் புன்னகை வந்தது. இந்த விளையாட்டில் திறமையை விடவும் அதிர்ஷ்டமே முக்கியமாக இருந்தது. தேர்ந்தெடுக்கப்படும் சாவி பொருந்தி விடுவதுதான் முக்கியம். அதற்காக யாஷிகாவின் திறமையையும் குறைத்து மதிப்பிட முடியாது. 

‘அடுத்தது பாத்ரூமையும் கைப்பற்றணும்” என்று வெற்றிக் களிப்பில் பேசிக்கொண்டிருந்தது மஞ்சள் அணி. “ஆனா அவங்க மாதிரி நம்ம கொடூரமா நடந்துக்கக் கூடாது. டாஸ்க் செஞ்சுட்டு பெட்ரூம்ல படுத்துக்கட்டும்’ என்று பெருந்தன்மையைக் காட்டினார்கள். (தூங்குவதை வெளியில் கூட செய்து கொள்ளலாம் என்கிற செளகரியம் எதிரணிக்கு இருந்தது. ஆனால், சாப்பாடு விஷயத்துக்கு மாற்று இல்லை என்பது நீல அணிக்குச் சாதகமானது). ‘அடுத்த முறை திறமையான போட்டியாளரை மட்டும்தான் அனுப்பணும். அவங்க பாருங்க.. யாஷிகாவை விட்டு கலக்கறாங்க’ என்று பேசிக்கொண்டிருந்தது நீல அணி. ‘பொன்னம்பலம் சொதப்பிட்டாரு” என்று வருத்தப்பட்டார் டேனி. “நானா இருந்திருந்தா யாஷிகாவைக் கலங்க வெச்சிருப்பேன்’ என்று சுயபெருமையைப் பீற்றிக்கொண்டிருந்தார் சென்றாயன். 

நீல அணி இரண்டு இடங்களைக் கைப்பற்றியதாலும், மஞ்சள் ஓரிடத்தை மட்டுமே கைப்பற்றியிருப்பதாலும் புதிய வாய்ப்பை மஞ்சள் அணிக்குத் தர முடிவு செய்தார் பிக்பாஸ். அதன்படி ‘தங்கள் அணியில் உள்ள பலவீனமான போட்டியாளரைச் சிறைக்கு அனுப்பி விட்டு அங்கிருக்கும் மஹத்தை அணியில் சேர்த்துக்கொள்ளலாம்.. 

``மேல கை வைடா பாக்கலாம்...? ஏன் இவ்ளோ கோபம் மும்தாஜ்? #BiggBossTamil2

‘என்னைத் தேர்ந்தெடுங்க” என்று தாமாக முன்வந்தார் பாலாஜி. இது அவரின் புத்திசாலித்தனமான ஐடியா. பிடிவாத மும்தாஜிடம் மாட்டிக்கொண்டு அல்லாடுவதை விடவும் சிறைக்குச் சென்று ஜாலியாக படுத்துக்கொண்டிருக்கலாம் என்கிற யோசனை காரணமாக ‘தியாகம்’ செய்வது போல் முன்வந்தார். 

“டீம்ல ரெண்டு ஜென்ட்ஸ் இருந்தா நல்லதுல்ல’ என்று ரித்விகா, பாலாஜியின் கற்பனையில் மண்ணைப் போட முயல.. ‘பாதகத்தி கெடுக்கப் பார்க்கறாளே’ என்று மனதிற்குள் அலறிய பாலாஜி எப்படியோ மும்தாஜை கன்வின்ஸ் செய்து சிறைக்குச் சென்றார். “நான் என்ன புழல் ஜெயிலுக்கா போறேன்.. கண்கலங்காம என் பேரைச் சொல்லுங்க மேடம்”

“வைஷ்ணவிதான் weak product. அவளை அனுப்புங்க. இல்லைன்னா நான் வர மாட்டேன்” என்று ஜாலியாகப் பிடிவாதம் பிடித்தார் மஹத். எத்தனை அணியாகப் பிரிந்தாலும் வைஷ்ணவியை வெறுப்பேற்றுவதில் மட்டும் அனைவரும் ஒரே அணியாக இருக்கிறார்கள். 

``மேல கை வைடா பாக்கலாம்...? ஏன் இவ்ளோ கோபம் மும்தாஜ்? #BiggBossTamil2

பிக்பாஸ் அறிவிப்பைத் தொடர்ந்து ‘என்னா.. பிக்பாஸ் இப்படிப் பண்ணிட்டீங்களே! என்று சிணுங்கிக்கொண்டே வெளியில் வந்தார் மஹத். ‘நான் சொன்னது ஞாபகமிருக்கு இல்லையா?” என்று பிக்பாஸிடம் பேசிய டீலையும் நினைவுப்படுத்தினார். போகிற போக்கில் இந்த பிக்பாஸையும் நம்ப முடியாது போலிருக்கிறது. (ஒருவேளை பிக்பாஸ் என்பது பெண்ணோ.?!. அதான் மஹத் ஈசியா கரெக்ட் பண்ணிட்டார் போல!.)

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம். 

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

‘நான் மாது வந்திருக்கேன்’ என்று தட்டை ஏந்திய படி கிச்சன் ஏரியாவுக்கு ரித்விகா வந்து நிற்க, இம்சை அரசர் பொன்னம்பலம் ‘டாஸ்க்’ சொல்லத் தயார் ஆனார். இதற்காக ரூம் போட்டு யோசித்திருப்பார் போலிருக்கிறது. உட்கார்ந்த படியே நகர்ந்து வந்து ‘பஞ்ச பாண்டவர்கள் வாழ்க’ என்று சொல்லிக்கொண்டே ஒரு ரவுண்டு வர வேண்டுமாம். கடவுளே.. பஞ்சத்திற்காக என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது! என்று விதியை நொந்துகொண்டே சுற்றி வந்தார் ரித்விகா.. (வயித்துக்காக மனுஷன் இங்கே கயித்தில் ஆடுறான் பாரு.. ‘ என்கிற பாடல்தான் நினைவுக்கு வந்தது!).

இன்னமும் லிவ்விங் ஏரியா மற்றும் பாத்ரூமுக்கான போட்டிகள் நடைபெறும் போல் இருக்கிறது. இதில் பாத்ரூம் மிக அத்தியாவசியமான இடம் என்பதால் போட்டி இன்னமும் உக்கிரமாக இருக்கும். கழிவறையைக் கைப்பற்றுபவர்கள், எதிரணிக்கு என்னென்ன ‘டாஸ்க்’ தரப்போகிறார்களோ என்பதை நினைத்தால் இப்போதே வயிற்றைக் கலக்குகிறது. ‘என்னவொன்று ஒருவருக்குப் பதிலாக இன்னொருவர் ‘டாஸ்க்’ செய்யலாமே’ என்று இந்த இடத்தில் கேட்க முடியாது. அவரவர்கள்தாம் செய்தாக வேண்டும். ‘நான்தான் டீ போடுவேன்’ என்கிற மும்தாஜின் பிடிவாதம் ஜெயிக்கப் போகும் இடம் இது. டாஸ்க்கை மட்டும் இரவு சாப்பிடும் நேரமான 9 மணிக்கு ஒளிபரப்பாமல் வேறு நேரத்தில் ஒளிபரப்பினால் உத்தமம். 

கழிவறையைக் கைப்பற்றப் போகும் அணி மஞ்சளா, நீலமா? கலர் காம்பினேஷன்படி பார்த்தால் மஞ்சளுக்குத்தான் அதிக வாய்ப்பு. (உவ்வேக்!).