Published:Updated:

``ஐஸ்வர்யா சாம்ராஜ்யம் இனிதே ஆரம்பம்..!" - பிக் பாஸ் மிட்நைட் மசாலா

தார்மிக் லீ

ஐஸ்வர்யாவின் புகைப்படங்களை பிக் பாஸ் வீட்டில் ஆங்காங்கே ஒட்டி, `ஐஸ்வர்யா சாம்ராஜ்யம்' என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஐஸ்வர்யாவும் ராக் ஸ்டார் போல டிரெஸ் அணிந்துகொண்டு வீடு முழுக்க ரவுண்டு அடித்துக்கொண்டிருந்தார். இந்த வாரம் முழுக்க பிக் பாஸ் வீட்டில் ஐஸ்வர்யா சாம்ராஜ்யம்தானோ? 

``ஐஸ்வர்யா சாம்ராஜ்யம் இனிதே ஆரம்பம்..!" - பிக் பாஸ் மிட்நைட் மசாலா
``ஐஸ்வர்யா சாம்ராஜ்யம் இனிதே ஆரம்பம்..!" - பிக் பாஸ் மிட்நைட் மசாலா

பிக் பாஸ் வீட்டில் ஏதாவது ஒரு டாபிக் ஆரம்பித்தால் அது காட்டுத்தீயாகப் பரவி ஒட்டுமொத்த வீடுமே குபுகுபுவெனக் கொளுந்துவிட்டு எரியும். இதுதான் வழக்கமாக நடந்து வருகிறது. `இந்த வீட்டுல இருக்கிற யாராவது எனக்குச் சொந்தமா, இல்ல அவங்களால எனக்கு ஏதாவது பிரயோஜனம் இருக்கா...' என மும்தாஜ் சொன்னதுதான், இந்த வாரத்தின் வைரல் வார்த்தை. இதனால், நெருக்கமான சிலருக்கு இடையே விரிசல் விழுந்துவிட்டது. இந்தக் களேபரங்களைத் தொடர்ந்து, பிக் பாஸ் மிட்நைட் மசாலாவில் என்ன நடந்தது? 

* `இரவா பகலா குளிரா வெயிலா... டாஸ்க்குதானே வைப்பேனடி' என்ற மோடில்தான் பிக் பாஸ் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் போல! நடந்து முடிந்த சண்டையில் குஷியான பிக் பாஸ், ராவோடு ராவாக ஒரு டாஸ்க்கைக் கொடுத்திருக்கிறார். கார்டன் ஏரியாவில் டிரெட் மில் வைக்கப்பட்டிருந்த இடத்தில் ஏதோ ஒரு பொம்மையும், நீச்சல் குளத்தில் சில பொருள்களும் காணப்பட்டன. இதுபோக, ஐஸ்வர்யாவின் புகைப்படங்களை பிக் பாஸ் வீட்டில் ஆங்காங்கே ஒட்டி, `ஐஸ்வர்யா சாம்ராஜ்யம்' என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஐஸ்வர்யாவும் ராக் ஸ்டார் போல டிரெஸ் அணிந்துகொண்டு வீடு முழுக்க ரவுண்டு அடித்துக்கொண்டிருந்தார். இந்த வாரம் முழுக்க பிக் பாஸ் வீட்டில் ஐஸ்வர்யா சாம்ராஜ்யம்தானோ? 

* வீட்டில் இருக்கும் பொருள்கள் சிலவற்றை நீச்சல் குளத்தில் விட்டெறிந்தார், டேனி. மஹத், முங்கு நீச்சல் அடித்து ஒவ்வொரு பொருள்களாகத் தேடி வெளியே எடுத்துக்கொண்டிருந்தார். டேனியலுக்குதான் இந்த டாஸ்கில் கூடுதல் பொறுப்பு என்று தெரிகிறது. அது பொறுப்பா இல்லை கிளைத்துவிடும் வேலையா எனத் தெரியவில்லை. அனைவரும் வழக்கமான உடையில் இருக்க, இவர் மட்டும் கமாண்டோவைப் போல உடை அணிந்துகொண்டு லத்தியும் கையுமாகத் திரிந்து எல்லோரையும் மிரட்டிக்கொண்டிருந்தார். கிட்டத்தட்ட எல்லோரிடமும் வாங்கி கட்டிக்கொண்ட பாலாஜி, சோக வெள்ளத்தில் நீந்திக்கொண்டிருந்தார். நேற்று, எல்லோரும் இவர் மீது வைத்த முக்கியமான குற்றச்சாட்டு, `நீங்க ரொம்ப கெட்ட வார்த்தை பேசுறீங்க' என்பதுதான். இதனால் நெருங்கிய `மாம்ஸ்'ஆன சென்றாயனுடனே பிரச்னை ஏற்பட்டுவிட்டது. இதனால் யாரிடமும் பேசாமல் ஒரு மூலையில் அமைதியாக உட்கார்ந்திருந்தார், பாலாஜி. 

* நீச்சல் குளம் சம்பந்தப்பட்ட டாஸ்க்கில் சென்றாயனுக்கும் பங்கிருப்பது தெரிகிறது. நீச்சல் குளம் முழுக்க பொருள்களால் நிரப்பட்டிருந்தது. பாடி ஸ்பிரே, ஷாம்பூ, பேஸ்ட், டிரெஸ்... என அனைத்தையும் வெளியே எடுத்து அடுக்கி வைத்துக்கொண்டிருந்தார், மஹத். அவருடன் இணைந்த சென்றாயன் அங்கிருக்கும் ஆடைகளைக் காய வைத்துக்கொண்டிருந்தார். எப்போதும் தமிழ்நாடு, என் நாடு, தாய் நாடு என சமூகக் கருத்தூசி போடும் பொன்னம்பலம், அமைதியாக ஓர் ஓரத்தில் உட்கார்ந்திருந்தார். இவருக்குப் போடப்பட்ட குறும்படத்தால், இவரின் சில குறும்புகள் குறைந்திருக்கின்றன. இந்த வாரம் மேலும் குறையலாம்.

* பின்னர், ஏதோ வலுவான சம்பவம் நிகழ்ந்திருக்க வேண்டும். `ஏன் பிக் பாஸ் இப்படிப் பண்றீங்க. கடவுளே!' என கேமரா முன் நின்று அழுகாத குறையாகப் புலம்பிக்கொண்டிருந்தார், மஹத். முன்பெல்லாம் சண்டை வந்தால் சில மணி நேரங்களிலேயே ஒன்று சேர்ந்துவிடுவார்கள். ஆனால், சில ஈகோ பிரச்னைகளாலும், கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தாலும் எதுவும் பேசாமல் எல்லோரும் அவர்களது வேலைகளை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். குக்கிங் டீம், கிளீனிங் டீம் அவர்கள் வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். டீம் இல்லாத இருவர், டேனியலும் ஐஸ்வர்யாவும்!. இந்தக் காரணத்தால் இவர்கள் இருவருக்கும் டாஸ்க்கில் லீடிங் ரோல் கொடுக்கப்பட்டிருக்கலாம். 

நேற்றே சொன்னதுபோல, பாலாஜி அவருக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளைப் பார்க்காமல் அமைதியாக இருந்தார். இன்றிரவு இதை வைத்துப் பெரிய பிரளயமே ஏற்படலாம். அதுவும் ஐஸ்வர்யா தலைவியாக இருக்கும் வாரத்தில்! ஆக மொத்தம் இந்த வாரம் முழுக்க ஐஸ்வர்யா சாம்ராஜ்யம்தான். பொறுத்திருந்து பார்ப்போம்!